PDA

View Full Version : தமிழ்மண நட்சத்திர பதிவுகள் - ப்ரியன்



ப்ரியன்
21-09-2009, 07:47 PM
1.எழுத ஏதும் அற்றவனாய்…

எழுதுவதற்கு நிறைய இருக்கிறது
வழியனுப்ப வந்தவளின்
கடைசிநேர கண்ணீரின் கனம் பற்றியும்;

ஏதென்று கேட்க ஆளில்லாத தேசத்தில்
ஜூரம் கண்ட நாட்களில்
விட்டத்தை வெறித்தபடி கடத்திய தனிமை பற்றியும்;

கனத்த
கூரான மார் கொண்ட
இவ்வூர்* பெண்களைப் பற்றியும்;

இரவோடு இருளாக
விழித்து நகரும்
சில இரவுகள் பற்றியும்;
அந்நாளில் பிரிவும்
ஆற்றாமையும் கலந்து
தலையணை நனைக்கும்
கண்ணீர்துளிகளைப் பற்றியும்;

இன்னும்
முட்கம்பிக்கு இடையில்
சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும்
எம் இனத்தைப் பற்றியும்;

இவ்வூரின்* அழகை
வறுமையை, அரசியலை
நம்மவர் இங்கு காட்டும்
அக்கிரமமான ஆதிக்கத்தைப் பற்றியும்
எழுதுவதற்கு நிறைய இருக்கிறது.

என்றாலும், சோர்வையும் , சொம்பேறித்தனத்தையும் தாண்டி எழுத ஏதும் அற்றவனாக , விருப்பம் இல்லாதவனாக இருந்த ஒரு நாளில்தான் இந்ந நட்சத்திர அழைப்பு.உண்மையை சொல்வதானால் இதை ஏற்றுக் கொள்ளக்கூடிய , எழுதலாம் என்ற ஒரு மனநிலையில் கண்டிப்பாக இல்லை.என்னத் தோன்றிதோ எது உந்தியதோ தெரியவில்லை.ஒத்துக் கொண்டிருக்கிறேன்.எதுவும் இன்னமும் எழுதவில்லை , இதுதான் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கவுமில்லை , ஆனாலும் தினம் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன்.என்னை நட்சத்திரமாக்கிய ‘தமிழ்மண’த்திற்கு நன்றி.விட்ட இடத்திலிருந்து இந்த ஒரு வாரத்தினால் நான் மீண்டும் எழுத ஆரம்பித்தால் நிச்சயமாக அது தமிழ்மணத்தின் வெற்றிதான்.

* இவ்வூர் – தற்சமயம் பிழைப்புக்காக இருக்கும் கென்யா தேசம்,

—————————————————————————————————————————————

இது மூன்றாவது முறை
உரையாடலை இடையில்
நீ துண்டிப்பது

ஊடலுக்கு நீ சொல்லும்
ஆயிரம் காரணங்களையும்
மொழிபெயர்க்க முடிகிறது
பிரிவாற்றாமை எனும் ஒற்றைச் சொல்லாய்.

அமைதியாய் கழியும்
இவ்விரவில் மெலிதாக காதில் விழும்
அலையின் ஓசையோ
சிலுசிலுக்க பொழியும்
மிதமான தூறலோ
என் வெக்கையை குறைக்கும் அளவுக்கு சுகந்தமானதாக இல்லை.


நீயும் திரும்வாய்
நானும் திரும்புவேன்
நாளைய உரையாடலுக்கு
இன்றைக்கு ஏதும் நிகழவில்லை என்பதாய்

என்றாலும் இப்போதைக்கு
சாளரத்தில் அமர்ந்திருக்கிறேன்
நட்சத்திரம் தொலைத்த வானத்தை வெறித்தபடி.

- ப்ரியன்.

அறிஞர்
21-09-2009, 08:38 PM
எழுத ஏதும் அற்றவனை..
எழுத வைக்கும் எத்தனை எண்ணங்கள்..
தொடர்ந்து மன்றம் வந்து எழுதுங்கள்.. ப்ரியன்.

கா.ரமேஷ்
22-09-2009, 05:07 AM
அருமையான கவிதை தோழரே... எழுதுவதற்க்கு நிறைய இருக்கிறது எழுததூண்டும் மனநிலையைதான் மாயபிம்பம் ஒன்று தடுக்கிறது அதையும் மீறி எழுதுவதில்தான் வாழ்க்கையின் நிலைத்தன்மை அடங்கியிருக்கிறது ...
நிறைய எழுத வாழ்த்துக்கள்..

மஞ்சுபாஷிணி
22-09-2009, 01:19 PM
அருமையான கவிதை... வாழ்த்துக்கள் ப்ரியன்...

ப்ரியன்
26-09-2009, 08:36 AM
மெலிதாக கசியும் இசை…

நேற்று எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து கொண்டிருந்தது அது நிகழும் வரை.
அதே இந்தியப் பெருங்கடல்தான் , இங்கு சற்று வித்தியாசமாக அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளும் , சில நேரங்களில் கடற்கரையே இல்லாமல் போகும் அளவுக்கு பொங்கிவரும்.நேற்றைக்கும் அப்படித்தான் கடல் நன்கு உள்வாங்கி இருந்தது , அறையில் அமைதியாய் உறக்கத்திற்கு தயாராகி கொண்டிருந்தவனை பலவந்தமாய் நண்பர்கள் அழைத்தார்கள் நீச்சல் குளத்திற்கு (நீச்சல் குளம் நிறைய பெண்கள் இருந்ததால் இவர்கள் ஆண்களின் எண்ணிக்கை பலம் காட்ட அழைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது தெரியாது).அங்கே போனால் , கடலில் நடப்போம் வாங்கன்னு ஒருத்தன் அழைக்க எல்லோரும் சென்றோம்.
ஒரு 100 அடி நடக்கும் வரை எதுவும் தெரியவில்லை.கலங்கலில்லா கடல் , நீருக்கு அடியில் தெரியும் வெண்மணல் , வர்ண மீன்கள் , கடல்த் தாவரங்கள் , மூச்சுவிடும் சின்னச் சின்ன பவளப்பாறைகள் எல்லாம் இடுப்பளவு கடல் தண்ணீருக்கடியில் , இடையில் நறுக்கென ஏதோ குத்தியது போன்ற உணர்வு இறந்துபோன பவளப்பாறையாக இருக்கும் என முன்னேறிப் போனால் இப்போது வலதுகாலில் நறுக்கென குத்தியது போக அடியில் ஏதோ நகர்வதாய் தோன்றியது.பயத்துடன் தண்ணீரில் துலாவினால் , முள்ளம்பன்றி போன்ற ஒரு உயிர் அதன் மேல் கால் வைத்தப்போதுதான் இந்த நறுக்.கருப்பு வர்ணத்தில் பெரிய எலுமிச்சை அளவில் எட்டு பக்கமும் 4 அங்குல நீளத்தில் முட்களை உடலில் தாங்கியபடி அது மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தது.பதறி அடித்து , கடல் விட்டு வெளியே வந்தால் கால் முழுவதும் முட்கள்.இது விஷமில்லை ஆனாலும் முள்ளை முடிந்தவரை சீக்கிரம் எடுத்துவிடுங்கள் என்று அங்கிருந்த மீனவர் ஒருவர் சொன்னார்.ம் முள் எடுப்பதிலேயே நேற்றைய காலம் முழுதும் முடிந்தது.இனி கடலில் சுறாக்களுக்காக மட்டுமில்லை இம்மாதிரியான சின்னச் சின்ன உயிர்களுக்காகவும் இறங்கவே யோசிக்கத்தான் வேண்டும்.

Sea Urchin

படங்கள் : கூகிள்

நம்ம ஆளுங்கதான்
*

கரு நிற பறவையின் சிறகால்
அணைப்பட்ட நேற்றைய இரவின்
கனவில்
நீ என்னைப் பற்றிய கனவில் இருந்தாய்.
பெரும் வனத்தை எரிக்குமொரு
சிறு தீயுடன்
நீளும் பாதையொன்றில் நடந்தவனை
நீ புன்னகையோடுப் பார்த்திருந்தாய்
தரைப் போர்த்திய சருகுகளையும்
நீண்டு நிற்கும் வனவிருட்சங்களையும்
கடந்து – நான்
தொலைந்த சமயத்தில்
பற்றி எரியத் தொடங்கியது
அவ்வடர் கானகம்
கூர்வாளினால் கிழிப்பட்ட
வலி கண்டவளாய்
மாறுகிறது உன் முகம்
பீதியில் நடுநடுங்கி
உன் விழியோரம் துளிர்த்து
உதிர்ந்த ஒற்றைத்துளியின் அடர்த்தியில்
சட்டென அணைந்து
அடங்குகிறது பெருந்தீ
மென்னகையோடு நாம்
அணைத்துக் கொள்ள
சாம்பலான மூங்கிலிலிருந்து
கசிகிறது
இசை, மெலிதாக.
- ப்ரியன்

ப்ரியன்
26-09-2009, 08:38 AM
யாவரும் நலம்…

*
வானம்
வெறித்து அமர்ந்திருந்தாள்
கிழவி.

ஒட்டிய வயிறும்
கிழிந்த உடையுமென
மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது
ஓர் பிள்ளை

சப்பத்து சப்தம்
கேட்டு நடுநடுங்கி விழுந்தான்
இளையவன்

தூரத்தில் எங்கோ
கேட்டது இன்று
கண்ணில் பட்டவளின்
கதறல்

மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த
புத்தனின் அன்னம்
சுட்டு வீழத்தப்பட்டது
உளவு குற்றம் சுமத்தி

துப்பாக்கி வாசத்தோடு
வந்தவர்கள் புத்தனின்
காதில் ஓதினார்கள்
யாவரும் நலமென்று

புத்தனும் புன்னகையோடு
கேட்டு தலையாட்டினான்
அன்னம் திரும்பாததன்
பற்றிய கேள்விகூட எழுப்ப இயலாமல்

- ப்ரியன்.

பென்ஸ்
28-09-2009, 03:07 PM
அன்பு ப்ரியனின் அதே காட்டமான வரிகள்...
காதல் சொன்னவை இப்போது பிரிவாற்றாமை சொல்கிறது...
எத்தனை துயரமானவை என்பது உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்...

காதலிப்பவனுக்கு காதல் கவிதையின் ஆழம் புரியும்...
காதலியை ஒரு கணமேனும் பிரிந்தவனுக்கு பிரிவின் வலி புரியும்...
மீன்டும் எழுத துவங்கியதில் இந்த ரசிகனுக்கு இன்பமே, ஆனாலும் இந்த வரிகளல் வலி அதிகம் தான்.
நாயகன் நாடு திரும்பவும், நாயகி நாயகனை சேரவும் என் வேண்டுதல்கள்...

உங்கள் கவிதைகளை நோக்கி மீண்டும் அதே கேள்வி ப்ரியன்...
என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...!!!!

வானதிதேவி
28-09-2009, 04:26 PM
சுகத்தை அனுபவித்து கொண்டாடிய அன்பு சகோதரருக்கு சோகத்தையும் தாங்கிக் கொள்ளும்(கொல்லும்) உள்ளம் உறுதி நிலை பெற இறைவனை இறைஞ்சுகிறோம்.

சிவா.ஜி
28-09-2009, 04:43 PM
ப்ரியனின் வரிகளை சிலாகிக்க வரிகளமைக்க வார்த்தைகளில்லை. உணர்ந்ததை உரைக்கும் அழகு வரிகள். உணர்வதை உணர்த்தும் அர்த்த வரிகள்.

வாழ்த்துகள் ப்ரியன்.