PDA

View Full Version : பரிதாப வாழ்வு யாருக்கடி?கீதம்
13-11-2009, 10:45 AM
கொட்டாங்கச்சியில் சேறு குழைத்து
சோறென்று சொல்லிப் பரிமாறுவோம்;
சொட்டுநீரை மண்ணில்விட்டு
இட்டிலியென்றே பக்குவமாய் எடுப்போம்;
பூவரச இலையில் பீப்பீ செய்து
நாதசுர கானம் இசைப்போம்;
சிறுகுச்சியொன்றை மணலில் ஒளித்து
கிச்சுகிச்சுத் தாம்பாளமென்றே தேடுவோம்;
கூழாங்கற்கள் தேர்ந்தெடுத்து
கல்லாம் காய் விளையாடுவோம்;
குமரிகளாய் எம்மை எண்ணி
கூட்டாஞ்சோறும் ஆக்குவோம்;
ஓட்டாஞ்சில்லுகளை உதைத்து
நொண்டி விளையாடுவோம்;

தாயக்கட்டம் தரையில் வரைந்து
காய்களை மலையில் பழுக்கவைப்போம்;
புளியங்கொட்டைகளைப் பொறுக்கி
பல்லாங்குழியில் முத்துச் சேர்ப்போம்;
கண்ணாடி வளையற் துண்டுகளை
கவனமாக ஜோடி சேர்ப்போம்;
கயிறு தாண்டிக் குதிப்போம்;
வண்ணம் சொல்லித் தேடுவோம்;
கணநேரம் கிடைத்தாலும்
கண்ணாமூச்சி ஆடுவோம்;
உட்கார ஒரு மணற்குவியல்,
ஒன்றிரண்டு சொப்புகள் என்று
உள்ளதைக் கொண்டு விளையாடி
சமர்த்துப் பெண்களாய் நாங்களிருக்க,

பளிங்குகளும், பம்பரமும்,
பட்டமும், நூலும் வாங்க
காசு கேட்டுப் பையன்கள் எல்லாம்
காலைப் பிடிப்பர் அம்மாவிடம்!
வாங்கிய சற்று நேரத்திலேயே
பளிங்குகள் உடைந்துபோகலாம்;
பம்பரங்கள் தெறித்தோடலாம்;
பட்டங்களும் அறுபடலாம்;
மனமுடைவதில்லை சிறுவர்கள்!

பனங்காய் வண்டியும்,
மிதிவண்டி உருளையும்,
பழையபடி ஓட்டிச்செல்ல,
புறப்பட்டுவிடுவர், உற்சாகத்துடன்!
சந்துபொந்துகளில் எல்லாம்
பந்து விளையாடுவர்;
பச்சைக்குதிரை தாண்டுவர்;
குந்தி விளையாடச் சொன்னல்
கொஞ்ச நேரம் ஆடுவர்,
ஆடுபுலி ஆட்டம்!
சுட்டிப் பையன்கள் வைத்திருக்கும்
கிட்டிப்புள்ளும், உண்டிவில்லும்
எத்தனை சாபம் ஏற்றன என்று
எண்ணில் சொல்ல இயலாது!

இப்படித்தானடிப் பெண்ணே,
இன்பமாய்க் கழித்தோம், எம்
இளம்பிள்ளைப் பிராயத்தை!
என்றே ஏக்கத்துடன் எடுத்துரைத்தேன்,

'தொலைக்காட்சியும், கணினியும்
இல்லாத உன் காலத்தில்
எதைக் கொண்டு அம்மா உன்
இளவயதைக் கடத்தினாய்?'
என்று பரிதாபத்துடன்
என்னை வினவிய
என் பத்து வயது மகளிடம்!

(நன்றி:பதிவுகள்)

கா.ரமேஷ்
13-11-2009, 12:32 PM
இளம் பிராயத்தை அசைபோட வைக்கும் அழகான கவிதை. அனைவரும் அனுபவித்த விசயத்தை அழகாக எடுத்து படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் கீதம்.

வியாசன்
13-11-2009, 12:39 PM
'தொலைக்காட்சியும், கணினியும்
இல்லாத உன் காலத்தில்
எதைக் கொண்டு அம்மா உன்
இளவயதைக் கடத்தினாய்?'
என்று பரிதாபத்துடன்
என்னை வினவிய
என் பத்து வயது மகளிடம்!

(நன்றி:பதிவுகள்)

முத்தான கவிதை கீதம் பழையநினைவுகள்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

கிட்டிப்புள் அடித்து
பம்பரம் விட்டு
தும்பி பிடித்து வாலில்
நூலைகட்டி விளையாடியதும்

இன்னமும் இன்னமும் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

குணமதி
13-11-2009, 03:18 PM
அருமை.

பதிவுகளில் எழுதியவர் கீதம் தானே.

கீதம்
13-11-2009, 09:41 PM
இளம் பிராயத்தை அசைபோட வைக்கும் அழகான கவிதை. அனைவரும் அனுபவித்த விசயத்தை அழகாக எடுத்து படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் கீதம்.
மேலே உள்ளவற்றில் சிலவற்றையாவது நம்மில் பலரும் அனுபவித்திருப்போம் என்ற நம்பிக்கையில் எழுதினேன்.
நன்றி கா.ரமேஷ் அவர்களே.

கீதம்
13-11-2009, 09:43 PM
முத்தான கவிதை கீதம் பழையநினைவுகள்
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

கிட்டிப்புள் அடித்து
பம்பரம் விட்டு
தும்பி பிடித்து வாலில்
நூலைகட்டி விளையாடியதும்

இன்னமும் இன்னமும் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

பழைய நினைவுகளில் திளைத்து மகிழ ஒரு வாய்ப்பு உருவாக்கியதற்காக மகிழ்கிறேன். நன்றி வியாசன் அவர்களே.

கீதம்
13-11-2009, 09:46 PM
அருமை.

பதிவுகளில் எழுதியவர் கீதம் தானே.

ஆம், நானேதான் குணமதி அவர்களே. பாராட்டுக்கு நன்றி.

சுடர்விழி
14-11-2009, 11:31 AM
அற்புதம் கீதம் அவர்களே ! ஒவ்வொரு வரியும் அப்படியே குழந்தை பருவத்திற்கு என்னை அழைத்துச் சென்றன.பாராட்டுக்கள் !!!

கீதம்
16-11-2009, 01:19 AM
அற்புதம் கீதம் அவர்களே ! ஒவ்வொரு வரியும் அப்படியே குழந்தை பருவத்திற்கு என்னை அழைத்துச் சென்றன.பாராட்டுக்கள் !!!

மிகவும் நன்றி சுடர்விழி அவர்களே.

இளசு
16-11-2009, 07:06 PM
அழகிய ஆவணம்..

அரும்படைப்பு.

வாழ்த்தி மகிழ்கிறேன்!

பாராட்டுகள் கீதம்.

கீதம்
17-11-2009, 03:55 AM
அழகிய ஆவணம்..

அரும்படைப்பு.

வாழ்த்தி மகிழ்கிறேன்!

பாராட்டுகள் கீதம்.

மிக்க நன்றி இளசு அவர்களே.

அருள்
17-11-2009, 04:04 AM
அருமை...........பாராட்டுகள்

சுகந்தப்ரீதன்
17-11-2009, 09:03 AM
உங்கள் கவிதையை வாசித்தப்போது ஒரு கணம் சிறுபிராயத்திற்க்கு சென்று வந்த திருப்தி..!! நீங்கள் சொல்லும் அனுபவங்களில் பல இந்தகால கிராமத்து பிள்ளைகளுக்கேக்கூட கிடைப்பது அரிது..!!

குறுகிய பொழுதில் பெருகிய காலமாற்றம்... வரமா.. சாபமா..என்று யாருக்கும் தெரியவில்லை.!!

வாழ்த்துக்கள் கீதம்.. தொடருங்கள்..!!

கீதம்
18-11-2009, 07:33 AM
அருமை...........பாராட்டுகள்


உங்கள் கவிதையை வாசித்தப்போது ஒரு கணம் சிறுபிராயத்திற்க்கு சென்று வந்த திருப்தி..!! நீங்கள் சொல்லும் அனுபவங்களில் பல இந்தகால கிராமத்து பிள்ளைகளுக்கேக்கூட கிடைப்பது அரிது..!!

குறுகிய பொழுதில் பெருகிய காலமாற்றம்... வரமா.. சாபமா..என்று யாருக்கும் தெரியவில்லை.!!

வாழ்த்துக்கள் கீதம்.. தொடருங்கள்..!!

பாராட்டுக்கு நன்றி அருள் மற்றும் சுகந்தப்ரீதன் அவர்களே. இப்போதிருக்கும் பிள்ளைகளுக்கு கணினி விளையாட்டையும் கிரிக்கெட்டையும் விட்டால் வேறென்ன தெரிகிறது? அந்த ஆதங்கத்தில் எழுந்த கவிதைதான் இது.

அறிஞர்
18-11-2009, 10:36 PM
வாவ்... அருமை...
பழைய நினைவுகள் மீண்டும் கிளறியது.. கவிதை
நன்றிகள் பல...
-----------
3 வயது பையன்.. வீடியோ கேம், வீ கேம், கம்யூட்டர் கேம் என கலக்குகிறார்கள்..
இது கணினி யுகம்..
என்ன செய்வது...

சிவா.ஜி
19-11-2009, 01:22 AM
பரந்தவெளிகளில் விளையாடி, பரந்த மனங்களோடு வாழ்ந்த காலங்கள் அவை. உள்விளையாட்டில் உள்ளத்தையும் சுருக்கிக்கொண்டு, வெளி போகாமல், அடுத்தவர் வலி பார்க்காமல் குறுகிவிட்ட வாழ்க்கையை வரமாய் பெற்ற பிள்ளைகள் இப்போது.

அழகான வரிகளில் வசந்த காலத்தை நினைவூட்டிய கீதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

samuthraselvam
19-11-2009, 05:16 AM
சிறு வயதில் விளையாடிய அனைத்து விளையாட்டையும் அழகாக பட்டியலிட்டு சொன்ன கீதத்திற்கு வாழ்த்துக்கள்....

அருமையான கவிதை... அந்த நாட்களில் இருந்த சந்தோசங்களை நினைத்து இந்த நாட்களை கடத்துவதே இப்போது நடக்கும்.... வேறென்ன செய்ய?

கீதம்
19-11-2009, 05:35 AM
வாவ்... அருமை...
பழைய நினைவுகள் மீண்டும் கிளறியது.. கவிதை
நன்றிகள் பல...
-----------
3 வயது பையன்.. வீடியோ கேம், வீ கேம், கம்யூட்டர் கேம் என கலக்குகிறார்கள்..
இது கணினி யுகம்..
என்ன செய்வது...


பரந்தவெளிகளில் விளையாடி, பரந்த மனங்களோடு வாழ்ந்த காலங்கள் அவை. உள்விளையாட்டில் உள்ளத்தையும் சுருக்கிக்கொண்டு, வெளி போகாமல், அடுத்தவர் வலி பார்க்காமல் குறுகிவிட்ட வாழ்க்கையை வரமாய் பெற்ற பிள்ளைகள் இப்போது.

அழகான வரிகளில் வசந்த காலத்தை நினைவூட்டிய கீதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


சிறு வயதில் விளையாடிய அனைத்து விளையாட்டையும் அழகாக பட்டியலிட்டு சொன்ன கீதத்திற்கு வாழ்த்துக்கள்....

அருமையான கவிதை... அந்த நாட்களில் இருந்த சந்தோசங்களை நினைத்து இந்த நாட்களை கடத்துவதே இப்போது நடக்கும்.... வேறென்ன செய்ய?

குழந்தைகள் நம்மைவிட புத்திசாலியாக இளவயதிலேயே கணினி இயக்குவதைக் கண்டு ஒரு புறம் பெருமிதமுற்றாலும், அவர்களது குழந்தைப்பருவம் அக்கணினியால் களவாடப்படுவதாகவே சில சமயங்களில் தோன்றுகிறது.
பழைய நினைவுகளை மேலெழுப்ப ஒரு சந்தர்ப்பம் உருவாக்கியமைக்காக மகிழ்கிறேன். பாராட்டுக்கு நன்றி அறிஞர், சிவா.ஜி மற்றும் சமுத்திரசெல்வம் அவர்களே. அன்புடன் கீதம்.

சூறாவளி
13-12-2010, 10:07 PM
சின்ன வயசுல ஆடின மறந்து போன எல்லா விளையாட்டையும் ஒரே தொகுப்பில் கவிதையாய் ஞாபகப்படுத்தி கொண்டுவந்துட்டிங்க கீதம் அவர்களே..

சபாஷ்.. :icon_b::icon_b:

ஆன்டனி ஜானி
14-12-2010, 03:06 AM
சிறுவயதில் நாம் விளையாடிய விளையாட்டுக்கள்

இப்போது ஞாபகத்தில் இல்லை என்றாலும் அதை பார்த்து கேட்கும் போது

இன்னும் சந்தோசமாகதான் நினைவுகள் வருது .....

பாராட்டுகள் கீதம் அவர்களே !!!

கீதம்
14-12-2010, 04:16 AM
ரசித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றி
சூறாவளி மற்றும் ஆன்டனி ஜானி அவர்களே.

ஜானகி
14-12-2010, 05:16 AM
அருமையான மனக்குமுறல்.
நம் காலம் பொற்காலம் தான். பழமையிலும் திளைத்து, புதுமையையும் ஏற்று...நம் காலம் தனி தான்.
யார் கண்டார்கள், இளம் தலைமுறையினரின் குமுறல், வேறு விதமாக இருக்கலாம்.
அதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் எல்லாக் காலமும் பொற்காலம் தான்.

Hega
14-12-2010, 08:47 AM
சிறுவயது நினைவலைகள் அலையலையாய் வந்து சென்றது ஒவ்வொரு விளையாட்டையும் பெயரிட்டு படிக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

நாஞ்சில் த.க.ஜெய்
14-12-2010, 06:42 PM
இளம்வயது ஆரோகியமான பொன் நிகழ்வு,,, இன்று நினைக்கையில் பறக்கின்ற மனம், மீண்டும் நிகழ்காலம் வர நாளாகும் ...வாழ்த்துகள் கீதம் அவர்களே
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

இணைய நண்பன்
14-12-2010, 08:08 PM
சின்ன வயதில் விளையாடித்திரிந்த சந்தோச நிமிடங்களை மீண்டும் நினைத்துப் பூரித்திட வைத்த அருமையான வரிகள்.வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.

கீதம்
18-12-2010, 11:44 PM
பின்னூட்டமிட்டுப் பாராட்டிய ஜானகி அவர்களுக்கும், Hega வுக்கும் த.க.ஜெய் அவர்களுக்கும் இணையநண்பன் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

நாகரா
19-12-2010, 01:29 AM
முட்டாள் பெட்டியின் முன்னே
முடங்கிக் கிடக்கும் மகளுக்குத்
தாய் தன் சிறு பிராய நினைவுகளைக்
காட்சிப் படுத்தும் உம் கவிதை
தற்காலப் பரிதாப வாழ்வை
அம்பலப் படுத்துகிறது.

கவிதை அருமை, என்னையும் சிறு பிராயத்துக்கு இழுத்துச் சென்றது, வாழ்த்துக்கள் கீதம்.

கௌதமன்
22-12-2010, 05:11 PM
என் சிறு வயது பருவத்தை
மீண்டும் ஞாபகப் படுத்தியது உங்கள் கவிதை

என்னுடைய இளம்பிராயம் என்பது
கோலிக்குண்டும், பம்பரமுமாய்
சுற்றிய காலம், சைக்கிள் டயரை ஓட்டிய காலம்
கிராமத்தில் தொலைக்காட்சி
கால் பதித்தக் காலம்
கால மாற்றத்தின் சாட்சியாயிருந்த காலம்!

ஹிந்தி தர்ஸனாக இருந்த தூர்தர்ஸன்
சித்ர்ஹாரில் ஹிந்திப்பாட்டு
அரிதாய் சித்ரமாலாவில் ஒரு தமிழ்பாட்டு
மூன்று மாததிற்கொருமுறை தமிழ்படம்
அதுவும் விருது வாங்கிய சோகப்படம்
ஞாயிறன்று இராமாயணம் (தினமலரில் தமிழ் வசனம்)
என்றிருந்த சமயத்தில்
மண்டல ஒளிபரப்பாய் நுழைந்தது
சென்னை தொலைக்காட்சி!

ரிமோட் மாற்ற அவசியமின்றி
ஒற்றுமையாய் ஒலியும் ஒளியும்,
8.40-ல் தமிழில் செய்திகள் (சோபனா ரவி, ஈரோடு தமிழன்பன்,..)
வயலும் வாழ்வும்,
ஞாயிறு தோறும் தமிழ்த்திரைப்படம்
காண வீடு நிறையக்கூட்டம்!

நினைத்தாலே இனிக்கும்
இளமைக் காலங்கள் அது (சினிமா பேரு அதுவாவே வருது)
நன்றி கீதம்.

CEN Mark
31-12-2010, 07:47 AM
(நன்றி:பதிவுகள்)

கீதம் அவர்களே! உண்மையிலே இந்த அத்தனையும் அனுபவித்திருக்றீர்களா? அதில் எறி பந்தும், மரக்குறங்கும் விடுபட்ட விளையாட்டுகள். இவை அத்தனையும் எனக்கு அத்துப்படி. பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாசத்தில்...இப்படியே ஆண்களும் பெண்களுமாய் கைகோர்த்து விளையாடிய வசந்த காலத்தை நினைவுபடுத்தி என்னை கடந்த காலத்திற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றிகள்.

கீதம்
02-01-2011, 10:51 PM
முட்டாள் பெட்டியின் முன்னே
முடங்கிக் கிடக்கும் மகளுக்குத்
தாய் தன் சிறு பிராய நினைவுகளைக்
காட்சிப் படுத்தும் உம் கவிதை
தற்காலப் பரிதாப வாழ்வை
அம்பலப் படுத்துகிறது.

கவிதை அருமை, என்னையும் சிறு பிராயத்துக்கு இழுத்துச் சென்றது, வாழ்த்துக்கள் கீதம்.

உங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றியுடையவளாகிறேன், நாகரா ஐயா.

கீதம்
02-01-2011, 10:57 PM
என் சிறு வயது பருவத்தை
மீண்டும் ஞாபகப் படுத்தியது உங்கள் கவிதை

நினைத்தாலே இனிக்கும்
இளமைக் காலங்கள் அது (சினிமா பேரு அதுவாவே வருது)
நன்றி கீதம்.

உங்கள் கவிதையும் பிரமாதம். உங்கள் ஒவ்வொருவரின் இளம்பிராயநினைவுகளை நினைவுபடுத்த என் கவிதை உதவியதற்காக மகிழ்கிறேன். நன்றி கெளதமன்.