PDA

View Full Version : துரு



த.ஜார்ஜ்
05-09-2009, 05:04 PM
கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் இந்த மண்ணின் ஸ்பரிசம்.


அந்த மலையடிவார பூமி, பருவமடைந்த பெண் போல பரவசப் படுத்தியது.

தாத்தா எழுதியிருந்த மாதிரி ‘ஊரு முன்ன மாதிரியில்ல’தான். புதிய புதிய முகங்கள் . யாரையும் அடையாளம் தெரியவில்லை.
ஊரின் பழைய அடையாளங்களின் ஒரே மிச்சம் புல்லுகடையை ஒட்டியிருந்த புளிய மரம். அதன் நிழலில் கல்மேடையில் இப்போதும் நீண்டு படுத்து சோம்பல் முறித்துக் கொள்ளலாம் போல் தோன்றியது.

நெடுநாள் பிரிந்த நண்பனை கண்டு விட்ட மாதிரி ஆனந்தக் கூத்தாடியது மரம். ‘ஹே.. சினேகிதா’ என்று காற்றோடு ஒரு கத்தல்.
இவனுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஞாபகங்கள், கோழி கிளறி எறியும் குப்பை மாதிரி எழுந்து பறந்தன.

புரண்டு புரண்டு கபடி விளையாடிய அந்த புழுதி. ஓணத்திற்க்கு கிளை கிளையாய் கட்டி ஆடிய ஊஞ்சல். கிட்டிப்புள்ளும் கோலியும் வைத்து சர்வதேச போட்டி அளவிற்கு அமர்களப்படுத்திய துள்ளல்,கதை, கூத்து, பொங்கல், கட்சிக்கூட்டம்...

எல்லாம் தாண்டி இறுதியில் அசையாமல் ஆறுமுகம் உட்கார்ந்திருந்தான்.

எண்ணெய் விட்டு படிய வாரிய தலை, விரிந்த மார்பு, வலது நெற்றிக் காயம், முரடன் தோற்றம். முறுக்கி விட்ட மீசைக்கிடையில் நட்பான புன்னகை.ஆறுமுகம் இப்போதும் இதுபோல் கலையாமல் இருப்பானா?

குளத்தருகில் புறம்போக்கு நிலத்தில் அவன் குடிசை இருந்தது.குளிக்க போகிற நேரத்தில் அவன் செண்டை மேளத்தை வாசித்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். அவனது அப்பாவின் தொழில் அது.

இதோ இந்த மரத்தடி மேடை அவன் நிர்மாணித்தது.அவ்வப்போது அதில் சாகசங்கள் செய்வான்.

பழைய வேட்டியை திரையாகக் கட்டி சிறு பந்தல். உள்ளே லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் திரை பளிச்சிடும். வேலையில் களைத்த ஊர் சத்தமின்றி திரையை ரசிக்கும்.

‘ட்டண்ங்.... ட்டணங்....’ என்ற செண்டை ஒலி நெஞ்சை மிதித்த மாதிரி இரவின் அமைதியை கிழித்த மாதிரி எழும். திரையில் நாயொன்று பதறி ஓடும்.தூரத்தில் அம்பை எய்தவனின் நிழலுருவம் மெள்ள மெள்ள நெருங்கி திரையை ஆக்கிரமிக்கும்.

கதை சொல்லாமலே செண்டை ஒலியில் அத்தனையும் அந்த ஜனங்களுக்கு புரியும்.

வெறும் அட்டைப்படம். குச்சிகளும், விரல்களும் அசைய உயிர் பெற்று எழும். முயற்சியால் வளர்ந்து சாகசங்கள் செய்யும். வேடிக்கையாய் வெற்றிக்கொள்ளும்.

திடீரென்று வலியவன் கரம் ஒன்று எய்தவன் கழுத்தை நெரிக்கும். உயர்ந்து நிற்பவனை மிதித்து நசுக்கும்.அவன் துடிப்பான். கதறுவான்.ஆயினும் அந்த எளியவனின் முன்னேற்றம் வெட்டப்படும். இப்போது இசையும் கதறும்.பரவி பதற வைக்கும்.வலியின் துடிப்பாய் உணர்வலைகளில் ஊடுருவும். சதையை கிழித்துக் கொண்டு நாடி நரம்புகளில் புகுந்து, உடம்பெல்லாம் விரவி... கதறடிக்கும்.
கண்ணில் நீர்வர கூட்டம் விக்கித்து கிடக்கும்.

வெறும் பாவை கூத்துதான் என்பதை உணர வெகுநேரம் பிடிக்கும். அத்தனை சாமர்த்தியமாய் ஆறுமுகம் செய்து காட்டுவான்.

அவ்வப்போது இப்படி இந்த புளியமரத்தடி அல்லோகலப்படும்.
டிவியோ வேறு பொழுது போக்கு சாதனங்களோ இல்லாத அந்த காலத்தில் ஜனங்கள் சந்தோசமாய் எல்லாம் ரசித்தார்கள்.

அந்த உற்சாகத்தில் ஆறுமுகம் பொங்கலுக்கு புதிய நாடகம் போடப் போவதாகச் சொன்னான். “ இதே பாவை கூத்து மாதிரிதான். ஆனா அட்டை படத்துக்கு பதிலா நிஜ ஆட்கள். புராணக்கதையில்ல. நிஜ கதை.திரைக்குப் பின்னே நிழலுருவங்களாகத்தான் தெரிவோம்” என்று எல்லார் முகத்தையும் பார்த்தான்.

“ஆனா ஒண்ணு. அதுக்கு நீங்களும் ஒத்துழைக்கணும். அப்பதான் முடியும்.”எல்லாரும் சம்மதிக்க சந்தோசமானான்.

ஆனால் இவனது அப்பாவின் அரசாங்க உத்யோகம் ஊர் ஊராக குடும்பத்தையே பந்தாடியதன் விளைவு, பொங்கலுக்கு முன்னே இவன் ஆறுமுகத்தை பிரிய வேண்டியதாயிற்று.

ஆறுமுகத்தை சட்டென்று அடையாளம் தெரியவில்லை.முன்பக்க வழுக்கை விழுந்து,உடல் மெலிந்து, கன்னம் ஒட்டி,முன்பக்க இரண்டு பல் போயிருந்தன.கிழிந்த லுங்கியை தொடை தெரிய கட்டியிருந்தான்.சவரம் காணாத முகம்.ஒரு குடும்பஸ்தனுக்குரிய தளர்ச்சி.ஆளே மாறியிருந்தான்.திண்ணையில் தனியாளாய் எதையோ பாடிக்கொண்டிருந்தவன் இவனைப் பார்த்ததும் பிரகாசமானான்.

“ஏய். எப்படியிருக்க. எப்ப வந்த....” துள்ளி எழுந்தான். திண்ணையில் ஓலைப்பாயை விரித்துப் போட்டான்.

“என்ன ஆறுமுகம். நம்பவே முடியலை. நீ எப்படி மாறிப்போன.”

“சே... சே... அப்படியேதான்பா இருக்கேன்.”

உள்ளேயிருந்து குழந்தைகளின் சச்சரவு ஓசை. இங்கிருந்தே கத்தினான். “எலேய் வெளியே போய் விளையாடுங்க.... ஏ செல்வி யாரு வந்திருக்கா பாரு.”

அந்த செல்வி வெளியே வந்து எட்டி பார்த்தாள்.
“என் பிரெண்ட். பெரிய எஞ்சினியர்” அவள் பொதுவாய் சிரித்து விட்டு உள்ளே போனாள். “ என் வீட்டுகாரி” என்றான்.

குழந்தைகள் எரிச்சலுடன் வெளியே ஓடின.
சற்று நேரம் பேச எதுவுமே இல்லாத மாதிரி ஒரு மௌனம்.

“ஊரே மாறி போச்சி இல்ல..” இவன்தான் அமைதியை உடைத்தான்.

“ ம். மாற்றம் வரதை யாராலயாவது தடுக்க முடியுமா” என்றான்.

“சரி அத விடு. நீ எப்படியிருக்க. ப்ரொகிராமெல்லாம் பண்றியா.”

“புரொகிராமா.” லேசாய் சிரித்தான். “பழச நீ மறக்கவேயில்ல” என்றபடி தரையை வெறித்தான்.

“எப்படி மறக்க முடியும். என்னமெல்லாம் ஐடியா வச்சிருந்த. நாடகமெல்லாம் போட்டியா” முகத்தை பார்ப்பதை தவிர்த்தான். தாடியை சொறிந்தான்.

“ப்ச். எல்லாம் வெறும் நாடகமா போச்சி.”

“என்னடே ரொம்ப வெறுப்பா பேசற....”

செல்வி வெளியே கடையில் போய் சர்பத்தும் பழமும் வாங்கித் தந்தாள்.
“எதுக்கு இதெல்லாம்....”

“சும்மா குடிங்க.”

கையில் டம்ளரை எடுத்து உற்று பார்த்தான்.

“இப்ப எங்க இருக்கிய... வேலை பாக்கிறியளா...”

“ம். சென்னையில....”

“அதான் ஆம்பளைக்கு லட்சணம்.... கத கூத்துன்னு ஊரு சுத்தினா குடும்பம் நடத்த முடியுமா.இந்த மனுசன்கிட்ட எடுத்து சொல்லுங்க.” என்றாள்.

“ஏய் உள்ள போ” ஆறுமுகம் கசப்பாய் மென்று விழுங்கினான்.உள்ளே காயம் பட்டிருக்கிறான் என்று தோன்றியது.தோண்டி துருவினால் அவன் புண்ணை கிளறிய மாதிரி ஆகிவிடும் என்ற நினைப்பில் பேசாதிருந்தான்
கலைப்பொருள் ஒன்று மெல்ல மெல்ல துருவேறிக் கொண்டிருப்பதாய் உணர்வேற்பட்டது.

தாத்தா தேடி வந்து விட்டார்.” என்ன மக்கா நீ வந்ததும் வராததுமா இங்க வந்திட்ட. நேரம் இருட்டினது கூட தெரியாம அப்படியென்ன பேச்சி. வா.. வா.. கிளம்பு”மனமொப்பாமல் எழுந்து வந்தான்.

“பய ரொம்ப அடங்கிட்டான் தெரியுமா” தாத்தா கேட்டார்.

“ எந்த பய....”

“அதான் இவ்வளவு நேரம் பேசிட்டு வாரியே”

“ஏன்..... எதுக்கு....”

“அப்ப உனக்கு விசயமே தெரியாதா..”

“எந்த விசயம்.”

“அதானே. அத அந்த பய சொல்லியிருக்க மாட்டானே. அடிபட்டத ஒருத்தன் வெளியே சொல்லிட்டா இருப்பான்.”

“பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் வேண்டாம். நேரடியா விசயத்தை சொல்லுங்க.”

‘பின்ன என்னாப்பா. அந்த பய மேல வீட்டுக்காரனைப் பத்தி நாடகம் போடுகான்.அக்கிரமகாரனாம்.அநியாயம் பண்றானாம், தட்டி கேட்கணுமாம்.... அடிமையா இருக்கக்கூடாதாம்.. இந்த பயலுக்கு தேவையா இது.”

இவனுக்கு இவர்கள் தயாரித்த நவீன கூத்து நினைவுக்கு வந்தது. ஆறுமுகம் அதை அரங்கேற்றியிருக்கிறான் என்று கேட்க சந்தோசமாயிருந்தது.

“ம். அப்புறம்”

“அவரும் பொறுத்து பொறுத்து பார்த்தார்.இவன் புதுசு புதுசா அவரப்பத்தியே நாடகம் போடுகான். கடேசில அந்த மனுசன் விவரமா ஒரு வேலை செய்தாரு தெரியுமா”

“என்ன செய்தார்.” இவன் பரபரத்தான்.

“என்ன செய்தாரா.ஊர்காரன் ஒருபயலுக்கும் இனி வேலை இல்லன்னு துரத்திட்டாருல்லா. வேலை வேணும்னா அந்த கூத்த நிறுத்திட்டு வாங்கன்னு வச்சிட்டார்.”

“ஆங்.... பிறகு.”

வேலையத்த கூலி பயக சும்மா இருப்பானா.இந்த பயகிட்ட மருவாதியா சொல்லி பார்த்தானுக. ஆனா இவன் என்ன செய்தான் தெரியுமா. மறு நாளே வேற ஒரு நாடகம் போடுகான். என்ன கதை தெரியுமா.ஒண்ணா இருக்கிற பசுக்கூட்டத்தை அடிக்க முடியலைன்னு அதுகளை ஒரு கிழட்டு சிங்கம் ஒண்ணுக்கொண்ணு மோத விட்டுதாமே.... பிறகு தனித்தனியா பிரிஞ்சதும் அடிச்சி தின்னுதாமே.... அந்த கத.... கொழுப்புதானே இவனுக்கு.”

பரவாயில்லையே. ஆறுமுகத்துக்கு ரொம்பதான் தைரியம்.
“குடும்பமே கஞ்சி தண்ணியில்லாம கிடக்கு. நீ கூத்து போட்டு பொழப்பையா கெடுக்கிறேன்னு ஊர்கார பயலுக ஒண்ணா சேர்ந்து நையபுடைச்சிட்டானுகல்ல.... ரெண்டு பல்லுகூட அதிலதான் போச்சி.”

‘அடபாவிகளா’ இவன் வாய் விட்டு அரற்றினான்.
வழியில் சில பெருசுகள் தாத்தாவை சூழ்ந்து கொண்டனர்.

“அண்ணாச்சி நாங்க புக் பண்ணிட்டம். ஆனா தொகைதான் கொஞ்சம் பெருசு.”

“இந்த காலத்தில இருபத்தி அஞ்சாயிரம் ஒரு பெரிய தொகையா.. பாட்டுன்னா அப்படியொரு பாட்டு. இங்க எவன் கேட்டிருப்பான். சொல்லுங்க.”

“ என்னவோ அண்ணாச்சி. திருவிழாவை ஜோரா நடத்தி போடணும்.”
தாத்தா எல்லோரையும் பவ்யமாக விலக்கி விட்டு வந்தார்.

“அடுத்த வாரம் நம்ம கோயில் திருவிழா வருதில்ல. அதான் பெரிய ஏற்பாடெல்லாம் நடக்குது.” அவராகவே விளக்கம் சொன்னார்.

ஆறுமுகம் அன்று வித்தை காட்டிய மைதானத்தில் கச்சேரி நடந்தது. பெரிய மேடை.வண்ண வண்ண விளக்குகள்.அதிரும் ஒலிபெருக்கி.

நீண்ட நேர பந்தாவுக்கு பிறகு மேடையில் நாதஸ்வரமும் தவிலும் வாத்தியமிசைத்தன .கூடவே நவீன இசைக்கருவிகளின் பேரிரைச்சல். பளபளக்கிற பட்டுசேலையுடன் கிராமிய ஒப்பனையில் பெண்கள் நடனமாட நடுவில் நின்றவர் கணீரென்று பாட ஆரம்பித்தார். கூட்டம் கைதட்டியது; விசிலடித்தது;எழுந்து ஆடியது.

“கணீர்னு இப்படி ஒரு குரல் எல்லாருக்கும் அமையாதுப்பா” என்றான் ஆறுமுகம்.

“ அட போப்பா நம்ம சரக்க எடுத்து நமக்கே வியாபாரம் பண்றாங்க”

“யார் செஞ்சா என்னப்பா. நல்லதை பாராட்டணும்.”

“ நீ நினைச்சா இதை விட பெரிய ஆளா வரலாம் தெரியுமா. ஆனா உன் திறமையை நீ துரு பிடிக்க விட்டுட்ட.”

ஆறுமுகத்திற்க்கு ஏதோ சொல்ல நாவெழுந்தது. அடக்கிக்கொண்டு வேறு புறம் திரும்பிக்கொண்டான்.

“பேசாம என் கூட வந்திரு. இதவிட பெரிய ஆளாக்கி காட்டறேன். ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கலாம்.”

“அவ்வளவு பணம் வருமா இதில” செல்வி ஆச்சரியப்பட்டாள்.

“ ஆமா. பேர்,புகழ் இன்னும் எத்தனையோ..”

“ அட இது எனக்கு தெரியாம போச்சே. யார் கையை காலை புடிச்சாவது அப்படியெல்லாம் வர தெரியுதா இந்த மனுசனுக்கு. உருப்படற புத்தி ஒண்ணும் வராது. நீங்க கூட்டிட்டு போங்க . நான் சொல்றேன்....”

ஆறுமுகம் சிரத்தையற்றிருந்தான்.

“உன் வீட்டுகாரிதான் சொல்லிட்டயில்ல. கிளம்புற வழியை பாரு.”

“இல்ல வேண்டாம்” மெதுவாய் முனகினான்.

“ ஏன்”

அவன் பதில் பேச தடுமாறினான்.

“எனக்கு பிடிக்கலை”

“எது பிடிக்கலை.”

“என்னால.... என்னால.. கலையை வச்சி வியாபாரம் பண்ண முடியாது.”

“அட போப்பா. உன்னோட இதானே பெரிய தொந்தரவு. குடும்பம் குட்டினு ஆகியாச்சி. சம்பாதிக்க ஒரு வழி வேண்டாமா..”
சத்தமாய் சிரித்தான்.

“ நீயும் செல்வி மாதிரியே பேசற. சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு. ஆனா இது எனக்கு சரியா படலை”

“இப்படியெல்லாம் சொல்லி யாரை ஏமாத்திற... உனக்கு பயம்.”

ஆறுமுகம் அடிபட்டமாதிரி துடித்து எழுந்தான். கோபத்தில் எதையோ சொல்ல வந்து தலையையும் கையையும் உதறிக்கொண்டு திரும்பினான்.

அப்படி பேசியிருக்கக்கூடாதோ என்று தோன்றியது.
கோபமாய் வீட்டுக்கு கிளம்பியவன் திரும்பி இவனிடம் வந்தான்,
“ஆமாடா.எனக்கு பயம்.உன்கூட வந்திட்டா யாருக்கோ பயந்து தோத்து ஓடிட்டதா சொல்லுவாங்களே அதுக்குதான் பயம். நான் இந்த ஊருலேயே இருக்கணும். சும்மா கூத்து போட்டு மத்தவங்களை உசுப்பி விட்டுட்டு என்னால ஒதுங்கி ஓட முடியாது. அவங்க கஷ்ட நஷ்டத்தில நான் கூடவே இருக்கணும். அதான் எனக்கு சுகம். இத விட்டுட்டு உன்கூட வரதா... முடியாதுப்பா.. என்னால முடியாது”

செல்வி தலையில் அடித்துக் கொண்டாள். “இப்படி ஒரு ரெண்டும் கெட்டான் மனுசன் எனக்குன்னு வந்து வாய்ச்சாரே.... அவருக்கென்ன.. அஞ்சுக்கும் பத்துக்கும் நானில்ல அல்லாட வேண்டியிருக்கு.”

ஆறுமுகம் நிமிர்ந்து பார்க்கவில்லை.

கச்சேரியிலிருந்து பாதியில் திரும்பிய யாரோ ஒருவன் “ஏலே ஆறுமுகம்” என்று கூப்பிட்டான்.

ஆறுமுகம் “என்னண்ணே” என்றான்.

“ நாளைக்கு களியங்காட்டில வரப்பு வெட்டற வேல இருக்கு வரியா”

ஆறுமுகம் ஒருமுறை இவனை திரும்பி பார்த்துவிட்டு “ம்” என்றான்.


[ நன்றி:யூத்புல் விகடன்]

சிவா.ஜி
05-09-2009, 05:21 PM
பிரமாதம் என்று ஒற்றை வார்த்தையில் இந்தக் கதையை பாராட்டிவிடமுடியாது. ஆறுமுகம் போன்றவர்களின் கொண்ட கொள்கையில் உறுதியுள்ளவர்களைப் பார்க்கும்போது கைகூப்ப வேண்டும் போல தோன்றுகிறது.

கச்சிதமான கதை.

(ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்கி கௌரவிக்கிறேன்)

மஞ்சுபாஷிணி
05-09-2009, 05:21 PM
அருமையான பகிர்வு ஜார்ஜ்...

யூத்புல் விகடன்ல போட்டிருக்காப்பா இது?

ரொம்ப அருமையான கதாபாத்திரம் ஆறுமுகத்துக்கு.. இப்படிப்பட்ட ஜனஙளை இப்ப பார்க்கமுடியுமா என்பதே சந்தேகம் தான். தன் நலம் தன் வீடு தன் குடும்பம் என்று பார்ப்போர் மத்தியில் இப்படி இருக்கும் சில மனிதர்களுக்காக தான் இயற்கை மழை தருகிறது..

நன்றி ஜார்ஜ் பகிர்வுக்கு....

தமிழநம்பி
05-09-2009, 05:34 PM
கருத்துள்ள உணர்வு வெளிப்பாடு!
_______________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்து விடாதே நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

மதி
06-09-2009, 02:57 AM
அழகான கருத்து வெளிப்பாடு... ஆறுமுகத்தின் பாத்திர வடிவமைப்பு முகத்திலடித்தாற் போல தெளிவாக மன உறுதியுடன்.

வாழ்த்துகள் ஜார்ஜ்

பாரதி
06-09-2009, 03:33 AM
கதை மிகவும் நன்று ஜார்ஜ்.

ஆறுமுகம் ஒரு முகத்தில் இருக்கிறான். சுற்றி இருப்பவர்கள்தான் வேறுமுகம் காட்டுகிறார்கள் அல்லது தேடுகிறார்கள்.

ஊருக்கு ஊர் இப்படிப்பட்ட ஆறுமுகங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கலை தானாகத் துருப்பிடிப்பதில்லை. துருப்பிடிக்க வைக்க புறக்காரணிகளே முக்கியமானவையாக இருக்கின்றன.

கொள்கை பிடிப்புள்ள அதிலே மனநிறைவு அடைகின்ற ஆறுமுகம் போன்ற உண்மை மனிதனின் வாழ்க்கை... ஒரு படம்.... ஒரு பாடம்.

நன்றி நண்பரே.

செல்வா
06-09-2009, 03:38 AM
இது கதையல்ல அண்ணா....

என் வாழ்வின் ஒரு பகுதி....

வாசித்து முடிக்கையில்.....

ஒடிந்து விழுந்த ஒரு கிளையின் ஓசை....

பல நினைவுகளைக் கிளறி விட்ட கதை....

த.ஜார்ஜ்
06-09-2009, 08:05 AM
தாராளமாய் நட்ச்த்திரங்கள் வழங்கிய நண்பன் சிவா
அருமையென சிலாகித்த மஞ்சு,
கருத்தின் உணர்வின் வெளிப்பாடு என்று உணர்ந்த தமிழ் நம்பி,மதி,
ஒரு பாடமாக எடுத்துக் கொண்ட பாரதி,

எங்கே பாதித்தாய் நண்பனே. செல்வா,
வந்து விட்டு மௌனமாகவே கடந்து விட்ட தாமரை,அமரன்..

எல்லோருக்கும் இதோ என் எதிர்பார்ப்பில்லா நட்புகள். எடுத்துக் கொள்ளுங்கள்.

கீதம்
06-09-2009, 08:25 AM
வாசித்து முடித்ததும் எழுந்த வலியை விளக்க இயலவில்லை. எனக்குள்ளும் பல நினைவுகளைக் கிளறியது தங்கள் வாசகத்தைப்போலவே.

//தூங்கிக் கொண்டிருந்த ஞாபகங்கள், கோழி கிளறி எறியும் குப்பை மாதிரி எழுந்து பறந்தன.//

த.ஜார்ஜ்
06-09-2009, 02:07 PM
நினைவுகளை அசைபோடல் ஒரு சுகானுபவம்தான். அதற்கு கதை உதவியதில் சந்தோசமே.
நன்றி கீதம்

samuthraselvam
07-09-2009, 08:08 AM
ஜார்ஜ் உங்களுக்கு மட்டுமே வரும் இந்த நடை.... ஒவ்வொரு கதைக்கும் இடையே கால இடைவெளி போல, கதையின் கருவுக்கும்...

வாழ்த்துக்கள் ஜார்ஜ்.. தக்சுக்கு அப்புறமா மன்றத்தில் கதை குறையாமல் இருக்க நீங்கள் தான் காரணம்...

ஐரேனிபுரம் பால்ராசய்யா
07-09-2009, 08:33 AM
எத்தனைமுறை படித்தாலும் ஆசை தீராத அருமையான பதிவு. ஒரு கலைஞனின் உள்ளக்கிடக்கைகளை மிக அருமையாக நல்ல நடையோடு மண்சார்ந்து எழுதியிருக்கிறீகள். அந்த மலையடிவார பூமி, பருவமடைந்த பெண் போல பரவசப் படுத்தியது. கோழி கிளறி எறியும் குப்பை மாதிரி எழுந்து பறந்தன.இப்படி அடிக்கோடிட ஆரம்பித்தால் எல்லா வரிகளையும் அடிக்கோடிடலாம். கதையின் முடிவு நச்... பாராட்டுக்கள்

த.ஜார்ஜ்
07-09-2009, 04:28 PM
அன்பு மிகு சமுத்திர செல்வம் என்னை உற்சாகப் படுத்துகிற உங்கள் வரிகளுக்கு நன்றி தோழி

த.ஜார்ஜ்
07-09-2009, 04:30 PM
பிரியமுள்ள ஐ.பா.ரா
உங்கள் நாடக கலைதாகம் துருபிடிக்காமல் இருக்கிறதா?
பகிர்வுக்கு நன்றி நண்பா

இளசு
07-09-2009, 08:25 PM
அன்பு ஜார்ஜ்

சிவா, பாரதி, செல்வா, மஞ்சு, ஐபாரா,லீலுமா மற்றும் அனைவரின் பின்னூட்டங்கள் சொல்கின்றன - இக்கதையின் ஆழத்தை..


பாராட்டுவோர் வரிசையில் நானும் இணைகிறேன்..