PDA

View Full Version : கணவன் அமைவதெல்லாம்.....!!



சிவா.ஜி
10-10-2009, 08:20 PM
“வீட்டுக்கு வாங்க உங்களுக்கு வெச்சிருக்கேன்....”

பொய்க் கோபத்துடன் சொன்ன மைதிலியை குறும்பாகப் பார்த்த விக்னேஷ்,

“சஸ்பென்ஸ் எல்லாம் வெக்காதடா செல்லம்....இப்பவே சொல்லேன்.....என்ன வெச்சிருக்கே?”

“ம்....சுண்டக்கா வத்தல். ஒண்ணுமே தெரியாத பாப்பா மாதிரி.......எப்படீப்பா இப்படி மூஞ்சிய வெச்சுக்கிறீங்க?

“நானா வெச்சுக்கறேன் அதெல்லாம் பொறந்ததுலருந்து இருக்கறது....”

சொல்லிவிட்டு கண்ணடித்தவனைப் பார்த்து செல்லமாய் சூடாகி.....

“ஆமா....அப்ப நாங்கல்லாம் சரவணா ஸ்டோர்ஸ்ல வாங்கி மாட்டிக்கறமாக்கும். அதெப்படி சிக்குன்னு ஒரு பொண்ணு நடந்து போனா தலை தானா திரும்புது?”

“அதான் நீயே சொல்லிட்டியே சிக்குன்னு....ஹி...ஹி....அப்ப திரும்பாம இருக்குமா?”

“அப்ப ஸ்மார்ட்டா ஒரு பையன் போனா நான் திரும்பிப் பாக்கட்டுமா?”

“நீதான் பாக்க மாட்டியே....ஏன்னா நீ ரொம்ம்ம்ம்ம்ப நல்லவ”

“அதான பாத்தேன். இப்படி சொல்லியே எங்களுக்கு தீபாராதனைக் காட்டி சாமியாக்கிடுவீங்க. நீங்க மட்டும் ஃப்ரீயா நடப்பீங்க”

“அடடா....ச்சும்மா கலாட்டா பண்னேண்டா....சரி சரி...இனிமே உன்கூட வரும்போது எந்தப் பொண்ணையும் திரும்பிக்கூட பாக்க மாட்டேன் போதுமா?”

“அப்ப தனியா போகும்போது மொத்தமா ஜொள்ளு வுட்டுட்டு வருவீங்களா?”

“இதெண்டா வம்பாப்போச்சு. சரிம்மா....தாயே....எப்பவும் பாக்க மாட்டேன் போதுமா?”

“அதெல்லாம் தேவையில்ல. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். நீங்க நீங்களாவே இருங்க. போலாமா?”

திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. மைதிலியைப் பெண் பார்த்துவிட்டுப் போன மற்ற ஆறு பேரைப் போலில்லாது, பார்த்தவுடன் சம்மதம் தெரிவித்தவன் விக்னேஷ். இந்த ஆறு மாதத்தில் மைதிலியை கையில் வைத்து தாங்கினான். ஆனால் விக்னேஷின் பெற்றோர்தான் பேராசைப் பிடித்தவர்களாய் இருந்தார்கள். ஒரே பிள்ளையென்றும், கைநிறைய சம்பளம் வாங்குகிறானென்றும் காரணம் சொல்லி நல்ல ஒரு தொகையை மைதிலியின் அப்பாவிடமிருந்து வரதட்சணையாக வாங்கிக் கொண்டார்கள். அநாவசியமாய் அவர்களிடம் பேசி, நாளை மைதிலிக்கும் அவர்களுக்கும் ஒரு கசப்பான உறவை உருவாக்கிவிட வேண்டாமே என்று விக்னேஷ் மௌனமாய் இருந்துவிட்டான்.

வீட்டுக்குத் திரும்பியவர்களை வாசலில் ஒரு ஜோடி புது செருப்பு வரவேற்றது. யாராயிருக்குமென்று யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள். கூடத்தில் போட்டிருந்த சோபாவின்

மீது ஒரு காலை சாவகாசமாக மடக்கி வைத்துக் கொண்டு இடது கையில் காப்பிக் கோப்பையுடன் நிமிர்ந்து பார்த்தவரை மைதிலி அடையாளம் கண்டு கொண்டாள்.

“அடடே...சம்பத் அங்கிள் நீங்களா? எப்படி இங்க......?” என்று இழுத்தவளை பார்த்ததும்,

“அட மைதிலியா? ஆச்சர்யமா இருக்கு. நான் மிஸ்டர் ராஜகோபாலை பாக்க வந்தேன். ம்யூச்சுவல் ஃபண்ட் விஷயமா பேசிட்டு போக. அதுசரி உனக்கு கல்யாணமாயிடிச்சா? ரொம்ப சந்தோஷம்மா...நல்லாருக்கியா?”

ஒன்றும் புரியாமல் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்களைப் பார்த்து பொதுவாக,

“எங்க வீட்டுக்குப் பக்கத்துல ரொம்ப வருஷமா குடியிருந்தாங்க. என்னை சின்ன வயசுலருந்தே தெரியும். போன வருஷம்தான் ட்ரான்ஸ்ஃபர்ல மாத்திட்டு போயிட்டாங்க.”

“ஓ அப்படியா. இப்படித்தான் சில சமயம் எதிர்பார்க்காம சில பேரை சந்திக்கற மாதிரி ஆயிடுது. நீங்க காப்பி சாப்புடுங்க.”

என்று சொன்ன மாமியாரைப் பார்த்து,

“அத்தை போய் புடவை மாத்திட்டு வந்துடறேன். ஏதாவது டிஃபன் செய்ட்டா?”

என்றவளை கொஞ்சம் அலட்சியத்துடன் பார்த்துக்கொண்டே....

“வேணாம்மா...நீங்க டயர்டா வந்திருப்பீங்க...போய் ரெஸ்ட் எடுங்க. நான் பாத்துக்கறேன்”

என்று பொடி வைத்து பேசியவளை சற்றே சங்கடத்துடன் பார்த்துவிட்டு,

”சரிங்க அங்கிள் ஆண்ட்டியை, மீராவை எல்லாம் கேட்டதா சொல்லுங்க. இந்த ஊர்லதான் இருக்கீங்களா? அப்ப எல்லாரையும் ஒரு தடவை கூட்டிட்டு வாங்க” என்றதும்,

“அதெல்லாம் கூட்டிக்கிட்டு வருவாரு. நீ போம்மா...போய் ரெஸ்ட் எடுத்துக்க..”

மறுபடியும் நக்கலாய் சொன்ன மாமியாரை பார்க்காமல் விக்னேஷுடன் தங்கள் அறைக்குப் போனாள்.

அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த சம்பத், விக்னேஷின் அப்பா அம்மாவிடம்,

“ரொம்ப நல்ல பொண்ணு. காலேஜுக்குப் போனாலும் வீட்டு வேலையெல்லாம் இழுத்து போட்டுக்கிட்டு செய்யும். கல்யாணம்தான் தடை பட்டுக்கிட்டே இருந்தது. இப்பதான் மனசுக்கு

நிம்மதியா இருக்கு.”

“ஆமாமா...வேலையெல்லாம் நல்லாத்தான் செய்யுறா. ஆனா எங்க கிட்டதான் கலகலப்பா பழக மாட்டேங்குறா'”

“நல்லா கலகலப்பா பேசிட்டு இருந்த பொண்ணுதாம்மா...ஆனா அந்த சம்பவத்துக்கு அப்புறமாத்தான் ரொம்ப அமைதியாகிட்டா”

அவர் சம்பவம் என்றதும் திடுக்கிட்டு, ஒருவேளை சினிமாவில் காட்டுவதைப் போல ராத்திரியில் தனியாய் வரும்போது யாராவது அவளை நாசமாக்கிவிட்டார்களா? என்று யோசித்து,

“என்னங்க இது...ஏதோ சம்பவம் அது இதுன்னு சொல்றீங்க விபரீதமா எதுவும் நடந்துடலையே”

“அய்யய்யோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்கம்மா....ரெண்டு வருஷத்துக்கு முன்னால திடீர்ன்னு ஒருநாள் ஆம்பிளைக் குரல்ல பேசி தலையை விரிச்சிப் போட்டுக்கிட்டு ஆட ஆரம்பிச்சுட்டா. அப்புறம் கோடங்கியைக் கூட்டிக்கிட்டு வந்து பேயோட்டுனாங்க. அப்புறமா சரியாயிட்டா. ஆனா அதுக்கப்புறம் முன்ன மாதிரி யார்கிட்டயும் கலகலப்பா பேசறதில்ல”

“என்னது பேய் புடிச்சிருந்திச்சா? அடக்கடவுளே...பேய் புடிச்சவளையா எங்க வீட்டுக்கு மருமகளா கூட்டிக்கிட்டு வந்திருக்கோம்.....மோசம் போயிட்டோமே....ஆண்டவா.....என்னல்லாம் பண்னப்போறாளோ...?”

“அடடா....இப்பதான் சரியாயிடிச்சேம்மா. ஏன் உங்களுக்கு இது பத்தி ஒண்ணும் தெரியாதா?

“அதான் முழு பூசனிக்காயை சோத்துல மறைச்சுட்டாங்களே....சரி சரி...நாங்க பாத்துக்கறோம். நீங்க போய்ட்டு இன்னொரு நாளைக்கு வாங்க”

என்று முகத்திலடித்ததைப் போல ராஜகோபால் சொன்னதும், எழுந்து 'சரி போய்ட்டு வரேங்க' என்று சொல்லிவிட்டு, வாசலைத் தாண்டும்போது ‘அடப் பாவமே...அந்தப் பொண்ணை என்ன பாடு படுத்தப் போறாங்களோ தெரியலையே....நாம வேற தேவையில்லாம சொல்லித் தொலைச்சுட்டோமே' என வருத்தப்பட்டுக்கொண்டே போனார்.

அவர் போன மறு வினாடியே...

‘விக்னேஷ்” என்று அலறினாள் சிவகாமி.

மாமியார் பேசியதில் லேசாய் மனவருத்தலிருந்த மைதிலி, ஆறுதலாய் விக்னேஷ் தோளில் சாய்ந்து கொண்டிருந்தவள், மாமியாரின் அலறலில் தூக்கிவாரிப் போட இரண்டு பேரும் கூடத்துக்கு ஓடி வந்தார்கள்.

‘இவங்க அப்பனுக்குப் போன் போடுடா. உடனே அந்த ஆளை இங்க வரச் சொல்லு. இனிமே இந்த பிசாசு இங்க இருக்கக்கூடாது. சீக்கிரமா போன் போடு.”

“ஏம்மா இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி கத்துறீங்க....இவ என்ன தப்பு செஞ்சா?”

“இவ ஒண்ணும் தப்பு செய்யலடா....நாமதான் தப்பு பண்ணிட்டோம். இந்த பேய்புடிச்சவளை நம்ம வீட்டுக்கு விளக்கேத்த கூட்டிக்கிட்டு வந்தமில்லையா...அதுதான் நாம செஞ்ச மகா பெரிய தப்பு. இரு நானே கூப்புடறேன் அந்த ஆளை”

“இருங்கப்பா. என்ன பேய் அது இதுன்னு...என்ன ஒளர்றீங்க”

“நாங்க ஒண்ணும் ஒளறல.....இப்ப வந்துட்டு போன மனுஷன் எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சுட்டு போயிட்டார்” என்று சம்பத் சொன்ன அனைத்தையும், அதோடு இவர்களாகவே இணைத்துக்கொண்ட மசாலாவையும் சேர்த்து சொன்னார்கள்.

விக்னேஷ் எவ்வளவு சொல்லியும், மைதிலி கதறி அழுதும் கேட்காமல், மைதிலியின் அப்பாவை உடனடியாக வரச் சொல்லிவிட்டார்கள்.

அறைக்குள் வந்த மைதிலி, தேம்பலுடன் விக்னேஷின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு அழுதாள்.

”ஹே....மைதூ....என்னடா இது. இங்க பாரு....இங்க பாருன்னேன்....எதுக்கு அழற இப்ப. உங்கப்பாதானே வரட்டும் நானே பேசிக்கறேன். இப்ப அழறத நிறுத்து.”

“எனக்கு அப்ப ஏதோ நடந்துச்சின்னு தெரியும். ஆனா அது பேய்புடிச்சதா இல்ல மனோவியாதியான்னு எனக்கு சரியா தெரியலைங்க. ஆனா எங்கப்பாவும் அம்மாவும்தான், யாரோ பூசாரியைக் கூட்டிக்கிட்டு வந்து பூஜையெல்லாம் செஞ்சாங்க. அதுக்கப்புறம் நார்மலாயிட்டேன். அதுவே ஒருவிதமான மனோதத்துவ ட்ரீட்மெண்ட் மாதிரி இருந்திருக்கலாம். ஆனா இப்ப நான் நல்லாத்தானே இருக்கேன். ஏங்க உங்கப்பா அம்மா இவ்ளோ சத்தம் போட்டு ரகளை பண்றாங்க?”

“பாரு! எவ்ளோ தெளிவா பேசற. ஆனா ஒரு சாதாரண பொண்ணுமாதிரி ஏன் அழற. தைரியமா இரு. எனக்கும் தெரியும். அதெல்லாம் பேயும் இல்லை பூதமும் இல்லன்னு. ஆனா உங்க அப்பா அம்மா, எங்க அப்பா அம்மா இவங்கல்லாம் அந்தக் காலத்து மனுஷங்க. புரிஞ்சிக்க மாட்டாங்க. நாமதான் அவங்களுக்கு சொல்லனும். இப்ப என்ன.....உனக்கு ஆறுதலா எப்பவும் நான் உன் கூட இருக்கேன். எதுக்கு பயப்படற?”

அவனுடைய அந்த ஆறுதலான பேச்சு நெகிழ வைக்க, அவனை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.

“பாத்தியா....இப்ப என்னத்தான் பேய் புடிச்சிருக்கு......காதல்பிசாசே...காதல் பிசாசே......”

“ச்சீ போங்க எப்ப பாத்தாலும் உங்களுக்கு விளையாட்டுதான்....”

“சீரியஸா சொல்லட்டுமா? உனக்குப் பேய்தான் பிடிச்சிருக்கு”

திடுக்கிட்டுப் பார்த்தவளின் முகத்தை நிமிர்த்தி, நமுட்டுச் சிரிப்புடன்,

‘பயந்துட்டியா....பைத்தியம். நான்தான் உன்னைப் பிடிச்சிருக்கிற பேய். எந்த கோடங்கி வந்தாலும் உன் கிட்டருந்து என்னை விரட்ட முடியாது. கடைசி வரைக்கும் நீ பேய் புடிச்சவதான்...ஹா...ஹா...”

சொல்லமுடியாத சந்தோஷத்தில் ஒன்றும் பேசத் தோன்றாமல் அவனையே பார்த்துக்கொண்டு கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள்.

அடுத்தநாள் மைதிலியின் அப்பாவும் அம்மாவும் வந்ததும் கூடமே அதிரும்படி கூப்பாடு போட்டார்கள் ராஜகோபாலும், சிவகாமியும். ஒன்றும் பேச முடியாமல் ஒடுங்கிப் போயிருந்த தன் பெற்றோரைப் பார்த்து மௌனமாய்க் கண்ணீர் வடித்தாள் மைதிலி. இவர்கள் பேச, அவர்கள் கெஞ்ச...கடைசியாய் ராஜகோபால் சொன்னதைக் கேட்டு ஆத்திரத்தில் பொங்கினான் விக்னேஷ்.

“சரி. ஆனது அயிடிச்சி. ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்ச பாவம் எங்களுக்கு எதுக்கு. இங்கயே இருந்துட்டு போகட்டும். விலைபோகாத சரக்குக்கு நீங்க குடுத்த வரதட்சணை கம்மிதான். இன்னும் ரெண்டு லட்சம் குடுத்துடுங்க. எங்களுக்காகவா கேக்கறோம். நாளைக்கே இவளுக்கு மறுபடியும் அதே பிரச்சனை வந்தா செலவு பண்ணனுமில்ல..”

என்று ராஜகோபால் சொன்னதும், அதுவரை காப்பாற்றி வைத்திருந்த நிதானத்தை, இழந்து, ராஜகோபாலின் முன்னால் போய் நின்று கொண்டு, அவரது முகத்தைப் பார்த்து....

”ச்சே....உங்களை என் அப்பா அம்மான்னு சொல்லவே வெக்கமா இருக்கு. என்ன சொன்னீங்க இவளுக்கா பேய்புடிச்சிருக்கு....உங்களுக்குத்தான் பேய் புடிச்சிருக்கு. பணப்பேய், பேராசைப் பேய். மொதல்ல உங்ககிட்டருந்து இந்தப் பேய்ங்கள தொரத்தனும். அதுசரி....குறையிருக்குன்னு சொல்லி அதுக்கு நிவர்த்தியா கூடக் கொஞ்சம் காசு குடுக்கச் சொல்லி சொல்றீங்களே..... பணம் குடுத்து என்னை விலைக்கு வாங்கினவங்க இவங்க. நாளைக்கே எனக்கு ஏதாவது ஒரு விபத்துல கையோ காலோ போயிடிச்சின்னா.....வாங்குன பொருள் கேரண்டி பீரியடுக்குள்ள சேதமாகிடிச்சு....அதனால கொடுத்தக் காசுலருந்து பாதியை திருப்பிக் குடுங்க இல்லண்னா வேற மாத்திக் குடுங்கன்னு இவங்க கேக்கலாமில்லையா?

உங்களைப் பொறுத்தவரைக்கும் கல்யாணம்ங்கறது வியாபாரம்தானே. அப்ப அப்படி அவங்க கேட்டா அதுல தப்பிருக்கற மாதிரி எனக்குத் தோணல. சேதமடைஞ்ச பொருளுக்கு மார்க்கெட்ல மதிப்பில்ல. அதே மாதிரிதான் சேதமடைஞ்ச மனசுக்கு மனுஷங்ககிட்ட மதிப்பில்ல. முடிஞ்சா உங்க சேதமாகியிருக்கிற மனசை சரி பண்ணிக்க முயற்சி பண்ணுங்க.

சரி. உங்களைப் பொறுத்தவரைக்கும் இவ பேய். இல்லையா? எப்படியோ பேய்க்கு வாழ்க்கைப் பட்டுட்டேன். புளியமரம் ஏறித்தானே ஆகனும். எங்களுக்குன்னு ஒரு மரம் இல்லாமயா போயிடும். நாங்க எங்க மரத்துக்குப் போறோம், உங்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்காது. மைதிலி...பெட்டி படுக்கையெல்லாம் ரெடி பண்ணு. நாம நம்ம புளியமரத்துக்குப் போலாம்”

கீதம்
10-10-2009, 10:05 PM
ரொம்ம்ம்ம்ம்ம்ம்பப் பிரமாதம் சிவாஜி அவர்களே. எல்லா ஆண்மகன்களும் இப்படிக் கிளம்பிவிட்டால் நாட்டிலிருக்கும் வரதட்சணைப்பேய் சொல்லாமல் கொள்ளாமல் தானே ஓடிவிடும் புளியமரம் தேடி!

அன்புரசிகன்
11-10-2009, 01:08 AM
நீண்டநாட்க்களுக்கு பிறகு சிவா அண்ணனின் கதைக்கு நன்றிகள்...

சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கதை... இந்த பேய்களை விரட்டுவதற்கு ஒரு பூசாரி நம் சமூகத்தில் இல்லையே... நல்ல கணவன் அமைந்த மைதிலியைப்போல் வரம்பெற்ற பெண்கள் நம் சமூகத்தில் வரவேண்டும்...

வாழ்த்துக்கள் அண்ணா.

aren
11-10-2009, 07:00 AM
இது மாதிரியான ஒரு மருமகனைத்தானே அனைத்து மாமனார்களும் எதிர்பார்ப்பார்கள். அவ்வளவு எளிதாக கிடைக்குமா?

கதை அருமை சிவாஜி. இன்னும் தொடருங்கள்.

சிவா.ஜி
11-10-2009, 07:09 AM
ஆம் கீதம். மருமகன்கள் மற்றொரு மகன்களாக இருந்துவிட்டால், அனைவருக்குமே நல்லது. மிக்க நன்றி.

சிவா.ஜி
11-10-2009, 07:15 AM
என்ன செய்வது அன்பு. நிறைய கதைக்கருக்கள் மூளையில் முட்டுகின்றன. ஆனால் ஏதாவது ஒரு பிரச்சனை அதனை எழுத்தாக்க விடாமல் தடுத்துவிடுகிறது.

இந்தக் கதை கூட நேற்று பொம்மாயி என்ற ஒரு படம் பார்த்தபோது தோன்றியது. அதில் ஒரு பெண் குழந்தைக்கு பேய் பிடித்துவிடுவதாக காட்சி அமைத்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாய், நாளை அந்த குழந்தை இதுபோல ஒரு பிரச்சனையை சந்திக்க நேரிட்டால் எப்படி இருக்குமென்று சற்றே கற்பனை செய்தேன். உடனே இரவு 12 மணிவரை அமர்ந்து தட்ட்ச்சி பதித்துவிட்டேன்.

மீதியுள்ள கருக்களுக்கும் மிக விரைவில் ஜனனம் கொடுத்துவிடுகிறேன்.

எல்லா ஆண்களுமே விக்னேஷைப் போல இருக்கவேண்டுமென்பதுதான் நமது விருப்பம். ஆனால் உண்மை வேறாக இருக்கிறதே.

மிக்க நன்றி அன்பு.

சிவா.ஜி
11-10-2009, 07:16 AM
அதானே ஆரென். இந்த மாதிரியான மருமகன்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பார்களா? கிடைத்தால் வாழ்க்கை சுகம்தான். மிக்க நன்றி ஆரென்.

வானதிதேவி
11-10-2009, 07:32 AM
இன்றும் இருக்கிறார்கள் நண்பர்களே,என்னவர் என் கரம் பிடிக்க பட்ட பாடு இருக்கிறதே அதை பின்னர் கதையாக எழுதுகிறேன். உண்மையான அன்புக்கு முன்னால் அனைத்திற்கும் தோல்வி தான் பணம் உட்பட.

ஒரு முடி கொடுத்தால் முழு ஓவியம் வரைவார்களாம் கேள்விபட்டிருக்கிறேன்.
அண்ணாவிற்கு ஒரு சொல் போதும் போல காப்பியம் படைக்க.நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள் அண்ணா.

சுகந்தப்ரீதன்
11-10-2009, 07:54 AM
நான் இப்பத்தான் பேயை விரட்டிக்கிட்டு இருக்கேன்... அதுக்குள்ள நீ சாமியை கூட்டிக்கிட்டு வந்துட்டியான்னு திட்டாதீங்க சிவா அண்ணா...!!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்;
கணவன் அமைதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்......!!

நிதர்சனத்தில் நீங்கள் சொன்னதுபோல் பல இடங்களில் இறைவன் வரம் கொடுத்தாலும் கடவுள் கொடுக்க மாட்டார் போலிருக்கு..?!

அன்பு சொன்னதுபோல் பேராசை பேயை ஓட்ட எந்த கோடாங்கியை கூட்டி வருவது..?? மனங்கள் விசாலமடைந்தால் மட்டுமே இந்த பேய்கள் முருங்கைமரம் ஏறுவது சாத்தியமாகும்..!!

அதுசரி... எப்படியண்ணா..உங்களுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆனதுபோல் உங்கள் கதையில் புதுமண தம்பதியரின் ஊடல் காட்சிகள் இவ்வளவு நேர்த்தியாகவும் இயல்பாகவும் அமைந்திருக்கிறது....??:fragend005:

மதி
11-10-2009, 08:06 AM
அட்டகாசம் சிவாண்ணா...
நல்ல கதை... வரதட்சிணை பற்றி.. எல்லோரும் விக்னேஷ் மாதிரி இருப்பதில்லையே..

சிவா.ஜி
11-10-2009, 08:08 AM
உண்மைதான் தங்கையே. உண்மையான அன்புக்கு முன்னால் பணமெல்லாம் தூசுதான்.

எழுதுங்க உங்க கதையையும். ரொம்ப சுவாரசியமா இருக்கும் போலருக்கே....

ரொம்ப நன்றிம்மா.

சிவா.ஜி
11-10-2009, 08:17 AM
ஆமா சுபி. மனங்கள் விசாலமைவதுதான் இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு. நிச்சயம் விக்னேஷ் மாதிரியானவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். (நம்ம மன்றத்து இளைஞர்களைப் போல)

நாங்களும் ஒரு காலத்துல புதுமணத் தம்பதிகள்தானே சுபி.....ஊடலை அனுபவித்தவர்கள்தானே...அப்ப அது எழுத்துல வராம இருக்குமா...(இப்பவும் அப்படித்தான்....ஹி...ஹி...)

ரொம்ப நன்றி சுபி.

சிவா.ஜி
11-10-2009, 08:19 AM
எல்லோரும் விக்னேஷ் மாதிரி இருப்பதில்லை மதி. ஆனா இப்ப இருக்கிற இளைஞர்களில் பெரும்பாலோனோர் அப்படித்தான் இருக்கிறார்கள். வரதட்சணை என்பதை அருவெறுப்பாக நினைக்கும் அந்த இளைஞர்கள்தான் இந்தப் பேய்களை விரட்டும் கோடங்கிகள்.

நன்றி மதி.

ஓவியன்
11-10-2009, 09:47 AM
தன் மனைவியுடன் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கும் எல்லா கணவன்மாரும் விக்னேஸ்தான்...

இந்த புரிந்துணர்வு ஒரு பக்கத்திலிருந்து கிடைப்பதில்லையே, அதனை கணவன் மனைவி இருவரும் புரிந்து கொண்டு நல்ல விதத்தில் கட்டியெழுப்பினால், அந்த வாழ்க்கையே இறைவன் கொடுத்த வரமாகி விடும்.

நல்லதோர் கதைக்கு மனதார்ந்த வாழ்த்துகள் சிவா..!!

சிவா.ஜி
11-10-2009, 01:09 PM
மிகச் சரியாக சொன்னீர்கள் ஓவியன். இருவரும் இணைந்து, புரிந்துணர்வுடன் எழுப்பும் இல்லற மாளிகையில் என்றும் வசந்தம்தான்.

மிக்க நன்றி ஓவியன்.

விக்ரம்
11-10-2009, 03:44 PM
மிக அருமையான கதையண்ணா... மனச தொட்டிருச்சு

சிவா.ஜி
12-10-2009, 10:49 AM
ரொம்ப நன்றி விக்ரம்.

பா.ராஜேஷ்
12-10-2009, 02:31 PM
நல்ல கதை அண்ணா. நன்றி! கடல் நடுவில உக்காந்து கதை எழுத நேரம் இருக்கா என்ன?

aren
12-10-2009, 03:30 PM
நல்ல கதை அண்ணா. நன்றி! கடல் நடுவில உக்காந்து கதை எழுத நேரம் இருக்கா என்ன?

கடல் நடுவில் எப்படிங்க உட்காரமுடியும். கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?

aren
12-10-2009, 03:32 PM
அதுசரி... எப்படியண்ணா..உங்களுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆனதுபோல் உங்கள் கதையில் புதுமண தம்பதியரின் ஊடல் காட்சிகள் இவ்வளவு நேர்த்தியாகவும் இயல்பாகவும் அமைந்திருக்கிறது....??:fragend005:

அவர் பெயர் மார்க்கண்டேயன். என்றும் பதினாறுதான் அவர். அதான்.

சிவா.ஜி
13-10-2009, 05:06 AM
நன்றி ராஜேஷ். நேரமெல்லாம் இருக்கு. ஆனா கணினிதான் அடிக்கடி காலைவாரி விடுது.

சிவா.ஜி
13-10-2009, 05:12 AM
கடல் நடுவில் எப்படிங்க உட்காரமுடியும். கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?

நல்லா கேக்குறாங்கப்பா டீடெய்லு.....

திருமாலாய் இருந்தால் உட்காரலாம்.....சிவனால் முடியுமா?

aren
13-10-2009, 05:19 AM
திருமாலாய் இருந்தால் உட்காரலாம்.....சிவனால் முடியுமா?

இந்த பதிலை சிவசேவகன் பார்த்துட்டார்னா, உங்களுக்கு ஆப்புதான்.

என் வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
13-10-2009, 06:50 AM
இந்த பதிலை சிவசேவகன் பார்த்துட்டார்னா, உங்களுக்கு ஆப்புதான்.

என் வாழ்த்துக்கள்.

ஹா....ஹா...ஹா....:icon_b:

aren
13-10-2009, 07:11 AM
ஹா....ஹா...ஹா....:icon_b:

ஆப்புதான் என்று சொன்னபிறகும் சிரிப்பவர் நீங்களாகத்தான் இருக்கும். இது என்ன அசட்டுச்சிரிப்பில் சேர்க்கையா?

arun
13-10-2009, 07:20 AM
கதையை அருமையாக டச்சிங்குடன் கொடுத்துள்ளீர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் நாம் அனைவரும் !!

சிவா.ஜி
13-10-2009, 07:24 AM
ஆப்புதான் என்று சொன்னபிறகும் சிரிப்பவர் நீங்களாகத்தான் இருக்கும். இது என்ன அசட்டுச்சிரிப்பில் சேர்க்கையா?

'துன்பம் வரும் வேளையிலே சிரிங்க....என்று சொல்லிவெச்சார் வள்ளுவரும் சரிங்க'

(ஆனா நிச்சயமா அசட்டு சிரிப்பு இல்லை)

சிவா.ஜி
13-10-2009, 07:25 AM
மிக்க நன்றி அருண்.

samuthraselvam
14-10-2009, 09:05 AM
அருமையான கதை சிவா அண்ணா....

வரதட்சணைக் கொடுமையில் பல பெண்கள் சிக்கி சின்னாபின்னமாகி வாழ்க்கையை இழந்து, ஏன் உயிரை இழந்தும் இருக்கிறார்கள்....

இப்படி ஒரு விக்னேஷ் எல்லா ஆண்களுக்குள்ளும் வாழ்ந்தால் எல்லாருக்கும் நல்லது தான்...

விக்னேஷ் வாழ்க.... சிவா அண்ணா வாழ்க.....


கால இடைவெளியைக் குறைத்து பல புதுமைக் கதைகள் படைக்க வாழ்த்துக்கள் பாச அண்ணா....

சிவா.ஜி
17-10-2009, 04:38 AM
உண்மைதான் லீலும்மா. வரதட்சணைப் பேய் எத்தனை பெண்களை காயப்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் நல்ல முடிவு வேண்டுமானால், இளைஞர்கள் பரந்த மனதுடன் சிந்திக்க வேண்டும்.

நாளைய தலைமுறை நல்லதாக அமைய விரும்புவோம்.

இனி இடைவெளியைக் குறைக்க முயல்கிறேன் லீலும்மா. மிக்க நன்றி.

அய்யா
17-10-2009, 07:08 AM
மனைவிமீது அன்பிருந்தாலும், பெற்றோருக்கு மதிப்புக் கொடுத்து அனுசரித்து வாழும், கணவன், ஒருஅளவுக்குமேல் எல்லை மீறும்போது தன்னை நம்பிவந்தவளுக்காக சரியான உறுதியான முடிவெடுக்கிறான்.

மனித உணர்வுகளை மிக நுட்பமாகச் சொல்லும் கதையமைப்பு. சிவா அண்ணாவுக்கு மட்டுமே கைவரப்பெற்ற ஒன்று!

பாராட்டுகள் சிவாண்ணா!!

அமரன்
17-10-2009, 07:44 AM
நான் இப்பத்தான் பேயை விரட்டிக்கிட்டு இருக்கேன்... அதுக்குள்ள நீ சாமியை கூட்டிக்கிட்டு வந்துட்டியான்னு திட்டாதீங்க சிவா அண்ணா...!!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்;
கணவன் அமைதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்......!!

நிதர்சனத்தில் நீங்கள் சொன்னதுபோல் பல இடங்களில் இறைவன் வரம் கொடுத்தாலும் கடவுள் கொடுக்க மாட்டார் போலிருக்கு..?!

அன்பு சொன்னதுபோல் பேராசை பேயை ஓட்ட எந்த கோடாங்கியை கூட்டி வருவது..?? மனங்கள் விசாலமடைந்தால் மட்டுமே இந்த பேய்கள் முருங்கைமரம் ஏறுவது சாத்தியமாகும்..!!

அதுசரி... எப்படியண்ணா..உங்களுக்கு இப்பத்தான் கல்யாணம் ஆனதுபோல் உங்கள் கதையில் புதுமண தம்பதியரின் ஊடல் காட்சிகள் இவ்வளவு நேர்த்தியாகவும் இயல்பாகவும் அமைந்திருக்கிறது....??:fragend005:

நீ என்ன சொல்ல வர்ரே சுபி. சிவாவும் கதாநாயகன் விக்னேசைப் போல என்றா.

அமரன்
17-10-2009, 07:54 AM
அன்று தொட்டு இன்று வரை தவிலாகவே கணவன்கள் பலர் இருந்து வந்துள்ளார்கள். ஆணாதிக்ககக் கண்ணாடி, வரதட்சணைக் கொடுமை சட்டம் போன்றவற்றால் அவர்களை உயிருடன் அடைத்து மாலை போட்டது நம் உலகு. அவர்களின் ஆன்மா படங்களுக்கு விளக்கேற்றியது. வெளிச்சம் வெளியேயும் விழத் தொடங்கியது. இந்த கால ஓட்டத்தை கதையோட்டத்தில் அருமையாகப் பதிவு செய்த சிவாவுக்குப் பாராட்டுகள்.

விக்னேஷ்கள் மௌனம் காப்பதுவும் உங்களுக்காகத்தன் என்பதை தெரிந்துகொள்ள்ளுங்கள் கண்களே.

சிவா.ஜி
17-10-2009, 10:25 AM
மிக்க நன்றி அய்யா. சிலரின் மௌனத்தை பலர் கையாலாகாதனமாய் நினைத்துவிடுகிறார்கள். தாமரை சொல்வதைப்போல எப்போதும் திட்டிக் கொண்டிருப்பதை விட ஆக்கபூர்வமாய் எதையாவது செய்வது நல்லது. அதைத்தான் விக்னேஷ் செய்திருக்கிறான்.

சிவா.ஜி
17-10-2009, 10:42 AM
அருமை அமரன். கண்ணாடி சட்டத்துக்குள்ளும் அடைக்கிறார்கள், சட்டத்தின் துணையுடன் கம்பிக்கதவுகளுக்குப் பின்னாலும் அடைக்கிறார்கள் பாவம் தவில்கள்.

ஆனால் நீங்கள் சொன்ன வெளிச்சம் தற்சமயம் பரவலாய் தெரிகிறது. மெல்ல பிரகாசிக்கும்.

அதுசரி நானும் விக்னேஷ் மாதிரின்னா....புளியமரத்துலயா வசிக்கிறேன்.(அப்ப அண்ணியை என்னன்னு சொல்றீங்க? என்னா பாஸ்.....நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு?)

நன்றி அமரன்.

arivumalar
07-11-2009, 05:13 AM
எல்லா பெண்களுக்கும் இது போல வாழ்க்கை அமைந்து விட்டால் அவர்கள் வாழ்க்கை சொர்க்கமாகிவிடும்

xavier_raja
09-11-2009, 12:29 PM
மனதை நெகிழவைக்கும் கதை. இதுபோன்ற கணவர்கள் இருந்துவிட்டால் பெண் இனம் என்றென்றும் துயரபடாது.

குணமதி
09-11-2009, 04:14 PM
சிறப்பான சிறுகதை.

சிவா.ஜி
10-11-2009, 04:50 AM
ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் அறிவுமலர், சேவியர் ராஜா மற்றும் குணமதி.

இளசு
21-11-2009, 08:33 PM
நல்லுணர்வு
புரிந்துணர்வு
மனித நேயம்
தர்ம நியாயம்..


மனதுக்கு மருந்தான இந்த இதமானவை
நம் சிவாவின் படைப்புகளில் விரவி மணக்கும்..

இங்கும் மணந்தது..
விழி நுகர மனம் நிறைந்தது!


பிறந்த குழந்தை காணும்போதெல்லாம்
மனிதம் மேல் புதுநம்பிக்கை பூக்கும்!

இதுபோல் படைப்புகள் வாசிக்கும்போதும் கூட...

பாராட்டுகள் சிவா!

ராஜேஷ்
22-11-2009, 07:38 PM
சமூகம் இப்படி பட்ட மருமகன்களை கண்டுபிடித்து பெண் கொடுக்க முன் வரவேண்டும் .

நல்ல கதை .

சிவா.ஜி
23-11-2009, 01:14 PM
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்பு நண்பர் இளசுவின் மந்திர வரிகளை என் கதைக்குப் பின்னூட்டமாய்க் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.

மிக்க நன்றி இளசு.

சிவா.ஜி
23-11-2009, 01:16 PM
சமூகம் இப்படி பட்ட மருமகன்களை கண்டுபிடித்து பெண் கொடுக்க முன் வரவேண்டும் .

நல்ல கதை .

கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லாமல், எங்கும் இப்படிப்பட்டவர்களே நிறைந்திருக்கும் சமூகமாய் நம் சமூகம் மாற வேண்டும்.

மிக்க நன்றி ராஜேஷ்.

மஞ்சுபாஷிணி
17-05-2012, 07:44 AM
என்னவோ க்ளிக்கினால் எதையோ தேடினால் கணவன் அமைவதெல்லாம் அப்டின்னு அருமையான இந்த கதை கிடைத்தது சிவா...

கணவன் மனைவிக்குள் இத்தனை அந்நியோன்யம் அவர்களின் வாழ்க்கையில் எந்த புயலையும் வீசாமல் அப்படியே வீசினாலும் காப்பாற்றிவிடுகிறது இருவருக்கும் உள்ள புரிதல்....

அட வீட்டுக்கு வீடு வாசப்படி தானப்பா... மாமியார் மாமனார் கொடுமை இல்லாத வீடு இருக்கா என்ன? அப்டின்னு படிக்கிறவங்க நினைக்கமுடியாதபடி கதைவரிகள் அப்படியே நிதர்சனம் சொல்கிறது.. ஒரு வீட்ல மாமியார் கொடுமைன்னா இன்னொரு வீட்ல மருமகள் கொடுமை.. இன்னொரு வீட்ல கணவன் கொடுமை....

இங்க நீங்க எடுத்துக்கிட்ட கரு.... அதை அழகாய் கதையாய் படைத்த விதம்... அதில் எப்பவும் சொல்லும் ஒரு அற்புதமான மெசெஜ்.... சிவாவோட டச் எல்லா கதைகளிலும் நான் பார்த்து படித்து வியந்தது போல் தான் இதிலும் வியக்கிறேன்...

கல்யாணச்சந்தையில் மாப்பிள்ளைகள் விலைபோவதைப்பற்றி நிறைய கதையில் படிச்சிருக்கேன். ஆனா இங்க விக்னேஷ் தன்னோட நல்ல குணத்தால் மைதிலிக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததைக்கூட பொருட்படுத்தாமல் மனைவியை சமாதானப்படுத்த பேய் என்று மனைவியை செல்லமாக திட்டி அதுவும் அவளுக்கு வலிக்குமோ என்று தன்னையே பேய் என்றுச்சொல்லி.... உங்கள் முத்திரை இதில் மிக அழகாய் பதித்திருக்கிறீர்கள் சிவா....

நல்லவங்க இப்படி நாலுபேர் இருப்பதால் தான் நாட்டில் இன்னும் மழை பொழிகிறது போல... அதாம்பா விக்னேஷ் போன்ற நல்ல மாப்பிள்ளை. படிப்பவரே பயந்துவிடும் அளவுக்கு விக்னேஷ் அம்மா கத்துவது இருக்கிறது. கதாசிரியரின் சிறப்பு இது தான்....

சொல்லவந்ததை மழுப்பாமல் இழுக்காமல் படிப்போரை சோர்வடைய வைக்காமல் சட்டுனு நச்சுனு அதே போல் இப்படி ஒரு கணவன் எல்லோருக்கும் அமைந்தால் நாடே முன்னேறிவிடுமே என்ற சந்தோஷ உணர்வு ஏற்படுவதை தடுக்க இயலவில்லை... அத்தனை அருமையாக எழுதி இருக்கீங்க சிவா....

என்றோ நடந்த விஷயத்தை வீட்டுக்கு வந்தவர் பூடகமாக ஆரம்பிக்கும்போதே படிக்கும் வாசகர்களும் டென்ஷனாவதை தடுக்க இயலவில்லை..... ஐயோ என்னாச்சோ என்று.... பேயோ இல்லை என்னவோ ஒன்று நடந்து இருக்கிறது ஆனால் அதையும் வெச்சு பணம் பண்ணும் விக்னேஷ் பெற்றோருக்கு கடைசியாக சரியான சாட்டையடி விக்னேஷ் கொடுப்பது போல முடித்தது கைத்தட்டவைத்தது சிவா....

பேய் பிடிச்சவ நம்ம வீட்டில் இருக்கக்கூடாது. இருக்கணும்னா மேற்கொண்டு 2 லட்சம் தரணும். தர இயலன்னா கிளம்பணும். இதோ மாப்பிள்ளையும் கூட கிளம்பியாச்சு பேய்க்கூட வாழ்க்கைப்பட்டு புளியங்கொம்போ முருங்கைமரமோ... ஆனால் போகுமுன் கொடுத்தார் பாருங்க ஸ்ட்ராங்க் டோஸ் அம்மா அப்பாக்கு... பணப்பேய் பேராசைப்பிடித்து அலைபவர்கள் என்று.. அது நச்.....

புதிதாய் திருமணம் செய்தவர்கள் என்பதை மிக நுணுக்கமாய் இழை இழையாய் ஓடும் அன்பும் பாசமும் காதலும் செல்லக்கூடலும் மிக அருமையாய் கையாண்டிருக்கீங்க கதையில்....

அன்பு வாழ்த்துகள் சிவா.... அருமையான கதைப்பகிர்வு....

சிவா.ஜி
18-05-2012, 01:00 PM
ரொம்ப ரொம்ப நன்றிங்க மஞ்சு. வரதட்சணை....என்னைப்பொருத்தவரை இந்த வார்த்தை கெட்ட வார்த்தை. எங்கள் வீட்டில் யாருமே வாங்காதது....கொடுக்காதது....இருப்பினும் இல்லறம் நல்லறமே. பணம் தீர்மானிக்கும் வாழ்க்கை....பிணமாய் வாழ்வதற்கு ஒப்பானது...மனம் தீர்மாணிக்கும் வாழ்க்கை....மணமாய் வாசம் வீசுவது. எங்கள் குடும்பத்தில் வீசுகிறது. அவற்றை அநேகர் குடும்பங்களிலும் காண்கின்ற ஆவலே இக்கதைக்கான காரணம்.

நீண்டநாட்களுக்கு முன் எழுதிய கதைக்கு இப்போது கிடைத்திருக்கும் அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்.