PDA

View Full Version : .................... - இது என் முதல் சர்ரியலிசக் கவிதை



ஆதி
17-12-2009, 08:11 AM
பால்ய இரவொன்றின் உறக்கத்தில்
என்னை வெளியெறிய ஒரு எண்ணம்
தொலைந்து போனது
ஏதோ ஒரு திசையில்..

மீளாத அவ்வெண்ணத்தை
மீட்கவோ தேடவோ
முற்படவில்லை நானும்..

பாதை தவறி
என்னிடம் மீள தவித்து
தன் வெளி நெடுக்க என்னை கூவி
தேடுவதையும்
அறிந்திருக்கவில்லை நான்..

தூர தூரங்களிலும்
அறிமுகமில்லாத ஊர்களிலும்
தேடி தூளாவி அலைந்து
என்னை கண்டுவிட முடியாமல் சோர்ந்து
விரக்தியுற்றிந்த ஓர் இரவில்
நிகழ்ந்தது என்னோடான அதன் சந்திப்பு..

எனினும்,
அது என்னையும்
நான் அதனையும் அறிந்து கொள்ளவில்லை..

இருவரும்
எங்கள் அடையாளங்களை தொலைத்து
சிதலமுற்றிருந்தோம் அத்தருணத்தில்..

ஆதி
17-12-2009, 11:31 AM
அன்பு உறவுகளுக்கு வணக்கம்..

இந்த கவிதையை பற்றி சில குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசைப்படுகிறேன்..

இது சர்ரியலிசம் என்னும் மீமெய்யில் அல்லது மிகை எதார்த்தவாதம் வகையை சேர்ந்த கவிதை..


தூக்கத்திலே மனத்தில் இருந்து தோன்றும் கனவுகளைச் சித்தரிக்க முற்படும் கலைப்பரிமாணம் மிகை எதார்த்தவாதம், கனவுகளுக்கு விளக்கமும் வியாக்கியானமும் கண்டறியப்படகூடாது என்பதையும் கனவுலகில் சஞ்சரிக்கும் சுதந்திரமும் குதூக்கலத்தையும் கொண்டிருக்கவேண்டும் என்பதையும் மிகைஎதார்த்தவாதம் வலியுறுத்துகிறது.

மிகை எதார்த்தவாதம் எதையும் ஆராய்வதை மறுக்கிறது. ஒழுங்கமைத்தலை வெறுக்கிறது. ஆழ்மன்னதில் இருப்பதை அப்படியே தூரிகையோடும் பேனாவோடும் இணைத்து கலையழகும் கவினுலகும் காணவேண்டும் என்று உரைக்கிறது..

இது என் முதல் மீமெய்மை கவிதை.. தமிழில் முதலில் மீமெய்மை கவிதை புனைந்தவர் கவிகோ அப்துல் ரஹுமான், பால்வீதியே தமிழின் முதல் மீமெய்மை கவிதை நூல்..

மிகை எதார்தவாதம் பற்றி அதன் வரலாறு பற்றியும் வாய்ப்பு கிடைக்கும் போது தெளிவாக எழுதுகிறேன்..

நீங்கள் இக்கவிதையில் காணும் குறைகளை எனக்கு எடுத்துச்சொல்லுவீர்கள் என்று நம்புகிறேன்..

நன்றி..

கா.ரமேஷ்
17-12-2009, 12:12 PM
குறைகள் என்ன சொல்ல வேண்டியதிருக்கிறது... மன ஓட்டத்தின் எண்ணங்கள் அப்படியே பிரதிபலிப்பது கிடையாது,இரு வேறு கோணத்தில் நம்மை நிறுத்தி பார்க்கும்போது என்றாவது நேர்கோட்டில் சந்தித்தால் அது அதிசயிக்க கூடிய நிகழ்வுதான்.. நல்லதொரு கவிதை தோழரே...

சிவா.ஜி
17-12-2009, 12:26 PM
பால்ய இரவொன்றின் உறக்கத்தில்
என்னை வெளியெறிய ஒரு எண்ணம்
தொலைந்து போனது
ஏதோ ஒரு திசையில்..



இரண்டாவது வரி இருவேறு அர்த்தங்களை தன்னுள் அடக்கியதாக இருக்கிறது. எந்த அர்த்தத்தை நாம் எடுத்துக் கொள்கிறோமோ அதனை அடையாளப்படுத்திதான் அடுத்து நீளும் கவிதை வரிகள் பயணப்படுகின்றன.

என்னை விட்டு வெளியேறிய எண்ணம் என எடுத்துக்கொண்டால் அதன் பரிமாணம் வேறொன்றாக உள்ளது. அதுவல்லாது.........

என்னை வெளியெறிய.....எனும்போது..அங்கு ஒரு அரைப்புள்ளி இருந்தால்....

பால்ய இரவில் உறக்கத்தினின்று உலுக்கி வெளியெறியப்படுதல் எனும் அர்த்தம் விளைகிறது. அது எத்தனைக் கொடுமை. அப்போது தோன்றும் அந்த நேர எண்ணம் தொலைந்து போயிருந்தால் நல்லதே....அதனை தேடாது விட்டதும் நல்லதே.

வாழ்க்கையின் பெரும்பகுதி, அந்த எண்ணம் இவனைத் தேடியும், முடிவில் இவனை அடைந்தும் அடையாளம் இழந்ததைக் காணும்போது, இவன் சரியான பாதையில் தன் வாழ்க்கையை நடந்து வந்திருக்கிறானென்று தெரிகிறது.

இன்னும் பலதும் தெரிவிக்கும் வரிகள்...என்ன இசமாயிருந்தாலும்....வார்த்தைகளும், அர்த்தங்களும் ஆதனின் வசமாகியிருக்கின்றன.

வாழ்த்துகள் தம்பி.

கீதம்
18-12-2009, 03:28 AM
கவிதை மிகவும் அருமை. கோயிலுக்கு நேர்ந்துவிட்ட எங்கள் வீட்டுக் கன்று ஒன்றினை சில வருடங்களுக்குப் பின் காணநேர்ந்தபோது ஏற்பட்ட மனநிலை நினைவுக்கு வந்தது, தங்கள் கவிதையைப் படித்தபோது.

தங்கள் மூலம் மிகை எதார்த்தவாதம் பற்றித் தெரிந்துகொண்டேன். நன்றி!

குணமதி
18-12-2009, 03:58 AM
சர்ரியலிசக் கவிதை - இயல்பிகந்த கற்பனையோ?

வசீகரன்
18-12-2009, 10:01 AM
சர்ரியலிச கவிதை...... வித்தியாசமாக இருக்கிறது.
இந்த பெயரை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்..... ஆனால்.
இந்த கவிதையில் ஏதோ ஒன்று புலப்படுகிறது என்ன என்றுதான் சரியாக சொல்லதெரியவில்லை.....

கனவில் நான் என்னை எங்கோ கரைந்திருந்தபோது இந்த எனது கவிதைவரிகள் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

சர்ரியலிச கவிதை பெயரைப்போலவே புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது நண்பரே.... தொடர்ந்து எழுதுங்கள்.....