PDA

View Full Version : ஒரு குப்பை வண்டியும் சில தெரு நாய்களும்



கீதம்
11-09-2009, 12:32 PM
“வள்ள்ள்..... வள்ள்ள்.........வள்...ள்...ள்.....”

தெரு நாயொன்று உச்ச்ஸ்தாயியில் குரைக்கத் துவங்கியது. அதைத் தொடர்ந்து மற்ற நாய்களும் ஒன்று போலவே ஒங்காரமாய் ஒத்தூதின.

"காலையிலேயே ஆரம்பிச்சாச்சா கச்சேரியை?"

முனகியபடியே வாசலுக்கு விரைந்தான் அரவிந்தன்.

எதிரேயிருந்த காலிமனையில் ஆங்காங்கே குன்றெனக் குவிந்து கிடந்த குப்பைகளுக்கிடையில் தனது வயிற்றுப்பாட்டுக்கான வழியைத் தேடிக்கொண்டிருந்தான் ஒருவன். அவனுக்கு மிஞ்சிப்போனால் பதினைந்து, பதினாறு வயதுதான் இருக்கும். கறுத்த தேகத்தில் வெறும் கால்சட்டை மட்டுமே அணிந்திருந்தான்.

நாய்களை அலட்சியப்படுத்தியவனாய் தன் காரியத்திலேயே குறியாய் இருந்தான். அவனுடைய ஒரு கையில் நீண்ட கழி இருந்தது. அதன் நுனியில் இருந்த கூரான ஊசி போன்ற ஆயுதத்தால் கீழே கிடந்த தாள்கள் மற்றும் பாலித்தீன் பைகளைக் குத்தி எடுத்து மறு கையால் தோளில் சுமந்திருந்த சாக்குப் பையில் சேகரித்துக் கொண்டான். அந்த சாக்குப் பையோ இரு ஆட்களை முழுங்கினாற்போல் பருத்துக் காணப்பட்டது.

தகரம், கண்ணாடி போன்றவற்றுக்காக மட்டும் குனிய நேர்ந்தது. பெரும்பாலும் நின்ற நிலையிலே மிகவும் லாவகமாகவும், கண்ணிமைக்கும் வேகத்திலும் அவன் குப்பைகளை சேகரிப்பதைப் பார்த்து அரவிந்தன் மலைத்துப்போனான்.

நாய்கள் ஒரு சுற்று வட்டப்பாதையில் நின்று அவனைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தனவே தவிர எதுவும் அவனை நெருங்கத் துணியவில்லை. அவன் கையிலிருந்த கழி காரணமாக இருக்கலாம். அவன் ஒரிடத்தில் நில்லாது நடந்துகொண்டே தன் காரியத்தைப் பார்த்தான். அந்தக் காலை நேரத்திலேயே அவன் பை கிட்டத்தட்ட நிறையும் நிலையில் இருந்தது. குப்பைக்கா பஞ்சம் இந்த ஊரில்?

அவன் போய்விட்டான். தெரு முனை வரை சென்று அவனை வழியனுப்பிய நாய்கள் நான்கும் தங்கள் கடமை முடிந்துவிட்டதைப்போல் தத்தம் இடத்துக்கு வந்து அமைதியாய் படுத்துக் கொண்டன. அடுத்தத் தெருவில் அவன் இருக்கிறான் என்பதை அங்கிருந்து வந்த நாய்களின் குரைப்புச் சத்தம் உணர்த்தியது.

அரவிந்தன் அந்த நாய்க்குடும்பத்தைப் பார்த்தான். ஆம்; குடும்பம்தான். அவற்றில் ஒன்று ஈன்ற குட்டிகள் தான் மற்ற மூன்றும். சென்ற வருடம் இந்த வீட்டுக்குக் குடி வந்தபோது அவை எல்லாம் பால்குடி மறவாத பச்சிளம் குட்டிகள். இப்போது எல்லாம் வளர்ந்துவிட்டன. இம்முறை அத்தாய்நாய் முட்புதருக்குள் ஆறு குட்டிகள் போட்டிருப்பதாக குழந்தைகள் மகிழ்வுடன் கூறினர்.

அந்தத் தெருவில் இன்னும் வீடு கட்டப்படாத மனைகள் ஐந்தாறு உள்ளன. முட்புதர் மண்டி, அக்கம்பக்கத்தவரின் குப்பை கொட்டுமிடமாகவும், கழிவு நீர் வடிகாலாகவும் மாறிப்போய் விட்டன. அவ்வப்போது காற்றில் கலந்து வரும் துர் நாற்றத்தைச் சகிக்க முடியவில்லை. இந்த சுகாதாரக் கேட்டை எத்தனை முறைதான் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் பாலமுருகனிடம் முறையிடுவது?

ஈக்களும், கொசுக்களும் பல்கிப் பெருக, காற்றுக்காகவும் கதவு சன்னல்களைத் திறக்கும் பழக்கம் கைவிட்டுப்போனது.

காலி மனையின் உரிமையாளர்களுக்கு அங்கு வீடு கட்டும் எண்ணமே கிடையாது. விலையேற, ஏற, இன்னும் ஏறாதாவென்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். கண்காணிப்பில்லாததால் தெரு நாய்களுக்குதான் கொண்டாட்டம். குப்பையோடு கொட்டப்படும் உணவினைத் தின்றே கொழுகொழுத்தன. அறிமுகமில்லாத எவரையும் தெருவுக்குள் நுழைய விடாமல் முச்சந்தியிலேயே நிறுத்தி வைத்துவிடும். யாரையும் இதுவரை கடித்ததில்லை என்றாலும், கோரைப்பல் தெரிய அத்தனையும் அணிவகுத்து நிற்பதே அடிவயிற்றைக் கலக்குவதாக இருந்தது. சில நாட்கள் முன்பு செய்தித்தாளில் படித்த செய்தி நினைவுக்கு வந்தது. ஏதோவொரு கிராமத்தில் நான்கைந்து நாய்கள், மலங்கழிக்கச் சென்ற சிறுவனைக் கடித்துக் குதறிய கோர சம்பவத்தைக் கேள்விப்பட்டபின், அரவிந்தன் குழந்தைகளைத் தனியாக தெருவில் விளையாட விடுவதேயில்லை. நாய் வண்டிக்கும் ஏற்பாடு செய்து பார்த்தாயிற்று. சொல்லி வைத்தாற்போல் அன்று எல்லாம் தலைமறைவாகிவிடுகின்றன.

"ஏங்க! பேப்பர் ஈரத்துல கிடக்குதே, எடுக்கக்கூடாதா?"

அப்போதுதான் பார்த்தான். அன்றைய செய்தித்தாள் வராந்தா ஈரத்தில் கிடந்தது. பேப்பர் பையன் எப்போது வந்தான்? சே! எல்லாத் தாள்களும் ஊறிவிட்டன. இன்று சுடச்சுட எந்த செய்தியும் படிக்க முடியாது; எல்லாம் நமுத்துப் போனவைதான்.

"இன்னைக்கு மதியம் 3 மணிக்கு கூட்டம் இருக்குதுன்னு பாலமுருகன் போன் செய்தார். போய் இந்த குப்பை சமாசாரத்துக்கு ஒரு தீர்வு கேளுங்க" ராணி கண்டிப்புடன் கூறினாள்.

அரவிந்தன் முயற்சி செய்யாமலில்லை. அடுத்திருக்கும் வள்ளியம்மை நகரில் குப்பை வண்டி தினமும் வந்து போகிறது. தெருக்களெல்லாம் எத்தனை சுத்தமாய் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல் இருக்கின்றன. வீட்டுக்கு முப்பது ரூபாய், மாதந்தோறும் தந்தால் போதும்; ஏற்பாடு செய்யலாம். சிலர் தரத் தயாராக இருக்க, பலர் மூக்கால் அழுகிறார்கள். ஒரு நாள் குப்பை எடுக்க ஒரு ரூபாயா என்று மலைக்கிறார்கள். மலேரியா வந்தால் மருத்துவருக்கு வாரி வழங்கத் தயங்க மாட்டார்கள்.

காவேரி நகர் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டம் அன்று ஓரளவு பயன் தருவதாய் இருந்தது. தெருவையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள மாதம் முப்பது ரூபாய் தர இயலாதவர்கள் காவேரி நகரில் குடியிருக்க லாயக்கற்றவர்கள் என்று சான்றிதழ் தரப்பட, உணர்ச்சி வசப்பட்டவர்கள் உடனே ஏற்றுக்கொண்டனர், என்றாலும் முப்பது ரூபாய் என்பது அதிகம்தான் என்று முனகிக்கொண்டே வெளியேறினர்.

அன்றிலிருந்து மூன்றாம் நாள் 'கிண்கிணி' மணியோசை ஒலிக்க, குப்பை வண்டி வரத்துவங்கியது. குப்பை வண்டி இரண்டாகத் தடுக்கப்பட்டு ஒன்று, மக்கும் குப்பைக்கும், மற்றொன்று, மறுசுழற்சிக்கான கழிவுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது.

அப்பப்பா! இதற்காக எத்தனை கஷ்டங்கள், எத்தனை விமர்சனங்கள்! ஒருவழியாய் திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இனி இந்த நாய்த் தொல்லைக்கும் ஒரு விடிவுகாலம் பிறந்தால் பரவாயில்லை. அரவிந்தன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

ஒரு ஞாயிறு மாலை, தொலைக்காட்சியில், திரைக்கு வந்து சில வாரங்களே ஆன ஏதோவொரு உருப்படாதத் திரைப்படத்தை விதியே என்று பார்த்துக்கொண்டிருந்த வேளை, தெருவிலிருந்து எழுந்த கூக்குரல்களும் இன்னதென்று புரியாத காட்டுக்கத்தல்களும் அரவிந்தன், ராணியின் கவனத்தைத் திருப்பின.

அடித்துப்பிடித்துக்கொண்டு குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு தெருவுக்கு ஓடினாள் ராணி. காரணம் இருக்கிறது. முன்பு நிலம் அதிர்ந்ததைக்கூட உணராமல் மெகா சீரியல் மூழ்கியிருந்தவள் அல்லவா? பின்னாலேயே விரைந்தான் அரவிந்தன்.

தெருவே திரண்டிருந்தது. பக்கத்து வீட்டு அம்மாள், பேரன் அழுகிறான் என்று, அவனைத் தூக்கிக் கொண்டு காற்றாட, தெருவாசலில் நின்றுகொண்டிருந்தாராம். வழியில் சென்ற எவனோ சட்டென்று அவர் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டானாம். மசமசவென்று இருள் கவியத்துவங்கியதால், ஆள் யாரென்று பார்க்க முடியவில்லையாம்.

விஷயத்தைக் கேட்டதுமே ராணி ஓடிப்போய் வீட்டைப் பூட்டிக்கொண்டு வந்ததோடு நில்லாமல் புடைவைத் தலைப்பை இழுத்து கழுத்தையும் மூடிக்கொண்டாள். ஆளாளுக்கு ஏதேதோ சொன்னார்களே தவிர, யாராலும் திருடியவன் யாரென்று ஊகிக்க இயலவில்லை. போலிசுக்குப் போகலாம் என்று யாரோ சொல்ல, இந்த நட்டம் போதாதாவென்று யாரோ கேலி பேசினர். பறி கொடுத்த அம்மாளுக்கு அதிர்ச்சியில் நாக்குளறிவிட்டிருந்தது. அவரது மகனும், மருமகளும் அவரைத் தேற்றி பயத்தைத் தெளிவித்துக் கொண்டிருந்தனர்.

"இத்தனை நாய்கள் இருந்தும் எப்படி அவன் தப்பித்தான்? புதிதாய் யார் வந்தாலும் விடாதுகளே!" என்றான் அரவிந்தன் ஆச்சரியத்தோடு.

மேல் வீட்டு வாசுகி அலுப்புடன், "அதுங்க எல்லாம் இங்கே எங்கே இருக்குதுங்க? சோறு கிடைச்சவரைக்கும் இங்கே சுத்திகிட்டு இருந்துச்சுங்க. குப்பை வண்டி வர ஆரம்பிச்சதில இருந்து சாப்பாடு இல்லாம பட்டினி கிடந்துச்சுங்க. எத்தனை நாளைக்குதான் இப்படியே கிடக்க முடியும்? எங்கேயோ போயிடுச்சுங்க."

குப்பை வண்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தக் கூட்டத்தில் அவளும் ஒருத்தி. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டாள்.

அப்போதுதான் நாய்கள் தெருவில் இல்லையென்ற உண்மையே அரவிந்தனுக்குத் தெரிந்தது. நாய்கள் இங்கு இருந்திருந்தால் இப்படி ஓர் சம்பவம் நிகழ்ந்திருக்காது என்பது போல் அனைவரும் பேசத்துவங்க, அரவிந்தன், அவசரமாக அவ்விடத்தை விட்டு அகன்றான்.

நாய்கள் தொலைந்தால் நிம்மதி என்று நினைத்தது போக, இப்போது நாய்கள் இருந்தால்தான் நிம்மதி என்ற நிலை உருவாகிவிட்டது. எங்கே போய்த் தேடுவது? இங்கு வந்தாலும் உணவுப்பிரச்சனை! எங்கேயாவது நிம்மதியாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று எண்ணிக்கொண்டான்.

இப்போதெல்லாம் அழைப்புமணி அழுத்தினால், சன்னல் வழியே முகம் பார்க்காமல் எவரும் கதவு திறப்பதில்லை.காய்கறிக்காரன் வாசலுக்கு வந்தாலும், மொட்டை மாடியில் துணி காயப்போடப் போனாலும், வீட்டைப் பூட்டிக்கொண்டு செல்லும் நிலை.

நான்கைந்து மாதம் ஓடிவிட்டது. எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்பினாலும், நாய்களற்ற தெரு வெறுமையைத் தந்தது. அவை யாவும் உயிரோடு இருக்கின்றனவோ, அல்லது உணவின்றி ஜீவனை விட்டுவிட்டனவோ?

ஒருநாள், காவேரி நகரை அடுத்துள்ள கோகிலா குடியிருப்பில் புதிதாய்க் குடியேறிய நண்பன் ராஜீவனைப் பார்க்கச் சென்றவனின் கண்களில் சிக்கிய காட்சி வியப்பைத் தந்தது. அந்தக் குடியிருப்பை ஒட்டியிருந்த அடர்ந்த தூங்குமூஞ்சி மர நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்தன, அந்தத் தெருநாய்களும், குட்டிகளும். குட்டிகள் இப்போது நன்றாக வளர்ந்திருந்தன. அரவிந்தனைப் பார்த்ததும் அவை குரைக்கத்துவங்கின. மற்றப் பெரிய நாய்களோ தூரத்தே நின்றவண்ணம் சிநேகமாய் வாலாட்டின. அரவிந்தனுக்கு வியப்பு மேலும் அதிகரித்தது. ஓ! இவை இப்போது இந்தப் பகுதியின் காவலாளிகளாகிவிட்டனவா?

சின்னக்குரலில் குரைத்துக் கொண்டிருந்த குட்டிகள், துள்ளிக்குதித்து வாலாட்டியபடி யாரையோ நோக்கி ஓடின. திரும்பியவன் அங்கு வந்துகொண்டிருந்தவனைப் பார்த்துத் திடுக்கிட்டான். தன் தெருவில் தினமும் காலையில் குப்பை பொறுக்க வருவானே, அந்தச் சிறுவன் தான். அவன் சிரித்தபடியே தன் கையிலிருந்த ரொட்டியை பிய்த்துப்போட, நாய்கள் அவனைச் சுற்றி நின்று, வாலாட்டியபடியே தின்றுகொண்டிருந்தன.

பாரதி
11-09-2009, 01:01 PM
கால ஓட்டத்தில் நகரமயமாகும் இடங்களில் நடக்கும் நிகழ்வு இங்கே கதையாகி இருக்கிறது. நடுத்தர குடும்பங்களின் உணர்வுகள் இயல்பாக பிரதிபலிக்கின்றன.
கதை செல்லும் விதமும் நன்றாக இருக்கிறது.

“சுத்தம் சோறு போடும்” என்பது... இந்தக்கதையை படிப்பவர்களின் மனதில் என்ன எண்ணத்தை உண்டாக்கும்..?

சிலவற்றை தவிர்க்க இயலாது என்ற உண்மையை கூறி இருக்கிறீர்கள். வேறுபட்ட கண்ணோட்டத்தில் படைக்கப்பட்ட இப்பதிவுக்கு என் உளமார்ந்த வாழ்த்தும், நன்றியும் உரித்தாகட்டும்.

த.ஜார்ஜ்
11-09-2009, 04:19 PM
கீதம்.
இயல்பாய் விவரித்திருக்கிறீர்கள்.
'குப்பைகளுக்கா இங்கு பஞ்சம்' என்று நிதர்சனமும் ஆதங்கமுமாக வெளிப்பட்டு,
நாய்களின் மீது பரிவுமாக முடிகிறது.
நாய்கள் இல்லாத தெரு வற்ண்டு போனதாக உணரவைக்கிறது உங்கள் படைப்பு.
பாராட்டுக்கள்.

கா.ரமேஷ்
12-09-2009, 04:51 AM
பாராட்டுக்கள் கீதம்.. நல்லதொரு படைப்பு ...

சகோதரர்களின் கருத்துக்களே எனதும்....

இளசு
12-09-2009, 05:26 AM
பாராட்டுகள் கீதம்.

கதைக்களம் நல்ல தெரிவு.

நமத்த செய்தி, இரு ஆள் விழுங்கிய சாக்கு, மலேரியா வந்தால் மருத்துவர் செலவு,
நாய் பிடிப்பவர் வந்தால் மறைந்துவிடும் நாய்கள் --- போல
மனம் சுண்டும் இயைந்த வர்ணிப்புகள் அருமை.


வாழுகளங்கள் மாறிவருங்காலந்தோறும்
உயிர்களும் தரித்திருக்க மாற்றிக்கொள்ளும் கோலம்..

உயிர்வாழ்வியலின் மிகப்பெரிய ஆதாரத்தை
புதுக்குடியிருப்புகள் என்னும் சன்னல் வழி படம் பிடித்திருக்கிறீர்கள்..


பாராட்டுகள்!

samuthraselvam
12-09-2009, 05:59 AM
அருமையான கதைக் களம்... அதை மிகவும் அருமையாகவும் இயல்பாகவும் சொல்லியிருப்பது.... சமூக அக்கறையையும் மீறி உரினங்களின் மீது காட்டும் பரிதாபம் என சிறப்பான வர்ணிப்பு... வாழ்த்துக்கள் கீதம்...

இளசு அண்ணா சொன்ன வர்ணிப்பு வரிகள் என்னையும் கவர்ந்தவை...

கீதம்
12-09-2009, 07:14 AM
உங்கள் அனைவரின் ஊக்கம் நிறைந்த கருத்தாழமிக்கப் பின்னூட்டங்களே என் மனக்கருவுக்கு நான் இடும் உரங்களாக அமைகின்றன. ஒவ்வொரு வரியையும் சிலாகித்து தாங்கள் இடும் பின்னூட்டங்களைப் படித்து மனம் நெகிழ்கிறேன். என் எழுத்துகளில் குறை இருப்பின் உரிமையுடன் சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறேன். அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

சிவா.ஜி
12-09-2009, 09:35 AM
எதார்த்தமான நிகழ்வுகளை அதே எதார்த்தத்துடன் வழங்கியிருக்கிறீர்கள். குப்பை அள்ள முப்பது ரூபாய் கொடுக்க முனகும் குடியிருப்புவாசிகள் காலிமனையை விலையேற்றத்துக்காக அப்படியே குப்பைமேடாக வைத்திருக்கும் நில உரிமையாளர்கள் என உண்மைகளை அழகாக சொல்லியிருக்கிறிர்கள் கீதம். வெகு அருமை.

அருகில் இருந்து பார்ப்பதைப்போல உணர்வு. பாராட்டுக்கள் கீதம்.

ஓவியன்
19-09-2009, 07:36 AM
தெருநாய்களால் பாதுகாப்பு இருந்தாலும்,
ரேபிஸ் போன்ற கொடிய நோய் அபாயங்களும் இல்லாமலில்லை..!!

அதற்காக நாய் வளர்க்க வேண்டாமென்று கூறவில்லை,
நாய் வளர்க்க வேண்டும், வீதிகளிலல்ல-வீடுகளில்,
முறையாக உணவூட்டி, தடுப்பூசி ஏற்றி..!!

வித்தியாசமான களத்தில், கதையினை நகர்த்திய பாங்கு அருமை கீதம்..!! :icon_b:

Ravee
20-09-2009, 12:53 AM
கீதம் அவர்களே என் வீட்டுக்கு பக்கத்தில் இல்லையே நீங்கள் , நாங்கள் சமீப காலமாய் என்ன அனுபவிக்கிறோமோஅதையே கதையாய் வடித்துளிர்கள். உயிரோட்டமான கதை.

கீதம்
20-09-2009, 10:03 PM
தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே! இது போன்றதொரு நிலை நம் நாட்டில் பல இடங்களில் நிகழ்வதாகத்தானே உள்ளது. குப்பைகளற்ற இடங்களைப் பார்க்கவே முடிவதில்லையே! தெரு நாய்களையும் கட்டுப்படுத்த நம்மால் இயலவில்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் அரை நாள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்று வருவதும் சிரமமான ஒன்று. அதுவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகியபின் அக்கம்பக்கத்தவரின் அறிமுகமும் அற்றுப்போயிற்று. இதன் பாதிப்பே இக்கதை.

aren
21-09-2009, 02:05 AM
நாங்கள் சிறுவர்களாக இருக்கும்பொழுது எங்கள் வீட்டிற்கு பக்கத்துவீட்டுக்காரர்கள் வைத்தபெயர் நாய்வீடு. ஆம் எங்கள் வீட்டில் 7 நாய்கள் இருந்தன. நாங்கள் வீட்டை பூட்டியதே கிடையாது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும் சமையல் வடபழனி கோயிலில் ஏதோ பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகையால் குடும்பமே போகவேண்டிய கட்டாயம். எல்லாரும் கிளம்பியாகிவிட்டது, அதனால் வீட்டை பூட்டவேண்டுமே. அப்பொழுதுதான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது எங்கள் வீட்டிற்கு பூட்டு இல்லை. நாங்கள் வீட்டை பூட்டியதே இல்லை. மேலும் சொல்லப்போனால் நாங்கள் வீட்டிற்கு அதுவரை தாழ்ப்பாள்கூட போட்டது இல்லை. அப்புறம் பக்கத்துவீட்டிற்குச் சென்று ஒரு பூட்டை கடனாக வாங்கி எங்கள் வீட்டை பூட்டினார்கள்.

உங்கள் கதை பல வருடங்களுக்கு முன் என் வீட்டில் நடந்த விஷயத்தை நினைக்க வைத்துவிட்டது.

கதையில் எதார்த்தம் அருமை. நாய் என்றால் எங்களுக்கு உயிர். எங்கள் வீட்டிலும் ஒரு ஜாக்கி உள்ளது. அது என்னுடைய இரண்டாவது மகள்.

மஞ்சுபாஷிணி
22-09-2009, 04:37 PM
கீதம் மிக அருமையான கதைப்பா... நாய்களுக்கு இருக்கும் நன்றி உணர்ச்சியும்... ஜனங்களின் எண்ண உணர்வுகளும் மிக அருமை. பாராட்டுக்கள் கீதம்..

கீதம்
16-10-2009, 08:33 AM
பாராட்டுகளுக்கு நன்றி, ஆரென் மற்றும் மஞ்சுபாஷினி அவர்களே. அன்புடன் கீதம்.

அன்புரசிகன்
16-10-2009, 11:31 AM
எதார்த்தமான விபரிப்புடன் அழகாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.... நம் ஊரில் நாய்களுக்கு பஞ்சமிருக்கவில்லை.

நம்மூரில் நாய் குரைத்தால் தான் குழந்தையும் சொல்லும். ஆமிக்காரன் (இராணுவம்) வாறான் என்று...

வாழ்த்துக்கள் கீதம்

KAMAKSHE
29-10-2009, 04:11 PM
சில கதைகளை தான் முடிவு வரை மூச்சு விடாமல் படித்து முடிக்க ஆவல் வரும். இந்தக் எனக்கு அப்படி தான் இருந்தது. முக்கியமாக நான்
ரசித்த இரண்டு இடங்கள் - " திரைக்கு வந்தது சில மாதங்களே ஆன .....உருப்படாத திரைப்படத்தை........." என்ற இடமும், " நிலம் அதிர்ந்ததைக் கூட உணராமல் மெகா சீரியலில் மூழ்கி இருந்தவள்" என்பது

கீதம்
01-11-2009, 06:48 AM
எதார்த்தமான விபரிப்புடன் அழகாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.... நம் ஊரில் நாய்களுக்கு பஞ்சமிருக்கவில்லை.

நம்மூரில் நாய் குரைத்தால் தான் குழந்தையும் சொல்லும். ஆமிக்காரன் (இராணுவம்) வாறான் என்று...

வாழ்த்துக்கள் கீதம்

வாழ்த்துகளுக்கு நன்றி அன்புரசிகன் அவர்களே.

கீதம்
01-11-2009, 06:50 AM
சில கதைகளை தான் முடிவு வரை மூச்சு விடாமல் படித்து முடிக்க ஆவல் வரும். இந்தக் எனக்கு அப்படி தான் இருந்தது. முக்கியமாக நான்
ரசித்த இரண்டு இடங்கள் - " திரைக்கு வந்தது சில மாதங்களே ஆன .....உருப்படாத திரைப்படத்தை........." என்ற இடமும், " நிலம் அதிர்ந்ததைக் கூட உணராமல் மெகா சீரியலில் மூழ்கி இருந்தவள்" என்பது

கதையை ரசித்து சிலாகித்த உங்களுக்கு மிக்க நன்றி, காமாட்சி அவர்களே.

சுகந்தப்ரீதன்
08-11-2009, 09:21 AM
யதார்த்தத்தை கண்முன் கொண்டுவரும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளீர்கள்..!!

வாழ்த்துக்கள் கீதம்..!! தொடருங்கள்..!!

கீதம்
09-11-2009, 03:30 AM
யதார்த்தத்தை கண்முன் கொண்டுவரும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளீர்கள்..!!

வாழ்த்துக்கள் கீதம்..!! தொடருங்கள்..!!

வாழ்த்துக்கு நன்றி சுகந்தப்ரீதன் அவர்களே.