PDA

View Full Version : அந்த பொழுது



ஆதி
14-08-2009, 11:07 AM
சவக்குழியில் இருந்து
உயிர்ப்பு கொண்டது
அந்த பொழுது..

அதன் அந்தகார வெளியில்
அழுகுரலும் ஓலமும்
கசையடி அதிர்வுகளும்
ஏக்கப் பெருமூச்சுகளும்
நிறைந்தது..

நடுநிசியின் மோன கணத்தில்
ஓசையற்ற பாதங்களோடு
கனவுக்குள் கசிந்து
என்னை ஆக்ரமித்தது அது..

முற்றி வளர்ந்த
அரக்க நகங்கள் கொண்ட கைகளின்
கோரப்பிடியில் இருந்து விடுபட
திமிறி போராடி
மூச்சிரைக்க எழுந்தேன் நான்..

தான் இரைத்து போட்ட இருளை
அமைதியாக பொறுக்கி கொண்டிருந்த இரவு
மருட்சி வழியும் என்னை கண்டு
நிலா முறுவல் பூத்தது..

அரண்ட என் விழிகளின் தேடலில்
பற்றிய கோர கைகளும்
அதன் பிடியும் தென்படவில்லை..

ச்சீ, கனவென மீண்டும்
தூக்க பாதாளத்தில் ஆழ்கையில்
புறா சிறகுகளுண்ட
ஒரு தேவதையின் கைகள்
புனித நகர் நோக்கி
என்னை அள்ளி பறந்தது..

கா.ரமேஷ்
14-08-2009, 12:07 PM
பல சமயங்களில் சில* கனவுகள் பாதிப்புகளையும் சில கனவுகள் மீண்டும் இதுபோல் கனவுகள் வராதா என்ற ஏக்கத்தினையும் கொடுக்கும்... கனவுகளை விட்டு வெளியே வரும்போதுதான் நமது நிஜங்கள் நெருடும்...

கனவு கவிதைக்கு வாழ்த்துக்கள் தோழரே...

ஆதி
14-08-2009, 12:47 PM
பல சமயங்களில் சில* கனவுகள் பாதிப்புகளையும் சில கனவுகள் மீண்டும் இதுபோல் கனவுகள் வராதா என்ற ஏக்கத்தினையும் கொடுக்கும்... கனவுகளை விட்டு வெளியே வரும்போதுதான் நமது நிஜங்கள் நெருடும்...

கனவு கவிதைக்கு வாழ்த்துக்கள் தோழரே...

பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல ரமேஷ்

செல்வா
14-08-2009, 01:53 PM
கொடூரமான கனவுகள்....
தத்ருபமாக இருக்கும் போது...
நிஜம் போன்றே நமது மனதை ஆக்ரமிக்கின்றன...

கலைந்து எழும்போது ...

கண்ட அத்தனையும் கனவென்னும்
எண்ணம் கொடுக்கும் நிம்மதி ... அலாதி..

வாழ்த்துக்கள்... ஆதி

இளசு
14-08-2009, 06:48 PM
இதுபோல் கனவுகள் எவர்க்கும் வரும்..
ஆனால்
சொற்களால் விவரித்து கவியாக்க
ஆதிபோல் சிலருக்கே வரும்..


இரு துருவக் கனவுகள் அடுத்தடுத்து வருவது
கவிதையின் இன்னொரு அழகிய அடுக்கு!


வாழ்த்துகள் ஆதி!

ஓவியன்
16-08-2009, 07:04 AM
நரகமும் சொர்க்கமும்
அக்கம் பக்கம்தான்
ஒரே இடத்தில் அதுவும்
என் கனவுகளில் பிறப்பிடத்தில்,
ஒன்றாக சில நேரம்,
ஒன்றன் பின் சில நேரம்,
என்னை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன
என் ஒவ்வொரு இரவுகளிலும்......

________________________________________________________________________________________

ஆதியின் கவிதைகளில் இது கொஞ்சம் வித்தியாசமானதாக உணருகிறேன், வாழ்த்துகள் ஆதி, தொடர்ந்து தொடருங்க..!!

அமரன்
16-08-2009, 07:27 AM
புத்தம் சரணம் கச்சாமி..

நீங்களா ஆதி கனவு கண்ட ஆசாமி..

துன்பம் இன்பம்
எதுவும் நிரந்தரமில்லை..
கலைந்து கொண்டே இருக்கும்
கனவுகளைப் போல..

துன்பத்தைத் தொடர்ந்து வரும்
இன்பப்பொழுதுகள்
தேவதை வீதியில் நகர்வலங்கள்..

அதே இரவு.. அதே நிலவு..
பார்ப்பது ஆதியின் கண்களூடு..
அதனால் சற்றே ரசனையோடு..

வாழ்த்துகள் ஆதி.