PDA

View Full Version : அந்த தீபாவளி எனக்கு வேணும்Ravee
15-10-2009, 11:02 PM
http://farm4.static.flickr.com/3280/2982578553_4092d0e236.jpg

[
அந்த தீபாவளி எனக்கு வேணும்

என் அப்பா கை பிடித்து
நாங்கள் திரிந்த அந்த தீபாவளி
எனக்கு வேணும்

ஒருமாதம் முன்பே
துணிக்கடைகள் பல ஏறி
இல்லாத கலர் நாங்கள் கேட்க
நல்ல இறுக்கமான துணி அவர் பார்ப்பார்
எடுத்துப்போட்ட கடைக்காரர்
எல்லாம் எங்களுக்கு வில்லனாய்
எங்களுக்கு பிடிக்க அவருக்கு பிடிக்காமல்
அவருக்கு பிடிக்க எங்களுக்குப்பிடிக்காமல்
இருவரும் சமாதானமாய் போக
ஒரு துணி எடுப்போம்.


தையல் கடைக்கு வருவோம்
சரியான அளவும் சைடு பாக்கேட்டும்
நாங்கள் கேட்க
வளரும் பையனுங்க நல்ல இறக்கி
தையுங்க என்று ஒரு கட்டளை
விளைவு இரண்டு வருடம் கழித்து வரும்
தீபாவளிக்கு இப்போது ஒரு சட்டை ரெடி ஆகும்
மறுநாள் பள்ளியிலே
எங்க வீட்ல துணி எடுத்துடோம்
" உங்க வீட்ல "
என்று கேட்டு ஒரு பெருமை அடித்த
அந்த தீபாவளி எனக்கு வேணும்

ஒரு வாரம் முன்பே
பரணில் ஏறி
மீதம் உள்ள வெடி கணக்கு பார்த்து
எழுதி தருவோம் புது சீட்டு
புஸ்வாணம் நான்கு டப்பா
சங்கு சக்கரம் நாலு டப்பா
கம்பி மத்தாப்பு பெரிசு சிறிசு
பொறி மத்தாப்பு பத்து டப்பா
லக்ஷ்மி குருவி யானை அணுகுண்டு
என வகைக்கு பத்து வெடிகள்
நூறு ஐநூறு என சரவெடிகள்
ராக்கெட் ரயில்வண்டி
பாம்பு எரோப்ப்ளைன்
என சீறிப்பாயும் வெடி வகைகள்
எழுத எழுத பக்கம் போதாமல்
அடுத்த பக்கம் வரை எழுதிக்கொண்டு போக

இறுதிவடிவமாக அம்மா சொன்ன
கலர் மத்தாப்பு சாட்டை பென்சில் வாணம் சேர்த்து
அப்பாவின் மனம் அறிந்து நான் சீட்டை தர
படித்துப்பார்ப்பார் மெதுவாக

ம்ம் " பரிட்சையில் இத்தனை பக்கம் எழுதி இருப்பியா "
கேட்கும் ஒரு கேள்வியில்
காணமல் போவோம் நானும் அண்ணனும்
கடைசியில் கடைக்குப்போவோம் ஒருநாள்
வாங்கி வருவோம் வெடிகள்
எங்கள் வீட்டு கிணத்தில்
எங்கேயோ இருக்கும் தண்ணி போல
கொண்டு போன துணிப்பையில்
ஒரு மூலையில் வெடிகள்

ஒவ்வொரு நாள் பள்ளியிலே இருந்து
திரும்பும் வேளையிலே ஒவ்வொரு பலகாரம்
என்று சுட்டு வைப்பார் என் அம்மா
அம்மா தந்தது போக தெரியாமல்
தின்ற அதிரசம் தான் எத்தனை ருசி

காத்து இருந்த அந்த நாளும் ஒருவழியாய்
கனிந்து வர பரபரப்பின் உச்சகட்டம்
தீபாவளிக்கு முந்திய நாள் இரவு
வண்ணவிளக்குகள் காஸ் லைட் என
சாலையின் இருபுறமும் கடைகள்
முச்சு முட்டும் கூட்டம்
பாதி விலையில் பொருட்கள்
தூரலான மழை
பத்தாயிரம் வெடி போட்ட கடைகளை
வாய் பிளந்து பார்க்க
இரவு முழுதும் அப்பா கைப்பிடித்து
சுற்றி வருவோம் மதுரையை

கடைசியாக பத்திரிக்கை கடை முற்றுகை
முயல் அணில் கோகுலம் ரத்தினபாலா
கலைமகள் கல்கி ஆனந்தவிகடன்
என தீபாவளி மலர்கள்
கேட்டதுக்கும் மேலாய் படிக்க புத்தகங்கள்
கை நிறைய கொண்டு வருவோம்

நடுஇரவு பன்னிரண்டு மணியடிக்க
யார் முதலில் வெடி வெடிக்க என்று போட்டி
ஒருவழியாய் அசந்து தூங்க
அடித்து எழுப்புவார் அப்பா
காலை நாலு மணிக்கு கங்கா ஸ்தானம்
உடல் முழுக்க எண்ணெய் தடவி
கோவில் பிள்ளையாருக்குப்
போட்டியாய் நாங்கள்

கண்ணில் சியக்காய் போக
ஒருவழியாய் குளித்து
பஞ்சு தலை முடியை நாங்கள்
தடவி தடவி பார்த்து திரிவோம்

தொலைகாட்சி தொந்தரவுகள் இல்லாமல்
மாமா சித்தப்பா அத்தைவீடு என
சொந்தங்கள் எல்லோரையும் பார்த்து
இனிப்புக்கள் கொடுத்து
புது சட்டை போட்டதுக்கு வணக்கம் சொல்லி
வரும்படிகள் பார்ப்போம்

கடா வெட்ட காத்திருந்த கவுண்டமணி போல
சாமி கும்பிட்ட மறு வினாடி
வெடிகளுடன் வாசலில் நாங்கள்
காலையிலே இருந்து வெடித்து
இரவு வரை அலுப்பதில்லை
யார் வீட்டு வாசலில்
அதிக குப்பை என்று பார்த்து
கால்களால் வெடித்த தாள்களை
தள்ளிச்சேர்த்த அந்த தீபாவளி
எனக்கு வேண்டும்

Mano.G.
16-10-2009, 01:05 AM
அருமை அருமை,
இந்த பதிப்பு எனது இளமை கால
நினைவுகளை அப்படியே திரும்ப மனகண்
முன் கொண்டுவந்து கண்களையும் கலங்க வைத்து விட்டது,
ஒரே வித்யாசம் நான் வசிப்பது வாழ்வது
மதுரை அல்ல மலேசியா,

வாழ்த்துக்கள் ரவி
உங்களுக்கும் எனது இனிய தீபாவளி
வாழ்த்துக்கள்

மனோ.ஜி

கீதம்
16-10-2009, 08:28 AM
தொலைக்காட்சி ஆக்கிரமிக்காத அந்தக்கால பண்டிகைகளின் கொண்டாட்ட அனுபவம் உண்மையிலே நமக்கு மீண்டும் வாரா கனாக்காலம். உணர்வுபூர்வ கவிதைக்கு வாழ்த்து ரவீ அவர்களே. அன்புடன் கீதம்.

பா.ராஜேஷ்
16-10-2009, 12:04 PM
இந்த கால தீபாவளியோ தொலைக்காட்சி பெட்டியிலேயே முடிந்து விடுகிறது. தீபாவளி வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை. எல்லோருக்கும் இந்த ஏக்கம் ஏற்படுவது உண்மை!!!

வியாசன்
16-10-2009, 04:14 PM
ரவி
புத்தாடை அணிந்து
பட்டாசு சுட்டு
பலகாரமும் உண்டு
உற்றார் உறவினர்
வீடுசென்று
விருந்துண்டு கொண்டாடிய
தீபாவளி இனி நமக்கில்லை.
ஒப்பாரியில்லாத
வீடில்லை எமக்கு
நாதியற்ற எமக்கு தீபாவளி
ஒருகேடா நரகாசுரர்கள்
இறப்பார்கள் அன்று
உங்களுடன் நாமும்
கொண்டாடுவோம்

சிவா.ஜி
16-10-2009, 05:55 PM
நம் எல்லோருடிஅய ஏக்கங்களையும் அழகாய் பட்டியலிட்டு, அதுபோல ஒரு தீபாவளி வேண்டுமென்று கேட்ட கவிதை பிரமாதம்.

அச்சு அசலாய் அப்படியே எனக்கும் இப்படித்தான் இருந்தது அந்தக் கால தீபாவளிவளிகள். இப்போது நாள் முழுவதும் தொலைக்காட்சிப் பெட்டி, வீட்டுக்கு வரும் விருந்தினருக்குக் கொடுக்க ஆனந்தபவன் இனிப்புகள், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பந்தா காண்பிக்க பத்தாயிரம்வாலா என சுவையற்று போய்விட்ட தீபாவளிகள்.

வாழ்த்துகள் ரவீ.

இதயம்
16-10-2009, 06:13 PM
கவிதை இலக்கணம் தாண்டி உரைநடையில் இருந்தாலும், இதயத்தின் உள் நுழைந்து இனிய நினைவுகளை மீட்டெடுக்கும் அழகான பதிவு. என்னை சில நிமிடங்கள் சின்னஞ்சிறு வயதிற்கு கொண்டு போய், மனதை சிறகடித்து பறக்க வைத்து விட்டது..!! ம்ஹும்..காலம் பலி கொடுத்த அழகிய தருணங்களில் இதுவும் ஒன்று..!!

நன்றி இரவி..!!

அமரன்
16-10-2009, 09:08 PM
இதெல்லாம் நமக்கில்லப்பா..

தீபாவளி என்றால் புத்தாடை.. ஆடடிச்சு சாப்பாடு.. மழைத்துமி நனையல்.. வாழ்த்து அட்டை அலம்பல்.. அதுவும் ஒரு வித சுகம்தான்.

அந்தக்காலத்துக் கொண்டாட்டா நாட்களை இந்தக்காலத்தில் நினைச்சுப் பார்ப்பது அலாதியானது.

அருள்
17-10-2009, 03:12 AM
தீபாவளி மட்டுமா? மற்றவை எல்லாம் ம் ம் ம்

அருமை அருமை கவிதை அருமை

Ravee
01-11-2010, 11:27 AM
சரியாக ஒருவருடம் ஆச்சி இந்த பதிவை பதிந்து ... இதை திரும்ப படிக்கும் போது இது கவிதை நடையா என்று எனக்கே குழப்பம் ... என் எழுத்து நடை மாறி இருக்கிறது என்பதை நானே காண்கிறேன். ஆனால் இந்த கவிதையில் (?) உள்ள உணர்வுகள் இன்றும் மாறவில்லை ...

என் அப்பா செய்த வேலையை நான் செய்து கொண்டு இருக்கிறேன் என் பெண்ணுக்கு ... :)

ஆதவா
01-11-2010, 02:18 PM
சின்னவயதில் எல்லாருமே ஒரேமாதிரியாகத்தான் தீபாவளி கொண்டாடுகிறார்கள்!!!! ஹஹாஅ...... நானும் அப்படித்தான் இருந்தேன்.
என் பழைய தீபாவளிகளை ஞாபகப்படுத்திய க(வி)தை

எங்கள் வீட்டில் தீபாவளிக்கு எப்படியாவது பலகாரம் சேர்ந்துவிடும்.. பெரும்பாலும் முறுக்கு சுடுவோம்.. இப்போது சுடவில்லையென்றாலும் பொங்கலுக்காவது முறுக்கு உண்டு! பட்டாசு எண்ணிப்பார்த்து வாங்கி வருவார் என் தந்தை.. அப்போது நூறு - முன்நூறு ரூபாய்க்குமேல் வாங்கினதில்லை! அதற்கு மேல் அவராலும் முடியாது, நாங்களும் கேட்க மாட்டோம். எனக்கு பட்டாசு வெடிக்க வேண்டுமென்றால் என் வீரத்தைப் பாராட்ட யாராவது வேண்டும்.. உடன் யாருமில்லாததால் பட்டாசு வெடிப்பது சலிப்பாகிவிட்டது. அதற்குப் பின் வரும் காலங்களில் நூறு ரூபாய் பட்டாசுகள் மூன்று தீபாவளி வரைக்கு வைத்திருந்து வெடித்தோம்!! இதெல்லாம் என் பதினைந்து வயது வரைக்கும்தான்... இப்போது பட்டாசு வாங்கும் எண்ணமேயில்லை!!

ஒருமுறை “வெங்காய வெடி” வாங்கித் தராததால் ரோட்டில் நின்று கதறி அழுது, பின் ஒரேயொரு வெங்காய வெடியை வாங்கி (இத்தனைக்கும் அது தீபாவளி நாள்) அதை சுவற்றில் அடித்து அடித்து ஃபோர்ஸ் பத்தாமல் வெடிக்காமல் போக... கையில் கிடந்த பெரிய கல்லைத் தூக்கி கால்களுக்கு இடையில் வெங்காய வெடியை வைத்து கல்லைப் போட்டு, வெடி வெடித்து கால்கள் முழுக்க ஊசி குத்தினது போல பொறிதட்டி, பல இடங்களில் கொப்பளம் ஆகி.............. இனிமேல் வெங்காய வெடியே வெடிக்கக் கூடாது என்று முடிவெடுத்த ஞாபக்ம்!!!

கவிதைக்கு வாழ்த்துக்கள்!!

Ravee
01-11-2010, 03:05 PM
என் பழைய தீபாவளிகளை ஞாபகப்படுத்திய க(வி)தை - குறும்பு ... அதான் நானே ஜகா வாங்கிட்டேனே ... அப்புறம் என்ன ? ...:lachen001:

பென்ஸ்
01-11-2010, 04:10 PM
ஆகா ரவி... தீபாவளிக்காக நாங்கள் ஏங்கிய நாட்க்கள்... அதை நினைக்கும் போதே வேறு எதோ ஒரு ஏக்கம்...

தீபாவளிக்கு சிலமாதங்களுக்கு முன்னமே எங்கள் திட்டம் தயாராகும்... நானும் சகோதரனும் சகோதரியும் ஒரு அறையில் இருந்தே படிப்போம், அந்த நேரமே எங்களுக்கு திட்டத்தை பற்றி தீவிரமாக பேசும் நேரம்... என்ன என்ன பட்டாசு வாங்குவது, அம்மாவிடம் என்ன பலகாரம் கேட்பது இது எல்லாம் அப்போதுதான் அலசபடும்.... எங்க வீட்டில் பட்டாசு வெடிக்க ஊரில் உள்ள அனேக பிள்லைகளும் வந்திடுவர்... எங்கள் பங்கில் இருந்து அவர்களுக்கும் கொடுக்கபடும்... எத்தனை இனிமையாக இருந்தது... அப்படி கொடுத்து சேர்ந்து வெடித்து சந்தோசமாக இருந்த மனம் இன்று இல்லை என்பது உண்மையே....

நன்றி ரவி... என் நினைவு கண்ணாடியை மீண்டும் ஒருமுறை அணிவித்தமைக்கு...

ஆன்டனி ஜானி
01-11-2010, 04:21 PM
தீபாவளி என்பது இந்துக்கள் மட்டும் இல்ல எல்லாரும் கொண்டாடும் ஒரு அற்புதமான ஒரு பண்டிகைதான் இந்த தீபாவளி பண்டிகையாகும்...இதில் புத்தாடை அணிந்து மங்கலகரமாக கொண்டாடும் ஒரு பண்டிகை அனைவரும் இதனை மகிள்சியாக கொண்டாட வாள்துகிறேன் நன்றி