PDA

View Full Version : அந்த தருணம்...சுடர்விழி
09-11-2009, 03:01 AM
ஒரு முறை தான் நிகழ்ந்தது என்றாலும்
ஓராயிரம் முறை
மனதிற்குள் ஒளிபரப்பி
அதே சிலிர்ப்பை..
அதே சுகத்தை....
அனுபவித்திருக்கிறேன்....

இதோ ...மறு ஒளிபரப்பு ...

முகத்தில் பூரிப்பு வழிய
சந்தோசக் கீற்றுகள்
கண்களில் மின்னலடிக்க...
இப்பரந்த உலகில்
இந்நிமிடம் என்னைவிட யாரும்
இத்தனை இன்பமாய்
இருந்துவிட இயலாது
என்ற இறுமாப்பு
இதயம் முழுக்க நிரம்பிய
அந்த தருணம்....

ஓருடலில் ஈருயிராய்
சில மாதங்கள்
என்னுள் நி்றைந்த
புதிய உயிரின்
முதல் அழுகுரல்
காற்றைக் கிழித்துக்கொண்டு
கேட்ட தருணம்......

இரத்தமும் பனிநீருமாக
ஒரு பஞ்சுப் பொதிபோல்
தொப்புள் கொடியறுத்த
குழந்தையை
நெஞ்சில் சுமந்த
அந்த தருணம்....

ஒரு முறை தான் நிகழ்ந்தது என்றாலும்
ஓராயிரம் முறை
மனதிற்குள் ஒளிபரப்பி
அதே சிலிர்ப்பை..
அதே சுகத்தை....
அனுபவித்திருக்கிறேன்....

கா.ரமேஷ்
09-11-2009, 03:08 AM
அழகான கவிதை தாய்மைக்கே உரித்தான பூரிப்பு...

வாழ்த்துக்கள்..

கீதம்
09-11-2009, 03:09 AM
ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் வேதனை அது என்றபோதும் அதையும் இறுமாப்புடன் அனுபவிக்கிறோம் பாருங்கள், அதில்தான் எத்தனைப் பெருமை! தங்கள் முதல் பதிவைப் பிரசவித்த கணமும் மகிழ்ச்சிக்குரியதே! அழகான தாய்மையை ஏந்திவந்த கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அன்புடன் கீதம்.

சுடர்விழி
10-11-2009, 12:01 PM
நன்றி நண்பர்களே......மன்றத்திற்கு புதியவள் நான்..அனைவருடனும் பழக ஆர்வம்.முதலில் மன்றத்தை சுற்றி பார்த்து விடுகிறேன்....

அறிஞர்
10-11-2009, 02:27 PM
தாய்மையடையும் பொழுது.. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உன்னத அனுபவம்.....

அருமை தோழியே....

இன்னும் எழுதுங்கள்.

ஜனகன்
10-11-2009, 03:17 PM
ஒரு தாய்மைக்கே உருத்தான, உன்னதமான வரிகள். முதல் பகிர்வே பிரசவத்துடன் ஆரம்பித்து இருக்கின்றிர்கள்.மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.:icon_b:

பாரதி
10-11-2009, 03:30 PM
நல்ல கவிதையை தந்த உங்களை மனதார பாராட்டுகிறேன்.

இளசு
10-11-2009, 07:00 PM
உயிரின் முழுமை = தாய்மை.

இக்கவிதை அம்முழுமையை செம்மையாய் வடிக்கிறது..

பாராட்டுகள் சுடர்விழி அவர்களே!

அமரன்
10-11-2009, 09:45 PM
காலங்கள் இறந்தாலும்
இறந்துவிடாத காட்சிப்பதிவு..
அம்மாவைப் போலவே
ஆண்டவன் இருப்பின் அத்தாட்சிப்பதிவு..

நானறிந்த வரையில்
பல மொழிகளில்
ஒற்றுமையுள்ள ஒலிவீச்சு
அம்மா எனும் பதத்துக்கு..

ஆங்கிலத்தில் மம்மி..தமிழில் அம்மா.. பிரெஞ்சில் மம்மா.. ஜெர்மனில் மமா.. உம்மா.....................

பூரண நிலவு!

samuthraselvam
11-11-2009, 04:23 AM
தாய்மையை முழுமையாக உணர்ந்து எழுதிய உயிர்க் கவிதை.. சுடர் வந்ததும் பதித்த தாய்மை கவிதை...

உண்மை.. பத்து மாதம் சுமந்து பட்ட இன்னல் வலிகளெல்லாம் முதல் அழுகுரலில் மறையும் மாயம்.. பெண்மைக்கே உரிய மகத்துவம்...

இது எப்போது நினைத்துப் பார்த்தாலும் மெய் சிலிர்க்க வைக்கும் அற்புத உணர்வு....

வாழ்த்துகள் சுடர்விழி....

சுடர்விழி
11-11-2009, 07:04 AM
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி !!!

சுகந்தப்ரீதன்
12-11-2009, 09:28 AM
பெற்றவளுக்கு தான் தெரியும் பெற்றதன் மதிப்பு...!! அந்த தருணத்தின் உணர்வை அப்படியே குறைவில்லாமல் நெஞ்சினில் இருத்தி வெளிக்கொண்டு வந்திருக்கும் ஒரு உயரிய தாய்மையின் படைப்பு..!!

வாழ்த்துக்கள் சுடர்விழி..!! தொடருங்கள்...!!

பா.ராஜேஷ்
12-11-2009, 02:24 PM
அற்புதமாய் எழுதி உள்ளீர்கள் சுடர்விழி ! பாராட்டுக்கள் !!

வானதிதேவி
17-11-2009, 01:13 PM
அழகான உயிரோட்டமான வரிகள் வாழ்துக்கள் சுடர்.

குணமதி
17-11-2009, 03:59 PM
அருமையான வெளிப்பாடு!

பூமகள்
15-05-2010, 10:32 AM
உணர்ந்தவர்களால் மட்டுமே பூரிக்க முடியும் அற்புதம் தாய்மை..

தாய்மை, அளவிட முடியா இன்பத்தை அள்ளித் தந்த தருணம்.. சிலிர்க்கிறது இன்னும்.. என்றும்..

தாயாய் ஆவதற்கு நல்ல மா தவம் செய்திட வேண்டுமம்மா என்று பாடத் தோன்றும் தருணம்.. ஆயிரம் வலிகளுக்கு மத்தியிலும் ஓர் உயிரை ஜனித்த திருப்தி அத்தனை வலியையும் பொறுக்க வைக்கும் சக்தியைக் கொடுக்கும்.

உங்களின் இக்கவிதை புத்தகத்தில் வந்தமைக்கு பாராட்டுகள் சுடர்விழி.. தொடர்ந்து எழுதுங்க. :)

ரங்கராஜன்
15-05-2010, 04:11 PM
மனதை நெகிழ வைத்த கவிதை

சிவா.ஜி
15-05-2010, 04:23 PM
எப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் அற்புதமானத் தருணம்.

உயிர் எடுக்கும் வலியிலும்...உயிர் கொடுக்கும் தாய்மை....என்றென்றும் வணக்கத்துக்குரியது.

வாழ்த்துக்கள் சுடர்விழி.

சுடர்விழி
15-05-2010, 11:37 PM
பாராட்டிய அனைவருக்கும் நன்றி !

gvchandran
16-05-2010, 12:05 AM
கவிதை அருமை.
நிகழ்நதன என்று பன்மையில் குறிப்பிட்டது
இடிக்கிறது.

சுடர்விழி
16-05-2010, 12:28 PM
நன்றி!! நீங்கள் சொல்வது சரிதான் .நிகழ்ந்தது என்று மாற்றி விட்டேன்....

அக்னி
21-05-2010, 03:12 PM
வலியில், அறுப்பில், பிரிவில்...
மகிழ்வு, பெருமிதம், இணைவு...

உயிர்ப்பூக்கவிதை...

வாழ்த்தும் பாராட்டும்...

சுடர்விழி
23-05-2010, 12:40 AM
உங்கள் வருகைக்கும், “உயிர்ப்பூக்கவிதை...” எனும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றி அக்னி அவர்களே !