PDA

View Full Version : மனப்பறவை.......செல்வா
11-08-2009, 04:22 PM
சன்னலுக்கு வெளியே
சரிந்து விழும்
மழையின் துளிகள்...

ஓசை கேளா.., திறக்கவியலா
கதவுகளின்
பின்னால் நான்

ஏக்கப் பார்வையினூடே...
எழுந்து பறந்தது
ஒரு பறவை…

மூடிய கதவை முட்டித்திறந்து
முடியாத வானம் நோக்கி
முன்னேறுகிறது…

சொரியும் மழைப்பூக்களின்
விரியும் குளிர்க்காற்றில்

சிறகுகளில் பட்டுச் சிதறும்
வண்ணப் பொட்டுகளை
கண்களில் நிறைத்து…

இன்னும் …. இன்னும்
மேலே...

மேகங்கள் முத்தமிடும்
வானத்திரையில்...
தெறித்து விழும்...
கன்னிப் பூக்களைத்
தொட்டுத் தடவி..
சிட்டுச் சிலிர்த்தது…

கார்முகில் பிழிந்து
தார்நிறம் கலைத்து
மோர் நிற மேகத்தில்
இறகு துடைத்தது…

காரும் நீரும்
கலந்து நடத்திய
கும்ப மேளாவில்
களித்துக் கிடக்கையில்

இடியென்றொலித்த மணியால்
இதயத்தில் நிலநடுக்கம்…

“என்னப்பா… முடிச்சாச்சா…”
……………………………
“அனுப்பி வை…”

நிலைகுலைந்த பறவை
நிலம் நோக்கி வீழ்ந்து
விழி மூட….
விழி திறந்தது பிறிதொரு கழுகு…
....................................

“அனுப்பியாயிற்று…”
...............................

சன்னலுக்குப் பின்னால்

முகிலும் இல்லை…
மழையும் இல்லை…

பறவை மட்டும் ஒரு ஓரத்தில்
தவமிருக்கிறது.....

அந்தக் கண்ணாடிக் கூட்டுக்குள்
அடைபட்ட படியே…

மீண்டுமொரு மழைக்காக…

கா.ரமேஷ்
12-08-2009, 05:39 AM
நல்லதொரு கற்பனை தோழரே.... வாழ்த்துக்கள்.

இளசு
12-08-2009, 09:01 PM
வாயுவேகம் மனோவேகம்...

மனோரதம்....


பழைய கல்கி போன்றோரின் நாவல்களில் இவ்வகைச் சொற்றொடர்களைக் காணலாம்..


எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா?
எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா?
மனதோ ஒரு பறவை.... விரிக்கும் அதன் சிறகை...
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

-- கவியரசன் வரிகள் இவை..


செல்வா,

மனப்பறவையை சிட்டு ,கழுகாய் ஈருருவமாக்கி
இந்த எண்ணவோட்டத்துக்கு புதிய பரிமாணம் தந்தாய்...

அதிலும் கார்மேகம் மோர்மேகமாவது - அட்டகாசம்!

சொற்கட்டும், திரண்ட பொருட்செறிவும்
இக்கவிதைத் தரத்தை உயர்த்திப் பிடிக்கின்றன..


இரசித்தேன்...அசந்தேன்!

வாழ்த்துகள்!

பூமகள்
13-08-2009, 05:15 AM
பெரியண்ணா வியந்த அதே இடங்களை நானும் ரசித்தேன்.

சிறகு விரித்த சிட்டு போலவே சிறிது நேரம் வான் மழையில் நனைந்து குளிர்ந்தது மனம்..

பொருட்செறிவில் கவிதை அசத்துகிறது..

அடிக்கடி செல்வா அண்ணா கவிதை படைக்க எனது வேண்டுகோள்...

இனிய பாராட்டுகள் அண்ணா.. தொடருங்கள். :)

அக்னி
13-08-2009, 06:17 AM
வானம் தொட முனையும் பறவை...
தடுக்கின்றது, கூண்டு...

பறவை பலம் பெற்றால்தான்,
கூண்டு பலமிழக்கும்...
முயல வேண்டியது பறவை...

முயலாவிட்டால்,
பார்வையுடன், ரசிப்புடன், ஏக்கத்துடன்
முடிந்துவிடும் வாழ்க்கை...

பிரபஞ்சம் தாண்டியும் பறக்க ஆசைப்படுவோம்...
(ஆசைதானே... அதை ஏன் கஞ்சமாகக், கொஞ்சமாக ஆசைப்படவேண்டும்..?)
வானம் தொட்டுவிடும் தூரமாகிவிடும்...

முயற்சி,
முதன்மைத் தடைநீக்கி...

பாராட்டுக்கள் செல்வா... தொடர வேண்டும் கவிகள்...

அண்ணலின் பின்னூட்டம் கண்டு, முழுத் தெளிவு கொண்டேன்.
:icon_b: முத்தான, சத்தான பின்னூட்டம்.

அமரன்
13-08-2009, 12:17 PM
வாடா பங்காளி. நல்லா இருக்கியா.

உந்தன் சொல்வண்ணமும் எண்ண வண்ணமும் எந்நேரமும் கன்னம் வைப்பவை.

கதையானாலும் சரி கவிதையானாலும் சரி விமர்சனமானாலும் சரி.. உன் தனித்துவ அடையாளங்கள் செவ்வந்திப் பொழுதொத்த வனப்புடையவை. நீ அடிக்கடி வரவேணும்.. கடிக்குக்கடி தரவேணும்.

நம்ம இயத்திரத்தனத்தை குறைத்து மன அழுத்தத்தை நீக்கி உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தரும் வல்லமை ரசனை மிகுந்த ஒற்றை நொடிக்கு உண்டு. அந்த ஒற்றை நொடிக்குத் தவமிருப்போர் ஏராளம். ஒற்றை நொடி கொடி போல் நீள ஆசைப்படும் மனம் தான் வில்லனாகவும் செயற்படும். இந்தப் பாழாய்ப்போன மனசுதான் ஒளிப்பறவையாகாவும் புகைப்பறவையாகவும் பரிணமிக்கும் சக்தி கொண்டதாச்சே. இருந்த இடத்தில் இருந்தபடியே எல்லை அற்றுப் பறக்கூடியதாச்சே.

பொருள் பொதிந்த கவிதை.. பாராட்டுகள் பங்காளி.

கலைவேந்தன்
14-08-2009, 08:44 AM
கற்பனைச்சிறகுகள் மேலெழும்பிப்பறக்கையில் யதார்த்த நூல் நம்மைத் தரையில் இழுப்பது விசித்திரமான வினோதம்தான்.

யதார்த்த வாழ்வின் இயந்திரத்தனங்களுக்கு இந்த கற்பனைச்சிறகுகளே தற்கால மோட்சம் அளிக்கின்றன.

அருமையான உருவகக்கவிதை நண்பரே...!

பாராட்டுக்கள்...!

செல்வா
14-08-2009, 01:50 PM
நல்லதொரு கற்பனை தோழரே.... வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுக்கு நன்றி இரமேஷ்.

செல்வா
14-08-2009, 02:01 PM
இரசித்தேன்...அசந்தேன்!

வாழ்த்துகள்!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா....
பல நாட்களுக்குப் பின் எழுதிய கவிதை...

பணியிடத்திலிருக்கும் போது
வெளியே பெய்த மழையில்
நனைய இயலா ஏக்கத்தில்
எழுந்தது...

செல்வா
14-08-2009, 02:27 PM
அடிக்கடி செல்வா அண்ணா கவிதை படைக்க எனது வேண்டுகோள்...

இனிய பாராட்டுகள் அண்ணா.. தொடருங்கள். :)

மன்றக் கவிதாயினியின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி...

நானும் தான் நிறைய எழுதணும்னு நெனக்கிறேன்... :)

பாராட்டுக்கள் செல்வா... தொடர வேண்டும் கவிகள்...


ஊக்கப் பின்னூட்டத்திற்கு மிக்கநன்றிடா நண்பா...
பொருள் பொதிந்த கவிதை.. பாராட்டுகள் பங்காளி.

நன்றிடா பங்காளி....

உன்னிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்தான் நான் இன்னும்.


கற்பனைச்சிறகுகள் மேலெழும்பிப்பறக்கையில் யதார்த்த நூல் நம்மைத் தரையில் இழுப்பது விசித்திரமான வினோதம்தான்.

யதார்த்த வாழ்வின் இயந்திரத்தனங்களுக்கு இந்த கற்பனைச்சிறகுகளே தற்கால மோட்சம் அளிக்கின்றன.

அருமையான உருவகக்கவிதை நண்பரே...!

பாராட்டுக்கள்...!

கவிதையின் கருவை இருவரிகளுக்குள் கொணர்ந்து வி்ட்டீர்கள்...

மிகுந்த நன்றி அண்ணா...