PDA

View Full Version : பின்னிரவுsadagopan
10-09-2009, 09:25 AM
வாரத்தில் ஏழு நாள் உழைக்க சபிக்கப்பட்டிருக்கிற என்னைப் போன்ற மிடில் க்ளாஸ் பிஸினஸ்மேனுக்கு பொண்டாட்டியைக் கூட்டிக் கொண்டு சினிமாவுக்குக் கிளம்புவதென்பது மஹாக் கஷ்டமான காரியம். காலைக் காட்சி, பகல் காட்சி, மாலைக் காட்சியெல்லாம் அந்நியம். போனால் பின்னிரவுக் காட்சிதான்.

ராத்திரி தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு தியேட்டரில் போய்க் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதில் உடன்பாடே இல்லை எனக்கு. ஆனால், வருஷம் முழுக்க வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிற என்னவள், மாசத்துக்கொருதரம் சினிமாக் கோரிக்கையை முன் வைக்கிறபோது அதை மறுப்பது மனிதாபிமானமாகாது என்கிற மனு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு, இவளை அழைத்துக் கொண்டு ராத்திரி ஷோவுக்குப் போயே ஆக வேண்டிய நிர்பந்தம்.

அப்படியொரு சினிமா இரவாய் விடிந்தது இன்றைய ராத்திரி. எந்தப் படத்துக்குப் போவது என்று அலசி ஆராய்ந்து முடிவெடுத்து முடிக்கும்போது ஒன்பதே கால். என்றைக்குமில்லாத அதிசயமாய் இவள் இருபத்தஞ்சே நிமிஷத்தில் உடை மாற்றி, மேக்அப் போட்டு ரெடியாகி விட்டாள். தியேட்டரில் கொறிப்பதற்கு முறுக்குகளைக் கர்ச்சீஃபில் பொதிந்து கொண்டு கிளம்பி, ஸ்கூட்டரைக் கிளப்புகிறபோது ஒன்பது நாற்பத்தஞ்சு பி.எம்.

எழும்பூர் பாலத்தின் மேல் ஸ்கூட்டர் ஊர்ந்து கொண்டிருந்த போது, நிறுத்தக் கை காட்டினான் ஓர் இளைஞன். அவனை உரசுகிற மாதிரி ஸ்கூட்டரை நிறுத்தினேன். ஒதுக்குப் புறமாய் அவனுடைய ஸ்கூட்டர் நின்றிருந்தது.

‘சார், ஒரு ஹெல்ப் வேணும் சார். டயர் பங்ச்சர் சார். கொஞ்சம் வீல் ஸ்பானர் குடுத்திங்கன்னா பத்து நிமிஷத்துல வீல் சேய்ஞ்ஜ் பண்ணிட்டுக் குடுத்துர்றேன் சார், ப்ளீஸ்’ என்று கெஞ்சினான் அந்த இளைஞன்.

பின்னாலிருந்து இவள் இடித்தாள். “என்னங்க, பொறப்பட்டதே லேட். டிக்கட் ரிஸர்வ் பண்ணவும் இல்ல. இன்னிக்கி நாம சினிமா பாத்த மாதிரி தான்.”

“மேடம், நா அடையார் வரக்யும் போகணும் மேடம். ப்ளீஸ், தயவு பண்ணுங்க மேடம்.” அந்த இளைஞன் நேரடியாய் இவளிடமே உதவி கோரினான்.

தனியாய் வந்திருந்தால், பத்து நிமிஷம் என்ன, அதற்கு மேல் அரைமணி நேரத்தைக் கூட இந்த ஆளுக்காக ஒதுக்கியிருக்கலாம், சினிமாவையும் தியாகம் செய்துவிட்டு. ஆனால் இப்போது என்னோடு இவள் இருக்கிறாளே! இன்றைக்கு சினிமா பார்க்காமல் வீடு திரும்ப நேர்ந்தால், பயங்கரமாய் அப்ஸெட் ஆகிவிடுவாள். பிறகு, திரும்பவும் இவள் மூடுக்கு வருவதற்கு முழுசாய் மூணு நாள் காத்திருக்க வேண்டும். முக்கால் கிலோ திருநெல்வேலி ஹல்வா மற்றும் முப்பது முழம் மல்லிகைப் பூ செலவாகும்.

யோசித்த போது, மண்டையோட்டுக்குள் மத்தாப்பு. ஸ்பானர்தானே கேட்கிறான். கொடுத்து விடுவோம். கொடுத்து விட்டுக் கிளம்புவோம். அவன் சாவகாசமாய் சக்கரத்தை மாற்றிவிட்டு தியேட்டரில் வந்து என் ஸ்கூட்டரைக் கண்டுபிடித்து ஸ்பானரை சேர்த்து விடட்டும்.

“இந்தாங்க ஸ்பானர். ஸ்டெப்னிய நீங்களே சேய்ஞ்ஜ் பண்ணிரு வீங்கள்ள? நாங்க தேவி காம்ப்ளக்ஸ் போறோம். ஒங்க வேல முடிஞ்சப்பறம், நீங்க ஒங்க ரூட்டக் கொஞ்சம் மாத்தி தேவி வந்தீங்கன்னா, ட்டூ வீலர் பார்க்ல என் வண்டி நிக்கும். இந்த முன்பக்க பாக்ஸ் ஓப்பனாத்தான் இருக்கு. இதுக்குள்ள ஸ்பானரப் போட்டுட்டுப் போயிருங்க. வண்டி நம்பர நோட் பண்ணிக்கிறீங்களா?”

“ரொம்ப ரொம்ப தாங்ஸ் சார். இந்த உதவிய மறக்கவே மாட்டேன்.” நன்றியோடும் நெகிழ்ச்சியோடும் கை கூப்பினான் அவன்.

அங்கிருந்து நகர்ந்தபோது, இவள் சந்தேகப்பட்டாள். “ஸ்பானர் திரும்ப வரும்னு நெனைக்கிறீங்களா?”

“வரும்.” நான் நம்பிக்கையோடு சொன்னேன்.

படம் முடிந்து வந்து, குறுகுறுப்போடு ஸ்கூட்டரை அணுகி, பாக்ஸைத் திறந்து பார்த்தால்.....

ஏமாற்றம் இருந்தது; ஸ்பானர் இல்லை.

இவள் ஸ்க்ரூ ஏற்றினாள்.

“பாத்தீங்களா? இது ஒங்களுக்கு இன்னொரு பாடம். இதுதாங்க ஒலகம்! காரியம் ஆனவொடனே உதவியையும் உதவி செஞ்சவங்களையும் மறந்துருவாங்க. நம்ம சவுகரியத்தக் கொறைச்சிக்கிட்டு மத்தவங்களுக்கு உதவி செய்யற ஒங்க பழக்கத்த இன்னியோட விட்ருங்க.”

“பாவம் அந்த ஆள் என்ன அவசரத்துல இருந்தானோ! அவன் இங்க வந்து, இந்தக் கூட்டத்துல நம்ம ஸ்கூட்டரக் கண்டுபிடிக்க முடியாமப் போனாலும் போயிருக்கலாம்.....” நான் சமாதானப்படுத்தினேன், இவளையும் என்னையும்.

இவள் எனக்கு நற்சான்றிதழ் வழங்கினாள். “ஒங்களத் திருத்தவே முடியாதுங்க”.

புன்னகையுடன் ஸ்கூட்டரைக் கிளப்பினேன். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்த போது, டஸ்ஸ்ஸ்ஸென்று ஓர் இரைச்சல். வண்டி தடுமாறியது. போச்சுடா, பின் டயர் பஞ்ச்சர்.
சக்கரத்தைக் கழட்டி மாற்ற ஸ்பானர் இல்லை.

நிராதரவான ஒண்ணரை மணி ராத்திரி.

இவள் சின்னதாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினாள். ”என் பேச்சைக் கேட்டிருந்தா இந்த கதி ஏற்பட்டிருக்குமா?”
...ம்.... இப்ப என்ன செய்யப் போறீங்க?’ என்று அந்தப் பெருமூச்சுக்கு அர்த்தம்.

கடந்துபோன ரெண்டு ஆட்டோக்களைக் கை காட்டினேன். நிற்கவில்லை. அடுத்து வந்த ஆட்டோவை வெறுப்போடு முறைத்தேன்.

ஆச்சர்யம்! ஆட்டோ ஓரங்கட்டியது. டிரைவர் இறங்கினார். “இன்னா சார் ப்ராப்ளம்?”

“பங்ச்சர்ங்க. கொஞ்சம் ஸ்பானர் குடுத்திங்கன்னா....”

“நம்ப கைல வுடுங்க சார், நீங்க ஒத்துங்க.”

ஒத்தினேன்.

‘ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சார். நமக்கு வேண்டியவர் சார் இவர். வண்டி பஞ்ஜர் ஆய்க்கினுச்சாம். வீல மாத்திக் குடுத்துட்டு வந்துர்றேன்’ என்று ஆட்டோவிலிருந்த பயணியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, ஒரு கைதேர்ந்த மெக்கானிக்குரிய லாவகத்தோடு வேலையை ஆரம்பித்தார்.
”நமக்கு ரொம்ப வேண்டியவர் சார் இவர்” என்று சொன்னதை நான் ஆச்சர்யத்தோடு அசைபோட்டுக் கொண்டு நிற்க, மளமளவென்று வேலை நடந்தது. நாலு நிமிஷத்தில் வண்டி ரெடி.

”ரொம்ப நன்றிங்க” என்று நன்றியோடு ஒரு இருபது ரூபாய்த் தாளை நீட்டினேன். மறுத்தார்.
”நம்பள மறந்துட்டீங்களே சார்!’ என்று சிரித்தார்.

“மூணு மாசம் முந்தி சார். இதே ரோட் தான். நம்ப வண்டில ஒரு பிரசவக் கேஸ். பெட்ரோல் அவுட். அன்னக்கி பந்த். பங்க் கெடையாது. ஒரு மணி வெயில். நா நடுரோட்ல தவிக்கிறேன். உள்ளாற அந்தப் பொண்ணு துடிக்குது. நம்ப ஆட்டோ தோஸ்த்துங்க யாரும் ஹெல்ப்புக்கு வரல. இந்த வழியா வந்த ஒங்களக் கை காட்டினேன். வண்டிய ஓரங்கட்டி இன்னா மேட்டர்னீங்க. சொன்னேன். ஒடனே ஒங்க வண்டிலேந்து பெட்ரோல் எடுத்துக் குடுத்து என்னயும் அந்தப் பொண்ணயும் காப்பாத்துனீங்க. நா கை கொடுத்துக் கும்புட்டு ஒரு இருவது ரூவாத்தாள எடுத்து நீட்டினேன். பிரசவத்துக்கு இலவசம்னு நீ உன் வண்டியில எழுதியிருக்க, நா மட்டும் கொஞ்சம் பெட்ரோல் பிரசவத்துக்கு இலவசமாக் குடுக்கக் கூடாதாப்பா? ஒம்புண்ணியத்துல எனக்கும் கொஞ்சம் பங்கு கெடைக்கட்டு மேன்னு சிரிச்சிட்டுப் போனீங்க. ஒங்க மொகமும் வண்டி நம்பரும் பெர்மனண்டா எம் மனசுல பதிஞ்சிருச்சு சார்.”

ஆட்டோ டிரைவர் போய்விட்ட பிறகும் இந்த ராத்திரியின் ஆச்சர்யம் என்மேல் படிந்தேயிருக்கிறது.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்பது இன்னாவுக்கு மட்டுமில்லாமல் நற்செயலுக்கும் பொருந்துகிற இனிமையான அனுபவத்தில் மனம் சிலிர்த்தபடி இவளைப் பார்க்கிறேன்.

இவள் சம்மதமாய்ப் புன்னகைக்கிறாள்.

(கவிதை உறவு, ஜூலை 2008)

கா.ரமேஷ்
10-09-2009, 09:49 AM
அருமையான பகிர்வு தோழரே... நன்றிகள்..