PDA

View Full Version : ரம்ஜான் பரிசு....

மஞ்சுபாஷிணி
02-09-2009, 10:32 AM
ரம்ஜான் பரிசு....

அண்ணா நான் வேலைக்கு போகலாம் என்று இருக்கேன் “ மெல்ல தொடங்கினாள் ஃபாத்திமா.

ஏன் இப்ப அதுக்கென்ன அவசரம் வந்திச்சாம்? ஃபாத்திமாவின் மூத்த அண்ணன் ஷரீப்

என்னால் முடிந்த அளவு கொஞ்சம் உதவலாமே உங்களுக்கு என்று தான் அண்ணா....

ஓஹோ தங்கச்சிக்கு கல்யாணம் செய்துவைக்க துப்பில்லாதவன்னு நீயே சம்பாதிக்க ஆரம்பிக்கிறியா?

இல்லன்னா லாக் அவுட் செய்து வேலைக்கு போகாம நீங்க வீட்டில் இருந்துக்கொண்டு ராத்திரி ஆனால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குழந்தைகளையும் அண்ணியையும் இம்சிப்பதை பொறுக்க முடியாமல் தான்... என்பதை சொல்லவில்லை ஃபாத்திமா..

சரி சரி எவ்ளவு சம்பளமாம்? சிகரெட்டை உதட்டில் பொருத்தியவாறே கேட்டான் ஷரீப்

முதலில் 6000 ரூபாய் தருவார்களாம்... பின்னர் என் வேலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து மேலும் உயர வாய்ப்பிருக்கு.

இதெல்லாம் தூரத்தில் துணி தைத்துக்கொண்டே ஷரீப் மனைவி மீனாள் (காதலித்து மணந்தவள்) முணுமுணுத்தாள்... சம்பாதிக்க துப்பு இல்லன்னாலும் குடும்பத்தை காப்பாத்த ஒரு ஜீவன் வெளியே உழைக்க போனால் ஆயிரத்தெட்டு கேள்விகள்..

ஃபாத்திமாவின் இரண்டாவது அண்ணன் பஷீர் பணக்கார இடத்தில் பெண்ணை மணந்து வீட்டுக்கு மாப்பிள்ளையாகி இவர்கள் ஞாபகங்களில் கூட தப்பித் தவறி வராது இருந்துவிட கவனமாக இவர்கள் கண்களில் கூட படுவதே இல்லை.

முதல் நாள் வேலைக்கு போகும் ஃபாத்திமாவுக்கு டிபன் பாக்சில் தயிர்சாதத்தை அன்பையும் சேர்த்தே குழைத்து தொட்டுக்கொள்ள உப்பிலிட்ட நார்த்தங்காய் ஊறுகாய் வைத்து அனுப்பினாள் மீனாள்.

குடும்பத்தை காக்க வேறு வழி இல்லாததால் மட்டுமே நீ வேலைக்கு போக நான் சம்மதிக்கிறேன் ஃபாத்திமா.. மற்றபடி நான் உன் அண்ணி இல்லை... என் குழந்தைடா நீ என்று சொல்லி அன்புடன் நெற்றியில் முத்தமிட்டாள்...

எனக்கு தெரியாதா அண்ணி உங்களை.... நீங்க என்னிக்குமே என் தாய் தான்...

அம்மா என்னை பெற்றுவிட்டு கண்மூடியபோது உங்கள் முகம் பார்த்து தான் முதலில் நான் அழுததாக வாப்பாவே சொல்லி இருக்கார் அண்ணி என்று கண்ணீர் துளிர்க்க மீனாள் அறியாது கண்ணை துடைத்துக்கொண்டாள்.

முதல் நாள் அதுவும் நேரத்திற்கு ஆபிசுக்கு போகவேண்டுமே என்று அரக்க பரக்க செருப்பை போட்டுக்கொண்டு ஓடினாள் பஸ் பிடிக்க.

ஆபிசில் நுழையவும் மணி சரியாக ஒன்பது அடித்தது.

புதிதாக சேர்ந்திருந்தாலும் டெலிபோன் ஆபரேட்டர் வேலை மட்டுமல்லாது செகரெட்டரி வேலையும் கற்று தேர்ந்திருப்பதால் அவளுக்கு எளிதாகவும் இருந்தது வேலையை கற்க..

மாலை வேலை முடிந்ததும் பஸ்ஸில் ஏறியதும் உட்கார இடம் கிடைக்கவே உட்கார்ந்த்தும் கண்ணை மூடியதும் தன் பால்யக் கால நண்பன் ரமேஷ் ஞாபகம் வந்தது. இப்போது எப்படி இருப்பான் என்று நினைத்தாள்....

பள்ளி நாட்களில் இருவரும் ஒன்றாய் பள்ளிக்கு போனதும், எப்போதும் வகுப்பில் முதலில் வரவேண்டும் என்று இருவரும் போட்டி போட்டுக்கொண்டு படித்ததும்.... எல்லா ஆசிரியர்களுக்குமே இருவரும் செல்லப்பிள்ளைகள் ஆனதும்.... வீட்டில் இருந்து கொண்டு வரும் சாப்பாட்டை இருவரும் பகிர்ந்து உண்டதும்.. ரம்ஜான் நோன்பு இவளுக்காக ரமேஷும் சேர்ந்து இருந்ததும் அவனுடைய பூணூல் கல்யாணம் சாப்பாட்டை அவன் ஆசையுடன் கொண்டு வந்து இவளுக்கு கொடுத்ததும்... இருவரின் நட்பு பிடிக்காமல் இரு குடும்பமும் அடித்துக்கொண்டதும் தாறுமாறாய் வார்த்தைகளை வீசிக்கொண்டதும் பின் தன் இனிய நண்பன் ரமேஷ் குடும்பத்துடன் ஊரை விட்டு போனதும் தான் மிகவும் தனிமையானது எல்லாம் நினைவுக்கு வந்தது.... மூடியிருந்த கண்களில் கண்ணீர் நிறைந்தது..

நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கவேண்டும்... அதற்கான ஆயுத்தங்களில் வீடு தயாராகிக் கொண்டு இருந்தது.

வீட்டில் நுழையும்போது எதிர்வீட்டில் யாரோ வந்ததன் அடையாளமாக எதிர்வீடு நிறைந்து இருந்தது..

என்ன அண்ணி எதிர்ல வீடு ஒரு வருஷமா பூட்டியே இருந்ததே என்று கூறிக்கொண்டே கைப்பையை வைத்துவிட்டு முகம் கை கால் கழுவ போனாள் ஃபாத்திமா...

எதிர்வீட்டில் வந்திருப்பது யாருன்னு தெரியுமா என்று மீனாள் கேட்டாள்.

இப்ப தானே அண்ணி கூட்டம் நிறைந்திருப்பதை பார்த்தேன்... தெரியலையே என்று சொல்லிக்கொண்டே முகம் கழுவிக்கொண்டு வந்து தொழுகை செய்ய பாய் விரித்தாள்..

ரமேஷ் குடும்பம் தான் வந்திருக்கிறது ஃபாத்திமா... ரமேஷ் வெளியூரில் மாதம் 2 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து கொண்டு இருந்திருக்கிறான்... இப்ப அவனுக்கு ரெண்டு கிட்னியும் ஃபெயிலியர் ஆனதால் இங்க ஊருக்கே வந்திருக்காங்க... அவனுக்கு கிட்னி கொடுக்க அவன் சொந்தங்களே முன் வராத நிலையில் வயதான காரணத்தால் ரமேஷின் தாய் தந்தையருக்கு பிபி சுகர் கொலஸ்ட்ரால் இருக்கும் காரணத்தாலும் முதுமையின் காரணத்தாலும் கிட்னி கொடுக்க இயலாது என்று டாக்டர் சொல்லிவிட்டாராம். ரமேஷ் முகத்தை பார்க்கவே முடியவில்லை என்று மீனாள் சொன்னதும் அதிர்ந்தாள் ஃபாத்திமா..

என் நண்பன் உயிராய் இருந்த நண்பன் வந்திருக்கிறானா... சந்தோஷம் ஒரு பக்கமும் உயிருக்காக போராடும் நிலையில் வந்திருக்கும் நண்பனைப் பார்க்கத் துடித்த மனதை கட்டுப்படுத்தினாள். தொழுகையை முடித்தாள் அமைதியாக. நாளை முதல் தொடங்கும் ரமதான் நோன்பு எந்த தடையும் இல்லாமல் நல்லவிதமாக நடக்க மானசீகமாக வேண்டினாள். ரமேஷின் உயிரை காக்க இறைந்தாள்...

தொழுகையை முடித்துவிட்டு எதிர்வீட்டுக்கு ஓடினாள் ஃபாத்திமா...

ரமேஷின் அன்னை விளக்கேற்றிக்கொண்டிருந்தார்.

யாரோ நுழையும் சப்தம் கேட்க திரும்பி பார்த்த மீனாட்சி, “ நீங்க யாருன்னு தெரியலையே “ என்று கண் இடுங்க பார்த்தாள்.

நான் ரமேஷின் சிறுவயது பள்ளித் தோழி ஃபாத்திமா என்று சொல்லி கை கூப்பினாள்.

உடனே மீனாட்சி அவள் கைகளை பிடித்துக்கொண்டு கதறினாள்.

உன்னிடமிருந்து என் மகனை பிரித்தேன்.. உங்கள் நட்பை பிரித்து அவனை எங்கோ கூட்டிக்கொண்டு போனேன். இப்ப உயிரையாவது இந்த மண்ணில் விட அனுமதி கொடுங்க அம்மா என்று என் மகன் என் கால் பிடித்து கதறும்போது என் இதயமே நின்றுவிடும் போலிருக்கிறதும்மா.. இவன் கூடப்பிறந்தவர்களுக்காக் உழைத்து இவன் அனுப்பின காசில் படித்து கல்யாணம் செய்து சந்தோஷமாக குடும்பமாக இருக்கும் இவன் தங்கைகள் தம்பிகள் ரமேஷுக்கு இப்படி ஆனதுக்கு கிட்னி தரமுடியுமான்னு கேட்டதுக்கு அப்புறம் அவர்களிடம் இருந்து எந்த ஒரு போனோ தகவலோ இல்லம்மா...

ரமேஷ் சொல்றான், “ இனி என் உயிராவது நிம்மதியா போகட்டும்மா நம்ம மண்ல.... யாரையும் எதுவும் கேட்கவேணாம்னு சொல்லிட்டான்மா என்று அழுதார்.

மாமா எங்கே என்று கேட்டுக்கொண்டே சுற்றுபுறம் பார்த்தாள்.. இருமும் சத்தம் ஒரு அறையில் இருந்து கேட்கவே அங்கே போய் பார்த்தபோது எலும்புக்கூடாய் ஒரு உருவம் கட்டிலில் படுத்திருப்பதை பார்த்து பதறி ஓடினாள்.

கட்டிலின் அருகே ரமேஷின் வயதாகி தளர்ந்த தந்தை அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தார்.

மாமா கவலைப்படாதீங்க. நீங்களும் நானும் அத்தையும் விடாது பிரார்த்திப்போம். நாளை முதல் ரம்ஜான் நோன்பு இருக்கிறேன் என் நண்பனுக்காக என்று அழுதுகொண்டே கூறினாள்.

ஃபாத்திமாவில் குரல் கேட்டு கண்விழித்தான் ரமேஷ்.. இடுங்கிய கண்களுடன் ஃபாத்திமாவை பார்த்தான்.

நெடுநாட்கள் காணாதிருந்து கண்ட நண்பர்களின் தூய நட்பு அங்கே கண்ணீராய் கரைந்ததை மாடத்திலிருந்த விளக்கு மங்கிய ஒளியுடன் தானும் ஒரு சாட்சியாய் பார்த்துக்கொண்டு இருந்தது.

ரமேஷ் அழாதே டா... உயிர் விட வந்த உன்னை உயிரோடு திரும்ப நான் பார்ப்பேன்.. நம்பு என்று உறுதியுடன் சொல்லி அவன் கண்களை துடைத்தாள்.

இந்த அருமையான பெண்ணை எத்தனை கேவலமாக பேசி விரட்டினோம் என்று ரமேஷின் பெற்றோர் கண்ணீருடன் கைக்கூப்பினர் மன்னிப்பு கேட்டு ஃபாத்திமாவிடம்.

ஃபாத்திமா பதறி அவர்கள் கைகளை விலக்கி அத்தை மாமா நீங்க பெரியவங்க. நீங்க ஆசி தான் கொடுக்கனும். கைக்கூப்பக்கூடாது.

நாளை நானும் வருகிறேன் ஆஸ்பிடலுக்கு என்று கூறி நம்பிக்கை ஆசையை விதைத்துவிட்டு வந்தாள்.

எத்தனை நல்லபெண் பார்த்தியா மீனாட்சி... நம்ம மகன் பிழைப்பானோ இல்லையோ எனக்கு தெரியாது.. பணத்தை கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காத நல்ல உள்ளத்தை நம் மகன் நட்பாக கொண்டுள்ளான். இனி அவன் நிம்மதியாக மூச்சை இங்கே மண்ணுக்கு சொந்தமாக்கட்டும் என்று பெருமூச்சுடன் படுக்கப் போனார்.

மறுநாள் மாலை ஆபிசு முடிந்ததும் ஆஸ்பிடலுக்கு புறப்பட்டனர். டாக்டர் சொன்னார் யாராவது கிட்னி டோனர் கிடைத்தால் அதுவும் இந்த இருபது நாட்களுக்குள் கிடைத்தால் ஆபரேஷன் வைத்துக்கொள்ளலாம். சொந்தததில் கொடுத்தாலும் சரியே... ஃபாத்திமா அப்போது டாக்டரிடம் , “ இடையில் நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்கனும் டாக்டர்” நான் என் நண்பனுக்காக் கிட்னி தரலாமா என்றபோது அதிர்ச்சி விலகா கண்களுடன் ரமேஷ் உள்பட குடும்பமே பார்த்தது ஃபாத்திமாவை.

டாக்டர் ஃபாத்திமாவை யாரென்று விசாரிக்க... சிறுவயது தோழி நான் இவனுக்கு என்று ரமேஷின் தோள் அழுத்தி சொன்னாள். அந்த அழுத்தலில் யாமிருக்க பயமேன் என்பது போல் இருந்தது.

டாக்டர் ,” இங்கே பாரம்மா உன் அருமையான உதவும் எண்ணம் சந்தோஷம் தரக்கூடியதே. ஆனால் உன் கிட்னி அவருக்கு ஒத்துப்போனால் மட்டுமே தான் மாற்ற முடியும். அதுக்கும் நிறைய டெஸ்டுகள் இருக்கு..

டாக்டர் என் நண்பனுக்காக உயிரையே தருகிறேன் என்று முன்வரும் என்னை அல்லா ஏமாற்றமாட்டார். ஒரு கிட்னியுடன் ஆரோக்கியமாக என்னால் யதார்த்த வாழ்க்கை வாழமுடியும்போது ஒரு கிட்னி நான் என் நண்பனுக்காக தரமுடியும். அல்லா கண்டிப்பாக என்னுடையதை என் நண்பனுக்கு பொருந்துமாறு செய்வார். நட்பு எதையும் தாங்கும். நட்பு எதையும் செய்யும். என்பதை நான் சொல்லித்தானா தெரியனும் டாக்டர் என்றாள் ஃபாத்திமா..

ரமேஷின் தந்தை தாய் இருவரும் ஒரு சேர ஃபாத்திமாவின் காலில் விழப்போனபோது பதறி விலகினாள் ஃபாத்திமா...

சந்தோஷத்துடன் நம்பிக்கையோடு உயிரை காக்கும் தெய்வமாக கண்முன் தெரியும் தேவதையாக ஃபாத்திமா தெரிந்தாள் அவர்கள் கண்ணுக்கு.

அடுத்தநாளே வேலைக்கு போய் நடந்த விவரம் சொன்னபோது மேலாளர் மகிழ்ச்சியுடன் சொன்னார். உதவி செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் மட்டுமே நம்மால் பிறருக்கு உதவமுடியும். அதுவும் ஒரு உயிரை காக்கும் அரியபணி இப்போது உனக்கு.. தைரியமாக போய்வாம்மா... நீ நலமுடன் வந்து திரும்ப எப்போது வேண்டுமானாலும் வேலையில் சேரலாம் என்று கண்கள் பனிக்க சொன்னார்.

கிட்னி கிடைக்காது பணம் இருந்து போராடி உயிர் விட்ட அவருடைய மனைவியை அவர் அந்நேரம் நினைத்ததை பாவம் ஃபாத்திமா அறிந்திருக்க வாய்ப்பில்லை..

டெஸ்டுகள் எல்லாம் முடிந்து ஃபாத்திமாவின் கிட்னி பொருந்தி இருப்பதை டாக்டர் சந்தோஷத்துடன் தெரிவித்து ஒரு மாதம் முன்பே நீ ஆஸ்பிடலில் அட்மிட் ஆகி உடம்புக்கு தேவையான சத்துள்ள மருந்துகளும் ஆகாரமும் உட்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் டாக்டர்.

டாக்டர் நான் நோன்பில் இருக்கேன். அல்லா கண்டிப்பாக நல்லதை செய்வார். நம்பிக்கையோடு சொல்கிறேன் ஆபரேஷனுக்குரிய ஏற்பாடுகள் செய்யுங்கள் என்றாள் ஃபாத்திமா.

வியப்பான முகத்துடன் டாக்டர் பார்த்தார். தேவதை தான் இந்த பெண் தெய்வம் போல இவர்களுக்கு கிடைத்தது இவர்களின் அதிர்ஷ்டமே என்று நினைத்தார்.

ரமேஷ் ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டான். தினமும் ஃபாத்திமா அவனை அருகிலிருந்து நன்றாய் கவனித்துக்கொண்டாள். புன்னகையுடன் ரமேஷின் இடுங்கிய முகம் விரியும்போது தைரியமாக இரு என்று நம்பிக்கையோடு கைகோர்த்து சொன்னாள்.

நோன்பின் கடைசி நாள் ஆபரேஷனுக்கு தேதி குறிக்கப்பட்டது.

இங்கே ஷரீபுக்கும் பஷீருக்கும் இந்த விவரம் தெரிந்து பஞ்சாயத்து கூட்டினர்.. அதெப்படி கல்யாணம் ஆகாத பெண்ணை கிட்னி கொடுக்க சம்மதிக்கலாம் என்று குதித்தனர்.

பஷீரின் மனைவி இதில் எதிலும் சம்பந்தப்படாது தன் நெயில் பாலீஷ் கலையாமல் இருக்கிறதா லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கிறதா என்று அடிக்கடி கண்ணாடி பார்த்துக்கொண்டாள்.

இறுதியில் ஃபாத்திமாவுக்கு தெரியாமல் ரமேஷின் பெற்றோரிடம் 5 லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டது ஃபாத்திமாவின் கிட்னிக்கு.

அவர்கள் ஃபாத்திமாவுக்கு இந்த விவரம் சொல்லக்கூடாது என்று அவர்களிடம் மிரட்டி பணத்தையும் பெற்றுக்கொண்டு பிரித்துக்கொண்டனர் ஆளுக்கு பாதியாக.

இதை எல்லாம் மீனாள் பார்த்துக்கொண்டு அழுகையோடு மனதுக்குள் சபித்தாள். பாவிகளா நல்ல இதயம் கொண்ட இந்த பெண்ணுக்கு இப்படி ஒரு ஈவிரக்கமற்ற அண்ணன்களா... இறைவா அந்த பெண்ணையும் ரமேஷையும் காப்பாற்று உனக்கு பால்காவடி தூக்குகிறேன் என்று பிரார்த்தனை செய்தாள்.

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து இருவரும் நலமுடன் வீடு திரும்பினர்.

ரமேஷின் பெற்றோர் நன்றி கூறினர் ஃபாத்திமாவின் உயர்ந்த மனதைக்கண்டு...

ஷரீப் ஒரு மாப்பிள்ளை சம்மந்தம் வந்திருப்பதாக சொன்னதும் மீனாள் சொன்னாள்.. கிட்னி தந்த விஷயம் மாப்பிள்ளை வீட்டுக்கு சொல்லிருங்க என்று...

அதை சொல்லாமல் மறைத்து கல்யாணம் பேசினான் ஷரீப். வரதட்சனை அதிகம் கேட்டனர். தன்னிடம் இருக்கும் இரண்டரை லட்சம் ரூபாயை அவன் வெளியே எடுக்காமல் இதை விட குறைந்த சம்பளம் அதிக வயதுள்ள மாப்பிள்ளையை பார்த்தான் ஷரீப்.

இதையெல்லாம் அழுகையுடன் பார்த்துக்கொண்டு ஒன்றும் பேசாதிருந்தாள் ஃபாத்திமா....

அப்போது போன் ஒலித்தது.. எடுத்து பேசியது மீனாள்.... போனில் கேட்ட விவரம் அவள் முகத்தை பூரிக்க வைத்தது.

யார் என்று கேட்டாள் ஃபாத்திமா... ரமேஷ் பெற்றோர் இன்னும் ரெண்டு மாதம் ரமேஷ் இங்கே ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப லண்டனுக்கே போகிறார்களாம் என்றாள்...

இந்த செய்தி கேட்டு வாடியது ஃபாத்திமாவின் முகம்.

மீனாள் சொன்னாள் நாளை ரமேஷ் பெற்றோர் வந்து உனக்கு ரம்ஜான் பரிசு தரப்போறாங்களாம்.

அதென்ன அண்ணி எதிர்வீட்டில் இருந்துகொண்டு போனில் சொல்றாங்க? நேரில் ஏன் வரலை என்று கேட்டாள்.

நாளை வருவாங்க தானே நீயே கேட்டுக்கோம்மா என்று நமுட்டு சிரிப்புடன் போய்விட்டாள்.

திரும்ப தன் நண்பனை இழக்க போகிறோமே என்ற சோகம் அப்பியது அவள் முகத்தில்..

மறுநாள் ரமேஷ் பெற்றோர் தட்டு நிறைய பழங்கள் வைத்து கொண்டு வந்து வைத்தனர்.

எதுக்கு இதெல்லாம் எழமுடியாது சிரமத்துடன் படுத்துக்கொண்டாள் ஃபாத்திமா...

மீனாட்சி தான் ஆரம்பித்தாள்...

ஃபாத்திமாவை எங்கவீட்டு பொண்ணா சம்மந்தம் பேச வந்திருக்கோம் என்று...

அதிர்ச்சியுடன் எல்லோருமே பார்த்தனர்...

என்ன அப்படி பார்க்கிறீங்க?? பிராமணன் எப்படி முஸ்லிம் பெண்ணை தன் மகனுக்கு பார்க்கிறான் என்றா? இந்தாம்மா ஃபாத்திமா.. பரிதாபப்ப்ட்டோ இல்லை நீ என் மகனை உயிரோடு எங்களுக்கு திருப்பி கொடுத்ததுக்காக நாங்க எடுத்த அவசர முடிவுன்னு நினைக்காதே..உனக்கு பார்த்த மாப்பிள்ளை வரன் இருவரும் அதனால் கேட்கப்படும் வரதட்சனையும் பற்றி வயதான மாப்பிள்ளை குறித்தும் மீனாள் வந்து எங்களிடம் சொன்னாள்.

எங்க மாணிக்கத்தை நாங்க இழந்துட போறோமோன்னு ஒரு சுயநலத்துல தான் தாயே உன்னை வந்து பெண் கேட்டோம்.

புரியலையா? எங்களுக்கு மகளாக இருக்கும் பெண் தான் எங்க வீட்டுக்கு மருமகளா வரனும்.. அது நீயா தான் இருக்கனும்.. இது ஆர அமர யோசித்து எடுத்த முடிவு தான்.. உனக்கு இஷ்டம் இருந்தால் மட்டுமே நாங்க மேற்கொண்டு இந்த காரியத்தை தொடர்வோம் என்று சொல்லி நிறுத்தினார்.

ஃபாத்திமா குழப்பமான முகத்துடன் மீனாள் முகம் பார்த்தாள்.

மீனாள் சந்தோஷத்துடன் அம்மா, “ எங்க ஃபாத்திமாவுக்கு இதை விட ந்ல்ல சம்ப்ந்தம் கொண்டு வந்திருக்கமுடியாது “எங்க ஃபாத்திமா குழந்தை. அவளுக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும். எங்க வீட்டுக்காரரே என்னை காதலித்து மணந்தவர் தான்.

ஃபாத்திமா நட்புக்குள் காதல் வரக்கூடாது.. ஆனால் நட்பு நல்லதொரு வாழ்க்கை தரலாமே என்ன சொல்றே?

நாணத்துடன் தலைகுனிந்து தன் சம்மதம் தெரிவித்தாள் ஃபாத்திமா...

தூரத்தில் தொழுகை தொடங்க மணி அடிக்கும் சத்தம் நல்ல நட்பு வாழ்க்கையாகும் நல்லதொரு நிகழ்வுக்கு சாட்சியாக ஒலித்தது....

பா.ராஜேஷ்
02-09-2009, 06:14 PM
வழக்கம் போல் அன்பொழுகும் கதை. நன்றி அக்கா!

மஞ்சுபாஷிணி
02-09-2009, 06:19 PM
வழக்கம் போல் அன்பொழுகும் கதை. நன்றி அக்கா!

உங்கள் முதல் பின்னூட்டத்திற்கு நன்றி தம்பி....

கீதம்
03-09-2009, 01:03 AM
நல்ல நட்புக்கு முன்னால் சாதியாவது, மதமாவது. வாழ்வு கொடுத்த நட்பே முடிவில் வாழ்க்கைத் துணையாவது அருமை. பாராட்டு மஞ்சுபாஷினி அவர்களே!

சிவா.ஜி
03-09-2009, 04:59 AM
பாராட்டுக்கள் மஞ்சு. ஃபாத்திமாவின் பாத்திரம் உயர்ந்து நிற்கிறது. ரமலான் பரிசாக இதைவிட பெரிதாக எதுவும் அவளுக்கு கிடைத்திருக்க முடியாது. உண்மையை சொல்லப்போனால் இது ரமேஷுக்கு கிடைத்த மகத்தான பரிசு.

நல்ல நட்பு எதையும் இழக்கத் தயங்காது.

அருமையான அன்பு இழைந்தோடும் அழகிய கதை. வாழ்த்துகள்.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
03-09-2009, 05:45 AM
கதை முழுக்க மனிதாபிமானம் அடர்ந்திருந்தன. ரம்லான் பரிசு ரசிக்கும்படி இருந்தது. நட்புக்கு கிடைத்த வெகுமதி என்றே கொள்ளலாம் அருமை

மஞ்சுபாஷிணி
03-09-2009, 07:11 AM
நல்ல நட்புக்கு முன்னால் சாதியாவது, மதமாவது. வாழ்வு கொடுத்த நட்பே முடிவில் வாழ்க்கைத் துணையாவது அருமை. பாராட்டு மஞ்சுபாஷினி அவர்களே!

உண்மையே கீதம்... நட்புக்கு எந்த வேறுபாடும் பார்க்கவே தெரியாது.. சுயநலமும் கிடையாது...இந்த காலத்தில் ஜாதியாவது மதமாவது... நல்ல உள்ளம் கொண்டோர் எங்கும் உள்ளனர் தானேப்பா.. நன்றி கீதம்...

மஞ்சுபாஷிணி
03-09-2009, 07:12 AM
பாராட்டுக்கள் மஞ்சு. ஃபாத்திமாவின் பாத்திரம் உயர்ந்து நிற்கிறது. ரமலான் பரிசாக இதைவிட பெரிதாக எதுவும் அவளுக்கு கிடைத்திருக்க முடியாது. உண்மையை சொல்லப்போனால் இது ரமேஷுக்கு கிடைத்த மகத்தான பரிசு.

நல்ல நட்பு எதையும் இழக்கத் தயங்காது.

அருமையான அன்பு இழைந்தோடும் அழகிய கதை. வாழ்த்துகள்.

கண்டிப்பாக.. நன்றி தம்பி....

மஞ்சுபாஷிணி
03-09-2009, 07:13 AM
கதை முழுக்க மனிதாபிமானம் அடர்ந்திருந்தன. ரம்லான் பரிசு ரசிக்கும்படி இருந்தது. நட்புக்கு கிடைத்த வெகுமதி என்றே கொள்ளலாம் அருமை

உலகமே இப்படி மனிதாபிமானமும் அன்பும் இழையோடும் மனிதர்களால் சூழ்ந்தால் சண்டை பிரச்சனை பேராசை பதவி வெறி எதுவுமே இல்லாம அமைதி பூங்காவா ஆயிருமே.... ஆற்றல்களும் பெருகுமே.... நன்றி பால்ராசய்யா...

மஸாகி
03-09-2009, 07:36 AM
நல்ல நட்புக்கு முன்னால் சாதியாவது, மதமாவது. வாழ்வு கொடுத்த நட்பே முடிவில் வாழ்க்கைத் துணையாவது அருமை. பாராட்டு மஞ்சுபாஷினி அவர்களே!

மஞ்சுபாசினி, மிக அழகாக கதையை நகர்த்தியிருந்தார். பாராட்டுக்கள்..

இஸ்லாமியர்கள் பின்பற்றும் வேதமான அல்குர்ஆன் கூட - இதுபோன்ற பிறரை வாழவைக்கும் மனிதாபிமான செயற்பாடுகளை பின்வருமாறு ஊக்குவிக்கின்றது.

''எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் (உலக) மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்-குர்ஆன் : 5:32)''

இருப்பினும், இறுதியாக வழக்கப்படும் - றம்ஜான் பரிசு பற்றி ஒரு சின்ன அபிப்பிராயம்..

அதாவது, இருவேறுபட்ட மார்க்க பிண்ணனிகளைக் கொண்டவர்கள் - ஒருமித்து குடும்ப வாழ்வை அமைப்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, நீங்கள் இஸ்லாமாக இருந்தால், உங்கள் கொள்கையை ஏற்று, ஒத்திசைந்து நடக்கக்கூடியவரையே வாழ்கைத் துணையாகத் தேர்ந்தெடுங்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது.

எனவே ரமேஷ் போன்றவர்கள் - பிராமணனாக இருந்தாலும் சரி, சூத்திரனாக இருந்தாலும் சரி, தங்களைப் போல தங்கள் கொள்கைகளையும் எதிர்கால மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கத் தயாரென்றால், அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகவுள்ள நிறைய பாத்திமாக்கள் நிஜமாகவே வாழ்கின்றார்கள்..

இரு மனம் இணையும் - இன்பமான திருமண வாழ்வு - இருவேறுபட்ட பழக்க வழக்க பண்பாடுகளால் சிதைந்துவிடக் கூடாதென்பதற்காகவே இந்த ஏற்பாடு..

நட்புடன்-மஸாகி
03092009

மஞ்சுபாஷிணி
03-09-2009, 07:41 AM

அதாவது, இருவேறுபட்ட மார்க்க பிண்ணனிகளைக் கொண்டவர்கள் - ஒருமித்து குடும்ப வாழ்வை அமைப்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, நீங்கள் இஸ்லாமாக இருந்தால், உங்கள் கொள்கையை ஏற்று, ஒத்திசைந்து நடக்கக்கூடிய இன்னொரு வாழ்கைத் துணையை தேர்ந்தெடுங்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது.

எனவே ரமேஷ் போன்றவர்கள் - பிராமணனாக இருந்தாலும் சரி, சூத்திரனாக இருந்தாலும் சரி, தங்களைப் போல தங்கள் கொள்கைகளையும் எதிர்கால மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கத் தயாரென்றால், அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகவுள்ள நிறைய பாத்திமாக்கள் நிஜமாகவே வாழ்கின்றார்கள்..

இரு மனம் இணையும் - இன்பமான திருமண வாழ்வு - இருவேறுபட்ட பழக்க வழக்க பண்பாடுகளால் சிதைந்துவிடக் கூடாதென்பதற்காகவே இந்த ஏற்பாடு..

நட்புடன்-மஸாகி
03092009

அருமையான இதுவரை நான் அறியாத விளக்கங்கள் மஸாகி... அன்பு என்பது எல்லாவற்றியும் தாண்டியது ஒன்று.. அந்த அன்பு தான் நட்பில் காதலை நுழைக்காமல் நல்லதொரு வாழ்க்கையாக இரு மனங்களும் விரும்பி ஏற்று இணைகிறது என்று முடித்துள்ளேன்.... நன்றி மஸாகி

மஞ்சுபாஷிணி
03-09-2009, 07:43 AM
மஞ்சுபாசினி, மிக அழகாக கதையை நகர்த்தியிருந்தார். பாராட்டுக்கள்..

இஸ்லாமியர்கள் பின்பற்றும் வேதமான அல்குர்ஆன் கூட - இதுபோன்ற பிறரை வாழவைக்கும் மனிதாபிமான செயற்பாடுகளை பின்வருமாறு ஊக்குவிக்கின்றது.

''எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் (உலக) மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்-குர்ஆன் : 5:32)''

இருப்பினும், இறுதியாக வழக்கப்படும் - றம்ஜான் பரிசு பற்றி ஒரு சின்ன அபிப்பிராயம்..

அதாவது, இருவேறுபட்ட மார்க்க பிண்ணனிகளைக் கொண்டவர்கள் - ஒருமித்து குடும்ப வாழ்வை அமைப்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, நீங்கள் இஸ்லாமாக இருந்தால், உங்கள் கொள்கையை ஏற்று, ஒத்திசைந்து நடக்கக்கூடியவரையே வாழ்கைத் துணையாகத் தேர்ந்தெடுங்கள் என்று இஸ்லாம் கூறுகின்றது.

எனவே ரமேஷ் போன்றவர்கள் - பிராமணனாக இருந்தாலும் சரி, சூத்திரனாக இருந்தாலும் சரி, தங்களைப் போல தங்கள் கொள்கைகளையும் எதிர்கால மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கத் தயாரென்றால், அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராகவுள்ள நிறைய பாத்திமாக்கள் நிஜமாகவே வாழ்கின்றார்கள்..

இரு மனம் இணையும் - இன்பமான திருமண வாழ்வு - இருவேறுபட்ட பழக்க வழக்க பண்பாடுகளால் சிதைந்துவிடக் கூடாதென்பதற்காகவே இந்த ஏற்பாடு..

நட்புடன்-மஸாகி
03092009

உங்களுடைய நல்லமனமும் இதோ இப்படி தெரிகிறது மஸாகி... மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இறைவன் உங்களுக்கு எல்லா சௌக்கியங்களும் தரட்டும்.. கண்டிப்பாக.... இப்போது தொடங்கிய வாழ்வு இருவருக்குள்ளும் எந்த ஒரு பிணக்கமும் எப்போதும் வரக்கூடாது என்பதில் உள்ள உங்கள் இந்த வரிகள் உணர்த்துகின்றன. நன்றி மஸாகி...

MURALINITHISH
24-09-2009, 07:47 AM
என்னதான் வார்த்தைகளில் இருந்தாலும் வாழ்க்கைக்கு உதவாத விசயம் இது என் கருத்து மட்டும் மற்றவர்களை விமர்சிக்க அல்ல இருந்தாலும் நல்ல விசயங்களை வார்த்தைகளிலாவது வளர்க்கும் எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்

மஞ்சுபாஷிணி
24-09-2009, 08:17 AM
என்னதான் வார்த்தைகளில் இருந்தாலும் வாழ்க்கைக்கு உதவாத விசயம் இது என் கருத்து மட்டும் மற்றவர்களை விமர்சிக்க அல்ல இருந்தாலும் நல்ல விசயங்களை வார்த்தைகளிலாவது வளர்க்கும் எண்ணத்துக்கு வாழ்த்துக்கள்

நன்றி முரளிநித்திஷ்....

1. நம்பிக்கையோடு அன்னை தெரசா உதவ வந்தார் நோயாளிகளுக்கு (இந்தியாவில்) சுத்தம் நீக்கி எப்படி வாழனும் என்று கற்று தந்தவர் அதற்காக அவர் எடுத்த முயற்சிகள் அளவற்றது.

2. நம்பிக்கையோடு சுதந்திரத்துக்காக அஹிம்சை வழியில் போராடினார் மஹாத்மா.

3. நம்பிக்கையோடு நாட்டை ஆண்டார் படிக்காத மேதை கர்மவீரர் காமராஜ்.

அன்பு எல்லாவற்றையும் அன்போடு அரவணைக்கும்...அன்புக்கு குற்றம் குறைகள் காணத்தெரியாது. பொறுத்து போகும் குணம் இருக்கும்.. வற்றாத அன்பிற்கு எல்லாமே சாத்தியம்.. பெரும்பாலும் என் கதைகள் கற்பனை இல்லப்பா....

கா.ரமேஷ்
24-09-2009, 09:53 AM
"அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்"

நல்ல கதை....
நல்ல அன்பிற்க்கு ஜாதி,மதம் போன்ற தடைகளும் இல்லை என்பதை சொல்லி அழகாக இருக்கிறீர்கள்..... வாழ்த்துக்கள்

MURALINITHISH
25-09-2009, 07:59 AM
பெரும்பாலும் என் கதைகள் கற்பனை இல்லப்பா....

ஆனால் இது ???????

ஒருவேளை நடந்தே இருந்தாலும் நடக்கும் போது தெரியாத குறைகள் நடந்து முடிந்த போது தெரியும் அப்போது அங்கு பாதிக்க படுவது அதிகமாக பெண்கள் மட்டுமே அதன் வலி அறிந்தவர்கள் மட்டுமே உணர முடியும்

அமரன்
25-09-2009, 08:35 AM
சூடு காணாத பூனை ஃபாத்திமா அடுப்பங்கரையை நாடி இருக்கு. :)

என்னதான் குடித்தாலும் கெட்டவனாக இருந்தாலும் மீனாளுடனானா ஷரீப் இல்லறம் நல்லறமாக இருந்திருக்காத பட்சத்தில், ஃபாத்திமா நிச்சயமாக சம்மந்தத்துக்கு சம்மதித்திருக்க மாட்டாள்.

பிள்ளை நிலா இல்லாத அமாவாசை வானமாக மீனாளின் குடும்பம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கதைக்குப் பலம் சேர்க்கிறது.

ரமேஷ் பக்க கல்யாண முடிவுக்கு நன்றிக்கடனோ அல்லது ஃபாத்திமாவின் வாழ்க்கைச் சூழலோதான் நிமித்தமாக நின்றிருக்கும்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சிக்கலின் புள்ளியை தொடும் தூரத்தில் நட்பையும் காதலையும் கொண்டு கணக்கை நேர் செய்திருக்கார் கதாசிரியர்.

மனச்சங்கமத்தில் மதங்கள் கரைந்துவிடுகின்றன. உப்புக் காய்ச்சும் தட்பவெப்பத்தை இணைகள் ஏற்படுத்தாதவரை வரை சுகம்.. ஏற்பட்டால் சுபம்.

நல்லதொரு ரம்ஜான் பரிசு தந்தமைக்கு நன்றிக்கா.

மஞ்சுபாஷிணி
25-09-2009, 10:24 AM
"அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்"

நல்ல கதை....
நல்ல அன்பிற்க்கு ஜாதி,மதம் போன்ற தடைகளும் இல்லை என்பதை சொல்லி அழகாக இருக்கிறீர்கள்..... வாழ்த்துக்கள்

உண்மையே....நன்றி ரமேஷ்...

மஞ்சுபாஷிணி
25-09-2009, 10:26 AM
ஆனால் இது ???????

ஒருவேளை நடந்தே இருந்தாலும் நடக்கும் போது தெரியாத குறைகள் நடந்து முடிந்த போது தெரியும் அப்போது அங்கு பாதிக்க படுவது அதிகமாக பெண்கள் மட்டுமே அதன் வலி அறிந்தவர்கள் மட்டுமே உணர முடியும்

முரளி நித்திஷ்....

என் கதைகள் அக்கம் பக்கம் நடக்கும் நிகழ்வுகள் தினந்தோறும் நான் பார்க்கும் நிகழ்வுகள் இதை வைத்து தான் கதையாக எழுதுகிறேன்... ஒத்துக்கொள்கிறேன் உங்க கூற்றை... நன்றி முரளிநித்திஷ்....

மஞ்சுபாஷிணி
25-09-2009, 10:27 AM
சூடு காணாத பூனை ஃபாத்திமா அடுப்பங்கரையை நாடி இருக்கு. :)

என்னதான் குடித்தாலும் கெட்டவனாக இருந்தாலும் மீனாளுடனானா ஷரீப் இல்லறம் நல்லறமாக இருந்திருக்காத பட்சத்தில், ஃபாத்திமா நிச்சயமாக சம்மந்தத்துக்கு சம்மதித்திருக்க மாட்டாள்.

பிள்ளை நிலா இல்லாத அமாவாசை வானமாக மீனாளின் குடும்பம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கதைக்குப் பலம் சேர்க்கிறது.

ரமேஷ் பக்க கல்யாண முடிவுக்கு நன்றிக்கடனோ அல்லது ஃபாத்திமாவின் வாழ்க்கைச் சூழலோதான் நிமித்தமாக நின்றிருக்கும்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சிக்கலின் புள்ளியை தொடும் தூரத்தில் நட்பையும் காதலையும் கொண்டு கணக்கை நேர் செய்திருக்கார் கதாசிரியர்.

மனச்சங்கமத்தில் மதங்கள் கரைந்துவிடுகின்றன. உப்புக் காய்ச்சும் தட்பவெப்பத்தை இணைகள் ஏற்படுத்தாதவரை வரை சுகம்.. ஏற்பட்டால் சுபம்.

நல்லதொரு ரம்ஜான் பரிசு தந்தமைக்கு நன்றிக்கா.

நன்றி அமரன்....

MURALINITHISH
26-09-2009, 07:59 AM
ஒத்துக்கொள்கிறேன் உங்க கூற்றை... .

நன்றி தோழியே புரிந்து கொண்டமைக்கு