PDA

View Full Version : தவற விட்ட மழை - 2...



சசிதரன்
08-07-2009, 03:56 PM
இரவு முழுதும் பெய்த மழையை...
அதிகாலையிலேயே உணர செய்தது...
கிளர்ந்தெழுந்த மண்வாசமும்...
தழுவி சென்ற ஈர காற்றும்.

மழையோடு விடியும் பொழுதுகள்...
உலகத்தையே புதிதாக்கி விடுகிறது.
ஊரிலுள்ள அத்தனை வீடுகளுக்கும்...
வாசல் தெளித்து வைத்திருக்கிறது மழை.

அலுவல் கிளம்பும் பொழுதுகள்..
வழக்கம் போல் இல்லை.
குளியல் முடித்து வெளியேறுகையில்...
உடலுக்குள் ஊடுருவும் மெல்லிய குளிர்..
இதயம் வரை பாய்கிறது.

சாலையெங்கும் தேங்கி நிற்கும்...
மழை நீரை தாண்டி குதிக்கையில்...
பள்ளிக் காலங்களில் அம்மா கைப் பிடித்து..
மழை சாலைகளில் நடந்த ஞாபகங்கள்.

மெல்லிய சாரலோடு மீண்டும் மழை...
மேகம் விட்டு இறங்க தொடங்குகிறது.
நனைந்து கரையவே விருப்பமென்றாலும்..
தயங்கி தயங்கி விலகி செல்கிறேன்.

ஐயோ மழை என்றபடியே...
குடை கொண்டு மழை தவிர்க்கும்..
மனிதர்களில் நானும் ஒருவனாகிறேன்.

ஐ.. மழை என்றபடியே...
குடைக்குள்ளிருந்து வெளியே கை நீட்டும்...
குழந்தைகளின் கைகளுக்குள் மொத்தமாய்...
அடைக்கலமாகிறது மழை.

தொலைந்து விட்டதாய் நினைத்திருக்கும் பால்யம்...
உண்மையில் தொலைந்து கொண்டிருக்கிறது...
ஒவ்வொரு முறை மழை தவிர்த்து
நான் ஒதுங்கும் போதும்.

நாகரா
09-07-2009, 04:07 AM
இயற்கை நேசம் போனது
செயற்கை வேடம் ஆளுது
மழையில் நனையும் மனமில்லை
நெஞ்சில் ஈரமுந் துளியில்லை
மனிதம் இயந்திரமானதால்
உணர்வு மறத்துப் போனது

வலிக்கும் வரிகளால்
தொலையும் மனிதத்தை
ஞாபகமூட்டும் உம் கவிதை
அருமை

வாழ்த்துக்கள் சசிதரன்

அமரன்
09-07-2009, 09:49 AM
எளிமையான சொற்களில் வலிமையான கவியீர்ப்புவிசை. கவர்ந்திழுக்கும் கருவலிமை. பாராட்டுகள் சசிதரன்.

இதேபோல் ஓரனுபவம் நேற்று எனக்கும் நேர்ந்தது.

நானும் தங்கையும் கடைத்தெருவுக்குப் போய்விட்டுத் திரும்புகையில் மேகம் மெல்லியதாய்க் கறுத்தது. நிலத்தை மென்மையாக முத்தமிடத் துவங்கியது. தங்கைக்குள் ஆனந்த வெள்ளம் பெருக்கெடுத்தது.. மழையில் நனைய விரும்பினாள். ஓரடி வைத்திருப்பாள்.. திரும்பிச் சிணுங்கினாள். " ம்ஹும்.. ஐஸ் கரைஞ்சுபோமேண்ணா" (நான் கரைஞ்சு போனேன் என்பது வேறு விசயம்)

அந்த நிலையை கவிதையில் காண்கிறேன்.

பாரதி
09-07-2009, 12:04 PM
கவிதை நன்றாக இருக்கிறது சசி.

மழை என்றாலே பரவசம்தான் - கவிமழை என்றாலும் கூட.

பொதுவாக வழக்கு மொழியில் தவற விடுதல் என்றால் வேண்டுமென்றே செய்யாமல் - தொலைத்தல், தவறவிடுதல்,தாமதப்படுதல், .... .... என்று பொருள்படும் என கருதுகிறேன்.

கவிதையில் இருக்கும் கருத்து - விரும்பியும் விரும்பாமலும் விலகிச்செல்லுதல், தவிர்த்தல் போலத்தோன்றுகிறது.

பா.ராஜேஷ்
09-07-2009, 02:03 PM
உங்களின் கவிதையும் மழையை போல் மிக அழகாக உள்ளது! பாராட்டுக்கள் நண்பரே!

கா.ரமேஷ்
10-07-2009, 08:51 AM
மழைக்கும் மனதுக்கும் பூர்வ பந்தம் இருக்கும் போல .... அதுதான் எந்த ஒரு நேரத்திலும் மழைபெய்தால் லயித்து விடுகிறோம்...

நல்ல மன வெளிப்பாடு மிக்க கவிதை.... மழைவிட்ட வானம்போல் மனதும் வெளிச்சம் கொள்ளட்டும்.... வாழ்த்துக்கள் தோழரே....

சசிதரன்
13-07-2009, 02:21 PM
நன்றி நண்பர்களே...:)

சிவா.ஜி
15-07-2009, 06:44 AM
மழையைத் தவறவிட்டாலும் உணர்வுகளை படம்பிடித்து வரிகளாக்கி வழங்கியிருக்கும் விதம் அருமை.

ஐ...மழை என இன்றும் நனையத்தான் ஆசை. ஆனால் அனைவரையும்போல குடைக் காவலனைக் கொண்டு மழைவிரட்டும் மேல்வர்க்கமாகிவிட்டதை எண்ணி வேதனைதான் மிஞ்சுகிறது.

ஆனால் இக்கவிதை வாசித்து வலியும், சந்தோஷமும் ஒருங்கே தோன்றுகிறது. வாழ்த்துகள் சசி.

சசிதரன்
29-07-2009, 04:50 PM
மிக்க நன்றி சிவா அண்ணா...:)

இளசு
29-07-2009, 07:37 PM
குழந்தையின் கையில் மொத்த அடைக்கலமாகும் மழை..
அந்த வரியில் மொத்த அடைக்கலம் இக்கவிதை!


பாராட்டுகள் சசி..

பின்னூட்டங்கள் கூடுதல் மழையனுபவம்...
பாராட்டுகள் அனைவருக்கும்-குறிப்பாய் அமரன், நாகரா அவர்கள்...

பூமகள்
30-07-2009, 10:04 AM
"மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்..!
ஒரு கருப்பு கொடி காட்டி யாரும்
குடை பிடிக்க வேண்டாம்..!!" - வைர முத்துவின் இவ்வரிகள் சொல்லும் சேதி போலவே இக்கவிதையும்..!!


ஐயோ மழை என்றபடியே...
குடை கொண்டு மழை தவிர்க்கும்..
மனிதர்களில் நானும் ஒருவனாகிறேன்.

ஐ.. மழை என்றபடியே...
குடைக்குள்ளிருந்து வெளியே கை நீட்டும்...
குழந்தைகளின் கைகளுக்குள் மொத்தமாய்...
அடைக்கலமாகிறது மழை.
வெகு அழகான முரண்..

நிதர்சன வாழ்க்கையின் இழுப்புக்கு இடையில் இவ்வகை தியாகங்கள் மழலை உள்ளத்தைத் தொலைக்கவே செய்கின்றன..

மழைக்கும் இனி நேரம் ஒதுக்குவோம். :) வெகு அருமையான கவிதை. வாழ்த்துகள் சசி.. ரசித்தேன்.. வியந்தேன்.. நனைத்தேன். :)

சசிதரன்
30-07-2009, 05:14 PM
அழகான விமர்சனம் தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி இளசு அண்ணா மற்றும் பூமகள்...:)