PDA

View Full Version : யாதுமாகி நிற்கிறாய்....!



samuthraselvam
21-11-2009, 05:02 AM
எதிர் காலத்தை நினைத்த அவளின் கண் பனித்து கண்ணீர் ஆறாக ஓடியது.....

'நீயே என் எதிர்காலம்....!' என்று சொன்னாயே, இப்போது என் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறதே....!

நினைத்து நினைத்து அழுதாள்.... எவ்வளவு நேரம் அழுதாளோ....

அழுது அழுது கண்களில் கண்ணீரே வரவில்லை, மனது மட்டும் விம்மிக்கொண்டே இருந்தது....

"திலகா",........ தற்போதுதான் தன் திலகத்தையும் தன் மாங்கல்யத்தையும் தொலைத்தவள்...... ஆம், அவளின் காதல் கணவன் வெங்கட் ஒரு விபத்தில் காலமானான்......

குங்குமத்திலகம், வெங்கட் இருவரும் கல்லூரி காலத்திலேயே ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்து, அந்தப் புரிதல் நடப்பாகி பின் காதலாக மலர்ந்தது......

இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு... அதனை எதிர்ப்புகளையும் மீறி இருவரும் இல்வாழ்க்கையின் இன்பத்தில் நண்பர்களின் உதவியோடு ஒரு இனிமையான தருணத்தில் காலடி எடுத்து வைத்தார்கள்...

ஐந்து மாதங்கள் மிகவும் சந்தோசமாக ஓடியது...

இருவரும் ஒருவரை ஒருவர் உள்ளங்கைகளில் வைத்து தாங்கினார்கள்....

"இதற்கு தானே, இந்த அன்பிற்கு தானே ஏங்கினேன். இதே போல் ஆயுள் முழுக்க இருக்க, ஆண்டவா என்றுமே எங்களுக்கு துணை இருப்பாயாக........" என்று நிதமும் வேண்டுவாள்...

ஆனால் மனிதனுக்கு மட்டுமல்ல, அந்த தெய்வத்திற்கும் கூட சந்தோசம் குடியிருக்கும் குடும்பத்தைக் கண்டால் அதை தகர்த்தெறியும் ஆவல் பிறக்கும் அல்லவா? குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் ஆனது அவர்களின் சந்தோசம்.

விதியின் கைகளில் பூமாலை ஆனாள் திலகம்.

மனைவி கர்பமாக இருக்கும் செய்தியை சொன்னவுடன், சந்தோசமாக குங்குமப்பூவும் இனிப்புகளும் வாங்கிக்கொண்டு வேகமாக கிளம்பினான்.

விதி அவனை விட வேகமாய் ஒரு சரக்கு லாரியை அனுப்பியது....சந்தோஷத்தில் விசிலடித்துக் கொண்டே ஒரு திருப்பத்தில் திரும்பியவனை எதிரே வந்த லாரியின் தவறுதலால் அடித்து தூக்கி எறியப்பட்டான்.......வாங்கி வந்த பூவும் பழங்களும் இனிப்புகளும் அவனுக்கு முன்னே விழுந்து நசுங்கியது......அப்படியே அவன் உயிரும் பிரிந்தது.... செய்தி கேள்விப்பட்டதும் அலறி அடித்து ஓடி வந்தாள்...... "சற்று முன் தன்னிடம் பேசிய வெங்கட்டா இது..... இது..... , இ....இ....இல்லை இது என்னுடைய வெங்கட் இல்லை..... இது வேறு யாரோ...யாரோ..." அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்..... ஆனால் நடந்த உண்மையை இல்லையென்றால் ஒப்புக்கொள்ள முடியுமா?

அப்போதே அவளின் உயிர் பிரிந்திருக்க வேண்டியது,,, அந்தக் கோரக் கட்சியை பார்த்தும் அவள் உயிர் பிரியாமல் இருக்கக் காரணம், அவன் உயிர் அவள் கருவில் இருப்பதுதான்..... அந்த உயிரே அவள் எதிர்காலம் என நினைத்து ஓரளவு ஆறுதல் பட்டாள்.... எப்படியோ மனதை தேற்றி நண்பர்களின் துணையுடன் இறுதி காரியம் முடித்தாள்... இருவரைச் சேர்ந்த உறவினர்கள் ஒருவரும் எட்டிப்பார்க்கவில்லை...

திலகதிற்கோ கண்களை கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது... இருந்ததை வைத்து மூன்று மாதங்கள் ஓட்டிவிட்டாள்... எத்தனை நாளைக்கு நண்பர்களின் உதயிவுடன் வாழமுடியும்.

தான் எப்போதோ பொழுது போக்காக கற்று வைத்திருந்த தையல் கலை நினைவிற்கு வந்தது...

ஆனால் மருத்துவரிடம் ஆலோசித்தபின் அது தவறு என்று தெரிந்தது.... கர்பகாலத்தில் தையல் இயந்திரத்தில் அமரக்கூடாது என மருத்துவர் கூறிவிட்டார்.

என்ன செய்வது என திணறிக் கொண்டிருந்தவளுக்கு வெங்கட்டின் தோழன் பிரபு வழிகாட்டியாய் செயல்பட்டான்.

'அக்கம் பக்கம் உள்ள வீட்டுக் குழந்தைகளுக்கு ட்யூசன் எடுக்கலாமே' என்ற யோசனையைக் கூறினான். கூறியதோடு மட்டுமல்லாது அவனே குழந்தைகளின் பெற்றோரிடம் பேசி அவளின் வருங்காலத்திற்கு வழி செய்தான்.

முதலில் நான்கு குழந்தைகள் மட்டும் வந்து சேர்ந்தனர்...

ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே அவளின் முழுத் திறமையையும் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினாள்.....

அவர்களும் அதை பிரதிபலித்தார்கள்....

முதலில் நம்பிக்கை இல்லாதவர்களும் தங்கள் குழந்தைகளை திலகத்தை நம்பி ட்யூசன் அனுப்பி வைத்தார்கள்...

நான்கு குழந்தைகள் இப்போது இருபத்தி ஐந்து குழந்தைகள் ஆனார்கள்...

ஒரு குழந்தைக்கு மாதம் 75/-ரூபாய் வீதம் வாங்கினாள். அவள் ஒருத்திக்கு அந்த வருமான போதுமானதாக அமைந்தது... அதிலேயே மிச்சம் பிடித்து பிரசவச் செலவுக்கும் சேமித்தாள்.

மாத மாதம் மருத்துமனைக்குச் சென்று குழந்தையின் வளர்ச்சி பற்றியும் உணவு முறைகளையும், கற்பகாலங்களில் நடந்து கொள்ளும் முறைகளையும் பற்றி அறிந்துகொண்டாள்....

தன் எதிர்காலமே தன் வயிற்றில் இருப்பதை நன்கு உணர்ந்து செயல்பட்டாள்.....

கணவன் கொடுத்த கனவையே வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை நினைத்து திருப்தி கண்டாள்....

தன் ஆசைக் கணவனின் முகத்தை தன் குழந்தையின் முகத்தில் இந்த உலகுக்குக் காட்டப் போகும் நாட்களை நினைத்து ஏங்கினாள்....

எதிர்பார்த்த நாளும் வந்தது.... பிரசவ வலி வந்ததும் பிரபுவுக்கு சொல்லி அனுப்பினாள்....

பிரபுவும் அவன் அன்னையை துணைக்கு விட்டுச் சென்றான்...

மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்திலேயே ஒரு புதிய உயிர் உலகத்தைக் காண வந்தது...

திலகம் சூடான நீர் கண்களில் வழிய அதன் முதல் அழுகையில் சுகம் கண்டாள்....

தாய்மை என்பது எத்தனை மகத்துவமான ஒன்று.... தாய்மை அடையும் போதுதான் ஒரு பெண் முழுமை அடைகிறாள்... அவள் பெண்மைக்கு அப்போதுதான் அங்கீகாரம் கிடைக்கிறது....

தன் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அமுதூட்டினாள்... "இப்போதுதானடா.... என் தங்கமே.... உன் அப்பா உயிர் பிரிந்தும் நான் உயிரோடு இருப்பதன் அர்த்தம் புரிகிறது" என கொஞ்சினாள்....

அந்த புதிய பூவின் ஸ்பரிசத்தில் மனம் சொக்கினாள்... அவளின் அணைப்பில், உலமே இல்லை இல்லை என்று ஆனாலும் இந்த அணைப்பு மட்டும் போதும் என்றவாறு அந்தப் பூக்குட்டியும் அன்னையின் கதகதப்பை அனுபவித்தது.....

ஒரு மாதத்தில் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவை எளிமையாய் முடித்தாள்... எழிலரசன் என வெங்கட்டும் தானும் முன்னரே திட்டமிட்ட பெயரையே சூட்டினால்... எழிலின் சிரிப்பில் தன் பசி, தூக்கம், துக்கம் என அனைத்தையும் மறந்தாள்...

அவனின் முகத்தில் வெங்கட்டைக் கண்டாள்... எழில் வளர வளர வெங்கட்டின் முகச்சாயல், செய்கைகள் என அனைத்தையும் திலகத்தால் உணர முடிந்தது....

ட்யூசன் எடுத்துக் கொண்டே மூன்று மாதங்களுக்குப் பின் தையல் இயந்திரம் ஒன்றை வாங்கினாள்... தெரிந்தவர்களுக்கு தைத்துக்கொடுத்தாள்.... அடுத்தவர்களுக்கு அவளது திறமையும், புன்னகை மலரும் முகத்துடன் பேசும் அழகும் கண்களில் இருந்த கூர்மையும் அவள் மீது மரியாதை தோன்றச் செய்தது....

அவளின் இந்த வளர்ச்சியால் அவளால் முன்பு போல ஒருத்தியே அனைத்து வேலைகளையும் செய்ய முடியவில்லை.. எழிலையும் பார்த்துக்கொண்டு, துணிகளையும் தைத்துக் கொடுத்து, வீட்டு வேலையும் செய்து கொண்டு ட்யூசனும் எடுக்க மிகவும் சிரமப்பட்டாள்...

அவளின் இந்த வளர்ச்சியால் அவளால் முன்பு போல ஒருத்தியே அனைத்து வேலைகளையும் செய்ய முடியவில்லை..

எழிலையும் பார்த்துக்கொண்டு, துணிகளையும் தைத்துக் கொடுத்து, வீட்டு வேலையும் செய்து கொண்டு ட்யூசனும் எடுக்க மிகவும் சிரமப்பட்டாள்...

துணைக்கு மயிலி என்ற பெண்ணை வைத்துக் கொண்டாள்.. மயிலி... 40 வயது. கோவிலுக்குச் செல்லும்போது அறிமுகமானவள். ஊரில் நடந்த கலவரத்தில் கணவனையும் பிள்ளையையும் பறிகொடுத்துவிட்டு திக்குத் தெரியாமல் கோவிலில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தவளை வீட்டுக்கு அழைத்துவந்தாள்...

மயிலின் பங்களிப்பால் திலகத்தின் வேலைப் பளு குறைந்தது..

மயிலிக்கும் எழிலால் ஏக்கம் மறந்தது... நாட்கள் நகர்ந்தது... எழில் பள்ளி செல்லும் வயதும் வந்தது..

பள்ளியில் சேர்த்துவிட்டாள்.. பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போதே "அம்மா" என்று அழைத்தபடி வருவான்.

அவன் வரும் நேரம் திலகம் அவன் எதிரிலேயே இருக்க வேண்டும்.

இல்லையென்றால் கோபப்படுவான். தூங்கி எழும்போதும், தூங்குவதற்கும் முன்னும் அப்படிதான், அம்மா முகத்தில் தான் விழிக்கவேண்டும் என்று அடம்பிடிப்பான்.

அப்படி அவள் முகத்தில் விழிக்கும் போது சந்தோசமாக கண்களை சிமிட்டி சிரித்துவிட்டு அம்மாவுக்கு முத்தம் கொடுப்பான்.

அவன் கண்களில் வெங்கட் தெரிவான். 'நான் இருக்கிறேன்' என்று சொல்லும் அவன் கண்கள்.....

காலச் சக்கரத்திற்கு என்ன கடிவாளமா இருக்கறது?

நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்கள் ஆனது.

எழிலுக்கு அழகான பெண்ணை பார்த்து மணமுடித்தாள் திலகம்.....

மருமகளோ 'பாசம் என்றால் என்ன விலை?' என்று கேட்கும் ரகம். பணம் தான் வாழ்க்கை என்று நினைக்கும் பணப்பிசாசு......

மாமியாரிடம் தன் கணவன் காட்டும் பிரியத்தை வெறுத்தாள். அதனால் மாமியாரையே வெறுத்தாள்.....

கரைக்கக்கரைக்க கல்லும் கரையும் அல்லவா? எழிலும் கரைந்தான்.

'நான் இருக்கிறேன்' என்று முன்பு சொன்ன அவன் கண்கள், 'நீ ஏன் இன்னும் இருக்கிறாய்' என்று சொன்னது...

பெற்றவளுக்கா புரியாது பிள்ளையின் எண்ணம்.....புரிந்தாள். அவர்களை விட்டு பிரிந்தாள்.... இன்று அனாதையாக முதியோர் காப்பகத்தில்.....

எதிர் காலத்தை நினைத்த அவளின் கண் பனித்து கண்ணீர் ஆறாக ஓடியது.....

'நீயே என் எதிர்காலம்....!' என்று இருந்தேனே.... இப்போது என் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறதே....!

இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை... தன் கணவன் வெங்கட்டை சேரும் நாளுக்காக காத்திருக்கிறாள்...

வியாசன்
21-11-2009, 05:21 AM
செல்வம் முதியோர் இல்ல வாழ்க்கை இந்தியர்களுக்கு (தமிழர்களுக்கு) வெறுக்கத்தக்க ஒன்று. ஆனால் வெளிநாடுகளில் அதுதான் முதியோர்களுக்கு வசதியானது. ஆணும் பெண்ணும் போட்டி போட்டுக்கொண்டு வேலைக்கு செல்கின்ற காலம் இது. இருவரும் வேலைக்கு சென்றுவிட்டால் முதியவர்கள் சிரமப்படுவார்கள். அதுவே முதியோர் இல்லமாக இருந்தால் அவர்கள் மற்றவர்களுடன் சந்தோசமாக இருக்க முடியும்.

அருமையான கதை வாழ்த்துக்கள்

கா.ரமேஷ்
21-11-2009, 05:31 AM
நல்லதொரு கதை ... ஒரு தாயின் உணர்வுகளை அழகாக தந்துள்ளீர்கள்.. கதை நீங்களே எங்களுக்கு சொல்வது போன்ற ஒரு தோற்றம் தென்படுகிறது.

வாழ்த்துக்கள்...

கீதம்
21-11-2009, 09:51 AM
கதைப்போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட கதை என்று நினைக்கிறேன். மிகவும் உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள். இன்று நம் நாட்டில் பல பெற்றோரின் நிலை இதுதான். மருமகள் மாமியாரை தாயாகவும், மாமியார் மருமகளை மகளாகவும் நினைக்கும் நாள் எதுவோ அன்றுதான் இதுபோன்ற பிரச்சனைகள் தீரும். மனம் தொட்ட கதைக்கு பாராட்டு சமுத்திரசெல்வம் அவர்களே.

ஜனகன்
21-11-2009, 07:00 PM
படங்களில் வரும் கதை போல் இருந்தாலும், இங்கு வாசிக்கும் போது, அது உண்மைக்கதை போலவே இருக்கின்றது.
'நீயே என் எதிர்காலம்....!' என்று இருந்தேனே.... இப்போது என் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறதே....இது கணவனுக்கும், மகனுக்கும் பொருந்தக்கூடியதாக எழுதி இருக்கின்றீர்கள். நன்றாகவுள்ளது.

இளசு
21-11-2009, 08:45 PM
இரு முறை.. ஒரே வரி...
இருபது ஆண்டு இடைவெளி..


காலை நிழலும் காலடியில்
மாலை நிழலும் காலடியில்..
இடைப்பட்ட கொடுவெயில்
தாங்கியது தாய்மையில்..


மனம் கனக்க வைத்த கதை!


பாராட்டுகள் லீலுமா..

சுகந்தப்ரீதன்
23-11-2009, 09:43 AM
யாதுமாகி நிற்க்கும் காலத்தின் கோலம்...!!

வண்ணங்கள் வளைவுகளும் மாறினாலும் வாழ்க்கை மட்டும் இன்றும் மாறாமல் அப்படியே..!!

ஒரேமாதிரியான உணர்வு வெளிப்பாட்டை இருவேறு இடங்களில் இளசு அண்ணா சொன்னதுபோல் உபயோகித்திருப்பது லீலுமாவின் திறமை..!!

வாழ்த்துக்கள்...!!

samuthraselvam
27-11-2009, 07:23 AM
செல்வம் முதியோர் இல்ல வாழ்க்கை இந்தியர்களுக்கு (தமிழர்களுக்கு) வெறுக்கத்தக்க ஒன்று. ஆனால் வெளிநாடுகளில் அதுதான் முதியோர்களுக்கு வசதியானது. ஆணும் பெண்ணும் போட்டி போட்டுக்கொண்டு வேலைக்கு செல்கின்ற காலம் இது. இருவரும் வேலைக்கு சென்றுவிட்டால் முதியவர்கள் சிரமப்படுவார்கள். அதுவே முதியோர் இல்லமாக இருந்தால் அவர்கள் மற்றவர்களுடன் சந்தோசமாக இருக்க முடியும்.

அருமையான கதை வாழ்த்துக்கள்

நன்றி வியாசன்...

அனால் முதியோர்களுக்கு தன பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடன் இருப்பது தான் மன நிறைவைக் கொடுக்கும் வியாசன்...

samuthraselvam
27-11-2009, 07:26 AM
நல்லதொரு கதை ... ஒரு தாயின் உணர்வுகளை அழகாக தந்துள்ளீர்கள்.. கதை நீங்களே எங்களுக்கு சொல்வது போன்ற ஒரு தோற்றம் தென்படுகிறது.

வாழ்த்துக்கள்...

நன்றி ரமேஷ்...

கதையை நானே சொல்வது போல தான் அமைத்திருக்கிறேன்....

samuthraselvam
27-11-2009, 07:30 AM
கதைப்போட்டியில் பங்கெடுத்துக்கொண்ட கதை என்று நினைக்கிறேன். மிகவும் உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள். இன்று நம் நாட்டில் பல பெற்றோரின் நிலை இதுதான். மருமகள் மாமியாரை தாயாகவும், மாமியார் மருமகளை மகளாகவும் நினைக்கும் நாள் எதுவோ அன்றுதான் இதுபோன்ற பிரச்சனைகள் தீரும். மனம் தொட்ட கதைக்கு பாராட்டு சமுத்திரசெல்வம் அவர்களே.

ஆம் கீதம்.. இது கதைப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற கதை தான்...

மாமியாரை தாயாகவும், மருமகளை மகளாகவும் பார்க்கும் நாள் எப்போதுமே வராது கீதம்... பத்து ஆண்கள் ஒன்றாக இருந்தால் ஒரு பிரச்சனையும் வராது, அதே ரெண்டு பெண்கள் சேர்ந்தால் போதும் பிரச்சனைகளுக்கு அளவு இருக்காது....

samuthraselvam
27-11-2009, 07:44 AM
படங்களில் வரும் கதை போல் இருந்தாலும், இங்கு வாசிக்கும் போது, அது உண்மைக்கதை போலவே இருக்கின்றது.
'நீயே என் எதிர்காலம்....!' என்று இருந்தேனே.... இப்போது என் எதிர்காலமே கேள்விக்குறியாகி நிற்கிறதே....இது கணவனுக்கும், மகனுக்கும் பொருந்தக்கூடியதாக எழுதி இருக்கின்றீர்கள். நன்றாகவுள்ளது.

நன்றி ஜனகன்..!

ஒரு வரியில் ஆரம்பித்து அதே வரியில் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்... அதனால் தான் அப்படி அமைந்தது...

samuthraselvam
27-11-2009, 07:47 AM
இரு முறை.. ஒரே வரி...
இருபது ஆண்டு இடைவெளி..


காலை நிழலும் காலடியில்
மாலை நிழலும் காலடியில்..
இடைப்பட்ட கொடுவெயில்
தாங்கியது தாய்மையில்..


மனம் கனக்க வைத்த கதை!


பாராட்டுகள் லீலுமா..

நன்றி இளசு அண்ணா....

இந்த வரிகளை மனதில் வைத்துக் கொண்டு தான் கதையையே தேர்ந்தெடுத்தேன்...

samuthraselvam
27-11-2009, 07:49 AM
யாதுமாகி நிற்க்கும் காலத்தின் கோலம்...!!

வண்ணங்கள் வளைவுகளும் மாறினாலும் வாழ்க்கை மட்டும் இன்றும் மாறாமல் அப்படியே..!!

ஒரேமாதிரியான உணர்வு வெளிப்பாட்டை இருவேறு இடங்களில் இளசு அண்ணா சொன்னதுபோல் உபயோகித்திருப்பது லீலுமாவின் திறமை..!!

வாழ்த்துக்கள்...!!

நன்றி சுகந்த் அண்ணா.... கொஞ்சம் வித்யாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்...

குணமதி
29-11-2009, 01:32 AM
நடைமுறையில் காணும் உண்மை நிகழ்ச்சிகளைத் தொகுத்த மாலையாக ஓர் உணர்வூட்டும் கதை.

பாராட்டு.

samuthraselvam
11-01-2010, 03:31 AM
பாராட்டுக்கு நன்றி குணமதி அவர்களே...!