PDA

View Full Version : நல்லெண்ணம்!



தமிழநம்பி
23-08-2009, 12:05 PM
நல்லெண்ணம்!

(அறுசீர் மண்டிலம்)


மாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம்
மனத்தின் எண்ணம்;
வேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ வெறும்மாவே!
விரைவில் வீழ்வான்!
சாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள்
சரிவே காணா
ஏந்துடைய நல்வாழ்வு என்றென்றும் ஏய்ந்திடநல்
எண்ணம் வேண்டும்!


ஒருவரைநீ வாழ்த்தினையேல் உனைநீயே வாழ்த்தினையென்
றுணர்ந்து கொள்க!
ஒருவர்க்குத் தீங்குசெய நினைத்தாயேல் தீங்கினைநீ
உனக்கே செய்தாய்!
ஒருவரைநீ சினந்தாயேல் ஊறுன்றன் மனத்திற்கும்
உடற்கும் உண்டே!
ஒருக்காலும் மாறாத உறுதியிது எண்ணங்கள்
உயர்த்தும்; வீழ்த்தும்!


தப்பாதே நல்லெண்ணம் வளர்க்கின்ற சூழ்நிலைகள்
தமையே தேர்க!
எப்போதும் நற்றொடர்பும் ஏற்றமுறும் நல்லுறவும்
இணைத்துக் கொள்க!
இப்போது மனத்தினிலே எழுச்சிகொளும் நல்லெண்ணம்
இனிமை சேர்க்கும்!
முப்போதும் செயல்களெலாம் முழுச்செப்ப வெற்றியுடன்
முடியும், உண்மை!


ஓய்வினிலும் பொழுதோட்டும் ஒருநேரந் தனிலதிலும்
உங்கள் நெஞ்சம்
ஏய்தலுற நல்லெண்ணம் எழக்கண்டும் கேட்டுரைத்தும்
இயைந்து நின்றால்
ஆய்வறிவர் முடிவிதுவே அடரெண்ணம் ஏந்துமனம்
அளிக்கும் வெற்றி!
தோய்கின்ற தொழிலதிலும் தூயவுள நல்லெண்ணம்
துணையாய்க் கொள்க!


எண்ணத்தை ஆக்குவதார்? உள்வாங்கு்ம் செய்திகளே!
எனவே என்றும்
ஒண்ணலுறுஞ் செய்திகளே உள்வாங்கும் படிச்சூழல்
ஓர்ந்து தேர்க!
எண்ணவராம் வள்ளுவரும் உயர்வையுள ஓதியதை
எண்ணிப் பாரீர்!
திண்ணரெனப் பொறிவாயில் தேர்ந்தவிக்கச் சொன்னதையும்
தெளிந்து கொள்க!


நல்லெண்ணம் மனங்கொள்க! நல்லுணர்வைப் போற்றிடுக!
நனமை நாடி
நல்லாரோ டுறவாடி நல்லொழுக்கம் பேணிடுக!
நயந்தே நாளும்
வல்லாரும் மெல்லியரும் வலியவுள நல்லெண்ணம்
வளர்த்து வாழ்க!
எல்லாரும் நல்லவராய் இயங்கிநலந் தோய்ந்திடவே
இனிது வாழ்க!

==================================================================

ஓவியன்
23-08-2009, 01:01 PM
கண்ணாடி போன்ற மன எண்ணங்கள் தாம் காணும் செய்திகளையே
விம்பமாக பிரதிபலிப்பன, ஆகையால்

நல்லவற்றைக் கேள்,
நல்லவற்றைப் பார்,
நல்லவற்றையே பேசு,
ஆதலால்-நலமாயிரு.

என நீங்கள் வடித்த செய்யுள் அருமை, தொடரட்டும் உங்கள் பணி...
மனதார வாழ்த்திப் பாராட்டுகிறேன்.

இளசு
23-08-2009, 02:39 PM
அன்பு தமிழநம்பி

உங்கள் உள்ளொளியும் மொழிவளமும் அசர வைக்கின்றன..

வந்தனமும் வாழ்த்தும்!

தமிழநம்பி
23-08-2009, 05:35 PM
நன்றி ஓவியன்!

நன்றி இளசு!

நாகரா
31-08-2009, 02:52 PM
நல்லெண்ணம் மனந்தன்னில் அன்புணர்வு இருதயத்தில்
இன்சொற்கள் நன்னாவில் ஏந்து

மிகவும் உயர்ந்த கருத்துக்களைத் தெள்ளு தமிழில் கவியாய்த் தந்த உமக்கு வாழ்த்துக்களும், பாராட்டும், நன்றியும் தமிழநம்பி, எம்மைப் பண்படுத்தும் நற்கவிகள் இன்னும் இன்னும் தருக!

தமிழநம்பி
31-08-2009, 04:56 PM
நல்லெண்ணம் மனந்தன்னில் அன்புணர்வு இருதயத்தில்
இன்சொற்கள் நன்னாவில் ஏந்து

மிகவும் உயர்ந்த கருத்துக்களைத் தெள்ளு தமிழில் கவியாய்த் தந்த உமக்கு வாழ்த்துக்களும், பாராட்டும், நன்றியும் தமிழநம்பி, எம்மைப் பண்படுத்தும் நற்கவிகள் இன்னும் இன்னும் தருக!

நன்றி நாகரா!

உங்கள கருத்தாழமிக்கக் குறளைத் தளைதட்டாமல் கீழ்க்காணுமாறு அமைக்க இசைவளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்:

நல்லெண்ணம் உள்ளத்தில் அன்புணர்வு நெஞ்சகத்தில்
இன்சொற்கள் நன்னாவில் ஏந்து.

நன்றி.
____________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீஒதுங்கி இருந்துவிடாதே!நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

நாகரா
01-09-2009, 02:26 AM
இசைவு நிச்சயம் உண்டு, நன்றி திரு. தமிழநம்பி

சிவா.ஜி
01-09-2009, 05:12 PM
விதைத்ததை அறுப்பாய்.

நல்லவை நினை நல்லவை அடை எனச் சொல்லும் அருசீர் மண்டலம் அருமை.

சொல்வளம் சொக்க வைக்கிறது. வாழ்த்துகள் தமிழ்நம்பி.

தமிழநம்பி
01-09-2009, 05:46 PM
விதைத்ததை அறுப்பாய்.

நல்லவை நினை நல்லவை அடை எனச் சொல்லும் அருசீர் மண்டலம் அருமை.

சொல்வளம் சொக்க வைக்கிறது. வாழ்த்துகள் தமிழ்நம்பி.

நன்றி சிவா.
_______________________________________________
உன்றன் குடும்பம் உன்றன் வாழ்க்கை
உன்றன் நலன்கள் உன்றன் வளங்கள்
என்றுமட்டும் நீ ஒதுங்கி இருந்துவிடாதே! நீ
இறந்தபின்னும் உலகம் இருக்கும் மறந்துவிடாதே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கலைவேந்தன்
05-09-2009, 09:33 PM
அழகான வார்த்தைகளின் அணிவகுப்பில் அசத்தலான தமிழ்ப்பாடல்.

தமிழ நம்பி எனும் பெயரைச் சரியாகத்தான் தேர்ந்தெடுத்து அதைக்காக்கிறீர்கள்..

வாழிய தமிழ நம்பி...!

அமரன்
08-09-2009, 07:10 AM
முப்பொம்மைகள் கொண்டு காந்தி சொன்ன தத்துவம்
முக்காலும் நிலைக்கும் முக்கனித் தமிழ நம்பி.. நல்ல கவி.