PDA

View Full Version : இரங்கற்பா நான்கு!



தமிழநம்பி
06-09-2009, 07:58 AM
இரங்கற்பா நான்கு!


1. பெருந்தமிழறிஞர் முன்னாள் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் ஐயா மறைவு குறித்து எழுதிய இரங்கற் பா :


தலைமைப்பண் பாற்றல்சால் தமிழறிஞர் ஆய்வர்!

தன்னிகரில் வினையாண்மைத் தகையாளர்! என்றும்

நிலைத்திருந்தே ஆய்வுசெயும் நிறுவனங்கள் தந்தார்

நிறைவாகச் செந்தமிழில் நெடும்பணிகள் ஆற்ற!

தொலைநோக்கில் பல்கலையில் தூயதமிழ்க் கென்றே

துறையொன்றைத் தொடக்கியவர் துய்யதமிழ் நெஞ்சர்!

இலையின்றே வ. அய்.சுப் பிரமணிய ஏந்தல்

ஈடில்லாப் பெருந்தமிழர் இவரையிழந் தோமே!



2. இலக்கணச்சுடர், இசைத்தமிழறிஞர் புதுவை இரா.திருமுருகனார் ஐயா மறைவு குறித்து எழுதிய இரங்கற் பா :



ஏற்கெனவே எம்முள்ளம் எரியத் தீய்க்கும்

ஈழத்துச் செய்தியின்பின் இந்தச் செய்தி!

தேற்றமுற விடையளிக்க யாரைத் தேர்வம்?

தீந்தமிழின் இலக்கணத்தில் ஐயம் தோன்றின்!

ஏற்றமுற விளக்குதற்கே எவரிங் குள்ளார்

இசைத்தமிழின் நுணுக்கங்கள் எடுத்துச் சொல்லி!

ஆற்றலுறத் தமிழறிந்த ஐயா எங்கள்

அருந்திருமு ருகனாரே! அழுகின் றோமே!



3. புதுவை ‘நற்றமிழ்’ இலக்கண இலக்கிய இதழின் நிறுவுநரும் ஆசிரியருமான தமிழ்ப் போராளி தமிழ்மாமணி இறைவிழியன் ஐயா மறைவு குறித்து எழுதிய இரங்கற் பா :

நிறைதமிழ் காப்பே நினைவேந்திச் சற்றும்
மிறையறியாத்தொண்டால் மிளிர்ந்தாய்! – இறைவிழிய!
உன்னை மறக்கவும் ஒல்லுமோ? என்றென்றும்
நின்னையே நாடுமென் நெஞ்சு.



4. தமிழிசை ஆய்வறிஞர் சுரும்பியன் மறைவு குறித்து எழுதிய இரங்கற் பா :


இசையறிஞர் ஆசிரியர் இன்றமிழ்ப்பண் ணாய்வர்!
எவரையுமே ஈர்க்கின்ற இசையமைக்கும் வல்லார்!
நசைமிக்கார் தமிழிசையை மீட்டுயர்த்த! வாழ்வில்
நாளெல்லாம் அதற்கெனவே நாடியுழைத் தோய்ந்தார்!
விசைக்குரலிற் பாவேந்தர் பாவெடுத்துப் பாடின்
வியப்புறுவோம் வீறுறுவோம் விருப்புறுவோம் வினைக்கே!
இசைமிக்க சுரும்பியனை இழந்தோமே! இவர்போல்
எவருழைப்பார் தமிழிசைக்கே, இரங்கியழும் நெஞ்சே!