PDA

View Full Version : இன்முகத்தோடு உள்ளனராம்!



தமிழநம்பி
18-08-2009, 04:25 PM
இனக்கொலையர் வெங்கொடுமை எல்லை மீற
இனியுமிதைப் பொறுப்பதுவோ என்றெ ழுந்த
மனக்கனலர் திரண்டறிவு ஆற்றல் வீரம்
மாசற்ற ஈகத்தால் மண்ணை மீட்டே
இனக்கொடியை ஈழத்தில் ஏற்றி ஆண்டார்!
எல்லாரும் நல்லாட்சி இதுவென் றாரே!
தனக்கெனவே வாழ்ந்திடுவார் தில்லி யோடு
தன்மானம் கெட்டோரொப் பந்தம் போட்டார்!


சிங்களனை ஆளாக்கித் தில்லி யங்கே
செந்தமிழ இனந்தன்னைச் சிதைத்த ழிக்க
இங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை மாற்ற
ஏய்த்துநடித்(து) ஏமாற்றி எல்லாம் செய்தார்!
எங்குமிலாக் கொடுங்குண்டு வீசி அங்கே
எண்ணற்ற தமிழர்களைக் கொன்றார் இங்குப்
பொங்குணர்வில் பதின்மூவர் பொசுங்கிச் செத்த
போதுமதைப் பொருட்படுத்தாக் கொடுமை என்னே!


உயிரிருந்த மூன்றிலக்கம் பேரை அங்கே
ஒருசேர முள்வேலி அடைப்புக் குள்ளே
செயிருருவர் சிறைவைத்துச் சிதைக்கின் றாரே
சிந்தைமிக நொந்தவரும் சிறுகச் சாக!
அயிறற்கு உணவில்லை அருந்த நீரும்
அழற்காயம் நோய்கட்கு` மருந்து மில்லை!
எயிலிருக்கும் கோட்டையிருந்(து) இரண்ட கத்தில்
இவருரைத்தார் இன்முகத்தோ(டு) இருப்ப தாக!


அடைத்துவைத்த கூடாரம் மிதந்த தங்கே
அடைமழையின் வெள்ளத்தில் அவர்ந னைந்தே
முடைநாற்ற நீரினிலே நின்ற வாறே
முன்னறியாத் துனபத்தில் மூழ்கிப் போனார்!
கடைகெட்ட தொலைக்காட்சி காட்டு மிங்கே
களிப்போடு பேசியமர்ந் திருப்ப தாக!
விடைசொல்லும் நாளொன்று வந்தே தீரும்!
விழிப்புவரும்! விடிவுவரும்! வீழ்வார் வஞ்சர்!
:confused:

அமரன்
18-08-2009, 04:41 PM
வாங்க தமிழ்நம்பி.

உறுப்பினர் அறிமுகப் பகுதியில் உங்களை அறிமுகஞ் செய்து எல்லாருடனும் கைகுலுக்கிக் கொள்ளுங்களேன்.

உங்களில் ஓர் உணர்ச்சிக் கவியைக் காண்கிறேன்.

நடந்தவையை விட்டு விடுவோம். நடப்பவையைப் பார்ப்போம்.

மேய்ப்பரில்லா மந்தைகளாக மூன்று இலட்சம் தமிழர்கள்... (மனிதர்கள் என நாவொப்புதில்லை..) ஏக்கர்க் கணக்கில் உருவாக்கப் பட்ட தொழுவத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் மீட்பர் ஒருவர் மீண்டும் தோன்றுவார் அங்கிருந்து. அப்போதும்.......

செயவும் ஏதுமில்லை... சொல்லவும் ஏதுமில்லை... ஊமையாய் அழமட்டுமே முடியும்..

தமிழநம்பி
19-08-2009, 07:48 PM
நன்றி அமரன்.

இன்னமும் கூட இரண்டகம் தொடர்வதாகவே தெரிகிற நிலையின் விளைவே இப்பாடல்.

உணர்வைப்புரிந்து கொண்ட உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

(அறிமுகம் எங்கு எழுதுவதென்று தெரியவில்லை)

அக்னி
19-08-2009, 08:17 PM
அறிமுகம் தர,
உங்களை அறிமுகம் செய்து கொள்க (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)
இங்கே செல்லுங்கள்...

கவிதைக்குப் பின்னூட்டம் பின்னால் வந்து கொண்டேயிருக்கின்றது.

தமிழநம்பி
20-08-2009, 03:27 AM
நன்றி ஐயா.

அறிமுகக் குறிப்புகள் எழுதியிருக்கிறேன்.

உதவியதற்கு மீண்டும் நன்றி.

ஓவியன்
20-08-2009, 04:49 AM
தமிழநம்பி..!!

அமரன் கூறியது போல செய்யும் நிலை அற்றுப் போயே நானும் என்னைப் போன்ற பல ஈழத்து பிறப்புக்களும் தவித்துக் கொண்டிருக்கின்றோம்....

செய்ய வேண்டிய நேரத்தில் சர வர உதவிடவில்லயே என்ற தவிப்பெனக்கு...

நீங்கள் கூறியது போலவே ஒரு விடிவு பிறக்குமெனற நம்பிக்கை இருந்தாலும் அதனை மூடித் தகர்கின்றன நடக்கின்ற அண்மைக்கால சம்பவங்கள்....

என்ன செய்ய....

அக்னி
20-08-2009, 05:57 AM
தனி மனிதன் சிறையிருந்து பார்த்துள்ளோம்.
ஒரு குடும்பமாகச் சிறையிருந்ததும் நடந்ததுண்டு.

ஓர் இனமே சிறை வைக்கப்பட்டுள்ளதை,
இப்போதுதான் காண்கின்றோம்.

தண்ணீர் அருந்த இல்லை,
ஆனால்
வெள்ளமாகி இருக்க விடுகுதில்லை.

உடற்காய, மனக்காய
வலிகள் நிறையவிருந்தும்,
முனகிடக்கூட முடியுதில்லை.

காணாமற் போகின்ற,
இளைய சமுதாயம்,
இன்று தெரியாமற் போகலாம்.
ஆனால்,
நாளைய தலைமுறையில்
ஏற்படும் வெற்றிடம்
இன்றைய கொடுமைகளுக்குச்
சாட்சியாகும்.

நாங்கள் நாமாய் வாழவிரும்பியது,
ஒரு குற்றமா....
அதற்குத்தானா இந்த ஆயுட் தண்டனை...

தமிழநம்பி
21-08-2009, 04:12 PM
நம்பிக்கையோடிருங்கள் ஓவியன்.

நாம் என்ன செய்ய இயலுமோ அதைச்செய்வோம்.

விடிவு வரும்.

தமிழநம்பி
21-08-2009, 04:45 PM
***நாங்கள் நாமாய் வாழவிரும்பியது,
ஒரு குற்றமா....
அதற்குத்தானா இந்த ஆயுட் தண்டனை... ***

நமக்கு விடை கிடைக்காத வினா!

தொடர்ந்து எண்ணத்தில் வலி தந்துகொண்டிருக்கும் நிலை.

நம்பிக்கையோடு நம் கடமையைச் செய்துகொண்டிருப்பொம்.

விடிவு வந்தே தீரும். நம்புவோம்.


உள்ளத் துணர்வினை உள்ளபடி காட்டியுள்ளார்

கள்ளமிலா திங்கேக் கனிவுடனே! - உள்ளம்

குளிர வரையுமிவர் கொண்டபேர் "அக்னி"

ஒளியை இருளெனற் கொப்பு.