PDA

View Full Version : கண்ணாடிச் சட்டத்துக்குள் ஒரு கவிதாயினிகீதம்
23-10-2009, 04:32 AM
காய்கறி நறுக்கும் வேகத்தோடு
போட்டி போட்டுக்கொண்டு
கவிதைக்கான கருவொன்று,
கச்சிதமாய் உருவானது
அவளது கவனத்தில்!

சமையலை முடித்துவிட்டு
சாவகாசமாய் எழுத எண்ணி,
அவரவர்க்குப் பிடித்தவை, பிடிக்காதவை,
மாமியாருக்கு ஒவ்வாதவை அறிந்து
பார்த்துப் பார்த்து சமைத்து,
சமைத்தப் பாத்திரம் துலக்கி,
கணவர் பிள்ளைகளை அனுப்பி,
அத்தனையும் முடித்து,
அடுப்பையும் அணைத்து,
அவசரமாய் தாள் தேடியபோது,
நினைவுக்கு வந்துபோயின,
நீண்டநேரமாய் சோப்புநீரில்
நீந்திக்கொண்டிருக்கும்
நாளைக்கான சீருடைகள்!

வீணாய்ப்போகும் வெய்யிலை நொந்து,
விரைவாய்த் துவைத்துலர்த்தி,
வீட்டைப் பெருக்கி, சுத்தம்செய்து,
விட்டதைத் தொடர முனைந்தபோது,
மதிய உணவுக்கான மணி அடித்தது!

பத்தியசாப்பாட்டை மற்றவளுக்குப் பரிமாறி,
தானுமிரண்டு கவளம் அள்ளித்திணித்து,
மறுபடி பேனா கையிலெடுக்க,
மழை வருமோவென மாமியார் முனக,
மாடிப்படிகளில் மந்திபோல் தாவியோடி,
காய்ந்த துணிகளைக் களைந்துவந்து,
கலைந்த துணிகளை மடித்துமுடிப்பதற்குள்
'அம்மா' என விளிக்கின்றனர்,
பிள்ளைகள் பள்ளிவிட்டு வந்து!

மீண்டும் அடுக்களைக்கு உயிரூட்டி,
மாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்து,
அங்கிங்கு ஆடித்திரிந்த பிள்ளைகளை
அடக்கி ஓரிடம் அமரவைத்து,
படிப்பித்து, வீட்டுப்பாடம் செய்வித்து,
இன்றைக்கு இது போதுமென்று எழுப்பிய வேளை,
'அப்பாடா' என்றபடியே
களைப்புடன் வந்தமர்கிறார், கணவர்.

சடுதியில் சாப்பாட்டு மேசை நிரப்பி,
கொட்டாவி விட்டக் குழந்தைகளைத் தட்டியெழுப்பி,
உணவூட்டி, உறங்கச்செய்து,
பாத்திரம், அடுப்படி கழுவி,
'மறந்துவிட்டாளோ மருமகள்?' என்றே
மருளும் மாமியாருக்குத்
தக்க மாத்திரைகளைத் தவறாமல் தந்துதவி,
தொய்ந்து விழும் இமைகளை
சிரமத்துடன் தூக்கி நிறுத்தி,
அவர் சொல்லும் அலுவலகக் கதைகளுக்கு,
ஆர்வத்துடன் 'உம்' கொட்டி,
அயர்வு மேலிட உறங்கமுனைகையில்,
காத்திருந்த கனவுகளின் அழுத்தம் தாளாமல்,
சத்தமின்றிக் கலைந்து போகிறது,
அவள் கவிதைக்கரு,
உயிர்ப்பெறாமலும், அவளறியாமலும்!

தலைமாட்டுக் கடிகார அழைப்புக்கு,
காலையில் கண் விழித்த அவளைப்பார்த்து,
கைகொட்டிச்சிரிக்கிறது,
கல்லூரியில் பெற்ற 'கவிதாயினி' பட்டம்,
கண்ணாடிச் சட்டத்துக்குள் சிறைப்பட்டபடி!

வியாசன்
23-10-2009, 05:35 AM
கீதம் உங்கள் கவிதை ஒரு குடும்ப பெண்ணின் சுமையை கண்முன்னே காட்டியது. அவளுடைய கரு கற்பனையுடன் கலைந்துபோய்விடும். அயராத உழைப்பு ஆனால் மற்றவர்களால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மன்றத்து பெண்மணிகள் நிச்சயமாக பாராட்டுவார்கள். ஏனென்றால் எத்தனை பெண்மணிகளின் பட்டங்கள் சட்டங்களில் சிறைப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் கவி வடித்தலை

கா.ரமேஷ்
23-10-2009, 06:06 AM
ஒரு குடும்ப பெண்ணின் இயலாமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் கீதம்.இவற்றையெல்லாம் மீறித்தான் சாதிக்கவேண்டியுள்ளது,ஆண்களுக்கும் இதுபோன்ற இடர்பாடுகள் உண்டு.

நன்றாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்...

கலையரசி
23-10-2009, 02:36 PM
அருமையான கவிதை. காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை உழைக்கும் குடும்பப் பெண்களுக்கு என்றுமே ஓய்வுமில்லை. சம்பளமுமில்லை.

ஜனகன்
23-10-2009, 04:02 PM
கவிதை வரிகள் நன்று, வாழ்த்துக்கள்

கீதம்
23-10-2009, 09:36 PM
கீதம் உங்கள் கவிதை ஒரு குடும்ப பெண்ணின் சுமையை கண்முன்னே காட்டியது. அவளுடைய கரு கற்பனையுடன் கலைந்துபோய்விடும். அயராத உழைப்பு ஆனால் மற்றவர்களால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மன்றத்து பெண்மணிகள் நிச்சயமாக பாராட்டுவார்கள். ஏனென்றால் எத்தனை பெண்மணிகளின் பட்டங்கள் சட்டங்களில் சிறைப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் கவி வடித்தலை

பாராட்டுக்கு மிக்க நன்றி வியாசன் அவர்களே. கவிதாயினி பட்டம் போனாலும் பாந்தமான மருமகள் என்ற பட்டம் மாமியாரிடமிருந்து கிடைத்துவிடுகிறதே, அதைக்காட்டிலும் இது பெரிதென்று எண்ணி தன்னைத்தானே சந்தோஷப்படுத்திக்கொள்ளும் மருமகளின் சார்பாக எழுதினேன்.

கீதம்
23-10-2009, 09:40 PM
ஒரு குடும்ப பெண்ணின் இயலாமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் கீதம்.இவற்றையெல்லாம் மீறித்தான் சாதிக்கவேண்டியுள்ளது,ஆண்களுக்கும் இதுபோன்ற இடர்பாடுகள் உண்டு.

நன்றாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்...

உண்மைதான் ; காலத்தின் வாயில் சிக்கி பலருடைய (அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி) திறமைகள் நசுக்கப்படுகின்றன. ஆயினும் திருமணம் என்ற பந்தம் பெண்களின் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதும் உண்மைதானே.
வாழ்த்துக்கு நன்றி கா. ரமேஷ் அவர்களே.

கீதம்
23-10-2009, 09:46 PM
அருமையான கவிதை. காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை உழைக்கும் குடும்பப் பெண்களுக்கு என்றுமே ஓய்வுமில்லை. சம்பளமுமில்லை.

பாராட்டுக்கு நன்றி கலையரசி அவர்களே. தாங்கள் சொல்வது போல், குடும்பத்தைத் திறம்பட நிர்வகித்தாலும், அவர்களுக்கென்று எந்த சான்றிதழும் வழங்கப்படுவதில்லை; சம்பளமும் தரப்படுவதில்லை.

கீதம்
23-10-2009, 09:47 PM
கவிதை வரிகள் நன்று, வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு நன்றி ஜனகன் அவர்களே.

பா.ராஜேஷ்
24-10-2009, 11:57 AM
பெண்கள் மட்டுமே இல்லத்தை திறமையாக நிர்வகிக்க முடியும். அவர்களுக்கும் எண்ணங்கள் உண்டு, அவை நிறைவேறாமல் போவதும் உண்டு. கட்டுப்பாடு பெண்களுக்கு மட்டும் ஏன்?

கவிதை மிக நன்று கீதம்!!

குணமதி
24-10-2009, 01:21 PM
பாவேந்தர் பாரதிதாசனின் ' குடும்ப விளக்கு' நினைவுக்கு வருகிறது.

நன்றி.

கீதம்
04-11-2009, 08:43 PM
பெண்கள் மட்டுமே இல்லத்தை திறமையாக நிர்வகிக்க முடியும். அவர்களுக்கும் எண்ணங்கள் உண்டு, அவை நிறைவேறாமல் போவதும் உண்டு. கட்டுப்பாடு பெண்களுக்கு மட்டும் ஏன்?

கவிதை மிக நன்று கீதம்!!

நன்றி பா.ராஜேஷ் அவர்களே.

கீதம்
04-11-2009, 08:44 PM
பாவேந்தர் பாரதிதாசனின் ' குடும்ப விளக்கு' நினைவுக்கு வருகிறது.

நன்றி.

நன்றி குணமதி அவர்களே.

gans5001
05-11-2009, 04:47 AM
எனக்கு நீண்டநாளாய் ஒரு வருத்தமுண்டு.. ஒருபுறம் பெண்விடுதலை பற்றி பேசுகிறோம். மறுபுறம் பெண்களுக்கான ஏடுகளில் கூட அதிகம் ஆக்ரமிப்பவை சமையல் குறிப்புகள்.. ஏனிந்த முரண்? உங்கள் கவிதாயினியும் என் எண்ணத்தை பிரதிபலிப்பதால் மெல்ல மனம் கனத்து விட்டது.

இனியாவது குடும்ப விளக்காய் இருக்க வேண்டியது பெண் மட்டுமே என்ற விதி மாறி ஆணும் சமமாய் ஒளி கொடுக்கட்டுமே..

ஆங்காங்கே சில மின்மினிகள் தெரிவது மட்டுமே இப்போதைய சின்ன திருப்தி!

கீதம்
09-11-2009, 03:02 AM

தங்களது ஆதங்கம் தீரும் நாள் விரைவில் வர நானும் விரும்புகிறேன். விமர்சனத்திற்கு நன்றி gans5001 அவர்களே.

இளசு
10-11-2009, 07:16 PM
வீணாய்ப் போகும் வெயில்
மழை வருமோ - மாடிப்படி மந்தி
மறந்தாளோ மருமகள் மாத்திரையை..
அலுவலகக் கதைக்கு '' ஆர்வமாய் '' உம்...வரிக்குவரி லயித்து வாசித்தேன்..
ஒரு சலனச்சித்திரம் ஓடி முடிந்தது மனத்திரையில்..

மனமார்ந்த பாராட்டுகள் கீதம்..

கண்ஸின் விமர்சனம் - சிறப்பு!

கீதம்
12-11-2009, 12:50 AM

இளசு அவர்களே, தங்களது இனிய ரசனைக்கும், பாராட்டுக்கும் என் இதயங்கனிந்த நன்றி. அன்புடன் கீதம்.

அமரன்
27-11-2009, 09:41 PM
அருமை..

ஒரு காலத்தில் மௌனப்படம் வந்ததாம்.

அந்த அனுபவத்தை இன்று பெற்றேன்.

இளசு அண்ணா கவிதையில் லயித்தார்.

கவிதாயினி குடும்பக் கவிதையில் லயித்தாள்.

கண்ணாடிச் சட்டத்துக்குள் கவிதாயினி..

இருப்பதே தெரியாமல் இருக்கும் கண்ணாடிகள்
இப்போது புழக்கத்தில்..

முட்டினால்த்தான் தெரிகிறது
பட்டத்தைப் பாதுகாக்கும் அவ்வகைக் கண்ணாடி!

பாராட்டுகள் கீதம்.

கீதம்
02-12-2009, 03:38 AM

பாராட்டுக்கு நன்றி அமரன் அவர்களே.

சிவா.ஜி
02-12-2009, 04:05 AM
ஒரு படைப்பாளியின் இயலாமை, தோன்றிய கரு...உரு பெறாமலே கலையும் சோகம் சொல்லும் இந்தக் கவிதையில், கவிதாயினி என்ற பட்டத்தைவிட, புகுந்தவீடு மெச்சும் மருமகள் என்ற பட்டத்தையே விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு அனுசரித்துப் போகும் பெண்ணின் ஆதங்கம் தெரிகிறது.

பெண்களும் கண்ணாடி சட்டத்தைத் தாண்டி வந்து கொண்டுதானிருக்கிறார்கள்....ஆனால் இங்கொன்றும் அங்கொன்றுமாய். விரைவில் எங்கும் இதே நிலை நிலவும் காலம் வரவேண்டும்.

அழகிய கவிதை. வாழ்த்துகள் கீதம்.

கீதம்
05-12-2009, 11:01 AM

நன்றி சிவா.ஜி அவர்களே.

இன்பக்கவி
07-12-2009, 05:26 PM
நன்றாக இருக்கிறது...
இப்படி தான் பலரின் வாழ்கையும் திறமையும் காணமல் போய் விடுகிறது...
என் நிலை எதுவரை என்று தெரிய வில்லை:traurig001::traurig001:

Ravee
07-12-2009, 06:57 PM
நல்ல கவிதை ஆனால் கற்பனை இல்லை ...வாழ்வில் கண்டதுவே வார்த்தைகளில் வரும் இது உங்கள் வார்த்தைகள் என்றால் வாழ்க்கை மிக நன்று. உயிரோட்டமான கவிதைகளை படைக்கும் நீங்கள் ஏன் ஒருபக்க கவிதைக்கு வருந்துகிறிர்கள். கவிதைக்கரு களையலாம் ஆனால் வாழ்க்கை கருவின் ஆதாரம் நீங்கள். உங்களைப்போன்ற தாய்க்குலத்துக்கு தலை வணங்குகிறோம்.

கீதம்
09-12-2009, 10:40 AM
நன்றாக இருக்கிறது...
இப்படி தான் பலரின் வாழ்கையும் திறமையும் காணமல் போய் விடுகிறது...
என் நிலை எதுவரை என்று தெரிய வில்லை:traurig001::traurig001:

நன்றி கவிதா123 அவர்களே!
உங்கள் பின்னூட்டம் படித்து என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஓராயிரம் பிரச்சனைகள். தடைக்கற்களைப் படிக்கற்களாக்கும் மனோதிடம் நம்மில்தான் உள்ளது. முயற்சி செய்துதான் பார்ப்போமே.

கீதம்
09-12-2009, 10:43 AM
நல்ல கவிதை ஆனால் கற்பனை இல்லை ...வாழ்வில் கண்டதுவே வார்த்தைகளில் வரும் இது உங்கள் வார்த்தைகள் என்றால் வாழ்க்கை மிக நன்று. உயிரோட்டமான கவிதைகளை படைக்கும் நீங்கள் ஏன் ஒருபக்க கவிதைக்கு வருந்துகிறிர்கள். கவிதைக்கரு களையலாம் ஆனால் வாழ்க்கை கருவின் ஆதாரம் நீங்கள். உங்களைப்போன்ற தாய்க்குலத்துக்கு தலை வணங்குகிறோம்.

உங்கள் மேலான விமர்சனத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி ரவி அவர்களே.

அக்னி
14-12-2009, 06:25 AM
அடுக்களை நெருப்பிற்
கருகும் கருக்கள்...

கருகினாலும் அதுவே கருவாக
உருவான ஒரு கவிதை...

பாராட்டுக்கள்...

ஆனால்,

இயந்திரம் இல்லாத காலத்தில்
இயந்திரத் தனமாய்ப் பெண்கள்...

இன்னுமா... இன்றுமா...

தந்திரமாய் இல்லாத பெண்களுக்குத்தான்,
சுதந்திரம் இன்னும் கிட்டவில்லை என்பேன்...

கீதம்
15-12-2009, 04:13 AM
தவமிருந்து கேட்கின்றனர் வரம்;
தவறாமல் கிடைக்கிறது சாபம்!

எந்திர மனம் கொண்டோரிடம்
எடுபடுமோ அவர் வாதம்?

சுதந்திரம் தானாய் வந்தால்
அதுவன்றோ சுந்தரம்?

தந்திரமாய்ப் பெற்றால்
ஆகுமோ அது நிரந்தரம்?

காலம் கனியுமென்று
காத்திருக்கின்றன பல நெஞ்சம்!

இலவு காத்த கிளியாகாமல்
இருக்கவேண்டுமென்பதே என் விருப்பம்!

பாராட்டுக்கு நன்றி அக்னி அவர்களே.

செல்வா
18-12-2009, 05:14 PM
தந்திரமாய் பெற்றாலும் தானாகவே வந்தாலும்
சுதந்திரம் சுதந்திரம் தான்
சுதந்திரம் நிரந்தரமாகவும் வேண்டும்
தந்திரம்
இல்லையென்றால் நீ வெறும் எந்திரம் தான்... நிற்க.

அழகிய கவிதை ....
உங்கள் இயல்பான வரிகள்...
மெல்லிசை மெட்டு போல்
கதைபடித்தது....

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

கீதம்
18-12-2009, 10:00 PM

நன்றி செல்வா அவர்களே.

பாரதி
29-12-2009, 02:50 PM
வலிகளை வரிகளாக்கவும் திறமை வேண்டும்.
துலக்கிய பாத்திரம் போல் கவிதையின் கரு மின்னத்தான் செய்கிறது.
பாராட்டுவதைத் தவிர இக்கணத்தில் வேறெதுவும் கூறத்தோன்றவில்லை நண்பரே.

கீதம்
31-12-2009, 09:28 PM
வலிகளை வரிகளாக்கவும் திறமை வேண்டும்.
துலக்கிய பாத்திரம் போல் கவிதையின் கரு மின்னத்தான் செய்கிறது.
பாராட்டுவதைத் தவிர இக்கணத்தில் வேறெதுவும் கூறத்தோன்றவில்லை நண்பரே.

மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி பாரதி அவர்களே.

பென்ஸ்
01-01-2010, 09:00 PM
நல்ல கவிதை கீதம்...
மன்ற மணிகளின் விமர்சணங்கள் கவிதையை இன்னும் அழகாக ஆக்கியிருக்கிறது...
எளிய, நல்ல கவிதைகள் எப்போதும் இப்படிதான் அதிகமான பாதிப்புகளை கொடுக்கும்...
சொல்ல வந்ததை அழகாக சொல்லிய விதம் இன்னும் அழகு...
கவிதை நடையில் அழகு...
நடைமுறையில் இந்த ஆதங்கம் ஒவ்வாதோ என்ற எண்ணமும்...

பெண் மட்டும் அல்ல ஆணாயிருந்தாலும் காலத்திற்கு ஏற்றார் போல தன் பொறுப்புகளையும், எது முக்கியமானது என்பதையும் மாற்றி வருகிறோம்...

மனைவியின் தேவை,
குழந்தைகள்,
வீட்டு லோன்,
விடுமுறை செலவுகள் என்று எல்லாவற்றிக்கும் தேவையான
பணம் என்ற குதிரையை விரட்டி விரட்டியே ஆண்களும்,
அவர்களுக்கு துனையாய் சில பெண்களும்
அல்லது இனையாய் சில பெண்களும் இருக்கிறார்கள்....

இனையாய் இருப்பவர்கள் அலுவலங்களிலும்,
துனையாய் இருப்பவர்கள் வீட்டிலும் தன் பணிகளை செய்கிறார்கள்...

இந்த பணக்குதிரையை விரட்டும் வேகத்தில் நம் வாழ்க்கையின் பல நல்ல விடயங்களை கூட கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறொம்...
இதில் ஆண் பெண் என்று விதி விலக்கல்ல என்பது என் வாதம்....

எத்தனை கவிஞர்களும், ஓவியர்களும், வலைபதிவாளர்களும் கூட
தனக்கு முக்கியமானவைகள் மாறி போனதால் வெறும் குதிரை விரட்டிகளாக இருக்கிறார்களே...!!!!

ஒரு முறை என்னையும் , என்னை சுற்றியும் பார்க்க வைத்த ஒரு நல்ல கவிதை....

கீதம்
01-01-2010, 09:34 PM

ஆழ்ந்த விமர்சனத்திற்கு நன்றி பென்ஸ் அவர்களே. நீங்கள் சொல்வதுபோல் பாதிப்படையும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றபோதும் ஒரு பெண்ணாய் இருப்பதால் பெண்ணின் மனநிலையை பிரதிபலிப்பது எனக்கு எளிதாய் உள்ளது. மற்றபடி உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடே. மற்றுமொரு நன்றியுடன் கீதம்.