PDA

View Full Version : நக்கீரரின் பெருமை



சொ.ஞானசம்பந்தன்
18-11-2009, 03:03 AM
புராணக்கதைகள் சிலவற்றைக் கோத்து உருவாக்கிய திருவிளையாடல் படத்தில் தருமி ஒரு பாத்திரம்.

அவன் எப்படிப்பட்டவன்? சொந்தமாகப் பிழையின்றிப் பாட்டெழுதத் தெரியாத அரைகுறைப் புலவன். பிறரது பாடலைத் தனதெனப் பொய் சொல்லி மன்னனை ஏமாற்றிப் பொற்கிழி பெறத் திட்டமிட்டு முயன்ற மோசடிப் பேர்வழி. பாவில் குற்றமுண்டு என்று கேள்விப்பட்டவன் குற்றமில்லை என மறுக்க இயலாமல், 'எவ்வளவு குற்றமிருக்கிறதோ அவ்வளவு குறைத்துக் கொண்டு' பணம் ஈயும்படி கெஞ்சிய கோமாளி. நக்கீரரைப் பற்றி எதுவும் அறியாதவன். 'இங்கே எல்லாமே நீர்தானோ?' என்று கேட்டபின்பு 'பாட்டில் குற்றஞ்சொல்லிப் பெயர் வாங்கும் புலவர்' என்று குறைகூறிவிட்டு வெளியேறியவன். பாட்டில் குற்றஞ்சொல்வது தவறல்ல என்பதையும் நேர்மையற்றவனாகிய தான் பிறரை நோக்கி விரல் நீட்டத் தகுதியில்லாதவன் என்பதையும் எண்ணிப் பார்க்க இயலாத பேதை. அவனுக்கு வயிற்றெரிச்சல்! பேராசையுடன் எதிர்பார்த்த பொருள் கிட்டவொட்டாமல் தட்டிவிட்டாரே என்ற ஆத்திரத்தில் அவரை இகழ்ந்தான்.

தருமி ஒரு கற்பனைப் பாத்திரம். நக்கீரரோ உண்மையாகவே தமிழகத்தில் வாழ்ந்தவர். அவர் எத்தகையவர்?

சங்கப் புலவருள் தலை சிறந்த மூவர் யார் என்று தமிழறிந்த ஒருவரிடம் வினவின், அவர் சற்றுந் தயங்காமல் சட்டென விடையிறுப்பார் கபிலர், பரணர், நக்கீரர் என்று. நக்கீரர் யாருடைய பாட்டிலுங் குற்றஞ் சொன்னதாய் வரலாறு இல்லை. குறை கண்டு கூறவல்ல புலமை மிக்கவரே எனினும் அப்படியொரு வாய்ப்பு நேரவேயில்லை.

பத்துப் பாட்டில் ஒன்றான, 188 அடி கொண்ட, நெடுநல்வாடையின் ஆசிரியரான அவரது புகழ் எங்கும் பரவியிருந்தமையால் புதல்வர்களுக்கு அவருடைய பெயரைப் பெற்றோர் சூட்டி மகிழ்ந்தனர் என அனுமானிக்கலாம்.

அவர்களுள் ஒருவர் பெரும் புலவராகித் திருமுருகாற்றுப் படையை இயற்றினார். பத்துப்பாட்டில் ஒன்றெனத் தவறாய்ச் சேர்க்கப்பெற்றிருந்த இது பிற்காலத்தது என ஆய்வாளர் நிறுவியுள்ளனர். இரு நக்கீரர்களுக்கும் குறைந்தது இரண்டு நூற்றாண்டுக் கால இடைவெளியிருக்கலாம்.

8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட களவியல் என்ற இலக்கண நூலுக்கு உரையெழுதிய அறிஞரின் பெயரும் நக்கீரர் என்பதிலிருந்து சங்க கால நக்கீரரின் பெருமை கிட்டத்தட்ட 1000 ஆண்டு வரை உணரப் பட்டிருந்தது என்பதை அறியலாம்.

இத்தகைய பெரும் புலவர் குறித்து அஞ்ஞானியொருவன் கூறியதாக வரும் கற்பனை சினிமா வசனத்தைத் திருப்பிச் சொல்வோர் தமது அறியாமையை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

குணமதி
18-11-2009, 03:10 AM
அரிய செய்திகள்.

நன்றி.

praveen
20-11-2009, 05:50 AM
உண்மையிலே அப்படி இருந்தாலும் சினிமா என்பது வியபார நோக்கத்தோடு எடுக்கப்படுபவை என்பதால் அதனை குறை சொல்ல ஆரம்பித்தால் தனியே ஒரு திரி ஆரம்பித்து சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

நீங்கள் உங்கள் கூற்றுக்கு ஆதாரமான விசயத்தை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம். உங்கள் சொந்தகைதட்டச்சாக இல்லாமலிருந்தால் அந்த வேற்று தள பெயரை அறிய தந்திருக்கலாம்.

எனினும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

அப்படியே கொங்குதேர் வாழ்க்கை என்ற பாட்டை இறையனார் பாடியதாக சொல்லப்படுகிறதே, அது பற்றியும் உங்கள் கருத்தை சொல்லுங்களேன். பாடல் பொய்யா அல்லது இறையனார் பொய்யா என்று.

சொ.ஞானசம்பந்தன்
20-11-2009, 06:43 AM
உண்மையிலே அப்படி இருந்தாலும் சினிமா என்பது வியபார நோக்கத்தோடு எடுக்கப்படுபவை என்பதால் அதனை குறை சொல்ல ஆரம்பித்தால் தனியே ஒரு திரி ஆரம்பித்து சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

நீங்கள் உங்கள் கூற்றுக்கு ஆதாரமான விசயத்தை இன்னும் தெளிவாக சொல்லியிருக்கலாம். உங்கள் சொந்தகைதட்டச்சாக இல்லாமலிருந்தால் அந்த வேற்று தள பெயரை அறிய தந்திருக்கலாம்.

எனினும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

அப்படியே கொங்குதேர் வாழ்க்கை என்ற பாட்டை இறையனார் பாடியதாக சொல்லப்படுகிறதே, அது பற்றியும் உங்கள் கருத்தை சொல்லுங்களேன். பாடல் பொய்யா அல்லது இறையனார் பொய்யா என்று.

பின்னூட்டத்திற்கு நன்றி. இது என் சொந்தப் படைப்பே.

நான் சினிமாவை (இயக்குனரை, நடிகர்களை, உரையாடலை...)க் குறை சொல்லவில்லை. தருமி என்ற பாத்திரத்தைத்தான் விமரிசித்தேன். நீங்கள் எதற்கான ஆதாரம் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. தெளிவுபடுத்தினால் நல்லது.

கொங்குதேர் வாழ்க்கை பற்றித் தனிக்கட்டுரை எழுதுவேன்.

சொ.ஞானசம்பந்தன்
20-11-2009, 06:43 AM
அரிய செய்திகள்.

நன்றி.

பின்னூட்டத்திற்கு நன்றி.

praveen
20-11-2009, 06:59 AM
நண்பரே ஒரு வழக்கத்திற்கு மாறான அல்லது நம்பிக்கைக்கு எதிரான கருத்து சொல்லும் போது அதுபற்றி நாம் அறிந்திருந்த தெரிந்திருந்த ஆதாரத்தை தெரிவித்து சொல்வது தான் நன்றாக இருக்கும் என்பதால் அப்படி பதிந்தேன்.

உங்கள் கூற்று தவறு என்பதற்கு நான் இனையத்தில் கண்டதை தருகிறேன். சுட்டி கடைசியில் உள்ளது பாருங்கள்.



நக்கீரர் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்
வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்
பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

இத்திருமுறையில் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், கார் எட்டு, போற்றித்திருக்கலி வெண்பா, திருமுருகாற்றுப் படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய பத்துப் பிரபந்தங்கள் நக்கீர தேவர் அருளியனவாக உள்ளன.

இப்பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்துள்ள திரு முருகாற்றுப்படை சங்க நூலாகிய பத்துப் பாட்டில் முதலாவதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று குறிக்கப்பெற்றுள்ளது. கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும்.

ஏனைய பிரபந்தங்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற் றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமய குரவர்க்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் பெயர் தாங்கிய ஒருவரால் செய்யப் பெற்றனவாதல் வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பெயர் விளக்கம்

நக்கீரர் என்ற பெயரில் கீரன் என்பது இயற்பெயர். ந, சிறப்புப் பொருள்தரும் இடைச்சொல் . இப்பெயரை நல் கீரன் என்பதன் திரி பாகக் கொள்வாரும் உளர். பதினொன்றாம் திருமுறையில் சமயஞ் சார்ந்த அருளாளர் நிலையில் நக்கீரதேவ நாயனார் என இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

திருவிளையாடற்புராணத்தில்

பெரும்பற்றப்புலியூர்நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் இயற்றிய திருவிளையாடற் புராணங்களில் கூறப்படும் நக்கீரர் வரலாறே இன்றைய சமய உலகில் பெரு வழக்காயுள்ளது.

பாண்டிய மன்னன் அகப்பொருள் நூல் கிடைக்கவில்லையே என மனங்கவன்ற காலத்தில் திருஆலவாய் இறைவன் `அன்பின் ஐந்திணை` எனத் தொடங்கி அகப்பொருள் நூல் ஒன்றை எழுதி அவன்பால் சேர்ப்பித்து அம்மன்னன் மனக் கவலையைப் போக்கி யருளினார். அந்நூலைச் சங்கப்புலவர் அனைவரும் பாராட்டிப் போற்றினர். நக்கீரர் மட்டும் அந்நூலைக் குறைகூற இறைவன் தானே தமிழ்ப்புலவராய்த் தோன்றி நக்கீரரின் மன மருட்சியை நீக்கி அவருக்குத் தெளிவு ஏற்படுத்தி மறைந்தருளினார்.

சண்பகமாறன் என்னும் பெயரினனாகிய பாண்டிய மன்னன் தன் தேவியோடு தனித்து உலாவியபோது அவள் கூந்தலிலிருந்து தோன்றிய நறுமணத்தை நுகர்ந்து அம்மணம் பூவொடு இணைந்ததால் உண்டான செயற்கை மணமா? அல்லது இயல்பான கூந்தலின் மணமா என ஐயுற்று அவ்வையத்தை வெளிப்படுத்தாது புலவர்களை அழைப் பித்து `என் மனத்திடை எழுந்ததோர் ஐயத்தைத் தெளிவிப்பார்க்கு ஆயிரம் பொன்` என அறிவித்துப் பொற்கிழியைச் சங்கமண்டபத்தே தொங்கவிடச் செய்தான். பெரும் புலவர்கள் பலர் முயன்றும் அவ்வையத்தைப் போக்கிப் பொற்கிழியைப் பெற இயலவில்லை.

தருமிக்குத் தண்ணருள்

இஃது இங்ஙனமாக மதுரைத் திருக்கோயிலில் சிவபிரானை வழிபடும் பிரமசாரியாகிய தருமி என்பவன் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பிப் பெருமானிடம் தன் வறிய நிலையை எடுத் துரைத்துத் தனக்குப் பொருள் அருளுமாறு வேண்டிக் கொண்டான். ஆலவாய் இறைவன் அவனது வேண்டுகோளை நிறைவேற்றக் கருதி, `கொங்குதேர் வாழ்க்கை` என்னும் செய்யுளை இயற்றித் தந்து அதனைச் சங்கப் புலவரிடம் காட்டிப் பொற்கிழியைப் பெற்றுக் கொள்க என்றும், இப்பாடலை யாரேனும் குறைகூறின் நாமே வந்து விளக்கம் கூறி உதவுவோம் எனவும் உரைத்தருளினார்.சொற்போர் அப்பாடலைப் பெற்றுக்கொண்ட தருமி சங்கப் புலவர்களிடம் காட்டினான். அவர்கள் அதனைப் படித்தறிந்து ஒன்றும் கூறாதிருத் தலைக் கண்டு அதனை வாங்கிச் சென்று பாண்டிய மன்னனிடம் காட்டினான். மன்னன் தன் மனத்தெழுந்த ஐயத்தை அகற்றிய அச் செய்யுளைப் படித்துப் பாராட்டிப் பொற்கிழியை எடுத்துச் செல்லுமாறு கூறினான். நக்கீரர் இப்பாடல் பொருட் குற்றம் உடையது எனத் தருமியைத் தடுத்து நிறுத்தி இப்பாடலைப் பாடி அனுப்பியவரையே அழைத்து வருமாறு கூறித் தருமியை அனுப்பியருளினார். இதனைத் தெரிவிக்கக் கேட்ட ஆலவாய் அவிர்சடைக் கடவுள் தானே தமிழ்ப் புலவராய் வெளிப்பட்டுத் தருமியுடன் சங்க மண்டபத்தை அடைந்து `இப்பாடலில் குற்றம் கண்டவன் யாவன்?` என வினவியருளினார். நக்கீரர் நானே குற்றம் கூறியவன் எனக் கூறக்கேட்ட இறைவன்

அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
பங்கம் படஇரண்டு கால்பரப்பிச் - சங்கைக்
கீர்கீர் என அறுக்கும் கீரனோ என்கவியை
ஆராயும் உள்ளத் தவன் (தனிப்பாடல்)

எனக் கேட்ட அளவில் நக்கீரர் அதற்கு மறுமொழியாகச்

சங்கறுப்ப தெங்கள்குலம் சங்கரனார்க்கு ஏதுகுலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ - சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வ திலை (தனிப்பாடல்)

என்ற செய்யுளால் விடையிறுத்தார்.

நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் தாம்பாடிய பாடலில் என்ன குற்றம் கண்டீர் என இறைவர் கேட்க நக்கீரர் `மகளிர் கூந்தல் மலர் முதலியவற்றாலும் நறுமணம் ஊட்டுவதாலும் செயற்கையான மணம் பெறுவதேயன்றி இயற்கை யான மணம் உடையதன்று ஆதலின் இச்செய்யுள் பொருட் குற்றம் உடையது என்றார். பெருமான் உத்தம சாதிப் பெண்டிர், தேவமாதர், உமையம்மை முதலானோர் கூந்தலுக்கும் அப்படித்தானோ? எனக் கேட்டார். நக்கீரர் தான் கூறியதையே சாதிக்கும் முறையில் அவையும் அப்படியே என்றார். சிவபிரான் தன்னை அடையாளம் காட்டும் குறிப்பில் தன் சடைமுடியை வெளிப்படுத்தினார். நக்கீரர் தமிழ் வல்ல என்னைச் சடைமுடி காட்டி வெருட்ட வேண்டாம் என்றார். பெருமான் சினந்து தன் நெற்றி விழியைத் திறந்தார். அவ்விழி அழலால் வெதுப்புற்ற நிலையிலும் நக்கீரர் நெற்றிவிழி காட்டினும் குற்றம் குற்றமே எனப் பிடிவாதமாகக் கூறக் கேட்ட பெருமான் அவரைத் தன் விழி வெம்மையால் வாடுமாறு செய்ய நக்கீரர் அதனைப் பொறுக்கலாற்றாதவராய்ப் பொற்றாமரைத் தடாகத்தில் வீழ்ந்தார். இறைவன் மறைந்தருளினார்.

தருமி தனக்குரிய பொற்கிழியை மன்னன் பால் பெற்றுச் சென்றான். நக்கீரர் தன் பிழை உணர்ந்து வருந்தி கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதியால் இறைவனைப் போற்ற அதனைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் அவரைக் கரையேற்றி அகத்தியரைக் கொண்டு அவருக்குத் தமிழின் நுட்பங்களை உணர்த்தச் செய்தருளினார். நக்கீரர் கோபப்பிரசாதம் பெருந்தேவபாணி திருஎழு கூற்றிருக்கை முதலிய பிரபந்தங்களால் சிவபிரானைப் போற்றிப் பரவினார்.

அகப்பொருள் உரை

இறையனார் அருளிய அகப்பொருள் நூலுக்கு நல்லுரை தருமாறு அவ்விறைவரையே புலவர்கள் வேண்ட பெருமான் உருத்திரசன்மர் மூலம் நக்கீரர் கபிலர் பரணர் ஆகியோர் உரைகளே சிறந்தவை என உணர்த்துமாறு செய்தருளினார்.

இவை நக்கீரர் பற்றித் திருவிளையாடற் புராணத்துட் கூறப்படும் வரலாறாகும்.

கல்லாடம்

பொற்றாமரைக் குளத்திலுருந்து நக்கீரர் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி பாடியதைக் கல்லாடம்,

அருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல்
பாவியிற் கேட்ட காவியங் களத்தினன்

எனக் குறிப்பிடுகிறது. இறைவன் `கொங்குதேர் வாழ்க்கை` என்னும் பாடல் பாடி தருமிக்குப் பொற்கிழி பெற்றளித்ததை,

பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக்
கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ்க் கூறிப்
பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி
எனக் குறிப்பிடுகிறது. அப்பர் சுவாமிகள்,

நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி
நற்கனகக் கிழிதருமிக்கு அருளினோன்காண் எனப் போற்றியருள்கிறார்.

காலம்

கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும்.

பதினொன்றாம் திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நூல்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும் தேவார திருவாசகக் கருத்துக்கள் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாலும் இந்நக்கீரதேவர் தேவார திருவாசக ஆசிரியர்களின் காலத்திற்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண் டில் வாழ்ந்தவர் ஆகலாம் எனப் பேராசிரியர் திரு.க. வெள்ளை வாரணனார் பன்னிரு திருமுறை வரலாற்றில் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.

கல்வெட்டுச் சான்று

நக்கீரதேவர் திருஈங்கோய்மலை எழுபது பாடிய காரணத்தால் அத்தலத்தில் தேவாரமூவர் திருவுருவங்களோடு நக்கீரர் திரு வுருவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கட்கு அபிடேகம் வழிபாடு செய்வித்தற்கு மூன்றாங் குலோத்துங்க சோழ மன்னன் நிலம் அளித்துள்ள செய்தி அங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. இவற்றைக் காணுங்கால் தேவார மூவர்க்குப்பின் வாழ்ந்த பெரும் புலவர் ஒருவர் நக்கீரர் பெயரோடு வாழ்ந்தார் எனவும், அப்புலவரே இந்நூல்களை இயற்றியுள்ளார் எனவும் கொள்வதில் தவறில்லை எனலாம். மேலும் சங்கப்புலவராகிய திருமுருகாற்றுப்படை ஆசிரியர் பெயர் நக்கீரர் என்று மட்டுமே உள்ளது. இந்நூல்களை அருளிய புலவர் பெயரோ நக்கீர தேவர் என்பதாலும் இருவரும் வேறு வேறானவர் எனக் கருதலாம்.

கதை வழக்கிற்குக் காரணம்

நக்கீரர் பற்றிய கதை வழக்கிற்குக் காரணமாகக் கூறும் சான்று, நக்கீரர் பாடிய பெருந்தேவபாணியில்
சொலற்கருந் தொன்மைத் தொல்லோய் நீயே - அதனால்

கூடல் ஆலவாய்க் குழகன் ஆவது
அறியாது அருந்தமிழ் பழிச்சினன் அடியேன்
ஈண்டிய சிறப்பின் இணையடி சிந்தித்து
வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே

என்பதாகும். இப்பாடலில் வரும் பழிச்சினன் என்ற சொல்லுக்கு போற்றித் துதித்தேன் எனப் பொருள் காணாது பழித்தனன் என்று பொருள் கொண்டதால் ஏற்பட்ட விபரீதமே நக்கீரர் இறைவன் பாடலில் பிழை கண்டு பின் அவர் அருள் வேண்டிப் பல பிரபந்தங் களால் போற்றினார். என்னும் புனைவுக் கதைகட்குக் காரணமாயிற்று எனவும் கூறுவர்.


http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=19

சொ.ஞானசம்பந்தன்
10-12-2009, 07:07 AM
நண்பரே ஒரு வழக்கத்திற்கு மாறான அல்லது நம்பிக்கைக்கு எதிரான கருத்து சொல்லும் போது அதுபற்றி நாம் அறிந்திருந்த தெரிந்திருந்த ஆதாரத்தை தெரிவித்து சொல்வது தான் நன்றாக இருக்கும் என்பதால் அப்படி பதிந்தேன்.

உங்கள் கூற்று தவறு என்பதற்கு நான் இனையத்தில் கண்டதை தருகிறேன். சுட்டி கடைசியில் உள்ளது பாருங்கள்.





http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=19

வித்துவான் வி. சா. குருசாமி தேசிகர் அவர்களின் கட்டுரையை இணையத்திலிருந்து எடுத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.

அவர் திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரர், 9ஆம் நூற்றாண்டு நக்கீரர் ஆகிய இருவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்களுக்கு முன்பு நெடுநல்வாடை எழுதிய நக்கீரரையுஞ் சேர்த்து மூன்று நக்கீரர் என்று என் கட்டுரையில் எழுதினேன். ஆகக் கணக்கு சரி.

திருமுருகாற்றுப்படை சங்ககால நூல்களான பத்துப் பாட்டுள் ஒன்று எனவும் இதைப் பாடிய நக்கீரர் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு எனவும் கட்டுரையாசிரியர் கூறுகிற இரு தகவல்களும் பழையவை. அவை தவறு என்று ஆராய்ச்சியாளர் முடிவுகட்டியுள்ளனர்.

திருமுருகாற்றுப்படை சங்ககால நூலன்று என்பதற்குக் காரணங்கள்:
சங்க இலக்கியங்கள் கூறுகிற முருகன் குறிஞ்சி நிலத் தெய்வம். அவ்வளவுதான். வேறு செய்திகள் அவனைப் பற்றியில்லை.

திருமுருகாற்றுப்படை முருகனோ:
அ) திருமணமானவன்; ஆ) ஆறுமுகம் உடையவன்; இ) சூரனைக் கொன்றவன்; ஈ) 6 படைவீடு கொண்டவன்.

இச்செய்திகள் பிற்கால நூலான கந்தபுராணத்தில் உள்ளன. இவற்றை விவரிக்கிற திருமுருகாற்றுப்படையும் பிற்கால இலக்கியமே; இதையியற்றிய நக்கீரரும் பிற்காலத்தவரே.

(சங்ககாலம் கி.பி. 2இல் முடிந்துவிட்டது)

இனித் தருமி பற்றிப் பார்க்கலாம்;

குருசாமி தேசிகரின் கட்டுரைப்படி,
1. சண்பகமாறன் பாண்டியன் போட்டியறிவித்தான்.
2. பொற்கிழி சங்க மண்டபத்தில் தொங்கவிடப்பட்டது.
3. பாடலைச் சங்கப் புலவர்களிடம் காட்டுமாறு இறைவன் தருமியிடஞ் சொன்னார்.
4. தருமி சங்கப் புலவர்களிடம் பாட்டைக் காட்டினான்.

மேல் விவரங்கள் தருமி கதையும் அதன் தொடர்பான இறைவன் - நக்கீரர் வாதமும் சங்க காலத்தில் சங்கப் புலவர்களின் எதிரே நிகழ்ந்தன எனத் தெரிவிக்கின்றன.

ஆனால்,
அ) சங்க காலப் பாண்டியர்களுள் சண்பகமாறன் பாண்டியன் என்று ஒருவன் இல்லை.
ஆ) போட்டி, பொற்கிழி, தருமி பற்றிச் சங்க இலக்கியங்களுள் ஒரு குறிப்புக் கூட இல்லை.
இ) கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த நிகழ்ச்சியைப் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். இதைக் காட்டிலும் இறைவன் நேரில் வந்து வாதிட்டது எவ்வளவு அபூர்வ நிகழ்ச்சி! அப்போது அங்குக் கூடியிருந்த 48 சங்கப் புலவர்களுள் ஒருவர் கூட அதை வியந்து பாடக் காணோமே!
ஈ) 'பாண்டியர் வரலாறு' நூலில் சண்பகமாறன், தருமி, மேற்படி நிகழ்ச்சி பற்றிச் செய்தியில்லை.

மேல் கண்ட காரணங்களால் தருமி கதை, ஒரு கற்பனைக் கதை, அவன் ஒரு கற்பனை மனிதன், அவன் நக்கீரரை நோக்கிப் "பாட்டில் குற்றஞ் சொல்லிப் பெயர் வாங்கும் புலவர்" என்று இகழ்ந்தான் என்பது கற்பனைச் சினிமா வசனம் என்பன விளங்குகின்றன. ஆகவே, 'நக்கீரரின் பெருமை'க் கட்டுரையில் நான் எழுதியவை எல்லாம் சரியான தகவல்களே.

திருவிளையாடல் புராணக்கதை பற்றிய குறிப்புகளைப் பின் வந்த சைவ, சமய இலக்கியங்களான கல்லாடம், அப்பர் தேவாரம் முதலியவற்றில் படிக்கிறோம். இவை எல்லாம் மத நம்பிக்கை அடிப்படையில் எழுதப்பட்டவை. இந்து மத நுல்களில் மட்டுமல்லாமல் யூத, கிறித்துவ மத இலக்கியங்களிலும் எத்தனையோ அற்புத நிகழ்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன. நம்புபவர் நம்பலாம். நம்பாதவர் நம்பாமல் இருக்கலாம்.

ஓவியன்
29-12-2009, 08:41 AM
மிக்க நன்றி திரு. ஞானசம்மந்தன் அவர்களே, நல்ல விடயங்கள் நிறைய அறிய முடிந்தது...


அ) சங்க காலப் பாண்டியர்களுள் சண்பகமாறன் பாண்டியன் என்று ஒருவன் இல்லை.
ஆ) போட்டி, பொற்கிழி, தருமி பற்றிச் சங்க இலக்கியங்களுள் ஒரு குறிப்புக் கூட இல்லை.
இ) கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த நிகழ்ச்சியைப் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். இதைக் காட்டிலும் இறைவன் நேரில் வந்து வாதிட்டது எவ்வளவு அபூர்வ நிகழ்ச்சி! அப்போது அங்குக் கூடியிருந்த 48 சங்கப் புலவர்களுள் ஒருவர் கூட அதை வியந்து பாடக் காணோமே!
ஈ) 'பாண்டியர் வரலாறு' நூலில் சண்பகமாறன், தருமி, மேற்படி நிகழ்ச்சி பற்றிச் செய்தியில்லை.


சிந்திக்க வைத்த தகவல்கள், மீளவும் நன்றிகள் பல...

சொ.ஞானசம்பந்தன்
03-01-2010, 10:53 PM
பாராட்டுக்கு மனமார் நன்றி
சொ.ஞானசம்பந்தன்

THEVENTHIRAR
20-03-2010, 09:26 AM
கடைச்சங்க நக்கீரன் புராணம்பற்றி எதுவும் எழுதவில்லை.பிற்கால நக்கீரர்தான் இயற்றினார்.