PDA

View Full Version : பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!



தமிழநம்பி
26-08-2009, 02:23 PM
பிழை கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசென அறிவித்தவர்!


தமிழ் இலக்கியங்களையும் நூல்களையும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பதிப்பித்த முன்னோடியான ஓர் அறிஞர் அவர். பண்டைய கழக(சங்க)த் தமிழ்நூல்கள் பலவற்றைப் பெருமுயற்சியில் தேடிக் கண்டுபிடித்தவர்; ஏடுகள் செல்லரித்து அழிந்து போகாது மீட்டெடுத்துக் காத்தவர்; பிறகு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்ந்து அச்சிட்டு அளித்தவர். அந்தச் சிறப்புக்குரிய அறிஞரே, தாம் பதிப்பித்த நூல்களில் பிழைகள் கண்டுபிடிப்போர்க்கு நூல் பரிசளிப்பதாக அறிவித்தவர்.

தமிழாசிரியராக, கல்லூரிப் பேராசிரியராக, கணக்காயராக, தமிழ் இதழாசிரியராக, வழக்கறிஞராக, நயனகராக(அறமன்றத் தலைவராக)ப் பணியாற்றியவர். தொல்காப்பிய ஆசான், பதிப்புச் செம்மல், செந்தமிழ்ச் செம்மல் என்று அறிஞர்களால் பாராட்டப் பட்டவர். ஆங்கல அரசால் இராவ்பகதூர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கப்பட்டவர்.

தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் வல்லவராயிருந்தவராகிய அவர்தாம், அரிய தமிழ்த்தொண்டு செய்து தமிழ் வளர்த்த தாமோதரம் ஆவார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி என்ற ஊரில் பிறந்தவர். அவர் தந்தையின் பெயர் வைரவநாதர் என்பதாகும். எனவே அந்த அறிஞரின் பெயரைச் சி.வை.தாமோதரம் என்றனர்.

இவர் பதிப்பித்த நூல்களாவன :

1. தம் 20ஆம் அகவையில் 1852இல், நீதிநெறி விளக்கம்.

2. 1868இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையுடன்.

3. 1881இல் வீரசோழியம்.

4. 1883இல் தணிகைப் புராணம்.

5. 1883இல் இறையனார் களவியலுரை.

6. 1885இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன்.

7. 1887இல் கலித்தொகை.

8. 1889இல் இலக்கண விளக்கம்.

9. 1889இல் சூளாமணி.

10. 1891இல் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன்.

11. 1892இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன்.


தாமோதரம் ஐயா, பண்டைத்தமிழ் நூல்களை ஆய்வு செய்துப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, தமது பதிப்புகளில் தவறுகள் காணப்படின் அவற்றைத் தமக்கு அறிவித்துதவும்படி அறிஞர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதழ்கள் வாயிலாக விடுத்த அவ் வேண்டுகோளில், பிழைகளை எழுதி அனுப்பினால், எழுதினோர் பெயர்களோடு அவை வெளியிடப் படுமென்றும் 50 பிழைகளைக் காட்டுவோர்க்கு ஒரு நூல் அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இச்செயல், அவருடைய பதிப்புகள் பிழையின்றி வரவேண்டும் என்பதில் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது.

இவர் இயற்றிய நூல்கள் :

1. கட்டளைக் கலித்துறை

2. சூளாமணி உரைநடை நூல்

3. சைவ மகத்துவம் (செய்யுளும் உரைநடையும் கலந்தது)

4. ஆறாம் பால பாடம்

5. ஏழாம் பால பாடம்

6. நட்சத்திரமாலை

7. ஆதியாகம கீர்த்தனம்

8. விவிலிய விரோதம்

9. காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி (புதினம்)


இவை தவிர, இவர் எழுதிய பதிப்புரைகள் ‘தாமோதரம்’ என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.

சி.வை.தா.வின் பணியைப் பாராட்டியுள்ள அறிஞர்களில் சிலர்:

1. பரிதிமாற் கலைஞர்

2. தெ.பொ.மீ.

3. பெரும் பாவலர் சுப்பிரமணிய பாரதியார்

4. பண்டிதமணி சி.கணபதியார்

5. புலவர் சொ.முருகேசனார்

6. பம்மல் சம்பந்தனார்

7. மயிலாடுதுறை வேதநாயகம்

8. உ.வே.சா.

9. நெவின்சு - சிதம்பரனார்

10. கறோல் – விசுவநாதனார்

11. பெர்சிவெல் திருத்தந்தையார்

12. தி.ரு வி.க.


“பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர்; சுவர் எழுப்பியவர் தாமோதரம்; கூரை வேய்ந்தவர் உ.வே.சா.” என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. பாராட்டியிருக்கிறார்.


----------------------------------------------------------------------

ஓவியன்
29-08-2009, 05:52 AM
இந்தக் காலத்தில் அச்சுத்துறை நவீனமயமாகியும் தப்புத் தப்பாக புத்தங்களில் தமிழ் மொழி கையாளப்பட்டுக் கொண்டிருக்கையில், அந்த காலத்திலேயே தமிழை தமிழாக வெளியீடு செய்த சி.வை.தாமோதரம் போன்ற பேரறிஞர்களினால்தான் தமிழ் இன்னமும் செழுமை குன்றாதிருக்கிறது.

விடயப் பகிர்வுக்கு மிக்க நன்றி தமிழநம்பி..!!

தமிழநம்பி
29-08-2009, 06:27 AM
ஆம், ஓவியன்,

நாம் நன்றி செலுத்த வேண்டிய தமிழ்ப் பெருந்தகையாளருள் அவரும் முகன்மையானர்.

இப்போதும் பிழைகளோடு வரும் நூல்களைப் பார்க்கும்போது அவர் பெருமை பளிச்சிடுகின்றது.

______________________________________________________________

உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்