PDA

View Full Version : அம்மாவுக்குக் கல்யாணம்



சிவா.ஜி
28-11-2009, 05:23 PM
“எங்க அம்மாவுக்கு கல்யாணம். வர்ற 23 ஆம் தேதி. கண்டிப்பா குடும்பத்தோட கலந்துக்குங்க”

பத்திரிக்கையை நீட்டிய என்னைப் பார்த்தவரின் கண்களில் லேசான அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது. பத்திரிக்கைக் கொடுக்க ஆரம்பித்தலிலிருந்தே இந்தவகைப் பார்வைகளை சந்தித்து பழகிவிட்டதால் சிறிய புன்முறுவலோடு அதனை அலட்சியம் செய்துவிட்டு விலகினேன்.

அப்படி பழகவில்லையென்றாலும் நான் எதைப்பற்றியும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் கேரக்டர் இல்லை. எல்லாமே டேக் இட் ஈஸி பாலிஸிதான்.

எங்க அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த கம்பீரம், எந்த சோதனையான சூழ்நிலையியிலும் கண்களில் கண்ணீரே வராத உறுதி, எப்போதும் இதழோரத்தில் லேசாய் இருந்துகொண்டேயிருக்கும் சிரிப்பு என என் ஆதர்ச பெண் என் அம்மா.

அப்பா.....நல்லவர்தான். எனக்கு நாலு வயதாகும்போது சக்கரநாற்காலியில் தள்ளப்பட்ட பிறகும் இரண்டு வருடங்கள் வரை நல்லவராகத்தானிருந்தார். அவரது பென்ஷன் பணம் போதாமல், அம்மா வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்து சந்தேகம் அவரை கொஞ்சம் கொஞ்சமாய் கெட்டவராக்கி, அப்பா என்றாலே வெறுக்குமளவுக்கு போய்விட்டது.

இரண்டுபேருக்கும் காதல் ப்ளஸ் பெற்றோர் சம்மத திருமணம்தான். தாம்பத்யத்தின் ஆரம்பக் காலங்கள் நீங்கள் எதிர்பார்த்ததைப் போல ரொம்ப சந்தோஷமாகத்தான் தொடங்கியது. நான் பிறந்து, நாலு வயதுவரை இரண்டு பேருமே போட்டி போட்டுக்கொண்டு என்னைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார்கள். அப்போதுதான் நான் ஏற்கனவே சொன்னதைப் போல அந்த சக்கர நாற்காலி சம்பவம் நிகழ்ந்தது.ஆட்டோக்காரன் உரசியதில் தடுமாறி விழுந்தவர், தலையில் அடிபட்டு வலது பாகம் முழுவதும் இயக்கமில்லாமல், அம்மாவின் உதவியில்லாமல் மற்ற பாகமும் இயங்கமுடியாது என்ற நிலை வந்தபோது, மனதளவில் மிகவும் தளர்ந்துவிட்டார்.

முகத்தில் எந்தக் கஷ்டத்தையும் காட்டாமல் பணிவிடை செய்யும் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் அப்பாதான் கஷ்டப்பட்டார். அம்மாவுக்கும் சேர்த்து அவரே பெருமளவு கண்ணீர்விட்டார். ஆனால் அம்மா வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்து அதே கண்ணீரை வட்டியும் முதலுமாய் அம்மாவிடம் வசூல் செய்ய் நினைத்தாரோ என்னவோ, சந்தேகம் என்ற அரக்கனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு அதகளம் செய்தார்.

நன்றாய் இருக்கும் இடது கையால் அம்மாவை அருகில் அழைத்து அறைவார். இயற்கை உபாதைக்குப் பின், பாத்திரத்தை எடுக்க சற்று தாமதமானாலும் அதனை எட்டி உதைப்பார். அதையும் சேர்த்து சுத்தம் செய்யும் அம்மாவை கண்களில் குருரம் தெரிய முறைத்துப் பார்ப்பார்.

அப்போதெல்லாம் என் அப்பாவைப் பார்க்க பயமாக இருக்கும். ஆனால் அடுத்த வருடத்தில் அது ஆத்திரமாகியது. அவரால் எழுந்து வந்து என்னை எதுவும் செய்யமுடியாது என்பதால், அம்மாவை அடிக்கும்போதெல்லாம் அவரை அடித்துவிட்டு ஓடிவிடுவேன்.

“ஓஹோ....உன் பையனை உன் தொழிலுக்கு உதவிக்கு வெச்சுக்கப் போறையா? அதுக்குத்தான் இப்பவே அவனைவிட்டு என்னை அடிக்க வெக்கறையா...ஏண்டி எப்ப புருஷன்காரன் மொடங்கிப்போவான்னு காத்துக்கிட்டிருந்தியா....ச்சீ....அப்படியென்ன சொகம் கேக்குது ஒனக்கு....”

ஒருபக்கமாய் கோணலுடனிருந்த வாயிலிருந்து இப்படி திராவகத்தை வீசியவரை அன்று கையிலிருந்த காம்பஸால் தொடையில் குத்தினேன். ஆனால் அதற்கும் அம்மாதான் அடி வாங்கினாள்.

இந்த கொடுமையும் அடுத்த இரண்டு மாதங்களிலேயே அப்பாவின் மூச்சு நிறுத்தலில் முடிவுக்கு வந்தது. அம்மா அழவில்லை. கல்மனசுக்காரி என்றார்கள். வேலைக்குப் போகும் திமிர் என்றார்கள். ஆனால் அவள் எதையுமே சட்டை செய்யவில்லை. அவளைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால்தான் ஆரம்பத்தில் நான் சொன்னதைப் போல எதைப் பற்றியும் கவலைப் படாத ஜென்மமாய் வளர்ந்துவிட்டேன்.

ஆனால் நான் கவலைப் படும் விஷயம் என் அம்மாவின் சிரிப்பு. தன் கஷ்டம், தன் காதல் கணவருக்குத் தெரியக்கூடாது என எந்நேரமும், சிரிப்பை சுமந்து திரிந்தவள், அப்பாவின் மறைவுக்குப் பிறகு அதைத் தொலைத்துவிட்டு புதிதாய் சுமந்து கொண்ட இறுக்கத்துடன் இருந்தாள். அம்மா தொலைத்துவிட்ட அந்த சிரிப்பை திரும்பவும் அவளுக்கு கொடுக்கவேண்டியது பிள்ளயான என் கடமை என்பது தெரிந்தாலும், அதை எப்படி செய்வது எனத் தெரியாமல், கல்லூரியில் முதல் மாணவனாக வந்தேன், அப்போது சிரித்தாள் தாற்காலிகமாக. நல்ல நிறுவனத்தில், கைநிறைய ஊதியத்துடன் வேலை கிடைத்து அனுமதி கடிதத்தை அவள் காலடியில் வைத்தேன். அப்போதும் சிரித்தாள்....மீண்டும் தாற்காலிகமாக.. அந்த சிரிப்பை நிரந்தரமாக்க என்ன வழி....குழம்பினேன்.

அந்த நேரத்தில்தான் தன் அலுவலக நண்பர் என்று பாஸ்கரை அறிமுகப் படுத்தினாள். இருவருக்கும் அலைவரிசை ஒத்துப்போனது அந்த இணக்கத்தில் தெரிந்தது. நல்ல நட்பாகத் தெரிந்தது. ஆரோக்கியமான நட்பாகத் தெரிந்தது. அம்மாவின் முகத்தில் லேசான மலர்ச்சி படரத் தொடங்கியதை உணர்ந்தேன். ஒரே பிள்ளை நான். திருமணத்துக்குப் பிறகு என்னதான் அம்மாவை என்னுடன் வைத்துக்கொண்டாலும், அவளுக்கு அவள் விரும்பும் வாழ்க்கையை வாழமுடியுமா? வருகின்ற மனைவி அனுசரித்துப் போகிறவளாக இருப்பாளா? பலவற்றையும் யோசனை செய்த எனக்கு அப்போதுதான் அந்த எண்ணம் தோன்றியது.

பாஸ்கரை தனிமையில் சந்தித்தேன். மனைவியை இழந்து மகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அவரையும் என் அம்மாவையும் வாழ்க்கையில் இணயவேண்டுமென வேண்டிக்கொண்டேன். நல்ல நட்பு நாசமாகிவிடுமோ என அச்சப்பட்டவரை, அந்த நட்போடு ஒரு உரிமையும் சேர்வதால் எந்த பாதகமும் இல்லையென்று தேற்றி சம்மதிக்க வைத்தேன். அவரைவிட்டே அம்மாவையும் சம்மதிக்க வைத்தேன்.

அம்மா நீண்டநாட்களுக்குப் பிறகு வெட்கப்பட்டாள். பழைய சிரிப்பு முகத்தில் குடிவந்திருந்தது. அதுதான் எனக்கு வேண்டியது. கஷ்டம் மட்டுமே பார்த்தவள், அந்தக் கஷ்டத்திலும் கண்ணீர் விடாதவள் ஆனந்தக் கண்ணீர் விட்டாள். இப்படியொரு மகனா என உச்சிமோந்தாள். சமூகத்தைப் பற்றி கவலைப் பட்டாள். யாருக்கு எது நிகழ்ந்தாலும் கொஞ்ச நாட்களுக்கு அவல் மெல்லும் சமூகம், பிறகு அதையும் மறந்து விடுமென்று சொல்லி அந்த கவலையை கரையவைத்தேன்.

ஆனால்........அப்போதுதான் வளரத் தொடங்கிய என் காதல் இந்தக் கல்யாணத்தால் ஆரம்பத்திலேயே கருகிவிட்டது. ஆம்....பாஸ்கர் அவர்களின் மகளைத்தான் நான் காதலித்துக்கொண்டிருந்தேன். ஆனால் என் அம்மாவின் சந்தோஷத்துக்காக என் காதலை....இல்லையில்லை எங்கள் காதலை கைகழுவினோம். எங்கள் விஷயம் இரண்டுபேருக்குமே தெரியாது என்பது ஆறுதலை அளித்தது.

காதல் கருகியபோது அதன் நெடி என் உள்ளத்தில் கொஞ்சம் காட்டமாகவே வீசியது. ஆனாலும் எத்தனையோ பெண்கள், ஊரெல்லாம் சுற்றிவிட்டு, காதலில் கசிந்துருகிவிட்டு, இரண்டு சொட்டுக் கண்ணீரில் அந்தக் காதலைக் கரைத்துவிட்டு, ‘அண்ணா’ என்று சொல்லி அறுத்துவிட்டுப் போவதில்லையா? அப்படியே இதையும் எடுத்துக்கொண்டேன். எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. அப்படியே ஏதாவது மிச்ச சொச்ச உறுத்தலிருந்தாலும், அவளுக்கு அண்ணனாக இருந்து யாரோ ஒரு நல்லவன் கைகளில் அவளைப் பிடித்துக் கொடுத்துவிட்டால் மறைந்து விடப் போகிறது. இல்லையா?


டேக் இட் ஈஸி.....அம்மா சிரித்துக்கொண்டிருப்பாள். அதுபோதும் எனக்கு.

அமரன்
28-11-2009, 06:14 PM
பாஸ்.. கரைக்கு வந்தாலும் மன்றம் வரக் காணொம்.

பாஸ் கரம் கதை மன்றம் தொட்டதில் ஆனந்தம்..

வழக்கமான உங்கள் கதைகளிலிருந்து இந்தக் கதை வேறு பட்டு நிற்கிறது.

தாயின் மறு தளிர்ப்பில் தனயனின் பங்கு மெய்கூச்செறிகிறது.

தனயன் காதலிக்கு தமையனானதில், அதை ஏற்றுகொண்டாள் என்ற விதத்தில் காதலி எழுந்து நிற்கிறாள்.

அவள் மரு`மகளானாலும் தாயின் மீள் மலர்வு சாத்தியம்தானே எனும் குரலும் தன் இருப்பைக் காட்டுகிறது.

தொடக்கத்தில் தந்தையின் மேல் ஏற்பட்ட ஆத்திரம் முடிவில் காணாமல் போய்விடுகிறது.

ஒருபாதி இயக்கம் இழக்க மறுபாதி தாயின் தயவுடன் இயங்குவது.. அட்சர சுத்த இல்லற இயல். டச்சிங் காட்சி விபரணம்.

ரயிலின் பயணம் இந்தக் கதை.

பாராட்டுகள் பாஸ்.

அன்புரசிகன்
28-11-2009, 08:09 PM
முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கதை. அதை சிவா அண்ணாவின் கைவண்ணத்தில் படிக்கும் போது அசத்தலாக உள்ளது...

தாய் பெருமையடையவேண்டிய பிள்ளை...

வாழ்த்துக்கள் அண்ணா...

மதுரை மைந்தன்
28-11-2009, 08:36 PM
முற்றிலும் வித்தியாசமான கதை. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

கீதம்
28-11-2009, 09:41 PM
தியாகம் என்றாலே அது தாய்தான் என்ற கருத்தை மாற்றி தாயின் மறுவாழ்வில் தன் வாழ்வைக் காணும் மகனைக் காட்டியுள்ளீர்கள். படிக்கும்போதே நெஞ்சம் நெகிழ்கிறது. பாராட்டுகள் சிவா.ஜி அவர்களே.

ஜனகன்
28-11-2009, 10:01 PM
வித்தியாசமான கதை, நன்று சிவாசி அவர்களே

சிவா.ஜி
29-11-2009, 02:41 AM
ரொம்ப நன்றி பாஸ். கரைக்கு வந்தாலும்,கணினி முன் அமர அதிக சமயம் கிட்டாத நிலை.(எங்களுக்கெல்லாம் வீட்டுக்கு வந்தால்தான் வேலை அதிகம். காத்துக்கொண்டிருக்கும் கடமைகள்.)

கடந்த வாரம் ஏதோ ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருக்கும்போது தானாய் சில வரிகள் வந்து விழுந்தது...அதனை விரிவாக்கினேன். வழக்கம்போல் இல்லாமல் சற்று மாறுபட்ட எழுத்தை முயன்றேன்.

முதல் பாராட்டாய் பாஸின் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி அமரன்.

சிவா.ஜி
29-11-2009, 02:44 AM
மிக்க நன்றி அன்பு. மாறுதலடையும் சமுதாயத்தில், தனையனின் கடமைகளும் மாறுகிறது. சிந்தனைகள் மாறும்போது பக்குவமும் ஏற்படுகிறது.

பின்னூட்டக் கருத்துக்கு நன்றி அன்பு.

சிவா.ஜி
29-11-2009, 02:46 AM
தங்களின் மேன்மையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மதுரைமைந்தன் அவர்களே. பெருந்தன்மைக்கு என் வணக்கங்கள்.

சிவா.ஜி
29-11-2009, 02:48 AM
தற்போது மன்றத்தில் அசரவைக்கும் சிறுகதைகளை அநாயசமாக எழுதும் எதார்த்தக் கதையாசிரியர் கீதம் அவர்களின் பாராட்டைப் பெற்றதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி கீதம்.

சிவா.ஜி
29-11-2009, 02:48 AM
மிக்க நன்றி ஜனகன். தவறாமல் அனைத்து படைப்புக்களுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் உங்களுக்கு என்னுடைய சிறப்பு நன்றிகள்.

சரண்யா
29-11-2009, 12:06 PM
மகனாக தாய்க்கு ஓர் கல்யாணம் செய்வதில் உயர்ந்த மகன் மேலும் கடைசியில் ஒரு எதிர்ப்பார்க்காத மனதில் உள்ள மகனின் விருப்பம் இருந்தும் தாயை சிரிக்க வைப்பதில் மேலோங்கி உள்ளது...இப்படி ஓர் மகனா... என்ற ஆச்சிர்யத்தை தோன்ற வைத்தது கதை..தலைப்பு மறுக்கல்யாணம் என இடாமல் இருப்பதும் அருமை....
நன்றிகள்...சிவா.ஜி அவர்களே..

த.ஜார்ஜ்
29-11-2009, 03:40 PM
சிவா நலமா?
சின்ன விசயங்களைக் கூட வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்.அதை கதத வடிவுக்கு கொண்டு வந்து விடுகிறீர்கள்.
கதை மாறுபட்ட அம்சம் கொண்டதாயிருக்கிறது.
வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அதோடு எனக்கு இன்னும் சில வரிகள் தோன்றியது சிவா..

வேலைக்கு போவதால் மட்டும் கனவன் சந்தேகப்படுவதாக காட்டியிருப்பதற்க்கு வலுவாக ஒரு காரணத்தை சொல்லியிருக்கலாம்.

சிரிப்பை மறந்த அம்மா கல்யாணம் என்றதும் வெட்கப்பட்டாள். முகத்தில் சிரிப்பு குடிகொண்டது என்று சொல்வது அம்மா அதற்க்காகதானா அலைந்தாள் என்ற எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குகிறது.அம்மா என்ற கதாப்பாத்திரத்தின் மேல் வெறுப்பு வருகிறது.ஒருவேளை கடைசியாக மகனின் காதல் தியாகத்தைதான் முன்னிலை படுத்த விரும்பினீர்களோ என்னவோ?

இன்னும் சொல்லப்போனால் அம்மா தன் பிள்ளைகளின் வளர்ச்சியிலல்லவா அதிகம் மகிழ்ந்திருக்க வேண்டும்.

இப்படி நீட்டிக்கொண்டே போவது உங்களை புண்படுத்த அல்ல. என் நண்பரால் இன்னும் சிறப்பாக இதே கதையை கூட எழுத முடியும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்த.

வெறுமனே முகஸ்துதி பண்ணி உங்களை முடக்கி விட நான் விரும்பவில்லை, முடுக்கிவிட விரும்புகிறேன். புரிந்து கொள்வீர்களா?

[ஒரு டிப்ஸ்: கதையை எழுதி முடித்து விட்டு உடனே வெளியிட்டு விடாதீர்கள். மூடி வைத்து விடுங்கள்.இரண்டு நாட்களுக்கு பிறகு எடுத்து வாசித்து பாருஙகள்.எதை சேர்ப்பது,எதை விடுப்பது என்று உங்களுக்கே தெரிந்துவிடும்.]

சிவா.ஜி
29-11-2009, 03:52 PM
மிக்க நன்றி சரண்யா.

சிவா.ஜி
29-11-2009, 04:04 PM
வாங்க ஜார்ஜ். இந்த மாதிரி பின்னூட்டம்...பார்க்கவே மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எடுத்துக்காட்டிய அந்த முகமலர்ச்சி வரிகள் உறுத்தலாய் இருப்பதற்குக் காரணம் எனது வார்த்தை சிக்கனம்தான்.

வேலைக்குப் போகும் மனைவியை சந்தேகப்பட ஆயிரம் காரணங்கள் இப்படி முடங்கிப்போன(மனதும்கூட) கணவர்களுக்கு கிடைக்கும். அவையெல்லாம் எத்தனையோ கதைகளில் வந்துவிட்டது.

நல்ல நட்பை நல்ல உறவாய் மாற்ற விரும்பிய மகனின் எண்ணத்தை மட்டுமே பிரதானப்படுத்தினேன். மகனுக்கு சந்தோஷமென்றால் தனக்கும் சந்தோஷம் என்பதும் தாயின் முகமலர்ச்சிக்கு ஒரு காரணமென்றாலும், ஏன் உண்மையாகவே அவள் இன்னொரு வாழ்க்கையை விரும்பக்கூடாது?

எத்தனை நாட்கள்தான் கணவன் இறந்தபிறகு, பிள்ளைகளுக்காக தாய்மார்கள் தியாகம் செய்துகொண்டே இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பது? தாயின் ஆசையென்றே இருக்கட்டும், அதை தனையனே நிறைவேற்றி வைப்பது பாவமொன்றுமில்லையே.

அதேபோல மாறுபட்ட சிந்தனைகளின் சொந்தக்காரர்களாய் இருக்கும் இளைய தலைமுறைகள், தன் அம்மாவுக்கும் ஒரு வாழ்க்கையை அமைத்து தருவார்கள், அதே சமயம் தன் காதலையும் ஒரு பொருட்டாய் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதைக் காட்ட நினைத்ததால் இந்த சுருக்க வரிகள். நீட்டலில்லாத இந்தக் கதை.

அன்பு நண்பருக்கு மனம் நிறைந்த நன்றி.

(உங்கள் யோசனையை இனி தவறாமல் பிரயோகிப்பேன். மிகவும் நன்றி.)

அமரன்
30-11-2009, 05:22 AM
வாங்க ஜார்ஜ்!

உங்கள் வெளிப்படையான விமர்சனமும் அதற்குப் பொருத்தமான சிவாவின் பதிவிலும் நட்போட்டத்தின் பெருமை சொல்லும்.

samuthraselvam
30-11-2009, 07:19 AM
நீண்ட நாட்களுக்கு பிறகு மன்றம் வந்த வித்யாசமான கதை.... தாய்க்கு கல்யாணம் செய்து காதலியை தங்கையாக ஏற்கும் மகன் உயர்ந்து நிற்கிறார்....

அந்த உணர்வுகளை அதிகமாக்கிக் காட்டுவது எதுவென்றால், அதை விவரித்திருக்கும் உங்கள் வரிகள், வார்த்தைகளை கையாண்ட விதம் இதெல்லாம் தான்.....

ம்ம் பஸ்ஸில் போகும்போதுகூட மன்றத்துக்கு கரு சேர்ப்பது நல்ல இன்ட்ரஸ்ட்டான விசயம்தான்.... வாழ்த்துக்கள் அண்ணா....

சுகந்தப்ரீதன்
30-11-2009, 12:27 PM
யாருக்கு எது நிகழ்ந்தாலும் கொஞ்ச நாட்களுக்கு அவல் மெல்லும் சமூகம்
ம்ம்ம்.. இதைப்போன்று ஆங்காங்கே சமூகத்தின் நாடித்துடிப்பை கச்சிதமாய் படம்பிடித்து காட்டியிருக்கிறீகள் கதைமாந்தர்களின் மூலம்.. வாழ்த்துக்கள் சிவா அண்ணா..:icon_b:!!

ஆனாலும் கதையின் கடைசி பத்தியை படிக்கையில விக்ரமன் படத்தை பார்த்த உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியலையே அண்ணா..:icon_rollout::icon_rollout::icon_rollout:?!

பா.ராஜேஷ்
30-11-2009, 04:02 PM
தொலைக்காட்ச்சியில் தொடராக வந்ததோ என்று நினைத்தேன்.... நிச்சயமாய் இல்லை. முற்றிலும் வேறுபட்டு நிற்கு நல்ல கதை. வாழ்த்துகள் அண்ணா!!!

அறிஞர்
30-11-2009, 04:38 PM
அம்மாவின் தியாக வாழ்க்கைக்கு.. பதில் காதல் தியாகம்..

அருமை சிவாஜி...

இளசு
01-12-2009, 04:48 PM
ஃப்யூச்சரிசம் எனப்படும் வருங்காலத்துக்காக கதை.

மிக உன்னதமான விசால மனம் சிலாகிக்கும் கதை என்பதால் என் சிறப்புப் பாராட்டுகள் நம்ம சிவாவுக்கு.

மெல்லிய தென்றலாய்..
தாய் மனமறிந்து மறுவசந்தம் மலரச்செய்த மகன் பற்றிய கதையில்...
சுயக்காதல் தியாகம் என்ற சிறு சுழல் இல்லாதிருந்தாலும் கூட
மகன் எதிர்காலங்களுக்கான நாயகனே என்பேன்..

பாராட்டுகள் சிவா..

aren
02-12-2009, 09:49 AM
நல்ல கதை சிவாஜி.

தாய்க்காக இதைக்கூட நாம் விட்டுகொடுக்கமாட்டோமா? அதைத்தான் மகன் செய்திருக்கிறார்.

இன்னும் கொடுங்கள் சிவாஜி.

சிவா.ஜி
02-12-2009, 04:46 PM
என்ன செய்யறது லீலும்மா....எப்பவாவது கொஞ்சம் தனிமை கிடைத்தாலும், மன்றத்தில் பதிய நல்ல கதைக் கருவை சிந்திக்கத் தொடங்கிவிடுகிறது மூளை(அப்படி சிந்திக்கும்போதுதான், அந்தமாதிரி ஒரு சமாச்சாரம், அதாவது ‘மூளை’ன்னு ஒண்ணு இருக்கறதே தெரியுது...ஹி...ஹி...)

பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி பாசமலரே.

சிவா.ஜி
02-12-2009, 04:48 PM
ஆஹா அதென்ன விக்கிரமன் படம் மாதிரின்னு சொல்லிட்ட சுபி? அவ்ளோ நல்லாவா இருக்கு(இது எப்டி இருக்கு? ஹா...ஹா...)

ரொம்ப நன்றிப்பா.

சிவா.ஜி
02-12-2009, 04:48 PM
மிக்க நன்றி ராஜேஷ்.

சிவா.ஜி
02-12-2009, 04:49 PM
மிக்க நன்றி அறிஞரே. உங்கள் ஊக்கப் பின்னூட்டம் என்னை இன்னும் எழுத வைக்கும்.

சிவா.ஜி
02-12-2009, 04:51 PM
சரிதான் இளசு. இனி வரும் காலங்களில், மாறுபட்ட சிந்தனையுடன் இருக்கப்போகும் இளையசமுதாயத்திடமிருந்து இப்படியான செயல்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

மிக்க நன்றி.

சிவா.ஜி
02-12-2009, 04:52 PM
ஆமாம் ஆரென்.....தாய்க்காக நிச்சயம் விட்டுக்கொடுக்கலாம். உங்களின் கோரிக்கைக்காக இன்னும் எழுதுவேன்.(நீங்கள்லாம் இருக்கீங்கங்கற தைரியத்துல...ஹி...ஹி...)

மிக்க நன்றி ஆரென்.

arivumalar
11-12-2009, 08:36 AM
ஹலோ ஜி அவர்களே,
உங்கள் கதை மிக அருமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.பெற்றோர்கள் என்ன தான் பிள்ளைகளை கவனித்தாலும் கடைசிகாலத்தில் பெற்றோர்கள் போவது முதியோர் காப்பகம்.

ஆதி
06-01-2010, 06:15 AM
நீயா நானாவில் தாய்க்கு கல்யாணம் செய்துவைத்த மகன் ஒருவரை பார்த்தேன், மிக நெகிழ்வாக இருந்தது, கல்யாணம் செய்து கொண்டவர்க்கும் 2 மகன்கள், அந்த தாயிடம் கோபினாந் கேட்டார் இந்த மூவரில் உங்களுக்கு யாரை மிக பிடிக்கும் என்று, மூவரையும் என்று முதலில் அந்த தாய் சொன்னாலும், இறுதியில் தன் இரண்டாவது மகனைத்தான் எனக்கு மிக பிடிக்கும், காரணம் அவன் கொஞ்சம் வெகுலி அவனைத்தான் நான் அதிகமா கவனம் எடுத்து பார்த்துக்கனும் னு சொன்னாங்க.. கேட்கும் போதே நெகிழ்வாக இருந்தது, பெற்ற ம்கனை விட உற்ற மகன் மீதான கவனமும் அக்கறையும் கண்களை கொஞ்சம் ததும்பவும் செய்ததன..

அழகிய கதை அண்ணா, ஜார்ஜ் அவர்கள் சொன்ன இடம் எனக்குள்ளும் நெருடலை விளைவித்தது, எந்த தாயும் எடுத்தவும் ஒற்றுக் கொண்டிருக்க மாட்டாள், கண்டிப்பாய் மகன் மாதக் கணக்கில் போராடி இருப்பான், அவள் சமாதானம் ஆக சில நாள் எடுத்தாலும், சமுதாயத்திய கவலை பல மாதங்களை தின்றிருக்கும்..


பாராட்டுக்கள் சிவா அண்ணா...

மஞ்சுபாஷிணி
06-01-2010, 06:56 AM
வித்தியாசமான சிந்தனை.. இப்படியும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்... அருமையான கதை சிவா.. புதுமையான முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...

அக்னி
06-01-2010, 08:47 AM
தந்தையின் சந்தேகம், தாயின் சந்தோஷம், தனயனின் தியாகம்
மூன்றும் சந்திக்கும் புள்ளியில் கதையின் கரு...

தாயின் சந்தோஷத்திற்காக, தன் காதலைத் தியாகம் செய்த தனயன்,
தாயின் தியாக வாழ்விற்கு மணமாலையிட்டுப் பார்த்தது சரியா...

இதனால்,
தந்தையின் வசவுகள் உண்மையாகிவிடுமே, என்பதைத் தாயும் தனயனுமே யோசிக்க மறந்ததேன்?

சரி, சமூகத்தின் வசவுகளைக் கருத்திற்கொள்ளத் தேவையில்லை என்றே வைத்துக்கொண்டாலும்,
தூய நட்பிடையே, மணபந்தத்தை ஏற்படுத்தித்த்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இந்தக் கதையில் வலுவாக இல்லை.
ஏனென்றால்,
காதலனைத் தமையனாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட காதலி,
தாயைக் கரிசனையாகக் கவனித்துக்கொள்ள மாட்டாள் என்ற அச்சம்,
தனயன் மனதில் தோன்றுவது பெரும் முரண்.

தவிர,
சூழ்நிலைகளுக்கேற்ப காதலர், சகோதரராக மாறினாலும்,
மன ஆசைகள், கண்ட கனவுகளையும், கொண்ட உணர்வுகளையும்,
எப்படித் தவிர்த்துவிட முடியும்..?

தனயன் தாயின் மனதறிந்து இப்படி நடந்தது கதையாக மட்டும் இருப்பதே நன்று.
தாய் தனயன் மனதறிந்து நடந்திருந்தால், அது வாழ்வாக இருப்பதுவும் பெரும் சிறப்பு.

தாய்க்கும், பாஸ்கருக்குமிடையேயான நட்பு, தானே காதலாகிக் கனிந்திருந்தால்,
இந்தக்கதை சமூகக் கட்டுக்களைத் தளர்த்தியிருக்கும்.

இன்பக்கவி
07-01-2010, 02:11 PM
ரொம்ப நல்லா இருக்கு..
சின்ன கதை...
நல்ல கதை...
நன்றிகள்..