PDA

View Full Version : விண்கலன் செய்பவளே..........Nanban
09-10-2003, 01:27 PM
வானின் நீலமும்
கடலின் நீலமும்
சந்தித்துக் கொள்ளும்
கடலருகே
உன் விண்கலன் நிற்கிறது.

கடல் வானைத் தொடும்
தொலைவில்
ஒரு பெட்டைக் கோழி
அடைகாப்பது போல்,
புள்ளியாகத் தெரியும்
ராணுவக் கப்பல்கள்
பாதுகாத்து நிற்கிறது
உன்னுடைய
விண்கலத்தை.

சின்ன சின்ன அலைகள்
அந்த அநாதைத் தீவின்
கரைகளை
முட்டி முட்டித்
திரும்புகிறது.
அதற்கென்ன தெரியும் -
நெருப்பைக் கட்டிக் கொண்டு
எகிறிப் பாயும்
தீபாவளி ஒன்றிற்கு
கரையில்
ஒத்திகை நடக்கிறது என்று.

உன் விண்கலத்தைத்
தொட்டுப்பார்க்க
நீ தந்த அனுமதி
இன்னும் தித்திக்கிறது
என் கைகளில்.

வானுயர நிற்கும்
உன் விண்கலத்தை
அண்ணாந்து பார்த்த
என் கழுத்தில்
வலி இன்னமும்
மிச்சமிருக்கிறது.

உலகை விட்டு
உயரத்திற்கு செல்ல
உன் வியர்வைத் துளிகள்
உண்மையில் பாக்கியம்
செய்தவை தான்.

நீ செய்த விண்கலத்தைத்
தொட்டுப் பார்த்தே
என் கைகள் இனிக்கிறதே -
செய்த உன் கைகளின்
இனிப்பை மட்டும்
தூக்கியெறிய விடுவேனா?

இத்தனை பெரிய
விண்கலத்தை
பற்ற வைத்து
பறக்க விட்டு
வீடு திரும்பும் நீ -
இனி
என் வியர்வை படிந்த
ஆடைகளத் துவைக்காதே.
தீராக் காதலுடன்,
என் கனவுகளை
பிரபஞ்சத்தின்
எல்லைகளுக்கு
எடுத்துச் செல்லும்
விண்கலங்களை
மட்டும் நீ செய்.......

karavai paranee
09-10-2003, 01:51 PM
உண்மையிலேயே நண்பனின் கவிதைகள் மாறுபட்ட சிந்தனைகளுடன் படைக்கப்படுகின்றன
வாழ்த்துக்கள் நண்பா
விண்கலம் செய்பவளுடன் உன் மனமும் இணையட்டும்

Nanban
09-10-2003, 02:28 PM
விண்கலம் செய்பவளுடன் உன் மனமும் இணையட்டும்

அன்பு நண்பர் கரவை பரணீ அவர்களே,

இந்தக் கவிதை எனது மனைவிக்காக.

இந்திய விண்வெளித்துறையில், விஞ்ஞானியாக, கடந்த 15 வருடங்களாக வேலை செய்கிறார். இப்பொழுது, அவர்களுடைய PSLV என்ற விண்கலன் ShriHarikota தளத்தில் இருந்து ஏவப்படப் போகிறது. சீனியர் லெவல் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய, அனுமதியின் மூலம், குடும்ப உறுப்பினர்கள் அந்த விண்கலத்தைப் பார்வையிட அனுமதி கிட்டியது - எனக்கும், என் குழந்தைகளுக்கும். 50 மீட்டர் உயரத்துக்கு service towerல் கம்பீரமாக நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் அந்த விண்கலனைப் பார்த்த பொழுது உடம்பெல்லாம் ஒரு பரவச ஆனந்தம். பார்வையாளர்கள் வருவதற்கு விதிக்கப்பட்ட கெடுவின் கடைசி நாளன்று, பார்த்தோம். இந்திய ஜனாதிபதி அக்டோபர் 9ஆம் தேதி வருகை தருவதால், பத்து நாட்கள் முன்பாகவே அனுமதி நிறுத்தப்பட்டுவிட்டது. இல்லையென்றால், service tower பின்னுக்குத் தள்ளப்பட்டு, விண்கலன் மட்டும், launcherல், பொருத்தப்பட்டு தனியாக தயார் நிலையில் நிற்பதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருக்கும். ஜனாதிபதியின் வருகையினால், அது தடை பட்டு போனாலும், என் மனைவிக்கு ஜனாதிபதியை சந்திக்கும் சில விஞ்ஞானிகளுள் ஒருவராக இருப்பது அளவிட இயலாத மகிழ்ச்சி.

இத்தனையும் இருந்தும், இன்னமும் என் சட்டைகளைத் துவைக்கும் உரிமை மட்டும் வேறு யாருக்கும் கிடையாது. வேலைக்காரி, வாஷிங்மெஷின் என்று எல்லாம் இருந்தும், அந்த வேலை மட்டும் வேறு யாருக்கும் கிடையாது. முட்டாள்த் தனமாக behave பண்ணாதே என்று சொல்லியும் கேட்பதில்லை. Don't be so possessive என்று சொல்லியும் கேட்பதில்லை.

கூடுதல் தகவல், நாங்கள் இருவரும் 9 வருடங்களாகக் காதலித்து, இரு வீட்டாரின் அனுமதி பெற்று திருமணம் செய்து கொண்டவர்கள். இத்தனை நீண்ட காலம் காதலோடு இருக்க உதவியவர்கள், பெற்றோர்கள் தான் - திருமணம் செய்து கொள்ள இரு வீட்டிலும் அனுமதி பெறுவதற்கே நான்கு வருடங்கள் காத்திருந்தோம்........

இந்தக் கவிதை என் மனைவிக்கு ஒரு சிறு அர்ப்பணிப்பு. அவ்வளவே........

kaathalan
10-10-2003, 05:23 PM
இங்கே அழகான கவிதை செதுக்க பொருளாக அமைந்த உங்கள் துணைவிக்கு முதல் நன்றிகள். விண்கலம் செய்பவள் உங்கள் ஆடைகள் துவைப்பதில் நேரம் செலவிடலைப்பற்றிய உங்களின் சங்கடம் தெரிகிறது. அன்பைத்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்த முனைகிறார்கள், சில நேரங்களில் பிடிவாதமாகக்கூட. நல்ல கவிதை தந்தமைக்கு நன்றிகள். மேன்மேலும் உங்கள் துணை உயரவேண்டும், அதற்கு துணையாக நீங்களும்; இல்லறமும் சிறந்து விளங்க என்னுடைய வாழ்த்துக்கள் நண்பனே.

poo
10-10-2003, 06:32 PM
இனிய இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்..

விண்கலம் செய்பவளே என்ற கவிதையை முன்பே படித்தேன்.. வழக்கம்போல நண்பனின் பஞ்ச் இருக்கும்.. புரியாத நாமேன் மூக்கை நுழைக்க வேண்டுமென மௌனியாய் இருந்துவிட்டேன்..

இப்போது கரவை மூலமாக வெளிச்சமாகிவிட்டது...

இளசு
10-10-2003, 10:49 PM
புரியும் வரை கவி அழகு - கவிஞன் சொன்னது!
புரிந்தால் நண்பனின் கவிதை
கூடுதல் அழகு.._ எளிய சுவைஞன் சொல்வது!

உங்கள் படைப்பின் ஆதார சுருதியான அன்பும் மதிப்பும்
இவ்வுலகின் மிக முக்கிய அம்சங்கள்.
அழகாய்ச் சொன்னதற்கும் சேர்த்து கூடுதல் பாராட்டுகள்.

Nanban
11-10-2003, 05:41 AM
இல்லறம் சிறக்க வாழ்த்திய நண்பர்கள் - காதலன், பூ, இளசு அவர்களின் நல்ல மனதிற்கும், சில தகவலகளை வெளியே சொல்லுவதற்குத் தூண்டும் வகையில் அமைந்த பதிவைத் தந்த கரவை பரணீக்கும் மிக்க நன்றிகள்.

வாழ்த்துகளையே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால், அவை எல்லாம் நாளடைவில் உண்மையாக ஆகி விடும். ஆக வாழ்த்திய நெஞ்சங்களின் வாழ்வும் சிறக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நன்றி.......

madhuraikumaran
11-10-2003, 06:59 AM
இம்மன்றத்தின் மிகச்சிறந்த படைப்பாளிகளெல்லாம் காதல் வயப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். உங்கள் கவிதைகளின் வெற்றியின் ரகசியம் இப்போது புரிகிறது. வாழ்த்துக்கள் !

இந்தியாவைத் தலை நிமிரச் செய்யும் பணியில் இருக்கும் உங்கள் துணைக்கு எமது பணிவார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் !!!

puppy
11-10-2003, 07:08 AM
காதல் வயபட்டவர்கள் தானே சிறந்த படைப்பாளிகள் ஆகிறார்கள்.....
அதனால் தான்......

puppy
11-10-2003, 07:14 AM
விண்கலம் செய்வது நாட்டுக்காக
வியர்வை துணியை துவைப்பது வீட்டுக்காக
அது தேசபற்று
இது உள்ளத்தின் ஆசை....
காதலியாக,
மனைவியாக
தாயாக இருப்பதின்
சந்தோஷம்
வேற எதிலும் இல்லை

இளசு
11-10-2003, 07:37 AM
என் பலவீனமோ என்னவோ
பாஸீட்டீவ் அதிர்வுகளை ஏற்படுத்தும் படைப்புகளின் மேல்தான் அப்படி ஒரு பாசம்...
எத்தனை மங்கல ஸ்வரங்களை தூண்டி..ர்ர்ர்ர்ங்ங்ங் என படிப்பவரின் இதயத்தை
சுகமாய் மீட்டுகிறது.. நண்பனின் இப்படைப்பும் அதையொட்டிய நம் மன்ற நெஞ்சங்களின்
பதில்களும்...

கெட்டதை அலசி நீக்கினாலும் நன்றே
நல்லதைப் பேசி பெருக்கினாலும் நன்றே

இரண்டாவதை அதிகம் நாடும் என் மனசுக்கு மதுரைக்குமரன், பப்பி, நண்பனின்
ஏற்புரை பார்த்து, "நாம இப்படி சொல்லல்லியே" என்ற இனிய பொறாமை
எழுகிறது...

இன்ப அதிர்வு பாயசம் என்றால்
இனிய பொறாமை முந்திரி நெருடல்தான் போங்க....

நானே இனிக்கிறேன் மகிழ்ச்சியில்...

இக்பால்
11-10-2003, 07:45 AM
நண்பர் நண்பனே! வாழ்க்கையில் உயரச் செய்யும்

ஒரு ஊக்கத்தைக் கொடுக்கும் பாடம் கொண்டதாக

இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்க்கையில் மென்மேலும்

உயர்வு காண வாழ்த்துக்கள். -அன்புடன் இக்பால்.

இளசு
11-10-2003, 07:51 AM
விண்கலம் செய்வது நாட்டுக்காக
வியர்வை துணியை துவைப்பது வீட்டுக்காக
அது தேசபற்று
இது உள்ளத்தின் ஆசை....
காதலியாக,
மனைவியாக
தாயாக இருப்பதின்
சந்தோஷம்
வேற எதிலும் இல்லை

பெண்மை இன்றி மண்ணில்
இன்பம் ஏதடா?

பெண்மைக்கு - தாய்மைக்கு
என் வந்தனங்கள்...

puppy
11-10-2003, 07:59 AM
இதில் சந்தேகம் ஏதுவும் இல்லையே.....இளசு.....இன்பமே உந்தன் பேர்
பெண்மையோ.......அப்படின்னு கேட்டு இருக்கீங்க இல்லையா

Nanban
11-10-2003, 08:06 AM
வாழ்த்துகளும், இனிமையான உரையாடல்களும் மனதை நெகிழச் செய்கின்றன. ஒரு anonymous ஆகவே தளத்தில் உலாவிக் கொண்டிருந்த பொழுது, பூவின் திருமண அழைப்பிதழைக் கண்ட பொழுது, மன்றம் சீரான வழியில் முதிர்ச்சி அடைந்து வருகிறது என்பதை உறுதி செய்து கொண்டேன். அதனாலேயே மனம் திறந்து பேசுவதும் சாத்தியமாயிற்று....

puppy
11-10-2003, 08:11 AM
இருந்தாலும் எல்லா விஷய்ங்களையும் பொது இடத்தில் தெரிவிப்பது
நல்லது அல்ல......கொஞ்சம் உஷாரா இருக்கனும்......

madhuraikumaran
11-10-2003, 08:15 AM
மெத்தச் சரி !!!

இன்றைக்கு இணையத்தின் தகவல் பறிமாற்றச் சக்தியே, பல நாடுகளின் பாதுகாப்புக்குச் சவாலாய் !!! தனி மனிதர் எம்மாத்திரம் ?...

முன்னெச்சரிக்கையாயிருப்பது நல்லது.

Nanban
11-10-2003, 08:37 AM
ஆம். பப்பியும், முத்துக்குமரனும் கூறியவை மிகச் சரியே....

கவனமாக, ஆனால் அதே சமயம் மனம் திறந்தவர்களாக இருப்பது தான் நல்லது.......

அமரன்
23-11-2007, 02:36 PM
நான்கூட பல இடங்களில் அவதானித்து இருக்கின்றேன். அவ்வளவு உயரிய அந்தஸ்த்தில் இருந்தாலும் எமக்கு சில்லியாக தெரிகின்ற செயல்களை விட்டுக்கொடுப்பதில்லை. ஏனப்படி என்று கேட்டால் ஹாட் சில்லியாகுவார்கள். எம்மைத்தாழித்து விடுவார்கள். அந்த கொந்தளிப்பு பாசத்தின் வெளிப்பாடு என்பதை புரிந்து மெய்சிலிர்த்து இருக்கின்றது.

அந்த வகையில் இந்த துவைத்தல் அடங்குகின்றது. இதுவே சில இடங்களில் துவைத்துப்போடவும் ஆக்கிப்போடவும்தான் நானா என்று துவைத்தெடுப்பதையும் பார்த்திருக்கின்றேன்.. நண்பர் நண்பன் சொன்னது அன்பின்வெளிப்பாடு. நான் சொன்னது அதிகாரத்தின் வெளிப்பாடு. இரண்டுக்கும் நூலிழை வித்தியாசமோ? அதை சரிவர அறிந்தவன் வாழ்க்கை துவைத்து, இஸ்திரிபோட்டமாதிரி ஆகுமோ?