PDA

View Full Version : குறிப்பு



ஆதவா
05-09-2009, 03:22 PM
பிரயாணத்தின் போது
செலவுகளுக்குப் பணம் வேண்டாம்
உடுத்திக் கொள்ள இயலாத சூழ்நிலைக்கு
ஆடைகளை எடுத்து வைக்காதீர்கள்
நான் எழுதிய எழுத்துக்களில்
வாசம் இருந்தால் கொஞ்சம்
முகர்ந்து பார்க்கச் சொல்லுங்கள்
எந்த கொடுக்கலும் வைத்துவிடவில்லை
ஏமாந்துவிடாதீர்கள்
இசை எனக்குப் பிடித்தமான கலை
அவ்வப்போது இசைத்துக் கொண்டிருங்கள்
என் காதுகளை அடைத்துவிடாதீர்கள்
மெளன ராகத்திற்கு முதன்மை கொடுங்கள்
எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது
அடுத்த வருடம் கொண்டாடுங்கள்
இன்னும் ஒன்றே ஒன்றுதான்
என் மனைவியை மட்டும் அனுப்பிவையுங்கள்
இடுகாடு வரையிலும்..

(சீனிவாசனுக்காக...)

சிவா.ஜி
05-09-2009, 04:56 PM
நல்ல இதயம், வாழ ஆசைப்பட்ட உயிர், ரசனையுடன் தன் வாழ்வை தொடர நினைத்த மனது....சட்டென்று முடிந்துபோகையில் மிக ஆழமான வேதனை.

உங்கள் எழுத்துக்களில் அவரது ஆன்மா தெரிகிறது.

அவருக்கு என் அஞ்சலிகள்.

மஞ்சுபாஷிணி
05-09-2009, 05:24 PM
அழகான வரிகள் ஆதவா... நெகிழ்வான விருப்பமுள்ள செயல்கள்.... பிரிந்திருக்க இயலாத தன் இணையை அனுப்பிவைக்க சொன்ன அன்பு.. மிக அருமை ஆதவா.. நன்றிப்பா...

அமரன்
05-09-2009, 05:37 PM
ஆதவாவின் கவிதாஞ்சலியுடன் என் மனமுருகாஞ்சலியும் சங்கமாகட்டும்.

வேறேதும் இருக்கா..

தாமரை
05-09-2009, 05:50 PM
ஒரு இறுதிக் குறிப்பு, மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு மனிதனின் இறுதிக் கடிதம்...

நானும் இதை போன்ற ஒரு கடிதத்தை படித்திருக்கிறேன்.. எழுதியவர் என் தந்தை..

எப்போ எழுதினார் தெரியுமா? அவருக்கு காசநோய் இருப்பது தெரிந்த பொழுது... நான் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது..

ஆனால் அது ஒரு டைரியில் ஒளிந்து கொண்டிருந்தது,,, அதன் பிறகு வெகுகாலம் என் தந்தை வாழ்ந்திருந்தார்.. காசநோயும் குணமானது..

அதில் இருந்த சில விஷயங்களை உன் கவிதையிலும் காண்கிறேன்..

இப்பொழுது சற்று வழக்கம் மாறிவிட்டது. மின் மயானங்கள், எரிவாயு மயானங்கள் வரை பெண்கள் வந்து இறுதி மரியாதை தருகிறார்கள்.

எரிவாயு மயானம் வரத்தவறிய என் மனைவி தன் தந்தையின் இறுதிச் சடங்கை காண இயலாமல் போனதே.. தெரிந்திருந்தால் வந்திருப்பேனே என இன்னும் புலம்பிக் கொண்டிருக்கிறார்..

தனது இறுதி மரியாதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை விட இதற்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கையும் இதில் இழையோடி வந்திருப்பது அழகு..

கடன் இல்லை..
அதிக ஆடம்பரமில்லை..
அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தவன் எனபதை அழகாக காட்டுகிறது...

மனைவிக்கும் மக்களுக்கும் நிம்மதியான வாழ்க்கையை உறுதியாக்கிய திருப்தி..
மரணத்தை ஏற்கும் அந்தப் பேரிதயத்தின் இயற்கை வணக்கம் ...

இக்கவிதைக்கு ஒரு மனிதன் உரியவனென்றால் அது மிகச்சிறந்த வாழ்க்கை..

அந்த மனிதனுக்கு என் வணக்கங்கள்,, ஆதவாவுக்கு...

இது கவிதை!

கீதம்
06-09-2009, 02:25 AM
ஆழ்மனம் வரை ஊடுவிச்சென்று அதிகத் துயர் தந்த கவிதை.

பாரதி
06-09-2009, 03:26 PM
சீனிவாசனுக்காக.... என்று சொன்ன பின்னர் வேறு என்ன சொல்ல...?
நல்லாருக்கு ஆதவா.

ஆதவா
09-09-2009, 03:04 AM
சிவா.ஜி அண்ணா, அமரன், மற்றும் பாரதி அண்ணாவுக்கு...
கவிதை சமர்பணம் மட்டுமே... அஞ்சலி அல்ல..
நன்றிங்க!!!

மஞ்சுபாஷிணீ, கீதம் ஆகியோருக்கு மிக்க நன்றிங்க...

தாமரை அண்ணா... உங்கள் பதிவு ரொம்பவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. (தேசியவிருது பெற்ற பிரகாஷ்ராஜ் மாதிரி) இப்பவும் பல இடங்களீல் இடுகாட்டுக்கு பெண்கள் வருவதில்லை.. அப்படி வந்ததாக நான் பார்த்ததுமில்லை./.. பெரிய நகரங்களில் மின் மயானத்திற்கு வர வாய்ப்பு அதிகமாக இருக்குமென்று அறிகிறேன். ஒரு சில சமூகங்கள் ஒத்துக் கொள்ளுவதில்லை...

இந்த கவிதையைப் போலத்தான் வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்!!!

கா.ரமேஷ்
09-09-2009, 08:26 AM
அருமையான கவிதை தோழரே...

ஒரு தனி மனிதனின் ஆசைகள் கடைசி காலங்களில் இவைகளாய்தான் இருக்கும்...

இளசு
04-11-2009, 05:16 PM
ஆதவா..

உன் கவிதாஞ்சலியுடன் என் மன அஞ்சலியும்..


மௌனராகம்..
மனைவியின் மயான வருகை..
கொடுக்கல் இல்லை என்ற அறிக்கை..

எவர்க்கும் பொருத்த வல்ல குறிப்புகள்...


தாமரையின் பின்னூட்டம் வெகு நேர்த்தி!