PDA

View Full Version : வித்தியாசமான ஊடகத்துறை



ரங்கராஜன்
08-08-2009, 05:04 PM
வித்தியாசமான ஊடகத்துறை

சேனலில் சேர்ந்து இன்றுடன் பல நாட்கள் ஆகிவிட்டது, இன்று வேலை முடித்து சீக்கிரம் வீட்டிற்கு வந்து விட்டேன். என் தாய் மன்றத்தை பார்க்க, தினமும் இரவு எத்தனை மணி ஆனாலும் மன்றத்தை ஒரு
பார்வையாவது பார்த்துவிட்டு தான் படுப்பேன். இன்று எதோ ஒரு மூடில் எழுத அமர்ந்து விட்டேன், அமர்ந்த பின் தான் எதை பற்றி எழுதுவது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. தொடங்கியாச்சு அதனால்
எதாவது சொல்லி விடுகிறேன். ஆனால் சொல்ல பல விஷயங்கள் இருக்கிறது, ஆனால் என் வாய் கட்டப்பட்டு இருக்கிறது, சேனலில் சேர்ந்ததும் எங்களை பார்த்து அவர்கள் சொன்ன முதல் வார்த்தை சேனலுக்கு சொந்தமான எந்த செய்திகளும் வெளியில் கசியவிடக்கூடாது என்பது தான், ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். இதற்கு பேசாமல் அவர்கள் என் நாக்கை அறுத்து இருக்கலாம், ஹா ஹா பல சுவாரஸ்யமான விஷயங்களை மனம் சொல்ல துடித்தாலும், இந்த ஒப்பந்தம் என்னை தடுக்கிறது. அதனால் பட்டும் படாமலும் சில விஷயங்களை சொல்கிறேன்.

இந்த துறையை ஏன் இத்தனை நாள் நான் கவனிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன், எனக்கு ஏற்ற தொழில் இது, ஏன் என்று தெரியவில்லை, ஆனால் எனக்கு ஏற்ற தொழில் இது. வேற வேலையில் இருக்கும் பொழுது வெளி விஷயங்களை பற்றி தெரிந்துக் கொள்ள தனியாக கொஞ்ச நேரம் செலவு செய்யவேண்டும், ஆனால் இதுவே தொழிலாக போனதால் எனக்கு இந்த வேலை ரொம்ப பிடித்து இருக்கிறது. நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் இருக்கிறேன். நகர செய்திகள் முதல் உலக செய்திகள் வரை விரல் நுனியில் வைத்து இருக்கவேண்டிய வேலை என்பதால் சவாலாக இருக்கிறது, (என்ன,... ஞாபக சக்தி தான் இல்லை என்னிடம்). என்னுடன் பணிபுரிகிறவர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் குணாதிசியம் உடையவர்களாக இருக்கிறார்கள் ஆனால் உலக அறிவில் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதாக இருக்கிறார்கள்.

தினமும் 11 தினசரிகளை படிக்க சொல்கிறார்கள், படித்து முடிக்கவே மாலை ஆகிவிடுகிறது, ஒரு முறை மாலை நேரத்தில் படித்துக் கொண்டு இருக்கும் பொழுது

“இந்நேரம் செய்தியே மாறி இருக்கும் அதை ஏன் இவ்வளவு சீரியஸாக படிக்கிறாய்” என்று என்னை பார்த்து சிரிக்கிறார் நியூஸ் டிப்பார்ட்மேண்ட் chief. அவரை பார்த்து அசடு வழிந்தபடி பேப்பரை மடித்து வைப்பேன். சேர்ந்த இரண்டாவது நாள் ஒரு கார் ஒரு காமிராமேன் கொடுத்து போய் ஒரு ஸ்டோரி எடுத்துக் கொண்டு வா என்று அனுப்பிவிட்டார்கள், எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. முகம் எல்லாம் வியர்த்து விட்டது, காமிராமேனை பார்த்தேன்

“எங்க சார் போகனும்” என்று என்னை பார்த்துக் கொண்டு நின்றார்கள் டிரைவரும், காமிராமேனும். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, மறுபடியும் என் பாஸிடம் சென்று என்ன எடுக்க வேண்டும் என்று கேட்டேன், இது டிரைனிங் தானே எதாவது எடுத்துக் கொண்டு வா என்றார். ரூமை விட்டு வெளியே வந்தேன், இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.

நான் எங்கப்போவேன்,....... யாரை பேட்டி எடுப்பேன்,........ எதைப்பற்றி பேட்டி எடுப்பேன்,....... ஒரு எழவு புரியவில்லை, ஒழுங்கா எனக்கு தெரிந்த வேலையையே பார்த்து இருக்கலாம். இந்த லீலுமாவை முதலில் போய் வெட்டனும் அவ தான் நிறைய உசுப்பேத்தி விட்டாள், இது உனக்கு ஏத்த தொழில் இதில் நீ கிழித்து விடுவாய் என்று சொல்லியே இந்த வேலையில் என்னை சேரவைத்தாள். இப்ப யோசித்து என்ன பிரோஜனம், சரி எதாவதை எடுப்போம் என்று நினைத்து காரை அங்கையே விட்டுவிட்டு வாக்-ஸ்பாப் (ஒரே விஷயத்தை பற்றி பல மக்களிடம் கருத்து கேட்பது) மாதிரி எதாவது எடுக்கலாம் என்று நினைத்து, காமிராமேனுடன் பக்கத்து தெருவுக்கு நடந்தே சென்றேன்.
நான் பார்த்த முதல் வேலை காமிராவின் டிரைப்பாடை தூக்கியது (கெளரவமாக தான் இருந்தது), என்ன தலைப்பை பற்றி கேட்கலாம் என்று ஒரே குழப்பம். சரி ஒரு தலைப்பு யோசித்தேன், கூட்ட நெரிசலான இடத்தை நோக்கி சென்றோம். அதற்கு முன் ஒரு நிழலில் காமிராமேன் எனக்கு சில பாடங்களை எடுத்தார்.

காமிராமேன் ஆரம்பித்தார் “சார் இதுக்கு முன்னாடி எந்த டிவியில் இருந்தீங்க”

“இல்லங்க புதுசு”

“புதுசாஅ........., எந்த காலேஜ்ல படிச்ச”

“பொறியியல் கல்லூரியில் படிச்சேன்”

“கிழிச்சது போ”

“நீ ஜர்னலிஸ்டு இல்லையா”

“இல்லை” என்று தலை ஆட்டினேன்.

“சரி விடு நான் கத்து தரேன் பயப்படாதே, தம் அடிப்பீயா”

“ம்ம்ம்ம்”

“இதுக்கு மட்டுமாவது ம்ம்ம் சொன்னீயே” இருவரும் சிரித்தோம்.

பிறகு எப்படி பேசவேண்டும், மைக்கை எப்படி பிடிக்கவேண்டும், எவ்வளவு தூரத்தில் பிடிக்கவேண்டும், எப்படி ஆரம்பிக்க வேண்டும், என்று சில விஷயங்களை ஐந்து நொடியில் வேகமாக சொல்லி முடித்தார், ஒரு எழவு புரியவில்லை. கூட்ட நெரிசலான இடங்களில் வேண்டாம் ஒவ்வொரு மக்களா தனியா கூப்பிட்டு பேட்டி எடுக்கலாம் என்று கூறினேன். ஏன் என்றார் காமிராமேன், வெட்கமா இருக்கு
சார் என்றேன், டேய் உன்ன அவங்க கிட்ட பேச மட்டும் தான் சொன்னாங்க, வேற எதுவும் பண்ண சொல்லலை எதுக்கு வெட்கபடற என்று சிரித்தார். சரி என்று காலையில் பேப்பரில் வந்த செய்திகளை அசைப்போட்டேன் ரயில்வே துறை அமைச்சர் மம்தா அவர்கள் அறிமுகப்படுத்த இருக்கும் சிறப்பு பெண்கள் ரயில் திட்டங்களை பற்றி கேட்கலாம் என்று முடிவு செய்தேன். முதல் முறையாக செய்யப்போகும் வேலை என்பதால் பெண்களை வைத்தே தலைப்பை ஆரம்பிக்கலாம், மங்கலகரமாக இருக்கும் என்று நினைத்தேன். அதுவும் இல்லாமல் ரோட்டில் போகும் பெண்களிடம் தைரியமாக அழைத்து பேசலாம், டிவிக்காரன் இல்லையா????

என்னை தயார் செய்து கொண்டு அந்த கூட்டமான சாலையில் பெண்கள் வருவதற்காக காத்து இருந்தேன், என் நேரம் ஒரு பெண்ணும் காணவில்லை, கொஞ்ச நேரம் கழித்து இஸ்லாமிய மதத்து பெண்கள் முகங்களை மறைத்துக் கொண்டு வந்தார்கள், அவர்களை கேட்கலாம் என்று எண்ணும் பொழுதே, அவர்கள் வேகமாக நடக்க தொடங்கி விட்டனர். தூரத்தில் கல்லூரி பெண்கள் வந்தார்கள், மைக்குடன் நான் நிற்பதை பார்த்து விட்டு அவர்கள் அப்படியே திரும்பி போய் விட்டார்கள். கேமிராமேனை நான் பார்க்க அவர் என்னை பார்த்து

“ஏண்டா கார்பிரேஷனில் நாய் பிடிப்பவன் கையில் சுருக்கு கையிறுடன் நிற்பது போல, மைக்கை வச்சினு நிக்குற. உன்னை பார்த்தாலே பொண்ணுங்க தெரிச்சி ஓடுதுங்க, இப்படி வந்து உக்காரு” என்று சிரித்தார்.

கொஞ்ச நேரம் கழித்து வந்த ஒரு மருமகளையும் மாமியாரையும் மடக்கினேன், விஷயத்தை சொன்னேன், அவர்கள் கேட்ட முதல் கேள்வி

“ஆரு அந்த அம்மா (மம்தாவை)”

“ரயில்வேதுறை அமைச்சர்”

“மந்திரியா?”

“ஆமாம், ரயிலுக்கு எல்லாம் அந்த அம்மா தான் முதலாளி மாதிரி”

“ஓ அப்படியா” என்று சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தாள், அந்த திட்டத்தை அவள் மனதார வரவேற்பதாக சொன்னாள். அப்புறம் சிலரிடம் இதே போல கேட்டு விட்டு வந்தேன். நான் சொல்லவேண்டிய முடிவுரைக்கு 15 முறை ரீடேக் எடுத்தேன், ஒரு வழியாக முடித்து விட்டு ஆபிஸில் போட்டு காண்பித்தேன். எல்லாரும் ஒருமித்த குரலில் காறித்துப்பினார்கள். நிறைய டெக்னிக்கல் மிஸ்டேக் இருந்தது, ஒரு அக்ரிணையை பார்ப்பது போல என்னை பார்த்தார்கள். ரொம்ப அவமானமாக இருந்தது, கோபமாக வந்தது. வெளியே போய் பிரியாணி சாப்பிட்டு விட்டு வந்தேன், கோபம் கொஞ்சம் குறைந்தது. இந்த துறையில் கத்துக்க நிறைய விஷயம் இருக்கு. அதனால் இந்த துறை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது.

அங்கு இருப்பவர்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமானவர்களாக தான் இருக்கிறார்கள், விக்ரம் அண்ணா மற்றும் மன்ற உறவுகள் சொன்ன அறிவுரைப்படி தான் நடந்துக் கொண்டு வருகிறேன், அவை ரொம்ப உபயோகமாக இருக்கிறது. அங்கு இருப்பவர்கள் எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானவர்களாக இருக்கிறார்கள், எல்லா துறையிலும் இப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது, ஆனால் ஊடகத்துறையில் எல்லாரும் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறார்கள்.

சில உதாரணங்கள்.

என்னுடன் இருக்கும் சீனியர் ரிப்போர்ட்டருக்கு வயது 39 ஆகிறது, பார்க்க 20 வயது மாதிரி இருக்கிறார். ரொம்ப நெருக்கமாக பழகுகிறார். அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதாம், கல்யாணம் ஆன மாலை அவருடைய மனைவி வேறு ஒருத்தனுடன் ஓடிவிட்டாளாம், சிரித்துக் கொண்டே சொல்கிறார். அதில் இருந்து கல்யாணம் என்றாலே பயமாக இருக்கிறதாம்.

இன்னொருவர் இருக்கிறார், தன் மனைவியுடன் பேசி பல வருடங்கள் ஆகிறதாம், ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் ஆனால் பேச்சுவார்த்தைகள் இல்லையாம், குழந்தையும் இல்லையாம். சண்டைக்கு காரணமாக அவர் சொல்வது அவருடைய மனைவி ஒரு நாயை வளர்க்கிறாராம், அதனுடன் கொஞ்சிக் கொண்டே இருக்கிறாராம், இவருக்கு நாய் என்றாலே அலர்ஜியாம், அதனால் அவர் மனைவியின் பக்கமே போவது இல்லையாம், பல ஆண்டுகளாக.

இன்னொரு பெண் எடிட்டர் இருக்கிறார், தனியாக 14 வயது பெண்ணுடன் இருக்கிறார், அவரிடம் கணவனை பற்றி கேட்டால் பொறிந்து தள்ளிவிடுகிறார், (நான் கேட்கவில்லை, மற்றவர்கள் கேட்கிறார்கள்) விவாகரத்து ஆனவர்.

40 வயதான பிம்மச்சாரி, மற்றும் பத்து வார்த்தை பேசினால் அதில் 9 அவரை பற்றியே பேசிக்கொள்ளும் புரோடக்ஸன் ஹேட், மற்றும் 18 வயதில் திருமணம் செய்துக் கொண்ட காமிராமேன் இன்னும் வித்தியாசமான நபர்கள் இருக்கிறார்கள் அந்த இடத்தில். எல்லார் வாழ்க்கையிலும் ஒரு சோகம் இருக்கிறது, ஆனால் அனைவரும் வேலையில் சூப்பராக இருக்கிறார்கள். வித்தியாசமானவர்கள் எல்லா இடங்களிலும் எல்லா துறைகளிலும் இருப்பார்கள். ஆனால் வித்தியாசமானவர்கள் மட்டுமே இருப்பதாக இருக்கிறது இந்த ஊடகத்துறை,,,,,,,,,,,,,,,,,,, ஏன்????????

பாலகன்
09-08-2009, 02:15 AM
அது ஏன்னா நேரம் காலம் பார்க்காமல் வேலைசெய்வதால் வீட்டாரின் எண்ணங்களுக்கு ஏற்ப அவர்களால் நடந்துக்கொள்ள முடியவில்லை என்று நான் கருதுகிறேன் தக்ஸ்

இளசு
09-08-2009, 07:42 AM
வாங்க தக்ஸ்...

ஒருமித்த குரலில் காரித்துப்பினார்கள் - இந்த வரியில் தெரிகிறது
உங்கள் மனமும் எழுத்து வளமும்!


சித்தாள் வேலை முதல் பயிற்சி மருத்துவர் வரை
பட்டாசு கம்பெனி முதல் நாசா வரை -

முதல் தினங்கள் மிக சுவாரசியமானவை..

அதை மிகச் சுவாரசியமாய்ச் சொல்ல சிலருக்குத்தான் இயலும்..

அப்படிப்பட்ட சிலர் ஊடகத்துறையில் இருப்பதில் வியப்பென்ன?

அமரன்
09-08-2009, 11:07 AM
வாங்க மூர்த்தி.

ஊடகவியலாளர்கள் வித்தியாசமானவர்களா.. இல்லவே இல்லை... அவர்கள் முகமூடிக்குள் பதுங்கிக் கொண்டவர்கள்.

தனிப்பட்ட வாழ்க்கையையும் துறை சார்ந்து அணுகுவதால் ஏற்படும் குழப்பத்தை கச்சிதமாக ஒரு முகமூடிக்குள் மறைப்போரே வித்தியாசமாகத் தம்மைக் காட்டிக்கொள்கின்றார்கள்.

என்னைப் பொறுத்தவரை ஊடகவியலாளர்களின் சிந்தனை, பார்வை வித்தியாசமானதே தவிர அவர்களல்ல.

தட்டுத் தடுமாறி நீங்கள் எடுத்து வைச்ச முதலடி உங்களுக்கு முதலடியைத் தந்திருக்கு. இதுவே நீங்கள் எடுத்து வைக்கும் அடுத்த அடிகளுக்கு அடிப்படை. துறையில் உங்கள் பேர் அடிபட உசாத்துணை. வாழ்த்துகள்.

ஓவியன்
09-08-2009, 11:37 AM
வாங்க தக்ஸ்,

ஊடகத்துறையென்றில்லை எல்லாத் துறையிலும் பயிற்றுனராக இருக்கையில் இது போன்ற பல சிக்கல்களும் சிரமங்களும் வழமைதானே...
உங்களுக்கென்றாலும் பரவாயில்லை, ஒரு புகைப்படப் பிடிப்பாளரையும் வாகனத்தையும் தந்து அனுப்பியிருந்தாங்க, எனக்கு என்னுடைய முதலாவது பணியில் அமீரகத்தில் உட்கார ஒழுங்கான நாற்காலி கூட தராமல், ஒரு கணினி தராமல் கணினியால் செய்ய வேண்டியவற்றை கணினியின்றி செய்யுமாறு என் மேலாளர் என்னைப் பணித்திருக்கிறார். ஏனென்று கேட்டதெற்கெல்லாம் பயிற்சியில் தானே இருக்கிறாய் பழகென்பார்கள்...

மற்றைய சக பணியாளர்கள் சிரித்த சிரிப்புக்கள் இருக்கே அவற்றை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது...

அவமானம் மட்டுமல்ல அவர்களைக் கிழித்துப் போடுமளவுக்கு ஆத்திரம் முட்டியிருக்கிறது, அந்த ஆத்திரம் கோபம் எல்லாவற்றையும் திரட்டி வேலையில் காட்டியதால் ஒரு வருட காலத்தினுள் அந்த மேலாளர் இருந்த பதவியில் நானமரும் நிலையே எனக்குக் கிட்டியது தக்ஸ். அன்று ஒழுங்கான நாற்காலி இல்லாமல் நானிருந்த போது சிரித்தவர்களது இருப்புக்களையே நான் தீர்மானிக்கும் நிலையே வந்திருக்கிறது...

அதனால் ஆரம்பத்தில் அவமானங்கள் சகஜம்தான், மனம் தளராதீங்க, உங்கள் கோபங்களையெல்லாம் வேலையில் காட்டுங்க, உங்களைப் பார்த்துக் காறித் துப்பியவர்கள் வியந்து பார்க்கும் நிலை வரும், வரவேண்டும்..!!

வாழ்த்துகள்..!!

நேசம்
09-08-2009, 12:02 PM
ஒவியன் சொல்வது போல் எல்லா துறைகளிலும் இது போன்ற ச்சுழ்நிலைகளை சந்திக்க கூடிய நிலைமை வரும்.நிச்சயமாக உங்களுக்கு ஏற்ற துறைதான்.இதில் நல் வளர்ச்சி தக்ஸ்க்கு உண்டு என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு
வாழ்த்துகள்....

samuthraselvam
10-08-2009, 04:32 AM
அண்ணா உன் அனுபவத்தை பார்க்க நான் நேரில் இல்லாமல் போய்விட்டேனே.... பார்த்திருந்தால் நானும் கொஞ்சம் சிரித்திருப்பேன்...
ம்ம்ம்ம்....ஹா ஹா..... சும்மா....

இன்றைய அவமானங்கள் நாளைய வெகுமானங்கள்....

புதுசில்ல.. அப்படி தான் இருக்கும்.... இன்னும் கொஞ்சம் நாள் போனா சரியாகிடும்.... வாழ்த்துக்கள் அண்ணா ...

கா.ரமேஷ்
10-08-2009, 06:19 AM
வாங்க தக்ஸ்...
எல்லா துறைகளிலுமே புதியவர்கள் தவறு செய்வதும் பழகியவர்கள் கேலிசெய்வதும் இயல்புதான் மனம் தளராதீர்கள் அவர்களே வியக்கும் அளவுக்கு ஒரு நாள் இருக்கும்போது இந்த கேலியெல்லாம் பறந்து போய்விடும்...

தத்தி தத்தி குழந்தை நடந்தால்தான் அழகு...

அதனால் தவறு தப்பில்லை கற்றுக்கொள்ளுங்கள்...

ரங்கராஜன்
10-08-2009, 04:11 PM
நன்றி மன்ற உறவுகளே

என் சொந்தங்களாகிய உங்களின் அறிவுரைகளில் உண்மை இருந்தது, உங்கள் அனைவரின் வார்த்தைகள் தான் எனக்கு ஊக்கமாக இருக்கிறது, இந்த மன்றத்தில் சேருவதற்கு முன் நான் எப்படி இருந்தேன், இப்பொழுது என்னுள் பல மாற்றங்கள், கோபம் குறைந்து இருக்கிறது, விஷயங்களை பல கோணங்களில் பார்க்க கற்றுக் கொண்டு உள்ளேன், சகிப்புத்தன்மை அதிகரித்து வருகிறது. மன்றத்துடன் சேர்ந்து நானும் வளர்கிறேன், மன்றத்து உறவுகளின் டிரைனிங் தான் நான் இந்த துறையில் காலடி வைக்கவே காரணம். திட்டு வாங்கினாலும் பரவாயில்லை, நான் இந்த துறையில் தான் இருப்பேன், நீடிப்பேன், சாதிப்பேன். எனக்கு இந்த துறை மிகவும் பிடித்து விட்டது. இங்கு என் மேல் அதிகாரிகள் சொன்ன சில வார்த்தைகள் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

1) பிளேடில் கூட நடக்கலாம், நீ நத்தையாக இருந்தால்

2) சுற்றுலாக்கு தான் சோறு கட்டி தர முடியும், யாத்திரைக்கு முடியாது.

3) படித்து உருவாவது பத்திரிக்கையாளன் அல்ல, பார்த்து உருவாவது தான் பத்திரிக்கையாளன்.

எனக்கு இந்த துறையில் நாம் படிக்கவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மை இருந்தது. ஆனால் என் சேனலில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் எல்லாரும் பத்திரிக்கைதுறையை படிப்பாக எடுத்து படிக்காதவர்கள் என்று தெரிந்தவுடன் உற்சாகம் பொங்கியது................ நன்றி உறவுகளே ஐ லவ் யூ ஆல்

மதி
11-08-2009, 03:39 AM
கலக்குப்பா.....!! தக்ஸ்..

செல்வா
11-08-2009, 03:41 AM
வாழ்த்துக்கள் தக்ஸ்...

தாமரை
11-08-2009, 04:27 AM
இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க தக்ஸ்...

நம்ம வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.

குழந்தையாய் இருந்தப்ப கையை அசைச்சாலே என்னமா டாடா காட்டறான் பாரேன் என்று சொல்லி கைதட்டி உற்சாகப்படுத்திய சூழ்நிலையில் இருந்து..

வளர்ந்தவர்களின் உலகத்தில் புதுக்குழந்தை..

நமக்குக் கிடைக்கிற பாராட்டுகளும் சரி, திட்டுகளும் சரி.. அதுவும் ஒரு செய்தி மாதிரிதான். அதிலும் சில நல்லவைகள், சில கெட்டவைகள் இருக்கும். தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்வது மனசை இலேசாக்கும்.

மக்களுக்குச் சுவையான, உபயோகமான ஒரு விஷயத்தைத் தரணும், அதுதான் இப்ப உங்க இலட்சியம் இல்லையா?

எல்லோரும் பத்திரிக்கைச் செய்திகள், ஊடகச் செய்திகள் என பல் விஷயங்களைப் படிக்கிறோம். ஆனால் சிலருக்கு மாத்திரம் எல்லா விசயங்களும் தெரிஞ்சிருக்கு இல்லையா?

கீழே நான் எழுதி இருப்பதை உங்க மனசு உங்களுக்கு சொல்லி இருப்பதா நினைச்சு படிங்க.. உங்க மன்சோட பேசுங்க..

இப்போ நாம் 2012 விவாதம் செய்தோமே ஞாபகம் இருக்கா.. ? அது மாதிரிதான்..

நீங்கள் படிக்கிற செய்திகளில் இது ஆழமா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் என சிலவற்றை ஒரு டைரியில் எழுதிக்கணும்... ஒருநாளைக்கு ஒண்ணோ ரெண்டோ போதும்..

அதுக்கப்புறம், அகோரிகள், 2012 க்கு செய்த மாதிரியே ஆழமா அதைப் பற்றி மாத்திரமே படிக்கணும்.

படிக்கப் படிக்க நமக்குள்ளேயே பல கேள்விகள், பதில்கள் கிடைக்கும்..

இப்போ அதில் சில கேள்விகள் மிக மிக அத்தியாவசியக் கேள்விகளாக இருக்கும். சில பதில்கள் மிக மிக அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைகள் இருக்கும்.

அதன் பின்னால் தேர்ந்தெடுக்க வேண்டியது இடம்.. இப்போ ரெய்ல்வே பற்றிய கருத்தாய்வை ரெயில்வே ஸ்டேஷனில் எடுப்பதுதானே சரியா இருக்கும்.?

அந்த மாதிரி பொருத்தமான இடம்.. நாம சூரிய கிரகணத்தைப் பற்றி கடற்கரையில் இருந்து சொல்வதை விட பிளானட்டோரியத்தில் இருந்து சொன்னா இன்னும் அதிக விஷயம் கிடைக்கலாம் இல்லையா?

நியூஸ் சூடு ஆறுவதற்குள் அதைப் பரிமாறனும் இல்லையா..?

நம்ம மக்களில் பலபேருக்கு இப்படி ஆழ்ந்து படிக்க வேண்டிய தேவையோ அல்லது அதற்கான நேரமோ இருப்பதில்லை. அதனால் ஊடக நண்பர்கள் அந்தத் தகவல்களை நாம கேள்வி கேட்பவர்கள் மூளையில் நுழைக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு இருக்கு..

இப்போ ரெயில்வே திட்டம் பற்றிக் கேட்டப்ப அந்தத் திட்டம் என்னன்னே பலபேருக்குத் தெரியாது, அதை விளக்கி கருத்து கேட்கணும்னா விடிஞ்சிரும். இல்லையா?

அதற்கு சில சின்ன பிட் நோட்டீஸ் மாதிரி அது சம்பந்தமான தகவல்களை கொடுத்து பின்னால கேட்டோம்னா மனசில பட்டதைச் சொல்வாங்க..

ஒரு விஷயத்தைப் பற்றி தொகுப்பவன் முதல்ல அதை மனசில் செய்யணும். பின்னால் மனிதர்களிடம் செய்யலாம்..

நமக்குள்ள கோடி விஷயங்கள் இருக்கும். அதில் ஒரு சதவிகிதம் கூட நம்மால் மக்களுக்கு கொடுக்க முடியாது,

மனசுக்குள்ள தினம் 5 விஷயங்களை அசை போட்டா வாரத்திற்கு ரெண்டாவது வெளியிடலாம்..

ஒரு நல்ல சமையற்காரனுக்கும் பத்திரிக்கையாளனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

1. பொருட்களின் தரம் (கெட்டுப் போன மீனும் - சில வகைத் தகவல்களும் ஒண்ணு)
2. சரியான அளவு ( இந்த அளவு உப்பு காரம் சுவையா இருக்கும்னு தெரியணும்)
3. பக்குவமாக சமைத்தல் ( அதிகம் சூடு செய்தாலும் தவறு,, சரியா வேகாவிட்டாலும் தவறு)

இதை விட முக்கியம் சமைத்ததை கண்களுக்கும் விருந்தாக அலங்கரித்துப் பரிமாறுதல்..

நமக்கு அடிப்படை எந்த அளவு கைவந்திருக்குன்னு பார்த்திருக்காங்க போல...

விவேகானந்தர் சொன்னாரே..

தனித்திரு.. விழித்திரு.. பசித்திரு

நமக்குதான் அது...

தனித்திரு என்றால் தனியா போய் உட்காந்துக்காதே அப்படின்னு அர்த்தம் இல்லை.. நமக்குன்னு ஒரு தனித்துவம் இருக்கு, அதை நாம புரிஞ்சிகிட்டு அதை வெளிப்படுத்தத் தெரிஞ்சிகிட்டு இருக்கணும்.. நம்மோட தனித்துவம் நமக்குத் தெரிஞ்சிருப்பதுதான் வெற்றியின் முதல்படி..

விழித்திரு... வாய்ப்புகள் கதவை எல்லாம் தட்டாது. அது டவுன்பஸ் மாதிரி.. போய்கிட்டே இருக்கும்.. எந்த பஸ்ஸை புடிச்சா எங்கப் போகலாம்னு நாம தெரிஞ்சிகிட்டு அது வரும் போது மிஸ் பண்ணாம பிடிக்க விழித்திருக்கணும். யாரும் வந்து சொல்லவும் மாட்டாங்க.. பஸ்ஸூம் நமக்காக வெயிட் பண்ணாது.


பசித்திரு.. எப்பவும் மனசில் சாப்பிட்ட திருப்தி இருந்தா அலட்சியம் அதிகமாயிடும். பசியோட இருந்தால்தான் ருசி கூட தெரியும்.. பசியில்லாமல் சிங்கம் வேட்டை ஆடுவதில்லை. பசிக்காமல் ருசிக்கவும் முடியாது புசிக்கவும் முடியாது, சாதிக்க வேண்டும் என்ற ஆசையே இங்கே பசியாகும்... அந்தப் பசியோடு இரு,

சரி, இனி கையில எப்ப கேமிரா எடுத்தாலும் கையில 4 மேட்டராவது ரெடியா இருக்கணும்.. இதான் பிளான் அப்படின்னு நம்ம டீமுக்கு சொல்லி, வண்டியைக் கிளப்பணும் சரியா?

மன்மதன்
11-08-2009, 12:48 PM
வாழ்த்துகள் தக்ஸ்..

ஊடகத்துறையில் உங்களுக்கென தனி பாணி / முத்திரை உருவாக்கிக்
கொள்ளுங்க.. முதல் நாளிலேயே யாருக்கும் அஸைன்மென்ட் கிடைக்காது.
நீங்க பெரியா ஆளா வருவீங்க..

பி.கு : அடிக்கடி பிரியாணி சாப்பிட்டு ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க..

ரங்கராஜன்
11-08-2009, 04:33 PM
நன்றி மதி, செல்வா, ஓவியன், ரமேஷ், மகாபிரபு, இளசு அண்ணா, பாசமலர், நேசம், அமரன்

ஹா ஹா ஹா மன்மதன், கண்டிப்பா பிரியாணி அடிக்கடி சாப்பிடுவேன், ஏனென்றால் பக்கத்திலே தான் அஞ்சப்பர் ஓட்டல் இருக்கு.

தாமரை அண்ணா

உங்களின் தனித்துவமான அறிவுரைகளை ரசித்தேன், சிந்தித்தேன், இனிமேல் கண்டிப்பாக செயல்படுத்துவேன். உங்களின் சமையல்காரன் பத்திரிக்கைக்காரனின் உவமை சூப்பரா இருந்தது, உண்மையும் கூட. என்னுடைய ஹேட் ஒருத்தர் இருக்கிறார், அவரை பார்த்தாலே உங்கள் ஞாபகம் தான் வரும், உங்களை போலவே எல்லா விஷயங்களிலும் அக்குவேற ஆணி வேறாக பிரிப்பார் அவர்..................... நீங்க ஏன் அண்ணா வேற துறைக்கு போனீங்க..............??????????????????????????

ஷீ-நிசி
11-08-2009, 04:55 PM
வாழ்த்துக்கள் தக்ஸ்... எங்கள எல்லாம் எப்ப பேட்டி எடுக்க போறீங்க... ! :)

தாமரை
12-08-2009, 01:08 AM
..................... நீங்க ஏன் அண்ணா வேற துறைக்கு போனீங்க..............??????????????????????????

நான் எப்பவுமே எந்தத் துறைக்கும் போகல தக்ஸ்.. என் பாதையில் குறுக்கிடற துறையில் என்னால முடிஞ்சதைச் செய்யறேன்.. அவ்வளவுதான்...

நானா விரும்பி இதைத்தான் செய்யணும் அப்படின்னு இதுவரை ஆசைப்பட்டுச் செய்யலை..

சிம்பிளா சொல்லணும்னா, மத்தவங்க ஆரம்பிச்ச திரிகளில்தான் என் பங்களிப்பு அதிகமா இருக்கும்.. பார்த்திருப்ப. அதேதான் வாழ்க்கையிலும்.

நானா ஆரம்பிக்கறதை விட தானா வர்ரதில அதிக பங்களிப்பேன். எல்லா இடத்திலயும் ஒரே மாதிரிதான். பொழுதுபோக்கு அதான் ஹாபி.. அதுகூட என் சூழ்நிலைக்கும் வாய்ப்புக்கும் ஏற்ற மாதிரி இருக்குமே தவிர நானா தேடிப் போறது கிடையாது..

அவுட் ஆஃப் த வே போய் நான் நினைக்கறதை சாதிச்சு ஆகணும் என்கிற அந்த ஒரு துடிப்பு என்கிட்ட மிஸ்ஸிங்.

காலம் என் கைகளில் கொடுப்பதை என் முழுக்கவனத்துடன் செய்வது மாத்திரமே எனக்குப் பிடிச்சிருக்கு. நண்பர்கள் கூட அப்படித்தான். எல்லோரும் காலத்தால் என்னுடன் இணைந்தவர்களே. ஒரு வேளை யாராவது வாங்க செய்யலாம்னு கூப்பிட்டா என் 100 சதவிகிதத்தையும் கொடுத்துச் செய்வேன்..


எதையும் மற்றவர்களுக்காகச் செய்யறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு,
அனிருத் சொல்ற மாதிரி சொல்லணும்னா அது என் பிளட்லயே ஊறிங்...

இளசு
13-08-2009, 06:27 AM
விவேகானந்தர் சொன்னாரே..

தனித்திரு.. விழித்திரு.. பசித்திரு



தாமரையின் இப்பதிவில் எத்துறையாளருக்கும் பாடம் உள்ளது..


அருமை தாமரை!

த.ஜார்ஜ்
13-08-2009, 09:17 AM
வாழ்த்துக்கள் தக்ஸ்.
தாமரையின் அறிவுரைகள் உங்களுக்கு பயன் தரும்.
சீக்கிரமே கற்றுக் கொள்ளவும்
உயரிய நிலை அடையவும் வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
13-08-2009, 03:55 PM
வாழ்த்துக்கள் தக்ஸ்..!! உங்களின் தெளிவும் திடமும் நிச்சயம் ஊடகத்துறையில் உங்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்லும்...!! சிறப்பாக தொடரட்டும் உங்கள் மக்கள் சேவைப்பணி..!!