PDA

View Full Version : நண்பன்



த.ஜார்ஜ்
15-07-2009, 10:44 AM
ஊருக்குள் வந்து இறங்கியதுமே ஒரு கலவரம் உறைந்திருப்பதை உணர்ந்தான் ஸ்டீபன்.

ஊர் முன்பு மாதிரி இல்லை. மூன்றாண்டுகளில் நவீனமாயிருந்தது.விளை நிலங்களில் கட்டிடங்கள், புதிய நிறுவனங்கள்,கேபிள் நெட்வொர்க்.... சூழ் நிலைகள் முற்றிலும் மாறியிருந்தன.

இவன் வியப்போடு நடக்கிறான்.சாலையோரத்தில் ஒன்றிரண்டு கடைகள் எரிந்து சாம்பலாகியிருந்தன.அராஜகக் கும்பலை கைது செய்யச் சொல்லி ஒரு போஸ்டர்.....

என்ன ஆயிற்று....!

நடந்து போகையில் பள்ளிக்கூட திண்ணையில் இரண்டு போலீஸ் இருந்தது ஆச்சரியமாயிருந்தது.

ஊரில் இருக்கும் போது மாலை நேர பொழுதுபோக்கு இந்த பள்ளி திண்ணைதான். நேரம் போவது தெரியாமல் சரவணனோடு அரட்டை அடித்த இடம்.சிகரெட் உறிஞ்சியபடி சரவணன் கவிதைகள் சொல்வான்.சினிமா முதல் சித்தாந்தம் வரை விமர்சிப்பான்.வீட்டுக் கவலைகளால் வேதனிப்பான்.புன்னகை மாறாத முகத்தோடு ஜோக் சொல்லி... சைட் அடித்து.... ஓ.அது ஒரு காலம்.

சரவணன் நினைப்பு வந்ததும் இவனுக்கு மனசுக்குள் கும்மாளம் எழுந்தது. ஊரில் இருக்கிறானோ.. என்னவோ. பார்க்க வேண்டும்.

“தம்பி சவுக்கியமா” கேட்டவரை ஏறிட்டான். “நல்ல நேரத்திலதான் வந்த போ” என்றபடி பதில் எதிர்பாராமல் கடந்து போனார்.

இவனுக்கு புரியவில்லை. வீட்டில் வந்த போதும் யாரும் சந்தோசம் காட்டவில்லை. வியப்பாயிருந்தது. அம்மாகூட கவலையுடன்தான் “ நல்லாயிருக்கியா” என்றாள். முகத்தில் பயம் விரவிக் கிடந்தது.

இவன் குளித்து விட்டு சாப்பிட உட்கார்ந்த போது தங்கை கேட்டாள், “ஊரே ரெண்டு பட்டு கிடக்கே. இந்த நேரம் ஏன் வந்த.”

விழிகள் வினா எழுப்பின. “ஏன்?”

“என்னத்தை சொல்றது. ரெண்டு பேருக்குள்ள ஏதோ சின்ன தகராறு. அத ஊதி பெருசாக்கி இப்போ மதக் கலவரமாவே ஆக்கிட்டாங்க.”

“ மைகாட்...” ஸ்டீபனுக்கு புரையேறிற்று.

“ நேத்திக்கு ஜாண்சனை குத்திட்டாங்க.”

“எதுக்கு?”
“அந்தப் பக்க ஆளுங்க ஒட்டின ஏதோ போஸ்டரை கிழிச்சானாம்.இவன் கிழிக்கலைன்னு சொல்றான். ஒண்ணும் புரியலை. எல்லாம் உன் பிரெண்ட் சரவணனால வந்த வினை.” என்றாள்.

திடுக்கிட்டான். “ சரவணனா.கேட்கணும்னு நினைச்சேன். இங்கதான் இருக்கானா.”

கேட்டுக்கொண்டே வந்த அப்பா சொன்னார். “வேலையத்த பய வேற என்ன செய்வான். பெரிய பேச்சாளன்..பேசிப் பேசியே ஊரு நிம்மதியை கெடுத்திட்டான்ல.”

ஸ்டீபனுக்கு மனசுக்குள் பாரம் ஏறிற்று.

சரவணனா... அவனா இப்படி...மைகாட்

“மைகாட், மைகாட்-னு சொல்றியே....எதுதாண்டா உன் கடவுள்.”

“எதுவா இருந்தா என்னடா, அப்படி கூப்பிடறதே ஒரு சுகந்தாண்டா.”

“ போடா முட்டாள். கையாலாகாதவனுக்குதாண்டா கடவுள் நினைப்பு சுகம்.” என்று சொன்ன சரவணன்,

“வில்பிரட் ஓவன் தெரியுமா. அவர் ஒரு சோல்ஜர்.ஆனா அவர் கவிதைகள் எல்லாம் போரை எதிர்க்கும்.சண்டை போடாதீங்கன்னு சொல்லும்.இன்னிக்கு பாரு நம்மை ஆள்றவங்க எல்லாருமே அராஜகத்தை நம்பிதான்” என்று வேதனைப் பட்ட சரவணன்.

அவனா இப்படி மாறிப்போனான்.

இதே சரவணனை உதாரணம் காட்டிதான் அப்பா சொல்வார். “ உன் வயசுதானே. அவன் சாமர்த்தியத்தைப் பாரு. அதை இதை செய்து துட்டு சம்பாதிக்கிறான்ல.... நல்லது கெட்டது செய்து பேரு எடுக்கிறான்ல. நீயும் இருக்கியே..”

இந்த வசைபாடல் தாங்காமல் இவன் ராணுவத்தில் சேர்ந்த போது சரவணன் வருந்தினான். அது பிரிவுத்துயரா அல்லது அவனுக்கு வேலை கிடைக்காத சோகமா என்று புரியவில்லை.

பயிற்சியில் சேர்ந்த சில நாட்களில் அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அது ஒரு கவிதை.

‘விட்டம் வெறிக்கும் வேலையோடு
நட்டம் இனி போதும் நாயகனே;
சுட்டெரிக்கும் தீயில் வெந்து மடிந்தது போதும்,
கட்டிக்காப்பவை விட்டொழித்த போதும்
தட்டியெழுப்பி துயரம் தந்தது போதும்;
விருட்சத்தின் கீழ் வந்தமரும்
ஓய்வினி வேண்டும்.
வீதியெலாம் என் பேர்
உலாவர வேண்டும்.’

ஒன்றும் புரியவில்லை. ஆனால் அதன்பிறகு சரவணன் எதுவும் எழுதவில்லை. எழுதியதற்கும் பதிலில்லை.தொடர்பு அற்றுதான் போயிற்று. என்னவானான் என்று புரியாமல் இருந்தது

ஆனால் இப்போது.... இதோ... கவிதையின் பொருள் மெல்ல புரிந்த மாதிரியிருக்கிறது.

ஸ்டீபனுக்கு தூக்கம் வரவில்லை.சரவணன் புதைமணலில் சிக்கிக் கொண்ட மாதிரி எண்ணம் வந்தது. பாழ்பட்டு போகிறானோ.....

அது அவன் தந்தை இறந்த சமயம்.எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கிற சரவணன் முதல் முறையாக அழுதான்.அப்பா இறந்த துக்கம் என்பதை விட,காசில்லாத சோகம்தான் என தெரிந்த போது ஸ்டீபன் அதிர்ந்தான். மளமளவென்று எல்லா காரியங்களையும் தானே முன்னின்று நடத்தினான்.குறைவில்லாமல் செலவு செய்தான். ஊர் காரியங்களை பொறுப்பாய் நடத்துகிற சரவணன் அப்போது கலங்கினான். “இதுக்கெல்லாம் நான் என்னடா கைமாறு செய்யப்போறேன்” என்றான்.

“பெரிசா என்னடா கேட்கப் போறேன். என்னிக்கும் நீ என் பிரெண்டா இருந்தா அதுவே போதும்”

சரவணன் சிலிர்த்து போய் இவனை அணைத்துக் கொண்டான். “ நான் எதை இழந்தாலும் உன்னை இழக்க மாட்டேண்டா”

இப்போது இழந்துதான் போனானோ..... ஏக்கமாயிற்று.

காலையில் ஊரில் விசாரித்தபோது ஆளுக்கு ஒரு கருத்து சொன்னார்கள்.

“அடிக்கடி நம்ம பையன்களை வம்புக்கு இழுக்கிறாங்க” என்றார் ஒருவர்.

“ ஆமா இவனுங்க மட்டும் சும்மாவா இருக்கானுங்க” மறுத்தார் இன்னொருவர்.

“அவங்க தலைவர் செத்ததுக்கு போஸ்டர் ஒட்டினாங்க.எப்படியோ கிழிஞ்சி போச்சி. நம்ம பயகதான் கிழிச்சான்னா.... வேற வேல இல்லியா எங்களுக்கு...”

“அடிச்சது மட்டுமில்லாம நம்ம ஆளுங்க கடைக்கு தீ கூட வச்சிட்டாங்க”

“நாங்களும் இனி ஒரு கை பார்த்துடலாம்னு இருக்கோம்”

“அந்த சரவணனைதான் முதல்ல தீர்த்து கட்டணும்.அவன்தான் எல்லாத்துக்கும் காரணம்.”

ஸ்டீபன் திடுக்கிட்டான். வெட்டு குத்து வார்த்தைகள் சரளமாய் வருகிறது இவர்களிடம்.

“அவசரபடாதீங்க.ஊர் அமைதி நமக்கு முக்கியம். அதை யோசிச்சீங்களா” என்றான்.

“என்னப்பா சொல்ற. அவனுககிட்ட மனுசன் பேசுவானா.”

“ நான் பேசிப் பார்க்கிறேன். மத பெயரால மனுசனுக்குள்ள ஏன் வெறுப்பு.”

ஸ்டீபனை எல்லோரும் வினோதமாய் பார்த்தார்கள். “அதெல்லாம் ஒத்து வராது தம்பி” என்றார்கள்.

ஸ்டீபனுக்கு இவர்கள் சொல்வது எதுவுமே இறுதி உண்மையாய் இருக்குமென்று தோன்ற வில்லை. அவர்கள் கண்களால் இவன் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் கருத்தையே நாமும் கொள்வதா. எதற்கும் நேரடியாய் பார்த்து விடலாம் என்று தோன்றியது.

மாலையில் சரவணனை பார்க்க போனபோது அவனோடு நாலைந்து பேர் இருந்தார்கள். இவனைக் கண்டதும் அனைவர் முகத்திலும் வெறுப்பு தெரிந்தது.

“சரவணா எப்படிடா இருக்க.பார்த்து எவ்வளவு நாளாச்சி” என்று இவன் கை நீட்டிய போது பின்வாங்கி முறைத்தான்.

“ என்னடா என்னவெல்லாமோ கேள்விப்பட்டேன்.உண்மையா.”

சரவணன் லேசாக சிரித்தான். “ நினைச்சேன் நீ அதுக்குதான் வருவேன்னு. நீயும் அவன் மதத்துகாரன்தானே.”

வெகுநாட்களுக்குப் பிறகு சந்திக்கும் குதூகலம் அவனிடம் இல்லை. ஸ்டீபனும் நேரடியாக பேச ஆரம்பித்தான்.

“மதம் என்னடா.... வன்முறைக்கா வழிகாட்டுது. மனுசன கப்பாத்ததானே மதங்கள்.”

“மதத்துக்கு ஒரு ஆபத்து வந்தா காப்பாத்த வேண்டியது என் கடமை....”

“அதுக்கு மதத்து மேல பக்தியையில்ல வளர்க்கணும்.”

சரவணன் எழுந்தான், “பாரு. நீ நாட்டுக்காக ராணுவத்தில சேர்ந்த. நான் மதத்துக்காக இயக்கத்தில் சேர்ந்தேன்.அவ்வளவுதான். விடு.”

“சரவணா.இப்படி முட்டாள்தனமா நீ கூட யோசிப்பியா. உங்க இயக்கம் உன்னை பயன்படுத்துகிறது.தப்பான பாதை காட்டுது. புரியலையா உனக்கு.”

சரவணன் சுற்றியிருப்பவர்களை ஒருமுறை ஏறிட்டான். முகத்தில் சினம் தெரிந்தது.குரலில் உஷ்ணம் ஏறியது.

“உங்க மத இயக்கங்கள் மட்டும் என்னவாம்.கலாச்சார சீரழிவும்,அவ நம்பிக்கையும் சொல்லித் தரலை? எத்தனை இயக்கங்கள். பக்தனை பயன்படுத்தத்தானே?”

ஸ்டீபன் பெருமூச்செறிந்தான். பேசுவது பயனளிக்காதோ.

“சரி அத விடுவோம். இப்போ இந்த வன்முறைகளை விட்டுட்டு இருபக்கமும் சமாதானமா.....”
“மண்ணாங்கட்டி.பெரிய வன்முறை..அராஜகம்.. எங்கடா இல்ல. உங்கிட்ட என்ன பேச்சி. அந்த ஜான்சனை கண்டதுண்டமா வெட்டதான் போறோம்.உன்னால ஆனத பார்த்துக்க....” என்றான்.

அதே நேரத்தில் சொல்லி வைத்த மாதிரி முதுகில் எவனோ ஓங்கி இடித்தான்.இவன் தடுமாறி கீழே விழ மற்றொருவன் இடுப்பில் உதைத்தான்.முகம் குப்புரற விழுந்து எதுவோ கண்ணுக்கு கீழே குத்தியது. குபுக்கென்று இரத்தம் கொட்டி முகமெங்கும் பரவியது.

தடுமாறி எழுந்து “சரவணா” என்றான்.

“போடா உன் மிலிட்டரி புத்தியை இங்க வந்து காட்டாத. ஒட்ட நறுக்கிருவேன்.” என்றான் சரவணன்.

விசயம் கேள்விப்பட்ட இவன் மதத்துக்காரர்கள் அரிவாள் கம்புடன் பாய்ந்து வந்தார்கள்.இவன் தோற்றத்தைக் கண்டு இன்னும் ஆவேசமானார்கள்.

“ நியாயம் பேச போகாதேன்னு சொன்னோம் கேட்டியா” என்றார்கள். “ சரி. நீ ஒதுங்கு. மத்ததை நாங்க பார்த்துக்கறோம்.”

“வேண்டாம் விட்டுருங்க.பெருசு படுத்தாதீங்க.” இவன் தடுத்தான்.

“நீ சொல்லிட்டா ஆச்சா.இப்படியே விட்டுட்டா எங்களை இளிச்சவாயன்னு நினைக்கவா.” இவனை விலக்கி முன்னேறினார்கள். அடுத்த வினாடி மூர்க்கமாய் ஒரு யுத்தம் தொடங்கிற்று.

ஸ்டீபன் வேதனையோடு கூட்டத்தை பிளந்தபடி ஓடினான்.” அடிக்காதீங்க. நிறுத்துங்க” என்ற இவன் குரல் இரைச்சலில் கரைந்தது.

ஸ்டீபன் தளர்ந்துபோய் கீழே உட்கார போனபோது அந்த காட்சி கண்ணில் பட்டது.

சரவணனை இரண்டு பேர் பிடித்து வைத்திருக்க ஒருவன், அவன் கழுத்துக்கு குறிவைத்து வெட்டுகத்தியை ஓங்கி-

-மைகாட்... சரேலென ஸ்டீபன் குறுக்கெ பாய்ந்தான்.சரவணனை பின்னுக்கு தள்ளினான். தன் கழுத்தை குறுக்கே வைத்தான். கத்தி கீழே இறங்கும் வினாடிக்கும் குறைவான நேரத்தில் சுதாரித்துக் கொண்ட சரவணன் இடது கையால் கத்தியை தடுக்க-

பளிச்சென்று இவன் முகத்தில் இரத்தம் தெறித்தது. சரவணன் கை துண்டாய் தெறித்து பறந்து போய் விழுந்தது.சரவணன் ‘அம்மா’ என்று அலறியதைக் கேட்ட கூட்டம் ஸ்தம்பித்தது. நிலமை புரிந்து, பின்வாங்கி காணாமல் போக, ஸ்டீபன் மயக்கமானான்.

யாரோ நீர் தெளித்து விழிப்பு வந்தபோதும் அந்த காட்சி கண்ணை விட்டு அகல மறுத்தது. இது நான் பிறந்த மண்ணா. என் சொந்தங்கள் காட்டு மிராண்டிகளா? சிலிர்த்து போயிற்று இவனுக்கு.

ஊரில் பொதுக்கூட்டமா, கோயில் திருவிழாவில் பட்டிமன்றமா, கூப்பிடு சரவணனை. அவன்தான் நடத்தணும். அவனை மிஞ்ச ஆளு இல்லப்பா என்று சாதி மதம் மறந்து அழைத்தவர்கள் இன்று....

“தம்பி பாம்பை பார்த்துட்டா உடனே அதை அடிச்சிரணும். இல்லேன்னா அது நம்மை அடிச்சிரும். புரிஞ்சிக்க” சொல்லிவிட்டு கடந்து போகிறார்கள்.

இவன் நடக்க திரும்பியபோது ஒருவன் தள்ளி நின்று கத்தினான். “துரோகி. பேசிறமாதிரி பேசி ஆள வச்சி எங்களை அடிச்சிட்டேல்ல. உன்னை சும்மா விடமாட்டேம்.ராஸ்கல்.”

தெருவுக்கு வந்த போது வாசலுக்கு வாஅல் நின்று சபித்தார்கள். “சும்மா கிடந்த என் பையனை வந்ததும் வராததுமா வம்புல இழுத்து விட்டுட்டியே பாவி. நீ உருபடுவியா....”

ஸ்டீபனுக்கு ஆயாசமாயிற்று. இருபக்கமும் இடிவாங்கிய வேதனை வந்தது.

“வம்புக்கு போகனும்னே வேண்டிகிட்டு வந்தியா. நாசமா போறவனே.வீட்டுப் பக்கமே வராதே. வந்த வழியை பார்த்திட்டு சீக்கிரமே போய் தொலை.” அப்பா கர்ஜித்தார்.

ஸ்டீபன் தவிப்பு உணர்ந்தான்.பிரச்சனை தடாலடியாய் திசைமாறிவிட்டதில் கலக்கமுற்றான். இங்கே பின் வாங்கும் முடிவுக்கு வந்தான்.பின்வாங்குதலும் ஒரு போர்முறைதானே.. ..

பணிக்கு திரும்புமுன் ஒருமுறை சரவணனை பார்க்கலாம்போல் தோன்றியது. அவன் இழப்பு என்னால்தானோ.....

நீண்ட யோசனைக்குப் பின் ஆஸ்பத்திரிக்கு கிளம்பினான்.இவனிப் பார்த்த சரவணனின் அம்மா மௌனமாய் அழுதாள். இவனுக்கு வலித்தது.

அப்பாவிபோல் மல்லாந்து படுத்திருந்த சரவணன் காலடியோசை கேட்டு விழித்தான். இவனைப் பார்த்து வெறித்தான்.ஸ்டீபன் பயம் உணர்ந்தான்.

தயங்கி தயங்கி அருகில் போய் அமர்ந்தான்.

“தெரிஞ்சோ தெரியாமலோ உன் இழப்புக்கு காரணமாயிட்டேன். ஏதாவது பிராயசித்தம் பண்ண தோணிச்சு.என்னால முடிஞ்சது.என் இத்தனை நாள் சம்பாத்தியம். நீ வாங்கிதான் ஆகணும்” என்று அவன் பெயருக்கு எழுதிய காசோலையை அவனருகே வைத்துவிட்டு எழுந்தான்.

சரவணன் நிமிர்ந்த பார்வையில் அடிபட்ட வலி தெரிந்தது.. ஸ்டீபன் திரும்பி பாராமலே நடக்க “நில்லுடா” என்றான்.

நின்றவன், அவன் கோப முகம் கண்டு பதறினான்.

“உனக்கு பிராயசித்தம் செய்யணும்னா இப்படி பணத்தாலதான் அடிப்பியா. இந்தா உன் பணம். யாருக்கு வேணும்.எடுத்துட்டுபோ.”
இவன் மௌனமாயிருந்தான். சரவணன் குரல் தாழ்த்தி மெதுவாகச் சொன்னான்.” அதுக்கு ஈடா இன்னொரு காரியம் செய்ய முடியும். செய்வியா.”

இவன் ஆர்வமானான்.யோசியாமல் “ம்” என்றான்.

“ அப்ப....பழையபடி நாம பிரெண்டா இருக்கலாமா..”

ஸ்டீபன் மனம் துள்ளியது.ஆனாலும் பேசவில்லை. இவன் அமைதி கண்டு சரவணன் தொடர்ந்தான்.

“எல்லாரும் என்னை தலைவா, தலைவான்னு சொன்னாங்கடா.அதிலேயே என் புத்தி மயங்கிப் போச்சி. எதாவது செய்து அவங்களை அசத்தணும்னு தோண வச்சிட்டாங்கடா.பாரு அண்ணன் தம்பியா பழகிட்டிருந்த நாம ரெண்டாயிட்டோம். எல்லாம்... எல்லாம் எதுக்கு என் பதவியை மெய்ன்டைன் பண்றதுக்கு....”

சரவணன் கண்களில் நீர் திரண்டது.

“மதத்துக்காக அடி போட்டோம். மனுசன் போயிட்டா மதம் எப்படி இருக்கும்.இப்பொ மெதுவா புரியுதுடா.”

ஸ்டீபன் பார்வை சரவணன் காயத்தில் நிலைத்தது.

“என் கழுத்துக்கு வச்ச குறி. என்னை தலைவான்னு கூப்பிட்டவங்க விட்டுட்டு ஓடிட்டாங்க. நீ வந்து உன் தலையை குடுத்தியேடா. யாருக்கு வரும் அந்த மனசு. உன் ப்ரெண்ட்ஷிப்பை நான் இழந்திட்டேண்டா. என் உயிர நீ காப்பத்தின . அதுக்கு தாங்ஸ் சொல்ல கூட நான் தகுதியில்ல....”

ஸ்டீபன் பதில் பேசாது அவனருகே சென்றான். காப்பாற்றியது சரவணனின் உயிர் மட்டுமல்ல; உள்ளமும்தான் என்ற நினைப்பு சந்தோசம் தந்தது.அருகில் போய் அவன் மூக்கு நுனியை நிமிண்டிக் கொண்டு சினேகமாய் சிரித்தான். எப்போதோ சரவணன் சொன்ன கவிதை நினைவில் ஓடிற்று.

“ நாம் இழந்தது மிக சொற்பமடா.
இனி இழப்பு துக்கமில்லையடா.
நட்பே உலகில் சொர்க்கமடா.
தெளிந்தோம் நாம் மனித வர்க்கமடா.”

கா.ரமேஷ்
15-07-2009, 10:59 AM
அருமையான கதை வாழ்த்துக்கள் .............

நேசம்
15-07-2009, 11:30 AM
நமமக்கு உண்மையில் என்ன தேவை என்பதை மறந்து.....சரவணை போல் எத்தனை பேர் இருக்கிறொம் என்று தேரியவில்லை வாழ்த்துகள் ஜார்ஜ்

கீதம்
17-07-2009, 02:37 AM
சக மனிதர்களை சாதி, மதம், இனம், மொழி கடந்து நேசிக்கத் துவங்கினால் மட்டுமே உலக அமைதி சாத்தியம். தங்கள் ஆதங்கத்தை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுகள்!

சிவா.ஜி
20-07-2009, 01:44 PM
முதலில் பதவிக்காக, அதை அடைய என்ன வேண்டுமானாலும் செய்வது, அடைந்ததும் அதை தக்க வைத்துக்கொள்ள மேலும் அராஜகங்கள் செய்வது இதுவே வாடிக்கையாகிவிட்ட இந்த உலகத்தில், நல்ல நட்பு...பாதை மாறிப் போனவனையும் நல்வழிக்குத் திருப்பமுடியுமென சொல்லும் பாசிட்டிவ் அப்ரோச் உள்ள கதை.

வழக்கம்போல கதை சொல்லும் அசத்தலான உத்தியால், சுவாரசியம் குறையாமல் இருக்கிறது. எதார்த்தமான உரையாடல்கள், சம்பவங்கள் என அனைத்துமே அருமை.

மனமார்ந்த பாராட்டுக்கள்+வாழ்த்துகள் ஜார்ஜ்.

த.ஜார்ஜ்
20-07-2009, 04:13 PM
கதை பதிப்பித்த சில நிமிடங்களிலே வாசித்து வாழ்த்து சொன்ன நண்பர் கா.ரமேஷ்க்கு என் வந்தனங்கள்.

த.ஜார்ஜ்
20-07-2009, 04:17 PM
நட்புக்குரிய நேசம்
ஊக்கமிகு பின்னூட்டத்துக்கு நன்றி



கீதம்
உங்கள் கருத்துகள் பதித்ததற்கு நன்றியும், நட்பும்.

த.ஜார்ஜ்
20-07-2009, 04:21 PM
பிரியமுள்ள சிவா..
உற்சாகம் தரும் உங்கள் வார்த்தைகள் எனக்கு உரமாகும்.
நன்றி நண்பா.

பாரதி
21-07-2009, 09:32 AM
அன்பு ஜார்ஜ்,

மனிதர்களை உண்மையாக நேசிப்பவர்கள் இருக்கும் வரையில் இந்த உலகம் இயங்கிக்கொண்டுதானிருக்கும். மதங்கள் வளர்ந்தது மனிதத்தை வளர்க்க என்பதை உணரா இயக்கங்கள் இருக்கும் வரைக்கும் பிரச்சினைகளும் இருந்து கொண்டுதானிருக்கும்.

எல்லாவற்றையும் மீறி அடிமனதில் ஈரமும் நேசமும் இருக்கும் என்பதை உணர்த்திய நட்பை விளக்கிய கதையைப் பாராட்டுகிறேன். நல்ல கதையை மன்றத்தில் தந்தமைக்கு நன்றி.

விகடன்
23-07-2009, 02:19 PM
நல்லதோர் கருவை வைத்து எழுதியிருக்கிறீர்கள். மதத்தால் பிரிவதை தவிர்க்கச் சொல்லியிருப்பது வரவேற்கப்படவேண்டியதே.

இறுதியில் எழுதப்பட்ட அந்த நான்கு வரிகளை சிலதடவை படித்துப் பார்த்தேன். ஏனோ அதில் ஓர் ஈர்ப்பு. அவ்வளவுதான்.

த.ஜார்ஜ்
26-07-2009, 07:04 AM
நட்புமிகு நண்பர்களே.
இக்கதை சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப் படுமோ என்று தயக்கத்தோடுதான் பதிப்பித்தேன்.
நட்பு மனம் கொண்ட உங்களால் சரியாகவே உணர்ந்து கொள்ள முடிந்திருக்கிறது.
நன்றி பாரதி.

நன்றி விராடன்.

அமரன்
26-07-2009, 06:09 PM
நாம் இருட்டில் இருக்கையில் நம் அறிவுமதி மயங்கும் கணத்தில் இத்தகைய இயக்கங்களின் முகில் வெற்றி தங்கி உள்ளது. சடுதியில் அடிக்கும் நறுமனக்காற்றில் முகில்கள் கலைந்து விட காலம் கடந்திருக்கும். ஆனாலும் நல்ல காலம் மலர்ந்து விடும்.

நட்பின் நல்லாசான் முகத்தினை எடுத்தாண்டிருப்பது கதைக்கு சிறப்பூட்டுகிறது.

தொய்வில்லாமல் பயணிக்கும் கதையில் பாத்திரங்களின் அசைவு அப்பட்டமாகத் தெரிகிறது.

இது போன்ற கதைகளாவது மதயானைகளுக்கு அங்குசமாகட்டும். பாகன் ஜார்ஜுக்கு பாராட்டுகள்.

பாலகன்
26-07-2009, 07:18 PM
நாம் மதத்தால் காப்பாற்றப்படும் போது இனிமையாக இருக்கும், அந்த நன்றிக்காக நாம் மதத்தை காப்பாற்ற நினைத்தால் நமக்கு யானைக்கு பிடிக்கும் மதம் பிடிக்கும், என்ன ஒரு அருமையான கதை (இது கதை மாதிரி தெரியவில்லை நிஜம் போல இருக்கு)

நல்ல எழுத்து நடையில் தந்த அன்பர் ஜார்ஜ்க்கு என் பாராட்டுக்கள்

செல்வா
27-07-2009, 01:13 PM
இது கதையல்ல நிஜம். எல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நட்பால் இணைவதை விட நட்புகள் உடைந்து தெறித்துக் கொண்டு தான் இருக்கிறது.

நட்பால் இவை மாறிவிடாதா? என்ற எதிர்பார்ப்பில் எழுந்த கதை...

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று எப்போதோ கூவிவிட்டார் பூங்குன்றனார்.

கேட்கத்தான் யாரும் இல்லை .... என்ன செய்வது?

இளசு
28-07-2009, 06:22 PM
அன்பு ஜார்ஜ்,

மனிதர்களை உண்மையாக நேசிப்பவர்கள் இருக்கும் வரையில் இந்த உலகம் இயங்கிக்கொண்டுதானிருக்கும். மதங்கள் வளர்ந்தது மனிதத்தை வளர்க்க என்பதை உணரா இயக்கங்கள் இருக்கும் வரைக்கும் பிரச்சினைகளும் இருந்து கொண்டுதானிருக்கும்.

எல்லாவற்றையும் மீறி அடிமனதில் ஈரமும் நேசமும் இருக்கும் என்பதை உணர்த்திய நட்பை விளக்கிய கதையைப் பாராட்டுகிறேன். நல்ல கதையை மன்றத்தில் தந்தமைக்கு நன்றி.



அன்பு ஜார்ஜ்

பாரதி எழுதிய வரிகளுக்கு
நானும் சொந்தம் கொண்டாடுகிறேன்..
அச்சாய் என்னிலும் உதித்த கருத்து...

பாராட்டுகள்!


மதநல்லிணக்கம் வேண்டும் கதைகள் மன்றத்தில் படைத்த
சிவா, செல்வா - இருவரின் பாராட்டுகள்
ஜார்ஜின் கதைக்குக் கிட்டிய சிறப்பு அங்கீகாரம்!

த.ஜார்ஜ்
29-07-2009, 05:08 AM
நட்பால் இவை மாறிவிடாதா? என்ற எதிர்பார்ப்பில் எழுந்த கதை...

கேட்கத்தான் யாரும் இல்லை .... என்ன செய்வது?
உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இளைய சமுதாயம் முன்போல இல்லை.நட்பை போற்றுகிற,ஈடுபாட்டுக்கும் வெறிக்கும் வித்தியாசம் இருப்பதை உணர்கிற பக்குவம் பரவலாகிவருவதை காணமுடிகிறது.நம்பிக்கை கொள்வோம். நல்லது நடக்கும்.

த.ஜார்ஜ்
29-07-2009, 05:15 AM
என்ன ஒரு அருமையான கதை (இது கதை மாதிரி தெரியவில்லை நிஜம் போல இருக்கு)



ஆம். இது ஒரு சரித்திரக் கதை.80 - களில் நிகழ்ந்திருக்கலாம்.!!!!!

மன்னனும் போரும் மட்டும்தான் சரித்திரமாக முடியுமா ?
நம் சரவணனும் இருந்து விட்டு போகட்டுமே

த.ஜார்ஜ்
29-07-2009, 05:41 AM
அன்பு ஜார்ஜ்

பாரதி எழுதிய வரிகளுக்கு
நானும் சொந்தம் கொண்டாடுகிறேன்..
அச்சாய் என்னிலும் உதித்த கருத்து...

பாராட்டுகள்!



உங்கள் இருவரிலும் ஒரே கருத்து உதிக்க இக்கதை காரணமாக இருந்ததா. என்ன ஒரு கருத்தொற்றுமை.
நன்றி இளசு.


நாம் இருட்டில் இருக்கையில் நம் அறிவுமதி மயங்கும் கணத்தில் இத்தகைய இயக்கங்களின் முகில் வெற்றி தங்கி உள்ளது. சடுதியில் அடிக்கும் நறுமனக்காற்றில் முகில்கள் கலைந்து விட காலம் கடந்திருக்கும். ஆனாலும் நல்ல காலம் மலர்ந்து விடும்.

வேலை வாய்ப்பின்மைதான் இளைஞர்களை தவறான வழிக்கு இழுத்துக் செல்கிறது.

குமரி மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு கலவரசம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சதாசிவன் கமிசன் அறிக்கையில் சொல்லப்பட்ட ஒரு கருத்து இது.

ஆகவே நாம் உடனடியாக கவனிக்க வேண்டியது அதுவாகத்தான் இருக்கமுடியம்.

உங்கள் நம்பிக்கை வெல்லும் அமரன்.
நன்றி.

ஆதி
29-07-2009, 10:52 AM
நம்மை கடவுளாக்கத்தான் மதங்கள் பிறந்தது.. நாம் மதத்தை கடவுளாக்கி மனிதர்களை கொன்று கொண்டிருக்கிறோம்..

ஒரு நட்பின் உண்மை நிலையை புரிந்து கொள்ள ஒரு கையை இழக்க வேண்டியதாக்கிவிட்டது சரவணனுக்கு..

கதை அட்டகாசம் த.ஜார்ஜ் பாராட்டுக்கள்..

த.ஜார்ஜ்
29-07-2009, 02:27 PM
நம்மை கடவுளாக்கத்தான் மதங்கள் பிறந்தது.. நாம் மதத்தை கடவுளாக்கி மனிதர்களை கொன்று கொண்டிருக்கிறோம்..



கதைக் கருவை மிக கச்சிதமாகக் சொல்லி விட்டீர்கள்.
நன்றி ஆதி.