PDA

View Full Version : இன்னும் எத்தனை நாள் திரும்பி போக



Ravee
19-09-2009, 06:15 PM
இன்னும் எத்தனை நாள் திரும்பி போக



தாயகம் திரும்பினேன் இரு வருடம் கழித்து
கண்களில் பட்டவர்கள் எல்லாம் சொந்தமாய் தோன்றியது. முதலில் கேட்க்கும் தமிழ் வார்த்தைக்காக காதுகள் ஏங்கின.

" போடா சாவுகிராக்கி " என் கைல ராங்கு காட்டாதே என்ற டாக்சி காரனை புறம் தள்ளி வந்த ஆட்டோ காரன் "வா சார் எங்க போனும்" என்றான். இடம் சொன்னேன் எவ்வளவு என்றேன்.

இருநூறு ரூபாய் என்றான். ஏன் ? என்றேன்.

பிளைட் ஏறும்போது பேரம் பேசினியா என்றான் .

முடியவில்லை பொடிநடையாய் பேருந்தை நோக்கி நகர்ந்தேன் . போது பாரு சாவுகிராக்கி

இப்போது ஆட்டோ காரனும் டாக்சி காரனும் நண்பர்கள் ஆகி போனார்கள் . வீட்டு வாசல் அடைந்தேன் . வாயெல்லாம் புன்னகை

கைகளில் இருந்த இரண்டு பெட்டிகளை மட்டும் பார்த்து கொஞ்சம் மங்கித்தான் போனது

பெட்டி எல்லாம் இவ்வளவுதானா அர்த்தம் புரிந்தது ....சீண்டிப்பார்க்க ஆசைப்பட்டேன்

ஆமாம் அவ்வளவுதான் . என்ன பெட்ரோல் கிணத்தை கொண்டுவருவேன்னு பார்த்தியா என்றேன் .


டிவி என்றாள்.

வாங்குவோம் என்றேன்

மகள் கம்ப்யூட்டர் என்றாள்

வாங்குவோம் என்றேன்

மகன் பைக் என்றான்

வாங்குவோம் என்றேன்



ஒருவார பொழுது சந்தோசமாய் கழிந்தது

என் கைஇருப்பும் கரைந்தது



அரைகுறை உறக்கத்தில் இருந்த என் காதுகளில்

கேட்டது வாசலில் நடந்த அரட்டை அரங்கம் .

அங்க எல்லாம் பவுன் என்ன விலையாம் ? ?

அங்க எல்லாம் ஒட்டக கறிதானா சாப்பிட .

என் கழுத்து லேசாக வளைந்ததுபோல் இருந்தது . இப்படியாக ஒரு விவாத அரங்கம் நடந்துகொண்டு இருந்தது. பொழுது போகாமல் பைக்யை எடுத்துக்கொண்டு பழைய நண்பன் வீட்டுக்கு போனேன். வரவேற்றவன் வாடா என்ன வெறும் கையோட வந்து இருக்க என்றான் .புரியவில்லை அதான் சரக்கு ஒன்னும் கொண்டுவரலியா என்றான் .கஸ்டம்ஸ் ஆபிசர் எடுத்துக்கொண்டான் என்றேன் . மனமார சபித்தான் ,ஆபிசரையும் என்னையும் .சரி என்ன இன்னும் பழைய மோதிரம் என்றான் இது ராசிடா என்றேன் மாப்ள நீ சுத்த வேஸ்டுடா என்றான் .

அவன் கொடுத்த சான்றிதழுடன் கிளம்பினேன்

வீட்டுக்கு வந்தால் ஒரே கூச்சல் இவர யாரு வண்டியை எடுத்துகிட்டு போக சொன்னா... மகன் கூப்பாடு போட்டுகொண்டு இருந்தான்

என்னை ப்பார்த்தவுடன் வீடு அமைதியாய் போனது . இல்லை டியூஷன் போணுமாம் அதான் என்று மனைவி இழுத்தாள். சாவியை கொடுத்து விட்டு நகர்ந்தேன் . மகளின் கம்ப்யூட்டர்ரை ஆன் செய்தேன் .அப்பா கஷ்ட்டப்பட்டு வாங்கித்தந்த கம்ப்யூட்டரில் முகப்பில் அஜித் சிரித்துக்கொண்டு இருந்தான். தலைவிதி என்று நொந்து கொண்டு விலகி போனேன் .பசிக்குது சாப்பிடலாமா என்றேன் . இருங்க கோலங்கள் முடியட்டும் , போனவாரம் கூட தேவயானி இதே பொடவ கட்டிஇருந்தா அப்ப கூட எடுப்பா இல்லை .

புது டிவில தான் பளிச்சுன்னு இருக்கு என்றாள்.

கோவம் தலைக்கு ஏற கத்தினேன் . ஒரு நிமிடம் நின்று பார்த்தாள். காலையில இருந்து சும்மாவே இருகிங்களா அதான் அடிக்கடி பசிக்குது என்றாள். வார்த்தையின் உக்கிரம் நெஞ்சில் பாய்ந்தது. யாரை பார்த்து சும்மா இருக்கன்னு சொன்ன என்று சீற ஆரம்பிக்க,
கண்களில் போல போலவேன கண்ணிருடன், ரெண்டு வருஷம் கழிச்சு வந்து அன்பா பேசினாரா , என் தலைவிதி முனங்கி கொண்டே உள்ளே போனாள்.

என் சொந்த வீட்டிலேயே நான் அந்நியமாய் போய்க்கொண்டு இருந்தேன் .கண்கள் காலண்டரை மேய்ந்தது , இன்னும் எத்தனை நாள் திரும்பி போக என்று .

கீதம்
19-09-2009, 10:19 PM
யதார்த்தம் நிறைந்த கதை. 'யாரும் இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே' என்ற பாடல் வரிகளை நினைவூட்டியது. பாராட்டுகள் ரவீ அவர்களே!

Ravee
20-09-2009, 12:40 AM
நன்றி கீதம் அவர்களே அரபு நாடுகளில் கஷ்ட பட்டு சம்பாதித்து திரும்பும் என் நண்பர்களின் வாழ்க்கையில் சந்தித்த சில ஏமாற்றங்களையே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். வெளிநாடுகள் போய் சம்பாதிக்கும் பொழுது தேவைகள் கிடைத்தாலும் உறவுகள் கொஞ்சம் விலகித்தான் போகிறது.

பாரதி
20-09-2009, 01:15 AM
கதை இயல்பாக இருக்கிறது நண்பரே. பாராட்டுகிறேன்.

பால் இராசையா அவர்களின் கதையை மீண்டும் ஒரு முறை இக்கதை நினைவூட்டியது.

இவ்வுலகில் எங்கும் எதிர்பார்ப்பே நிரம்பி இருக்கிறது. அயலகத்தில் படும் சொல்லொண்ணா துயரங்களைத் தாண்டி உயிர்ப்புடன் வைத்திருப்பது விடுமுறை, தாயகம்; வீடு; சொந்தம்; நட்பு ஆகியனவே. இங்கிருப்போரின் எதிர்பார்ப்போ.......?

எதிர்பார்ப்புகள் இல்லையென்றால் ஏமாற்றங்கள் இல்லை.

ஓவியன்
21-09-2009, 07:53 AM
அரபு நாடுகளில் இரண்டில் தொடர்ச்சியாக வேலைபார்த்துக் கொண்டிருக்கும் அனுபவம் இருப்பதால், இந்தக் கதையின் யதார்த்தம் தெளிவாகப் புரிகிறதெனக்கு....

சுட்டெரிக்கும் வெயிலில்,
வாயைக் கட்டி,
வயிற்றைக் கட்டி,
சொந்தங்களுக்காக
உழைக்கும் அவர்களின் உழைப்பினை...

போற்றத்தான் வேண்டாம், தூற்றாமலாவது இருக்கலாமே.....

நல்ல கருவினைச் சுமந்த கதையினை மனதாரப் பாராட்டுகிறேன்..!! :icon_b:

கா.ரமேஷ்
21-09-2009, 08:39 AM
அருமையான கதை தோழரே...
யதார்த்தின் வலி சொல்லும் கதை பாராட்டுக்கள்..

த.ஜார்ஜ்
21-09-2009, 11:02 AM
ஆகா.. ஒரு கவிதை போல கதை... அது வெளிப்படுத்தும் நிதர்சனம் கலங்கவைக்கிறது.

Ravee
22-09-2009, 01:47 AM
நன்றி தோழர்களே அயல் நாட்டில் அல்லல்படும் நம் தோழர்களின் வாழ்வில் அமைதி இருக்கட்டும் ஆண்டவனை பிராத்திப்போம்

அமரன்
22-09-2009, 08:16 AM
டிவி, வோஷிங்மெஷின், பைக், நகை, பெரியபடிப்பு, வசதி.. இவறுக்காக*த்தானே குடும்பத்தை விட்டு தேசம் கடந்தோம். இவற்றுடன் சந்தோசமாக இருக்கிறார்களே.. அது போதும் என்ற திருப்தியுடன் காலத்தை களிக்க வேண்டியதுதான்.

பாராட்டுகள் ரவீ.

samuthraselvam
22-09-2009, 09:15 AM
இயல்பான கதை.... சிவா அண்ணாவின் இனிமே வரவே மாட்டியாப்பா? என்ற கதை நினைவுக்கு வருகிறது.... வாழ்த்துக்கள் ரவீ...

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247

மஞ்சுபாஷிணி
22-09-2009, 12:49 PM
மிக அருமையான நிதர்சனங்கள் சுமந்து வந்த கதை...

எத்தனை உண்மையான வார்த்தைகள்...

வெளிநாட்டில் இருந்து வந்தால் என்னவோ சொர்க்க லோகத்தில் இருந்து வந்தது போல் தான் நினைக்கிறார்கள். வெளிநாட்டிலும் உழைத்து சோர்பவரை கண்டிருக்கிறேன்... தினக்கூலிக்காக குறைந்த சம்பளத்துக்காக ரோட்டில் ஓரத்தில் செடி கொடிகளை அழகுபடுத்த வெட்டுபவருக்கு சம்பளம் மிக குறைவு. ரோட்டில் சுடும் வெயிலில் கடும் பனியில் வேலை செய்துவிட்டு சொந்த நாட்டிற்கு போகும்போது வெளிநாட்டில் இருந்து போனால் கோட்டு சூட்டோடு தான் போகனும் என்பது போல் வியர்வை நிறைந்த கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு ஊருக்கு போனால் முதலில் வாயை பிளக்கும் ஜனங்கள்... பின் திடிர்னு வேலை போய் சொந்த வீட்டில் போய் நின்றால் முகத்தை குமட்டில் இடித்துக்கொண்டு முகம் திருப்பிக்கொண்டு போகும் உறவுகள்.... இப்ப அதுவும் குறைந்து சும்மா ரெண்டு மாத லீவுக்கு போனாலே அப்படி ஆகிவிட்டதா? மிகவும் கஷ்டமாக இருக்கிறது... அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கி இந்த மெஷிந்தனமான வாழ்க்கையில் இருந்து ஊருக்கு போய் சொந்த பந்தங்களோடு சந்தோஷமாக இருக்க போனால் :( இப்படி தான் ஆகுமா :(

மிகவும் அருமையான கதை ரவீ.. வாழ்த்துக்கள்....

அறிஞர்
22-09-2009, 02:57 PM
அருமையான கதை... உள்ளே எத்தனை அர்த்தங்கள்...
குடும்பத்தை முன்னேற்ற அரபு நாட்டு பயணம்.
அதுவே இன்று குடும்பத்தினருக்கே அந்நியனாக மாற்றிவிட்டது..

சிவா.ஜி
22-09-2009, 05:12 PM
கதையின் எதார்த்தம் யோசிக்க வைக்கிறது. எதையாவது ஒன்றை இழந்துதான் எதையாவது ஒன்றை பெற முடியுமென்பது உண்மையானாலும்.....உறவுகளை வாழும்போதே இழப்பது வலி தரக்கூடியதுதான்.

நான் ஒரு கவிதையில் இப்படி எழுதியிருப்பேன்....

”மணல்தேசக் காசு
மணல்வாசம் வீசுகிறது...
மனைவியின் அணைப்பிலும்,
மகளின் முத்தத்திலும் கூட
மணல்வாசமே அடிக்கிறது..என்றேன்...
மனைவின் மறுமொழி...
உங்களுக்கு வீசுவது மணல்வாசம்
உங்களிடம் வீசுவது பணவாசம்
வேலையைப் பாருங்கள்
இருப்பது இன்னும் ஒரு மாசம்”

அப்படித்தான் ஆகிப்போகிறது அரபுதேசம் வந்தவர்களின் கதையும்.

இருந்தும், நமக்குக் கிடைக்காதது நமது பிள்லைகளுக்குக் கிடைக்கட்டும் என்றும், நம் குடும்பமாவது நன்றாக வாழ்க்கையை வாழட்டுமென்றும், அத்தனையையும் சகித்துக்கொண்டு மீண்டும் பெட்டியைத்தூக்கும்போதே வலியையும் சுமந்துகொண்டு விமானம் ஏறும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நல்லதொரு கதைக்கு வாழ்த்துகள் ரவீ.

Ravee
23-09-2009, 02:32 PM
என் நண்பர்களின் சோகத்தின் சாயல் தான் இது .
இப்போது அரபு நாடுகளில் கூட ஆட்குறைப்பு சம்பளகுறைப்பு என மாற சிலநண்பர்கள் இங்கு வருவதா இல்லை குறைந்த சம்பளத்தில் இருப்பதா என குழப்பத்தில் இருக்க குடும்பமோ வரவேண்டாம் என்கின்ற முடிவில் தெளிவாக இருக்கிறார்கள் . இதை இன்றைய சமுதாய நிலை என்பதா ? இல்லை வாழ்க்கையின் ஏற்ற தாழ்வை எதிர் கொள்ளமுடியாத நிலையா ?