PDA

View Full Version : என்றாவது ஒரு நாள் என் பிள்ளை என்னைக் கேட்கும்



ஓவியன்
19-07-2009, 12:05 PM
ஊர்க் கோயிலிலெல்லாம் தேருண்டு,
நம் கோயிலில் மட்டும்
ஏனில்லையென,
என்றாவது ஒரு நாள்
என் பிள்ளை என்னைக் கேட்கும்..!!

தேர் செய்து வர
யார் யாரோ போனார்களாம்
நீயும் போனாயாவென..?,
என்றாவது ஒரு நாள்
என் பிள்ளை என்னைக் கேட்கும்..!!

செய்து வைத்த தேரை
இழுத்து வர
இன்னும் சிலர் போனாராமே
அப்போவாது நீ போனாயாவென..?,
என்றாவது ஒரு நாள்
என் பிள்ளை என்னைக் கேட்கும்..!!

இழுத்து வந்த தேரை
கூட்டமொன்று கூடி
கொள்ளையடித்ததாமே அதைத்
தடுக்கவாவது நீ போனாயாவென,
என்றாவது ஒரு நாள்
என் பிள்ளை என்னைக் கேட்கும்..!!

நான் இல்லை, இல்லையென
தலையாட்டுகையிலெல்லாம்
தேரிழுத்துத் தொலைந்தோரைப்
பற்றிப் பேச, இன்று உனக்கென்ன
அருகதையென மீண்டும்,
என் பிள்ளை என்னைக் கேட்கும்..!!

அதற்கு பதில் சொல்லவும்
அருகதையில்லாமல் நானிருப்பேன்..!!

அக்னி
19-07-2009, 01:35 PM
தொலைந்து போன தேர்,
திரும்பவும் கிடைக்கலாம்.
கிடைக்காதும் போகலாம்.
ஆனால்,
முழுமையாக அழிந்துபோகவில்லை
என்பது ஆறுதலுக்குரியது.

‘தேரை அழித்துவிட்டார்கள்’ எனக்கவிதை அமைக்கப்பட்டிருந்தால்,
கவிதை கவலையாக முற்றுப்பெற்றிருக்கும்.
அந்தக் கவலையைத் தவிர்த்தமை சிறப்பு.

எங்கள் தேர் மட்டும்
கொள்ளையடிக்கப்பட்டது.

தேரிழுத்து வாழ்ந்தவர்கள்,
தேரைத் தேடலாமல்லவா...
தேரைக் கட்டலாமல்லவா...
மீண்டும் தேரை இழுக்கலாமல்லவா...

தேரைச் செய்து இழுத்த தலைமுறையும், பார்த்த தலைமுறையும்
அழிந்துவிட்டால்...,
தேர் மீண்டு(ம்) வராதல்லவா...

தேர் தெரிந்த தலைமுறைகள் அழிக்கப்பட்டுத்
தேர் தெரியாத தலைமுறை செய்யப்படுகின்றது.

அந்தத் தலைமுறை
‘தாம் யார்?’ எனத் தெரியாமல்
கொள்ளையர்களாகவே ஆக்கப்படலாம்...

அமரன்
19-07-2009, 01:53 PM
அன்றாடம் நாம் பாவிப்பவற்றுக்காக யார் யார் எப்படி உழைத்தார்கள் என்பது எமக்குத் தெரியாததால் அதன் உண்மையான பெறுமதி எமக்குத் தெரிவதில்லை. சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் இந்தமாதிரித்தான்..

பெறுமதி இறந்தது
நீங்கள் சொன்னதேர்...!
பொறுமை இழந்து
நீங்கள் சிந்தியதேன்...!:)

பாராட்டுகள்..!

தூயவன்
19-07-2009, 02:37 PM
மனதை கலங்க வைக்கும் கவி.. நன்றிகள் நண்பர்களே

பாரதி
20-07-2009, 01:25 AM
மனவேதனை புரிகிறது ஓவியன்.
ஏங்குவோரின் நிலை குறித்து எளிய வார்த்தைகளால் மனதில் இறங்கும்படி கூறி இருக்கிறீர்கள்.
நம்பி வாழ்வோம். நம்பிக்கைதானே வாழ்க்கை.

நேசம்
20-07-2009, 04:26 AM
நம்பிக்கை தான் வாழ்க்கையின் ஆச்சாரம்.கவிதையை போல் அக்னியின் பின்னூட்டமும் அருமை.பாரட்டுகள் ஒவியன்

கா.ரமேஷ்
20-07-2009, 05:14 AM
கண்டிப்பாக பதில் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கும்.... அருமை கவிதை.. அதற்க்கேற்ற பின்னூட்டங்களும் அருமை....

வசீகரன்
20-07-2009, 06:37 AM
கண்டிப்பாக நம் பின் சந்ததியினர்..... நம்மை வெறுப்புடன் எதிர்நோக்க காத்திருக்கின்றனர்....

மூளியாகி வெறுமையாகி சூனியமாகிபோன
அவர்களது ஓவியத்தை நம்மிடம் கைகாட்டி காரணம் கேட்க காத்திருக்கின்றனர்....

அது பல துரோகங்கள் சூழ்ந்து அது பொலிவிழந்து போன கதையை இயலாமையுடன் நாம் சொல்லத்தான் வேண்டும்....

சிவா.ஜி
20-07-2009, 01:24 PM
உள்ளத்தின் வலியை வரிகளாக்கி படைக்கப்பட்ட இந்தக் கவிதையின் அருமை.....இதிலிருக்கும் உண்மை.

ஆயினும் அக்னி சொன்னதைப்போல அழிக்கப்படாத தேர் மீண்டும் சீராக்கப்படலாம். சிறப்பாக்கப்படலாம். இன்று கலந்துகொள்ளாத கவிதையின் நாயகன் அன்று கைகோர்க்கலாம். அருகதையற்றவன்....அருகதையுடையவன் ஆவான்.

அன்று நெஞ்சு நிமிர்த்தி பிள்ளையின் கேள்விகளுக்கு பதில் கூறலாம்.

நல்லதொரு கவிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ஓவியன்.

இளசு
27-07-2009, 11:10 PM
தேர் என்னும் உயரிய குறியீட்டை வைத்து
நீ பகிரும் மனவலி புரிகிறது ஓவியன்...

ஊர் கூடித் தேரிழுக்க பலரும் கூடையிலே
சிலர் பானகம் தயாரிக்க
சிலர் தானியம் சேகரிக்க
பலர் மனபலம் கூட்டும் கோஷங்கள் போட்டிருக்க....

உடல் பலம், உயிர்பலம் வளர்த்தபின்
வடம் பிடிக்கவென
சிறாரும் இளைஞரும் புலம் பெயர்ந்திருக்க.....

வரலாறு சொல்லும் -
விலகி இருந்தவர்கள்
வெறுத்து இருந்தோரா
விவேகத்தில் இருந்தாரா என..

தலைமுறைகள் அறிவார்கள் உண்மைநிலை...
தலைக்குனிவென நான் எண்ணவில்லை!

சசிதரன்
29-07-2009, 04:54 PM
மிக அழகாய் உணர்வுகளை வார்த்தைகளாய் வடித்திருக்கிறீர்கள் ஓவியன்... மிக நன்று...:)