PDA

View Full Version : ஏதுமில்லாதவன்



கீதம்
03-07-2009, 03:16 AM
இருப்பவனின் கவலைக்கு
இருக்கவே இருக்கிறது,
காரணம் ஆயிரம்!
இல்லாதவனுக்கோ
இல்லாமற்போனது அதுவும்!

கிளைபரப்பிக் குளிர்தரும்
தெருவோரத் தருவொன்றின்
எழும்பிய வேர்முடிப்புகளில்
தலைசாய்த்துப் படுத்தபடி
தாராளமாய்க் காணும்
கனவுகளில் பயணிக்கின்றன,
நாளைக்கான நம்பிக்கைகள்!
கண் விழித்தபோதோ
கை நழுவிப்போயிருக்கும் அவனது
நைந்து போன ஆசைகள்!

விடியலுக்கு முன்னே
விடிகிறது அவன் பொழுது;
ஊரடங்கிய பின்னும்கூட
அடங்கவில்லை சாண் வயிறு!
அன்றாடம் உணவு வழங்க
அமுதசுரபியா என்ன,
அவனது பிச்சைப்பாத்திரம்?

நிலையாய் ஓரிடம் நில்லாது
அலைபாயும் மானுடச்சங்கமத்தில்
அவனும் ஓர் அங்கமென
அறியப்பட்டதில்லை எந்நாளும்!
ஆனபோதிலும்,
அவன் வாழ்கிறான்!

'வாழ்கிறான்' என்பதும் ஓர்
வார்த்தை ஜாலம்!
'இன்னும் உயிரோடிருக்கிறான்'
என்பதே மிகப்பொருத்தமாகும்!

அமரன்
03-07-2009, 08:32 AM
தொடருந்துதலில்
தடதடத்து சப்திக்கும்
இரும்புப் பாதங்கள்..

முந்திச் செல்லுதலில்
தேய்ந்து போகும் வலியில்
கதறும் இறப்பர்கள்..

ஜோடி மோகத்தில்
கதைகள் பேசிக்கொள்ளும்
சில்வர் மணிகள்..

இப்படி
இரைச்சல்களுக்கு நடுவில்
இயைந்த தூக்கத்துடன்
வியப்பூட்டுகிறான் யாசகன்..

பசி மயக்கமோ..
அலைச்சல் அசதியோ..
போதையின் ஆட்சியோ..
எந்தப் பெருஞ்சாளி குடைந்தும்
எந்தன் வியப்பு உடையவில்லை.

என்னிடம் இல்லாதது..
அவனிடம் இருப்பது..
பட்டியலிடுகிறது மனசு.

என்னிடம் இருப்பவை
என்னை அடைவதுக்காய்
என்னில் வெளியேறியவை
அவனிடம் சரணித்தவை..

சுளீரிட்டது
பற்றிய பசி நெருப்பு.
உச்சந்தலை தகிப்பு..

உயிருடன் இருக்க
நகரத் துவங்கினேன்..

*****************************************

உலகின் கறும்புள்ளிக*ளில் ஒன்று
அடிப்படை வசதிகள் இல்லாத குமுகம்.

பாராட்டுகள் கீதம்

நாகரா
06-07-2009, 09:47 AM
இருப்பவன் மட்டும்
வாழ்கிறானா என்ன
இருதயத்தை இழுத்து மூடி
முகத்தில் நாகரீகத்தை அழுத்திப் பூசி
இயந்திரமாய் நகர்கிறான்

வறுமையின் அவலத்தைப் படம் பிடிக்கும்
உம் கவிதை அருமை, வாழ்த்துக்கள் கீதம்

நாகரா
06-07-2009, 09:55 AM
நகர நகர்வில்
யாசகனின் தூக்கம்

அமரனின் கவிக் கேமராவில்
கைதாகியிருக்கிறது ஒரு குறும்படம்

வாழ்த்துக்கள் அமரன்

நாகரீகச் செழிப்பு
தயவாய் இருந்தால்
அலங்கோல வறுமை
நகரில் இருக்குமா!

வசீகரன்
06-07-2009, 12:43 PM
இருப்பவன் மட்டும்
வாழ்கிறானா என்ன
இருதயத்தை இழுத்து மூடி
முகத்தில் நாகரீகத்தை அழுத்திப் பூசி
இயந்திரமாய் நகர்கிறான்


அருமையான உதாரணம் அண்ணா......

நல்லதொரு கவிதைதந்த திரு.கீதம் அவர்களுக்கு பாராட்டுக்கள்...!

சசிதரன்
06-07-2009, 01:57 PM
நல்ல கவிதை கீதம் அவர்களே...:)

சிவா.ஜி
06-07-2009, 02:04 PM
இல்லாதவனின் இல்லா நிலையை மிக அழகிய வரிகளில் அளித்திருக்கிறீர்கள் கீதம். உண்மைதான்...அவன் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை....உயிரோடு இருக்கிறான்.

மிக அருமையான கவிதை. வாழ்த்துகள் கீதம்.

இளசு
06-07-2009, 06:39 PM
நம்மில் பலர் சில நேரம்
சிலர் பலநேரம் -

வாழாமல் - வெறுமனே இருத்தல் செய்கிறோம்..

ஏன்?

உயிர் தரித்திருத்தல், உண்ணல், வளர்தல், இணைதேடல், சந்ததி பெருக்கல்..
உபாயங்கள் அறிதல், மென்மேலும் உயர்தல் - எனும் இயற்கை வழங்கும்
உயிரிப்பண்புகள் மங்கிவிடும் இந்நிலை ஏன்?

இதும் இயற்கையின் சதிதானா?

இப்படி யோசிக்கவைத்த கவிதை தந்த கீதம் அவர்களும்
மிக அருமையான பின்னூட்டங்களால் இத்திரியை ஒளியேற்றிய
அன்பு அமரனுக்கும், நம் நாகரா அவர்களுக்கும் -

வாழ்த்துகள்..

கீதம்
06-07-2009, 10:52 PM
விமர்சனப் பின்னூட்டங்கள் மூலம் ஊக்கம் தந்துகொண்டிருக்கும் நண்பர்களுக்கு என் கனிவான நன்றி. அன்புடன் கீதம்.

கா.ரமேஷ்
07-07-2009, 05:49 AM
அருமையான கவிதை கீதம் வாழ்த்துக்கள்...!

மஞ்சுபாஷிணி
10-08-2009, 05:24 AM
அருமையான கவிதை கீதம்...

உடன் பின்னூட்டத்தில் அசத்திய அமரன், நாகரா அவர்களின் கவிதைக்கும் நன்றி நண்பர்களே...

செல்வா
11-08-2009, 04:04 AM
வலுத்தவன் வாழ்வான்....
வலுப்பதற்காக... வாழ்கிறோம்
வாழ்வதற்காக வலுக்கிறோம்...

உடலால் வலுத்தநிலை மாறி
பணத்தால் வலுக்கும் நிலைக்காக
அறிவைப் பயன்படுத்தி
அறிவைக் கட்டுப்படுத்தும் உணர்வுகள் அழிந்து வருகின்றன...

வாழ்த்துக்கள்.... கீதம் மற்றும் அமரன்.