PDA

View Full Version : யாருக்காக அழுதேன் (சிறுகதை)இளசு
03-10-2003, 12:10 AM
[quote]
எங்கோ என்றோ படித்த/ கேட்ட கருத்துகளை வைத்து
சொற்சிலம்பம் ஆடும் என் ஆர்வக்கிறுக்கல்களை
முதல் வகுப்பு படிக்கும் மகன் எழுத்தாய் நினைத்து
உயர்த்திப்பேசும் உண்மை நண்பர்களே...
நீங்கள் படிக்க நான் படைக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

இந்த தருணத்தில் உங்களையும் என்னையும் இணைத்த
தமிழ்த்தளம் தந்த தலைவனுக்கும்

இனிய நண்பன் கான்கிரீஷக்கு நான் எழுதிய பதில் இது..
இணைய நண்பர்கள் எல்லாருக்கும்தான்...

சொந்த சரக்கு என்னிடம் இல்லை.
சினிமாப் பாட்டு, அப்படி , இப்படி என ஒப்பேற்றி
உங்களிடம் கைதட்டல் வாங்க முயற்சிக்கும்
ஆர்வம் என் படைப்புகளைப் பார்த்தாலே புரியும்.

இப்போதும் எங்கோ , என்றோ படித்த ஒரு நிகழ்வைக் கதை வடிவில்
சமர்ப்பிக்கிறேன்.
அத்திக்காய் பாட்டு போல அடிக்கடி எழுது என்றார் ஆத்மநண்பர்.
அத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்தான்...
ஆசை யாரை விட்டது?
அடுத்த கட்டமாய் சிறுகதை! அதில் என் இரண்டாவது முயற்சி..


யாருக்காக அழுதேன்?


(என்றும் ஊக்கும் நண்பருக்கே அர்ப்பணம்.)


அப்போ நான் ஆறாம் வகுப்பு டீச்சர்.
விராலிமலையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில்.
நடுத்தரவர்க்கம், அதற்கும் மேல் என்ற வகை குடும்பத்துப்
பிள்ளைகள்தான் அங்கே அதிகம் படித்தார்கள்.

என் கிளாசில் இருக்கும் 52 பேருமே எனக்குப் பிடிச்சவங்கதான்... அதிலும் இந்த
மகிழ்மாறன் இருக்கானே... வால் நட்சத்திரம்.. அவன் லட்சத்துல ஒருத்தன். அப்படி
நேர்த்தியா உடுத்திட்டு வருவான்... காலையில் பார்த்த மாதிரியே சாயங்காலமும்
அவன் முகமும் உடுப்பும் மெருகு குலையாம இருக்கும்.. இத்தனைக்கும் இண்ட்டர்வல்,
மதிய வேளைகளில் அங்குமிங்கும் ஓடி அலைந்து திரிவான்.. நானே பார்த்திருக்கேன்.
இவனுக்கு வேர்க்கவே வேர்க்காதோன்னுகூட ஆச்சரியப்படுவேன். ஆடி ஓடினாலும்
ஆடை கசங்காதது - சிலருக்கு வாய்ச்ச வரம்.. எத்தனைதான் வெளியில அலைஞ்சிட்டு
வந்தாலும் சிலருக்கு பாதம் அழுக்காகாம தாமரை இதழ் போல இருக்குமே அப்படி!

படிப்பிலும் கெட்டிக்காரன் மகிழ்மாறன். முதல் ரெண்டு ரேங்க்குக்குள்ள எப்படியும்
வந்துடுவான். ஆனா வாய்தான் காதுவரைக்கும் இருந்தது அவனுக்கு. பேச்சும்
சாதுர்யமா, சமயோசிதமா இருக்கறதால, அவன் செய்ற குறும்புகளையும் ரசிக்கும்படி
ஆக்கிடுவான் படவா ராஸ்கல்.

எப்பவும் புன்னகை... வெடுக் பதில்கள்... ஆட்டம்..பாட்டம்..கெட்டிக்காரத்தனம்...
தோற்றத்தில் நறுவிசு.. இதுதான் மகிழ்மாறன்.

"மானிடமே, வாழ்வைக் கொண்டாடுங்கள்" என்ற தேவசேதியைச் சுமந்துவந்த
இளந்தூதன் மகிழ்மாறன்.

ஆனா, ஆறாங்கிளாசில் வருடம் முழுதுமே அவனுக்கும் எனக்கும் தீராக்கணக்கு ஒண்ணு
தொடர்ந்து இருந்துக்கிட்டே இருந்தது. அவனால அஞ்சு நிமிஷம் முழுசா வாயை
மூடிக்கிட்டு இருக்க முடியாது. ஒண்ணு என்னை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு
என் பாடம் நடத்தும் வேகத்துக்கு பிரேக் போடுவான். நான் மும்முரமாய் பாடம் நடத்தும்,
கரும்பலகையில் எழுதும் நேரங்களில் பக்கத்து பையன், எதிர்த்த பெஞ்ச் பெண் என்று
பேச ஆரம்பித்துவிடுவான்.

எத்தனையோ முறை சாம, பேத வழிகளில் சொல்லியும் இந்த ஒரு விஷயத்தில் அவனை
மாத்த முடியல. ஆனா அப்படியும் அவன் மேல அசூயை எதுவும் வந்துடல.. அதுதான் எங்க
மகிழ்மாறன்!

ஏன்னா எப்ப நான் கண்டிச்சாலும், " என் தப்பை கண்டிச்சு, சரிசெய்ததுக்கு நன்றி சிஸ்டர்"னு
நறுக்கா பதில் சொல்லிட்டுதான் உட்காருவான். அவன் குரல்ல தெரியற சின்ஸியாரிடி
இனி அவன் அப்படி செய்யமாட்டான்னு நம்பவைக்கும். அடுத்த ஆறாவது நிமிஷம்....
மறுபடியும் நான் கண்டிக்க, அவன் நன்றி சிஸ்டர் சொல்ல.... ஒரு நாளைக்கு பலதடவை
கேட்டு கேட்டு பழகிப்போச்சு எனக்கு!

ஆனா எதுக்குமே ஒரு லிமிட் இருக்கில்லையா... என் பொறுமைக்கும் சோதனை ஒரு நாள்
வந்தது. அன்னைக்கு மகிழ்மாறனின் அக்கம்பக்க தொணதொணப்பு ரொம்பவே ஜாஸ்தி.
முந்தின இரவு வந்த ஒத்தைத் தலைவலியால் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு
ஏற்கனவே சோர்வா இருந்த நான், என் ஆசிரிய அனுபவத்துக்கு கொஞ்சமும்
பொருந்தாத காரியம் செய்தேன்...

" மகிழ்... இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்! இனி ஒரு வார்த்தை என் பெர்மிஷன் இல்லாம
உன் வாயில இருந்து வந்தாலும், பேசின வாயை டேப் போட்டு சீல் வச்சுடுவேன்...
இன்னைக்கு முழுக்க".

முதல் தடவையா என் கண்டிப்புக்கு நன்றி சொல்லாம உட்கார்ந்தான் மகிழ்.
நான் திரும்பி ஒரு நீண்ட வகுத்தல் கணக்கை போர்டில் எழுத ஆரம்பித்தேன்.

"சிஸ்டர்.. மகிழ் மறுபடியும் பேசறான் சிஸ்டர்" - சீனிவாசன் போட்டுக் கொடுத்தான்.
யாரையும் நான் கண்காணிப்புக்கு நியமிக்கவில்லை. ஆனால் ஒரு அதிகார சுபாவம்
தலையெடுக்கும்போது இது போன்ற காட்டிக்கொடுத்து நல்ல பெயர் வாங்கும்
வர்க்கம் தானாகவே உருவாகிவிடுகிறது.

நான் என் அதிகாரத்தை, என் மிரட்டலை நிலைநாட்டவேண்டிய கட்டாயத்தை
என்னைக் கேட்காமலேயே சீனிவாசன் உருவாக்கிவிட்டான்.

முகத்துக்கு நேராய் பேசிவிட்ட வார்த்தைக்காக மனசாட்சியை முறித்து
எத்தனை காரியங்களை.. வெறும் வீம்புக்காக எத்தனை மனிதர்கள் நித்தம்
நித்தம் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறோம்!

என் அதிகார நாடகமும் அன்னைக்கு அங்கே அரங்கேறியது... இன்னைக்குத்தான்
நடந்தாற்போல இன்னும் என் மனசில் பளிச்சென்று இருக்கு அந்தக்காட்சி...

போர்டுக்கு எதிரில் இருந்த என் மேஜை டிராயரில் இருந்து முதல் -உதவி பிளாஸ்டரை
எடுத்தேன். மகிழின் பெஞ்ச் அருகே போனேன். இரண்டு துண்டுகள்.. சர்ரக்...
X - போல அவன் வாய் மேல் அழுத்தி ஒட்டினேன். விறுவிறுவென போர்டுக்குப் போய்
விட்ட இடத்தில் இருந்து கணக்கைத் தொடர்ந்தேன்.

பின் கழுத்தில் குறுகுறுக்க, சடாரென திரும்பி மகிழைப் பார்த்தேன். அங்கிருந்தபடியே
இரு கண்ணிமைகளையும் பட்டுப்பூச்சி இறக்கைபோல் படபடவென சிமிட்டி
பூவாய் சிரிச்சபடி என்னைப் பார்த்தான் மகிழ்.

என் அதிகார அணை மடாரென உடைய, சட்டென நானும் சிரிச்சுட்டேன்.
மொத்த வகுப்பும் சிரித்தது.

ஒரு லயத்தோடு எல்லாரும் கிளாப் பண்ண, நான் மெல்ல நடந்து மகிழின் முன்னால் போய்
நின்றேன். "ஹேய்" என்ற ஒரு கோரஸ் சத்தம் எழும்பியது - நான் மகிழின் பிளாஸ்டரை
எடுத்த போது!

அதிகாரம் கவிழும்போதும் இப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் கூட்டம் உருவாகிறது .இல்லையா?

பிளாஸ்டர் எடுத்தவுடன், மகிழ் பேசிய முதல் வாக்கியம்:
" என் தப்பை திருத்தியதுக்கு நன்றி சிஸ்டர்".

**********************

அந்தக் கல்வியாண்டின் முடிவில்தான் நான் கரஸ்ஸில் எம்.எஸ்.சி. முடித்தேன்.
பிளஸ் 1, பிளஸ் 2 வுக்கு கணக்கு டீச்சராய் அடுத்த வருஷமே மாறினேன்.

வருஷங்கள்தான் எவ்வளவு வேகமாய் ஓடுகிறன... மாறும் வகுப்பு முகங்கள்..
இரண்டுங்கெட்டான் வயது பிள்ளைகள்... நம் வயது ஏறுவதை மறக்கடிக்கும்
வேலை டீச்சர் வேலைதான்.

நாலு வருஷம் நாலு கால் பாய்ச்சலில் ஓடியே போனது.. இப்போ மகிழ் பேட்சுக்கு
நான் மறுபடியும் கணக்கு டீச்சர்.

தாவணி அச்சங்கள்... அரும்பு மீசைக் கூச்சங்கள்... என் பழைய குழந்தைகளை
புது மோஸ்தரில் பார்த்து, எங்கிருந்தோ எனக்குள் லேசான கர்வம் எட்டிப்பார்த்தது.

மகிழ் மாறிப்போயிருந்தான். முன்னிலும் அழகாக, இன்னும் அமரிக்கையாக...
பிளஸ் 1 கணக்கின் கரடுமுரடுகள் அவன் வாயைக் கட்டிப்போட்டு, கண் - காதுகளை
திறந்து என் பாடங்களை கவனிக்கச் செய்தன.

தீபாவளிக்கு முந்தின வெள்ளிக்கிழமை அது. புதுசாய் மேட்ரிக்ஸ், இண்டீசஸ் என்று
நான் ஆரம்பிக்க, பண்டிகை, பட்டாசு, புது டிரஸ், பலகாரம், ரஜினி படம் என்று
பல வித கலர்க்கனவுகளில் கிளாஸே மூழ்கி இருக்க... ஊஹம்... ஒண்ணும் அன்னைக்கு
சரியா வரல. பாதி பீரியடிலேயே பாடத்துக்கு லீவு விட்டுட்டேன்.

இன்னும் அரை மணி நேரம்.. எப்படி ஓட்டுவது? பிரியா விட்டால் பிரின்ஸிக்குத்
தெரிந்து எக்ஸ்ட்ரா கிளாஸ் தண்டனை வரும்.

கணக்கு நோட்டில் இருந்து நாலு தாளைப் பிய்க்கச் சொன்னேன். ஒவ்வொருத்தரும்
கிளாஸில் இருந்த மற்ற எல்லார் பெயரையும் இடைவெளி விட்டு எழுதச் சொன்னேன்.
" ஒவ்வொருத்தரைப் பத்தியும் ரொம்ப்ப்ப்ப நல்லதா உங்க மனசுல என்ன தோணுதோ,
அதை ஒரு வரியில எழுதுங்க.."

கடைசி வகுப்பு அது.. பெல் அடித்தும் என் குழந்தைகள் தீபாவளியையும் மறந்துவிட்டு
பேனா கடித்து, முன் தலை சொறிந்து, அப்படி ஒரு பொறுப்பா எழுதினாங்க.

அமைதியா ஒவ்வொருத்தரா எழுந்து வந்து என் மேசையில் பேப்பர்களை வைத்துவிட்டு
போனாங்க.

சீனிவாசன் மந்தகாச புன்னகையோடு போனான். மகிழ் " நன்றி சிஸ்டர். ஹேப்பி ஹாலிடேஸ்"
என்று ஆறாங்கிளாஸில் எனக்குப் பரிச்சயமான அதே தொனியில் ( கொஞ்சம் முத்தின குரலில்)
சொல்லிவிட்டுப் போனான்.

அந்த ஐப்பசி மாத மழை இரவு முழுக்க என் ஹாஸ்டல் அறையில் நான் பிஸி.
ஒவ்வொருத்தருக்கும் தனி ஷீட் எடுத்து, அவங்களப் பத்தி மத்த எல்லாரும் சொன்ன நல்லதை
தொகுத்து எழுதினேன்.

தீபாவளி முடிஞ்சு ஆரம்பிச்ச முதல் கிளாஸிலேயே ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தேன்.
சில நிமிஷங்கள்.... மௌனத்தில் கரைய.... பளீரென மொத்த கிளாஸையும் மகிழ்ச்சி
மின்னல் தாக்கியது.

" அட, நான் அது செஞ்சப்ப யாருமே கவனிக்கலன்னு நெனச்சேன்"
" ஓ! என்னை நம்ம கிளாஸக்கு இவ்வளவு பிடிக்கும்னு தெரியாதுப்பா"
" டேய், அந்த ஸ்கூல் டேல நான் பண்ணதைக் கூட ஒருத்தரு பாராட்டி இருக்காங்கடா"

கோடை மழை மாதிரி அந்த உற்சாக வெள்ளம்...
வந்த வேகத்திலேயே வடிஞ்சும் போச்சு...
பழையபடி கஷ்டமான கணக்குப் பாடம்..
கம்ப்யூட்டர் எஞ்சினீயர் கனவுகளில் என் குழந்தைகள் ரொம்ப கவனமாகவே படிச்சாங்க..
அவங்க எதிர்காலத்தையே நிர்ணயிக்கிற பிளஸ் 2 நெருங்குதே!

ஏனோ அந்த "மதிப்பீடு" நிகழ்ச்சி அதுக்கப்புறம் வெளிப்படையா பேசப்படவே இல்லை!

*****************************


அந்த பேட்ச் போனது.. அதுக்கப்புறம் பல பேட்சுகள்...
நான் இப்போ வைஸ் பிரின்ஸி!
ஆங்.. சொல்ல மறந்துட்டேனே...
நரை நிறைய வந்துடுச்சு.. நடை கூட தளந்துடுச்சு..
அந்த ஞாயிறு சர்வீஸ் முடிஞ்சு, ஹாஸ்டல் தோட்டத்தில் உலாத்திக்கிட்டிருந்தேன்.
என் பழைய குழந்தை சீனிவாசன் வந்திருக்கிறதா வாட்ச்மேன் சொன்னார்.

ஆமாம், சீனிவாசன் தான்... ஆனா அவன் முகம் ஏன் இப்படி இருண்டு..?
என் அடிவயிறை ஏன் பிசைகிறது?

சில தயக்கங்கள், கேவல்களுக்கிடையில் அவன் சொன்ன சேதி இதுதான்:
கார்கில் பார்டரில் மகிழ்மாறன் வீரமரணம் அடைஞ்சுட்டான்.
அந்த போர்டிகோவில் அந்தக் கணம் தொட்டிச்செடிகள் எந்தப் பக்கம்
அசைஞ்சுது என்பது வரைக்கும் அந்த நிகழ்ச்சி இப்பவும் என் மனசில்
உறைஞ்சு போய் இருக்கு.

" இன்னைக்கு விமானத்தில் திருச்சிக்கு வருவான் சிஸ்டர். நாளைக்கு...
நாளைக்கு.............,,,..........,,,.........; வருவீங்கல்ல சிஸ்டர்.."


ராணுவ உடையில் அந்த நிலையில் இதுவரை நான் பார்த்ததில்லை யாரையும்.
கண்ணாடி ஊடாய், என் மகிழ் முன்னெப்போதையும் விட இன்னும் அழகானாய்த்
தெரிந்தான். ஆனால் " நன்றி சிஸ்டர்" என்ற பணிவான பேச்சு மட்டும் இல்லை.

" மகிழ், நான்தான் பிளாஸ்டர் போடலியேப்பா.... பேசேம்பா" மனசுக்குள்
இறைஞ்சினேன்.

அஞ்சலி செலுத்த மகிழ் காத்திருந்த மண்டபம் நிரம்பி வழிந்தது.
மகிழின் நாலு வயது மகள் " வந்தே மாதரம்" பாடினாள்....
பாடி முடித்ததும் அம்மாவின் மடியில் முகம் புதைத்தவள்தான்...
என் கண்களை நான் வெறுத்தேன்...
இந்தக் காட்சிகளை இன்னும் பார்க்க முடிவதற்காக...
கண்டும் காய்ந்து கிடப்பதற்காக...
மழை... வானமும் அழுதே.. நான் மட்டும்..?

சடங்குகள்... சம்பிரதாயங்கள்...
உற்றவர், மற்றவர் மகிழை சுற்றி வந்தனர்.
என்னைக் கவனித்த சீனிவாசன் கூட்டம் ஓய்ந்து கடைசி ஆளாக அழைத்து போனான்.

ராணுவம் மகிழுக்குத் துணையாக அனுப்பி வைத்த ஒரு வீரர்
என்னருகே வந்து, " சிஸ்டர், நீங்கள் மகிழுக்கு கணக்கு டீச்சரா" என்றார்.
நான் ஆமோதிக்க, " உங்களைப் பத்தி அடிக்கடி சொல்வார் சிஸ்டர்".

அஞ்சலிகள் முடிந்து மகிழை அழைத்துப்போக ஏற்பாடு.
நான் மெல்ல ஹாஸ்டலுக்கு கிளம்பி விட்டேன்.

**********************************

அன்று ஏழாம் நாள். மகிழின் பேட்ச் மொத்தமும் சேர்ந்து
அவன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல அவன் வீட்டில் கூடினாங்க.
என்னையும் கூப்பிடவே அங்கே போனேன்.

எனக்காகவே காத்திருந்தது போல் மகிழின் மனைவி என்னைப்பார்த்ததும்
எழுந்து, மகிழின் போட்டோ அடியில் இருந்த பர்ஸில் இருந்து
ஒரு பழைய பேப்பரை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

மகிழின் அப்பா சொன்னதில் இருந்து மகிழ் இறக்கும்போது அவனிடம் இருந்த
பொருட்களில் அவன் பர்ஸில் இருந்த பேப்பர் என்பது புரிந்தது. நான் புரியாம
பார்க்கவே, " பிரிச்சுப்பாருங்க சிஸ்டர்... தெரியும்".

ஒரு ஷீட் பேப்பர்... பல மடிப்பாய் மடிக்கப்பட்டு, நைந்து, கிழிந்து, செல்லோபோன் டேப் ஒட்டி...
ஐப்பசி மழை இரவு.... நான் விழித்திருந்து எழுதிய பேப்பர்.

" அவர் இருதயம் பக்கம் எப்பவும்
இருந்த இதைக் கொடுத்ததுக்கு நன்றி சிஸ்டர்"

அருள்மணி சொன்னான்: " என் கல்யாண ஆல்பத்தில் முதல் பக்கமே உங்க
பேப்பர்தான் சிஸ்டர்"

விலாசினி சொன்னாள் : " பிரேம் பண்ணி கண்ணாடிக்கு மேலே மாட்டி
தினம் பார்க்கிறேன் சிஸ்டர்"

ஷ்யாம் சொன்னான்: "வருஷா வருஷம் புது டைரி வாங்கியதும் அதன் முதல்
பக்கத்தில் வச்சிடுவேன் சிஸ்டர்"

சீனிவாசன் பாக்கெட்டில் இருந்த பர்ஸைப் பிரித்தான்...
ஒரு ஷீட் பேப்பர்... பல மடிப்பாய் மடிக்கப்பட்டு, நைந்து, கிழிந்து, செல்லோபோன் டேப் ஒட்டி...

ஹால் சுவரோரம் சரிந்த நான் அப்போது அழ ஆரம்பித்தேன்.
என் மகிழுக்காகவும்.. இனி அவனை எப்போதும் பார்க்க முடியாத
சுற்றம் நட்புக்காகவும்....

இக்பால்
03-10-2003, 10:58 AM
குறு நாவலாக இருக்கிறதே அண்ணா. வாழ்த்துக்கள்.

வெள்ளிக் கிழமை. தொழுகை நேரம். போய் விட்டு

வந்து படித்து இன்னும் எழுதுகிறேன். -அன்புடன் இளவல்.

kaathalan
03-10-2003, 07:41 PM
அண்ணா, நல்ல ஒரு கதையை வாசித்த அனுபவம் ஏற்பட்டது.
சுட்டிக்காட்டப்படல் - அதுவும் நாங்கள் செய்த நன்மை பயக்கக்கூடிய
காரியங்கள் சுட்டிக்காட்டப்படல் எவ்வளவு பெரிய அங்கீகாரம் - அதுவும் வளரும் இளம் மனதில். இவ்வாறான ஆசிரியர் எனக்கும் கிடைத்திருந்தால் என பொறாமைப்பட வைக்கிறது.
நிறைய சொல்ல விருப்பம்தான் எனக்கு; ஆனால் உணர்வுகளை எழுத்தில் பதிப்பதில் எனக்கு அவ்வளவு திறமை கிடையாது.
எளிமையாக சொன்னால் : நல்லா இருக்கிறது.

இளசு
03-10-2003, 10:00 PM
இளவல் இக்பால் அவர்களுக்கு
கருத்து வரும் வரைக் காத்திருக்க எனக்கு கஷ்டம் இல்லை!

அன்புத்தம்பி தமிழ்க்காதலனுக்கு
கதை பிடித்திருந்ததற்கு மகிழ்ச்சி..
ஊக்கத்துக்கு நன்றி.

puppy
04-10-2003, 12:04 AM
ஒரே மூச்சில் படிக்க நேரம் இல்லாததால் படிக்க முடியவில்லை..வார இறுதியில்
கண்டிப்பாக படிச்சுடுவேன் இளசு சார்...ஏன்னா நான் "யாருக்காக
எழுதினேன்" உங்கள் எல்லோருக்கும் தானே என நீங்கள் ஆதங்கப்பட்டுவிட
கூடாது இல்லையா.....இதை எழுதின நேரத்துல படிச்சு இருக்கலாம்
ஆனால் இளசுவின் கதையை அவசரமாக படிப்பது மனதுக்கு
ஒப்பவில்லை....

karikaalan
04-10-2003, 09:24 AM
இளவலே

என்ன சொல்வது.... அருமையான கதை என்று வெறுமனே சொல்லிவிட மனம் ஒப்பவில்லை.
மனதைப் பிழியும் கதை. படித்துவிட்டு சற்று நேரம் அப்படியே ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த அளவுக்கு பாதிப்பு.

எழுத்துத் தொண்டினைத் தொடரவும்.

===கரிகாலன்

இளசு
04-10-2003, 11:00 AM
இளசுவின் கதையை அவசரமாக படிப்பது மனதுக்கு
ஒப்பவில்லை....

என் படைப்புக்குழந்தை பதில் சொல்கிறது எங்கள் பப்பிக்கு:

என் மேல் உங்கள் பார்வை படாதா என்று ஏங்கும் எனக்கு
ஆற அமர சீராட்ட வருவேன்னு நீங்க சொல்றதைக் கேட்டு
எவ்வ்வ்...வ.ளவு சந்தோஷம்...
வெட்கத்தை விட்டு சொல்ல்ணும்னா
<span style='color:#0000ff'>"கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுது"</span>
என்னுமளவுக்கு சந்தோஷம்... :D

இளசு
04-10-2003, 11:48 AM
இளவலே
மனதைப் பிழியும் கதை. படித்துவிட்டு சற்று நேரம் அப்படியே ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த அளவுக்கு பாதிப்பு.
===கரிகாலன்

என் அண்ணலே,
நன்றி என்ற ஒரு சொல்லும் குழறும் அளவுக்கு
எனக்குள் தழுதழுப்பு!

முத்து
04-10-2003, 12:28 PM
இது என்னுடைய 1000 -ஆவது பதிவு ... இதை ஒரு அற்புதமான சிறு கதைக்காகப் பதிய வாய்ப்பளித்த அண்ணன் இளசு அவர்களுக்கு நன்றி ....

அருமையான கதை... கரிகாலன் அண்ணா சொன்னது போலவே மனதைப் பிழிகிறது ... சிறு வயதில் ஏற்படும் சம்பவங்கள் மட்டும் ஏன் இப்படிப் பசுமரத்தாணிபோல பதிந்துவிடுகிறதோ தெரியவில்லை....

வளர்ந்தபின் எத்தனையோ மனிதர்களையும் , மாணிக்கங்களையும் சந்தித்தாலும் அவர்களின் மேல் மதிப்பு வருகிறதே தவிர சிறுவயதில் ஏற்பட்ட மனப்பாதிப்பு வருவதில்லை...

நிறைய சிறுவயது நிகழ்வுகளை பின்னோக்கிச் சிந்திக்க வைத்த கதை .. ஆச்சரியமான விவரிப்பு ... அற்புதம்.. இ தே போல் இன்னும் எங்களுக்கு நிறைய தாருங்கள் இளசு அண்ணா ...

இளசு
04-10-2003, 02:14 PM
அரும் முத்துகளைத் தனிப்பதிப்பாய் தரும்
ஆற்றல் உள்ள முத்து தம்பி - தன்
ஆயிரமாவது பதிவை அளித்த அன்புக்கு
ஆயிராமாயிரம் நன்றி சொல்கிறேன்....

பாரதி
04-10-2003, 04:43 PM
மகிழ் என்ற பெயரைச் சொல்லி எங்களை கண்ணீர் சிந்த வைக்கும் உங்களுக்கு என்ன சொல்ல..?

இளசு
04-10-2003, 05:34 PM
மகிழ் என்ற பெயரைச் சொல்லி எங்களை கண்ணீர் சிந்த வைக்கும் உங்களுக்கு என்ன சொல்ல..?

தம்பி பாரதி,
இளசு என்ற பெயர் வைத்த வயசான சப்பை மூக்கு அண்ணன்
அன்று சொன்னதை மீண்டும் சொல்லட்டுமா?
மானுடம் போற்ற மூளை வேண்டாம்
இதயம் போதும்...
பாரதியே உன் இதயம் போல் பெரிதாய் இருந்தால்...
இன்னும் விசேஷம்....

puppy
04-10-2003, 09:06 PM
சரஸ்வதிக்கு பூஜை தினம் இன்று......வாழ்வில் ஆயிரம் பேர் வருவார்கள்
போவார்கள்..சிலருக்கு சிலர் மட்டுமே வாழ்வின் கடைசி வரை..அவர்களது
எண்ணங்களில்.....வைஸ் பிரிண்ஸி சிலருக்கு சரஸ்வதியே......அதனால்
தான் பர்ஸ்லிம் பிரேமிலும்......மனதிலும்.......அருமையான நடையில்
ஒரே மூச்சில் எழுதி இருக்க வேண்டும்......கதையின் கடைசி வார்த்தை
வரும் வரை இமை மூடாம்ல் கண்விழி அசையாமல் படித்தேன்...
உங்களுக்கு நன்றி .....இளசுவின் யாருக்காகே அழுதேன்......
ஒரு உயிரோட்டமுள்ள கதை.......

கனத்த இதயத்துடன்
பப்பி

இளசு
04-10-2003, 10:04 PM
மிக்க நன்றி எங்கள் பப்பி அவர்களின் விமர்சனத்துக்கு..
பாராட்டில் 99% நான் படித்த / கேட்ட அந்த நிகழ்வை
நிகழ்த்தியவர்களுக்கும் எழுத்தில் பதித்தவர்களுக்கும் உரித்தாக்குகிறேன்.

ஒரே மூச்சில் எழுதிய உழைப்புக்கு எனக்கு 1%... போதும்..
அவ்வளவு அள்ளித் தந்திருக்கிறீர்கள். மீண்டும் நன்றி.

Hayath
05-10-2003, 02:21 PM
இளசு அவர்களிடம் ஒரு திறமையான கதாசிரியர் ஒளிந்து கொண்டிருப்பதை இந்த கதையை படிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிந்தது..ஒரு ஆசிரியரின் வாழ்வில் நடந்ததை ஸ்டெப்.-பை..ஸ்டெப்பாக...பருவம்....பருவமாக......அழகாக , அற்புதமாக...கடைசியில் நம்மையும் அறியாமல் சோகம் நம் மனதை கவ்வச் செய்திருப்பது இக்கதைக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி எனலாம்.


எனக்கு இந்த கதையின் மூலம் இரண்டு முக்கிய கருத்துகளை..வாழ்வியல் நீதிகளை தெரிந்து கொள்ள முடிந்தது.மற்றும் வாழ்க்கையில் "மதிப்பீடு " ....வாழ்க்கை "மதிப்பீடு " எவ்வளவு முக்கியமானது நம்மை நாம் உணர்ந்து கொள்ளவும்...மற்றவரை பற்றி தெரிந்துக் கொள்ளவும் உதவுகிறது என்பதையும் இக்கதையின் மூலம் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

மிகவும் இரசித்து படித்தேன்.இக்கதையை பாராட்ட தமிழில் வார்த்தைகள் இல்லையோ என திகைத்து நிற்கிறேன்.


ஒரு அதிகார சுபாவம் தலையெடுக்கும்போது இது போன்ற காட்டிக்கொடுத்து நல்ல பெயர் வாங்கும் வர்க்கம் தானாகவே உருவாகிவிடுகிறது.

அதிகாரம் கவிழும்போதும் இப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் கூட்டம் உருவாகிறது.

இளசு
05-10-2003, 02:36 PM
அன்பு ஹமாயுன்
இப்படி ஒரு விமர்சனம் பெற நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
யோசிக்கிறேன் - என்ன கொடுத்திருக்கிறேனென்று?
தமிழின் மேலும் தமிழ் மன்றத்தின் மேலும் என் அன்பைத் தவிர
வேறு எதைக் கொட்டிக் கொடுத்திருக்கிறேன் நான்?
தழுதழுத்த நன்றி ஹமாயூன்..

என் தாயாம் தமிழும் வலுவிழந்த தருணம் இது...

இக்பால்
05-10-2003, 05:23 PM
இன்னும் படிக்கவே இல்லை. ஆனால் நிழற்பட பதிவில் குறிப்பிட்டு

விட்டு விட்டேன். படித்ததும் உண்டு.-அன்புடன் இளவல்.

இளசு
06-10-2003, 01:35 AM
நிழற்படப் பதிவின் அடுத்த பாகம் முடித்து, பின்னர் இங்கு வாருங்கள் இளவலே!

sOliyan/சோழியான்
06-10-2003, 02:00 AM
இன்று வாசிக்க ஆரம்பித்தேன்.. கலகலப்பாக ஆரம்பித்து.. கண்ணீரில் அருமையாக நிறைவு செய்துள்ளீர்கள். தெளிவான எழுத்து நடை.. நிதானமான அணுகுமுறை. வாழ்த்துக்கள் .. தடையின்றி வாசிக்கவைத்த திறமைக்குப் பாராட்டுக்கள்.

இக்பால்
06-10-2003, 09:05 AM
இளசு அண்ணா ... முன்னரே சொல்லி இருக்கக் கூடாதா?

தெரியாம அலுவலகத்தில் உட்கார்ந்து படித்து விட்டேன்.

எல்லா ஆசிரியர்களையும் என் ஞாபகத்துக்கு இந்தக் கதை

கொண்டு வந்து விட்டது. நல்ல கதை.

1969-ல் தொடங்கிய என் படிப்பு.

வகுப்பு:1: சரஸ்வதி டீச்சர், கற்பகம் டீச்சர்.
2.அம்புஜம் டீச்சர்.
3.ரத்தினவேல் சார், பொன்னுச்சாமி வாத்தியார், சீனிவாசன் சார்.
4.சரஸ்வதி டீச்சர், திருமதி.உமையாம்பாள்.
5.பொன்னம்மா டீச்சர், திரு.சீனிவாசன்,திரு.முத்துசேதுராமன்.
6.திரு.தர்மலிங்கம்,திரு.தாண்டவராயன்,திரு.கருப்பைய்யா,ராஜாமணி டீச்சர், திரு.சண்முகம்.
7.திரு.கிருஷ்ணமூர்த்தி,ராஜாமணி டீச்சர், திரு.சண்முகம்.
8.திரு. நல்லசாமி, திரு. கிருஷ்ணமூர்த்தி,திரு.சண்முகம்.

30 வருடத்திற்கு பிறகும் சில நேரம் இவர்களை சந்திக்கும்
சந்தர்ப்பம் வாய்க்கிறது. இறைவனின் அருள்.

நன்றி இளசு அவர்களே.

-அன்புடன் அண்ணா.

poo
06-10-2003, 09:08 AM
மீண்டும் மீண்டும் (நானொன்றும் பெரிய படைப்பாளியல்லயென..) பொய் சொல்லிக் கொண்டிருக்கும் அண்ணனை கண்டித்தபடி...

கைகொடுங்கள்.. கைதேர்ந்த கதாசிரியர் என்ற மகுடம் சூட்டப்பட்டுவிட்டது!!

மகிழ்மாறனை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்.. அவனது சிரிப்பை நாங்களும் கண்டோம்...அந்த வெள்ளை உள்ளம் எல்லையில் சிவப்பு சிந்தியதை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்தேன்!!

அந்த டீச்சரின் மனதைப்போல என்னுடையதும் இறுதியில்.. அவனுக்காக அழுதேன்!!...

படிப்படியாய் காலங்களோடு கதையின் பரிணாமமும் வளர்ந்தவிதம் அருமை..

என்றோ எங்கோ..படித்ததை படைப்பில் பாரட்டும்படி கொண்டுவருவதால் உங்களை சிறந்த படிப்பாளியென்பதா படைப்பாளியென்பதா என இனியும் தயங்காமல்...

பாராட்டி மகிழ்கிறேன்.. படைப்பாளியே!!..

இளசு
06-10-2003, 09:57 PM
தெளிவான எழுத்து நடை.. நிதானமான அணுகுமுறை. வாழ்த்துக்கள் .. தடையின்றி வாசிக்கவைத்த திறமைக்குப் பாராட்டுக்கள்.

அன்பு நண்பர் சோழியான் அவர்களே!
மாறவில்லை.. இன்னும் மறக்கவில்லை!
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2133

என்னைக் கவர்ந்த கதாசிரியரின் பாராட்டுக்கு நன்றி!

இளசு
06-10-2003, 10:01 PM
எல்லா ஆசிரியர்களையும் என் ஞாபகத்துக்கு இந்தக் கதை
கொண்டு வந்து விட்டது. நல்ல கதை.


குருபக்தியில் நான் உங்களுக்கு அண்ணன் இளவலே,
மனிதனை உயர்த்தும் மகத்தான சக்தி - குருபக்தி!
வாழ்த்துகள்.
பாராட்டுக்கு நன்றி!

இளசு
06-10-2003, 10:15 PM
[quote] மீண்டும் மீண்டும் (நானொன்றும் பெரிய படைப்பாளியல்லயென..) பொய் சொல்லிக் கொண்டிருக்கும் அண்ணனை கண்டித்தபடி...
என்றோ எங்கோ..படித்ததை படைப்பில் பாரட்டும்படி கொண்டுவருவதால் உங்களை சிறந்த படிப்பாளியென்பதா படைப்பாளியென்பதா என இனியும் தயங்காமல்...
பாராட்டி மகிழ்கிறேன்.. படைப்பாளியே!!.

அன்புத் தம்பக்கு
கருத்து தானம் செய்த தெரிந்த படைப்பாளிகளை பெயரோடு சொல்லிவிடுகிறேன்..
(பேராசிரியர்.மாசிலாமணி போல..)
ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற மாத இதழ்களில் முன்பு படித்த கனல்கள்
இப்போது
தமிழ் மன்றக் காற்று வீசி எரியும்போது
பொறி கடன் தந்தவர் பெயர் தெரியாது போனாலும்
நன்றியோடு நினைவு கூர்வது என் கடமை(ன்) அல்லவா?

தம்பி ராம் சொன்னது போல் எல்லாச் சொற்களும் என்றோ எழுதப்பட்டுவிட்டன.
தொகுப்பாளி, கொடுப்பாளி என்று வேண்டுமானால் என்னைச் சொல்லிக்கொள்ளலாம்...
அதுவும் ஆத்ம நண்பரின் ஊக்கம் தரும் வினை.
அதுவே பகவானின் கீதை.
நான் பார்த்தன் போல வெறும் கருவியே...

வார்த்தைகள், ஊக்கியவர் சார்பில் தம்பியின் பாராட்டை ஏற்றுக்கொள்கிறேன்!

puppy
06-10-2003, 10:53 PM
[quote="poo"]மீண்டும் மீண்டும் (நானொன்றும் பெரிய படைப்பாளியல்லயென..) பொய் சொல்லிக் கொண்டிருக்கும் அண்ணனை கண்டித்தபடி...

நானும் உஙக் கூட சேர்ந்துக்கிறேன் கண்டிக்கிறதுக்கு.......

:roll:

இளசு
06-10-2003, 11:36 PM
இளசு கிட்டே புடிச்சதே இந்த ஒரு விசயம் தான்..எப்போதும் உண்மை பேசுவார்....யார்கிட்டேயும் அனாவசியமாக பொய்சொல்லமாட்டார்...
வாழ்க இளசுபூ, நானும் உங்க கூட சேர்ந்துக்கிறேன் "மீண்டும் மீண்டும் பொய் சொல்லிக் கொண்டிருக்கும்" இளசுவைக் கண்டிக்கிறதுக்கு.......

:roll:

உண்மை எது பொய் எதுன்னு
ஒண்ணும் புரியல
நம்ம கண்ண நம்மால
நம்ப முடியல...
:D

puppy
06-10-2003, 11:40 PM
எழுதும் போதே நினைச்சேன்.......இளசு "Association of thoughts" உள்ளவர்
ஆச்சேன்னு,....இருந்தாலும்
இங்க பொய்...அங்க உண்மை தான்........

அறிஞர்
07-10-2003, 05:39 AM
நல்ல கதை.. ரசித்து படித்தேன்... வாழ்த்துக்கள்......

Hayath
07-10-2003, 06:03 AM
[quote]எழுதும் போதே நினைச்சேன்.......இளசு "Association of thoughts" உள்ளவர்
ஆச்சேன்னு,....இருந்தாலும்
[b]இங்க பொய்...அங்க உண்மை தான்........

தன் கருத்துக்கு .....தன் கருத்தை கொண்டே வலு சேர்ப்பவர் நமது பப்பி அவர்கள்.

chezhian
08-10-2003, 07:53 AM
யாருக்காக அழுதான் - ஜெயகாந்தன் கதை.
யாருக்காக அழுதேன் - இளசுவின் கதை
இளகவைத்த கதை.
கலங்கிய கண்களுடன் செழியன்

இளசு
23-10-2003, 12:28 AM
நண்பன் செழியனுக்கு
இந்தத் தலைப்பும்
கடன் வாங்கியதுதான்....

மீசைக்கார ஜேகேவின் பலதலைப்புகள் என்னை
ஆகர்ஷித்திருக்கின்றன....

சட்டென நினைவுக்கு வந்தவை...

சில நேரங்களில் சில மனிதர்கள்
அக்னிப்பிரவேசம்
சினிமாவுக்குப் போன சித்தாளு
கங்கை எங்கே போகிறாள்
பாரீசுக்குப் போ!
உண்மை சுடும்
மனவெளி மனிதர்கள்
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
கருணையினால் அல்ல
உனக்குள் ஒருவன்
புதுச்செருப்பு கடிக்கும்
ஜய ஜய சங்கர

இளசு
23-10-2003, 12:48 AM
நல்ல கதை.. ரசித்து படித்தேன்... வாழ்த்துக்கள்......

நண்பர் அறிஞருக்கு என் நன்றிகள்.

தமிழ் தாட்சாயிணி
23-10-2003, 12:33 PM
ஓர் அருமையான கதை படைப்பை அளித்து உள்ளீர்கள் இளசே, பாராட்டுக்கள்.

தொடக்கம் முதல் முடிவுவரை, எழுத்தாளர் ரமணிசந்திரனின் கதை வாசிக்கும்போது ஏற்படும் ஆர்வம் தொற்றிக்கொள்ள,
இமை கொட்டாது வாசித்து முடித்தேன்.

அப்படியே மனதை நெகிழ வைத்துவிட்டது.


தங்கள் அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்,.

இளசு
06-11-2003, 06:28 PM
தோழி தமிழ் தாட்சாயணி அவர்களுக்கு
ஒரு பிரபல எழுத்தாளருடன் ஒப்பிட்டு எனக்கு கூச்சம் வரச்செய்துவிட்டீர்கள்...
எனவே தயக்கத்துடன் சொல்கிறேன் - " நன்றி தோழி"!

madhuraikumaran
10-11-2003, 12:37 AM
மின்னஞ்சல் வழியாய் ஆங்கிலத்தில் இதைப் படித்தபோது ஏற்பட்டதை விட தமிழில் அன்பர் இளசுவின் எழுத்தில் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் !

பாராட்டுகள் நண்பரே !

தமிழ் தாட்சாயிணி
22-11-2003, 07:42 PM
தோழி தமிழ் தாட்சாயணி அவர்களுக்கு
ஒரு பிரபல எழுத்தாளருடன் ஒப்பிட்டு எனக்கு கூச்சம் வரச்செய்துவிட்டீர்கள்...
எனவே தயக்கத்துடன் சொல்கிறேன் - " நன்றி தோழி"!

அன்பு இளசு அண்ணரே,

ஓர் அற்புதமான கதையை அளித்ததுக்கு நான் அல்லவா நன்றி கூறவேண்டும்.

இளசு
22-11-2003, 07:49 PM
தங்கை தமிழ்தாட்சாயணிக்கு அண்ணனின் அன்பும் ஆசியும்.
உங்கள் பங்களிப்பு சிறப்பாய் உள்ளது. பாராட்டுகள்.

நண்பா, மதுரைக்குமரனே
பல ஆண்டுகளுக்கு முன் ஓசியில் படித்த ஆங்கில நூல் பெயர் நினைவில்லை.
மனித உறவுகளை வளப்படுத்தும் (நெ)நிகழ்வுகளின் தொகுப்பு அது.
நினைவில் தைத்தவற்றை எடுத்து இறக்கிவைக்க மன்றம் எனும்
எழுத்துப்பட்டறை கிடைத்தது என் அதிர்ஷ்டம்.
உங்களிடம் அந்த முழுப்படைப்பு மின்னஞ்சல் இருந்தால் தனிமடலில்
அனுப்புங்கள் நண்பா.. மீண்டும் படித்து (நெ)மகிழ...

சேரன்கயல்
24-11-2003, 08:33 AM
யாருக்காக அழுதேன் சிறுகதை படித்துவிட்டு நான் என் நினைவுக்கு வந்தவர்கள் அனைவரையும் நினைத்து கண்கலங்கினேன்...பலரை நினைவூட்டியது உங்கள் சிறுகதை...

லொயோலாவில் முதுகலை முதல் செமஸ்டர் முடிந்து கல்லூரியில் அன்னையாக மதிக்கப்படும் பேராசிரியை...இதே போலத்தான் ஒரு பயிற்சியை அளித்தார்...நானும் என் நண்பரும் வகுப்புக்கு கொஞ்சம் தாமதமாக வந்ததில் சரியாக கவனிக்காமல் நல்லவற்றோடு சில குற்ரச்சாட்டுக்களையும் எழுதிவிட்டோம்...பாடம் சம்பந்தமான ஆய்வின் ஒரு பகுதியாக செய்யப்பட்ட பயிற்சியின் பின் சில நாட்கள் கழித்து பயிற்சியின்படி வகுப்பில் பிரபலமானவர்கள் என்னையும் என் நண்பரையும் அறிவித்த பேராசிரியை இந்தப் பயிற்சியில் இரண்டுபேர் மட்டும் மற்றவர்களது குறைகளையும் சுட்டியெழுதியிருந்தது வருத்த்மளிக்கிறதாக சொல்லிவிட்டு செல்ல...நாங்கள் ஓடிப்போய் காரணத்தைச் சொன்னோம்...மன்னிப்பு கேட்டோம்...பேராசிரியை அந்தப் பயிற்சித்தாளைத் தரவேயில்லை யாருக்கும்...ஒருவேளை எங்களின் மடத்தனத்தை மறைக்கும் எண்ணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
திரும்பிப் பார்க்க வழிசெய்த இனிய இளசுவுக்கு நன்றிகள்...
அழகாய் கதை சொன்னதற்கு பாராட்டுக்கள்...

ஓவியன்
17-01-2008, 01:16 PM
நம் மன்ற மின்னிதழின் முத்தாய்ப்பாக அமைந்த இந்த சிறுகதை நம் மன்ற மின்னிதழில் வந்த பின்னணியை நான் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.... :)

நாம் மன்ற மின்னிதழ் பணிகளில் மும்மூரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் அன்பு "பாரதி" அண்ணாவிடமிருந்து ஒரு தனி மடல் இளசு அண்ணாவின் இந்த சிறுகதையை நம் முதல் நந்தவனத்தில் இணைக்கலாமா என்று...??

பாரதி அண்ணா இந்த சிறுகதையின் சுட்டியைத் தரவில்லை, மாறாக கதையின் சாராம்சத்தை எழுதி இருந்தார்....

எனக்கோ ஆச்சர்யம் எத்தனையோ காலத்திற்கு முன் வாசித்த ஒரு கதையை ஒருவர் இத்துணை ஞாபகத்தில் வைக்க முடிந்த அந்த படைப்பு உண்மையில் அருமையானதாகவே இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இளசு அண்ணாவின் இந்த சிறுகதையை பழைய திஸ்கிப் பதிவுகளிலிருந்து தேடிப் பிடித்து நம் மன்ற நந்தவனத்துக்காக ஒருங்குறி மாற்றினேன். அப்போதே இந்த திரியை மேலெழுப்ப வேண்டுமென தீர்மானித்துக் கொண்டேன்.

ஆனால் மேலெழுப்ப அப்போது பணிகள் விடவில்லை, அதனால் இப்போது அந்தப்பணியை இந்தப் பதிவு நிறைவேற்றுகிறது....!! :)

ஓவியன்
17-01-2008, 01:24 PM
எனக்கு திரைப்படங்களில் சேரனின் "ஆட்டோகிராப்" மிகவும் பிடிக்கும், அந்த திரைப்படத்தைப் பார்க்கும் போது அந்த திரைக்கதை ஏதோ நமக்காகவே, நம் கதையையே எழுதியது போன்று எல்லோரையும் நினைக்க வைத்ததே சேரனின் வெற்றி....

அது படைப்புக்களில் ஒரு புதிய பரிமாணமாக நான் நினைத்தேன்...

ஆனால்,
அதே உத்தி, அதே பரிமாணம்...
இங்கே இளசு அண்ணாவின் அருமையான எழுத்துக் கைவண்ணத்தில் இத்தனை நாள் மன்றத்தில் ஒளிந்து கிடந்திருக்கிறதே...

என்னையும் மகிழ்மாறனுடன் பயணிக்க வைத்து, என் பள்ளிக் கால நினைவுகளையும் கிளறி....

என்னால் மறக்க இயலாத கலாமலர், சறோ, குமுதினி டீச்சர்களை ஞாபக அலைகளுக்குள் சிக்க வைத்த இளசு அண்ணாக்கு நன்றிகள் பல....

பூமகள்
17-01-2008, 01:32 PM
மின்னிதழ் வேலையின் போது இக்கதை படித்து, வேலை எல்லாம் விட்டுவிட்டு வெகு நேரம் மனம் பாரமாய் அந்த கதையினூடே சுற்றிச்சுற்றி வந்தவண்ணம் இருந்தது.

இளசு அண்ணாவின் இரண்டாவது சிறுகதை என்று எனக்கு நம்ம வெகு சிரமமாக இருக்கிறது.

இந்த கதையினை பல வருடம் தாண்டியும் நினைவு வைத்து தகுந்த நேரத்தில் நினைவுபடுத்திய மன்றத்தின் தென்றல் பாரதி அண்ணாவுக்கும், தமிழ் மன்ற திஸ்கி கடலில் மூழ்கி பொக்கிஷத்தோடு வருவது அவ்வளவு எளிதல்ல... அந்த அற்புதப் பணியைச் சிரமேற்கொண்டு செய்து, முத்தெடுத்து நமக்கு படைத்த என் அன்பின் ஓவியன் அண்ணாவுக்கும் எனக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்..!!

இளசு அண்ணாவின் கதை.. மனம் வருடி.. கனக்க வைத்து கண்கள் பனிக்கச் செய்தது.

அந்த குட்டி பையன் மகிழின் வார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரம் இடுகிறது.

பாராட்ட வார்த்தைகள் இல்லை பெரியண்ணா. அசந்து நிற்கிறேன் உங்கள் முன்..!!

இன்னும் இது போல் பல கதைகளைத் தாருங்கள் இளசு அண்ணா. பூவின் அன்பு வேண்டுகோள் இது..! :)

செல்வா
17-01-2008, 01:38 PM
உண்மையிலேயே.... நந்தவனத்தின் முத்தாய்ப்பான சிறுகதை இதை நானாகச் சொல்லவில்லை.... நான் யார் யாருக்கெல்லாம் நந்தவனத்தை அனுப்பினேனோ அவர்கள் அனைவரும் தவறாது குறிப்பிட்டது இந்த கதையை தான். இன்னும் ஒரு வியப்பு என்ன வென்றால் யாருமே கதைப் பெயரைச் சொல்லவில்லை மாறாக... இளசு என்பவர் எழுதியிருந்தாரே.. அந்த கதை கண்கலங்க வைத்துவிட்டது என்றனர்.
வெறும் பின்னூட்டங்களில் மட்டுமே பார்த்து வியந்து கொண்டிருந்த இளசு அண்ணாவின் படைப்புக்களை பார்க்கும் போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. நன்றி... அண்ணா இத்தகைய கதையை படிக்கும் வாய்ப்பை எமக்களித்தற்கு. மேலும் பல படைப்புகள் தரவேண்டி....
வேண்டலுடன்,
செல்வா...

யவனிகா
17-01-2008, 08:30 PM
நிஜமாவே ஸ்தம்பித்து விட்டேன் இளசு அண்ணா...
என்ன எழுதுவது என்றே தெரியவில்லை...

நான் பள்ளியிறுதி படிக்கும் போது ட்யூசன் எடுத்துக் கொண்டிருந்தேன்.அப்போது குழந்தைகளுக்கு லெட்டர் போஸ்ட் செய்ய சொல்லிக் கொடுப்பதற்கு வேண்டி...நானே கொஞ்சம் பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்கி அவர்கள் மூலமாகவே எனக்கு அனுப்பச்சொன்னேன்.நானும் அவர்கள் முகவரிக்கு அனுப்பினேன்.அடடா...அவர்களது கிறுக்கல் தமிழில் வாழ்த்து அட்டைகள்.

என்னிடம் கணக்கு படித்த பையன், இப்போது பெங்களூரில் கம்யூட்டர்எஞினியர்.கண்டிப்பாய் நான் சொல்லிக் குடுத்த கணக்கு காரணமில்லை.
போன வருடம் விடுமுறையில்...காய் வாங்க கடைக்குச் சென்ற போது அவனைப் பார்த்தேன். அக்கா...என்னை ஞாபகம் இருக்கா...நான் பொங்கல் வாழ்த்து அனுப்பனனே..நீங்களும் பதிலுக்கு அனுப்பனீங்களே...
இன்னும் வெச்சிருக்கேன் பத்திரமா...என்றானே பாருங்கள்...வீட்டுக்கு வந்து அவர்கள் அனுப்பிய மிச்சம் ஏதும் இருக்கிறதா என்று தேடி தங்கையிடம் லூசுப்பட்டம் வாங்கினேன்.

நிஜமாவே பள்ளியில் படிக்கும் போது டீச்சர்தான் ஏஞ்சல்.அவர் தொட்டுத்தரும் எதுவுமே ஈடே இல்லாத வைரம் தான். அப்படித்தான் ஒருவர் டீச்சரை விட முடியாமல் அவரது மகளை தனது ஏஞ்சல் ஆக்கிக் கொண்டார்.

பழைய நினைவுகளை கிளறி விட்டது இளசு அண்ணா...உங்களது பழைய பதிவுகளை தேடிப் பிடித்து படிக்கப் போகிறேன்.

ஓவியன்
17-01-2008, 08:35 PM
பழைய நினைவுகளை கிளறி விட்டது இளசு அண்ணா...உங்களது பழைய பதிவுகளை தேடிப் பிடித்து படிக்கப் போகிறேன்.

நானும் உங்களுடன் கூட்டணி சேர்கின்றேன், சேர்ந்தே முத்துக் குளிப்போம்... :icon_b:

அறிஞர்
17-01-2008, 11:26 PM
4 வருடங்கள் முன் படித்தது....

கடைசியில் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது...

எத்தனையோ நட்புகள். ஆசிரியர்-மாணவர் நட்பு கொஞ்சம் வித்தியாசமானது... மதிக்கப்படவேண்டியது.....

உண்மையான நட்புகள் இன்னும் எங்கும் வளரட்டும்.

நன்றி இளசு...

சிவா.ஜி
18-01-2008, 05:05 AM
முதல் மாதிரி படிவத்தில் இந்தக்கதை படிக்கும்போதே மனம் கனத்தது.நிகழ்வுகள்,அந்த நிகழ்வுகளின் ஞாபகத்தொடர்ச்சிகள்....எழுத்தில் பார்த்தே இத்தனை தாக்கமா..?இது எழுத்துக்கும் எடுத்துக்கொண்ட கருவுக்கும் கிடைத்த பிரம்மாண்ட வெற்றி.

இளசுவின் எழுத்தில் எனக்கு எப்போதுமே ஒரு மயக்கம்...அவர் வெறுமனே அ,ஆ,இ,ஈ...எழுதினாலும் அதிலொரு சுவையிருக்கும்.இந்தக்கதையில் உள்ளங்களை உண்மையாய் காட்டியிருக்கிறார்.ஆசிரியை என்பவர் யவனிகா சொன்னதைப்போல நமக்கு சிறிய வயதில் அறிமுகமாகும் தேவதைகள்தான்.

என்னுடைய மூன்றாம் வகுப்பு ஆசிரியை நூர்ஜஹான் இன்றும் என் மனதில் இளமையாய் இருக்கிறார்.அவர் வாழ்ந்த வீட்டைக் கடந்து போகும்போதெல்லாம் நான் சிறுவனாகிவிடுகிறேன்.பசுமையான அந்த பழம்நினைவுகள் என்னை அடுத்த கொஞ்சநேரத்துக்கு அக்கம்பக்கம் மறக்க வைத்துவிடும்.

மகுடமாய் இருக்கவேண்டிய படைப்பு இன்றுவரை மறைந்திருந்தது.இன்று பாரதியால் அது மீண்டும் அரியணை ஏறியிருக்கிறது.அதற்கு பட்டம் சூட்டிய பாரதிக்கும்,ஓவியனுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

மதி
18-01-2008, 12:06 PM
இப்போது தான் இதை படித்தேன். எங்கியோ எப்போதோ படித்த ஞாபகம் இருக்கு. இப்போது மறுபடியும் படித்தேன். இதற்கு முன் எல்லோரும் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன். பள்ளி நினைவுகளும் அதில் செய்த அட்டூழியங்களும்... ஆசிரியர்களுடன் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும்.

அற்புதமான இந்த படைப்பை தந்தமைக்கு மிக்க நன்றி இளசு அண்ணா.