PDA

View Full Version : பரமன் வைத்த பந்தயம்



Ravee
25-07-2009, 05:32 PM
பரமன் வைத்த பந்தயம்


அப்பன் விநாயகனும்
அய்யன் முருகனும்
அடியேன் ரவிக்கும்
ஒரு போட்டி

யார் உலகத்தை முதலில்
சுற்றி வருவது என்று
நந்தி ஒன்று இரண்டு சொல்ல
மூவரும் வரிசையில்
விநாயகன் எலியின் மேலே
முருகன் மயிலின் மேலே
நானோ வெறும் காலில்
தோளில் மட்டும்
என் லேப்டாப்

நந்தி சொன்ன மறுகணம்
எலி பாதாளத்தில் பாய்ந்தது
மயில் வானத்தில் பறந்தது
நான் மட்டும் பரமன் காலடியில்
பரமன் கேட்டான்
என்ன ரவி என்ன ஆச்சு

பரமனைப் பார்த்தேன்
சிரித்தேன்
அய்யனே
வாருங்கள் என் அருகில்
வந்தார் நின்றார் அமர்ந்தார்
பரமனின் கண்கள் விரிந்தது
என் மடிகணக்கியை பார்த்து
(மடிகணக்கி அதான் நம்ம லேப்டாப்)

தட்டினேன் எலிப்பொறியை
கைகள் தட்டச்சுப் பலகை
மேலே தாளம் போட்டது
விரிந்தது வெள்ளித் திரையில்
அரட்டை அரங்கம்
வந்தார்கள் நண்பர்கள்
உலகத்தின் எல்லா பக்கம் இருந்தும்

அண்ணா தம்பி அன்பே
என்று ஆயிரம் குரல்கள்


இந்தியாவில் இருந்து கிளம்பி
அரேபியா வழியே
ஐரோப்பா முழுதும் சுற்றி வந்து
அமெரிக்கா போய்
கனடாவில் இளைப்பாறி
மீண்டும் கடல் வழியே
மலேசியா சிங்கப்பூர் போய்
இலங்கை தொட்டு
இந்தியா வந்தேன்.


கண்ணால் கண்டிராத சொந்தங்கள்
இணையத்தின் வழியே இணைந்தார்கள்
எனக்கு இரவு உனக்கு பகலா
நான் சாப்பிட்டேன் நீ சாப்பிட்டாயா
என்ன இத்தனை நாளாய் உன்னைக் காணவில்லை

விழித்து இருந்தவர்கள் விசாரிக்க
இன்னும் பலர் தூங்கிக் கொண்டு இருக்க

சாட்சிக்கு இத்தனை பேர்
இருக்க ஜட்ஜ்மென்டில்
குழப்பம் இல்லை

பரமன் சொன்னார்
நானே பார்த்திருக்க
பத்து நிமிடத்தில்
உலகத்தை சுற்றியது
" ரவியே "
எனவே பழம்
ரவிக்கே
என்று

பரமன் பெருமூச்சி விட்டான்.
அவன் பிள்ளைகள் இரண்டும்
தோற்று போனார்களே என்று

பரமன் தந்த கனியை
உண்டு காத்திருக்கிறேன்
இன்று வரை
கந்தனும் வரவில்லை
கணபதியும் வரவில்லை.

:icon_b: :icon_b: :icon_b:

பாலகன்
25-07-2009, 05:46 PM
உங்களுக்கு குசும்பு கொஞ்சம் அதிகம்னு நினைக்கிறேன்.... கடவுளோடேயே போட்டியா (தமாசு)

அது சரி மடிக்கணக்கி என்றால் லேப்டாப்பா இப்ப தான் தெரிஞ்சிது... :)

Ravee
25-07-2009, 05:55 PM
நண்பரே மகா பிரபு நம் உள்ளத்திற்குள் உள்ளவர்கள் தானே கடவுள் ,நாம் சந்தோசமாக இருந்தால் கடவுளுக்கும் சந்தோசம் தானே

இளசு
25-07-2009, 07:43 PM
பழைய பழப்போட்டிக்கதை..
இனிய புதுப்பார்வை..

பாராட்டுகள் ரவி -
கவிதைக்கும், போட்டி வெற்றிக்கும்...
மற்றும்
நாரதர் வருமுன்னே பழத்தை உண்ட செயல்திறனுக்கும்!

Ravee
26-07-2009, 01:36 AM
நன்றி இளசு அவர்களே

அருள்
26-07-2009, 01:40 AM
என்ன பழம்.... அல்வா பழமா..... நவீன திருவிளையாடல்.....

ஆதவா
26-07-2009, 02:55 AM
முடிவு பிரமாதம்!!!

நானும் போட்டிக்கு இருந்திருந்தா, கூகிள் மேப்ஸ் எடுத்து இன்னும் சீக்கிரமா காமிச்சிருப்பேன்!

சிவா.ஜி
26-07-2009, 06:19 AM
வித்தியாசமான பார்வை. வாழ்த்துகள் ரவி.

(அது மடிக் கணக்கி அல்ல மடிக்கணினி)

பாரதி
26-07-2009, 06:57 AM
ரவி என்று சொன்னால் சூரியனை குறிக்கும். ஆக உலகமே ரவியைத்தான் சுற்றி வருகிறது என்று சொல்லியே பழத்தை வாங்க முயற்சி செய்யவில்லையே...?

பரமன் தந்த கனியை உண்டது சரி... எப்படி இருந்தது என்று சொல்லவில்லையே...??

கந்தனும் கணபதியும் இவ்வுலகில் நடப்பவற்றைப் பார்த்த பிறகு கடவுள் தன்மை இருக்கிறதா என்ற சந்தேகம் வந்ததால் எங்கோ சுற்றித்திரிகிறார்கள் என்றெண்ணுகிறேன்.

வேறுபட்ட கண்ணோட்டத்தில் படைக்கப்பட்ட கவிதை நன்று நண்பரே.

pgk53
26-07-2009, 08:52 AM
ரவி என்று சொன்னால் சூரியனை குறிக்கும். ஆக உலகமே ரவியைத்தான் சுற்றி வருகிறது என்று சொல்லியே பழத்தை வாங்க முயற்சி செய்யவில்லையே...?

பரமன் தந்த கனியை உண்டது சரி... எப்படி இருந்தது என்று சொல்லவில்லையே...??

கந்தனும் கணபதியும் இவ்வுலகில் நடப்பவற்றைப் பார்த்த பிறகு கடவுள் தன்மை இருக்கிறதா என்ற சந்தேகம் வந்ததால் எங்கோ சுற்றித்திரிகிறார்கள் என்றெண்ணுகிறேன்.

வேறுபட்ட கண்ணோட்டத்தில் படைக்கப்பட்ட கவிதை நன்று நண்பரே.

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.
நண்பர் பாரதி அவர்களே....கந்தனும் கனபதியும் சுற்றித் திரியவில்லை.
மக்களெல்லாம் மாக்கள் ஆகிவிட்டதினால் அதற்குரிய சரியான தண்டனையைத்தான் அவர்கள் சரியாகத் தந்துகொண்டிருக்கின்றார்கள்.

அமரன்
26-07-2009, 06:21 PM
ஹஹ்ஹ்ஹா..

சிரிப்பினூடே ஓடுகின்ற கருத்தாறு - பரமன்
மக்களின் அறியாமையில் கறுத்தாரு..

உள்ளங்கையில் உலகம்.. அகம்+கையில் உலகம்.. உள்ளக் கையில் உலகம்.. உள்ள நம்பிக்கையில் உலகம்..

அப்பனுக்கே மடக்கணினி மந்திரத்தின் பொருள் சொன்ன சுப்பையா.. நீவிர் வாழ்க.

Ravee
28-07-2009, 12:15 AM
அருள் , ஆதவா சிவா, பாரதி அமரன் உங்கள் அன்புக்கு நன்றி விளையாடாக எழுதிய கவிதையில் பல பரிமாணத்தில் உங்கள் விமர்சனங்கள் என்னை சிந்திக்க வைத்தது