PDA

View Full Version : வேறென்ன செய்ய இயலும்?



கீதம்
27-08-2009, 01:10 AM
வழக்கமாய் அருந்துகிற தண்ணீரும்
வல்லிய நெல்லிக்குப் பின்
நாவில் ருசிக்கும் மாயமென்ன?
அம்மா எனும் சொல்லும் அப்படிதான்!

ஆயிரம் முறை என்னை
அழைத்த சொல் என்றாலும்
அயல் நாடு வந்த பின்பு
அமுதமாய் இனிக்கிறது.
நிழலின் அருமை போலே
தமிழின் அருமையும்
தாமதமாய்ப் புரிகிறது.

மெல்ல மெல்ல எனை விட்டு
விலக முயலும் தமிழை
மல்லுக்கட்டியும், மன்றாடியும்
என்னோடு தக்க வைக்க
எத்தனை எத்தனைப் பாடுகள்?

அங்கே நலம் கேட்டு
நாலு வார்த்தை எழுதவும்
சோம்பிதிரிந்த எனக்கு
இங்கே ஆறாய் ஓடுகின்றன,
கதைகளும், கவிதைகளும்!

எழுதுகோல் பிடிக்கவும்
பிரயாசையுற்றவளுக்கு
எழுத்துகளே உயிர் நாடியாகி
வாழ்வை இயக்கிக்கொண்டிருக்கின்றன.

இயன்றவரை போராடி என்னுடன்
இழுத்து வந்த தமிழைக்கொண்டு
குழந்தைகளை நான் தாலாட்ட,
அவர்களோ,
தமிழையும், என்னையும்
ஒருமித்து உறங்கவைத்து,
ஆங்கிலத்தில் அளவளாவிக்கொண்டிருக்கின்றனர்.

இனிப்பெனும் சுவையை
அறவே அறியாதவனிடத்தில்
கற்கண்டை உவமை கூறித்
தோற்றுப்போகிறேன்.

தமிழையும், அதன் இனிமையையும்
அறியாமற்போகவிருக்கிற என்
வருங்காலச் சந்ததியை எண்ணி
வருந்தி உழல்வதைத் தவிர, நான்
வேறென்ன செய்ய இயலும்?

தாமரை
27-08-2009, 02:27 AM
வழி இருக்குது தோழரே!..

சொல்பவர் விஷயம் தெரிந்தவர் என்பது புரிந்தால்
சொல்வதைக் காது கொடுத்து கேட்பார்கள்..

அவர்களின் உணவின்
சுவை நுணுக்கத்தை
உங்களால் விவரிக்க முடிந்தால்

நீங்கள் சுவை உள்ளது
என்று சொல்லும் உணவை
அவர்களும் உண்ணுவார்கள்.

உங்களுக்கு அவர்களின்
சுவை தெரிந்திருக்கிறது
என்ற நம்பிக்கையில்

ஆங்கிலத்தின் சிறப்பு
அவர்களை விட உங்களுக்கு
புரிந்திருந்தால்
தமிழின் சிறப்பைப் பற்றி
அதை விட இது
எப்படிச் சிறந்தது
என்பதைச் சொல்லிக் காட்ட முடியும்..

குழந்தைக்குப் போதிக்க
மழலை கற்றுக் கொள்ளவேண்டும்

நாம்
அவர்களைக் கற்றுக் கொள்ளாமல்
அவர்களுக்கு போதிக்க முடியாது...

கற்கண்டு போல
அவர்களுக்கு பிடித்த இனிப்பில்
ஒன்றைக் காட்டி
இதனிலும் இனிப்பானது
என்றுதான் சொல்ல முடியும்

அவர்களின் இனிப்பு வகையே
நமக்குத் தெரியா விட்டால்
எப்படிச் சொல்வது..?

உள்ளே இருந்து
வீட்டைப் பூட்டிக் கொண்டு
அடுத்த ஊர் போகமுடியாது

தமிழநம்பி
27-08-2009, 02:45 AM
புனைவுகளற்ற உண்மையான உணர்வு வெளிப்பாடு!

***"தமிழையும், அதன் இனிமையையும்
அறியாமற் போகவிருக்கிற என்
வருங்காலச் சந்ததியை எண்ணி
வருந்தி உழல்வதைத் தவிர, நான்
வேறென்ன செய்ய இயலும்? "***

உண்மையான கவலை உய்விற்கான வழியைக் காணும்.

'அறஞ்செய விரும்பு' - என்று ஒளவையார் விரும்பு என்றே வலியுறுத்தினார்.
விரும்பினால் செய்வர் என்று அந்த அறிவாற்றல் மிக்க அம்மைக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

உண்மையான கவலையும் விடிவிற்கான வழியைக் கண்டுபிடிக்கும்.
நன்றி அன்பரே!

கா.ரமேஷ்
27-08-2009, 05:34 AM
கவலையை விடுங்கள்... தாமரை அவர்கள் கூறுவதுபோல் குழ்ந்தைகளுக்கு எதுவும் தெரியாது கற்கண்டை கூட நாம் கடித்து "ஆஹா" என குழந்தை மொழியில் சொல்லும்போது அதுவும் தானே முயற்ச்சிக்கும்... கற்றுகொடுத்து இன்புறுங்கள் நம் கவிமிகு கனிதமிழை ...

அமரன்
27-08-2009, 08:44 AM
அனேகமான வெளிநாட்டு வாழ்க் குழந்தைகள் பெரும்பான்மையினரைப் பொறுத்தவரை கல்வி, மொழி என்பன தொழில்தகைமைகளே. அவர்கள் கேட்பது தமிழைப் படித்து என்ன பயன். இந்தக் கேள்விக்கு அவர்கள் திருப்திப்படும் விடையை (அது தவறானதாகக் கூட இருக்கலாம்) அளித்து விட்டால் போதும். தமிழை ஆர்வமுடன் கற்கத் துவங்கி விடுவார்கள். ஐரோப்பாவில் தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் தமிழ்ப்பள்ளிகள் உண்டு. பிரான்சில் 67க்கு மேல் பள்ளிகள் ஜேர்மனியில் 72 க்கு மேல். இங்கெல்லாம் சராசரியாக 100 மாணவர்கள் கற்கின்றார்கள். அவர்களில் 95 விழுக்காட்டினர் விரும்பிப் படிக்கின்றார்கள்.

இவர்கள் தம் நாட்டு வாழ் தமிழ்ப் பிள்ளைகளுடன் கதைக்கும் போது நாட்டு மொழியில் கதைப்பார்கள். பிற நாட்டு வாழ் தமிழ்ப் பிள்ளைகளுடன் தமிழில் தொடர்பாடுவார்கள். வாழிட மொழி தெரியாத பெரியவர்களுடன் உரையாடும் போதும் தமிழ்தான் ஊடகம். இவர்கள் கதைக்கும் தமிழ் இலக்கணப் பிழையற்று இருக்கும். நூல்களில் இருக்கும் வாக்கிய அமைப்பும், கலைச்சொற்களுமாக இவர்கள் தமிழை நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இன்னிசைக் கீதத்துக்கு நன்றி.

கீதம்
28-08-2009, 12:20 AM
ஆழ்மனத்தின் ஆதங்கத்தை
அழகு மன்றில் அள்ளியிறைத்தேன்.
அலட்சியம் கொள்ளாது,
அனுசரணை மேலோங்க,
அறவுரையும், அறிவுரையும் நல்கி,
அமைதியற்று அலைபாய்ந்த உள்ளத்தை
ஆற்றுப்படுத்திய
அன்பு நண்பர்களுக்கு
ஆயிரமாயிரம் நன்றிகள்.
அன்புடன் கீதம்.

பாரதி
05-09-2009, 01:11 PM
இந்த நல்ல ஆதங்கம் இருக்கும் வரைக்கும்
ஆற்றல் மொழிக்கு அழிவேது?
நம்பி புகட்டுங்கள்; நல்லதே நடக்கும்.
இனிய வாழ்த்து நண்பரே.

மஞ்சுபாஷிணி
22-09-2009, 04:39 PM
அழகு கவிதை கீதம்...

aren
10-10-2009, 01:18 PM
இதே பிரச்சனை இன்று அனைத்து குடும்பங்களிலும் இருக்கிறது என்பதே உண்மை. நாம் தமிழில் பேசினாலும் அதை புரிந்துகொண்டு ஆங்கிலத்திலேயே பதில் சொல்லும் குழைந்தைகள்.

ஊரிலிருந்து வரும் தொலைபேசி தொடர்புகள், பெரியவர்கள் குழந்தைகளிடம் ஒரு வார்த்தையாவது பேச நினைக்கும்பொழுது குழந்தைகள் தமிழில் பேசத்தெரியாது என்று சொல்லி அந்த தொலைபேசித் தொடர்புகளை துண்டிக்கும்பொழுது மனது கனக்கிறது.

என்ன செய்வது, எப்படி இதை திருத்துவது

உங்களைப் போலவே புரியாமல் நான்.

இன்னும் எழுதுங்கள்.

சிவா.ஜி
10-10-2009, 05:09 PM
உண்மையான கவலை....உங்களை எண்ணி பெருமைப்படவைக்கும் கவலை. ஆனால் கவலையை விடுங்கள்.. தானாய் விரும்பி கற்கும்வரை கட்டாயப்படுத்துதல் பயனளிக்காது.

கற்கண்டின் சுவையுணர்ந்து தாங்களாகவே கேட்கும் காலம் வரும்.

நல்ல கவிதை, நல்ல சிந்தனை. வாழ்த்துகள் கீதம்.

கீதம்
12-10-2009, 09:45 PM
மிக்க நன்றி நண்பர்களே. அன்புடன் கீதம்.

கௌதமன்
01-01-2011, 04:17 PM
கீதம் உங்கள் நிலைமை பரவாயில்லை! இங்கே தமிழகத்தில் சத்தமில்லாமல் தமிழ்க்கொலை நடக்கிறது.
இங்கே மன்றத்தில் அதிகம் பிழை செய்கிறவர் (தமிழில்) என்று பார்த்தால் நிறைய பேர் தமிழ்நாட்டுக் குடிமகனாகத்தான் இருப்பார்கள் (நானும் விதி விலக்கல்ல). தமிழும் தெரியாத ஆங்கிலமும் சரியாகத் தெரியாத ஒரு சமுதாயம் செழிப்பாக இங்கே வளர்ந்து கொண்டு வருகிறது. தினசரிகளில் சர்வ சாதாரணமாக எழுத்துப்பிழைகளைக் காண முடிகிறது.இதைச் சரிசெய்யும் தகுதியுள்ள தமிழ் எழுத்தாளர்கள் அரசியல் வாதிகளைவிட கேவலமாக தனிமனித விமர்சனங்களை முன்வைத்து ப்ளாக்கில் எழுதுகிறார்கள். ஏன் தமிழ் படிக்க வேண்டுமென்று தொலைக்காட்சியில் விவாதம் செய்கின்ற இளைய தலைமுறையினர் உள்ள நாட்டில் தமிழை வளர்ப்பது என்பதுதான் சவாலானது, சரி செய்யக் கடினமானது.

நன்றி!

ஜனகன்
01-01-2011, 06:07 PM
உங்க நினைவுகளில் ஓடும் எண்ணங்களை கவிதையா எழுதி,அத்தனையும் வாழ்வில் கண்டு ரசித்து வந்ததை போல எழுதியுள்ளீர்கள்.
இதைத்தவிர எனக்கு சொல்ல ஏதுமில்லை..............


நிச்சயமாக என் குடும்பத்திலும் இதே பிரச்சனை இருக்கிறது என்பதே உண்மை.

Hega
01-01-2011, 08:31 PM
உள்ளத்தின் ஏக்கத்தை கவிதையாக்கி இருக்கின்றீர்கள்

தமிழையும் ஒரு மொழியென கற்க கொடுக்கும் போது அதையும் குழந்தைகள் ஈடுபாட்டோடு கற்பார்கள் என்பதே என் அனுபவ உண்மை.

இங்கெல்லாம் ஒரு எட்டாவது படிக்கும் ஒரு மாணவன் கு்றைந்தது 3 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பான். அதில் ஒன்றாய் தமிழும் இருக்கும். ஆனாலும் என்ன ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலி எனும் ஒழிகளுக்கு அவர்கள் கொடுக்கும் ஈடுபாட்டை விட தமிழ் மீது காட்டும் ஈடுபாடு சற்று குறைவேயானாலும் பிழையற தெளிவாக பேச, எழுத படிக்க தெரிந்திருப்பதே எமக்கு திருப்தியாயிருக்கும்.


இருந்தாலும் அடிமனதில் எனக்கும் ஓர் ஏக்கம் உண்டு.. புலம் பெயர் தமிழர் வாழ்வு மூன்றாவது தலைமுறை காண தொடங்கி விட்ட இக்காலகட்டத்தில் அவர்கள் மூலம் தமிழ் வளருமா.. இல்லையென்பது என் கருத்தே.

கீதம்
01-01-2011, 10:37 PM
கீதம் உங்கள் நிலைமை பரவாயில்லை! இங்கே தமிழகத்தில் சத்தமில்லாமல் தமிழ்க்கொலை நடக்கிறது.
இங்கே மன்றத்தில் அதிகம் பிழை செய்கிறவர் (தமிழில்) என்று பார்த்தால் நிறைய பேர் தமிழ்நாட்டுக் குடிமகனாகத்தான் இருப்பார்கள் (நானும் விதி விலக்கல்ல). தமிழும் தெரியாத ஆங்கிலமும் சரியாகத் தெரியாத ஒரு சமுதாயம் சத்தமின்றி இங்கே வளர்ந்து கொண்டு வருகிறது. தினசரிகளில் சர்வ சாதாரணமாக எழுத்துப்பிழைகளைக் காண முடிகிறது.இதைச் சரிசெய்யும் தகுதியுள்ள தமிழ் எழுத்தாளர்கள் அரசியல் வாதிகளைவிட கேவலமாக தனிமனித விமர்சனங்களை முன்வைத்து ப்ளாக்கில் எழுதுகிறார்கள். ஏன் தமிழ் படிக்க வேண்டுமென்று தொலைக்காட்சியில் விவாதம் செய்கின்ற இளைய தலைமுறையினர் உள்ள நாட்டில் தமிழை வளர்ப்பது என்பதுதான் சவாலானது சரி செய்யக் கடினமானது.

நன்றி!

உங்கள் ஆதங்கம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே! தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் மதிப்பில்லை என்பதுபோன்ற எண்ணம் மறைமுகமாகவும் நேரடியாகவும் படிக்கும் வயதில் புகுத்தப்படுவதே இந்நிலைக்குக் காரணம். அடுத்த தலைமுறையை எண்ணிக் கவலைதான் உருவாகிறது. திரியை மேலெழுப்பியமைக்கும் பின்னூட்டமிட்டதற்கும் நன்றி கெளதமன்.

கீதம்
01-01-2011, 10:43 PM
உங்க நினைவுகளில் ஓடும் எண்ணங்களை கவிதையா எழுதி,அத்தனையும் வாழ்வில் கண்டு ரசித்து வந்ததை போல எழுதியுள்ளீர்கள்.
இதைத்தவிர எனக்கு சொல்ல ஏதுமில்லை..............


நிச்சயமாக என் குடும்பத்திலும் இதே பிரச்சனை இருக்கிறது என்பதே உண்மை.

உண்மைதான் ஜனகன். அயல்தேசங்களில் வாழும் பல தமிழர்களின் பரிதாப நிலை இதுதான்.

கீதம்
01-01-2011, 10:49 PM
உள்ளத்தின் ஏக்கத்தை கவிதையாக்கி இருக்கின்றீர்கள்

தமிழையும் ஒரு மொழியென கற்க கொடுக்கும் போது அதையும் குழந்தைகள் ஈடுபாட்டோடு கற்பார்கள் என்பதே என் அனுபவ உண்மை.

இங்கெல்லாம் ஒரு எட்டாவது படிக்கும் ஒரு மாணவன் கு்றைந்தது 3 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பான். அதில் ஒன்றாய் தமிழும் இருக்கும். ஆனாலும் என்ன ஜேர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலி எனும் ஒழிகளுக்கு அவர்கள் கொடுக்கும் ஈடுபாட்டை விட தமிழ் மீது காட்டும் ஈடுபாடு சற்று குறைவேயானாலும் பிழையற தெளிவாக பேச, எழுத படிக்க தெரிந்திருப்பதே எமக்கு திருப்தியாயிருக்கும்.


இருந்தாலும் அடிமனதில் எனக்கும் ஓர் ஏக்கம் உண்டு.. புலம் பெயர் தமிழர் வாழ்வு மூன்றாவது தலைமுறை காண தொடங்கி விட்ட இக்காலகட்டத்தில் அவர்கள் மூலம் தமிழ் வளருமா.. இல்லையென்பது என் கருத்தே.

உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன் Hega. எங்கெங்கோ சிதறியபின்னும் இணையத் துடிப்பால் இணைந்திருக்கும் இதயங்களால் தமிழ் இனிதே வாழுமென்ற நம்பிக்கையும் கூடவே ஒரு ஓரமாய்த் துளிர்க்கவும் செய்கிறது. பின்னூட்டத்துக்கு நன்றி.

M.Jagadeesan
02-01-2011, 12:49 AM
ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளவேண்டுமானால் அந்தமொழி பேசப்படு
கின்ற இடத்திலே நாம் வாழவேண்டும். வீரமாமுனிவர்,கால்டுவெல்,
ஜி.யு.போப் போன்ற அறிஞர்கள் இங்கேவந்து தமிழ் கற்று இலக்கியம்
படைத்து, நமக்கும் தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள்.ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்பது என்பது கானல் நீரே!

Hega
02-01-2011, 08:49 PM
ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளவேண்டுமானால் அந்தமொழி பேசப்படு
கின்ற இடத்திலே நாம் வாழவேண்டும். வீரமாமுனிவர்,கால்டுவெல்,
ஜி.யு.போப் போன்ற அறிஞர்கள் இங்கேவந்து தமிழ் கற்று இலக்கியம்
படைத்து, நமக்கும் தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள்.ஆகவே புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தமிழ் கற்பது என்பது கானல் நீரே!


அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் தமிழ் நாட்டின் இருக்கும் குழந்தைகளை விட புலம்பெயர்ந்து ஐரோப்பிய தேசங்களில் குடியிருப்போர் குழந்தைகள் பேசும் தமிழ் மிக தெளிவானது.

எதிர்காலத்தில் என்னாகும் என்பது தெரியாவிட்டாலும் இன்றைய சூழலில் தமிழ்மொழி புலம்பெயர் தமிழரால் வளர்க்க படுகிறது.

தமிழ் நாட்டில் கல்வி கற்கும் குழந்தையை விட இங்கே வேற்று மொழியின் கற்கும் குழந்தை மிக தெளிவாக தமிழைகற்கிறது என்பேன்.

இந்தியாவில் அதிலும்தமிழ் நாட்டில் ஆங்கிலகல்வி மோகத்தால் தமிழ் பேசவேஅறியாமல் வளர்க்கப்ப்படும் குழந்தைகள் அதிகமாகிக்கொண்டு வருவதால் எதிர்கால தம்ழ் வளச்சி என்பது புலம் பெயர் தமிழால் தான் ஆகுமோ.. யார் கண்டது.

தமிழ் நாட்டில் தமிழ் என்பது அரசியல் செய்யமட்டுமே என்றாகி பல ஆண்டுகள் ஆகி விட்டதே..ஆதலால் தமிழ் நாட்டில் தன தமிழ் கற்க முடியும் என்பது முற்காலத்தில் ஏற்புடைய கருத்தாக இருந்திருக்கலாம்.

இனிவரும் காலத்திற்கு அது பொருந்துமா என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.