PDA

View Full Version : கணி்னிக் கல்வியின் எதிர்காலம்? இ-தேனி.காம் மோகன்!selvamurali
03-10-2009, 01:27 PM
http://i287.photobucket.com/albums/ll129/selvamurali/mohan.jpg
வணக்கம். இந்த பேட்டி வாயிலாக தமிழ் வணிகம் வாசகர்களுடன் என்னை பற்றியும் எனது பங்களிப்புகள் பற்றியும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்கு தமிழ்வணிகம்.காம் தளத்தினருக் நன்றி.இதோ உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்:

உங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்

எனது பெயர் மோகன் கிருட்டிணமூர்த்தி. நான் மத்திய கிழக்கில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணிணிப் பாதுகாப்புத் துறையில் பணி புரிகிறேன். இ(E) தேனீ Http://www.etheni.com எனும் தமிழ் தளத்தை நடத்தி வருகிறேன். என்னுடைய இணையத் தளத்தில் மற்ற விபரங்களை காணலாம் http://www.leomohan.net.

முதன் முதலில் எழுத வாய்ப்பு எப்படி வந்தது? நீங்களாக தேடியதா? அல்லது வாய்ப்பு உங்களை தேடி வந்ததா?

எழுதும் வாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் இரண்டு வகையான எழுத்துக்களை பற்றி சொல்ல வேண்டும்.

ஒன்று கணினி புத்தகங்களை எழுதுவது. இந்த வாய்ப்பு எனக்கு ஒரு அமெரிக்க நிறுவனம் என்னுடைய கணிப்பொறி பட்டயங்களை இணையத்தில் கண்டு என்னை தொடர்பு கொண்டது. இதுவரை 7 கணினி தொழில்நுட்ப சம்பந்தமான புத்தகங்களை வேறு பலருடன் சேர்ந்து எழுதியுள்ளேன். இதனை சிங்கரெஸ் http://www.syngress.com எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 8வது புத்தகம் விரைவில் வர இருக்கிறது.

தொழில்நுட்பமல்லாத புத்தகங்கள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரை என்னுடைய புத்தகங்கள், புதினங்கள், கதை, கட்டுரைகள் அச்சில் வந்தது இல்லை. இவற்றை நான் மின் புத்தங்களாக http://www.esnips.com/web/leomohan எனும் தளத்திலும் என்னுடைய வலைப்பூ http://tamilamudhu.blogspot.com விலும் வெளியிடுகிறேன். இணைய வாசகர்கள் படித்துக் கருத்திடுவார்கள். மேலும் தமிழ் மன்றங்களிலும் கூகிள் தமிழ் குழுமங்களிலும் பதிக்கிறேன்.

இவை அல்லாமல் Gulf Daily News http://www.gulf-daily-news.com எனும் பஹ்ரைன் தினசரி என்னுடைய ஆங்கிலக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுவான அதாவது சமூகம் அரசியல் கல்வி கலாச்சாரம் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் உள்ளன.

உங்கள் முதல் புத்தகம் எழுதும் அனுபவம் எப்படி இருந்தது? தகவல்களைத் திரட்டுவதற்குச் சிரமப்பட்டீர்களா?

அச்சில் வந்த முதல் புத்தகம் என்றால் அது கணிணிப் புத்தகம் தான். நான் இந்தத் துறையில் பல ஆண்டுகளாக இருப்பதாலும் அந்தத் தலைப்பில் தேவையான மென்பொருட்களைப் பயன்படுத்தி இருந்ததாலும் அதிக சிரமமாக இல்லை.
உங்களுடைய புத்தகம் எழுதும் அனுபவத்தில் சுவராஸ்யமான தகவல்களைக் கூறுங்களேன்.

கணிணிப் புத்தகத்தை விட என்னுடைய தமிழ் புதினங்களைப் பற்றி சொல்லலாம். “மேற்கே செல்லும் விமானம்” எனும் தலைப்பில் ஒரு பாரம்பரியத் தமிழன், அமெரிக்காவில் ஓர் அமெரிக்கப் பெண்மணியிடம் காதல் கொள்ளும் அழகிய கதை. முதல் பகுதி எழுதி வெளியிட்டவுடன் இணைய வாசகர்கள் பலர் முடிவு சோகமாக இருக்கிறது என்றும் அந்தக் காதலர்கள் இணைய வேண்டும் என்றும் வேண்டினர். அதனால் இரண்டாம் பகுதி எழுதத் துவங்கி அந்தப் புதினம் இதுவரை நான்கு பாகங்கள் வெளியிடும் அளவிற்கு பிரபலமாகிவிட்டது. இணைய வாசகர்களின் ஆதரவும் ஊக்கமும் மிகவும் முக்கியமானது. என்னுடைய குடும்பத்தினரும் அதை ஆவலுடன் படித்து கருத்துத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். அந்தக் கதையை பாராட்டி என் தந்தை ஒரு கடிதத்தையும் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.ஒரு குறிப்பிட்ட தலைப்பில் புத்தகத்தை எழுதுவதற்கு முன்னால் என்னென்ன செய்வீர்கள்? வாசகர்களுக்காக விளக்குங்களேன்.

கணிணிப் புத்தகம் என்றால்

1. இதுவரை அந்த தலைப்பில் வேறு புத்தகங்கள் வந்திருக்கிறதா?

2. இதுவரை வந்த புத்தகங்களில் வெளியான தகவல்களிலிருந்து விலகி புதிய தகவல்கள் தர முடியுமா?

3. எளிமையான வாசகங்கள் கொண்டு கடினமான தகவல்களை சொல்வது எப்படி?

4. நிறைய படங்கள் வரைந்து பெரிய கருத்துக்களை எளிமையாக தருவது எப்படி?

இவ்வாறெல்லாம் யோசிப்பேன்.

Fiction எனும் இலக்கிய வடிவங்களில் எழுதும் போது பேச்சுத்தமிழில் இயற்கையாக தோன்றும் வண்ணம் வசனங்களையும், எங்கெல்லாம் தூய தமிழ் பயன்படுத்தமுடியுமோ அங்கு பயன்படுத்தியும், இன்றைய தலைமுறை தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் கலாச்சாரம், தொழில்நுட்பம் இவற்றுடனும் அதே சமயத்தில் கலாச்சாரம், பண்பாடு இவற்றை சம அளவுகளில் கலந்து கொடுக்க முயற்சி செய்வேன்.

இதுவரை ஆங்கிலம்/அரபி மொழிகளில் புத்தகம் எழுதும் நீங்கள் ஏன் தாய் மொழி தமிழில் எழுதவில்லை? தமிழில் உங்களைப் போன்றோர்கள் தாரளமாக எழுதலாமே.....

தமிழில் கதை, கவிதை, கட்டுரைகளை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் தமிழில் ஒரு கணினி தொழில்நுட்பப் புத்தகத்தை எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. நண்பர் முத்தமிழ்மன்ற ரத்தினகிரியின் எளிய தமிழ் தொழில்நுட்பத் தொடர்கள் என்னை எப்போதும் இந்தக் கனவை நோக்கி இழுக்கும். விரைவில் அது நிறைவேறும் என்று நம்புகிறேன்.கணினி தாக்குதல் குறித்து உங்களது கருத்து.... கணினியை பொறுத்தவரை நாள்தோறும் தினமும் தாக்குதல்கள் நடந்துவருகின்றன. இது குறித்து உங்கள் கருத்து என்ன ? அவற்றை எப்படித் தீர்க்கலாம்.

இதைப்பற்றி நான் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் சொல்வது இது தான். உலகம் தோன்றியதிலிருந்து நல்லதுக்கும், கெட்டதுக்கும் இடையில் இருக்கும் போராட்டம் தோன்றி அது உலகும் அழியும் வரையில் தொடரும். எவ்வாறு நாம் பிள்ளைகளை சரியாக வழிநடத்த அங்கு போகாதே, இங்கு போகாதே நேரமானதும் வீட்டிற்கு வந்துவிடு குடிக்காதே போதை பொருளுக்கு அடிமையாகாதே என்றெல்லாம் அறிவுரை செய்கிறோமோ அதுபோலவே இணையத்தில் போகக்கூடாத இடங்கள் பல உள்ளன. நம்மையும் அறியாமல் இந்தத் தளங்களை பல விபரீதமான மென்பொருட்களை கணினிக்குள் நுழைத்துவிடுகின்றன.

இலவசமாக எதுவும் கிடைப்பதில்லை இவ்வுலகில் என்பதை உணரவேண்டும். இலவசங்களுடன் பல பிரச்சனைகளும் கூடவே வரும். அதனால் நல்ல தளங்களுக்கு மட்டும் செல்ல வேண்டும். தெரிந்த மென்பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். முடிந்த வரை காசு கொடுத்து மென்பொருட்கள் வாங்குவது நல்லது. அல்லது நல்ல தளங்களிலிருந்து திறவுமூல (open source) மென்பொருட்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.

நச்சு நிரல்களை அழிக்கப் பயன்படுத்தும் மென்பொருட்களை எப்போதும் புதுமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும். இயன்ற அளவிற்கு பிறருடைய வன்தட்டுக்கள் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். கணினி பாதுகாப்பிற்காக இணைய தளங்களில் கிடைக்கும் அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டும். இதனால் நேரம் மிச்சமாகும். நச்சு நிரல்களினால் வரும் சிரமங்கள் நீங்கும். தகவல் பாதுகாப்பாக இருக்கும்.

கணிணித் தாக்குல்கள் குறித்து சீனா பற்றி செய்திகளே அதிகமாக வருகின்றன. உண்மையில் சீனா தான் அனைத்தையும் செய்கிறதா?

அனைத்தும் கணினி மயமானதால் பலரும் கணினி மூலம் தகவல்களை சேகரிக்க முயல்கின்றனர். காவல் துறையும் சரி, துப்பறியும் துறையும் சரி அல்லது சதிகாரர்களும் கூட கணினி மூலம் இணையம் மார்க்கமாக பல தகவல்களை திரட்டுகின்றனர். வேண்டாதவர்கள் தளங்களை தாக்கியோ பலமிழக்கச் செய்தோ அல்லது தாமதப்படுத்தியோ தங்கள் நோக்கத்தை தீர்த்துக் கொள்கின்றனர்.
சில தாக்கர்கள் (Hackers) அரசாங்க உதவியுடனும் இதை செய்கின்றனர். ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் பெயர் அடிக்கடி அடிபடுகின்றன. இன்னும் சில சிறிய நாடுகளும் இந்தக் காரியங்கள் செய்வதாக தெரிகிறது. தீவிரவாதிகளும் இந்தப் புதுமையான தொழில்நுட்பப் புரட்சி மூலம் தங்களுடைய பழைய தீவிரவாத நோக்கங்களுக்கு புதிய ஆயுதமாக இந்த தாக்குதல்களை செய்கின்றனர். இதில் உண்மை என்ன என்று அறிவது மிகவும் கடினம்.

பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கணினி சார்ந்த படிப்புகளுக்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது. இந்நிலையில் இப்போதுள்ள மாணவர்கள் என்ன செய்யலாம்.?

கணினி என்பதை முதல் பாடமாக ஏற்று படிக்க வேண்டிய அவசியம் இல்லை. கணினி அறிவு என்பது இப்போது அனைத்துத் துறைகளிலும் தேவைப்படுவதால் அதை முதல் பாடமாக கொண்டு படிக்காமல் இதுவரை பயின்று வந்த பொறியியல், மருத்துவம், கலை சார்ந்த பாடங்களைத் தொடர்ந்து படித்துவிட்டு கணினியை தனிப்பட்ட முறையில் கற்கலாம். மருத்துவத் துறைகளில் பல நிபுணத்துவங்கள் (Specialisation) வந்துள்ளன.

மைக்ரோ பயாலாஜி எதிர்காலத்திற்கும் மிகவும் உதவும் என்கிறார்கள். விஞ்ஞான விவசாயம், விமானத்துறை சார்ந்த தொழில்நுட்ப படிப்புகளுக்கும் பெரிய எதிர்காலம் இருக்கிறது. கணினி சார்ந்த படிப்பு என்பது கழுவும் மீன்களில் நழுவும் மீன் போல. இன்று இருக்கும் முக்கியத்துவம் நாளை இருப்பதில்லை. ஆனாலும் அதை முற்றிலும் புறக்கணிக்க இயலாது. அதனால் நாம் இதனை நம் முழுநேரமாகப் பயிலாமல் பகுதி நேரமாகப் பயில்வது நல்லது. முழு நேரத்திற்கு உதவும் நிலையான கல்வி திட்டங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.


நன்றி. வணக்கம்.

http://www.tamilvanigam.com/index.php/historymaker/802-2009-10-03-13-02-56.html