PDA

View Full Version : பவழவாய் திறந்துவிடை பகருவாயே!

குணமதி
08-11-2009, 04:10 AM
அன்பார்ந்த இனிய தமிழ்மன்ற நட்புள்ளங்களே!

நான் இங்கே அறுசீர் மண்டில வடிவில் எழுதும் விடுகதைகளை எந்த விடுகதை நூலிலிருந்தும் எடுத்து எழுதவில்லை.

நெடுநாட்களாக விடுகதைகளைப் பல பெரியவர்களிடமிருந்தும் உறவுகளிடமிருந்ததும் கேட்டறிந்து குறித்து வைப்பதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

என் அன்பிற்குரிய காலஞ்சென்ற (தமிழறிந்த) தாய்மாமன் ஒருவர் விடுகதையை அறுசீர்மண்டில வடிவில் தருவது குறித்து எனக்கு அறிமுகப் பயிற்சி அளித்திருந்தார்.

அதைக் கொண்டே இங்கு விடுகதை எழுதிப் பழகிக் கொண்டிருக்கிறேன்.

இவ் விளக்கத்தையே, விடுகதை நூலின் பெயர் உரையாளர் பற்றி வினவிய அன்பு நண்பர் ஆதி அவர்களுக்கும் தெரிவித்தேன்.

இப்போது, அனைவரும் அறிய கூறிவிட்டேன்.
நன்றி.

இனி,

அடுத்த விடுகதை :

பவழவாய் திறந்துவிடை பகருவாயே!

கட்டிகளம் போர்புரியும் வீரனில்லை!

கடந்திடுமே இருவாழ்க்கை பெண்ணுமில்லை!

திட்டமுடன் இதைவளர்ப்பார் பிள்ளையில்லை!

தெள்ளருளில் நமைவளர்க்கும் தாயுமில்லை!

விட்டும்உயிர் விலங்கொன்றின் உணவுமாகும்!

வீணானால் மக்களைப்போல் பதருமாகும்!

பட்டழகு நல்லெழிலிப் பாவையேஉன்

பவழவாய் திறந்துவிடை பகருவாயே!

ஆதி
08-11-2009, 04:15 AM
நெல்!

வியாசன்
08-11-2009, 06:45 AM
நெல்!

அதுவேதான் ஆதி

aren
08-11-2009, 07:25 AM
நெல் மாதிரிதான் தெரியுது. ஆனால் ஐந்தாவது வரி எந்த விலங்கைச் சொல்கிறது. எலியா?

ஆதி
08-11-2009, 08:48 AM
நெல் மாதிரிதான் தெரியுது. ஆனால் ஐந்தாவது வரி எந்த விலங்கைச் சொல்கிறது. எலியா?

பசு மற்றும் காளையை குறிக்கிறதண்ணா

ஜனகன்
08-11-2009, 10:13 AM
நெல் பயிர் என்றுதான் எனக்கும் தோன்றுகின்றது

அமரன்
08-11-2009, 12:07 PM
ஆதியின் விடை பொருத்தமானதாகப் படுகிறது.

குணமதி...!

உங்கள் தமிழ்ச்சுவையும் நீங்கள் தரும் பதிவுச்சுளையும் ஒப்புமை அற்றவை. குறிப்பாக ஒரு சொல்லில் விடை தருகவில் உங்கள் விடைகளின் விசுவரூபமும் கேள்விகளின் வீரியம் என்னை அதிகம் கவர்ந்தவை. இவ்`விடம் பொல்லாப்பில்லா`விடம்.

உங்கள் தாய் மாமன் உங்களை உருவாக்கினார். நீங்கள் ஏன் பலரை உருவாக்கக் கூடாது..

குணமதி
08-11-2009, 01:43 PM
அனைவர்க்கும் நன்றி.

சரியான விடை நீங்கள் கூறியபடியே-

நெல்

குணமதி
08-11-2009, 02:18 PM
ஆதியின் விடை பொருத்தமானதாகப் படுகிறது.

குணமதி...!

உங்கள் தமிழ்ச்சுவையும் நீங்கள் தரும் பதிவுச்சுளையும் ஒப்புமை அற்றவை. குறிப்பாக ஒரு சொல்லில் விடை தருகவில் உங்கள் விடைகளின் விசுவரூபமும் கேள்விகளின் வீரியம் என்னை அதிகம் கவர்ந்தவை. இவ்`விடம் பொல்லாப்பில்லா`விடம்.

உங்கள் தாய் மாமன் உங்களை உருவாக்கினார். நீங்கள் ஏன் பலரை உருவாக்கக் கூடாது..

மனமார்ந்த நன்றி அமரன்.

உண்மையில் எனக்குத் தெரிந்ததைச் சொல்லவே தமிழ்மன்றத்தில் பதிவிடுகிறேன்.

இந்த விடுகதைப் பாடல்களைப் பொருத்தவரை, -
இதுவரை பார்த்து வருகின்ற, ஓரளவு ஆசிரிய மண்டிலம் எழுதத் தெரிந்தவர்கள், எப்படி எழுதப்படுகிறது என்பதை - அந்த உத்தியை - எளிதில் தெரிந்து கொண்டிருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

எனினும், நீங்கள் பதிவிட்டதற் கொப்ப, இன்னும் கொஞ்சம் விளக்கிக் கூறினால் பலருக்கும் பயன்படும் என்பதால், அடுத்த விடுகதைப்
பாடலை எழுதும் முறையை விளக்கிச் சொல்லி எழுதுகிறேன்.

உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் மறுபடியும் நன்றி.

aren
08-11-2009, 03:13 PM
ஆசிரிய மண்டிலம் / அறுசீர் மண்டிலம் என்றால் என்ன என்று ஒரு தனி திரி தொடங்கி விளக்கமாக பதியுங்கள். என்னைப் போன்ற தமிழ் தெரியாதவர்களும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

ஜனகன்
08-11-2009, 07:33 PM
ஆசிரிய மண்டிலம் / அறுசீர் மண்டிலம் என்றால் என்ன என்று ஒரு தனி திரி தொடங்கி விளக்கமாக பதியுங்கள். என்னைப் போன்ற தமிழ் தெரியாதவர்களும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

அரேன் உங்கள் கதையை பார்த்தால்; "ஒன்றும் தெரியாத பாப்பா பத்து மணிக்கு போட்டாளாம் தாப்பாள்" அப்படிஎல்லோ இருக்கின்றது

aren
09-11-2009, 01:41 AM
அரேன் உங்கள் கதையை பார்த்தால்; "ஒன்றும் தெரியாத பாப்பா பத்து மணிக்கு போட்டாளாம் தாப்பாள்" அப்படிஎல்லோ இருக்கின்றது

எனக்கு சாதாரணமாக தமிழில் எழுதத்தெரியும் நண்பரே. ஆனால் இந்த மாதிரியான இலக்கண இலக்கிய விஷயங்கள் எதுவும் தெரியாது. அதனால்தான் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

குணமதி
09-11-2009, 02:10 AM
தமிழ்மன்றத்தின் கவிதைப் பட்டறையைப் படித்தால் ஆசிரிய மண்டிலம் என்னும் ஆசிரிய விருத்தம் பற்றி எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆசிரிய மண்டிலம், ஆசிரியப்பா இனத்துள் ஒன்று.

அறுசீர் மண்டிலம் என்பது ஆசிரிய மண்டில வகைகளுள் ஒன்று.

இதைப்பற்றித் தெரியாவிட்டாலும், எப்படி விடுகதைப் பாடல் எழுதுவது என்பதை அடுத்த விடுகதைப் பாடலில் தெரிந்து கொள்ளலாம் - கவலைப்படத் தேவையில்லை.

நன்றி.