PDA

View Full Version : மின்னஞ்சல் கதைகள் 10 : கொடுங்கள்... பெறுவீர்கள்!



பாரதி
31-07-2009, 12:48 PM
கொடுங்கள்... பெறுவீர்கள்!
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக்கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை தெரிந்தது. நடக்கவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அருகில் இருக்கும் பம்ப்செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்துவிட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச்செல்லவும்."

அந்த பம்ப்செட்டோ மிகவும் பழையதாகஇருந்தது. அந்தத் தண்ணீரை ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்காவிட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவுகூறியது.ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப்பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம்தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அதுதான் மிகப்பெரிய பரிசு, விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்ம திருப்தியை விடப் பெரியசபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால்தான் பெறமுடியும். இதுபிரபஞ்சவிதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்தசந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

கதையை எழுதியவர் : தெரியவில்லை.
நன்றி : மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு.

praveen
31-07-2009, 01:21 PM
உன்னால் முடியும் என்ற படத்தில் சமையல்கார முதியவர் வேலை நேரம் போக மீதி நேரத்தில் மரம் நட்டுக்கொண்டிருப்பாரே, அந்தக்காட்சி கதையை படித்தவுடன் வந்து சென்றது.

இந்தமாதிரி யுனிகோடு தமிழில் தான் கதை வருகிறதா?. (தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள் அண்ணா, நீங்கள் மெனக்கெட்டு தமிழ்படுத்தி இருந்திப்பீர்கள் என்று நினைக்கிறேன், அப்படியே தமிழில் அன்பர்கள் சிலருக்கு அனுப்பி மற்றவர்களும் அறிய செய்யுங்கள்). அவசர உலகில் ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கும் கதை என்றாலும் சிலருக்கு பசுமரத்தானி போல உலகிற்கு என்ன செய்யவேண்டும் என்பதை பதிய வைக்கும் கதை.

பாரதி
31-07-2009, 01:40 PM
அன்பு பிரவீண்,

நான் முன்னதாக சில கதைகளை மொழிமாற்றம் செய்து பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இந்தக்கதையை நான் மொழிமாற்றம் செய்யவில்லை. எனக்கு வந்ததை அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அவசர உலகில் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் இடம் உண்டு என்பதை வலியுறுத்தும் இக்கதைக்கு கருத்தளித்த உங்களுக்கு மிக்க நன்றி.

பாலகன்
01-08-2009, 03:34 AM
நல்லதொரு படிப்பினையை தரும் நீதிக்கதை. ஒவ்வொருவரும் இதுபோல தன்னிடம் உள்ளதில் இருந்து இல்லாதவர்களுக்கு தந்தால் உலகம் நிம்மதியாய் வாழும்.

இறைநேசன்
01-08-2009, 06:25 AM
நல்லதொரு நீதியை சொல்லும் அருமையான கதையை பதிந்துள்ளீர்கள்.

இங்கு குறிப்பிடப்படும் அந்த மனநிறைவுதான் மிக மிக முக்கியமானது. நாம் செய்யும் செயல்கள் குறித்து நம்மனம் நம்மை குற்றம்சாட்டாமல் நடந்துகோண்டாலே போதும்

கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும். அமுக்கி குலுக்கி நன்றாக சரிந்து விழும்படி அளந்துபோடுங்கள். நீங்கள் எந்த அளவில் அளக்கிறீர்களோ அந்த அளவிலேயே உங்களுக்கு அளக்கப்படும்
என்று இயேசுபிரான் சொல்லியுள்ள வார்த்தையை நினைப்பூட்டுகிறது

அமரன்
01-08-2009, 07:44 AM
மனிதர்கள் கண்ணாடியைப் போன்றவர்கள்; ஒவ்வொருவனும் தன்னை மற்றவனில் காணலாம் எனும் அருமையான கருத்தைச் சுமந்து வந்து சேர்ந்த கதை.

மூளை பட்டறிவின் அடிப்படையிலும் செயல்படுத்துகிறது. இதயமோ உணர்வுகளின் அடிப்படையில் செயல்படுத்துகிறது. இரண்டுக்கும் இடையான போட்டியில் எது வென்றுவிடுகிறதோ அதுவே ஒருவனது குணமாக அடையாளப்படுத்தப்படுகிறது.

முந்தய ஏமாந்த அநுபவங்கள், இனியும் ஏமாறக் கூடாது என்ற முன்ஜாக்கிரதையை தோற்றுவித்து விடுகின்றன. அதன் வெளிப்பாடாக அரக்கத்தனமான செயல்களைச் செய்யவேண்டிய நிலைக்குப் பலரும் தள்ளப்படுகின்றனர். குறைந்தபட்சம் தடுமாறுகின்றார்கள்.

இதுபோல் நல்வழிக்கதைகள் மிக மிக அவசியம். நன்றி அண்ணா.

கா.ரமேஷ்
01-08-2009, 11:43 AM
நல்லதொரு நீதிக்கதை பகிந்தமைக்கு நன்றி...

அய்யா
01-08-2009, 01:42 PM
நல்லதொரு படிப்பினையூட்டும் கதை அண்ணா!

மீதிக் கதைகள் வரவிருக்கின்றனவா அல்லது முன்பே பதிந்திருக்கிறீர்களா?

பா.ராஜேஷ்
01-08-2009, 02:47 PM
மிக நல்ல பாடம் புகட்டும் கதை. தங்களுக்கும் தங்கள் நண்பருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

பாரதி
02-08-2009, 03:57 PM
கருத்துகள் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி.



மீதிக் கதைகள் வரவிருக்கின்றனவா அல்லது முன்பே பதிந்திருக்கிறீர்களா?

இதற்கு முன்னர் பெற்ற என்னைக்கவர்ந்த கதைகளை மின்னஞ்சல் கதைகள் என்ற தலைப்பிலேயே தந்திருக்கிறேன் அய்யா. சில படித்த நீதிக்கதைகள் ”படித்ததில் பிடித்தது” பகுதியிலும் தரப்பட்டு உள்ளன.

அவ்வப்போது நல்ல கதைகளை பெறும் போது தருவேன் அய்யா.

இளசு
03-08-2009, 08:04 PM
கொடுங்கள்... பெறுவீர்கள்!
ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. .



ஒரு நீதிக்கதை:

பள்ளத்தாக்கில் விழுந்தவனை தாங்கிக்கொண்டிருந்தது பிடித்திருந்த சிறுகிளை..
விட்டுவிடு அதை; காக்கிறேன் உன்னை - அசரீரீ..


கிளையைக் கைவிடத் தேவை - நம்பிக்கை!

---------------------------------

ஒரு படக்காட்சி:

தேவர்மகன் -

இன்னைக்கு நான் மரம் வைக்கிறேன்..
நாளைக்கு உன் மகன் அதன் பழம் பறிப்பான்..
அதற்குப்பின் அவன் மகன்..
இதெல்லாம் என்ன பெருமையா?
கடமை!

------------------------------

சில செய்திகள் :

பிளாஸ்டிக் பைகளை அருந்தி சரணாலய யானைகள் மரணம்..

துருவம் முதல் இமயம் வரை பனிமண்டலங்கள் உருகல்..

------------------------------------

மிக்க நன்றி பாரதி - பகிர்வுக்கு!

த.ஜார்ஜ்
04-08-2009, 01:38 PM
கடை பிடிக்க வேண்டிய கருத்து கதைவடிவில். நாமே பின்பற்ற தொடங்கலாமே.

கீதம்
11-08-2009, 02:33 AM
இது ஒரு நல்ல நீதிக்கதை. பகிர்ந்துள்ள பாரதி அவர்களுக்கு நன்றி. ஒரு திருமண வீட்டில் நான் கண்கூடாகக் கண்ட காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. விருந்து முடிந்ததும் ஒவ்வொருவராகக் கை கழுவ வந்தனர். ஒவ்வொருவரும் ஒரு குவளை நீரை அண்டாவிலிருந்து முகர்ந்து கை கழுவி விட்டுச் சென்றனர். ஒருவர் மட்டும் கை கழுவிய பின் மீண்டும் ஒரு குவளை நீரை முகர்ந்து அடுத்தவருக்குக் கொடுக்க, அவரும் அப்படியே செய்ய, அதற்குப் பின் வந்த அனைவருமே அந்தச் செயலைப் பின்பற்றினர். ஒருவர் நல்ல மனதோடு துவங்கியதை மற்ற எல்லோருமே தொடர்ந்தது மிகவும் ஆச்சரியத்தையும், நெகிழ்வையும் தந்தது. இதுபோல்தான், தானியங்கிக் கதவுகளை நமக்குப் பின் வருவோருக்காக நாம் பிடித்து நிறுத்துதலும். திரும்பிப் பார்த்தால் அவரும் அடுத்தவருக்காக காத்திருப்பதை காண முடியும். எந்த ஒரு நற்செயலுக்கும் தேவை ஒரு நல்ல ஆரம்பம். அது ஏன் நாமாக இருக்கக்கூடாது?

அக்னி
17-08-2009, 06:21 AM
சிறந்ததொரு படிப்பினைக் கதை.

அதைத் தொடர்ந்த சிறந்த பின்னூட்டங்கள்.

அனைவரும் முழுமையாகப் படிக்கவேண்டிய திரி இது...

பகிர்ந்த பாரதி அண்ணாவுக்கும், பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்...

தமிழ் மகன்
17-08-2009, 07:51 AM
நெஞ்சை தொட்ட கதை, இரண்டு அல்ல பல படிப்பினைகள் கொண்ட கதை. தர்மம் செய்தால் இருப்பது குறைவது விடுமோ என்று அஞ்ச தேவையில்லை, தர்மம் தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும். இது சினிமா பாடல் மட்டும் அல்ல உண்மை.

நன்றி பாரதி அவர்களே எங்கள் மனசாட்சியை உரசிப்பார்க்க வைத்து விட்டீர்கள்

தமிழநம்பி
24-08-2009, 01:00 PM
அரசர் அக்பர் குதிரையில் சென்றபோது ஒரு பழுத்த முதியவர் தென்னங்கன்று ஒன்றை நட்டுக்கொண்டிருந்தாராம்.

அவர்ருகில் சென்ற அக்பர், "முதியவரே, நீங்கள் மிக முதியவராகத் தெரிகிறீர்கள், இந்தத் தென்னங் கன்று மரமாகிக் காய்க்கப் பலகாலமாகுமே! மிகக் குறுகிய காலத்தில் பயன்தரும் வேறு பயிரிடலில் ஈடுபடலாமே!" என்று கூறினாராம்.

அம் முதியவர், 'அரசே, என் தந்தையார் வைத்த கன்றினால் நான் இளநீரும் தேங்காயும் துய்க்க முடிந்தது. நான் வைக்கும் இந்தக் கன்று என் பிள்ளைக்கும் பேரப் பிள்ளைக்கும் பயன்தரும்' என்றாராம்.

அதைக்கேட்ட அரசர் முதியவரின் நல்லுணர்வைப் பாராட்டி அவருக்கு பணமுடிப்பு ஒன்றைப் பரிசளித்தாராம்.

பணமுடிப்பைப் பெற்ற உடனே, அம் முதியவர், 'அரசே, நான் வைத்த தென்னங்கன்று உடனே பலன்தந்து விட்டது' என்று மகிழ்வுடன் கூறினாராம்.

அவருடைய அறிவார்ந்த சொற்களைக் கேட்டு மகிழ்வுற்ற அரசர் இன்னொரு பணமுடிப்பையும் உடனே பரிசாகத் தந்தாராம்.

அதைப் பெற்றுக் கொண்ட முதியவர், 'அரசே நான் இன்று நட்ட தென்னங்கன்று எனக்கு இரண்டு மடங்கு பலன் தந்துவிட்டது' என்று மகிழ்வுடன் சொல்ல, அரசர் அவரை அரண்மனைக்கே அழைத்துச் சென்றுப் பாராட்டிப் பரிசளித்து அனுப்பினாராம்.

தொடக்கப் பள்ளியில் இந்தக் கதையைப் படித்ததாக நினைவு.