PDA

View Full Version : கனவு இயந்திரங்கள்.த.ஜார்ஜ்
21-09-2009, 10:56 AM
பஸ்ஸை விட்டு இறங்கிய போது கவியரங்கம் தொடங்குவதற்கான நேரம் ஆகியிருக்கவில்ல.

இவன் கடையில் சிகரெட் வாங்கி நெருப்பெற்றிக் கொண்டான். கடையின் முன் கட்டி தொங்க விடப்பட்ட பத்திரிகைகள் உயிருக்குப் போராடுவதுபோல் படபடத்துக் கொண்டிருந்தன. எழுத்தைக் கூட இங்கே விற்கிறார்கள் என்ற வினோத எண்ணம் ஏனோ எழுந்தது.

தோளில் பையும் முகத்தில் களைப்பையும் மாட்டிக்கொண்டு வேலை முடித்து நிறைய பேர் போய்க் கொண்டிருந்தார்கள்.நின்று கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து ஒரு பெண் வெறித்து பார்த்த போது, இவன் பக்கத்தில் நின்றிருந்தவன் அவசர அவசரமாக தலைவாரிக் கொண்டன்.

இவனுக்கு ஷீலா ஞாபகம் வந்தது.

“ஷீலா என்னை புடிச்சிருக்கா... நான் எப்படி இருக்கேன்.”

“ நான்... நான்... எப்படி?”

“ஸாரிப்பா. நானே சொல்றேன்... ம்.. சப்பை மூக்கு, குண்டு கண்,
ஒடுங்கின கன்னம், உன்னளவுக்கு இருக்க மாட்டேம்பா... “

“ நான் என்ன அவ்வளவு லட்சணமாவா இருக்கேன்.”

“ ம் களையா இருக்கே தெரியுமா.”

“அதென்ன களை..”

“சிவப்பா, மூக்கும் முழியுமா....’

“மூக்கு சரி. முழி எங்க இருக்கு.எனக்குதான் அது இல்லையே”

ஓ! குத்தி காட்டி விட்டேனோ. தர்ம சங்கடமான நினைவுகள்.

இவனுக்கு நடக்க வேண்டும் போல் இருக்கிறது. பஸ் நிலையத்திலிருந்து வெளியேறி நெடுஞ்சாலையில் நடக்கிறான். ஜங்சனில் கட்சிக் கூட்டம் நடந்து கொண்டிருக்க, பாக்கெட்டை தொட்டுப்பார்த்தான். எட்டாய் மடிக்கப்பட்ட காகிதமும்,பேனாவும் இருந்தது.

சிகரெட்டை சுண்டி எறிந்தான். சாக்கடையில் விழுந்து செத்துப் போன அந்த சிகரெட்டுக்கு மௌன அஞ்சலி செலுத்துவது போல் நின்றிருந்த போது மேடை வார்த்தைகள் எதிரொலித்தன. ‘ஆளுங்கட்சி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இல்லையெனில் பயங்கர....’

மணி ஐந்தான போது கவியரங்கம் போனான்.பேப்பரோடும், பேனாவோடும், தோளில் பையோடும் ஐந்தாறு பேர் இருந்தார்கள்.கைதட்டவென்று நாலைந்து பேர்.கவிதை பாட வந்தவர்களில் பாதிபேர் சிந்தனையில் அழ்ந்திருந்தார்கள்.எதற்கோ துக்கம் கொண்டாடுகிற மாதிரியிருந்தது.காதலித்த சோகமோ...?

இவன் போய் அறிமுகப்படுத்திக்கொண்ட போது பைத்தியத்தை பார்க்கிற மாதிரி பார்த்தார்கள்.சற்று தள்ளி இருவர் சீரியசாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“ நான் நிறைய பத்திரிகைக்கு அனுப்புறேன்.போடமாட்டேன்கிறாங்கடா.”

“பாதை பத்திரிகைக்கு அனுப்பேன்”

“அவன் பணம் தரமாட்டான் பாவி..”

“பிளாக்ல எழுதேன்.”

கவிதை எழுத இவன் முறை வந்தது.பாக்கெட்டில் மடக்கி வைத்திருந்த காகிதத்தை பிரித்து ஆவேசமில்லாமல் வாசித்தான்.

‘...... எனக்கு புரியவில்லை,
சன்னல்களை அடைத்து
பகலை எனக்கு பகையாக்கி
வைத்திருந்தார்கள்.
இந்த தென்றல் எந்த வழியாக நுழைந்தது.
.......
.......
ஓசைகளால் தெரியும் என் உருவத்திற்கு
எந்த பார்வையை பாஷையாக்கப் போகிறாய்.
பரவாயில்லை.
உன் விழி நீர் துடைக்க நீளும்
என் விரலைப் பிடித்துக் கொள்.
நாம் நடப்போம்.’

இவன் முடித்தபோது கைதட்டினார்கள்.காகிதத்தை மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஓரமாய் வந்து உட்கார்ந்தான்.அவசரமாய் நாலைந்து பேர் சூழ்ந்து கொண்டார்கள்.

“சார்.அட்டகாசம் சார்.எல்லாருக்கும் பிடிச்சி போச்சி.”
லேசாய் போதை தலைக்கேறியது.

“தூள் சார். அந்த சோகம் நெஞ்சை தொட்டது சார்.பிரமாதமான கற்பனை”

கற்பனை இல்லை நண்பனே.வாழ்க்கை.என் வாழ்க்கை என்று சொல்லத் தோன்றியது. சொல்லவில்லை. மெல்ல புன்னகைத்து வைத்தான்.

“சார் இப்படிதான் கவித இருக்கணும்.சமுதாயத்தை குத்தி கிழிக்கிற மாதிரி.. பை தபை என் பேர் பாரதிபிரியன்..”

“ நீங்க ஏன் சார் பத்திரிகையில எழுதக் கூடாது?”

“இந்த கவிதையில என்ன சார் சொல்ல வரீங்க. ஒண்ணுமே புரியலை”

ஆளாளுக்கு விமர்சனம் என்று நினைத்து என்னென்னவோ சொன்னார்கள்.

“சாருக்கு மேரேஜ் ஆகிவிட்டதோ..” பாரதிபிரியன் கேட்டார்

“ம்” என்றான்

“ நினைச்சேன்.... வீடு எங்க இருக்கு.”

சொன்னான்.

“சும்மா அப்படி வரும்போது பார்க்கலாம்ல...” என்றார்.

வீட்டுக்கு வந்து ஷீலாவிடம் வரி விடாமல் எல்லாவற்றையும் சொன்னான். சந்தோசத்தில் இவன் முகத்தை மார்பு பிதுங்க அணைத்து முத்தமிட்டாள்.இவன் முகத்தை தடவி “அவ்வளவு பெரிய ஆளா நீங்க..” என்றாள்.புருசனின் திறமைக்கு இருக்கும் மதிப்பை நேரடியாக உணரவேண்டும் போல் இருந்தது.

“என்னங்க....”

“என்ன..?”

“அடுத்த தடவை போகும்போது என்னையும் கூட்டி போறீங்களா?”

“ஏம்பா.. திடீர்னு”

“அந்த சூழ்நிலையை நான் ரசிக்கணும் போல இருக்கு. நீங்க கவிதை படிக்கிறது, கைதட்டி உங்களை வாழ்த்துறது, எல்லாரும் பேசறது.இதுவரைக்கும் நான் பார்த்ததில்லையா.. ஸாரி.. கேட்டதில்லையா.. அதான் ஆசையாயிருக்கு.” சந்தோச மிகுதியால் திணறி திணறி..பெண்ணே உன் ஆசைகளை நான் நிறைவேற்றுகிறேன்.

மறுமுறை போனபோது கூட்டி போனான்.இன்று கொஞ்சம் அதிகமாகவே கூட்டம் இருந்தது.இவனோடு இவள் ஒட்டியே நடப்பதைப் பார்த்து நிறைய பேர் முகம் சுளித்தார்கள். “பொது இடத்தில இப்படிதான் உரசிகிட்டே நடக்கணுமா. இது என்ன பார்க்கா.. பீச்சா..” காதுபட முணுமுணுத்தார்கள்.

இவனுக்குள் ஏறியிருந்த போதை திடீரென்று இறங்கிவிட்ட மாதிரி இருந்தது.

முன் வரிசையில் வந்து உட்கார்ந்தபோது போனமுறை அக்கறையாய் விசாரித்த பாரதிபிரியன் வந்தார்.

“யார் சார் இது.” கேள்வியில் கேலி இருந்தது.

“மனைவி”

“ஒ..”என்றவர் ரகசியமாய் தொடர்ந்தார். “என்னதான் இருந்தாலும் பப்ளிக்கா நீங்க இப்படி நடந்துகிட்டா.. பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க..”

இவன் பதில் சொல்லுமுன் இன்னொருவன் அவசரமாய் குறுக்கிட்டான்.”அவங்க குருடா..”-கொச்சைதனமான வார்த்தைகள்.

கோபத்தை அடக்கிக் கொண்டு “ம்” என்றான்.

பாரதிபிரியன் “ப்ச்” என்றார்.”ஐம் ஸாரி”

பின்னாலிருந்து ஒருவன் இவனை பாராட்டுகிறோம் என்ற எண்ணத்தில் சொன்னான். “கிரேட் சார். உங்க திறமைக்கு வரிசையா எவ்வளவு பொண்ணுங்க வந்திருக்கும். நீங்க எப்படி இவங்களை... ஆமா உங்களுக்கும் ஏதாவது குறைபாடு இருக்கா”

சட்டென்று இவன் ஷீலாவைப் பார்த்தான். விழியில் விழத்தயாராய் கண்ணீர். எழுந்தான்.எல்லா கண்களும் இவர்களையே பார்த்துக் கொண்டிருக்க இவன் அவளை அணைத்தபடி வெளியேறி நடக்க ஆரம்பித்தான்.

‘உன் விழி நீர் துடைக்க
நீளும்- என் விரலைப்
பிடித்துக் கொள்.
நாம் நடப்போம்’


நன்றி:கீற்று.காம்

கா.ரமேஷ்
21-09-2009, 11:06 AM
அட்டகாசம் தோழரே...
நல்லதொரு படைப்பு வாழ்த்துக்கள்... பலபேர் கண்ணிருந்தும் குருடர்களே...

////
‘உன் விழி நீர் துடைக்க
நீளும்- என் விரலைப்
பிடித்துக் கொள்.
நாம் நடப்போம்’

/////
நல்லதொரு வரிகள்...

samuthraselvam
22-09-2009, 09:05 AM
வாழ்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது... என்ற பாடல் வரிகளுக்கு உதாரணமாக இருக்கும் கதை இது... வாழ்த்துக்கள் ஜார்ஜ்... நம் சமூகம் ஒருவனது பாசத்தை ஒருவனது தியாகத்தை ஒருவனது மனதை எவ்வளவு கீழ்த்தரமாக பார்க்கிறது.... மாறுமா இந்த சமூகம்?

மஞ்சுபாஷிணி
22-09-2009, 03:25 PM
அழகான கவிதையுடனான கதை... கண்ணிருந்தும் குருடராய் ஜனங்கள்... மிக அருமையான கதை பால்ராஜ். நன்றி...

அறிஞர்
22-09-2009, 03:43 PM
உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை.....

இது தங்கள் கதையா?? மற்ற தளத்திற்கு நன்றி கூறிவதால் சந்தேகம் வந்தது.

மற்ற தளத்திலிருந்து எடுக்கப்படும் மற்றவருடைய கதைகளை "படித்ததில் பிடித்தது" பகுதியில் பதியவும்.

த.ஜார்ஜ்
23-09-2009, 07:57 AM
இது தங்கள் கதையா?? மற்ற தளத்திற்கு நன்றி கூறிவதால் சந்தேகம் வந்தது.

மற்ற தளத்திலிருந்து எடுக்கப்படும் மற்றவருடைய கதைகளை "படித்ததில் பிடித்தது" பகுதியில் பதியவும்.

இது நான் எழுதி மற்ற தளங்களில் வெளிவந்த கதை. அப்படிப்பட்டவைகளை இங்கே பதிப்பதில் ஏதும் தடை இருக்கிறதா என்பதை தயவு செய்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.

அமரன்
23-09-2009, 08:00 AM
கீற்றுக்காக நீங்கள் எழுதியது எனும் போது ஆட்சேபனை இல்லை ஜார்ஜ். மன உளைச்சலுக்கு மனப்பூர்வமான மன்னிப்பு கோருகின்றேன்.

அமரன்
23-09-2009, 09:21 AM
அலுப்புத்தட்டாத ஓட்டம்; ஆங்காங்கே "எழுத்துகளை விற்கும் வினோதம் போன்ற" புருவம் உயர்த்தும் வசனம்; எனப் பலத்துடன் உணர்வலைகளைக் கிளப்பியபடி கதை பயணிக்கிறது.

பாரதிப்ரியன் விசித்திரப் படைப்பு:)

கருப்பொருள் பின்னல் தடிமனானது. பலவாறு விசாலித்து புனிதமான அன்பைக் (காதலைக்!?) கொச்சைப் படுத்துவோரை இலக்கு வைக்கிறது.

காதலில் போரையும் போரில் காதலையும் கண்ட சிலி நாட்டுக் கவிஞன் புருடாவின் நினைவு தினமான இன்று இப்படி ஒரு கதை படிக்கக் கிடைத்தமை பாக்க்கியம்.

உள்ளூறும் உணர்வுகளை திரட்டிக் கவிதை செய்யும் கவிஞன், சொட்டும் அவமானங்களை சேமித்து வைக்க வேண்டும். கணப்பொழுதில் அது மடை உடைத்துப் பாயவேண்டும். தடைகளை அகற்ற வேண்டும்.

மண்வாசனை வீசும் கவித்தென்றலாக கதை முடிவுகள் இருப்பது இதமானது. திமிலெடுத்த காளையாக சீறிப்பாய்ந்து மௌனத்தை ஆரவாரங்களாகப் பெற்று கவித்துவத்துடன் முடியும் கதைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் அதை விட அதிகமானவை. அதை இங்கே புகுத்திப் பார்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

பாரதிரியர்களை (கதையில் வரும் மாந்தனைக் குறிக்கவில்லை) உருவாக்கும் சக்தியுடைய* இதுபோன்ற கதைகள் பிறக்கவேண்டும்.

பாராட்டுகள் ஜார்ஜ்.

நேசம்
23-09-2009, 11:09 AM
பார்வையிருந்தும் குருடர்களாய் மக்கள் ... உணர்வுபூர்வமான கதை.உங்கள் படைப்பாக இருக்கும் பட்சத்தில் மற்ற தளங்களில் இருந்து எடுத்து கொடுப்பதில் சங்கடம் வேண்டியதில்லை..வாழ்த்துகள்

தாமரை
23-09-2009, 12:19 PM
எல்லா ஆண்களின் எல்லா செயல்களிலும் துளியாவது சுயநலத்தை எதிர்பார்க்குது சமூகம்..

இதனால் இவருக்கு என்ன இலாபம் என்று இலாப நஷ்டக் கணக்கைப் பார்த்தே பழகிப்போன உலகம.

ஆனாலும் (தங்களுக்கு) பலனில்லாத கவிஞனுக்கும், (பதவி, வசதிகளுடன் கூடிய)
பலன் தரும் பழ தருக்களுக்கும் மனிதர்கள் காட்டும் வித்தியாசம் ஒன்று இருக்கிறது. முன்னும் பின்னும் பேசும் வார்த்தைகளின் நொடிகளில் மாறும் நெடிகள்

(திறமைக்கு மதிப்பு இருந்திருந்தால், இப்படிக் கால்காசுக் காண 10 பேர் கூட்டத்திலா கவிதை படிப்பார் அவர்? இல்லையல்லவா?

திறமை இருப்பது வேறு, திறமையை உபயோகிப்பது வேறு.. :D :D :D)

தன்னை விட உயர்வாகத் தெரியும் ஒருவனை (தனக்குப் பலனில்லாதவனை) வேறு குறை என்ன இருக்கிறது என்று பார்த்தே பழகி விட்டது நரிக்கூட்டம்.

"சமுதாயத்தைக் குத்திக் கிழிப்பது மாதிரி" விமர்சனத்தைப் பார்த்ததும் கவிதையை திரும்பப் படித்தேன்.. புள்ளிகளை நாமதான் நிரப்பிக் கொள்ளணும் போல என நினைத்துக் கொண்டேன்.

மனிதங்களை புரியாதவங்க பாராட்டு - தேவையா? இந்தக் கேள்வியைக் கடைசியில் ஒரு சாதாரண வெளிநடப்பில் காட்டி இருக்கீங்க.

கதையில் இருக்கிற கவிதையை விட

மௌனமான வெளிநடப்பு!

இதான் சமூகத்தை குத்திக் கிழிக்கும் கவிதைன்னு சொல்லணும்.

அந்த நிராகரிப்பில் உள்ள கவிஞனின் கர்வத்தைக் காட்டத் தவறிட்டீங்க என்று நினைக்கிறேன். மனைவி மேல இருக்கிற அன்பு மட்டும் காட்டியிருக்கீங்க.

சரியா?

சிவா.ஜி
25-05-2012, 10:14 PM
நான் வாசிக்கத் தவறிய கதை. வாசித்திருக்க வேண்டிய கதை. அற்புதமான கதை. வாழ்த்துக்கள் நண்பா.

கீதம்
02-06-2012, 09:55 AM
எண்ணமும் எழுத்தும் முரண்படும் மாந்தர்க்கிடையில் இரண்டும் ஒன்றாய் இணைந்த உள்ளங்களின் இருப்பு தர்மசங்கடமே. அழகான காட்சியும் கவிதையும். இறுதிவரிகளில் விரல்பிடிக்கத் துடிப்பது ஷீலா மட்டுமல்ல, வாசகர் உள்ளமும்தான். பாராட்டுகள் ஜார்ஜ்.