PDA

View Full Version : இங்கிதம் அறியாதவன்

கீதம்
02-11-2009, 04:25 AM
இத்தனை வயது ஆனபின்னும்
தலைக்கு மேலே பறக்கும்
ஆகாயவிமானம் பார்க்க
தன்னிச்சையாய் உயரும் தலையைத்
தவிர்க்க முடியவில்லை;

கடந்து செல்லும் ரயிலுக்கு
கைகாட்டும் பழக்கத்தை
கைவிடவும் இயலவில்லை;

கடற்கரையோரம்
காலாற நடக்கும்போது
கடலைப்பொட்டலத்தை
நாடும் மனதுக்குக்
கடிவாளமிடத் தெரியவில்லை;

கடல்மணலில் கால்புதைத்து
காற்றாடிவிடும்
சிறுவர்கள் கையிலிருந்து
இரவலாய் ஒருகணம்
நூல்பிடிக்க எங்கும் உள்ளத்துக்கு
மூக்கணாங்கயிறிட்டு
முடக்க முடியவில்லை;

பேரப்பிள்ளைகளை அழைத்துப்போய்
ஊர்சுற்றி வந்தபிறகு
பெற்றோரிடம் சொல்கின்றனர்,
'இந்தத் தாத்தாவுக்கு
இங்கிதமே தெரியவில்லை!' என்று.

கேட்டுவிட்டு ஆரவாரமாய்ச்
சிரித்துக்கொள்கிறேன்,
அப்போதும் இங்கிதமின்றி!

aren
02-11-2009, 04:37 AM
பேரப்பிள்ளை அனுபவம் இன்னும் இல்லை.

மற்றபடி அருமையான கவிதை வரிகள். நீங்கள் சொன்ன மற்றவிஷயங்கள் அனைத்திலும் என் மனது ஒத்துப்போகிறது.

நல்ல கவிதை. இன்னும் கொடுங்கள்.

கா.ரமேஷ்
02-11-2009, 04:55 AM
பெரியவர்கள் குழந்தையாகி போவதை பெரும்பாலும் யாரும் அறிவதில்லை ... அவர்களின் ஏக்கங்களும் நடவடிக்கைகளும் குழந்தையைப்போலவே இருக்கும் அதை கண்டிப்பாய் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்...

நல்லதொரு கவிதை கீதம் வாழ்த்துக்கள்...

praveen
02-11-2009, 07:48 AM
கேரளாவில் ஒரு பழமொழி உண்டாம், ஆனையும் கடலையும் எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது என்று.

அது போல பல விசயங்கள் சிறு வயது பிரயாயத்துடன் இனைந்திருப்பதால், நம்மை அறியாமல் வெறுப்போ விருப்போ ஏற்படுவது சகஜம் தான். இனிப்பை கண்டவுடன் நாக்கில் எச்சில் ஊறுவது போல இதெல்லாமே அனிச்சை செயலாகி விடுகிறது.

இன்னும் சில விசயத்தை இதில் சேர்த்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது :).

சுகந்தப்ரீதன்
02-11-2009, 10:57 AM
எந்த ஒரு உயிரினத்திற்க்கும் வளர்ச்சி,உச்சம்,தளர்ச்சி என்பது இயற்கையானது..!! வளர்ச்சியின் வழியேதான் தளர்ச்சியும் நடக்கிறது என்பதை உணராத அல்லது வளராத குழந்தைகள் உரைப்பதை முகமலர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் அப்பெரியவரின் முதிர்ச்சி தெரிகிறது..!!

வளர்ச்சி காலத்தில் அந்த வயோதிகரும் அவருடைய தாத்தவை பற்றி இப்படித்தானே சொல்லியிருப்பார்... அதான் காலசுழற்சில் தன் பேரக்குழந்தைகளை நிலையை நினைத்து களிக்கிறார் போலிருக்கு...!!

எளிமையான யதார்த்தமான கவிதை.. வாழ்த்துக்கள் கீதம்..!!

கீதம்
02-11-2009, 09:14 PM
பேரப்பிள்ளை அனுபவம் இன்னும் இல்லை.

மற்றபடி அருமையான கவிதை வரிகள். நீங்கள் சொன்ன மற்றவிஷயங்கள் அனைத்திலும் என் மனது ஒத்துப்போகிறது.

நல்ல கவிதை. இன்னும் கொடுங்கள்.

நன்றி, ஆரென் அவர்களே. எத்தனை வயது ஆனாலும் நமக்குள் இருக்கும் குழந்தைத்தனம் சில தருணங்களில் நம்மையுமறியாமல் வெளிப்பட்டுவிடுகிறது.

கீதம்
02-11-2009, 09:18 PM
பெரியவர்கள் குழந்தையாகி போவதை பெரும்பாலும் யாரும் அறிவதில்லை ... அவர்களின் ஏக்கங்களும் நடவடிக்கைகளும் குழந்தையைப்போலவே இருக்கும் அதை கண்டிப்பாய் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்...

நல்லதொரு கவிதை கீதம் வாழ்த்துக்கள்...

ஆம், ரமேஷ் அவர்களே. வயது முதிர முதிர அவர்களும் மனதளவில் குழந்தைகளாகிப் போவதை நாம் உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ளவேண்டும். வாழ்த்துக்கு நன்றி.

கீதம்
02-11-2009, 09:21 PM
கேரளாவில் ஒரு பழமொழி உண்டாம், ஆனையும் கடலையும் எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காது என்று.

அது போல பல விசயங்கள் சிறு வயது பிரயாயத்துடன் இனைந்திருப்பதால், நம்மை அறியாமல் வெறுப்போ விருப்போ ஏற்படுவது சகஜம் தான். இனிப்பை கண்டவுடன் நாக்கில் எச்சில் ஊறுவது போல இதெல்லாமே அனிச்சை செயலாகி விடுகிறது.

இன்னும் சில விசயத்தை இதில் சேர்த்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது :).

கரு தோன்றியவுடன் எழுதிப் பதிவிட்டுவிட்டேன். யோசித்திருந்தால் நீங்கள் கூறியுள்ளதுபோல் இன்னும் எழுதியிருக்கலாம். விமர்சனத்திற்கு நன்றி பிரவீண் அவர்களே.

கீதம்
02-11-2009, 09:22 PM
எந்த ஒரு உயிரினத்திற்க்கும் வளர்ச்சி,உச்சம்,தளர்ச்சி என்பது இயற்கையானது..!! வளர்ச்சியின் வழியேதான் தளர்ச்சியும் நடக்கிறது என்பதை உணராத அல்லது வளராத குழந்தைகள் உரைப்பதை முகமலர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் இடத்தில் அப்பெரியவரின் முதிர்ச்சி தெரிகிறது..!!

வளர்ச்சி காலத்தில் அந்த வயோதிகரும் அவருடைய தாத்தவை பற்றி இப்படித்தானே சொல்லியிருப்பார்... அதான் காலசுழற்சில் தன் பேரக்குழந்தைகளை நிலையை நினைத்து களிக்கிறார் போலிருக்கு...!!

எளிமையான யதார்த்தமான கவிதை.. வாழ்த்துக்கள் கீதம்..!!

வாழ்த்துகளுக்கு நன்றி சுகந்தப்ரீதன் அவர்களே.

gans5001
05-11-2009, 05:39 AM
ஐம்பதிலும் ஆசை வருமல்லவா..

மிக இயல்பான நடை..
எளிமையான வரிகள்..
ஆனால் ஆழமான கருத்து..
மனதைத் தொட்டன வரிகள்..
தொடரட்டும் உங்கள் மன்றத்தொண்டு

கீதம்
09-11-2009, 02:57 AM
ஐம்பதிலும் ஆசை வருமல்லவா..

மிக இயல்பான நடை..
எளிமையான வரிகள்..
ஆனால் ஆழமான கருத்து..
மனதைத் தொட்டன வரிகள்..
தொடரட்டும் உங்கள் மன்றத்தொண்டு

மிக்க நன்றி gans5001 அவர்களே.

சரண்யா
09-11-2009, 03:19 AM
தாத்தாவானாலும்.....ஆர்வத்துக்கு எல்லையில்லை..
நல்ல கவி..பாராட்டுகள்...அன்பிலே..பேரனிடம் இங்கிதம் தேவையில்லை தானே...

கீதம்
09-11-2009, 03:24 AM
தாத்தாவானாலும்.....ஆர்வத்துக்கு எல்லையில்லை..
நல்ல கவி..பாராட்டுகள்...அன்பிலே..பேரனிடம் இங்கிதம் தேவையில்லை தானே...

பாராட்டுக்கு நன்றி சரண்யா அவர்களே.

குணமதி
09-11-2009, 04:19 AM
அந்த 'இங்கிதம்' தெரியாமையால் எந்தக் கெடுதலும் விளையாதவரை -
அதில் தவறில்லை.

ஏனெனில், அது மாந்த இயற்கை.

வேறுபட்ட சிந்தனையில் அழகாக எழுதித் தந்ததற்கு-
மிக்க நன்றி.

அக்னி
09-11-2009, 06:26 AM
பால வயதில் கவர்ந்தவை,
வாழ்வின் இலக்கை நோக்கிய
கால ஓட்டத்தில்,
வலுக்கட்டாயாமாகத் தவிர்க்கப்படுகின்றன.

உறங்குநிலைக்குப் போன அந்த உணர்வுகள்,
இலக்கை எட்டியபின்,
மீண்டும் எழுந்துவிடுகின்றன.

கடந்து போன வாழ்வில்
திருப்தி இருந்தாலே,
பால வயது மனது
திரும்பி வந்து ரசிக்கும்...

அமைதிக்குப் பின்னரும் (பிறப்பு)
அமைதிக்கு முன்னரும் (இறப்பு)
வாழ்க்கையில் வரும் ஆனந்தம்...

பாராட்டுக்கள் பல கீதம் அவர்களுக்கு...

வானதிதேவி
09-11-2009, 09:51 AM
அழகான நினைவலைகள் ஆழ்கடலில்(ஆழ்மனதில்) அடித்து செல்லாத ஓடங்கள்.நானும் சில நேரங்களில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் போகும் போது கை ஆட்டி கணவர் கண்டவுடன் அசடு வழிந்த தருணங்கள் உண்டு.

கீதம்
10-11-2009, 06:37 AM
நாம் நாமாகவே இருக்க முயலும் சமயங்களில் இப்படிதான் சிலநேரம் அசடு வழியவேண்டியுள்ளது. பின்னூட்டத்திற்கு நன்றி வானதிதேவி அவர்களே.