PDA

View Full Version : ஆய்வுக்கு நிபந்தனையா?



சொ.ஞானசம்பந்தன்
13-11-2009, 01:57 AM
'ஒளவையார் பாட்டில் பொருட்குற்றம்' என்றொரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு வந்த மறுப்புகளுள்,

"அன்று குற்றம் கண்டுபிடித்து சொல்லியிருந்தால் சரியே அன்றி பிற்காலத்தில் அதனை ஆராய்வது சரியல்ல."
(மேற்கண்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப்பிழைகள் என்னுடையவையல்ல.)

என்றொரு கருத்து எனக்கெதிராய் முன் வைக்கப்பட்டது. அதாவது ஓர் இலக்கியத்தை அது தோன்றிய காலத்தில் மட்டுமே ஆராயலாம், குற்றம் கண்டுபிடிக்கலாம், பின்னோர் அதை ஆராய்வது தவறு என்கிறது அக்கருத்து. அதற்கு ஆப்பு வைத்து இறுக்குவதற்குத் தனிக் கட்டுரை தேவைப்பட்டது.
அது இது:

நூற்றாண்டைக் குறிக்கும் எண் அடைப்புக்குறிக்குள்.

1. மனு சாத்திரம் (2க்கு முன்) சாத்திரமே அல்ல என்று ஒரேயடியாய்த் தாக்கியவர் சுப்பிரமணிய பாரதியார்.(20)

சூத்திரனுக் கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரங் கூறிடுமாயின் - அது
சாத்திர மன்று சதியெனக் கண்டோம்.

1800 ஆண்டுக்குப் பின்பு பாரதி ஆய்ந்துள்ளார்.

2. திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகரின்(10) பல கருத்துகளை ஆராய்ந்து மறுத்துப் புதிய உரை எழுதியவர் புலவர் குழந்தை(20). நூல்: திருக்குறளும் பரிமேலழகரும். (1000 ஆண்டுக்குப் பின்பு)

3. கம்பன்(12) காவியத்தை ஆராய்ந்து அவனைத் தாக்கிக் 'கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்' என்ற நூலை இயற்றினார் பா.வே.மாணிக்க நாயகர்(20)

4. அதே காவியத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டி அண்ணாதுரை (20) எழுதிய நூல்: கம்பரசம்.

5. உரையாசிரியர்களுள் சிலர் இலக்கியங்களுக்கும் வேறு சிலர் இலக்கணங்களுக்கும் உரையெழுதினர். எல்லாவற்றுக்கும் உரை இயற்றிய ஒரே அறிஞர் நச்சினார்க்கினியர்(14). எனவேதான் "உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்" என்று அவரைத் தமிழறிஞர் உலகம் போற்றிப் புகழ்கிறது. அவர் முல்லைப் பாட்டுக்கு எழுதிய உரையில் குற்றங்காட்டி மறுத்து வேறுரை இயற்றினார் மறைமலையடிகள்(20). நூல்: முல்லைப்பாட்டு ஆராய்ச்சி.

6. கிரேக்க ஈசோப்பின் கதைகளைச் செய்யுள் வடிவத்தில் எழுதி 12 நூல்கள் வெளியிட்டார் லஃபோன்த்தேன்(17) என்ற பிரெஞ்சு எழுத்தாளர். அவருடைய செய்யுள்கள் சிலவற்றின் குறைபாடுகளை எடுத்துக் காட்டினார் பிரெஞ்சு அறிஞர் ருசோ(18) தம் எமீல் என்ற நூலில்.

7. அரிஸ்டாட்டில் (கி.மு.4) மாபெரும் கிரேக்க மேதை. மாவீரன் அலெக்சாண்டரின் குரு. அவர் தொடாத துறையில்லை, கருத்துத் தெரிவிக்காத இயல் இல்லை என்று போற்றுமளவுக்கு இயற்பியல், உயிரியல், விலங்கியல், கவிதை, நாடகம், தருக்கம், அரசியல், இசை முதலிய பலவற்றைப் பற்றிய நூல்களை இயற்றியவர். அவருடைய கொள்கைகள் தாம் ஐரோப்பிய அறிஞர்களுக்கு வழிகாட்டிகளாய் நீண்ட நெடுங்காலம் நிலைபெற்றிருந்தன.

அவரை எதிர்க்கத் துணிந்தார் பெரோ(17) என்ற பிரெஞ்சு எழுத்தாளர். உலகமறிந்த கதைகளாகிய சிந்தரெலா, தூங்கும் அழகி (sleeping beauty) முதலியவற்றின் ஆசிரியராகிய இவர் '14 ஆம் லூயியின் சகாப்தம்' என்ற தம் கவிதையில் கிரேக்கக் கவிஞர் ஓமரிடமும், அரிஸ்டாட்டிலிடமும் குறைகள் உண்டு என்று தெரிவித்தார்.

உடனடியாய் ஆகா! என்று வரிந்து கட்டித் தொடை தட்டி எழுந்தனர் சிலர். அவர்கள் பெரோவை நோக்கி, "அரிஸ்டாட்டில் எவ்வளவு பெரிய மேதை! அவரை விட நீர் அறிவாளியா? அவரைக் குறை சொல்ல உமக்கென்ன தகுதி? அவரிடங் குற்றங் கண்டு பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளப் பார்க்கிறீரா? அவரைப் போல் உம்மால் பல துறை ஆய்வு நூல்கள் எழுத இயலுமா?" என்றெல்லாம் கேள்விக்கணைகளைத்.......தொடுக்கவில்லை! காரணம் என்ன?

அவர்கள் அறிஞர்கள், நிறைகுடங்கள், அப்படிக் கேட்கமாட்டார்கள். கருத்துக்கு எதிர்க்கருத்து வைத்து அவர்கள் வாதிட்டார்கள். அவர்கள் புஆலோ, ரசீன், லஃபோன்த்தேன், லபுருய்யேர் என நால்வர். பெரோவை ஆதரித்தவர் ஃபோன்த்தனேல் மட்டுமே.

எழுத்துப்போர் மும்முரமாய் நடைபெற்றது. இறுதியில் பழைமைவாதிகள் தோற்றார்கள். அரிஸ்ட்டாட்டிலின் கொள்கைகள் சிறிது சிறிதாய்க் கைவிடப்பட்டன.

மேற்காட்டிய முன்னுதாரணங்கள் எக்கால இலக்கியத்தையும் படைப்பையும் பிற்காலத்தார் திறனாயலாம், குறை சொல்லலாம், மறுக்கலாம் என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்றன.

ஆகையால் இலக்கியத்தை ஆராய்வதற்குக் காலக்கெடு நிபந்தனை எதுவும் இல்லை, நிபந்தனை விதிப்பவர் அறியாதாரே!

ராஜா
21-07-2012, 02:38 PM
நிறைய விடயங்கள் அறிந்தேன்..

நன்றி நண்பரே..


சூத்திரனுக் கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரங் கூறிடுமாயின் - அது
சாத்திர மன்று சதியெனக் கண்டோம்.

இந்தக் கவிதை உள்ள தொகுப்பு எதுவென அறிய விழைகிறேன்..

தாமரை
21-07-2012, 02:59 PM
எதையும் எக்காலத்திலும் ஆராயலாம்.. கேள்வி எழுப்பலாம். அதில் தவறே இல்லை ஐயா.

ஆனால் ஆராய்ட்சியின் பலன் என்ன என்பது மட்டுமே கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

எதற்காக என்ற கேள்விக்கு சரியான விடை இருக்குமானால் அந்த ஆராய்ட்சி வரவேற்கப்பட வேண்டும்.!!!

கலைவேந்தன்
21-07-2012, 06:02 PM
ஞான சம்பந்தன் அவர்களின் கருத்தும் தாமரையின் கருத்தும் ஏற்புடையதே.

ஔவையாரின் சில மூதுரைகள் தவறானவை. உதாரணம் : தையல் சொல் கேளேல்.

M.Jagadeesan
22-07-2012, 03:37 PM
ஓர் இலக்கியத்தை எக்காலத்தும் ஆராயலாம்; தவறில்லை. ஆனால் ஆராயப் புகுவோன், அவ்விலக்கியம் தோன்றிய காலத்தை மனதிற்கொண்டே ஆராயவேண்டும். இலக்கியம் படைப்போன், அவன் வாழ்ந்த காலத்தில் மக்களிடம் இருந்த பண்பாடு, பழக்க வழக்கங்கள், முன்னோர் எழுதிய நூல்கள் போன்றவற்றை மனதிற்கொண்டே தன் நூலைச் செய்கின்றான்.

காலப்போக்கில் , அறிவியலின் தாக்கத்தால், அந்நூலில் கூறப்பட்ட சில கருத்துக்கள் , மெல்லமெல்ல தன் உண்மைப் பொருளை இழக்கின்றன. இது நூலாசிரியனின் குற்றமன்று. நூலாசிரியன் தவறு செய்துவிட்டான் என்று அவன்மீது கண்டனக் கணைகள் தொடுக்கலாகாது.உண்மையில் தவறு செய்தவன் ஆராய்ச்சியாளன் தான்.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர்

" மக்கட்பேறு " என்ற அதிகாரத் தலைப்பைப் " புதல்வரைப் பெறுதல் " என்று மாற்றியமைத்தார்.

" ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

என்ற குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை , புலவருலகில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. " கேட்ட தாய் " என்ற சொல்லுக்கு அவர் கொடுத்த விளக்கம் விநோதமானது.

" பெண்ணியல்பால் தானாக அறியாமையின், " கேட்டதாய் ' எனக் கூறினார் ". என்று உரை எழுதுகிறார்.

தான் பெற்றமகன் , அறிவுடையவன் , சான்றோன் என்பதை அறியும் அறிவு கூட பெண்ணுக்கு இல்லை;பிறர் சொல்லித்தான் அவள் அறிந்து கொள்கிறாள் என்பதே இவ்வுரையின் பொருளாகும்.

இவ்வுரையைப் படித்த புலவருலகம், பரிமேலழகர் ,பெண்ணினத்தையே இழிவுபடுத்தி விட்டார் எனக்கூறி , அவர்மீது பாய்ந்து குதறத் தொடங்கியது.உண்மையில் பரிமேலழகர் தவறு செய்யவில்லை. அவர் வாழ்ந்த காலம் அப்படி. பெண்கள் கட்டுப் பெட்டியாய், தற்குறியாய் வாழ்ந்த காலம் அது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு ? என்று மக்கள் நினைத்த காலம் அது.
எனவேதான் பரிமேலழரும் தம் உரையில் ஆண்களுக்கு ஏற்றம் கொடுத்தார். இருபாலருக்கும் பொருந்துகின்ற," மக்கட்பேறு " என்ற தலைப்பை , ஆண் மக்கட்கு மட்டும் பொருந்தும் வகையில், " புதல்வரைப் பெறுதல் "என்று மாற்றி அமைத்தார்.

' தையல் சொல் கேளேல் ' என்று பாடியது ஒளவையின் குற்றமன்று. அவர் வாழ்ந்த காலத்தின் குற்றம்.

திருக்குறளில் ," அரண் " என்ற அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் , இக்காலச் சூழலுக்குப் பொருந்தி வராது. உதாரணமாக

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.

என்ற குறளில், கடலும், பாலை நிலமும், உயர்ந்த மலையும், அடர்ந்த காடும் ஒரு நாட்டிற்குப் பாதுகாப்பான அரண் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இயற்றப்பட்ட குறள் இது. ஆகாயவிமானத்திலிருந்து குண்டு மழை பொழிந்தால் , இந்த அரண்களால் என்னசெய்ய இயலும்? இரண்டாம் உலகப்போரில் , அமேரிக்கா பொழிந்த குண்டு மழையில் , ஜப்பானின் இரண்டு நகரங்கள் தவிடுபொடி ஆனதை நாம் அறிவோம்.

எனவே இக்குறளின் கருத்தே தவறானது என்ற முடிவுக்கு நாம் வரமுடியுமா?வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து, இக்காலத்தில் மறுக்கப்பட்டால், அது வள்ளுவரின் குற்றமாகுமா?

அறிவியல் கருத்துக்கள் மறுக்கப்படலாம்; தவறு என்று நிரூபிக்கப்படலாம். ஆனால் இலக்கியத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் மறுக்கப்படலாமே தவிர, தவறு என்று நாம் முடிவுகட்ட இயலாது.

கலைவேந்தன்
22-07-2012, 04:02 PM
உண்மைதான் ஐயா. ஏற்கிறேன். ஆயினும் ஔவையார் கற்றறிந்த புலவர். அவரது காலத்தில் பெண்கள் கல்வியில் ஏற்றம் அடைந்திருந்தனர் என்பதற்கு அவர் ஒருவரே கூட சான்றுதானே..? அவ்வாறிருக்க அவரே தையல் சொல் கேளேல் எனக்கூறியது எவ்வகையில் அக்காலத்திலும் இக்காலத்திலும் சரியாகப் படும்..?

வரலாறு குறிப்பிடுகின்ற பல சம்பவங்கள் அரசர்களுக்கு மந்திரிகளை விட தமது அந்தப்புற ராணியர் வழங்கிய ஆலோசனைகள் மேம்பட்டதாகவும் வெற்றியை ஈட்டக்கூடியதாகவும் இருந்திருக்கின்றன. அப்படி இருக்க ஔவையார் எழுதியதாகக் கூறப்படும் தையல் சொல் மூதுரை இடைச்செருகலோ என ஐயமுற வைக்கின்றன.

பெரும்பாலும் இடைச்செருகல்களே இவ்விதம் விவாதத்துக்குரியனவாய் அமைந்திருக்கின்றன என்பதும் ஒருவகையில் யோசிக்க வேண்டியதாய் உள்ளது.

திருவள்ளுவர் பல குறள்களில் இவ்விதம் வேறுபட்டிருக்கிறார் என்பதும் கூட இடைச்செருகலாயிருந்திருக்க வாய்ப்புண்டு என்பேன்.

vasikaran.g
29-07-2012, 07:55 AM
நிறைய விஷயங்கள் ..தெரிந்தவை சில ,தெரியாதவை பல ..நன்றிகள் கலைவேந்தன்