PDA

View Full Version : மறதி



கீதம்
06-07-2009, 07:00 AM
வாவென்றழைத்த கணமே
வந்தென் வாய்குவியும் வார்த்தைகளும்
மனங்குவியும் மொழிகளும்
அடம்பிடித்தோடும் குழந்தைகளாய்
இன்றென் வசப்பட மறுக்கின்றன!

நிகழ்வுகளைக் கொட்டிக் கொட்டி
நிறைத்துவைத்த நினைவுக்கிடங்கும்
ஆடிமுடிந்த மைதானமென
ஆளரவமற்றுக் காட்சியளிக்கிறது!

எதிரிலிருப்பவனின்
அகன்ற நெற்றியும்,
புருவஞ்சுழித்தப் பார்வையும்
எவரையோ நினைவுறுத்த,
எஞ்சியிருக்கும் என்
ஞாபகப்பொதியிலிருந்து
எத்தனையோ பக்கங்களைப்
புரட்டிப்பார்த்தும்,
பிறர் சொல்லாமல்
அறிய இயலவில்லை,
அவனென் அன்புமகனென்று!

ஆழ்ந்த பெருமூச்சுடன்
அலுத்துக்கொள்கிறான் அவனும்,
இது ஆயிரமாவது
அறிமுகப்படலம் என்று!

சிறுபிள்ளைகள் கட்டிய
மணல்வீடெனச் சரிகிறது,
என் நினைவுக்கோட்டை!

முழுதும் சரிந்து மண்ணாகுமுன்னே
எழுதிட நினைத்தேன் எவ்வளவோ!

சட்டெனத் தோன்றியத்
தயக்கமொன்றால்
தடுமாறி நிற்கிறது, பேனா!

எனக்கென்று ஒரு பெயர்
இருந்திருக்கவேண்டுமே,
எவரேனும் அறிவீரோ அதை?

அமரன்
06-07-2009, 07:58 AM
இது சாதாரண மறதி மாதிரித் தெரியவில்லை. மிகவும் கனமான மறதி. இதுபோன்று படிமங்களால் கனதியான கவிதைகளைப் படித்து வெகுநாளாயிற்று. மீண்டும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

எப்படி எடுத்துக்கொள்வது இந்தக் கவிதையின் பொருளை. வஞ்சிக்கப்பட்ட வஞ்சியின் பித்தான மனமாகவா. வஞ்சிக் கொடியாட்டம் மனங்கவர் கவிதை வரையும் கிறுக்கியாகவா.

எப்படிக் கொண்டாலும் பொருந்திக்கொள்கிறது பொருள். பொருளுக்காகப் பாடாத கவிகள் சுயநலமற்ற தன்னை மறந்த கோயில்குயில்களே. இன்னும் சிலர் சுயமிழந்தவர்கள் என்றும் சொல்லலாம்.

பொருட்புரிதல் தவறெனில் பொறுத்தருள்க.

கவிதையின் முடிவில் மிஞ்சிய ஒரு வித மன இறுக்கத்துடன் பாராட்டுகிறேன் கீதம்!

இளசு
16-07-2009, 06:00 PM
பாராட்டுகள் கீதம்..

மேற்கில் பரவலானதும், கிழக்கில் பரவிவருவதுமான
''Dementia'' - பலரது உடல்களை வாழவிட்டு , மூளையை மெல்ல சாகடிக்கிறது..

பலமுறை மகனே அறிமுகப்படுத்திக்கொள்வது - எத்தனை துயரம்..!

அவர் அப்பாதான்.. அவருள் அப்பா இல்லை!
எத்தனை வேதனை!

அப்படிப் பாதிக்கப்பட்ட ஒருவர் கவிதை வடித்தால்
இப்படித்தான் வடிப்பார்!

பாராட்டுகள்!

ஆதவா
22-07-2009, 04:49 PM
நன்கு ஆழ்ந்து யோசித்து எழுதிய வரிகள்
ஒன்றையொன்றி விஞ்சி நிற்கும் வார்த்தைகள்
பிரமாதமான கவிக்கரு!!

நீண்டநாட்களாக "குறைநேர நினைவிழப்பு" என்ற கருவில் எழுத நினைத்து முடியாமல் போய்விட்டது. உங்கள் "மறதி" பிரமாதமாக வந்திருக்கிறது!!!

தொடருங்கள் கீதம்

கீதம்
23-07-2009, 08:21 AM
பின்னூட்டமிட்டுப் பாராட்டும், விமர்சிக்கும் அன்பு நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

aravinthan21st
02-08-2009, 02:07 PM
கீதத்துக்கு வணக்கம் ,
அமரன் சொன்னதுபோல் வஞ்சிக்கபட்ட தாயோ அல்லது தளர்ந்த தந்தையாகவோ இருக்கலாம். எப்படியோ சிறந்த உவமைகள் மற்றும் வார்த்தை பிரயோகம்.வளர்க உம் பணி வளப்படுத்துக எம்மை.

அமரன்
02-08-2009, 09:24 PM
வாங்க அரவிந்தன்!

வந்ததும் கவிதை, கதைப் பக்கம் பின்னூட்ட ஆரம்பித்து விட்டீர்கள். வாழ்த்துகள்.

உங்களைப் பற்றிய சிறிய அறிமுகத்தை உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கொடுத்திடுங்களேன்.

மஞ்சுபாஷிணி
10-08-2009, 05:22 AM
மறதி....

அருமையான வார்த்தைகள்... எனக்கு அடிக்கடி இதுபோன்ற பயம் ஏற்படுவதுண்டு... என் பெயரை பலமுறை விடாமல் உச்சரிக்கும்போது சட்டுனு தோன்றும் எண்ணம் மஞ்சு?? மஞ்சு யார் அப்டின்னு... அருமையான கவிதை கீதம்... நன்றி....

செல்வா
11-08-2009, 04:09 AM
சிறிய உட்கருவைச் சுற்றியிருக்கும்
கனமான கவி....
பிளந்து பார்க்கும் போது அணுவின் ஆற்றல்...

வார்த்தைகள்.... அலைக்கழிக்கின்றன மனதை...

தொடருங்கள் கீதம்.