PDA

View Full Version : யார்தான் குரு?சிறுபிள்ளை
24-07-2009, 09:36 AM
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

பெரிய துறவி ஒருவர் மகாசமாதி அடையும் நிலையில் இருந்தார். உண்மையிலேயே பற்றற்ற நிலையில் வாழ்ந்துவந்தவர்.
அவருக்கு யார் குரு, அவருடைய பூர்வாசிரமம் என்ன, துறவியான பின்னர் எங்கெல்லாம் சென்றார், என்னவெல்லாம் படித்திருக்கிறார் என்ற விபரமெல்லாம் யாருக்கும் தெரியாது. அவருக்கென்று எதுவுமே வைத்துக்கொண்டதில்லை. ஒரு பிச்சைப்பாத்திரம், ஓடு போல் எதுவுமே கிடையாது. ஒரு கோயில் மண்டபம். அதில் இருப்பார். அல்லது அதன் அருகில் உள்ள அரசமரத்தின் மேடை.

உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில்,ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய வொரு வேட்டியுண்டு; சகமுழுதும்
படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு: பசித்துவந்தால்
கொடுக்கச் சிவனுண்டு; நெஞ்சே நமக்குக் குறைவில்லையே!

என்று பட்டினத்தார் சொன்னது போல் வாழ்ந்துவந்தார். இன்னும் சொல்லப்போனால் அந்த வேட்டியையும்கூட அவர் மற்றவர்களுக்காகத்தான் கட்டியிருந்தார். பசிக்கும்போது ஏதாவது
ஒரு வீட்டின் முன்னால் நிற்பார்.
அந்த வீட்டுக்காரர் உணவு கொண்டுவந்து நீட்டும்போது இருகைகளையும் ஒன்றாகச் சேர்த்து ஏந்துவார். அது கொள்ளுமளவுக்கு பிச்சையைப் போடுவார்கள். அப்படியே அதனைக் கையில் வைத்துக்கொண்டே உண்பார். அதன் பின் நீரருந்துவார். பிறகு போய்விடுவார். 'அம்மா பிச்சை' என்றெல்லாம் கேட்பதில்லை. அவர்களாகவே போட்டால்தான் உண்டு. சிலர் அவர் இருப்பிடத்துக்கு வந்து உணவை வைத்துவிட்டுப்போவார்கள். பசித்தால் உண்பார்.

அவருடைய அறிவையும் ஆற்றலையும் பற்றி வியந்து பேசிக்கொள்வார்கள்.
அவராகக் கூட்டமேதும் திரட்டாமலேயே அவருக்குச் சீடர் கூட்டமொன்று இருந்தது. அவர்கள்தாம் தம்மைத்தாமே அவருடைய சீடர்களாகக் கூறிக்கொள்வார்கள். அவர் ஏதும் கண்டுகொள்வதில்லை.

ஓர் இளைஞன் அவரிடம் மிகுந்த பக்தியும் பிடிப்பும் வைத்திருந்தான்.

துறவி மகாசமாதி அடையும்தருவாயில் அந்த இளைஞன் அவரிடம் வந்தான்.

அவருடைய குரு பரம்பரையைப் பற்றி அறிந்துகொள்ள அவனுக்கு ஆசை.

ஆகவே உபநிஷத்தில் உத்தாலக ஆருணி முனிவரிடம் சுவேதகேது கேள்வி கேட்டது
போல் கேட்டான்.
"சுவாமி! இப்போதாவது சொல்லுங்கள். உங்களுடைய குரு யார்? உங்கள் குரு
பரம்பரை என்ன?

லேசாகக் கண்களைத் திறந்துபார்த்துவிட்டு, அவனை மிக அருகில் வைத்துக்கொண்டு சொல்லலானார்:

"என்னுடைய வாழ்க்கையில் மூன்று பேர் என்னுடைய குருமார்களாக விளங்கினார்கள்".

"நான் துறவியாகிய ஆரம்பகாலத்தில் நானும் ஏனைய பல சாமியார்களைப்போலவே
ஆசார நுஷ்டானங்களைக் கடைப்பிடித்து வந்தேன்".
ஆனால் என்னுள் ஒரு வெட்கை - ஓர் ஆன்மதாபம் - இருந்துகொண்டேயிருந்தது. ஒரு தேடல். அதனைத் தீர்ப்பது எப்படி என்பதுதான் தெரியவில்லை. என்னுடைய உடமைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு ஊரூராகத் திரிந்தேன்".

குருபரம்பரை#2

ஒருநாள் ஒரு குளக்கரையில் நின்றுகொண்டு கையில் இருந்த குவளையால் தண்ணீரைச் சேந்திக ்கொண்டிருந்தேன். அப்போது ஒருநாய் வந்தது. கடும் தாகம் அதற்கு. வேகமாக வந்த நாய் அந்தக் குளத்தில் குதித்தது. பின்னர் தண்ணீரை ஆசைதீருமட்டும் ஆனந்தமாகக் குடித்தது.

அந்த நாயைப் பார்த்ததும் எனக்குப் பொறிதட்டியது.
உடனே கையில் இருந்த குவளையைத் தூர எரிந்தேன். கரையில் இருந்த என் உடமைகளை எடுத்தேன் அவற்றையும் குளத்தில் வீசி எரிந்தேன்.
எந்த உடமையுமே இல்லாமல் அந்த நாய் இந்த உலகில் வாழவில்லையா?
என்னைப் படைத்த இறைவன் இருக்கிறான்.
பற்றற்றதன்மையையும் சரணாகதித் தத்துவத்தையும் நான் அப்போது உணர்ந்துகொண்டேன்.
அதை உணர்த்தியது அந்த நாய்.
அந்த நாய்தான் என்னுடைய முதல் குரு.

அதன்பின்னர் நான் ஊர் ஊராகச் சுற்றும்போது உடல்நலிவு ஏற்பட்டுவிட்டது. ஒருநாள் மயங்கிப்போய் ஒரு மரத்தடியில் நான் கிடந்தேன். அப்போது அங்கே வந்த ஓர் ஆள் என்னைக் கைத்தாங்கலாகத் தாங்கிச் சென்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வீட்டுக்குள் நுழையப்போகும்போது அவன் சொன்னான்.
"ஐயா சாமியாரே! நான் ஒரு திருடன். என் வீடு இது. உள்ளே வருவதற்கு உங்களுக்கு மனச் சமாதானம்தானே?"

நான் சற்றுத் தயங்கினேன்.

அவன் தொடர்ந்தான்.
"நான் ஒரு திருடன் என்பது யாருக்கும் தெரியாது. என்னுடைய குலத்தொழிலே திருடுவதுதான். அந்தத் தொழிலைத் தவிர வேறெதுவும் தெரியாது. ஆனால் அக்கிரமமான முறையில் நான் திருடுவதேயில்லை. எனக்கென்று ஒரு தர்மம் வைத்திருக்கிறேன். நிறைய
தானமும் செய்வேன். இது என்னுடைய வாழ்க்கை முறை".

அப்போதும் தயங்கினேன்.

"நீங்கள் ஒரு துறவி. உங்களைப் பொறுத்தவரைக்கும் எல்லாரும் ஒரே மாதிரிதான். திருடனோ, வேந்தனோ, துறவியோ அனவரும் உங்கள் கண்ணுக்கு ஒன்றாகத்தான் தெரியவேண்டும். யாரையும் நீங்கள் ஒதுக்கமுடியாது. அது உங்கள் தர்மம். நான் திருடன். உங்களைப் பாரமாக நினைக்கவில்லை. என் வீட்டுக்கு உங்களை மனப்பூர்வமாக அழைக்கிறேன். நீங்கள் துறவி. என்னைப் புறம்பாக நினையாது நீங்கள் வரவேண்டும்".

நான் உள்ளே நுழைந்தேன்.

எனக்குச் செய்யவேண்டியவற்¨றை அவன் செவ்வனே செய்தான். பின்னர் அன்றிரவு அவன் வெளியில் புறப்பட்டான்.
"தொழிலைப் பார்க்க நான் செல்கிறேன். பத்திரமாக இருங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

காலையில் திரும்பினான்.

"இன்று ஒன்றுமே கிடைக்கவில்லை. பரவாயில்லை. இரவு ஏதாவது கிடைக்கும்", என்று சிரித்தமுகத்தோடு சொன்னான்.

அன்றிரவும் சென்றான்.

காலையில் வெறுங்கையோடு திரும்பினான். ஆனால் சிரித்த முகத்தோடு, "அடுத்தமுறை நிச்சயம் கிட்டும்" என்று சொல்லிவிட்டு நிம்மதியாகத் தூங்கச்சென்றான்.

நான் அவனுடன் ஒரு மாதம் இருந்தேன்.

அத்தனை நாட்களிலும் அவன் எனக்கு வைத்தியமும் செய்து, உணவும் கொடுத்து, கவனமாக என்னைப் பார்த்துக்கொண்டான். அத்தனை நாட்களிலும் அவன் திருடச் சென்றுவிட்டு வெறுங்கையுடனேயே திரும்பினான்.

ஆனாலும் அவனுடைய சிரித்தமுகம் மட்டும் மாறியதே இல்லை.
"அடுத்தமுறை நிச்சயம் கிட்டும்", என்பதை அவன் தாரக மந்திரமாகக் கொண்டிருந்தான்.

பிறகு நான் தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கினேன். தியான யோகத்தில் மிக ஆழமாக ஈடுபட்டேன். ஆனால் ரொம்பநாட்களுக்கு மனம் ஒடுங்கவேயில்லை. பல எண்ணங்கள் தோன்றி அலைக்கழித்தன. சித்திரவதையாக இருந்தது. பலசமயங்களில் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம் என்று தோன்றும்.

'எப்போது மனது ஒடுங்கும். எப்போது சமாதிநிலை கைகூடும்?
எப்போது நம் ஆன்மீகப்பயணத்தில் ஒரு நிறைவெய்துவோம்?' இந்த வேட்கைச் சுட்டெரித்தது. பேசாமல் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு உலக வாழ்க்கைக்கே திரும்பிவிடுவோமா என்றும் தோன்றும். அப்போதெல்லாம் அந்தத் திருடனின் மலர்ந்த முகமே தோன்றும். "அடுத்தமுறை கிட்டும்" என்னும் அவனுடைய சொற்கள் என் காதுகளில் ஒலிக்கும். ஆகவே விடாப்பிடியாக ஆத்மசாதனையில் ஈடுபட்டேன்.
ஒருநாள் சமாதிநிலையை எய்தினேன். அதனுடன் சேர்ந்து கிட்டும் ஆற்றல்களும் தலைப்பட்டன".
"அந்தத் திருடன், 'துறவி' என்னும் என்னுடைய சுயதர்மத்தை எனக்கு போதித்தான். விடாமுயற்சியுடன் ஆத்மசாதனையைப் புரிய தூண்டலாக விளங்கினான். என்னுடைய வழியைக் காட்டினான்.

அந்தத் திருடன்தான் என்னுடைய இரண்டாவது குரு".

பல ஆண்டுகள் கழிந்தன.

யோக சாதனைகளைப் புரிந்தும் என்னுடைய சாதனையில், என்னுடைய அறிவில் ஏதோ குறையிருப்பதாகவே தோன்றியது. ஒரு திருப்தியில்லை. என்ன குறையென்று சரிவரப் புரியவுமில்லை.
ஒருநாள் இரவு. மண்டபத்தில் இருந்த விளக்கை ஒரு சிறுவன் அணைத்தான்.
நான் அவனிடம் விளையாட்டாகக் கேட்டேன்:
"அந்த வெளிச்சம், சுடர் எங்கே போயிற்று?"
அவன் சொன்னான்:
"இது தெரியாதா? அது எங்கிருந்து வந்ததோ, அங்கு போய்விட்டது".

அப்போதுதான் இந்த உலகம், பிரபஞ்சம், தோற்றம், என் பிறவி - அனைத்தின் ரகசியமும் புரிந்தது. அதையும் உணர்ந்துதான் கொண்டேன். சொல்லில் வடிக்க இயலாது.

அத்துடன் என் தேடலும் முடிந்தது. என் வேட்கையிம் தீர்ந்தது. தாபமும் மறைந்தது. அதுவரை இல்லாத பரிபூரண திருப்தி என் மனதை ஆட்கொண்டது. திருப்தி வந்தவுடன் ஒரு சாந்தி குடிகொண்டது. சாந்தத்துடன் ஒரு பூரணத்துவமும் ஏற்பட்டுவிட்டது.

இப்போது நானும் எங்கிருந்து வந்தேனோ அங்கு போகப்போகிறேன்.
இதற்கு வழி காட்டியவன் அந்தச் சிறுவன்தான்.
அவன்தான் என்னுடைய மூன்றாவது குரு".

இதனைச்சொல்லியவாறு, துறவி கண்களை மூடினார்.
ஆழமாக மூச்சை இழுத்துக்கொண்டார். மீண்டும் வெளியில் விடவேயில்லை.படித்த போது என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை இது அதை நண்பர்களிடம் பகிர்வதில் மகிழ்வே...

நன்றி டாக்டர் ஜயபாரதி

இளசு
25-07-2009, 08:38 PM
அன்பு சிறுபிள்ளை

மிக அழகான பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி...

நாயும், திருடனும், சிறுவனுமாய் குருக்கள் இன்றும் உண்டு..
ஞானத்தைக் கண்டு தேறும் மனப்பக்குவம்தாம் நமக்கு இல்லை!!

பாரதி
26-07-2009, 07:45 AM
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.
வாழ்க்கையில் கற்றுக்கொடுப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நாம்தான் கவனமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் நல்ல கதை..!

சிறுபிள்ளை
28-07-2009, 11:39 AM
ஞானத்தைக் கண்டு தேறும் மனப்பக்குவம்தாம் நமக்கு இல்லை!!

அப்படி ஏன் நினைக்கிறீர்கள் நண்பரே..

முயன்றால் முடியாதது எதுவுமில்லை.... முழு மனதோடு இறைவனை நினைத்தால் அவரை அடையலாம்.

சிறுபிள்ளை