PDA

View Full Version : வெட்கிப் புறம் நின்ற நிலை!



குணமதி
13-10-2009, 02:15 PM
அது கட்டிளங் களிறு. இளமை மிடுக்கும் வீரமும் நிறைந்த ஆண் யானை. சோழ மன்னனின் யானைப் படையில் இடம்பெற்று, போர்க்களத்துக்குப் போய்க் களமாடிவிட்டுத் திரும்புகிறது.

பகை மன்னரின் கொடிபறக்கும் கோட்டை மதில்களை அதன் கூரிய வலிமையான கொம்புகள் என்னும் தந்தங்களால் குத்தி, கோட்டைமதிற் சுவரின் கற்களைப் பெயர்த்து, மதில் வலிவிழந்து சரியச்செய்தது. அவ்வாறு குத்தியதால் அந்த யானையின் கொம்புகள் முனை முறிந்து காணப்பட்டன.

அந்த வீரம் மிக்க யானை பகை மன்னர்களின் மணிமுடியைப் போர்க்களத்தில் தன் காலால் இடறித் தேய்த்து தேய்த்து அதன் கால் நகங்கள் அழகிழந்து காணப்பட்டன.

களமாடி வெற்றி பெற்றபின் தன் காதலியைக்காண ஆவலுடன் தரும்பி வந்தது அக்களிறு.

காதலியின் வீட்டிற்கருகில் வந்ததும், தன் முனைமுறிந்த கொம்போடும் அழகிழந்த கால் நகங்களோடும் காதலியைப் பார்க்க நாணமுற்று வீட்டிற்கு வெளியிலேயே நின்றுவிட்டதாம், மலையைப் போன்ற தோள்களைக் கொண்ட சோழமன்னனுக்குச் சொந்தமான அம் மறக்களிறு!

முத்தொள்ளாயிரம் இக்காட்சியை ஒருபாடலில் விளக்குகிறது.

அந்தப்பாடல் இதுதான் :-

கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்

முடியிடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு

பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே

கல்லார்தோள் கிள்ளி களிறு.

பா.ராஜேஷ்
13-10-2009, 04:33 PM
பள்ளித் தமிழில் பயின்ற நாட்களை நினைவு கூறுகின்றேன். நன்றி குணமதி...

ஜனகன்
13-10-2009, 09:35 PM
மிருகத்துக்கும் காதல் உண்டு. உண்மைதான் குணமதி

பாரதி
14-10-2009, 01:34 AM
அழகிய பாடல் ; அருமையான விளக்கம். நன்றி நண்பரே.

aren
14-10-2009, 01:48 AM
அழகிய பாடல், அழகான விளக்கம், ஆனால் காதல் அழகிற்கும் அப்பாற்பட்டதானது என்பதை அந்த யானை மறந்துவிட்டதே

samuthraselvam
14-10-2009, 08:29 AM
சின்ன வயதில் தமிழ் ஆசிரியர் இதை சொல்லிக்கொடுத்த போது எப்படி இருந்ததோ அந்த மனநிலை இன்றும் மாறவில்லை.... நன்றி மற்றும் வாழ்த்துக்கள்...

குணமதி
18-10-2009, 05:08 AM
ஐவர்க்கும் நன்றி.

அமரன்
18-10-2009, 08:13 AM
அருமையான பாடல். எளிமையான விளக்கம்.. நன்று.

வியாசன்
18-10-2009, 09:11 AM
தமிழை ஐயம்தெளிவுற கற்காதது தவறு. ஆனால் மன்றத்தில் கற்றுக்கொள்ள முடிகின்றது.
நன்றி குணாமதி தொடரட்டும் உங்கள் பணி

குணமதி
19-10-2009, 11:27 AM
அருமையான பாடல். எளிமையான விளக்கம்.. நன்று.

நன்றி.

குணமதி
19-10-2009, 11:28 AM
தமிழை ஐயம்தெளிவுற கற்காதது தவறு. ஆனால் மன்றத்தில் கற்றுக்கொள்ள முடிகின்றது.
நன்றி குணாமதி தொடரட்டும் உங்கள் பணி


மிக்க நன்றி.