PDA

View Full Version : மரபு: பா-இனம்குணமதி
30-10-2009, 06:46 PM
அடிப்படைப் பாவிலக்கணம் படிக்க.....

*http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8743

கலிமண்டிலம் என்னும் கலிவிருத்தத்தில் 7 வகைகள் வரை உள்ளன. அவற்றுள் முதல் வகைக் கலிமண்டிலம் குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம் என்ற வாய்பாட்டில் அமையும் நான்கடிப் பாடலாகும். நான்கடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

சில பாடல்களில் இரண்டாம் மூன்றாம் கூவிளச்சீர் வரும் இடங்களில் வேறுவகைச் சீர்களும் வருவதுண்டு. அப்போது, இரண்டாம் மூன்றாம் தளைகள் மாமுன் நிரை விளம் முன் நேர் என வெண்டளையாக வரும்.

நேரசையில் தொடங்கும் பாடலில் ஒற்று நீங்கலாக 11 எழுத்தும், நிரையில் தொடங்கும் பாடலில் ஒற்று நீங்கலாக 12 எழுத்தும் இருக்கும்.
பாட்டு எழுதும்போது எழுத்து எண்ணிக்கை பற்றிக் கவலைப்பட வேண்டிய தில்லை. மேற்கண்ட இலக்கணப்படி எழுதினால் எழுத்தெண்ணிக்கை தானாகவே சரியாக அமையும்.

பெரியபுராணம், சம்பந்தர் தேவாரம், கம்பராமாயணம் முதலிய நூல்களில் இவ்வகைக் கலிமண்டிலப் பாக்கள் இடம் பெற்றுள்ளன.

கதிரவனைப் பற்றிக் குணமதி எழுதிய நிரையசையில் தொடங்கும் கலிமண்டிலப் பாடலைக் கீழே காண்க :

உலகில் நல்லொளி வீசிடும் நாள்தொறும்
அலகில் நன்மைகள் அவ்வொளி ஆக்கிடும்
இலங்கும் ஆற்றலுக் கேயிது மூலமாம்
விலக்கில் செங்கதிர் விம்மிதம் ஞாலமே!

பா.ராஜேஷ்
30-10-2009, 07:03 PM
புரிந்தது போல் தோன்றினாலும் புரியாதது போலும் இருக்கிறது... தமிழ் இலக்கணம் பள்ளி நாட்களில் முடித்ததோடு சரி... அதனால்தான் ;)

நன்றி குணமதி!!

குணமதி
03-11-2009, 11:12 AM
புரிந்தது போல் தோன்றினாலும் புரியாதது போலும் இருக்கிறது... தமிழ் இலக்கணம் பள்ளி நாட்களில் முடித்ததோடு சரி... அதனால்தான் ;)

நன்றி குணமதி!!

நன்றி நண்பரே!

நீங்கள் சொல்வது சரி.

கொஞ்சம் யாப்பு அடிப்படை தெரிந்தால் போதும். மரபு பாடல் எழுதுவது என்னைப் பொறுத்தவரை எளிதென்றே சொல்வேன்.

மீண்டும் நன்றி.

குணமதி
03-11-2009, 11:24 AM
இலங்கை அரசுக்கு இந்திய அரசு துணைபோவது பற்றி ஒரு
இயற்றரவு கொச்சகக் கலிப்பா


இலங்கொளிநீர் உலகமிதில் இனக்கொலைக்கே பெயர்போன

இலங்கையர்செய் கொடுங்கொடுமை எதற்குமிவர் துணையுண்டே!

மலங்குமன நாடெல்லாம் மனம்நொந்தே கேட்டிடினும்

கலங்கார்இந் தியாகாக்கும் காரணத்தால் அறிகின்றோம்!

aren
03-11-2009, 11:50 AM
எனக்கு இந்தக் கவிதை சரியாக விளங்கவில்லை.

யாராவது புரியும்படி விளக்கினால் நன்றாக இருக்கும்

ஆதி
03-11-2009, 12:04 PM
இலங்கொளிநீர் உலகமிதில் இனக்கொலைக்கே பெயர்போன

இலங்கையர்செய் கொடுங்கொடுமை எதற்குமிவர் துணையுண்டே!

மலங்குமன நாடெல்லாம் மனம்நொந்தே கேட்டிடினும்

கலங்கார்இந் தியாகாக்கும் காரணத்தால் அறிகின்றோம்!

----------------------
**
இலங்கொளிநீர் - ஒளி மின்னும் நீர் (கடல்)

மலங்கு - கண்ணீர் ததும்புதல்

விளக்கம்: -

ஒளி மின்னும் நீரால் சூழப்பட்ட இந்த உலகில், இனப்படு கொலைக்கு பெயர் போன இலங்கை யானது செய்கிற கொடிய கொடுமை அனைத்துக்கும் இவர்களின் துனையுள்ளது. அந்த கொடுமையைப் பார்த்து மனங்கலங்கும் நாட்டெல்லாம் மனம் வருந்தி, கொடுஞ்செயல்களை நிறுத்த சொல்லி கூறினாலும். இலங்கையர் கலங்காரம், அதற்கு காரணத்தையும் நாம் அறிவோம், இலங்கைக்கு எந்த பிரச்சனையும் வராமல் இந்தியா காக்கும்..

பாராட்டுக்கள் குணமதி..

குணமதி
03-11-2009, 01:24 PM
எனக்கு இந்தக் கவிதை சரியாக விளங்கவில்லை.

யாராவது புரியும்படி விளக்கினால் நன்றாக இருக்கும்

புரிந்திருக்கும்.

நன்றி.

குணமதி
03-11-2009, 01:26 PM
நன்றி ஆதி.

அமரன்
03-11-2009, 06:18 PM
படிப்பு ஒரு இடத்தில். பயிற்சி இன்னொரு இடத்திலா.

இரண்டையும் ஒரே இடத்தில் வைத்திருப்போம்.

-பொறுப்பாளர்

குணமதி
04-11-2009, 04:45 AM
படிப்பு ஒரு இடத்தில். பயிற்சி இன்னொரு இடத்திலா.

இரண்டையும் ஒரே இடத்தில் வைத்திருப்போம்.

-பொறுப்பாளர்

நன்றி.

குணமதி
05-11-2009, 05:02 AM
வஞ்சி மண்டிலம் -1

( மா - மா - தேமாங்காய் )


என்னே இழிவு!


முன்னே, நீங்கள் யாரென்றார்;

சொன்னேன் பெயரை; உம்பேரின்

பின்னே வரைபே ரென்னென்றார்!

என்னே இழிவே! தூ!சாதி!

ஆதி
05-11-2009, 11:07 AM
மூன்று சீருற்றிருக்கும்..
முதலிரண்டு ஈரசையும்
மூன்றாம் சீர் மூவசையும்
கொண்டிருக்கும்..

முதலிரண்டு சீரின் ஈற்றசை மா(நேர்) என்று முடியும்
மூன்றாம் சீர் தேமாங்காய்(நேர்நேர்நேர்) பயின்று வரும்

xநேர் xநேர் நேர்நேர்நேர்

-------------

பண்ணின் இலக்க ணம்கற்றோம்
பன்னும் முறையும் கற்றோமே
இன்னும் சொல்லி தாருங்கள்!
நன்றி உமக்கும் பாட்டுக்கும்..

குணமதி
05-11-2009, 12:22 PM
நன்றி, ஆதி.

குணமதி
12-11-2009, 05:10 PM
வஞ்சித்துறை - 1

(தேமாங்காய் + தேமா)


இல்லாரின் அல்லல்

நல்லாரின் சீற்றம்

பல்லோரின் ஏழ்ச்சி

அல்லாரை வீழ்த்தும்!

குணமதி
03-02-2010, 06:05 AM
பொய்யின் வலிமை!


மழைபெய்தால் காளான் மறுநாள் முளைக்கும்

விழையும் பயிர்விளைய வேண்டின் - உழைப்புடனே

வல்லார்க்கும் நாள்பலவாம்; உண்மையிதே! பொய்மையோ

வெல்லும் உலகை விரைந்து.

குணமதி
14-09-2010, 04:46 AM
குறள் வெண்செந்துறை

நாம் தொடக்கப்பள்ளியில் படித்த ஆத்திசூடி கொன்றை வேந்தன் நினைவிருக்கிறதா?

ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்திஏத்தித் தொழுவோம் யாமே!

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே!

மேற்கண்டவை குறள் வெண்செந்துறைப் பாக்கள் ஆகும்.


குணமதியின் குறள் வெண்செந்துறைப் பாக்கள் இரண்டு:


என்றும் நல்லவை எண்ணி நடந்தால்
நன்றே நடக்கும் நாமும் உயர்வோம்!

இனத்திற் கிழைத்தாய் இரண்டகம் ஈழச்
சினத்தின் ஆற்றல் செயலில் விளங்கும்!