PDA

View Full Version : கூவம் சீரமைப்பு



அறிஞர்
08-12-2009, 02:11 PM
கூவம் சீரமைப்புப் பணிகள்: துணை முதல்வர் ஆய்வு

சென்னை, டிச.8: கூவம் ஆற்றில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

துணை முதல்வர் ஸ்டாலின் சிந்தாதிரிப் பேட்டை பகுதியில் கூவம் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கூவம் ஆற்றினை சீரமைக்க வேண்டும் என்பது முதல்வரின் கனவுத் திட்டமாகும். கூவம் ஆற்றினை சீரமைக்கும் பணியினை நிறைவேற்ற நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டது. இதற்காக முதல்வர் என்னுடைய தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்துள்ளார். இதன் முதற்கட்டமாக, ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுப்பணித்துறையின் வசம் உள்ள இடங்களை மாநகராட்சி மூலம் சீரமைத்து சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையை சோலைவனமாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 12 கிலோ மீட்டர் நீளமுள்ள நதியினை 10 ஆண்டுகாலமாக புனரமைத்து அழகுபடுத்தி உள்ளனர். இதனை பார்வையிட்டு வருமாறு முதல்வர் எங்களை பணித்தார். அதற்கேற்றவாறு நானும், அரசு உயர் அலுவலர்களும் பார்வையிட்டு வந்துள்ளோம். சென்னையில் கூவம் நதியின் நீளம் 18 கிலோ மீட்டர். திருவள்ளூவர் மாவட்டத்தில் கூவம் நதியின் நீளம் 54 கிலோ மீட்டர், மொத்தம் 72 கிலோ மீட்டர் தூரம் வருகிறது. கூவம் ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணியினை முதல்வர் மிக விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

கூவம் ஆற்றை சீரமைக்கும் பணியில் இதுவரை சுமார் 10000 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கூவம் சீரமைப்புப் பணியினை மேற்கொள்ள நதிநீர் ஆணையம் மட்டும் இல்லாமல், தலைமைச் செயலர் தலைமையில் நிர்வாக குழுவும் அமைக்கப்படவுள்ளது. இப்பணியில் அரசின் பல்வேறு துறைகள் இணைந்து செயல்பட இருக்கின்றன. சிங்கப்பூர் நதியை தூய்மைப்படுத்த 10 ஆண்டு காலம் ஆகியுள்ளது. சென்னை கூவம் நதியினை 10 ஆண்டுக்களுக்குள்ளாக சிங்கப்பூர் நதியை விட சிறப்பாக சீரமைத்து அழகுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது

இவ்வாறு ஸ்டாலின் கூறியதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும் கூவம் ஆற்றின் சீரமைப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த கால முயற்சிகள்:

1967ஆம் ஆண்டு, படகு குழாம் அமைத்தல், கரைகளுக்கு சிமென்ட் தளம் அமைத்தல், நீர் வழிகளில் தடுப்பு கதவு ஏற்படுத்துதல் போன்ற பல சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1997 ஆம் ஆண்டு முதல் தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகர நீர்வழி பாதைகள் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சுமார் 400 கோடி ரூபாய் அளவிற்கு சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. எனினும், கூவம் ஆற்றின் பெரும் பகுதி இடம் பெற்றுள்ள திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படாததால், முழுமையான பயன் கிடைக்கவில்லை.

கூவம் ஆற்றுச் சீரமைப்பிற்கான தற்போதைய திட்டம்:

சிங்கப்பூரில் உள்ள சிங்கப்பூர் ஆறு, கல்லாங் ஆறு ஆகியவை எவ்வாறு சீரமைக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிய துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தொழிற்துறை முதன்மைச் செயலாளர் எப்.எம்.பரூக்கி, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் இராமசுந்தரம், துணை முதல்வரின் முதன்மைச் செயலளார் கே.தீனபந்து, பனீந்திரரெட்டி, காந்திமதிநாதன் ஆகியோர் அடங்கிய குழு நவம்பர் 23 முதல் 27 வரை சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டது.

சிங்கப்பூர் ஆறு, கல்லாங் ஆறு ஆகியன 1977 முதல் 1987 வரையிலான 10 ஆண்டு காலத்தில் சீரமைக்கப்பட்டுள்ளன. இப்பணியின் போது ஆக்கிரமிப்புகள் அகற்றம், சிறுகடைகள், வியாபாரிகள், தொழிற்சாலைகள் அகற்றம், பன்றி, வாத்து பண்ணைகள் அகற்றம், நதி சீரமைப்பிற்கென தனி அமைப்பு, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் நதிப்பகுதியை மாற்றியமைத்தல், கழிவுநீர், திடக்கழிவுகள் கலப்பதை தடுத்தல், நீரின் தரம் உயர்த்துதல் ஆகிய பணிகளை இக்குழு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது.

சிங்கப்பூர் சென்று திரும்பி குழு தனது அறிக்கையினை 01/12/2009 அன்று முதல்வரிடம் சமர்ப்பித்தது. இதனைத் தொடர்ந்து முதல்வர் , சென்னை நதிநீர் ஆணையம் துணை முதல்வர் அவர்களின் தலைமையில் அமைக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட்டு, இந்த அமைப்பு சட்ட ரீதியான அமைப்பாக உருவாக்கப்படும்.

கூவம் ஆற்றினை சீரமைக்கும் பணியின் போது, கூவம் ஆற்றின் கரைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகற்றப்படும் ஆக்கிரமிப்புகளை பொறுத்து தகுந்த இனங்களில் விதிமுறைப்படி, உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். கூவம் நதிக்கரையில் இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படாதவகையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கழிவு நீர், திடக்கழிவு ஆகியவை கூவம் ஆற்றில் சேராதவகையில், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆற்றிலுள்ள சகதியை வெளியேற்றி கரையை பலப்படுத்தும் பணிகள் நிறைவேற்றப்படும். பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஆற்றின் கரைப் பகுதிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதனடிப்படையில் சென்னை மாநகராட்சியால் காந்தி இர்வின் சாலையில் அமைக்கப்படவுள்ள பூங்கா மற்றும் நடைபாதைப் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று (8.12.2009) தொடங்கிவைத்தார்.

கூவம் ஆறு தனது அதிகமான நீர்வரத்தினை திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஏரிகளிலிருந்து பெறுவதால், இத்தகைய 71 ஏரிகளை மேம்படுத்தி ஆற்றின் நீர்வரத்தை அதிகரிக்க வகை செய்யப்படும். துறைமுக பகுதியில் மணல் திட்டை அகற்றி, கழிமுக பகுதி சீரமைக்கப்படும். முதற்கட்டமாக உள்ளாட்சி பகுதிகளில் சுமார் 200 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை செயல்படுத்துதல், ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடைத் திட்டங்களை 117 கோடி ரூபாயில் மேம்படுத்துதல், ஆற்றின் கரை பகுதிகளை 200 கோடி ரூபாயில் மேம்படுத்துதல் ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும். பொதுப்பணித்துறையின் நீர்வள நிலவள திட்டம், நகராட்சி நிர்வாகத்தின் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புணரமைப்பு திட்டத்தின் கீழ் சில பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். இதர பணிகளுக்கு தேவையான நிதி ஆதாரங்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படும். முதற்கட்ட பணிகளுக்காக ரூபாய் 1200 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நீர்வழிப்பகுதிகளில் முதலில் கூவம் ஆற்றை சீரமைக்கவும், இதனைத்தொடர்ந்து சென்னையிலுள்ள பிற ஆறுகளை சீரமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - தினமனி

மன்மதன்
08-12-2009, 03:02 PM
சென்னையில் மக்கள் தொகை அதிகம். பெரும்பாலான கழிவுகள் கூவத்தில் கலக்கின்றன. அதற்கு சரியான முறையில் மாற்று திட்டத்தை நிறைவேற்றி விட்டு அப்புறம் கூவத்தை வெனிஸ் ஆக்கலாம்.. நடக்குமா??

பா.ராஜேஷ்
09-12-2009, 10:36 AM
திட்டம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... ஆனால் எப்படி செயல் வடிவம் பெறும் என்று பொருத்துத்தான் பார்க்க வேண்டும்!!!

இளசு
09-12-2009, 07:44 PM
சிகாகோ ஆறு இப்படித்தான் மாநகர மகாசாக்கடையாம் அந்நாளில்..

அழகிய பொறியியல் செயற்பாட்டால் அந்நதி இன்று நன்னீர்ப்பாதை.. படகுப்பாதை..

சிங்கை ஆறும் அப்படித்தானாம்.

மாமல்லபுரம் வரை படகில்போன பக்கிங்காம் கால்வாய் பற்றிப் பாவேந்தர் பாடல் உண்டு..

கூவத்தில் மிதக்கும் படகில் தமிழ்மன்ற ஆண்டுவிழா ஒன்று நிகழலாம்..

தண்ணீரில் தள்ளாடாமல் தலை தலைமை தாங்கலாம்..

நம்புகிறேன்.. நடக்கட்டும்!

ஜனகன்
09-12-2009, 09:24 PM
நானும் "நியூசில்" இத் தகவல் பார்த்தேன். அனால் எந்தளவுக்கு அமூல் படுத்தப்படும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

aren
10-12-2009, 01:27 AM
என் தந்தை 1960களில் மாமல்லபுரத்திற்கு சென்னையிலிருந்து படகில் சென்றிருக்கிறார். அப்பொழுது எல்லா ஆறுகளும் நன்றாகவே இருந்திருக்கின்றன. கடந்த 40 வருடங்களில்தான் இத்தனை சேதம் அடைந்திருக்கிறது.

தமிழக அரசு இதில் முனைப்புடன் இறங்கினால் சென்னை ஆறுகளிலும் மக்கள் படகுச்சவாரி செய்யலாம்.

சிவா.ஜி
10-12-2009, 05:14 AM
வாசனையான செய்திதான்.....ஆனால் பச்சைநோட்டுக்களின் வாசத்துக்காகவே இந்த திட்டத்தை தொடங்கியிருக்கும் பச்சோந்திகளால், எந்த அளவுக்கு இந்தத்திட்டம் வெற்றிபெறும் என்று சொல்ல முடியாது.

முதலில் ஆட்சியாளர்களின் மனதில் இருக்கும் கூவத்தை சுத்தப்படுத்திக் கொள்ளட்டும், பிறகு கூவம் தானாகவே சுத்தமாகிவிடும்.

arun
10-12-2009, 12:16 PM
நல்ல ஒரு திட்டம் நாம் கூட படகு சவாரி செய்யலாம் என்றால் மனதுக்கு இனிமையாக தான் இருக்கிறது

திட்டம் முழுமை பெற வாழ்த்துவோம்