PDA

View Full Version : விளக்கி எழுதிய விடுகதைப்பாடல்!



குணமதி
09-11-2009, 05:02 AM
ஒரு விடுகதையைப் பாடலாகத்தரும் முறையை - நான் எப்படி எழுதுகிறேன் என்பதை - இப்போது பார்க்கலாம்.

அறுசீர் மண்டிலம் என்பதையெல்லாம் மறந்து விடலாம். அதெல்லாம் இப்போது தேவையில்லை.

ஒரு விடுகதை :

வானில் பறக்கும்; வால்நீண்டிருக்கும்
வண்ணமுண்டு எடையில்லை! - அது என்ன?

பொரும்பாலார்க்கு விடை தெரிந்திருக்கும்.
ஆம்! காற்றாடி (பட்டம்) தான் இதற்கு விடை.

இதைப் பாட்டாக எழுத, -
ஒவ்வொரு அடியிலும் மும்மூன்று சொற்கள் ஓரளவு ஒலிநயத்தோடு வருமாறு (எதுகை மோனை என்பார்கள்) எட்டு அடிகளில் பாட்டு எழுதுகிறேன்.
இவற்றில்,-
முதல் ஆறு அடிகள் விடுகதையைப் பற்றியதாக இருக்கும்.
கடைசி இரண்டடிகள் ஒரு பெண்ணை விடை சொல்லும்படிக் கேட்பது போலிருக்கும்.

இப்போது, விடுகதைப் பாடலை, இப்படி எழுதத் தொடங்குகிறேன் :

வானில் பறக்கும்; வால் நீண்டிருக்கும்
வண்ணமுண்டு; எடையில்லை - இதைக் கீழுள்ளவாறு எழுதுகிறேன்.

வானத்தில் பறக்குமிது பறவையில்லை!

வண்ணத்தில் மினுக்குமிது புடைவையில்லை!

வானில்வால் நீண்டிருக்கும் வால்உடில்லை!

வலியவொலி 'உர்' என்னும் நாயுமில்லை!

ஆனஇதன் எடைகுறைவே சருகுமில்லை!

அனைவருமே பார்த்திடலாம் பிறையுமில்லை!

இவ்வாறு கொஞ்சம் நீட்டி - சேர்த்து எழுதிக் கொள்கிறேன்.
(வால் உடு என்பது வால் நட்சத்திரம்)
விடுகதையில் இல்லாத செய்தியை மேலே கண்ட 4ஆம் வரியையும் 6ஆம் வரியையும் -

வலியவொலி 'உர்' என்னும் நாயுமில்லை!

"அனைவருமே பார்த்திடலாம் பிறையுமில்லை"

- என்று வசதிக்காக நானே சேர்த்து எழுதிக்கொள்கிறேன்.

இனி, பெண்ணை விடை சொல்லும்படி கேட்க இரண்டு வரிகளை ஒலிநயத்தோடு விருப்பம்போல் எழுதிக் கொள்ளலாம். நான் எழுதுவன:

மானவரின் பெண்மானே மணிவிளக்கே

மகிழ்வோடே விடைசொல்லி மலைக்கவைப்பாய்!


(மானவர் = வீரர், மானம் போற்றுகிறவர்)


இப்போது முழுப்பாடலையும் பார்ப்போம் :


1. மகிழ்வோடே விடைசொல்லி மலைக்கவைப்பாய்!


வானத்தில் பறக்குமிது பறவையில்லை!

வண்ணத்தில் மினுக்குமிது புடைவையில்லை!

வானில்வால் நீண்டிருக்கும் வால்உடில்லை!

வலியவொலி 'உர்' என்னும் நாயுமில்லை!

ஆனஇதன் எடைகுறைவே சருகுமில்லை!

அனைவருமே பார்த்திடலாம் பிறையுமில்லை!

மானவரின் பெண்மானே மணிவிளக்கே

மகிழ்வோடே விடைசொல்லி மலைக்கவைப்பாய்!



நான் ஆசிரியனும் இல்லை. தேர்ந்த எழுத்தாளனும் இல்லை.
ஏதோ, விளக்கிச் சொல்லியதாக நினைக்கிறேன். யாப்பு அறிமுகம் இல்லாதார்க்குப் புரிய வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் என்னால் இயன்ற விளக்கம் தந்திருக்கிறேன்.

பாட்டாக எழுதும் போது, மிக எளிதாகப் புரியாமல் கொஞ்சம் எண்ணிப்பார்த்தால் புரியும்படி இருத்தல் நல்லது. மிகவும் புரியாதபடி இருந்தால் வெறுப்பாகிவிடும். எச்சரிக்கை வேண்டும்.

ஐயமிருந்தால் கேளுங்கள். இயன்றவரை விடைசொல்வேன்.
மேலும் -
யாராவது, மூன்று நான்கு செய்திகள் உள்ள ஒரு விடுகதையை விடையுடன் எழுதித் தெரிவித்தால், அதைப் பாட்டு வடிவிலான விடுகதையாக இயன்றவரை எழுதித் தருகிறேன்.
அப்போது இன்னும் விளங்கக்கூடும்.
நன்றி.

aren
09-11-2009, 05:15 AM
நன்றி குணமதி. இப்பொழுது கொஞ்சம் புரிவதுபோல் தெரிகிறது.

இன்னும் கொஞ்சம் தெரிந்துகொண்டு நானும் முயற்சிசெய்துபார்க்கிறேன்.

குணமதி
09-11-2009, 05:28 AM
நன்றி குணமதி. இப்பொழுது கொஞ்சம் புரிவதுபோல் தெரிகிறது.

இன்னும் கொஞ்சம் தெரிந்துகொண்டு நானும் முயற்சிசெய்துபார்க்கிறேன்.

நன்றி நண்பரே.

முயற்சி செய்யுங்கள்

எழுதிக்காட்டுங்கள். மிகவும் மகிழ்வேன்.

ஆதி
09-11-2009, 09:07 AM
நன்றி குணமதி..

அறுசீர் மண்டிலம் இலக்கணத்தை இங்கு விளக்குகிறேன்..

விருத்தப்பாக்கள் என்றாலே நமக்கு ஞாபகத்துக்கு வருவது கம்பராமாயணம்..

விருத்தப்பாக்களில் மயக்கம் உண்டாவதற்கு கம்பராமாயணமே பெரிதும் காரணமானவன்..

வெண்பாவில் மாமன்னன் புகழேந்தி

உலாவில் மாமன்னன் ஒட்டக்கூத்தன்

விருந்தங்களில் மாமன்னன் கம்பன்..

கம்பனுக்கு பிறகுதான் விருந்தங்கள் தமிழிலக்கியத்தை ஆளத்துவங்கியது என்று சொன்னால் மிகையில்லை..

ஆசிரியர் விருந்தங்கள் பலவை இருந்தாளும்..

அறுசீர், எழுசீர், எண்சீர் விருந்தங்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளவை..

அது மட்டுமின்றி எழுத எளிமையானவை..

அறுசீர் விருந்தங்களை நான்கு வகையாக புனையலாம்..

* பெயருக்கேற்ப ஆறு சீர்கள் கொண்ட நான்கடி பாடலாக புனைப்படும்..

* எழுதுவது மிக சுலபம்

* பழக பழக ஓசை நயத்தை பாடல்களில் புகுத்த இயலும்

* நான்கு வகை இலக்கணங்கள் கொண்டு புனையலாம், இதில் இருவகை ஒன்று போலவே இருக்கும்..

* நம் வசத்திக்கு ஏற்ப ஒவ்வொரு அடியையும் நீட்டியோ, மடித்தோ எழுதலாம்..

* முதல் சீரில் ஒற்றொலி வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம், பாட்டில் ஓசை நயத்தை புகுத்த முடியும்..

முதல் வகை இலக்கணம் :

1) நான்கடி கொண்ட ஆறு சீர் பாடலாக புனைப்பட வேண்டும்.

2) முதல் சீரும், நான்காம் சீரும் மூவசை சீர்களாக இருந்தல் வேண்டும்..

3) முதல் சீரின் மோனையாக நான்காம் சீர் இருத்தல் வேண்டும்

4) இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு ஆகிய சீர்கள் ஈரசை சீர்களாக இருக்கும்

5) இரண்டாம் சீரும் ஐந்தாம் சீரும் மா(நேர்) என முடிய வேண்டும்..

6) முதல் சீரும் நான்காம் சீரும் காய்(நேர்) என முடிய வேண்டும்

7) மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் தேமா(நேர்நேர்) கொண்டும் முடிதல் முக்கியம்..

---------------------------------------------------------

பகுபத இலக்கணம் :

ஈரசை இலக்கணம் :-

நேர் நேர் - தே மா

நிரை நேர் - புளி மா

நேர் நிரை - கூ விளம்

நிரை நிரை - கரு விளம்

மூவசை இலக்கணம் :-

நேர் நேர் நேர் - தே மாங் காய்

நிரை நேர் நேர் - புளி மாங் காய்

நேர் நிரை நேர் - கூ விளங் காய்

நிரை நிரை நேர் - கரு விளங் காய்

---------------------------------------------------------

அறு சீர் முதல் வகை இலக்கணம் :

xxநேர் xநேர் நேர்நேர்
..xxநேர் xநேர் நேர்நேர்
xxநேர் xநேர் நேர்நேர்
..xxநேர் xநேர் நேர்நேர்


கலகலப்பாய் இருக்கும் மன்றம்
..கன்னிதமிழ் வாழும் மன்றம்
அலையலையாய் படைப்பு வந்து
..அடுக்கடுக்காய் குவியும் மன்றம்
களையகற்றும் பின்னூட் டீந்து
...பிழையனைத்தும் சுட்டி காட்டி
சிலையழகாய் படைப்பை யாக்கும்
..சீராளர் உலவும் மன்றம்..

கல|கலப்|பாய் - நிரை நிரை நேர் - காய் சீரோடு முடியும்..

இருக்|கும் - நிரை நேர் - மா வென முடியும்

மன்|றம் - நேர் நேர் - தேமா கொண்டும் வரும்

கொஞ்சமாவது புரியும் படி எழுதி இருப்பேன் என்று நினைக்கிறேன்.. புரியாதவர்கள் கொல்லுங்கள் விளக்குகிறேன்..

ஜனகன்
09-11-2009, 09:57 AM
மிகவும் நன்றி குணமதி. உங்கள் விளக்கம் நன்றாக புரிகிறது. எனக்கும் உங்களைப்போல் விடுகதைகள் கவிதையாக எழுதவேண்டுமென ஆசை. ஆனால் நேரத்துடன் ஐரோப்பா நாட்டுக்கு வந்துவிட்ட படியால், தமிழ் வார்த்தைகள் சட்டென்று வராது. கவலைதான். தமிழ் மன்றத்தில் சேர்ந்தபின், அதை மேலும் வளைத்துக்கொள்ள நல்ல சந்தர்பம். வாழ்க மன்றம்.
மற்றும் ஆதி சொல்வது கொஞ்சம் விளங்கின மாதிரியும் இருக்கின்றது. இருந்தாலும் முழுவதும் விழங்கவில்லை. முயற்சி செய்து பார்க்கின்றேன்.
அன்புடன் ஜனகன்

வானதிதேவி
09-11-2009, 10:29 AM
நாம் சிறு வயதில் அலகிட்டு வாய்பாடு கூறுதல் என்று கற்றோமல்லவா அதுதான் ஆதி கூறுவது.

குணமதி
09-11-2009, 12:20 PM
நன்றி குணமதி..

அறுசீர் மண்டிலம் இலக்கணத்தை இங்கு விளக்குகிறேன்..

விருத்தப்பாக்கள் என்றாலே நமக்கு ஞாபகத்துக்கு வருவது கம்பராமாயணம்..

விருத்தப்பாக்களில் மயக்கம் உண்டாவதற்கு கம்பராமாயணமே பெரிதும் காரணமானவன்..

வெண்பாவில் மாமன்னன் புகழேந்தி

உலாவில் மாமன்னன் ஒட்டக்கூத்தன்

விருந்தங்களில் மாமன்னன் கம்பன்..

கம்பனுக்கு பிறகுதான் விருந்தங்கள் தமிழிலக்கியத்தை ஆளத்துவங்கியது என்று சொன்னால் மிகையில்லை..

ஆசிரியர் விருந்தங்கள் பலவை இருந்தாளும்..

அறுசீர், எழுசீர், எண்சீர் விருந்தங்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளவை..

அது மட்டுமின்றி எழுத எளிமையானவை..

அறுசீர் விருந்தங்களை நான்கு வகையாக புனையலாம்..

* பெயருக்கேற்ப ஆறு சீர்கள் கொண்ட நான்கடி பாடலாக புனைப்படும்..

* எழுதுவது மிக சுலபம்

* பழக பழக ஓசை நயத்தை பாடல்களில் புகுத்த இயலும்

* நான்கு வகை இலக்கணங்கள் கொண்டு புனையலாம், இதில் இருவகை ஒன்று போலவே இருக்கும்..

* நம் வசத்திக்கு ஏற்ப ஒவ்வொரு அடியையும் நீட்டியோ, மடித்தோ எழுதலாம்..

* முதல் சீரில் ஒற்றொலி வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம், பாட்டில் ஓசை நயத்தை புகுத்த முடியும்..

முதல் வகை இலக்கணம் :

1) நான்கடி கொண்ட ஆறு சீர் பாடலாக புனைப்பட வேண்டும்.

2) முதல் சீரும், நான்காம் சீரும் மூவசை சீர்களாக இருந்தல் வேண்டும்..

3) முதல் சீரின் மோனையாக நான்காம் சீர் இருத்தல் வேண்டும்

4) இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு ஆகிய சீர்கள் ஈரசை சீர்களாக இருக்கும்

5) இரண்டாம் சீரும் ஐந்தாம் சீரும் மா(நேர்) என முடிய வேண்டும்..

6) முதல் சீரும் நான்காம் சீரும் காய்(நேர்) என முடிய வேண்டும்

7) மூன்றாம் சீரும் ஆறாம் சீரும் தேமா(நேர்நேர்) கொண்டும் முடிதல் முக்கியம்..

---------------------------------------------------------

பகுபத இலக்கணம் :

ஈரசை இலக்கணம் :-

நேர் நேர் - தே மா

நிரை நேர் - புளி மா

நேர் நிரை - கூ விளம்

நிரை நிரை - கரு விளம்

மூவசை இலக்கணம் :-

நேர் நேர் நேர் - தே மாங் காய்

நிரை நேர் நேர் - புளி மாங் காய்

நேர் நிரை நேர் - கூ விளங் காய்

நிரை நிரை நேர் - கரு விளங் காய்

---------------------------------------------------------

அறு சீர் முதல் வகை இலக்கணம் :

xxநேர் xநேர் நேர்நேர்
..xxநேர் xநேர் நேர்நேர்
xxநேர் xநேர் நேர்நேர்
..xxநேர் xநேர் நேர்நேர்


கலகலப்பாய் இருக்கும் மன்றம்
..கன்னிதமிழ் வாழும் மன்றம்
அலையலையாய் படைப்பு வந்து
..அடுக்கடுக்காய் குவியும் மன்றம்
களையகற்றும் பின்னூட் டீந்து
...பிழையனைத்தும் சுட்டி காட்டி
சிலையழகாய் படைப்பை யாக்கும்
..சீராளர் உலவும் மன்றம்..

கல|கலப்|பாய் - நிரை நிரை நேர் - காய் சீரோடு முடியும்..

இருக்|கும் - நிரை நேர் - மா வென முடியும்

மன்|றம் - நேர் நேர் - தேமா கொண்டும் வரும்

கொஞ்சமாவது புரியும் படி எழுதி இருப்பேன் என்று நினைக்கிறேன்.. புரியாதவர்கள் கொல்லுங்கள் விளக்குகிறேன்..

நன்றி ஆதி.

உங்கள் விளக்கமும் தமிழ்மன்றப் பாடலும் அருமை!

குணமதி
09-11-2009, 12:22 PM
மிகவும் நன்றி குணமதி. உங்கள் விளக்கம் நன்றாக புரிகிறது. எனக்கும் உங்களைப்போல் விடுகதைகள் கவிதையாக எழுதவேண்டுமென ஆசை. ஆனால் நேரத்துடன் ஐரோப்பா நாட்டுக்கு வந்துவிட்ட படியால், தமிழ் வார்த்தைகள் சட்டென்று வராது. கவலைதான். தமிழ் மன்றத்தில் சேர்ந்தபின், அதை மேலும் வளைத்துக்கொள்ள நல்ல சந்தர்பம். வாழ்க மன்றம்.
மற்றும் ஆதி சொல்வது கொஞ்சம் விளங்கின மாதிரியும் இருக்கின்றது. இருந்தாலும் முழுவதும் விழங்கவில்லை. முயற்சி செய்து பார்க்கின்றேன்.
அன்புடன் ஜனகன்

நன்றி நண்பரே.

நீங்கள் கூறுவது சரி.

கொஞ்சம் முயன்றால் முடியும்.

குணமதி
09-11-2009, 12:24 PM
நாம் சிறு வயதில் அலகிட்டு வாய்பாடு கூறுதல் என்று கற்றோமல்லவா அதுதான் ஆதி கூறுவது.

ஆம். அதுவேதான்.

மீள்பார்வை செய்தால் இப்போதும் நீங்கள் எழுதுவீர்கள்.

நன்றி.

குணமதி
09-11-2009, 12:27 PM
யாராவது, மூன்று நான்கு செய்திகள் உள்ள ஒரு விடுகதையை விடையுடன் எழுதித் தெரிவித்தால், அதைப் பாட்டு வடிவிலான விடுகதையாக இயன்றவரை எழுதித் தருகிறேன்.
அப்போது இன்னும் விளங்கக்கூடும்.

-என்று எழுதியிருக்கிறேன்.

யாராவது விடுகதையையும் விடையையும் எழுதினால் இன்னொரு எடுத்துக்
காட்டுத் தர இயலும்.

நன்றி.

ஜனகன்
09-11-2009, 04:32 PM
யாராவது, மூன்று நான்கு செய்திகள் உள்ள ஒரு விடுகதையை விடையுடன் எழுதித் தெரிவித்தால், அதைப் பாட்டு வடிவிலான விடுகதையாக இயன்றவரை எழுதித் தருகிறேன்.
அப்போது இன்னும் விளங்கக்கூடும்.

-என்று எழுதியிருக்கிறேன்.

யாராவது விடுகதையையும் விடையையும் எழுதினால் இன்னொரு எடுத்துக்
காட்டுத் தர இயலும்.

நன்றி.

நன்றி குணமதி! இங்கு நான் ஒரு விடுகதை சொல்கின்றேன், அதன் பதிலும் தருகின்றேன். முடிந்தால் அதை கவிதை வடிவில் படையுங்கள்.


பூப்பார்,காய்ப்பார்,கலகலப்பார் காகமிருக்க கொப்பில்லை அது என்ன? (நெற்கதிர்)

குணமதி
09-11-2009, 04:59 PM
நன்றி நண்பரே!

காகமிருக்க கொப்பில்லை - என்றால் என்ன என்று எனக்கு விளங்கவில்லை.
அன்பு கூர்ந்து விளக்குங்கள்.
அதன்பின், விடுகதையைப் பாட்டு வடிவில் தர முயல்கிறேன்.
மீண்டும் நன்றி.

வியாசன்
09-11-2009, 07:59 PM
நன்றி நண்பரே!

காகமிருக்க கொப்பில்லை - என்றால் என்ன என்று எனக்கு விளங்கவில்லை.
அன்பு கூர்ந்து விளக்குங்கள்.
அதன்பின், விடுகதையைப் பாட்டு வடிவில் தர முயல்கிறேன்.
மீண்டும் நன்றி.

காகம் உட்கார கிளைகள் இல்லை என்கின்றார்

ஜனகன்
09-11-2009, 10:03 PM
அதேதான் !.....அதேதான்!.....
வியாசன் சொன்னது சரியே; அதாவது நெல்லு கதிர் தெரியும்தானே குணமதி!!!!? அதில் மற்ற மர கிளைகள் போல் காகம் வந்திருக்கமுடியாது. கதிர் சாய்ந்து (முறிந்து) விடும். அதனால்தான் காகமிருக்க கொப்பில்லை என்றேன். விளக்கம் போதுமென நினைக்கின்றேன். நன்றி
அன்புடன் ஜனகன்.

குணமதி
10-11-2009, 02:00 AM
இருவர்க்கும் நன்றி.

இயன்றவரை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம் - இந்த விடுகதையைப் பாட்டு வடிவில் தர.

நானும் முயல்கிறேன்.

குணமதி
10-11-2009, 03:08 AM
2. ஒளியழகே விடைஉரைப்பாய்!

பச்சையிலே வெண்துளியாய்ப் பூப்பதுண்டு!

பார்விரும்பும் மல்லிகைப்பூ முல்லையில்லை!

குச்சிகதிர் மணிமணியாய்க் காய்த்திருக்கும்

கொல்லையிலே விளைகின்ற சோளமில்லை!

நச்சிஒரு காகமமர் இடமுமில்லை!

நல்மணிகள் நமக்குணவாம் பயறுமில்லை!

பிச்சியணி பேரழகே பெரியவானில்

பிறங்கும்மீன் ஒளியழகே விடைஉரைப்பாய்!

ஜனகன்
10-11-2009, 10:18 AM
அன்புள்ள குணமதி! மிக அருமையாக கவிதை வடிவில் வடித்துள்ளிர்கள். அர்த்தமுள்ள சொற்களை வைத்து, அதற்கு பொருத்தமான வார்த்தைகளாக எழுதியுள்ளிர்கள். படித்தவுடன் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. உங்களைப்போல் எனக்கு வராது. உங்கள் இந்த கலை மேன் மேலும் வழர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் ஜனகன்.

குணமதி
10-11-2009, 05:59 PM
அன்புள்ள குணமதி! மிக அருமையாக கவிதை வடிவில் வடித்துள்ளிர்கள். அர்த்தமுள்ள சொற்களை வைத்து, அதற்கு பொருத்தமான வார்த்தைகளாக எழுதியுள்ளிர்கள். படித்தவுடன் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. உங்களைப்போல் எனக்கு வராது. உங்கள் இந்த கலை மேன் மேலும் வழர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் ஜனகன்.

நன்றி நண்பரே!

அமரன்
10-11-2009, 10:31 PM
நானும் கடைசி மேசையில் வந்து அமர்ந்து விட்டேன். தொடங்கிய குணமதிக்கும் தொடர்ந்த ஆதிக்கும் தூண்டிய ஜனகனுக்கும் நன்றி.

இதனைப் பட்டறைப் பகுதிக்கு மாற்றியுள்ளேன். இங்கேயே தொடர்ந்து கொடுக்க அனைவரையும் வேண்டுகிறேன். நானும் கற்றுக் கொண்டு வருகிறேன் உங்களுடன் கலக்க.

குணமதி
11-11-2009, 01:15 AM
நானும் கடைசி மேசையில் வந்து அமர்ந்து விட்டேன். தொடங்கிய குணமதிக்கும் தொடர்ந்த ஆதிக்கும் தூண்டிய ஜனகனுக்கும் நன்றி.

இதனைப் பட்டறைப் பகுதிக்கு மாற்றியுள்ளேன். இங்கேயே தொடர்ந்து கொடுக்க அனைவரையும் வேண்டுகிறேன். நானும் கற்றுக் கொண்டு வருகிறேன் உங்களுடன் கலக்க.

மிக்க நன்றி.

samuthraselvam
11-11-2009, 05:14 AM
அருமை குணமதி.... அற்புத ஆற்றல் உங்களுக்கு... வாழ்த்துக்கள்... மேலும் இது போல பல விடுகதை பாடல் படைக்க் வாழ்த்துக்கள்..

என் பங்கிற்கு நானும் ஒரு விடுகதை சொல்கிறேன்...

சின்னப் பொண்ணு சின்னப் பையன்
சிரிச்சு கட்டின மாலை
அதை பிரிச்சு கட்டினா
உங்களுக்கு ராம பட்டினம் தாரேன்..

இதற்கு விடை தூக்கணாங்குருவிக் கூடு

குணமதி
11-11-2009, 12:03 PM
அருமை குணமதி.... அற்புத ஆற்றல் உங்களுக்கு... வாழ்த்துக்கள்... மேலும் இது போல பல விடுகதை பாடல் படைக்க் வாழ்த்துக்கள்..

என் பங்கிற்கு நானும் ஒரு விடுகதை சொல்கிறேன்...

சின்னப் பொண்ணு சின்னப் பையன்
சிரிச்சு கட்டின மாலை
அதை பிரிச்சு கட்டினா
உங்களுக்கு ராம பட்டினம் தாரேன்..

இதற்கு விடை தூக்கணாங்குருவிக் கூடு

நன்றி நண்பரே.

பாட்டாக எழுத மூன்று நான்கு செய்திகள் உள்ள விடுகதையாக தேர்வு செய்தால் எளிதாக இருக்கும். மற்ற விடுகதைகளைப் பாடலாக எழுத எனக்கு இன்னும் தேர்ச்சி போதாது.

ஒன்றைப் பற்றியே மூன்று நான்கு செய்திகள் கொண்ட விடுகதையாக இருந்தால் எழுதிவிடுவேன்.

நன்றி.

ஜனகன்
11-11-2009, 04:18 PM
குணமதி! உங்களால் முடியும். முயற்சிக்கவும். நான் அடுத்த விடுகதையுடன் மீண்டும் வருவேன்.

குணமதி
12-11-2009, 01:22 PM
குணமதி! உங்களால் முடியும். முயற்சிக்கவும். நான் அடுத்த விடுகதையுடன் மீண்டும் வருவேன்.

நன்றி.

முயல்கிறேன்.

குணமதி
12-11-2009, 02:06 PM
(இயன்றவரை முயன்றுள்ளேன்; எப்படிப் பொருந்துகிறதெனக் கூறுங்கள்)


3. இன்னழகே என்னென்று இயம்புவாயே!


சிறுவனுமோர் சிறுமியுஞ்சேர்த் தமைத்த மாலை!

சிறுமாலை தொங்குமதில் மணமுமில்லை!

சுறுசுறுப்பாய்ப் பறந்துழைத்தே அமைத்தமாலை!

சொலற்கரிய பின்னலிலே செய்தமாலை!

அறுதலிலா நார்கொண்டே அமைத்தமாலை!

அதைக்குலைத்தே மறுபடியும் அமைப்பவர்க்கே

இறுதலிலா இராட்டினமே அன்பளிப்பேன்!

இன்னழகே என்னென்று இயம்புவாயே!

ஜனகன்
12-11-2009, 03:06 PM
சிறுவனுமோர் சிறுமியுஞ்சேர்த் தமைத்த மாலை!
சிறுமாலை தொங்குமதில் மணமுமில்லை!
சுறுசுறுப்பாய்ப் பறந்துழைத்தே அமைத்தமாலை!
சொலற்கரிய பின்னலிலே செய்தமாலை!

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து கொண்டன.
நன்றாக வரிகள் தொடுத்துள்ளிர்கள். வாழ்த்துக்கள்

குணமதி
12-11-2009, 04:15 PM
சிறுவனுமோர் சிறுமியுஞ்சேர்த் தமைத்த மாலை!
சிறுமாலை தொங்குமதில் மணமுமில்லை!
சுறுசுறுப்பாய்ப் பறந்துழைத்தே அமைத்தமாலை!
சொலற்கரிய பின்னலிலே செய்தமாலை!

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து கொண்டன.
நன்றாக வரிகள் தொடுத்துள்ளிர்கள். வாழ்த்துக்கள்

நன்றி.

samuthraselvam
18-11-2009, 10:01 AM
சூப்பர் குணமதி..... இத்திறமையை செய்யுள் இயற்றுவதிலும் காட்டவும்.... தனித்திறமை கொண்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்....

குணமதி
18-11-2009, 02:57 PM
சூப்பர் குணமதி..... இத்திறமையை செய்யுள் இயற்றுவதிலும் காட்டவும்.... தனித்திறமை கொண்ட உங்களுக்கு என் வாழ்த்துக்கள்....

நன்றி நண்பரே.

aren
18-11-2009, 03:10 PM
பல புலமைகளை தமிழ்மன்றம் மூலம் அறிகின்றேன்.

இன்னும் கொடுங்கள் குணமதி.

குணமதி
18-11-2009, 03:13 PM
பல புலமைகளை தமிழ்மன்றம் மூலம் அறிகின்றேன்.

இன்னும் கொடுங்கள் குணமதி.

நன்றி ஆரென்.

குணமதி
24-11-2009, 01:54 PM
4. இதற்கு விடை வழங்காய்!


தாயிவளோ குழந்தையின்றித் தனித்திராளே !

தட்டாமல் பலரளிக்கும் மொத்துமேற்பாள் !

ஓயாமல் மேல்கீழாய் நின்று தேய்வாள் !

உள்ளதெலாம் உருட்டியபின் கழுவலார்வாள் !

வாயழகில் பேசுவார்கை வலிவுபார்ப்பாள் !

வனப்பான பெண்ணில்லை ! ஆணுமில்லை !

வாயார இதற்குவிடை வழங்குவாயேல்

வணங்கியுனைப் போற்றிடுவேன் வாழ்த்துவேனே !

praveen
24-11-2009, 02:07 PM
லிப்ட் என்று நினைக்கிறேன். சரியா?

பிரம்மத்ராஜா
24-11-2009, 04:44 PM
ராட்டினம் சரியா?

ஜனகன்
24-11-2009, 05:21 PM
அம்மியும் குழவியும் என்று நினைக்கிறேன்.

குணமதி
25-11-2009, 03:15 AM
மூவர்க்கும் நன்றி.

சரியான விடை : அம்மியும் குழவியும் என்பதே.

praveen
25-11-2009, 05:20 AM
பதில் சொல்லியாகி விட்டபடியால் இந்த திரி முடிவடைந்து போகாமல் இருக்க இன்னொரு விடுக(வி)தையை இதிலே கேட்டு தொடருங்கள் குணவதி.

ஜனகன்
28-11-2009, 03:09 PM
எங்கே குணமதி!!!!!!??????????? வாருங்கள் வந்து பதிவை போடுங்கள்

குணமதி
28-11-2009, 04:56 PM
வருகிறேன்.

கொஞ்சம் பொறுத்திடுக.

அடுத்த விடுகதையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

குணமதி
28-11-2009, 05:28 PM
5. யாரென்று விடைசொல் வாயே!


காணுதற்குத் தெரியாதான்; அறைந்து போவான் !

கண்காணும் இடமெங்கும் திரிந்து செல்வான் !

பூணுகின்ற உடையதனை இழுப்பான் வீச்சில் !

பூவுலகில் சிலபோது போருஞ் செய்வான் !

காணுகின்ற மரத்தைவேர் கிளப்பிச் சாய்ப்பான் !

கண்முன்னே மின்கம்பம் வீழச்செய்வான் !

வேண்டுவோர்க் கினிமைதர வருவான் அந்த

வெறும்பயலும் யாரென்று விடைசொல் வாயே!

ஜனகன்
28-11-2009, 11:30 PM
காற்றாக இருக்குமோ

குணமதி
29-11-2009, 04:24 PM
காற்று - சரியான விடை.

பாராட்டும் நன்றியும்.

ஜனகன்
29-11-2009, 07:26 PM
காற்று சரிஎன்றால், அடுத்த விடுகதையை கேளுங்கள்

குணமதி
30-11-2009, 04:06 AM
காற்று சரிஎன்றால், அடுத்த விடுகதையை கேளுங்கள்

விடுகதையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

விரைவில்...

lolluvathiyar
02-12-2009, 02:21 PM
திரி நன்றாக இருக்கிறது அருமையான தமிழ் கையாளுகிறீர்கள். உடனுக்குடன் பதில் தந்து அசத்துகிறார்கள். விடை தந்தவரை பாராட்டும் போது வரிக்கு வரி விளக்கும் தந்தால் என்னை போன்றவர்கள் கொஞ்சம் அறிந்தும் ரசித்து இன்புறுவோமே. அடுத்துமுரை செய்வீர்கள் என்று நம்புகிறோம்

குணமதி
02-12-2009, 04:33 PM
திரி நன்றாக இருக்கிறது அருமையான தமிழ் கையாளுகிறீர்கள். உடனுக்குடன் பதில் தந்து அசத்துகிறார்கள். விடை தந்தவரை பாராட்டும் போது வரிக்கு வரி விளக்கும் தந்தால் என்னை போன்றவர்கள் கொஞ்சம் அறிந்தும் ரசித்து இன்புறுவோமே. அடுத்துமுரை செய்வீர்கள் என்று நம்புகிறோம்

நன்றி.

அடுத்தமுறை விளக்கமும் தருகிறோம்.

குணமதி
03-12-2009, 04:45 AM
6. யாரென்று இயம்புவாயே!


முன்னேபூப் போலிருக்கும்! குஞ்சமில்லை!

முனைகுலையும் பயன்பாட்டில் உளியுமில்லை!

பின்னொருங்கே வெட்டியுள! மரமுமில்லை!

பிடித்திருப்பார் கையினிலே! பையுமில்லை!

சொன்னாலும் பேர்தெரியும் தூய்மையாளி!

சோராத பணியால்தேய் தொண்டுவேலை!

என்றைக்கும் பணியுண்டு! இனியசொல்லாய்!

யாரென்று கண்டெனக்கு இயம்புவாயே!

ஜனகன்
03-12-2009, 09:38 AM
விளக்குமாறு

aren
03-12-2009, 09:51 AM
விளக்குமாறு

ஏங்க திட்டுறீங்க இப்படி.

ஆமாம், ஜனகன் அவர்கள் சொல்வது சரியென்றே எனக்கும்படுகிறது.

பா.ராஜேஷ்
03-12-2009, 02:33 PM
துடைப்பம் என்று சொல்லி இருக்கலாமோ!??

குணமதி
03-12-2009, 05:10 PM
மூவரும் சரியான விடையைச் சொல்லியிருக்கிறீர்கள்.

மிகவும் விளக்கமாக இருந்ததோ?

மூவர்க்கும் மிக்க நன்றி.

குணமதி
03-12-2009, 05:13 PM
பாடலுக்குப் பொருள் கூற வேண்டிய தேவையில்லை என்றே கருதுகிறேன்.

பாடலே எளிதாகப் பொருள் புரியும்படி இருப்பதாகக் கருதுகிறேன்.

ஐயம் இருப்பின், கேட்டால் விளக்குகிறேன்.

நன்றி.

ஜனகன்
03-12-2009, 05:54 PM
ஏங்க திட்டுறீங்க இப்படி.

ஆமாம், ஜனகன் அவர்கள் சொல்வது சரியென்றே எனக்கும்படுகிறது.

அப்படிஎன்றால் திட்டுவதென்று அர்த்தமா????நன்றி அரேன், நண்பர்களை திட்டுவதற்கு நல்ல ஒரு வார்த்தை கிடைத்திருக்கிறது.

ஜனகன்
03-12-2009, 06:01 PM
பாடலுக்குப் பொருள் கூற வேண்டிய தேவையில்லை என்றே கருதுகிறேன்.

பாடலே எளிதாகப் பொருள் புரியும்படி இருப்பதாகக் கருதுகிறேன்.

ஐயம் இருப்பின், கேட்டால் விளக்குகிறேன்.

நன்றி.

சொற்கள் எல்லாம் நன்றாகவே விளங்குகின்றது.புதுசொற்கள் வரும்போது, வசனத்துடன் சேர்த்து வாசிக்கும்பொழுது பொருள் புரிகிறது.

இளசு
03-12-2009, 07:55 PM
மிக நல்ல திரி..

அருமையான பணி..

அருந்தமிழ்ச் சுவையுமாச்சு..
அழகான விடுகதையுமாச்சு..


பாராட்டும் ஊக்கமும் குணமதி...
உற்சாகமாய்த் தொடருங்கள்!

குணமதி
04-12-2009, 12:46 PM
மிக நல்ல திரி..

அருமையான பணி..

அருந்தமிழ்ச் சுவையுமாச்சு..
அழகான விடுகதையுமாச்சு..


பாராட்டும் ஊக்கமும் குணமதி...
உற்சாகமாய்த் தொடருங்கள்!

நன்றி !

அனைவர்க்கும் நன்றி.

ஜனகன்
04-12-2009, 01:35 PM
எல்லாம் சரியென்றால் அடுத்தது எங்கே????

குணமதி
04-12-2009, 01:50 PM
7. அனைவர்க்கும் தெரியஅறி விப்புசெய்யே!



காரென்ற நிறமுண்டு கரியுமில்லை!

காட்சிதரும் எங்குமது மேகமில்லை!

சேரஅமர்ந் தேஒலிக்கும் பள்ளியில்லை!

சிறுவரிடம் பறித்துண்ணும் நாயுமில்லை!

தேரஎண்ணி வீடமைக்கும் பொறியரில்லை!

தெரியாமல் வருவார்க்கும் ஓம்பலுண்டு!

ஆரழகே! அருந்தேனே! அறிந்துநீயே

அனைவர்க்கும் தெரியஅறி விப்புசெய்யே!

கலையரசி
04-12-2009, 01:57 PM
காகம்

ஜனகன்
04-12-2009, 09:44 PM
காகம் என்றுதான் நானும் சொல்கின்றேன்.

பா.ராஜேஷ்
05-12-2009, 11:48 AM
காக்காவே தான்

குணமதி
06-12-2009, 03:40 AM
சரியான விடை.

மூவர்க்கும் பாராட்டு.

நன்றி.

ஜனகன்
06-12-2009, 11:45 AM
அடுத்தது எங்கே

குணமதி
06-12-2009, 12:13 PM
விரைவில் எழுதுகிறேன்.

நன்றி நண்பரே.

குணமதி
06-12-2009, 04:00 PM
8. மகிழவைப்பாய்!


மண்ணளைந்து மேல்துளைக்கும் குயவனில்லை!

மனமார வயல்காக்கும் உழவனில்லை!

கண்ணிரண்டு குழிந்திருக்கும் குருடனில்லை!

கற்கோட்டை யுள்ளிருக்கும் வேந்தனில்லை!

எண்ணியெடுத் தேகிடுவார் பசியுநீக்கும்;

ஈரைந்து கையிருக்கும் ஈசனில்லை!

பெண்ணழகே! பேரெழிலே! விடையிறுத்தே

பீடுதமிழ் மன்றத்தார் மகிழவைப்பாய்!

aren
07-12-2009, 02:14 AM
ஒன்னுமே புரியவில்லை. எதுவும் என் மனதிற்கு வரவில்லை.

மற்றவர்கள் வந்து சொல்லட்டும்.

குணமதி
07-12-2009, 02:36 AM
ஒன்னுமே புரியவில்லை. எதுவும் என் மனதிற்கு வரவில்லை.

மற்றவர்கள் வந்து சொல்லட்டும்.

புரியாத சொல்லிருந்தால் கேளுங்கள். விளக்குகிறேன்.
உழவுத்தொழிலைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு எளிதில் விளங்கும்.
நன்றி.

சரண்யா
07-12-2009, 03:17 AM
அப்போ..நெல் என்பது சரியா....

குணமதி
07-12-2009, 05:18 AM
அப்போ..நெல் என்பது சரியா....

இல்லையே... !

ஜனகன்
07-12-2009, 09:09 AM
மண் புழுவாக இருக்குமோ

குணமதி
07-12-2009, 11:20 AM
மண் புழுவாக இருக்குமோ

இல்லையே...

கோட்டையிலிருக்கும், கண் குழிந்திருக்கும் - பொருந்தவில்லையே.

சரண்யா
07-12-2009, 12:54 PM
இலையை இருக்கும் பூச்சி

ஆதி
07-12-2009, 01:35 PM
நண்டு

குணமதி
07-12-2009, 04:00 PM
நண்டு

சரியான விடை.

பாராட்டு.
நன்றி ஆதன்.

அனைவருக்கும் நன்றி.

aren
09-12-2009, 02:44 AM
நான் முதலில் மண்புழுவாக இருக்குமோ என்று நினைத்தேன். கண் இருக்கும் என்றவுடன் அதை விட்டுவிட்டேன்.

நண்டு என்பது எனக்குத் தோன்றவேயில்லை.

ஆதன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

குணமதி
09-12-2009, 04:22 PM
9. விடைசொல்வாய் என்னவென்றே!


வெட்டிடுவார் இறப்பதில்லை; முருங்கையில்லை!

வெறுத்துசிலர் கிள்ளிடுவார்; பகையுமில்லை!

கட்டழியக் கடித்திடுவார்; வெறியிலில்லை!

காணுகிறோம் இதற்கெல்லாம் அழுவதில்லை!

பட்டொளியில் பலவண்ண மளித்தபோதும்

பார்த்திடலாம் அதற்காகச் சிரிப்பதில்லை!

கட்டழகே! காரிகையே! கருத்தினிற்கும்

கண்மணியே, விடைசொல்வாய் என்னவென்றே!

ஜனகன்
09-12-2009, 04:32 PM
நகம் அல்லது தலைமுடி

aren
09-12-2009, 06:36 PM
நகம் என்று நினைக்கிறேன்

குணமதி
10-12-2009, 04:55 PM
சரியான விடை : நகம்

சரியான விடை கூறிய இருவர்க்கும் பாராட்டு.

அனைவருக்கும் நன்றி.

குணமதி
25-12-2009, 05:48 AM
10. குயிலே கூறாய்!


பஞ்சோ எங்கும் விளையாதே!

பார்க்கும் நூலோ நூற்றிலதே!

அஞ்சோ பத்தோ விலையில்லை;

யார்க்கும் எங்கும் விற்பதிலை!

விஞ்சும் நேர்த்தி நுண்மையிலே

விளங்கும் நூலைக் கொண்டிங்கே

கொஞ்சும் அழகில் பின்னியதே!

கூறாய் குயிலே என்னவதே!

கீதம்
25-12-2009, 06:29 AM
சிலந்தி வலையா குணமதி அவர்களே?

ஜனகன்
25-12-2009, 08:46 AM
சிலந்தி வலை என்றுதான் எனக்கும் தோன்றுகின்றது.

குணமதி
26-12-2009, 05:20 AM
சரியான விடையைக் கூறிய இருவர்க்கும் பாராட்டு. நன்றி.

குணமதி
26-12-2009, 05:24 PM
11. தவறாது சொல்வாய்!


பஞ்சுபுசித் தகங்காக்கும் கழுதையில்லை!

பக்குவமாய் உடுத்துறங்கும் அரசியில்லை!

தஞ்சமடை வார்பேணும் பாழியில்லை!

தனித்துமிணை யோடுமுண்டு பறவையில்லை!

வஞ்சமுடன் மேலேந்தி மருவினாலும்

மனமார ஏற்றிருக்கும் காசுக்கில்லை!

தஞ்சமென எல்லாரும் நாடுவாரே!

தனியழகே! தவறாது விடைசொல்வாயே!


பேணுதல் : உபசரித்தல்
பாழி : பாதுகாப்பான இடம், ஆசிரமம்
மருவுதல் : அணைத்தல்

ஜனகன்
26-12-2009, 06:16 PM
பட்டுச்சேலை என்று நினைக்கிறேன்.சரியா?

குணமதி
27-12-2009, 05:17 AM
பட்டுச்சேலை என்று நினைக்கிறேன்.சரியா?

இல்லை. பொருந்தும் விடைக்கு எண்ணிப்பாருங்கள்.

ஆதி
27-12-2009, 05:24 AM
உடுத்தும் ஆடை

ஜனகன்
27-12-2009, 03:47 PM
பஞ்சு மெத்தை சரியா?

குணமதி
27-12-2009, 04:18 PM
உடுத்தும் ஆடை

ஆடை அன்று; முயற்சி செய்க.

குணமதி
27-12-2009, 04:20 PM
பஞ்சு மெத்தை சரியா?

பஞ்சு பாட்டிலேயே வருகிறது.

விடையைச் சரியாகச் சொல்லுங்கள்.

நன்றி.

ஜனகன்
27-12-2009, 04:46 PM
துணியால் செய்யப்பட்ட பொம்மை அல்லது
துணியால் செய்யப்பட்ட சோவா (கதிரை )

குணமதி
28-12-2009, 02:34 AM
துணியால் செய்யப்பட்ட பொம்மை அல்லது
துணியால் செய்யப்பட்ட சோவா (கதிரை )

விடையை நெருங்கிவிட்டீர்கள்; கொஞ்சம் மாற்றி எண்ணமிடுங்கள்.

கீதம்
28-12-2009, 07:06 AM
தலையணை என்பது சரியா?

குணமதி
28-12-2009, 12:11 PM
தலையணை என்பது சரியா?

அருமை!
பாராட்டு.
விடுகதைக்கு விடையளிப்பதில் நீங்கள் வல்லவர் என்று தெரிகிறது!
நன்றி.

அனைவர்க்கும் நன்றி கூறுகிறேன்.

குணமதி
04-02-2010, 02:44 PM
12. திருத்தமுற விடை கூறாய்!


சிவந்தநிறம் கொண்டவர்கள் பழங்களல்ல!

சீரழகில் பலவுருவம் படங்களல்ல!

தீயினிலே வெந்தவர்கள் கரியுமல்ல!

திருத்தமுற செய்யுருக்கள் சிலைகளல்ல!

ஒருகல்லால் உயிரிழப்போம் பறவையல்ல!

உணவாக்கப் பயன்படுவோம் சுள்ளியல்ல!

திருமகளே! தேன்மொழியே! சிவந்தபெண்ணே!

திருத்தமுற விடையிதற்குச் செப்புவாயே!

ஜனகன்
04-02-2010, 06:56 PM
"ஜிலேபி"யாக இருக்குமோ?

குணமதி
05-02-2010, 02:02 AM
பொருந்ததமான விடை உள்ளது.

நன்றி. முயல்க.

கீதம்
05-02-2010, 06:24 AM
விடை மண்சட்டி என்று நினைக்கிறேன். சரியா?

ஜனகன்
05-02-2010, 02:08 PM
கீதம் சொல்வது சரியென்றுதான் எனக்கும் தோன்றுகிறது.

குணமதி
07-02-2010, 04:13 AM
மட்பாண்டங்கள் - சரியான விடை.

பாராட்டுக்குரியவர் : கீதம்.

நன்றி : அனைவருக்கும்.

குணமதி
20-02-2010, 06:32 PM
கண்டுபிடித்துச் சொல்லுங்கள்!


1902ஆம் ஆண்டில் வெளிவந்த தனிப்பாடற்றிரட்டு நூலில் விடுகதைப்பாடல் ஒன்றைப் படித்தேன். அந்த விடுகதையை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள இங்கு இடுகையாக்கி உள்ளேன்.

அந்தப் பாடல் இது :

தூது மதுரை துவரை கடையிடைமுன்

ஓதுகின்ற மூவெழுத்து மொக்குமே – நீதி

அகவழகன் வாழும்நல் சிங்கையெனுஞ் செல்வ

நகரா யிழையார் நகை.


பாடலின் உரையைப் பார்ப்போம் :

நீதி = நீதியையுடைய,

அகவழகன் வாழும் = அகவழகன் வாழுகின்ற,

நல்சிங்கையெனும் = நல்ல சிங்கையென்கின்ற,

செல்வ நகர் = செல்வப் பெருக்கையுடைய நகரிலுள்ள,

ஆயிழையார் = தெரிந்தெடுத்த அணிகளையுடைய பெண்களின்,

நகை = பல்….

தூது மதுரை துவரை கடையிடைமுன் ஒக்கும் = ……………………………………..

இதற்குப் பொருள் கண்டுபிடித்தால் அந்தப் பெண்களின் பல் எதற்கு ஒப்பாகும் என்று தெரியும்!

கண்டுபிடித்துச் சொல்வீர்களா?

Akila.R.D
24-02-2010, 08:53 AM
தூது மதுரை துவரை கடையிடைமுன்

ஓதுகின்ற மூவெழுத்து மொக்குமே

சங்கு

மூவெழுத்து , ஓதுகின்ற - சங்கு பொருந்தும்..

பல்லின் வெண்மைக்கு சங்கை ஒப்பிடுகிறார்களோ?..

குணமதி
24-02-2010, 04:25 PM
தூது மதுரை துவரை கடையிடைமுன்

ஓதுகின்ற மூவெழுத்து மொக்குமே

சங்கு

மூவெழுத்து , ஓதுகின்ற - சங்கு பொருந்தும்..

பல்லின் வெண்மைக்கு சங்கை ஒப்பிடுகிறார்களோ?..

மிகப்பொருந்தும் விடை உள்ளது.

தூது மதுரை துவரை கடையிடைமுன் - இதிலேதான் விடை உள்ளது. கண்டுபிடியுங்கள்.

கீதம்
25-02-2010, 11:49 AM
தூது, மதுரை, துவரை இந்த மூன்று வார்த்தைகளில் இருந்து முறையே கடையெழுத்து (து), இடையெழுத்து (து) மற்றும் முன்னெழுத்து (து) ஆகிய மூன்று எழுத்துகளை இணைத்தால் மூன்று து அதாவது முத்து வருகிறது. இதையே பல்லுக்கு ஒப்பாகக் கூறியுள்ளனர். சரிதானே குணமதி அவர்களே?

குணமதி
26-02-2010, 02:18 AM
தூது, மதுரை, துவரை இந்த மூன்று வார்த்தைகளில் இருந்து முறையே கடையெழுத்து (து), இடையெழுத்து (து) மற்றும் முன்னெழுத்து (து) ஆகிய மூன்று எழுத்துகளை இணைத்தால் மூன்று து அதாவது முத்து வருகிறது. இதையே பல்லுக்கு ஒப்பாகக் கூறியுள்ளனர். சரிதானே குணமதி அவர்களே?

அருமை! அருமை!

மிகச்சரியாக விடை கண்டு கூறினீர்கள்.

பாராட்டு.

நன்றி, நன்றி!

குணமதி
02-03-2010, 05:54 PM
13. என்னவென்று புகல்வாய்!


தங்கமாய் உடலுடையாள் நடிகையல்லள்!

தளுக்காக நடந்திடுவாள் அன்னமல்லள்!

நன்கிவளும் ஆடிடுவாள் கூத்தியல்லள்!

நல்லதொரு கொண்டையது முடித்ததன்று!

மங்கியிருண் டாள்வானம் மகிழ்ச்சிகொள்வாள்!

மாந்தரெலாம் மனமீர்க்கப் பார்த்திருப்பார்!

பொங்கழகுப் பொன்னுருவே பொலிவுமிக்க

பூங்குயிலே என்னவென்று புகலுவாயே!

ஆதி
02-03-2010, 06:40 PM
மயில்

சரோசா
04-03-2010, 04:31 PM
மயில் என்றுதான் நானும் சொல்கிறேன்.

குணமதி
06-03-2010, 01:51 AM
மயில் - சரியான விடை.

இருவருக்கும் பாராட்டு.
நன்றி.

குணமதி
18-03-2010, 06:54 PM
14. பகருவாயே!


நீராலே பிறந்திடுவான் மீனு மில்லை!

நித்தமுமே பயனாவான் உடையு மில்லை!

கார்வீழ அழிந்திடுவான் சிறுவ னில்லை!

காந்திக்குத் தொடர்புண்டு நூற்ப தில்லை!

மோர்போலும் தூயநிறம் வேட்டி யில்லை!

முன்னிட்டோர் நினைத்திடுதல் நன்றி போற்றல்!

பார்வியக்கும் நேரழகே! பணிவு சான்ற

பைந்தமிழின் சொல்லழகே, பகரு வாயே!

govindh
18-03-2010, 07:09 PM
உப்பு....சரி தானா...?

ஜனகன்
18-03-2010, 07:12 PM
உப்பு என்றுதான் நானும் நினைக்கின்றேன்.

பா.ராஜேஷ்
19-03-2010, 04:49 PM
உப்பேதான்

குணமதி
19-03-2010, 07:02 PM
உப்பு - சரியான விடை.

மூவருக்கும் பாராட்டு.

நன்றி.

ஜனகன்
19-03-2010, 07:28 PM
பாராட்டுக்கு நன்றி,
அடுத்ததை கொடுங்கள்.

குணமதி
20-03-2010, 04:17 AM
விரைவில்.

குணமதி
12-06-2010, 05:29 AM
புரிந்தால் விளக்குங்கள்!


நண்பர்கள் இருவர்;
முதியவர்கள்;
தமிழறிந்தவர்கள்;
புதிர் போட்டுப் பேசிக் கொள்கிறவர்கள்;
இருவரும் பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர்!

முன்னால் சென்றவர்,
திடுமென
'ஆ' என அலறியவாறு
காலைத் தூக்கினார்!

பின்னால் சென்றவர்
என்ன, என்ன, என்னாயிற்று?
என்று பதற்றத்துடன் கேட்டார்!

முன்னால் சென்றவர் சொன்னார்:


முக்காலைக் கொண்டு

மூவிரண்டு ஊருக்குப் போகின்ற

அக்காலை ஐந்தலை நாகம்

அழுந்தக் கடித்ததுவே!


அதைப் புரிந்து கொண்ட மற்றவர்,
இவ்வாறு விடை சொன்னார்:


அதனால் என்ன?

பத்துரதன் புத்திரனின்

சத்துருவின் மித்திரனின்

பத்தினியின் காலெடுத்துத்

தேய்!


கூறியதைப் புரிந்து கொண்ட முதலாமவர்
அவ்வாறே செய்தார்!

உங்களுக்குப் புரிகிறதா?

விளக்கிச் சொல்லுங்கள், மன்றத்தில் மற்றவர்களும் புரிந்துகொள்ள!

குணமதி
16-06-2010, 05:43 PM
விளங்கினால் சொல்லுங்கள்!


சுப்பிர தீபக் கவிராயர் என்பர் எழுதிய நூல் கூளப்ப நாய்க்கன் காதல் என்பதாகும்.

அந்நூலில் விளக்கப்படும் ஒரு காட்சி மிகச் சுவையானதாகும்.

ஒரு பெண் தோழிகளுடன் காட்டிற்குச் செல்கிறாள். தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவள் அவர்களைப் பிரிந்து அவளுடைய காதலனைக் காண அவனைத் தேடிச் செல்கிறாள்.

அவனை எங்கும் காணாமல் துயருற்று வருந்துகிறாள். அவளுடைய அந்த நிலையை அந்தப் பாவலர் கீழ்க்காணும் வகையில் புதிராக - விடுகதை போல - வண்ணிக்கிறார்.

காலாய்தக் கொடியோன்

கையாய்த விழியாள்

மாலாய்தம் ஈன்ற

மாமணியைத் தான் உதிர்த்தாள்!


இவ்வரிகளின் பொருள் புரிகிறதா?

புரிந்தவர்கள் மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்ல்லாமே!

கீதம்
17-06-2010, 12:24 AM
புரிந்தால் விளக்குங்கள்!


நண்பர்கள் இருவர்;
முதியவர்கள்;
தமிழறிந்தவர்கள்;
புதிர் போட்டுப் பேசிக் கொள்கிறவர்கள்;
இருவரும் பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தனர்!

முன்னால் சென்றவர்,
திடுமென
'ஆ' என அலறியவாறு
காலைத் தூக்கினார்!

பின்னால் சென்றவர்
என்ன, என்ன, என்னாயிற்று?
என்று பதற்றத்துடன் கேட்டார்!

முன்னால் சென்றவர் சொன்னார்:


முக்காலைக் கொண்டு

மூவிரண்டு ஊருக்குப் போகின்ற

அக்காலை ஐந்தலை நாகம்

அழுந்தக் கடித்ததுவே!


அதைப் புரிந்து கொண்ட மற்றவர்,
இவ்வாறு விடை சொன்னார்:


அதனால் என்ன?

பத்துரதன் புத்திரனின்

சத்துருவின் மித்திரனின்

பத்தினியின் காலெடுத்துத்

தேய்!


கூறியதைப் புரிந்து கொண்ட முதலாமவர்
அவ்வாறே செய்தார்!

உங்களுக்குப் புரிகிறதா?

விளக்கிச் சொல்லுங்கள், மன்றத்தில் மற்றவர்களும் புரிந்துகொள்ள!


பாடல்கள் அருமையாய் உள்ளன. பகிர்வுக்கு நன்றி குணமதி அவர்களே! இந்தப் பாடலைப் பற்றி எப்போதோ கேள்விப்பட்டிருக்கிறேன். என் நினைவில் இருந்தவரைக்கும் தருகிறேன்.

முக்காலை ஊன்றி என்பது இரண்டு கால்களையும், கைத்தடியையும் குறிக்கிறது என்று அறிகிறேன். மூவிரண்டு ஊருக்கு என்றால் ஆறூரா? ஆரூரா? தெரியவில்லை. அங்கு போன அந்தக் காலைப்பொழுதில் ஐந்து தலை நாகம் போன்ற வடிவமுடைய நெருஞ்சி முள் குத்திவிட்டது என்று முன்னவர் கூறுகிறார்.

(தசம் என்றால் பத்து என்று பொருள்) எனவே பத்துரதன் என்றால் தசரதன்.அவருடைய புத்திரன் ராமன். அவனுடைய சத்துரு என்றால் எதிரி. ராமனுடைய எதிரிகள் ராவணனும், வாலியும்! இதில் எதிரியின் மித்திரன் என்றால் நண்பனா? தமையனா என்று புரியவில்லை. தமையன் என்றால் வாலியின் தம்பி சுக்கிரீவன். அவனுடைய மனைவி தாரை. அவளுடைய பெயரிலிருக்கும் காலை எடுத்துவிட்டால் தரை. எனவே பின்னவர் சொல்ல வருவதாவது: முள் குத்திய உன் காலை தரையில் தேய் என்பதே!

விளக்கம் சரிதானா? இல்லையெனில் தாங்களே விளக்குங்களேன்.

ஆதி
17-06-2010, 03:31 AM
அக்கா உங்க விளக்கம் சரிதான்..

குணமதி இரண்டாம் புதிரில் வார்த்தைகளை இடம்மாற்றி தந்திருக்கார்..

பத்துரதன் புத்திரனின்
மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் காலை வாங்கி தேய்..

இப்ப உங்க விளக்கம் சரியா வரும் அக்கா..

மித்திரன் - நண்பன்

நண்பனின் சத்துரு வாலி

ராமன் வாலியை சத்துருவா நினைக்கவில்லை.. அதுபோல் வாலியும் ராமனை சத்துருவா நினைக்கவில்லை..

கீதம்
17-06-2010, 04:48 AM
ரொம்ப நன்றி ஆதன். வாலியின் மனைவிதானே தாரை? அண்ணன் இறந்தபின் அவர் மனைவியைத் தன் மனைவியாக்கிகொள்வார் சுக்கிரீவன்.

எழுதி முடித்தபின் ஒரே குழப்பமாகப் போய்விட்டது. நல்லவேளை விளக்கம் சொன்னீர்கள்.

குணமதி
17-06-2010, 07:14 AM
கீதம், ஆதன் இருவருக்கும் நன்றி.

பத்துரதன் புத்திரனின்
சத்துருவின் மித்திரனின்
பத்தினியின் காலை வாங்கித் தேய்..

- என்றே நான் பார்த்த நூலில் இருந்தது.
அதனால் கருத்து மாறவில்லை என்றே கருதுகிறேன்.

இருவருக்கும் பாராட்டு.

சரி, இதற்கு அடுத்துள்ளதையும் விளக்க முயற்சி செய்யும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

குணமதி
21-06-2010, 02:10 PM
15. பாண்டியனே, சொல்!


இப்பாடலைத் தனிப்பாடல் திரட்டில் படித்தேன். எழுதியவர் பெயர் தெரியாத பாடல். விடை கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்!


வெள்ளனத்து மீதமரும் பிரமன் அன்று!

விளங்குடலும் கருத்திருக்கும் மாலும் அன்று!

தள்ளரிய அறுகாற்பூ சிக்க நாடும்

சங்கரனும் அன்று!விடம் தலையில் கொண்டும்

தெள்ளுமதன் உயிர்போகா தெந்த நாளும்

சிறையிருக்கும் விடுதலையாய்ய்ச் சிறந்து லாவும்

பள்ளிகொள்ளும் முகுந்தனிகர் முத்துச் சாமிப்

பாண்டியனே இக்கதையின் பயனீ சொல்லே!

ஆதி
21-06-2010, 02:18 PM
எருமை சரியா ??

குணமதி
21-06-2010, 04:33 PM
இல்லை; இன்னும் சிந்தியுங்கள்.

சில உதவிக்குறிப்புகள் :

வெள்ளனத்து = வெள்ளை அன்னத்து

அறுகால் = ஆறு கால்

பாட்டிலேயே ஓரிடத்தில் விடையும் உள்ளது!

ஆதி
21-06-2010, 05:14 PM
ஆதிசேடனா ?

ஆதி
21-06-2010, 06:14 PM
கடலோ ??

விகடன்
22-06-2010, 11:33 AM
வாசுகிப்பாம்பு

குணமதி
25-06-2010, 10:45 AM
பாட்டின் பொருள் :

வெண்மையான அன்னத்தின் மேல் அமரும்; ஆனால் பிரம்மா இல்லை. கருமை நிறம் வாய்ந்தது; ஆனால் திருமால் இல்லை. தள்ளரிய அருகம்புல்லால் பூசனை செய்யப்படும் சிவபெருமானும் இல்லை. தலையில் விடத்தைக் கொண்டிருப்பதாயினும் அதனுடைய உயிர் அதனால் எந்த நாளும் போனதில்லை; சிறைக்குள் இருக்கும். விருப்பம் போல் வெளியில் எங்கு வேண்டுமானாலும் சுற்றும். இதன் பொருளை ஆராய்ந்து கூறுவாயாக.

இவ்விடுகதையின் விடை 'ஈ' என்பதாகும்.

ஈ சோற்றின் மீது அமரும். கருமையான உடல் கொண்டிருக்கும். ஆறு கால்களை உடையது. அதற்கு நஞ்சு தலையில் இருக்கும். ( ஈக்கு விடம் தலையில்... என்றொரு பாடலும் உண்டு.)

சரண்யா
25-06-2010, 11:20 AM
ரொம்ப நாள் ஆச்சு இந்த திரிக்கு வந்து...
குணமதி அவர்களே..
பகிர்வுக்கு நன்றி...

குணமதி
26-06-2010, 04:42 PM
வசைச்சுவை(?)யில் விடுகதையும் விடையும்!


கற்பனையான ஒரு விடுகதை கூறலும் விடையளிப்புமான நிகழ்வு ஒளவையாரைத் தொடர்புபடுத்தி மிகவும் சுவையாகக் கூறப்படுகிறது.

கொஞ்சம் தமிழ் படித்த ஒருவன், ஒளவையாரிடம் சென்று, தான் கூறும் விடுகதைக்கு விடைகூறுமாறு கேட்டிருக்கிறான். ஒளவை விடுகதையைக் கூறும்படி கேட்க, ‘நாலிலைப் பந்தலடி!’ என்று கூறியிருக்கின்றான்.

விடுகதையில் ‘அடி’ என்ற சொல்லைச் சேர்த்துச் சொல்லி ஒளவையை இழிவுபடுத்திவிட்டதாகக் கருதிக் கொண்டான்.

ஒளவையார் அவனுக்குத் தக்கவாறு பதிலடி கொடுத்துத் திருத்த வேண்டுமெனத் தீர்மானித்து ஒருபாட்டில் – வெண்பாவில் – அந்த விடுகதைக்கு விடையைக் கூறினார். அந்தப் பாட்டு இதுதான் :

எட்டேகால் லட்சணமே! எமனே றும்பரியே!
மட்டில் பெரியம்மை வாகனமே! – முட்டமேற்
கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
ஆரையடா! சொன்னா யடா!

இதன் பொருள் -
அவலட்சணமானவனே! எருமை மாடே! மூதேவியின் ஊர்தியான கழுதையே! குட்டிச்சுவரே! குரங்கே! உன்னுடைய விடுகதைக்கு ‘ஆரை’ என்பதே விடையடா! என்பதாகும்.

பொருள் விளக்கம் :

தமிழில் எட்டு என்பதை ‘அ’ என்றும் கால் என்பதை ‘வ’ என்றும் குறிப்பார்கள். எனவே, எட்டேகால் லட்சணம் என்றால் அவலட்சணம் என்று பொருள்படும்.
எமனேறும் பரி என்பது எமனின் ஊர்தியான எருமை மாட்டைக் குறிக்கும்.
பெரியம்மை என்றால், திருமகள்(லட்சுமி) தமக்கையான மூதேவியைக் குறிக்கும். பெரியம்மை வாகனம் என்றால் மூதேவியின் ஊர்தி கழுதையாகும்.
கூரையில்லா வீடு குட்டிச்சுவராகும்.
இராமனின் தூதுவன் அனுமான், குரங்கு.
‘ஆரை’ என்பது ஆழங் குறைவான நீர் நிலைகளில் காணப்படும் நான்கு இலைகளைக் கொண்ட ஓர் கீரையாகும்.
இந்த ஆரையே, விடுகதையின் விடையாகும்.

சிறப்பு :

திமிரில் மதிப்புக் குறைவாக ‘அடி’ என உரைத்தவனைப் பலவாறு திட்டித் தீர்த்ததோடு, ஒருமுறை ‘அடி’ என்றதற்குப் பகரமாக இருமுறை ‘அடா’ எனத் திறமையாகக் கூறுகிறார்.

அத்துடன், ‘ஆரையடா சொன்னாயடா’ என்ற கூற்று, இரண்டு வகைகளில் பொருள் தந்து சுவையூட்டுகிறது.

ஆரை என்பதையே சொன்னாயடா! - என்று விடுகதைக்கு விடை கூறுகின்றவாறு ஒரு வகையில் அமைந்துள்ளது.

யாரையடா ‘அடி’ என்று சொன்னாயடா? என்று அச்சுறுத்தும் கூற்றாகவும் அமைந்து பொருள் தருவதை அறிய முடிகிறது.

-----------------------------------------------------------

சிவா.ஜி
26-06-2010, 04:58 PM
ஏற்கனவெ வாசித்தது. ஆனாலும் சுவைபட சொல்லியிருக்கிறீர்கள்.

நான் படித்ததில் எமனேறும் பரியே என இல்லை

எமனேறும் வாகனமே என்றே இருக்கிறது. பரி என்றால் குதிரைதானே...அது எப்படி எருமையாகும்?

அதேபோல யாரையடா அடி எனச் சொன்னாய் எனக் கேட்பதாயும் பொருள் விளங்கிக்கொள்ள முடியவில்லையே..

ஆரையடா...சொன்னாயடா....இங்கு அடி எங்கிருக்கிறது...?

சந்தேகம்தான்.

சுவையான பதிவுக்கு நன்றி குணமதி.

குணமதி
26-06-2010, 05:05 PM
எமனேறும் பரி என்றால், எமனுக்குக் குதிரை போன்ற எருமைமாடு என்று பொருள்படும். அவ்வாறு பொருள் கொள்ளல் பிழையன்று.

நாலிலைப் பந்தலடி - என்று சொன்னதில் 'அடி' இருக்கிறது.
ஆரையடா சொன்னாயடா - என்று சொன்னதில் இரண்டு 'அடா' இருக்கிறது.

ஐயத்தைத் தெளிவாகக் கூறின், தெரிந்தவரை விளக்குவேன்.

பாராட்டுக்கு நன்றி.

சிவா.ஜி
26-06-2010, 05:21 PM
நாலிலைப் பந்தலடியில் 'அடி'யிருக்கிறது...ஆனால்

ஆரையடா சொன்னாயடாவில்...இரண்டு அடா இருக்கிறதே தவிர...அடி இல்லையே... பின் எவ்வாறு யாரையடா...'அடி' எனச் சொன்னாய் எனக் கூறுவதாய் எப்படி பொருள்விளங்கிக்கொள்ள முடியும் என்பதே என் ஐயம்.

தமிழின் பல்வேறு சுவைகளை விளங்கிக்கொள்ளும் ஆவல் மட்டுமே உள்ள*து குணமதி.

குணமதி
30-11-2012, 04:10 AM
16. உலகத்தீர் உரைத்திடுவீர்!


வெய்யிலினால் மலருமது தாமரையு மில்லை!
வெறுந்தரையில் நீரினிலே விளைவதுவும் இல்லை!

கய்யிலெடுத் தால்நீராய்க் காணாமல் போகும்!
காண்பீரே உலகிலுள மாந்தரிட மெல்லாம்!

உய்த்துணரத் துப்பொன்று! பாலைவனக் கப்பல்
உடலினிலே மலர்வதில்லை உண்மையினும் ஒன்று

உய்யாது மறைந்துவிடும் ஒருவீச்சுக் காற்றில்!
உருள்பெரும்பே ருலகத்தீர் உரைத்திடுவீர், என்ன?

கீதம்
30-11-2012, 05:26 AM
வியர்வை என்று நினைக்கிறேன். சரிதானா?

கும்பகோணத்துப்பிள்ளை
02-12-2012, 01:08 AM
கானல் நீர்!?

jayanth
02-12-2012, 03:15 AM
தங்கை கீதமின் "வியர்வை" தான் சரியன பதில் என்று எண்ணுகின்றேன்...!!!

குணமதி
04-12-2012, 11:09 AM
வியர்வை முத்து - சரியான விடை.

சரியான விடை தந்த கீதம் மற்றும் முயன்றோர்க்கும் பாராட்டு.

Manojannk
07-12-2012, 01:19 PM
அருமையாக எழுடியுள்ளீர்கள் ஐயா நன் வீட்டில் விடை சொல்ல சொல்லி அவர்கள் தடுமாறினார்கள் , விளக்கம் சொல்லி மகிழ்ந்தேன் உங்கள் பணி தொடர கடவுளை பிரார்த்திக்கின்றேன் .

குணமதி
07-12-2012, 06:53 PM
அருமையாக எழுடியுள்ளீர்கள் ஐயா நன் வீட்டில் விடை சொல்ல சொல்லி அவர்கள் தடுமாறினார்கள் , விளக்கம் சொல்லி மகிழ்ந்தேன் உங்கள் பணி தொடர கடவுளை பிரார்த்திக்கின்றேன் .

நன்றி மனோ. நாளைக்கு இன்னொன்று!

குணமதி
08-12-2012, 03:00 AM
17. அருங்கலையே சிலையழகே அது என்ன?


சுருங்கலுறும் பரப்பலுறும் அட்டை அன்று!
சூழ்பருவ காலத்தே துணையென் றாகும்!

ஒருங்குறவே கோடைகுளிர் மாரியெல்லாம்
உதவுமிது உடன்தாங்கிச் செல்வா ருக்கே!

தருங்காப்பு தான்தாங்கி நமக்கே கண்டீர்!
தாங்கிடுவர் சிலமுதியர் தவறா தென்றும்!

அருங்கலையே சிலையழகே அன்பே கூறாய்!
அதுஎன்ன என்றிந்த மன்றத் தார்க்கே!

கீதம்
08-12-2012, 06:02 AM
கோடையிலும் மழையிலும் நமக்கு உறுதுணையாயிருக்கும் குடையென்றே நினைக்கின்றேன் விடை.

குணமதி
10-12-2012, 04:07 PM
கோடையிலும் மழையிலும் நமக்கு உறுதுணையாயிருக்கும் குடையென்றே நினைக்கின்றேன் விடை.

குடை - சரியான விடை. பாராட்டு.

அடுத்த விடுகதை விரைவில்!

குணமதி
12-12-2012, 02:04 PM
18. அதுஎன்ன சொல்வாய்!

குச்சியுருக் குதிரையிது குத்தி ஓடும்!
கூர்குதிரை பின்சேர்த்த வாலோ நீளம்!

இச்சிறிய குதிரைதொடர்ந்(து) ஓட ஓட
இழக்குமிது படிப்படியாய் வாலின் நீளம்!

நச்சிடுநல் ஆடையுடை இதனால் ஆகும்!
நம்பிடுக இதனோட்டம் இன்றேல் ஆகா!

அச்சினிலே வார்க்காத அழகே சொல்வாய்
அதுஎன்ன என்றிங்கே அனைவ ருக்கும்!

jayanth
12-12-2012, 02:42 PM
அதுஎன்ன சொல்வாய்!

குச்சியுருக் குதிரையிது குத்தி ஓடும்!
கூர்குதிரை பின்சேர்த்த வாலோ நீளம்!

இச்சிறிய குதிரைதொடர்ந்(து) ஓட ஓட
இழக்குமிது படிப்படியாய் வாலின் நீளம்!

நச்சிடுநல் ஆடையுடை இதனால் ஆகும்!
நம்பிடுக இதனோட்டம் இன்றேல் ஆகா!

அச்சினிலே வார்க்காத அழகே சொல்வாய்
அதுஎன்ன என்றிங்கே அனைவ ருக்கும்!


"தையல் இயந்திரம்"

குணமதி
13-12-2012, 01:06 AM
விடையை நெருங்கியிருக்கின்றீர்கள். பாராட்டு.

சரியாகச் சொல்ல முயல்க.

jayanth
13-12-2012, 04:00 AM
ஊசி - நூல்

சரியா...!?!?!?

கீதம்
13-12-2012, 07:30 AM
அதுஎன்ன சொல்வாய்!

குச்சியுருக் குதிரையிது குத்தி ஓடும்!
கூர்குதிரை பின்சேர்த்த வாலோ நீளம்!

இச்சிறிய குதிரைதொடர்ந்(து) ஓட ஓட
இழக்குமிது படிப்படியாய் வாலின் நீளம்!

நச்சிடுநல் ஆடையுடை இதனால் ஆகும்!
நம்பிடுக இதனோட்டம் இன்றேல் ஆகா!

அச்சினிலே வார்க்காத அழகே சொல்வாய்
அதுஎன்ன என்றிங்கே அனைவ ருக்கும்!


விடையை நாங்கள் யோசிப்பதைவிடவும் கடினம் அழகிய மரபுப்பாவாய் விடுகதைகளை வழங்கும் தங்கள் முயற்சி. மனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா.

குணமதி
13-12-2012, 08:10 AM
ஊசி - நூல்

சரியா...!?!?!?

அருமை! சரியானவிடை. பாராட்டு.

குணமதி
13-12-2012, 08:13 AM
விடையை நாங்கள் யோசிப்பதைவிடவும் கடினம் அழகிய மரபுப்பாவாய் விடுகதைகளை வழங்கும் தங்கள் முயற்சி. மனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா.

மிக்க நன்றி கீதம்!

விடை கண்டுபிடிக்கவே முடியாதென்றால் அது விடுகதையாக இருக்காதே!

குணமதி
14-12-2012, 11:16 AM
19. அவர் யாரே?

பிரியாத இருவரிவர் நண்பர் அல்லர்!
பேரன்பில் திளைகாதல் இணையர் அல்லர்!

அரிதாயும் ஒன்றிணையார் பகைவர் அல்லர்!
அழுக்காறு மனங்கொண்ட மாந்தர் அல்லர்!

உரியவழி எனஇருந்தே உன்னை என்னை
ஊருக்குக் கொண்டுசெல உதவி செய்வார்!

சுரிகுழலே சுடரொளியே தூய அன்புச்
சுவைக்குவையே அவர்யாரே சொல்ல வாராய்!

ஆதி
14-12-2012, 11:30 AM
வண்டி மாடு அல்லது தண்டவாலம் !!!!

jayanth
15-12-2012, 08:16 AM
அவர் யாரே?

பிரியாத இருவரிவர் நண்பர் அல்லர்!
பேரன்பில் திளைகாதல் இணையர் அல்லர்!

அரிதாயும் ஒன்றிணையார் பகைவர் அல்லர்!
அழுக்காறு மனங்கொண்ட மாந்தர் அல்லர்!

உரியவழி எனஇருந்தே உன்னை என்னை
ஊருக்குக் கொண்டுசெல உதவி செய்வார்!

சுரிகுழலே சுடரொளியே தூய அன்புச்
சுவைக்குவையே அவர்யாரே சொல்ல வாராய்!



வண்டி மாடு அல்லது தண்டவாலம் !!!!

தண்டவாளம் அல்லது இருப்புப் பாதை சரியாக இருக்கலாம்...!!!

குணமதி
15-12-2012, 09:18 AM
தண்டவாளம் என்பதைவிட இருப்புப்பாதை என்பதே சரியான பொருத்தமான விடையாகும்.
இருவருக்கும் பாராட்டும் நன்றியும்!

கலையரசி
15-12-2012, 10:44 AM
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த விடுகதை பகுதி எனக்கு மிகவும் பிடித்த பகுதி. தொடருங்கள். தாமதமாக வருவதால் விடையைப் பார்க்காமல் நானே கண்டுபிடித்துப் பின் சரிபார்த்துக் கொள்கிறேன்.

குணமதி
18-12-2012, 03:19 AM
மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த விடுகதை பகுதி எனக்கு மிகவும் பிடித்த பகுதி. தொடருங்கள். தாமதமாக வருவதால் விடையைப் பார்க்காமல் நானே கண்டுபிடித்துப் பின் சரிபார்த்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி. விரைவில் அடுத்த விடுகதைப்பாடல்!

குணமதி
19-12-2012, 03:01 PM
20. அதுதான் யாரே?

மரத்திற்கு மரந்தாவித் தாவி வாழும்
மாந்தருடை மூதாதை குரங்கு மன்று!

துரத்தாமல் ஓடிவிடும் துடித்துக் கூவும்
தொடர்கத்தல் எழுப்புமது கழுதை அன்று!

கரத்தலின்றிப் புறத்தினிலே காண லாகும்
கனிந்தசிவ னடியாரின் நீற்றுப் பட்டை !

அரத்தமென நாணத்தில் முகம்சி வக்கும்
அற்றைநாள் பண்பழகே! அதுதான் யாரே?

M.Jagadeesan
19-12-2012, 05:30 PM
அணில்

கும்பகோணத்துப்பிள்ளை
19-12-2012, 06:10 PM
மரத்துக்கு மரந்தாவி ஓடும்
உச்சிக்கிளையில் ஒய்யாரமாய் உட்கார்ந்தே
கரகரவெனறே கடுந்தோல கொட்டையையும் கடித்தே தின்னும்
முசுமுசவென்றே வாலிருக்கும் கானாதோர் கண்டாலே
முச்முச்சென்றே கத்திதீர்க்கும்
முகில்வண்ணன் கையாலே முப்பட்டை வாங்கியே
எழில் கொண்ட அணில்தானே
குணமதி அண்ணா அது.

குணமதி
22-12-2012, 05:26 PM
அணில் - சரியான விடை.

ஜகதீசனார்க்கும் கும்பகோணத்தார்க்கும் பாராட்டு.

குணமதி
23-12-2012, 08:14 AM
இனி அடுத்தது -

21. விடை பகர்வாய்!

நெட்டைநிலத் துள்ளேவெண் கம்பிக் கோட்டை
நிமிர்தொங்குக் கோட்டைக்குள் பெட்டி ஒன்று!

பெட்டிக்குள் பிரிவாக அறைக ளுண்டு!
பிறப்புகளெல் லாம்பெட்டி பெற்றி ருக்கும்!

கட்டுப்பாட் டொலியெழுப்பும் கணக்கை வைத்தே
கண்டறிவர் பிணிதீர்ப்பர் காலந் தோறும்!

பட்டுப்போல் மின்னழகே பைஞ்சொற் செல்வி
பகுத்தாய்ந்தே விடைகண்டுப் பகரு வாயே!

ஜானகி
23-12-2012, 02:48 PM
இதயம் ?

குணமதி
26-12-2012, 09:51 AM
இதயம் ?

சரியான விடை. பாராட்டு.

குணமதி
28-12-2012, 11:24 AM
22. தெரிந்து சொல்லே!

மூன்றுநிறக் கிளிகளவை முறையில் கூடும்!
முழுதுண்ட பின்சிறப்பாய்க் கூடல் நேரும்!

தோன்றுகின்ற குகைபோலும் இடத்தில் கூடும்!
துணுக்குறவே வியப்பளிக்கும் சேர்ந்த பின்னே

*மூன்றுமொரே நிறங்கொள்ளும் முழுதும் சேர்ந்தே!
முற்றுமவை முன்னிருந்த நிறமி ழக்கும்!

தென்றலிளங் காற்றே!தெம் மாங்குப் பாட்டே!
தீட்டாத கவினழகே! தெரிந்து சொல்லே!



*மூன்றும் ஒரே

அனுராகவன்
28-12-2012, 11:47 AM
:rolleyes:

கும்பகோணத்துப்பிள்ளை
30-12-2012, 06:36 PM
மதியானவேளையிலே மொழுமொழுவெண்றிருக்கும்
மைத்துனர்வீட்டுத்திண்ணையில் வந்தமர்ந்து
பசுந்தளிர் நிறஞ்சொட்டும் கும்பகோணத்து வெற்றிலையை
குப்பறித்து சுகமாய் குண்டஞ்சிகரை வேட்டியிட்ட தொடைதடவி!
காம்புகிள்ளியே கைவிரலிலிட்ட வெண்சுன்னம் பரப்பி
கம்புநிறமொப்பும் நெய்யிலே வறுத்த கைச்சீவலுமிட்டே
கன்னக்கதுப்பில் குகைவாயில் குதப்பியபடி
என்னவோய் சாப்பாடு! ஜமாய்சுட்டேள்போங்கோ எனும்போது
எகிறியே எதிர்முஞ்சியில் எச்சிலெழுதும் அம்மாஞ்சியின்
ஆத்துக்காரியின் மேல் வைத்த ஆசையில்
சிவந்த வெற்றிலைப்பாக்கு தானதுவே சொன்னேன்!

குணமதி
31-12-2012, 03:18 AM
மதியானபேளையிலே மொழுமொழுவெண்றிருக்கும்
மைத்துனர்வீட்டுத்திண்ணையில் வந்தமர்ந்து
பசுந்தளிர் நிறஞ்சொட்டும் கும்பகோணத்து வெற்றிலையை
குப்பறித்து சுகமாய் குண்டஞ்சிகரை வேட்டியிட்ட தொடைதடவி!
காம்புகிள்ளியே கைவிரலிலிட்ட வெண்சுன்னம் பரப்பி
கம்புநிறமொப்பும் நெய்யிலே வறுத்த கைச்சீவலுமிட்டே
கன்னக்கதுப்பில் குகைவாயில் குதப்பியபடி
என்னவோய் சாப்பாடு! ஜமாய்சுட்டேள்போங்கோ எனும்போது
எகிறியே எதிர்முஞ்சியில் எச்சிலெழுதும் அம்மாஞ்சியின்
ஆத்துக்காரியின் மேல் வைத்த ஆசையில்
சிவந்த வெற்றிலைப்பாக்கு தானதுவே சொன்னேன்!

அருமை!
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு - சரியான விடை
பாராட்டுகிறேன் கும்பகோணத்தாரே!

குணமதி
01-01-2013, 04:44 AM
அடுத்தது -

23. யாரென்றே உரைத்திடுவாய்!

வரவேண்டா அருகில்நீ வரவே வேண்டா!
வந்தேநீ மாட்டிடவே என்னை வைத்தார்!

தரவேண்டா எளிதிலுயிர் தரவே வேண்டா!
தணியாத பசியெனினும் தள்ளிப் போநீ!

கரவிலெனை முள்முனையில் கலங்க வைத்தார்!
காத்துக்கொள்! எனைஉண்ணக் கருதி டாதே!

உரத்திங்கே ஓலமிடும் உயிர்எ தென்றே
உரைத்திடுவாய் ஒளியழகே! ஒப்பில் மானே!

கும்பகோணத்துப்பிள்ளை
01-01-2013, 06:32 AM
கண்னே மணியேவென்றே
கன்னம்வைத்தே கொஞ்சிடாமல்
கருவந்ததே களங்கமென்றே கருதி
பெண்னெள்றால் பெரும்பாரமென்றே
தன் பால் கொடாமலே
உண்ணக்கொடுப்பார் உன்பால் அகத்தே
அனல்கொண்ட கள்ளி தானே அதன் விடை!?

குணமதி
01-01-2013, 08:18 AM
பொருந்தும் விடை உள்ளது.
முயற்சி செய்க!

குணமதி
06-01-2013, 02:52 AM
கொஞ்சம் மாற்றி எளிதாக்கி யிருக்கின்றேன்.
இப்போது முயன்றால், எளிதில் விடை காணலாம் என்று கருதுகிறேன்!

jayanth
06-01-2013, 03:15 AM
அடுத்தது -

யாரென்றே உரைத்திடுவாய்!

வரவேண்டா அருகில்நீ வரவே வேண்டா!
வந்தேநீ மாட்டிடவே என்னை வைத்தார்!

தரவேண்டா எளிதிலுயிர் தரவே வேண்டா!
தணியாத பசியெனினும் தள்ளிப் போநீ!

கரவிலெனை முள்முனையில் கலங்க வைத்தார்!
காத்துக்கொள்! எனைஉண்ணக் கருதி டாதே!

உரத்திங்கே ஓலமிடும் உயிர்எ தென்றே
உரைத்திடுவாய் ஒளியழகே! ஒப்பில் மானே!


"எலிப்பொறி"...???

குணமதி
07-01-2013, 03:24 AM
விடையை மிக நெருங்கியிருக்கிறீர்கள்!
நீங்கள் கூறியவாறு - ஏதோ ஒரு பொறிதொடர்பாகச சிந்தித்தால் விடை கிடைக்கும்! (எலிப் பொறி இல்லை!)

'என்னை வைத்தார்!',
'கரவிலெனை முள்முனையில் கலங்க வைத்தார்!'
'எனைஉண்ணக் கருதி டாதே!'

- இவ்வாறெல்லாம் ஓலமிடும் உயிர் எது என்று சிந்தியுங்கள்!
அதுவே விடை!

M.Jagadeesan
07-01-2013, 04:03 AM
தூண்டிற் புழு.

குணமதி
08-01-2013, 03:12 AM
தூண்டிற் புழு - சரியான விடை.

பாராட்டு!

குணமதி
08-01-2013, 03:50 AM
இனி அடுத்தது –

24. புகன்றிடுவாய் விடையிதற்கே!

நிலத்தினிலே முளைத்துவளர் நிலையே இல்லை!
நிறத்தினிலே செறிவண்ணம் நீலம் இல்லை!

வளமாக நீண்டிதுவும் வளர்ந்த போதும்
வலிவாக நேர்நிமிர்ந்து நிற்ப தில்லை!

நிலஞ்சேரின் இழிமாந்தர்க்(கு) உவமை யாகும்!
நிலத்திணையு மில்லையிது கொடியும் இல்லை!

பொலம்போலும் மின்னழகே! பொறுமை சான்ற
பூங்கொடியே! புகன்றிடுவாய் விடையி தற்கே!

கும்பகோணத்துப்பிள்ளை
08-01-2013, 12:48 PM
மழைவந்தஇரவு மாறிப்போன மறுநாளில்
தேர்தல் வருமுன் ஊரெல்லாம்
நித்தம் முளைக்கும்
புத்தம் புது அரசியல்வாதிபோல் முளைத்தெழும்
எங்கள் வீட்டு கொல்லைபுறத்து
குப்பைமேட்டில் 'காளான்கள்'

குணமதி
09-01-2013, 03:38 AM
நிலத்தினிலே முளைத்துவளர் நிலையே இல்லை!

வளமாக நீண்டிதுவும் வளர்ந்த போதும்
வலிவாக நேர்நிமிர்ந்து நிற்ப தில்லை!

நிலத்திணையு மில்லையிது கொடியும் இல்லை! - பொருந்தாமையைக் கவனிக்கவும். பொருந்தும் விடைக்கு முயல்க!

தாமரை
09-01-2013, 05:21 AM
மின்னல் எனத் தோன்றுகிறது..

M.Jagadeesan
09-01-2013, 07:30 AM
விடை காண்பது சற்றுக் கடினமாக உள்ளது. " பாசி " என்று ஊகிக்கிறேன்.

M.Jagadeesan
09-01-2013, 07:43 AM
பூமியிலே ஓடாத புனித ஆறு
புவிமாந்தர் எல்லோரும் வணங்கும் ஆறு
சாமிஎன்று போற்றுகின்ற மங்கை யாளின்
சக்களத்தி யாய்வந்து உதித்த ஆறு
மாமியார் என்றொருவர் இல்லை பாராய் !
அந்தஆறு இவ்வுலகில் பெற்ற பேறு
மாமயிலே ! தூமணியே ! அந்த ஆறு
எதுவெனவே மக்களுக்குத் தெரியக் கூறு !

குணமதி
09-01-2013, 11:55 AM
அடுத்தது -

புகன்றிடுவாய் விடையிதற்கே!



நிலத்தினிலே முளைத்துவளர் நிலையே இல்லை!
நிறத்தினிலே செறிவண்ணம் நீலம் இல்லை!

வளமாக நீண்டிதுவும் வளர்ந்த போதும்
வலிவாக நேர்நிமிர்ந்து நிற்ப தில்லை!

நிலஞ்சேரின் இழிமாந்தர்க்(கு) உவமை யாகும்!
நிலத்திணையு மில்லையிது கொடியும் இல்லை!

பொலம்போலும் மின்னழகே! பொறுமை சான்ற
பூங்கொடியே! புகன்றிடுவாய் விடையி தற்கே!!



மின்னல் எனத் தோன்றுகிறது..


விடை காண்பது சற்றுக் கடினமாக உள்ளது. " பாசி " என்று ஊகிக்கிறேன்.

விடை : தலைமுடி(மயிர்)
பொருத்தமாக உள்ளதா இல்லையா என்று கூறவும்.
கடினமெனக் கருதின், இன்னும் எளிதாக்கி எழுதலாம்.

குணமதி
09-01-2013, 12:03 PM
பூமியிலே ஓடாத புனித ஆறு
புவிமாந்தர் எல்லோரும் வணங்கும் ஆறு
சாமிஎன்று போற்றுகின்ற மங்கை தனக்கு
சக்களத்தி யாய்வந்து உதித்த ஆறு
மாமியார் என்றொருவர் இல்லா நிலையே
அந்த ஆறு இவ்வுலகில் பெற்ற பேறு
மாமயிலே ! தூமணியே ! அந்த ஆறு
எதுவெனவே மக்களுக்குத் தெரியக் கூறு !

ஐயா, நான் எண்சீர் ஆசிரிய மண்டிலமாக (காய் காய் மா தேமா எனும் வாய்பாட்டில்) எழுதியிருக்கிறேன்.
அவ்வாறே நீங்களும் எழுதினால் பொருத்தமாக இருக்கும்!
நீங்கள் எழுதியுள்ளதில் சிறு திருத்தங்கள் செய்தால் போதும்.
நன்றி.

கும்பகோணத்துப்பிள்ளை
10-01-2013, 07:53 AM
பூமியிலே ஓடாத புனித ஆறு
புவிமாந்தர் எல்லோரும் வணங்கும் ஆறு
சாமிஎன்று போற்றுகின்ற மங்கை யாளின்
சக்களத்தி யாய்வந்து உதித்த ஆறு
மாமியார் என்றொருவர் இல்லை பாராய் !
அந்தஆறு இவ்வுலகில் பெற்ற பேறு
மாமயிலே ! தூமணியே ! அந்த ஆறு
எதுவெனவே மக்களுக்குத் தெரியக் கூறு !

ஆகாச கங்கை

M.Jagadeesan
10-01-2013, 12:08 PM
ஆகாய கங்கை என்பது சரியான விடை. கும்பகோணத்துப் பிள்ளை அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

குணமதி
11-01-2013, 03:47 AM
25. விடையுரைக்க வாராய்!

பச்சைநிறக் காயிதுவே பாகல் இல்லை!
பழுத்தபின்னே சிவப்புநிறம் கோவை இல்லை!

இச்சையுடன் சுவைத்திடிலோ இனிப்ப தில்லை!
ஈ, ஊ, ஆ என்னுமொலி தானே தோன்றும்!

பச்சையெனல் இதன்பேரில் பாதி யாகும்!
மிச்சமுள பேரதுவும் நான்கெ ழுத்து!

உச்சிவகிர் குழலழகின் உவப்பே! ஞாலத்(து)
உயர்பண்பே! விடையுரைக்க வாராய் நீயே!

கும்பகோணத்துப்பிள்ளை
11-01-2013, 04:02 AM
சடசடவென மழை பொழியும்
கோடைகாலச் சாய்ங்காலம்
குடையெடுத்து போய்
நான்வாங்கிய நாயர்கடை மசால்வடை
எடுத்து கடித்தால்
ஸ்...ஆ... பச்சைமிளகாய்!

குணமதி
17-01-2013, 09:17 AM
சடசடவென மழை பொழியும்
கோடைகாலச் சாய்ங்காலம்
குடையெடுத்து போய்
நான்வாங்கிய நாயர்கடை மசால்வடை
எடுத்து கடித்தால்
ஸ்...ஆ... பச்சைமிளகாய்!

சரியான விடை. பாராட்டு!

குணமதி
17-01-2013, 09:19 AM
அடுத்தது -


26. சொல்க வந்தே!

புதுமையான குளத்திருக்கும் குருவி ஒன்று!
பூசுவெள்ளை நிறமதற்கே பொதுவாய்ச் சொன்னால்!

அதுநீந்தா(து) உடல்மட்டும் அமிழ்ந்தி ருக்கும்!
ஆனாலும் தலையினிலே அனலி ருக்கும்!

மெதுவாகக் குடித்திடும்தன் வாலி னாலே!
மெல்லியலார் வழங்கிடுவர் மீண்டும் மீண்டும்!

எதுஅந்தக் குருவியெனச் சொல்க வந்தே
ஏழிசையின் குரலே!நல் லெழிலின் செல்வி!

ஜானகி
17-01-2013, 09:56 AM
விளக்குத் திரி ?

குணமதி
18-01-2013, 01:43 AM
விளக்குத் திரி ?

அருமை!
சரியான விடை. பாராட்டு.

குணமதி
18-01-2013, 11:43 PM
இனி அடுத்தது -

27. விடையிதற்குப் பகர வாராய்!

அரிவாளின் அரிமுனைபோல் இலைக் கிருக்கும்!
அருவிதரும் குளிர்ச்சியென நிழலி ருக்கும்!

திரிநண்டின் கண்போலும் பூத்தி ருக்கும்!
திகட்டாத இனிப்பாகப் பழமி ருக்கும்!

எரிபசிக்கும் தின்னாத காயி ருக்கும்!
எல்லாமும் மருந்தென்ற பேச்சி ருக்கும்!

பரிவார்ந்த பார்வையுறை பளிங்குப் பாவாய்
பகுத்தாய்ந்து விடையிதற்குப் பகர வாராய்!



ஒரு செய்திக் குறிப்பு: மன்றத்தில் எழுதி மேலும் செப்பம் செய்த விடுகதைப் பாடல்கள்உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட என் விடுகதைப் பாடல்களை நூலாக வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ‘விடுகதைப் பாடல்கள்’ நூலாக வரும்!

M.Jagadeesan
19-01-2013, 02:54 AM
வேம்பு ?

M.Jagadeesan
19-01-2013, 02:59 AM
//ஒரு செய்திக் குறிப்பு: மன்றத்தில் எழுதி மேலும் செப்பம் செய்த விடுகதைப் பாடல்கள்உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட என் விடுகதைப் பாடல்களை நூலாக வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ‘விடுகதைப் பாடல்கள்’ நூலாக வரும்!//


விடுகதை நூல் விரைவில் வெளிவர வாழ்த்துகிறேன்.

கும்பகோணத்துப்பிள்ளை
19-01-2013, 06:39 PM
நல்ல விடையம் வரவேற்கிறோம்!

குணமதி
20-01-2013, 05:59 PM
வேம்பு ?

சரியான விடை. பாராட்டு.

குணமதி
20-01-2013, 06:03 PM
சரியான விடை. பாராட்டு.


//ஒரு செய்திக் குறிப்பு: மன்றத்தில் எழுதி மேலும் செப்பம் செய்த விடுகதைப் பாடல்கள்உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட என் விடுகதைப் பாடல்களை நூலாக வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ‘விடுகதைப் பாடல்கள்’ நூலாக வரும்!//


விடுகதை நூல் விரைவில் வெளிவர வாழ்த்துகிறேன்.


நல்ல விடையம் வரவேற்கிறோம்!

மிக்க நன்றி.

குணமதி
25-01-2013, 06:44 PM
அடுத்தது -

28. வந்துவிடை கூறுவாயே!

அழகுடனே புதுமைமிகும் குகையொன் றுண்டு!
அமைந்தஇடம் மலையில்லை! பாறை இல்லை!

பழகிநட மாடுகிறாள் அங்கோர் பெண்ணே
படுத்தபடி இருப்பதுபோல் தோற்றம் கொண்டே!

வழவழென மென்சுவர்கள் அக்கு கைக்கே!
வண்ணமதோ எல்லாமும் சிவப்புத் தானே!

பழகுதமிழ்ப் பண்ணிசையே! பண்பின் செல்வி!
பாங்காக வந்துவிடை கூறுவாயே!

M.Jagadeesan
26-01-2013, 12:46 AM
வாய்- குகை.
பெண்- நாக்கு.

குணமதி
31-01-2013, 02:13 AM
வாய்- குகை.
பெண்- நாக்கு.

சரியான விடை. பாராட்டு.

குணமதி
02-02-2013, 04:05 PM
இனி அடுத்தது -

29. வந்து விடை தெரிவிப்பாயே!

ஆராசூர் ஏரியொன்று அன்புத் தம்பி!
அறுபத்தெட் டுத்தென்னை அதனைச் சுற்றி!

ஆராய்நீ அவைபூத்துக் காய்ப்ப தில்லை!
அவற்றமர காக்கைக்கும் இடமே இல்லை!

ஊரார்க்கும் உறவார்க்கும் உலகில் உள்ள
ஒவ்வொருவர்க் கும்அவையே உடைமை யாகும்!

தீராத விளையாட்டுப் பிள்ளை யான
திருச்செல்வா வந்துவிடை தெரிவிப் பாயே!

கீதம்
03-02-2013, 01:17 AM
கண் என்று நினைக்கிறேன். சரிதானா?

குணமதி
04-02-2013, 03:47 AM
கண் என்று நினைக்கிறேன். சரிதானா?

ஆம். கண்ணும் இமையும்

சரியான விடை. பாராட்டு.

குணமதி
08-02-2013, 10:42 AM
அடுத்தது -

30. எதுவென்றே உரைக்க வாராய்!


அடிகாட்டில் இருக்குமது வெட்டி விட்ட
அடையாள மாகவுள மரமு மன்று!

நடுமாட்டில் என்றிடலாம் நாட்டில் ஏழை
நனியமைக்கும் சிறுகுடிசைக் குதவும் ஈதே!

அடும்வீட்டில் நுனி உணவாம் ஆலை சென்று
அதுதிரும்பி வந்தபினே அனைவ ருக்கும்!

உடுதோற்கும் மின்னொளியே, உருவாய் வந்த
உயர்பண்பே எதுவென்றே உரைக்க வாராய்!

அடும் - சமைக்கும், ஈதே - இதுவே

jayanth
15-02-2013, 03:47 AM
ஒரு வாரம் ஆயிடுச்சுங்க குணமதி...

நீங்களே பதிலையும் சொல்லிடுங்க...!!!

M.Jagadeesan
15-02-2013, 03:57 AM
கரும்பு ?

குணமதி
15-02-2013, 12:53 PM
கரும்பு ?

விடையை நெருங்கியிருக்கிறீர்கள்.
முதன்மையான உணவுப்பொருள் தான்!
கண்டுபிடியுங்கள்!!

jayanth
16-02-2013, 03:14 AM
நெல்(லா)...???

குணமதி
16-02-2013, 03:28 AM
நெல்(லா)...???

அருமை! நெற்பயிர் - சரியான விடை.

பாராட்டு.

குணமதி
21-02-2013, 02:55 AM
அடுத்தது -

31. உரைத்திடுவாய், உவகை சேர்ப்பாய்!


பச்சைநிற உடலுண்டு பாம்பு இல்லை!
பவழஇதழ் வாயுண்டு நடிகை இல்லை!

இச்சையுடன் சிறையிடுவர் திருடன் இல்லை!
இனிதுரைக்கும் கூறுமொழி மழலை இல்லை!

கச்சையென கழுத்தினிலே வண்ணம் உண்டு!
கருத்தில்லார் கணியத்திற் குதவல் உண்டு!

உச்சமெனப் பண்புறையும் ஒளியே வந்தே
உரைத்திடுவாய் விடையிதற்கே, உவகை சேர்ப்பாய்!

jayanth
21-02-2013, 03:35 AM
கிளி...

குணமதி
22-02-2013, 01:58 AM
பச்சைக்கிளி - சரியான விடை.

பாராட்டு.

குணமதி
04-03-2013, 01:42 AM
அடுத்தது -

32. திருவே விடையளிக்க வாராய்!


தூய்மையுறத் துடைத்துவைத்தால் தோன்றும் நன்கு
தூங்கிருளின் வண்ணத்தில் துலக்க மாக!

தோய்ந்தறிவு புகட்டஇதைப் பயன்ப டுத்தின்
தூய்மைகுன்றி வெண்சங்கின் நிறத்தை ஏற்கும்!

வாய்விட்டுப் ஒலியெழுப்பி பிள்ளை கூடி
வந்துபடிக் கும்மிடத்தில் வைத்தி ருப்பர்!

தேய்வறியா வெண்ணிலவே, தேனின் ஊற்றே!
தெளிவாக விடையளிக்கத் திருவே வாராய்!

ஜானகி
04-03-2013, 06:03 AM
கரும்பலகை ?

குணமதி
07-03-2013, 07:55 AM
கரும்பலகை ?

சரியான விடை.

பாராட்டு.