PDA

View Full Version : சிகரெட் புகையில் புதையத்துடிக்கும் இரவுகள்



shibly591
03-07-2009, 07:11 AM
சிகரெட் புகையில் புதையத்துடிக்கும் இரவுகள்

மது ஊற்றிய கோப்பையில் வழியும்
நுரையெனப்பொங்கித்ததும்பும் துயரங்கள்
மீள முடியாத பொருஞ்சோகமொன்றை என்னில்
வரைந்து கொண்டிருக்கிறது கோணல் சித்திரமாய்….

யார் நானென்ற விடையற்ற வினாவொன்றின்
விளங்க முடியா மழலைக்கிறுக்கல்களாய்..
கேள்விக்குறியில் துகள் துகளாய் தெரிகிறேன் நான்

சங்கடங்கள் செதுக்கிய விதிப்பாதையின்
ஒற்றையடித்திக்குகளில் மது வாசனை மிதக்கும் சாத்தான் ஒருவனை
இப்போதெல்லாம் தினந்தோறும் கனவுகளில் இடையறாது காண்கிறேன்

புகையில் தவழும் என் கைவிரல்கள் பற்றி
கவிதை எழுதும் அச்சமொன்று
புற்று நோயாய் என்னுள் இருமிக்கொண்டிருக்கிறது..

சிகரெட் சாம்பலில் கருகிக்கொண்டிருக்கும்
என் நரக நாட்களின் அந்திமப்புள்ளிகளில்
சூனியம் நிறைந்த அடர் காரிருள் தவிர வேறில்லை..
செத்துப்போகலாம்தான்...
என்ன செய்வது..துயரங்கள் உறைந்த வாழ்க்கைப்பக்கத்தின்
கடைசி வரியை எழுதத்தெரியாத பரதேசி நான்.

இன்னுமொரு கவிதையை விரக்தியின் விளிம்பில்
நின்றெழுதும்போது சொல்கிறேன் இன்னும் இன்னும்..

நிந்தவூர் ஷிப்லி

இளசு
03-07-2009, 05:58 PM
ஊழ் என்றொரு சொல் உண்டு..

அழிவு, சூன்யம், அந்திமம் நோக்கிச் செல்லும் பாதையில்
மதுதான் பன்னீர்... புகையே அகில்!

இயலாமை, விரக்தியில் செயல்முடங்கி சிந்தனை மழுங்கி
இப்படி இரட்டைவாகன அழிவுப்பயணம் செய்வோர் பலர்..

தற்காலிக சிறுபயணங்கள் பலரும் போவதுதான்..

ஆனால் முடிவின்றி முடிவை நோக்கி போவது???????

அதில் சுதாரித்து விடுபட்டு பாதை மாறுவோர் -தேறுவார்..
சுயமாகவோ அல்லது கிரியா ஊக்கியாலோ
மாற்றம் வருவதே நல்லது...

கவி நாயகனுக்கு விரைவில் வெளிச்சம் வாய்க்க வாழ்த்துகள்!