PDA

View Full Version : ஐ.நா.வின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்ததுவியாசன்
08-10-2009, 06:02 PM
ஐ.நா.வின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது?: 'ஆனந்த விகடன்' கேள்வி
ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார ஏடான 'ஆனந்த விகடன்' கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக விகடன் குழுமத்தின் 'ஆனந்த விகடன்' வார ஏட்டில் நிஜ 'வில்'லன் யார்? எனும் தலைப்பில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மன்மோகன்சிங்கும், ஆளும் காங்கிரசின் தலைவி சோனியா காந்தியும் தீமைக்கு எதிராக வில்லேந்தி நின்ற தசரா கொண்டாட்டக் காட்சி - தமிழனைப் பொறுத்தவரை- இந்த வருடத்தின் தலைசிறந்த அவல நகைச்சுவை!

தீமைகளின் உருவமாக இராவணனைச் சித்திரித்து, அவனைக் 'கொடும்பாவி'யாக்கி அம்பு எய்து அருமையான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் இந்தத் தலைவர்கள். அடுத்தவர் மனைவியைக் கவர்ந்து சென்றான் என்பதுதான் இதிகாச இராவணன் மீதான குற்றச்சாட்டு. மற்றபடி அவன் சுத்த வீரன், யுத்த தர்மத்தை ஒருபோதும் மீறாதவன்!

ஆனால், இன்றைக்கு இலங்கையை ஆள்வோர் மீது உலக சமுதாயம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒன்றா, இரண்டா? 'விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒருபக்கம் மார் தட்டிக்கொண்டே, போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இன்னமும் சித்ரவதைகளைத் தொடர்கிறார்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்குத் துணிச்சலை இவர்களுக்கு யார் தந்தது? ஒருபக்கம் முள்வேலி முகாம்களுக்குள் அப்பாவித் தமிழர்களை வதைத்துக்கொண்டே, மறுபக்கம் தன்னைப் புத்தராகவும் புனிதராகவும் காட்டிக்கொள்ள அங்கே இருப்பவர்கள் வேண்டுமானால் வெட்கம் கெட்டவர்களாக இருக்கலாம். 'தப்பாக எதுவும் நடக்கவில்லை' என்று இந்திய அரசுமா வெட்கம்கெட்டு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டும்?

அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ இலங்கை அரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசுதான் மறைமுகத் தடையாக இருக்கிறது என்று இதுநாள் வரை நிலவிவந்த குற்றச்சாட்டுகளை இப்போதாவது பொய்யாக்க வேண்டாமா?

இன்னலுற்ற தமிழர்கள் வாழ்வில் இனியாவது ஒளி தோன்ற வேண்டுமானால்... உருவகக் கொடும்பாவிகளை விட்டுவிடுங்கள்... உண்மைக் கொடும்பாவிகளை நோக்கி வீரத்தைக் காட்டுங்கள். ஆம், நிஜமாகவே உங்கள் வில்லும் அம்பும் திரும்ப வேண்டியது இலங்கையை நோக்கித்தான்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிஞர்
08-10-2009, 06:40 PM
ஐநாவை எதிர்ப்பதால் அவர்களுக்கு எந்த பாதகமும் நிகழப்போவதில்லை.

அமெரிக்காவை... இந்தியா போன்ற நாடுகள் கட்டுப்படுத்துவது என்பது கட்டுக்கதையாக இருக்கலாம். ஆதாரம் கிடையாது...

தனக்கு ஆதாயம் இருந்தால் மாத்திரமே அமெரிக்கா எதிலும் தலையிடும்....

பத்திரிக்கைகள் விற்பனைக்காக இது மாதிரி தகவல்களை கசிய விடுவதுண்டு..... அதை நாம் அலசி.. நமக்குள் பிரச்சனை வரவேண்டாம்.

அமரன்
08-10-2009, 08:36 PM
தான் சொன்னால் தமிழ்நாடே சொன்ன மாதிரி என்ற நினைப்பு விகடனுக்கு..

நம்மூர்ப் பக்கம் சொல்வார்களே.. அங்கும் சீனிக்குட்டி.. இங்கும் சக்கரைக் குட்டி என்று.. அந்த மாதிரித்தான் பலவும்.

ஐநாவின் உள்ளக இடப்பெயர்வு அனர்த்த இலாகாவின் ஆணையாளரின் இன்றைய அறிக்கை என்ன தெரியுமா. இலங்கை சொல்வதைப் போன்று முகாம்களுக்குள் மக்களுடன் கலந்திருக்கும் புலிகளால் இலங்கைக்கு என்றுமே ஆபத்துத்தான். ஆனால் மக்களிலிருந்து புலிகளை பிரித்தெடுக்கும் முறை கவலை தருகிறது.

உதவி வழங்கும் நாடுகள் இனிமேல் இலங்கைக்கு உதவி வழங்கப் போவதில்லை என்று முடிவு எடுத்திருப்பதாகவும் செய்திக்கசிவு.


இலங்கை அரசு பாலியல் துனுறுத்தலை போராயுதமாகப் பயன்படுத்தியது என்றார் ஹிலாரி. என்னமோ தன்னை நேரடியாகத் தாக்கியதாக இலங்கை குதிக்க பத்தொடு பதினொன்றாகத்தான் உங்களைச் சொன்னோம். கண்டுக்காதீங்க என்கிறான் இன்னொரு அமெரிக்க அதிகாரி.


இன்னும் எழுத* எத்த*னையோ உண்டு..

அடடே.. ஒட்டு மொத்த உலகமே ஈழத்தமிழனுக்கு எதிராக வரிச்சு கட்டி நிற்குதே. என எண்ண வைக்கும் அளவுக்கு இன்னும் பலவுண்டு.

இதை எல்லாம் எழுதாத விகடன் தமிழ்ப்பற்று மிகுந்து தலையங்கம் எழுதி உள்ளது வேடிக்கையாக இல்லை.இதே விகடன்தான் வன்னியில் மக்கள் அழிந்துகொண்டிருக்கும் நேரத்திலும் புலிகளின் பலத்தை அளவீட்டு, என்னமோ தாம்தான் கட்ட்ளைப்பீடம் என்றமாதிரி செய்தி வெளியிட்டு, தலைவன் இருக்கிறான் கலங்காதே என்று போலி நம்பிக்கையூட்டி இருக்கிறான் மக்கள் எழுச்சியை மங்கச்செய்தது

aren
09-10-2009, 12:07 AM
ஐ.நா. வெறும் பல்லைப்பிடுங்கிய வீரியன் பாம்பு. அவ்வளவுதான். வீரியன் என்று ஐ.நா. நினைத்துக்கொண்டிருக்கிறது, ஆனால் மற்றவர்கள் அனைவருக்கும் அதற்கு பல்லில்லை என்று நன்றாகவேத் தெரியும்.

ஐ.நா. சொல்லி எந்த நாடு இதுவரை கேட்டிருக்கிறது.

ஐ.நா. என்ற அங்கமே ஒரு அபத்தம் என்று எனக்குத் தோன்றுகிறது.

அமரன் அவர்கள் சொல்வதுபோல் பணம் கொடுக்கும் நாடுகளான ஜப்பானும், நார்வேயும் அவர்கள் கொடுக்கும் பணத்தை நிறுத்தினால் மட்டுமே இந்த அட்டூழியத்தை கட்டுப்படுத்த முடியும். கட்டுப்படுத்தமுடியுமே தவிற முழுவதுமாக நிறுத்திவிடமுடியாது.

Ranjitham
09-10-2009, 06:05 AM
கடவுலே இந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள். இவர்களுக்கு விடிவுகாலம்தான் எப்போது. இவர்களை காப்பாற்ற யாருமே இல்லையா?

thalaivan
14-10-2009, 10:44 AM
அமெரிக்கா நினைத்தால் அனைத்தும் நடக்கும்..இந்தியா இலங்கைக்கு சப்போர்ட்டா இருக்குன்றது எல்லோர்க்க்கும் தெரியத்தான் செய்யுது..ஏனென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் விபீஷணர்கள் இந்திய தலைமையை தன் வசம் வித்திருக்கும்போது,,,,இலங்கையால் அமெரிக்காவை ஏமாத்த முடியாதா என்ன....!

வியாசன்
14-10-2009, 11:09 AM
தற்போது கலைஞர் திரைக்கதை வசனத்தில் டைரக்சனிலும் சோனியா காட்சியமைப்பு றோ கூட்டணியில் புதிய வெளியீடு
அகதிமுகாம்களில் மக்கள் வசதியாக வாழ்கின்றார்கள்.
ராஜபக்சவுக்காக புதிய வெளியீடு. டீ.ஆர் .பாலு, கனிமொழி நடிப்பில் சூடான வெளியீடு. எந்த நிமிடமும் திரைக்கு வரலாம். முன்கூட்டி உங்கள் ஆசனங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

thalaivan
14-10-2009, 03:04 PM
ச்ச்ச்சேஎ.....சரியானதுதான்

அறிஞர்
15-10-2009, 02:41 PM
இலங்கை முகாம்களில் தமிழர்களின் அவலநிலையும் கோரிக்கைகளும் : எம்.பி.க்கள் குழு அறிக்கை

சென்னை, அக்.15, 2009 : இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறுவதாகவும், தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதே அவர்களது முக்கியக் கோரிக்கையாக இருப்பதாகவும் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலைமையை நேரில் தெரிந்து கொண்டு திரும்பிய டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி.க்கள் குழு தனது ஆய்வறிக்கையை முதலமைச்சர் கருணாநிதியிடம் புதன்கிழமை அளித்தது.

அந்த அறிக்கையின் விவரம் :

'இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழ் மக்களைப் பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை. அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.

அப்படி இல்லாமல் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுமானால் சில நாட்களில் பெருமழை அந்த பகுதியில் பெய்யக்கூடும் என்ற நிலைமை இருப்பதால், ஏற்கனவே வசதி இல்லாத இடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் அந்த மக்கள் மழையினால் மேலும் துன்பப்படுவார்கள். மழையினால் ஏற்படும் சேறு, சகதிகளில் குடியிருக்கவும், படுத்து தூங்க வேண்டிய நிலைமை ஏற்படும்பொழுது எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அவற்றை எல்லாம் இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை நாங்கள் சந்தித்தபோதும் இந்த நிலைமைகளை ஒவ்வொன்றாக அவரிடத்திலே தொகுத்துக் கூறிஇருக்கிறோம். இதை மனிதாபிமான உணர்ச்சியோடு அணுகி ஆவண செய்வதாக எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார். அந்த மனிதாபிமான உணர்ச்சிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை அல்லலுக்கு மத்தியிலே அவஸ்தைபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை எல்லாம் அங்கிருந்து விடுவித்து அவர்களை சொந்த இடங்களில் கொண்டுபோய் சேர்ப்பதில்தான் தெரிந்துகொள்ள முடியும்.

அவர்களை வெளியே அனுப்புவதற்கான ஓர் ஆரம்பத்தை தொடங்கி படிப்படியாக அவர்களது சொந்த இடங்களில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் எங்களிடம் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது என்ற நம்பிக்கை எங்கள் உள்ளங்களில் துளிர்க்க முடியும். இதில் தாமதம் ஏற்பட்டால் ஏற்கெனவே இந்த முகாம்களில் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு மேலும் சொல்லெண்ணா துயரத்தைத்தான் ஏற்படுத்தும்.

இலங்கையில் உள்ள தமிழர்களை மீண்டும் குடியமர்த்த கண்ணிவெடிகளைக் கண்டுபிடிப்பதற்கான உதவிகளை தற்போது செய்துகொண்டிருப்பதை விட மேலும் அதிகமாக இந்திய அரசு செய்ய வேண்டும் என்றும், அந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கலந்து பேசப்பட்டது. தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு அந்த வேண்டுகோள் விடவும் தயாராக இருப்பதாக தெரிவித்தோம்.

அடிப்படை தேவைகளான உணவு, விவசாயத்திற்கு தேவையான உபகரணங்கள், வீடு கட்டுவதற்கான உதவிகள், கல்வி வசதி அளித்தல் போன்றவற்றை இந்திய அரசிடமிருந்து உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் என்றும் இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டது. அதையும் முதல்-அமைச்சர் கருணாநிதி மூலமாக மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தோம்.

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையையும் விளக்கிக் கூறினோம். அந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

இலங்கைக்கான இந்திய தூதர் ஆலோக் பிரசாத்துடைய அணியினருடன் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து விவாதித்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஸ்ரீகாந்த், பத்மினி சிதம்பரநாதன், சேனாதிராஜா, சிவசக்தி, ஆனந்தன், முகமது இமாம், பிரேமசந்திரன், பொன்னம்பலம், ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினோம்.

பின்னர் ஆனந்த் சங்கரி தலைமையிலான டி.டி.என்.ஏ. அமைப்பைச் சேர்ந்த சித்தார்த்தன், ஸ்ரீதரன் ஆகியோரைச் சந்தித்தோம். முகாம்களில் உள்ளவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். போர் முடிந்த பிறகு சகஜ நிலை திரும்பிட இந்தியாவின் முயற்சிதான் ஒரே நம்பிக்கை என்றும் அவர்கள் கூறினார்கள்.

வவுனியாவில் 'மணிக் பண்ணை' என்ற இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 8 முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களை சந்தித்தோம். அந்த பண்ணை ஏறத்தாழ 2,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பகுதியை 8 முகாம்களாக பிரித்து ஒவ்வொரு முகாமையும் முள்கம்பி வேலிகளால் தடுத்து வீதிகளின் இருபுறமும் கழிவுநீர் சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே குழாய்கள் மூலமாக குடிநீர் வசதிகள் செய்துகொடுத்துள்ளனர். சில இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அந்த மக்களை நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம். ஒவ்வொரு முகாமிலும் நாங்கள் சென்றபோது ஏராளமான மக்கள் எங்களை சூழ்ந்துகொண்டு தங்கள் குறைகளைச் சொன்னார்கள். உணவு சரியாக வழங்கப்படவில்லை என்றும், தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும், குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்கள். எங்களை எப்படியாவது முகாம்களில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று அவர்கள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர்.

பொதுவாக, அவர்களில் பலபேர் மாற்று உடை இல்லாமல் ஒரே உடையைப் பல நாட்களாக அணிந்திருந்தது தெரிய வந்தது. தண்ணீர் இல்லாமல் குளிக்கவும் மலம் கழிக்கவும் அவர்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தார்கள். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களுக்கு எதிராக மிக நீண்ட வரிசையாக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாத்திரங்களை வழியெங்கும் நாங்கள் பார்த்தோம்.

மேலும், ஓரிரு மாதங்கள் அந்த மக்கள் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மிக மோசமான நிலையை சந்திக்க வேண்டியது இருக்கும். சதுப்பு நிலக்காடுகள் என்பதால் பருவமழை தொடங்கிவிட்டால் அவர்கள் பாடு மிகவும் கொடுமையாக இருக்கும். உட்காருவதற்கு கூட வசதிகள் இல்லாமல் போய்விடும். தொற்றுநோய் தாக்குதல் பரவக்கூடிய நிலை ஏற்படும்.

குழந்தைகள், சிறுவர்கள், வயதானவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிடும். அரசு சில கட்டமைப்பு வசதிகளை செய்து தந்திருந்தாலும் இதுபோன்ற முகாம்கள் மிகக்குறைந்த காலத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மாதக்கணக்கில் லட்சக்கணக்கான மக்கள் அங்கு தங்குவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.

இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து அவரிடம் வன்னித் தமிழ் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் படும் கொடுமைகளை விவரித்தோம். பருவமழை தொடங்கும் முன்பாக அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

அதுபோல, தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிலையை விளக்கிக் கூறினோம். அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கைகளுக்கு அவர் மிக விளக்கமாக பதில் அளித்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஆனால் ஆங்காங்கே கண்ணி வெடிகள் புதைத்து இருப்பதால் அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்பின்னர், இலங்கை அரசின் மறுகுடியமர்த்தும் அமைச்சர் ரிஷாத் பதுர்தீனை சந்தித்துப் பேசினோம். மாலை 3 மணிக்கு இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முகாம்களில் நிவாரணப் பணிகளையும் மறுகுடியமர்த்தும் பணிகளையும் மேற்கொள்ளும் சிறப்புக்குழுவின் தலைவருமான பசில் ராஜபக்சேவை சந்தித்து, முகாம்களில் உள்ள மக்கள் தங்கள் ஊருக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம்.

தற்போது முகாம்களில் உள்ள மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் எல்லை மற்றும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைப் பகுதிகளில் இரு தரப்பினரும் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருப்பதாகவும், அவற்றை நீக்கும் பணியில் இலங்கை ராணுவம் இந்தியா, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ராணுவத்தினர் உதவியோடு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மறுகுடியமர்த்தும் பணிகளில் நில ஆவணங்களை பரிசீலித்து சரியான நபர்களைத்தான் குடியமர்த்தப்போவதாகவும் எனவே, சிங்களர்களையோ ஏனைய சமூகத்தினர்களையோ குடியமர்த்தும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளையும் ஆவணங்கள், படங்கள் மூலம் விளக்கிய பசில் ராஜபக்சே, ஓரிரு நாட்களில் மறுகுடியமர்த்தும் பணிகளைத் தொடங்கி தங்கள் வீடுகளுக்கு அனுப்ப இருப்பதாகவும் கூறினார்.

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து, முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தும் கோரிக்கையை முன்வைத்தோம். தொடர்ந்து அவர்கள் முகாம்களிலேயே இருக்க நேர்ந்தால் ஏற்படக்கூடிய விளைவுகளை எடுத்துரைத்தோம். அவர் எங்களுடைய கோரிக்கைகளை விரிவாக கேட்டு உரிய விளக்கங்களை தந்தார்.

மொத்தத்தில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவதிகளை சந்தித்து வந்தபோதிலும் இலங்கை அரசு அவர்களை மீண்டும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இலங்கை அரசு இன்னும் 2 வாரத்தில் ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.

கடைசியாக, இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேவை சந்தித்து இதே பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித் போகுலகாமாவை சந்தித்தபோது அவர் இலங்கை - இந்திய கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்ர சிங்கேவையும் சந்தித்துப் பேசினோம்,' என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிஞர்
15-10-2009, 02:42 PM
தற்போது கலைஞர் திரைக்கதை வசனத்தில் டைரக்சனிலும் சோனியா காட்சியமைப்பு றோ கூட்டணியில் புதிய வெளியீடு
அகதிமுகாம்களில் மக்கள் வசதியாக வாழ்கின்றார்கள்.
ராஜபக்சவுக்காக புதிய வெளியீடு. டீ.ஆர் .பாலு, கனிமொழி நடிப்பில் சூடான வெளியீடு. எந்த நிமிடமும் திரைக்கு வரலாம். முன்கூட்டி உங்கள் ஆசனங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
ஆதரமற்ற செய்திகளை மன்றத்தில் கொடுத்து குழப்பவேண்டாம்.

வியாசன்
15-10-2009, 03:49 PM
ஆதரமற்ற செய்திகளை மன்றத்தில் கொடுத்து குழப்பவேண்டாம்.


மன்னிக்கவேண்டும் நிர்வாகமே நான் குழப்பவில்லை கலைஞர் என்ன பதில் சொல்வார் என்பதை முன்கூட்டீயே எழுதியிருந்தேன். அவருடைய பதில் இணைக்கப்பட்டுள்ளது இப்போது என்ன சொல்கின்றீர்கள்?
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது என்பதை குழு விளக்கியுள்ளது. இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டுள்ளது என்றார் கருணாநிதி.

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்கள்...

கேள்வி - கண்ணி வெடிகளை காரணம் காட்டி இலங்கை அரசு தாமதம் செய்கிறதே?

முதல்வர் - அங்குள்ள தமிழர்கள் பெயரால் இங்குள்ள ஆர்வலர்கள் கூறும் கருத்து அது.

கேள்வி - தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றப் படுவார்களா?

முதல்வர் - அப்படி திட்டம் இல்லவே இல்லை என்று இலங்கை மறுத்திருக்கிறது.

கேள்வி - உண்மையான முகாம்களை காட்டவில்லை. ராணுவம் காட்டிய முகாம்களை மட்டுமே குழுவினர் பார்த்தனர் என்று பாமக கூறியிருக்கிறதே?

முதல்வர் - நமக்கு காரியம்தான் பெரிது. யார் யார் என்ன சொன்னர்கள் என்பதற்கெல்லாம் பதில் கூற முடியாது.

கேள்வி - எம்.பி.க்கள் குழுவுக்கு இலங்கை அரசு வழி காட்டிய விதம் திருப்தியா?

முதல்வர் - திருப்திதான்.

கேள்வி - மழைக் காலத்தில் முகாம்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுமா?

முதல்வர் - உடனே ஊருக்கு அனுப்புவதுதான் சரியான பாதுகாப்பு. முடியாத பட்சத்தில் மீதியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.

கேள்வி - அனைவரும் வீடு திரும்ப காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?

முதல்வர் - முதலில் 58 ஆயிரம் பேர். மற்றவர்கள் படிப்படியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கேள்வி - முகாம்களில் தமிழர்கள் நிலை என்ன?

பதில் - கொஞ்சம் வசதி குறைவாகத்தான் இருக்கிறார்கள். தங்கக்கூண்டு என்றாலும் அடைக்கக்கூடாது என்பதுதான் பாரதிதாசன் கருத்து.

கேள்வி - இந்த பயணம் பயன் தராது என்று ஜெயலலிதா கூறுகிறாரே?

பதில் - பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி - முகாம்களில் சித்ரவதை நடக்கிறதா?

பதில் - போர் நடக்கும்போது அப்பாவிகள் கொல்லப்படுவதும், சித்ரவதை செய்யப்படுவதும் சகஜம் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அந்த காலம் அது.

கேள்வி - தமிழக அரசும் மத்திய அரசும் அனுப்பிய நிவாரண பொருட்கள் அந்த தமிழர்களை சேர்ந்திருக்கிறதா?

முதல்வர் - சேர்ந்திருக்கிறது.

கேள்வி - முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்படுகிறார்களா?

முதல்வர் - இப்போது இல்லை.

கேள்வி - பிரச்னைக்கு அரசியல் தீர்வு எப்போது ஏற்படும்?

முதல்வர் - அது அடுத்த கட்டம்.

கேள்வி - தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பற்றி ராஜபக்சேவுடன் குழுவினர் பேசினார்களா?

முதல்வர் - அவரிடம் பேச வேண்டியதில்லை.
சோனியாவிடமும், பிரதமரிடமும் பேசியிருக்கிறோம் என்றார் முதல்வர் கருணாநிதி.


பெறப்பட்ட இடம்: http://thatstamil.on...in-15-days.html

praveen
16-10-2009, 08:13 AM
இந்த திரியின் தலைப்பு கேள்விக்கு பதில்

புலிகள்

வியாசன்
16-10-2009, 08:20 AM
இந்த திரியின் தலைப்பு கேள்விக்கு பதில்

புலிகள்

பிரவீன் தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழர்களாக இருந்தால் இந்த கேள்வி எழுந்திருக்காது. அவர்கள் இந்தியர்களாக இருப்பதால்தான் இந்த கேள்வி எழுந்தது. அவர்கள் தமிழர்களாக உணரும் காலம் வரும் அப்போது அவர்களால் குரல் எழுப்ப முடியாமல் போய்விடும்.

சரி உங்கள் பதிலின்படி புலிகள் என்றால் இப்போது அவர்கள் இல்லையே . இப்போது ஏன் தமிழகமீனவர்கள் தாக்கப்படுகின்றார்கள் இதை கேட்பதற்கு முதுகெலும்பில்லை. உங்களால் பதிலளிக்க முடியாமல் போகும்பொது அடுத்தவர்கள் மீது சுட்டிக்காட்டவேண்டாம்.

அமரன்
16-10-2009, 08:00 PM
நண்பர்களே..!

மேதகு பிரபாகரனை தரக்குறைத்தால் சிலருக்குக் கோபம் வரும்.

முத்தமிழறிஞர் கலைஞரை தரக்குறைத்தால் சிலருக்குக் கோபம் வரும்.

இப்படி அபிமானம் பெற்ற தலைவைர்களை தரங்குறைத்தாலோ தாக்கினாலோ அபிமானிகளுக்கு ஆத்திரம் வரும்.

ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு திரியை அந்தரத்தில் விட்டு மன்றத்தை அல்லல்படுத்துவதைத் தவிர வேறெதையும் காணாதது மன்ற வரலாற்றின் சில பக்கங்கள்.

தெரிந்தவர்கள் நிதானித்து நடவுங்கள்.. தெரியாதவர்கள் தெரிந்து நடவுங்கள்.

அப்படியானால் கருத்துச் சுதந்திரம் மன்றத்தில் இல்லையா என்று கேட்பீர்கள்.. நிச்சயமாக உள்ளது.

எந்த விசயத்தையும் உணர்வு பூர்வமாகவோ அறிவுபூர்வமாகவோ கதைக்கும் அளவுக்கு கருத்துச் சுதந்திரம் உள்ளது. உணைவசப்பட்ட நிலையில் கருத்தாடும் சுதந்திரம் மன்றத்தில் கிடையவே கிடையாது.

எதையும் நாகரிகமாக அலசுங்கள். எப்படி அலசுவது எனத் தெரியாதவர்கள் அப்படி அலசப்பட்ட திரிகளைப் படித்துப் பழகுங்கள்.


இது இறுதியான அன்பு வேண்டுகோள்.

நன்றி.