PDA

View Full Version : உன்னிடம் பிடிக்காதது...



சசிதரன்
10-08-2009, 08:19 AM
உன்னிடம் எது பிடிக்காதென்று
கேட்டுக் கொண்டேயிருக்கிறாய்.
உன் தொல்லை தாங்காமல்தான்
இதனை எழுதுகிறேன்....

ஆவலாய் வரும் மழைக்கு
முகம் காட்டாமல்
குடை கொண்டு முகம் மறைப்பாயே..
அது பிடிக்காது.

கூந்தல் கலைக்கும் தென்றலை
நீ செல்லமாய் திட்ட..
அது உலகில் எங்கோ புயலாய் வீசும்..
அது பிடிக்காது.

தோட்டம் முழுக்க பூக்கள் இருந்தும்...
ஒற்றை ரோஜா மட்டுமே சூடிக் கொள்வாய்.
பூந்தோட்டமே மறுத்துவிட்டதால்...
மற்ற பூக்கள் மனம் கலங்குமே...
அது பிடிக்காது.

என் உறக்கம் ரசிப்பதற்க்காய்..
உன் உறக்கம் தொலைத்து..
விழித்திருப்பாயே...
அது பிடிக்காது.

நான் வாய் திறந்து கேட்கும் முன்பே
அத்தனையும் அள்ளி தந்து..
அடுத்து என்ன...
என்பது போல் பார்ப்பாயே...
அது பிடிக்காது.

சின்ன சின்னதாய் வம்பிழுத்து...
பொய்யாய் நான் கோபம் கொண்டாலும்...
பட்டென்று முகம் வாடி...
என் கோபம் கொன்று விடுவாயே...
அது பிடிக்காது.

இப்போதும் கூட இதை படித்ததும்...
"சீய்.. போடா" வை எனக்கு தந்துவிட்டு..
முத்தத்தை காகிதத்திற்கு கொடுப்பாயே...
அது சுத்தமாய் பிடிக்காது.

கா.ரமேஷ்
10-08-2009, 10:27 AM
உங்கள் வரிகளில்,காதலில் தபூசங்கரின் சாயலை காண முடிகிறது...

வாழ்த்துக்கள்...

சுகந்தப்ரீதன்
10-08-2009, 02:54 PM
என்னிடன் பிடிக்காதவற்றை
நீ சொல்லி முடித்த கணத்தில்தான்
எனக்கு தெரிந்தது - எனக்கு
பைத்தியத்தை பிடித்திருக்கிறதென்று...!!

-அப்படின்னு அவங்க சொல்லாத அளவுக்கு அடக்கி வாசிங்க சசி....??!! உங்களுக்கு பிடிக்காதவைகளை பார்த்தாலே தெரியுது உங்களுக்கு ஏதோ பிடிச்சிருக்குன்னு...!! வாழ்க பைத்தியம்... வளர்க வைத்தியம்..!!

அக்னி
10-08-2009, 03:13 PM
பிடித்தனவெல்லாம் பிடிக்காததாய் மாறுவதும்,
பிடிக்காததெல்லாம் பிடித்ததாய் மாறுவதும்,
பிடித்தால் மட்டுமே சாத்தியம்...

எனக்கும் பிடித்திருக்கின்றது.., கவிதையைச் சொல்கின்றேன்...

பாராட்டுக்கள் சசிதரன்...

இளசு
10-08-2009, 07:51 PM
அன்பு சசி...

காதலி ஒதுக்கிய தென்றல்..
பூமியில் வெறெங்கோ புயலாகவா???????

தற்குறிப்பேற்ற அணியின் உச்சம் இது!



பிடித்தனவெல்லாம் பிடிக்காததாய் மாறுவதும்,
பிடிக்காததெல்லாம் பிடித்ததாய் மாறுவதும்,
பிடித்தால் மட்டுமே சாத்தியம்...

எனக்கும் பிடித்திருக்கின்றது.., கவிதையைச் சொல்கின்றேன்...



எனக்கும் பிடித்திருக்கிறது...
சசியின் கவியும்
அக்னியின் ஊட்டமும்!

நேசம்
11-08-2009, 06:01 AM
பிடிக்காது என்று பிடித்ததை எல்லாம் அழகாக சோல்லிவிட்டிர் சசி.வாழ்த்துகள்.
அகினியின் பின்னூட்டமும் அருமை

அமரன்
11-08-2009, 09:13 AM
ஒரு
பேச்சுக்குத்தானே கேட்டேன்
என்ன பிடிக்காதென்று..

இப்படிப்
பிடி பிடி என்று பிடித்து
பிடிப்பு வரச் செய்து விட்டாயே
பிடிக்காதவற்றில்..
--------------
காதல் கெஞ்சும்
உன் கவிதை வரி கேட்டு..

பாராட்டுகள் சசி.

அக்னியின் பின்னூட்டமும் அருமை.

செல்வா
11-08-2009, 03:21 PM
சசிதரனின் வரிகள் எப்போதுமே வசீகரிக்கக் கூடியவை...

இந்தக் காதல் வரிகள் என்னை வியப்பிலாழ்த்துகிறது..

மிக அருமை...

இளசு அண்ணா சுட்டிய தற்குறிப்பேற்ற அணி.... ஆஹா...

வாழ்த்துக்கள்.

கலைவேந்தன்
11-08-2009, 03:39 PM
இதமான காதல்கவிதை....!

பிடிக்காதென்று சொல்லப்படும் ஒவ்வொரு விஷயமுமே உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவதாய் இருப்பதே கவிதையின் வெற்றி...!

மனம் நிறைந்த பாராட்டுக்கள் சசிதரன்...!

சசிதரன்
11-08-2009, 03:59 PM
ஊக்கமளித்து பாராட்டிய அன்பு சொந்தங்களுக்கு மிக்க நன்றி...:)

சசிதரன்
11-08-2009, 04:01 PM
நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் பின்னூட்டம் பெறுகிறேன் அக்னி அண்ணா... அருமையான பின்னூட்டம் தந்து வாழ்த்தியமைக்கு நன்றியண்ணா...:)

மஞ்சுபாஷிணி
11-08-2009, 04:27 PM
அழகான காதல் கவிதை... பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு பிடிக்காததுன்னு சொன்ன கவிதை பிடிச்சிருக்கு நன்றி சசிதரன்...

வெற்றி வாசன்
11-08-2009, 06:04 PM
சசி அவர்களே உங்களுக்கு என்ன பிடிகாது என்று சொன்ன இந்த கவிதை எங்களுக்கு ரொம்ப பிடித்து விட்டது.
மனம் கவர்ந்த வரிகள்
"கூந்தல் கலைக்கும் தென்றலை
நீ செல்லமாய் திட்ட..
அது உலகில் எங்கோ புயலாய் வீசும்..
அது பிடிக்காது."

வெற்றி வாசன்
11-08-2009, 06:07 PM
தமிழே தகராறு என்று கூறி அறிமுகம் ஆன மஞ்சுவா இது.
தமிழ தகராறுடன் இருக்கும் போதே இத்துணை மனம் கவர வரிகள் என்றால்
உங்கள் தமிழுடன் ஆன தகராறு என்றும் தொடர வாழ்த்துக்கள்.
--மன்னிக்கவும், இது சசியின் கவிதை, திரியின் கட்சி பதிப்பாளர் மஞ்சுவின் கவிதை என்று கண்டதால் இந்த தவறு. திரியை அழிக்க முடியாத காரணத்தால் திரித்து விட்டேன்.

வானதிதேவி
10-09-2009, 11:54 AM
இந்த பேதையையும் சற்றே பொறாமை பட வைக்கும் தங்கள் காதலி அழகு இல்லை இல்லை தங்கள் கவி அழகு.

பாரதி
10-09-2009, 12:55 PM
கவிதை நன்று சசி.