PDA

View Full Version : என் வீட்டில்...



இன்பக்கவி
29-07-2009, 12:05 PM
http://www.geotamil.com/pathivukal/images/house_sale_5.png
ஆசையாய் பால் காய்ச்சி
அழகாய் குடி போனோம்...
பார்த்து பார்த்து பக்குவமாய்
கட்டி இருந்த வீடு.....

முன் இருந்த வீட்டில் இல்லாத
வசதிகள்
எங்கள் சந்தோஷத்தை பறிக்கும்
என்று அறியாத சந்தோஷம்
நிலைக்கவில்லை....

அழகாய் புகைப்படங்கள்
அற்புதமான ஓவியங்கள்
எல்லாம் இப்போது
பரனையில்....
மனம் பாரமாய் போனது......

என் குழந்தை...
மழலை குறும்பு செய்தால்
ரசிப்பேன் அன்று...
இன்று எப்போதும் ஒரு கண் அவள் மீது
சுவற்றில் கிறுக்கி விடுவாளோ என்று......
புரியாத மழலை...
புரிந்த நான் அடிக்கும் நிலை.....

நிம்மதியாய் தூங்காதது போன்ற
ஒரு ஏக்கம்....
நடுத்தர குடும்பம் என்றால்
நாங்கள் நடுததெருவில் தானோ.....

காவல்காரன் முதல்
எல்லோருக்கும் பயந்த நிலை......
என்று தான் எங்களுக்கு விடிவு காலம்..

ஆடம்பராமாய் வீடு இல்லை என்றாலும்
அமைதியாய் ஒரு வீடு
நான் ராணியாய்..
என் மகள் இளவரசியாய்.....
சொந்தமாய் ஒரு வீடு....

வாடகை கொடுத்தும்
கொடுக்காத நிம்மதி...
என்றும் நிரந்தரமாய் வேண்டும்....
என் வீட்டில்...

இளசு
29-07-2009, 07:53 PM
புது சோபா வாங்கிவிட்டு
காலை மேலே வைக்காதே என குழந்தைகளை
கண்கொத்திப் பாம்பாய் கொத்தும் பெற்றோர்களைக் கண்டதுண்டு...

கிறுக்காத சுவர், சிதறாத சோற்றுப்பானை, கலைக்காத வீட்டலங்காரம் -
பிள்ளையில்லா அன்னை கண்டு அரற்றும் அவலக்காட்சிகள் சொல்லும்
பழந்தமிழ்ப்பாட்டு ஒன்றுண்டு!

நமக்காக பொருளா?
பொருளுக்காக நாமா?


பாராட்டுகள் கவிதா..

கீதம்
03-08-2009, 05:40 AM
குடியிருப்போரை குறை கூறினார்
வீட்டின் உரிமையாளர்,
'வீட்டை வைத்துக்கொள்ளத்தெரியவில்லையே;
எங்கள் வீட்டைப் பாருங்கள்! அங்கே,
சுவர்களில் வண்ணக்கிறுக்கல்கள் இல்லை;
சன்னல்களில் கீறல்கள் இல்லை;
கதவுகள் கிறீச்சிடவில்லை;
கண்ணாடிகள் உடையவில்லை;
தரையில் பிசுபிசுப்பில்லை;
தண்ணீர்க்குழாய்கள் கசியவில்லை!'
உரைத்தவை யாவும் உண்மையே;
சொல்லத்தவறிய உண்மையொன்றும்
ஒளிந்திருந்தது உள்ளே.
ஆம்;
அவ்விடம் குழந்தைகளும் இல்லை!

aren
03-08-2009, 06:48 AM
கவிதை அழகாக வந்திருக்கிறது.

எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தால் அது வீடாக இருக்காது. அங்கெங்கே கலைந்திருந்தாலே அது ஒரு வீடாக இருக்கும், அதுவும் குழைந்தைகள் இருக்கும் வீட்டில் இப்படி ஏதாவது களேபரம் நடந்துகொண்டிருந்தால்தான் அதை வீடாகக் கொள்ளமுடியும்.

நல்ல கருத்துள்ள கவிதை. இன்னும் கொடுங்கள்.

அமரன்
03-08-2009, 08:01 AM
உடைந்துவிடக் கூடாதென
அன்னை.
உடைந்து விடுகின்றன
குழந்தைகள்..

*********
குழந்தைகள்..
சுவர்களில் கீறும்போதும்
சோபாவில் புரளும்போதும்
நிலங்களில் சுவடுகளைப் பதிக்கும் போதும்
உயிர்பெற்று விடுகின்ற
அந்த உயிரற்ற பொருட்கள்....

அப்போதுதான்
நறுமணம் பரப்புகின்றன
அப்பாவின்
வியர்வைப் பூக்கள்..

கவிதா கட்டிய மாலையில் நண்பர்கள் தொடர்ந்து கோர்த்த முத்துகளுடன் ஜொலிக்கிறது இந்த முத்துமாலை..

அருள்
03-08-2009, 02:07 PM
சொல்லத்தவறிய உண்மையொன்றும்
ஒளிந்திருந்தது உள்ளே.
ஆம்;
அவ்விடம் குழந்தைகளும் இல்லை!

அருமை

நேசம்
04-08-2009, 06:56 AM
இருக்கும் இடம் மாறினால் தான் குழந்தைகளின் குறும்புகளை ரசிக்கலாம்.ஏனென்றால் அவைகள் அப்பொழுது தான் உயிர் பெறுகின்றன.பாரட்டுகள் சகோதரி

இன்பக்கவி
07-08-2009, 07:48 PM
நன்றிகள்...
உங்கள் பாராட்டுகள் தான் இன்று வரை என்னை ஊக்கபடுத்தி வருகின்றது..
நன்றிகள்

கா.ரமேஷ்
08-08-2009, 06:54 AM
ஆடம்பராமாய் வீடு இல்லை என்றாலும்
அமைதியாய் ஒரு வீடு
நான் ராணியாய்..
என் மகள் இளவரசியாய்.....
சொந்தமாய் ஒரு வீடு....
/////////


அழகு வரிகள்...


////குடியிருப்போரை குறை கூறினார்
வீட்டின் உரிமையாளர்,
'வீட்டை வைத்துக்கொள்ளத்தெரியவில்லையே;
எங்கள் வீட்டைப் பாருங்கள்! அங்கே,
சுவர்களில் வண்ணக்கிறுக்கல்கள் இல்லை;
சன்னல்களில் கீறல்கள் இல்லை;
கதவுகள் கிறீச்சிடவில்லை;
கண்ணாடிகள் உடையவில்லை;
தரையில் பிசுபிசுப்பில்லை;
தண்ணீர்க்குழாய்கள் கசியவில்லை!'
உரைத்தவை யாவும் உண்மையே;
சொல்லத்தவறிய உண்மையொன்றும்
ஒளிந்திருந்தது உள்ளே.
ஆம்;
அவ்விடம் குழந்தைகளும் இல்லை!
/////

உடைந்துவிடக் கூடாதென
அன்னை.
உடைந்து விடுகின்றன
குழந்தைகள்..

*********
குழந்தைகள்..
சுவர்களில் கீறும்போதும்
சோபாவில் புரளும்போதும்
நிலங்களில் சுவடுகளைப் பதிக்கும் போதும்
உயிர்பெற்று விடுகின்ற
அந்த உயிரற்ற பொருட்கள்....

அப்போதுதான்
நறுமணம் பரப்புகின்றன
அப்பாவின்
வியர்வைப் பூக்கள்..
/////

அருமையான பின்னூட்ட கவிதைகள்....

செல்வா
14-08-2009, 03:43 PM
நடுத்தர வர்க்கத்து
நகர வாசிகளின் கனவுகளில் ஒன்று..

சொந்தமாய் ஒரு வீடு..

விருப்பம் போல் விளையாடும்

குழந்தையின் மனதை முடக்கி

கைகளைக் கட்டும் போது

காடு மேடாய் நடந்து

ஏறி விளையாடிய...

நமது மனது வலிப்பது கவிதையில் கனக்கிறது..

வாழ்த்துக்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்...

ஓவியன்
16-08-2009, 06:56 AM
வீடு கட்டி பின் அது இடிந்து தகர்ந்து போக,
மீளக் கட்டி அதுவும் தகர்ந்து போக,
மனம் தாங்காமல் மீளவும் கட்டி
அதுவும் இடிந்து போக,
மீளவும் நான்காம் முறையாக
வீடு கட்ட மனவலுவும் பொருளாதார வலுவுமின்றி
நாட்டுக்கொன்றாக சிதறி வாடகை வீடுகளிலிருக்கிறது என் குடும்பம்..!!

அதானால் வாடகை வீட்டின் வலியை நானும் நன்கறிவேன்,
குழந்தைகள் இன்னமும் இல்லாததால்
குழந்தையாகவே வளர்க்கும் செல்ல நாயை
அதைத் தொடாதே, இதைத் தொடாதேயென
அதட்டி, ஒடுக்கி - அதுவும்
அடங்கி நடுங்கிப் போயிருக்கையில்
மனம், சுருக்கென வலிக்கும்
இந்தக் கவிதைக் கருவைப் போலவே...

மனதார்ந்த வாழ்த்துகள் சகோதரி, இன்னும் நிறைய எழுதுங்க..!!

இன்பக்கவி
17-08-2009, 06:58 AM
எல்லோருக்கும்
நன்றிகள்...
வாடகை வீட்டில் அல்லல் பாடும் நிலை நாங்களும் அனுபவித்து இருக்கிறோம்....
இன்றுவரை சிலர் இந்த வேதனை அனுபவித்து தான் வருகிறார்கள்