PDA

View Full Version : 1800ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்!



தமிழநம்பி
27-08-2009, 03:55 AM
1800ஆண்டுகட்கு முன்னரே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர்!


குடக்கோ நெடுஞ்சேரலாதன், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரப் பேரரசன்.

அப் பெருவேந்தனுக்கு இரண்டு பிள்ளைகள்.

அவன் தன் மைந்தரோடு தலைநகராகிய வஞ்சிமூதூரில் மணிமண்டபத்தில் வீற்றிருந்த போது அங்கு ஒரு கணியன் (சோதிடன்) வந்தான்.

அக் கணியன், அரசன் நெடுஞ்சேரலாதனிடம், தான் கணியத் திறமையன் என்று அரசனுக்குக் காட்டிப் பெரும் பரிசு பெறும் எண்ணங் கொண்டான்.

அரசனை வணங்கிவிட்டு, அம் மணிமண்டபத்தில் இருந்த அரசனின் மைந்தர் இருவரையும் பார்த்துவிட்டு, அரசனிடம் கூறத் தொடங்கினான்.

"அரசே, உம் மைந்தருள், இளையவனான இளங்கோவுக்கே அரசு வீற்றிருக்கும் இலக்கணம் உள்ளது" என்று சொன்னான்.

அதைக் கேட்டதும் மூத்த மைந்தனான செங்குட்டுவனின் முகம் சுருங்கியது.

விருட்டென எழுந்தார் இளங்கோ! அக் கணியனை வெகுண்டு நோக்கி, தமையனாகிய செங்குட்டுவனிருக்க, இவ்வாறு முறைமை கெடச் சொன்னாயே! எனக் கடுமையாகக் கூறினார்.

தமையனுக்கு ஏற்பட்டுள்ள வருத்தம் போக்க எண்ணினார் இளங்கோ.

அந்தக் கணியனை நோக்கி, " உன் கணியம் பொய்யென்பதை மெய்ப்பித்துக் காட்டுவேன்! அண்ணன் செங்குட்டுவன் அனைத்துலகும் புகழ ஆட்சி செய்வதை மக்கள் காண்பர்!" என்று மு்ழக்கமிட்டார்.

அம் மணிமண்டபத்தை விட்டு நீங்கிய இளங்கோ, தன்னிருப்பிடம் சென்றார். அரச உடைகளைக் களைந்தார். துறவுடை பூண்டார். கிழக்கு வாயில் நோக்கி நடந்தார்.

அந்தக் கிழக்கு வாயிற் கோட்டத்திலேயே தங்கி இருந்து தம் வாழ்நாள் கடமைகளைச் செய்தார்! அங்கிருந்தே ஈடற்ற முத்தமிழ் இலக்கியமான நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.

அவரின் தமையனான, சேரன் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களை வென்று இமய வெற்பில் (மலையில்) விற்புலிகயல் (தமிழ்க்கொடி) பொறித்தான்! தமிழரின் வீரத்தை இகழ்ந்த வடவாரிய மன்னர்களான கனகன் விசயன் எனபாரின் தலையில் கல்சுமத்திக் கொணர்ந்து கற்புக்கரசி கண்ணகிக்குச் சிலை அமைத்துக் கோயில் கட்டினான்.

இவ்வாறு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன்பே கணியம் பொய்யென மெய்ப்பித்தவர் இளங்கோ அடிகளாவார்.

leomohan
27-08-2009, 09:20 AM
கணியம் பொய்யானதா அல்லது கணித்தவர் பொய்யானாரா

பாரதி
27-08-2009, 11:12 AM
கணியம் குறித்து இளங்கோ கூறினாலும், இன்றும் நம்புவோரும் எதிர்ப்போரும் இருந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? கதையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நம்பி.

தமிழநம்பி
27-08-2009, 11:39 AM
நன்றி மோகன்.

நன்றி பாரதி.

praveen
27-08-2009, 01:31 PM
கனியம் என்றால் ஜோதிடம் தானே, நான் இனையம் (கனிப்பொறி) என்று தவறான அர்த்ததுடன் நினைத்து உள் வந்தேன்.

இதே போல மற்றொரு சோதிட நிகழ்வொன்று ராசராசன் காலத்தில் நிகழ்ந்ததை நான் விரைவில் பதிக்கிறேன்.

பின்னர் பதிந்தது

ராஜராஜ சோழ சக்கரவர்த்தி ஒருமுறை ஜோதிடத்தை பொய்யாக்க நினைத்து, ஒரு ஜோதிடரை வரவழைத்து தனது அந்தப்புறத்தில் வளர்த்த ஒரு கிளியின் ஜாதகத்தை கொடுத்து கனிக்க செய்து இந்த கிளி இன்னும் எவ்வளவு காலம் உயிர்வாழும் என்று கேட்டாராம். ஜோதிடரும் கவனமாக ஆராய்ந்து அந்த கிளி இன்னும் 3 வருடம் உயிர்வாழும் என்றாராம். ராஜராஜன் சிரித்து கொண்டே காவலாளி ஒருவரிடம் உடைவாளை பெற்று அந்த கிளியை அடைத்து வைத்திருந்த தங்க கூண்டை திறந்து அது பறந்து போய்விடாமல் இருக்க ஒரு தங்க சங்கிலியில் பினைத்திருந்ததோடு அந்த கிளியை வெட்டினாராம். இவர் உடைவாளை உயர்த்துவதை பார்த்த கிளி பறந்தது, ஆனால் தங்கச்சங்கிலி இருந்ததால் முயற்சி நிறைவு பெறவில்லை. ராஜராஜனும் கிளியை வெட்டுவதற்கு பதில் (கிளி பறக்க முயற்சித்ததில்) பிழையாக அந்த சங்கிலியை துண்டித்து விட்டாராம்.

கிளி பறந்து ஜோதிடத்தை மெய்பித்தது என்று ஒரு கதை படித்திருக்கிறேன்.

இதே போல ஒரு புராணக்கதை ஒன்றும் படித்தேன்.

விஷ்னு பகவானை பார்க்க வந்த எமன் கோட்டை வாசலில் இருந்த கருடபகவானை கண்டு குசலம் விசாரித்து, கோட்டையின் ஓரத்தில் இருந்த ஒரு புறாவை கண்டு திகைத்து பின் சிரித்து உள் சென்றாராம். எமன் பார்வை படவும் அந்த புறா பயந்து அருகில் இருந்த, பறவைகளுக்கு அரசன் கருடனிடம் குறிப்பிட்டதாம். கருடபகவானும் கவலை வேண்டாம் இங்கிருந்தால் தானே உனக்கு எதுவும் நடக்கும், இதோ பலகாத தூரம் உன்னை விட்டு வருகிறேன் என்று கனப்பொழுதில் அந்த புறாவை எடுத்து கற்பனைக்கு எட்டாத தூரத்தில் பூலோகத்தில் உள்ள ஒரு காட்டில் விட்டு வேர்க்க விறு விறுத்து கோட்டை வாசல் திரும்பினாராம். இவர் வேர்க்க விறுவிறுத்து நிற்கவும் உள் சென்று விஷ்னுவை தரிசித்து எமன் வரவும் சரியாக இருந்ததாம். என்ன் கருடரே இவ்வளவு தூரம் எங்கே சென்று வந்தீர்கள் என்று கேட்டதற்கு, புறாவை காப்பாற்றிய விசயம் சொன்னாராம். அதற்கு எமன் சிரித்து கொண்டே, " இந்த புறா இன்னும் 30 நிமிடத்தில் பூலோகத்தில் உள்ள ஒரு காட்டில் ஒரு பூனையால் மரணிக்கும் என்ற" இதன் விதி எப்படி நிறைவேறும் என்று நினைத்து சிரித்தேன். இந்தப்புறா பறக்க நேரிட்டாலும் அந்த இடம் அடைய பல நாள் ஆகுமே எப்படி இன்னும் சிறிது நேரத்தில் அந்த காட்டை அடையும் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள் என்று நகைத்தாராம். கருடரின் முகத்தில் அசடு வழிய நின்றாராம்.

இதெல்லாம் ஜோதிடத்தை பெரிதாக்க சங்ககாலத்தில் சொல்லப்பட்ட கதையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். (ஒருவரின்) ஜோதிடத்திற்கு இன்னொரு பெயர் ஜாதகம் என்பதே, அதற்கு அர்த்தமே சாதகமாக சொல்லிக்கொள்வதே. :)

சிவா.ஜி
27-08-2009, 01:44 PM
இதைத்தான் விதியை மதியால் வெல்வது என்பார்களோ?

கணியம் பொய்யெனெ நிரூபித்த இளங்கோவடிகளைப்போல இன்னும் பலர் அவதரித்து, கணியமும் பொய், கணியர்களும் பொய்யரென நிரூபிக்க வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி தமிழ் நம்பி.

பரஞ்சோதி
27-08-2009, 01:55 PM
அருமையான திரி.

கணியம் பொய்யோ, கணியத்தை சொன்னவர் பொய்யோ?

இளங்கோவடிகள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதால் ஒரு மாவீரனும், ஒரு மாபெரும் புலவரும் கிடைச்சாங்க.

தமிழநம்பி
27-08-2009, 05:03 PM
பிரவீண்,

நீங்கள் எழுதிய இரண்டு கதைகளும் சுவையானவை.

இவற்றைப் போலவே இன்னுங்கூட பல கதைகளைச் சொல்வார்கள்.

இவை அனைத்துமே கற்பனையாகக் கூறப்படுபவை.


நான் எழுதியிருந்த இளங்கோவடிகளின் செய்தி, இளங்கோ அடிகளே சிலப்பதிகாரம் வரம்தரு காதையில் எழுதியுள்ளதை வைத்து எழுதப்பட்டது.


//***"ஜோதிடத்திற்கு இன்னொரு பெயர் ஜாதகம் என்பதே.***//

எனக்குத் தெரிந்தவரை ஜாதகம் என்பது பிறந்த நேரத்தை வைத்து எழுதப்படும் அடிப்படையான குறிப்பு; தமிழில் பிறப்பியம் என்று சொல்வார்கள்.

சோதிடம் என்பது ஜாதகத்தைப் பார்த்துக் கணித்துக் கூறுவது. அதாவது பலன் கணித்துக் கூறுவது. எனவே இதைக் கணியம் என்கின்றனர்.

"ஜாதகம் என்பதே, அதற்கு அர்த்தமே சாதகமாக சொல்லிக் கொள்வதே."

- நாட்டு நடப்பில் இக் கூற்று உண்மை என்றே தெரிகிறது.

தமிழநம்பி
27-08-2009, 05:09 PM
நீக்கப்பட்டது.

தமிழநம்பி
27-08-2009, 05:10 PM
நன்றி சிவா.

இளசு
27-08-2009, 05:12 PM
பள்ளி வயதில் என்னை மிகவும் கவர்ந்த வரலாற்று நிகழ்வுகளில் இளங்கோவடிகளின் இச்செயலும் ஒன்று..

அண்ணன் மேல் உள்ள பாசம், நியாயச் சிந்தை.. வெளிப்படுத்தும் நிகழ்வு!

தெய்வம், அரசன் தாண்டி சகமனிதனை முதன்முதலாய்
காப்பியநாயகனாக்கிய புரட்சிநாயகன் -
இப்படி பகுத்தறிவின் ஊற்றாகவும் இருந்ததில் வியப்பென்ன?

பகிர்ந்த தமிழநம்பிக்குப் பாராட்டும் நன்றியும்..

தமிழநம்பி
27-08-2009, 05:13 PM
சரியாகச் சொன்னீர்கள் பரஞ்சோதி.
நன்றி.

தமிழநம்பி
27-08-2009, 05:19 PM
நன்றி இளசு!

ஓவியன்
29-08-2009, 04:36 AM
சுவையான சம்பவப் பகிர்வுகள் மிக்க நன்றி தமிழநம்பி மற்றும் பிரவீன்...

அன்று கணியம் பிழைத்திருக்காவிட்டால்
தமிழுக்கு ஓரு வேந்தனும்,
தரணிக்கொரு வேந்தனும் கிடைக்காது போயிருப்பார்கள்...

சோழர்களும் இமயம் வென்றிருந்தாலும்
முதலில் இமயம் வென்ற தமிழ் வேந்தன்
இமயவரம்பன் சேரன் செங்குட்டுவன் என்பார்கள்..!!

தமிழநம்பி
29-08-2009, 05:32 AM
நன்றி.

உண்மைதான் ஓவியன்!

அன்று அக் கணியன் அரசவை வந்து அவ்வாறு கூறாதிருந்தால், முத்தமிழ்ப் பாவியமாகிய சிலப்பதிகாரத்தை இளங்கோ எழுதமுடியாமலே கூட போயிருக்கக் கூடும்.