PDA

View Full Version : புதிய இனம் ? - தினமணிபாரதி
03-09-2009, 03:50 PM
அரசு உருவாக்கும் புதிய இனம் -சமஸ்


உதவிப் பேராசிரியர்களுக்கு ரூ. 26,352; பேராசிரியர்களுக்கு ரூ. 62,085 மாத ஊதியமாகக் கிடைக்கும் வகையில், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மிகக் கெüரவமான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. ஒரு சமூகத்தில் கல்வியாளர்களுக்கு அரசு அளிக்கும் மரியாதை, அந்தச் சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. அந்த வகையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்த அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ. 557.49 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏற்கெனவே, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 30 சத ஊதிய உயர்வு காரணமாக ஆண்டுக்கு ரூ. 5,155.79 கோடி தொடர் செலவினத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழக அரசு மட்டுமல்ல; மத்திய அரசும் நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுமே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுச் சுமையை ஏற்றுக்கொண்டுள்ளன. மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது என்பது நியாயமானது மட்டுமல்ல; அரசின் கடமையும்கூட.

அதேநேரத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் தவிர்த்து, நாட்டின் பெருவாரியான மக்களுக்கு இந்தச் செய்தி ஏன் உவப்பானதாக இல்லை என்பதை அரசு யோசிக்க வேண்டும்.
ஏனெனில், இதுவும் அரசின் கடமைதான்.

நம் நாட்டின் ஆகப் பெரும்பான்மையினர் - அதாவது, 93 சதவீதத்தினர் அமைப்புசாரா வேலைகளிலேயே இருக்கின்றனர். நாடு சுதந்திரமடைந்து இந்த 62 ஆண்டுகளில் இவர்களுடைய பணிப் பாதுகாப்புக்கு, பணி நலனுக்கு அரசு செய்தது என்ன என்று கேட்டால், சட்டப் புத்தகங்களிலுள்ள விதிகளைத் தவிர்த்து அரசால் உருப்படியான பதில்களைத் தர முடியாது.

தேசத்தின் உயிர்நாடியான விவசாயிகளின் கூலிப் பிரச்னையில் அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கிறது? கடந்த பல ஆண்டுகளாகவே குறைந்தபட்சக் கூலியை ரூ. 150-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசு என்ன செய்கிறது? இப்போதுதான் ரூ. 100-ஆக நிர்ணயிப்பது தொடர்பாகவே யோசிக்கத் தொடங்கியுள்ளது.

சரி, நெசவாளிகளின் நிலை எப்படி இருக்கிறது? 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையைவிட இப்போது இன்னும் மோசம். ஒரு நெசவாளி - குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு நாள் முழுவதும் உழைத்தால்கூட மாதம் ரூ. 5,000 ஈட்டுவது கடினம். நெசவாளிகளுக்கு உதவும் "சிகிடா'க்கள் ரூ. 2,000 ஈட்டினால், அது அதிர்ஷ்டம்.

இவர், அவர் என்றில்லாமல் நாட்டின் பெரும்பான்மைத் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை இதுதான். இவர்களுடைய நலன்களில் அரசு எடுத்துக்கொள்ளும் அக்கறை என்ன?

முன்னெப்போதுடனும் ஒப்பிட முடியாத இப்போதைய மோசமான சூழலையே எடுத்துக்கொள்வோம். விலைவாசி கடுமையான உச்சத்திலிருக்கும் இன்றைய சூழலில்தான் இந்திய முதலாளிகள், உலகப் பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு என்று "தீபாவளி' கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கேட்பாரற்றுக் கிடக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் நலனில் அரசு காட்டும் அக்கறை என்ன?

ஆக, அரசு என்ன நினைக்கிறது என்றால், அதிகாரத்தைத் தம்முடன் பகிர்ந்துகொள்ளும் சக பங்காளிகளின் நலன் மட்டுமே தன்னுடைய பொறுப்பு என்று நினைக்கிறது. எஞ்சியோருக்கு ரூ. 1-க்கு ஒரு கிலோ அரிசி, ரூ. 80 கூலி, 100 நாள் வேலை போதும் என்று நினைக்கிறது.

இந்தப் போக்கு அநீதியானது மட்டுமல்ல; ஆபத்தானதுமாகும். அரசின் மனோபாவம் இந்தியாவில் அரசு ஊழியர்களை மட்டும் சகல கடவுளர்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக மாற்றி வருகிறது.

சகல வசதி - வாய்ப்புகளையும் பெற்ற, அதிகாரத்தைக் கையாளக் கூடிய ஒரு புதிய இனமாக அரசு ஊழியர்களை மாற்றி வருகிறது.

இந்த உண்மையை எல்லோரையும்விட சாமர்த்தியசாலிகள் - குறிப்பாக - அரசு ஊழியர்கள் சீக்கிரம் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பாருங்கள். ஓர் அரசு ஊழியர் அவர் ஆணோ, பெண்ணோ திருமண வயதில் இருந்தால், அவர் தேடும் இணையை அரசு ஊழியராகவே தேடுகிறார். அரசுப் பணியில் இருக்கும் பெற்றோர் தம் பிள்ளைகளுக்குத் தேடும் வரன்களும் அரசு ஊழியர்கள்தான்.

இப்படியாக ஓர் இனம் உருவாகிறது; சகல வசதி - வாய்ப்புகளையும் பெற்ற, அதிகாரத்தைக் கையாளக்கூடிய ஒரு புதிய இனம். சமூகத்தின் ஏனைய தரப்பினர், அரசையும் அது உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்தப் புதிய இனத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எங்கே போய் முடியும்?


நன்றி : தினமணி

அறிஞர்
03-09-2009, 06:44 PM
சம்பள உயர்வு... நல்ல விசயம் தான்... ஆனால்... சிறிது சிறிதாக உயர்த்த வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கு.. ஒரே நேரத்தில் 22,000 கூட்டிக்கொடுத்தது சரியா என யோசிக்கவைக்கிறது.

அரசாங்க ஊழியர்கள் சம்பளத்திற்கேற்ப உழைத்தால் நன்றாக இருக்கும்.

Ranjitham
04-09-2009, 03:46 AM
ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த இனம் ஓய்வுடன் முடிந்துவிடக்கூடியது.
ஆனால் ஒரு சில அரசியல்வாதிகளாலும் அதிகாரவர்க்கங்களாலும் உருவாக்கப்பட்ட இனம் பல்கிப்பெருகிக் கொண்டல்லவா இருக்கின்றது.

டாட்டா பிர்லா என்ற பணக்காரவர்க்கத்தினர்களைவிட இன்று எத்தனை அரசியல்வாதிகள் கோடிகளில் புரள்கின்றார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே.


நன்றியுடன்
இரன்சிதம்

சிவா.ஜி
04-09-2009, 05:09 AM
மாநில மக்கள்தொகையில் இரண்டு சதவீதமே இருக்கும் இந்த இனத்தினருக்கு மட்டும் இப்படி வாரி வழங்கிவிட்டு, மற்றவர்களை பிச்சைப்பாத்திரம் ஏந்த வைப்பது எந்தவகையில் நியாயம்.

இந்த சம்பளௌயர்வின் பின்னனியில் இருப்பது சந்தேகமேயில்லாமல், தலைவரின் அரசியல் சாணக்கியத்தனம்தான். தேர்தலில் அதிகமாக பணியாற்றுவது இந்த இனம்தானே...ஒன்றையும் ஒன்றையும் கூட்டிப்பார்த்தால் கணக்கு சரியாகத் தெரியும்.

இத்தனைக் கேவலமான அரசியலை தமிழகம் இதுவரைக் கண்டதில்லை. அரசுஉழியர்களுக்கு எத்தனை ஆயிரங்கள் சேர்த்துக்கொடுத்தாலும், ஐந்துக்கும், பத்துக்கும் கையேந்தும் பழக்கம் மட்டும் அவர்களைவிட்டு போகப்போவதில்லை.

இந்த விஷயத்தில் ஜெயா மேடத்தின் அதிரடி நடவடிக்கையை நான் மனதார பாராட்டுகிறேன்.

கா.ரமேஷ்
04-09-2009, 07:08 AM
இதற்க்கு பெயர்தான் தெருதேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்தல் என பெயர்.

இதனால் பாதிக்கும் காரணிகள் பல அதில் விலைவாசி ஏற்றமும் ஒன்று,முக்கியமாக நடுத்தர,ஏழை வாழ்க்கை முறை இந்த சூழ்நிலையில் சொல்லிமாளாது.

அரசு துறைக்கு தேவையான வருமானத்தை எங்கே இருந்து வசூல் செய்கிறார்கள் என்பதையும் மக்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.தொழில்சார்ந்த வரி(professional tax) எந்த மாநிலத்தில் வேலை பார்க்கிறோமோ அந்த மாநிலம் வருடத்திற்க்கு இரு முறை வசூலிக்கும்(வருமான வரி என்பது தனிகணக்கு), கணிப்பொறி சார்ந்த அலுவலர்கள் இதை தெரிந்திருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது இந்த வருடம் முந்தைய வருடத்தைவிட ஐம்பது சதவீதத்திற்கு மேல் அதிகரித்திருக்கிறார்கள். ஒருபக்கம் சுமையை அதிகரித்து விட்டதோடல்லாமல் மறுபக்கம் வருமானத்திலும் கை வைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது அரசுக்கு? .

இங்கு பொதுவாக இந்தியாவில் நடப்பவை எல்லாமே அரசியல் சார்ந்த*,பலமுள்ள* தனிநபர் சார்ந்தவையாகத்தான் இருக்கிறது என்பது எனத் கருத்து...

சிவா.ஜி
04-09-2009, 07:13 AM
மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் கா.ரமேஷ்.

பலமுள்ள தனிநபர் சார்ந்தைவையாகத்தான் உள்ளது. மக்கள் ஒரு ரூபாய் அரிசிக்கும், இலவச தொலைக்காட்சிக்கும் மயங்கி, கையேந்தி நிற்கும் நிலை மாறும்வரை இது மாறாது.

arun
04-09-2009, 07:20 AM
சம்பள உயர்வு உண்ல்மையில் நல்ல விஷயம் தான் அதுவும் கல்வி கற்று கொடுப்பவர்களுக்கு இது வரை கொடுத்து வந்த சம்பளம் நியாயமானது இல்லை தான்

ஆனால் அனைவருக்கும் சம்பள தொகையை உயர்த்தினால் நன்றாக இருக்கும்

தாமரை
04-09-2009, 08:26 AM
டாக்டர்கள் டாக்டர் மாப்பிள்ளைதான் வேணும்னு தேடறது..

இஞ்சினியர்கள் இஞ்சினியர்ங் படிச்ச பொண்ணைத் தேடறது...

இப்படி வழக்கமா நடக்கிறதுதானுங்களே!!!

அமரன்
04-09-2009, 08:39 AM
டாக்டர்கள் டாக்டர் மாப்பிள்ளைதான் வேணும்னு தேடறது..

இஞ்சினியர்கள் இஞ்சினியர்ங் படிச்ச பொண்ணைத் தேடறது...

இப்படி வழக்கமா நடக்கிறதுதானுங்களே!!!

துறையில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து நடந்துக்கத்தானே இந்தப் பழக்கம்..

அன்புரசிகன்
04-09-2009, 09:23 AM
எது எப்படியோ இறுதியில் உருளப்போவது பாமரனின் தலைதான்...

கா.ரமேஷ்
04-09-2009, 11:01 AM
இதில் இன்னொரு கேலிகூத்தும் இருக்கிறது.எத்துனையோ தனியார் பொறியியல் கல்வி நிலையங்கள்,பள்ளிகள்,பல்தொழில் பயிற்சி நிலையங்கள்,ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ஆயிரத்திற்கும் குறைவான சம்பளம் பெறும் ஆசிரியர் இருக்கிறார்கள் இவர்களுக்கெல்லாம் என்ன செய்ய போகிறது அரசு? அவர்கள் ஆசிரியர் இல்லையா?

இவர்களுக்கு தகுதியெல்லாம் பார்ப்பதில்லை என்பது இன்னொரு கொடுமை(பலர் தகுதியுடையவர்கள் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை).இவர்களுக்கு அந்த நிறுவனங்கள் சொல்லும் ஒரே தகுதி குறைந்த சம்பளம்.இதனை முறைபடுத்த அரசு முற்படுமா? கண்டிப்பாக முடியாது காரணம் அந்த நிறுவனங்களை நடத்துவதே அரசியல் அல்லது அரசியல் சார்ந்தவர்கள் என்பதும் அறிந்த விசயங்கள்தானே...

சிவா.ஜி
04-09-2009, 11:08 AM
இவர்களில் யாரும் தேர்தலில் பணியாற்றப்போவதில்லை. பின் எப்படி “நன்றிக்கடன்” பட முடியும்?

இதுவரைக் கிடைத்துவந்த சம்பளத்துக்கே ஒழுங்காய் ஐந்து சதவீதம்கூட வேலை செய்ததில்லை. இனி சுத்தம்.

எத்தனையோ தகுதி வாய்ந்த, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ள இளம்வயதினர் இருக்கும்போது, மேக்கப் சாதனங்களுக்காகவும், பேரன் பேத்திகளுக்கு திண்பண்டம் வாங்கிக்கொடுக்கவும், பேரிளம் பெண்களுக்கும், கிழவிகளுக்கும், சீனியாரிட்டி என்ற ஊசிப்போன வாதத்தை வைத்துக்கொண்டு வேலையில் அமர்த்தியதே வாக்கு விகிதத்தைக் கூட்டத்தான் என்பது அறியாததா?

இளசு
04-09-2009, 08:37 PM
பாரதி,

இந்தியாவின் வருமான வரி உச்ச அலுவலர் ஒருமுறை சொன்னார்:

மேல்தட்டுக்கும் கீழ்த்தட்டுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது -- அபாய அளவை நோக்கி..

இது தடுக்கப்படாவிட்டால்... ஒரு வர்க்கப்போர் வருவதையும் தடுக்க முடியாது ....

-- இப்பதிவுச் செய்தி அவரது அச்சத்தை அதிகரிக்கும்..

அய்யா
07-09-2009, 12:42 PM
வர்க்கப்போர் வருமென்பதெல்லாம் அக்கப்போர்! அதெல்லாம் வந்துவிடாது!!

ஆசிரியர்கள் வருவாய்க்கு வரியாவது செலுத்துகிறார்கள். ஆனால் ரேஷன் கடை ஊழியர் அடிக்கும் கொள்ளை இவரைவிடப் பன்மடங்கு! சோதனைச்சாவடிகளிலோ கேட்கவே வேண்டாம்.

மருத்துவத்துறையோ மயக்கமே வந்துவிடும். காவல்துறையோ கயமைத்தனத்தின் உச்சம்.

நாம் எதிர்க்கவேண்டியது உயர்வுகளை அல்ல.. ஊழலைத்தான்!

Ranjitham
10-09-2009, 12:18 AM
நாம் எதிர்க்கவேண்டியது உயர்வுகளை அல்ல.. ஊழலைத்தான்!எந்த ஊழலை ? முடியுமா? யார்செய்யும்? எங்கிருந்து? எப்படி?

அறிஞர்
10-09-2009, 02:09 PM
இது ஒரு வகையான இனம்.

புதுவை எம்எல்ஏக்கள் சம்பளம் கிடுகிடு


2 ஆண்டு நிலுவை தொகை ரூ.8 லட்சம் வரை கிடைக்கும்


புதுச்சேரி, செப். 10-
புதுவை எம்எல்ஏக்களுக்கான சம்பளம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மாதம் ரூ.60 ஆயிரம் வரை கிடைக்கும். முன்தேதியிட்டு அமல்படுத்துவதால் 5 முதல் 8 லட்சம் ரூபாய் வரை நிலுவைத் தொகையும் வழங்கப்படுகிறது.

புதுவை சட்டசபையில் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக உள்ளனர். இவர்களுக்கு இதுவரை ரூ.2 ஆயிரமாக இருந்த அடிப்படை சம்பளம், தற்போது ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தொகுதிபடி ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.8 ஆயிரமாகவும், வாகனப்படி ரூ.500-ல் இருந்து ரூ.4 ஆயிரமாகவும் உதவியாளர் மற்றும் எழுது பொருட்களுக்காக அளிக்கப்பட்ட தொகை ரூ.5,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்படுகிறது.

ரயில் பயணத்துக்காக ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் வரை அளிக்கப்பட்டு வந்தது. இதை மாற்றி விமானத்தில் சென்றுவர ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் அளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக எல்லா படிகளையும் சேர்த்து இதுவரை ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் பெற்று வந்த எம்எல்ஏக்களுக்கு, இனி ரூ.60 ஆயிரம் வரை கிடைக்கும்.
சம்பவ உயர்வுக்கான கோப்பில் கவர்னர் கையெழுத்திட்டுள்ளார். ஊதிய உயர்வு 2007-ம் ஆண்டு பிப்ரவரி 9 முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலுவைத் தொகையாக சுமார் 5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கிடைக்கும்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் எம்எல்ஏக்களுக்கான சம்பள உயர்வு குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பேரவை முடிந்த பிறகுதான் இதற்கான தயாரிப்புகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளதாக சட்டசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி சட்டசபை செயலர் சிவபிரகாசத்திடம் கேட்டபோது எம்எல்ஏக்களுக்கான சம்பள உயர்வை உறுதிப்படுத்தினார்.