PDA

View Full Version : கூட்டுப் புழு



த.ஜார்ஜ்
30-06-2009, 01:06 PM
யப்பா! பதினாறு வருடங்கள்.

இந்த அழுக்கடைந்த அடுக்களையே உலகமாகி, அதன் துர்நாற்றமே சுவாசமாகி, அதன் இருட்டே வாழ்க்கையாகி.... அந்த கொடிய நரகம் இன்றோடு முடிந்து விடப் போகிறதா?

சே! என்ன கேவலமான அடிமை வாழ்க்கை.

இந்த ஊர் எப்படி இருக்கும்.அதன் தெருக்கள்.மனிதர்கள்,அவர்கள் வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கும் என்று எதுவுமே தெரியாத சிறை மாதிரி.....

பார்க்க வேண்டியவைகள பார்க்கக் கூடாமலும்,பேசத்தெரிந்தும் யாருடன் பேசுவது என்று தெரியாமல் மௌனத்தை சேமித்து..... இதெல்லாம் முடிந்து விடப் போகிறதா.

அப்பப்பா.... இன்று ஒரு நாளையும் சகித்துக் கொள்ள வேண்டும். பிறகு.....

இவள் மூன்று வயதிலேயெ இந்த வீட்டுக்கு வேலைக்காரியாக வந்து விட்டவள். வீட்டுக்காரம்மா கதைகதையாய் சொல்வதிலிருந்து தெரிந்து கொண்டதுதான் இது.புருசனால் கைவிடப் பட்ட இவளது தாய்- அதாவது இந்த வீட்டின் பழைய வேலைக்காரி – இவளை அனாதையாய் இங்கே விட்டுவிட்டு ஓடிவிட.....

“அந்த கழிசடை போனதுபோல இந்த எழவும் எவன் கூடயாவது ஓடிப்போயிடக் கூடாதே”-என்று பக்கத்து வீட்டுக்காரியிடம் பெசிப் பேசியாவது அந்த எஜமானி இவளை பராமரித்து வந்திருக்கிறாள்.அவளுக்கு சம்பளம் இல்லாத ஒரு வேலைக்காரி கிடைத்துவிட்ட ஆதாயம்.

இந்த வீட்டுக்கார அம்மாவின் குணமே அலாதியானது.

“ஏண்டி நாயே.வென்னீர் போடச் சொன்னா அங்க எவனை பார்த்து இளிச்சிட்டு நிக்கிற...” என்று சொல்கிறவள் பிறகு ரகசியமாய் கூப்பிட்டு, “ அந்த பயலுக ஒரு மாதிரிடி.. . நீ கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடந்துக்க.” என்று தாய்க்குரிய பரிவுடன் சொல்லி வைத்திருக்கிறாள்தான்.

ஆனால் கேட்கிறபோதே மனசொடிந்து போகிற மாதிரியான அவளது பேச்சு சட்டென்று வெறுப்பைதான் தருகிறது.

“உங்கிட்ட எத்தனை தரம்டி சொல்றது அடுக்களையை விட்டு வெளியே வராதேன்னு... மயக்கிடாதேடிம்மா.... என் பிள்ளைகளை....”

இவளுக்கு இதயத்தை தேடி எடுத்து நெருஞ்சியால் குத்திய மாதிரி இருக்கும்.

அன்றோரு நாள்.கோவில் திருவிழாவில் நடன நிகழ்ச்சி போட்ட போது, “மைதிலி வீட்டை பத்திரமா பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டு அனைவரும் போய்விட .... இவளுக்கும் ஆசை வருகிறது. அதென்ன டான்ஸ்..நாமளும் பார்த்தாதான் என்ன.... வீட்டைப் பூட்டிக்கொண்டு அவர்களுக்கு பின்னாலேயே சென்று....

ஆட்டம் பார்க்க பார்க்க சந்தோசமாயிருக்க அதிலேயே ஒன்றிப்போனாள். எல்லாம் முடிந்து மனமில்லாமலே வீடு வந்த போது வாசல் நடையில் எல்லோரும் விழித்துக் கொண்டு காத்திருக்க.... பகீரென்றாகிப் போனது. பழுக்கக் காய்ச்சிய கம்பி அன்று ஏற்படுத்திய தழும்பு தொடையில் இன்னும் இருக்கிறது

இப்படி இவள் வாழ்வின் இருண்ட பகுதியையே பார்த்து பழக்கப்பட்டவள்.எங்கு போனாலும் கண்ணைக் கட்டி கடிவாளம் மாட்டப்பட்ட பிராணி மாதிரியான பிரமை....

சமீபகாலமாகத்தான் விடியற்காலையில் வரும் பால்காரனின் சைக்கிள் மனியோசையில் ஒரு நம்பிக்கை பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது

பால் வாங்குகிற நிமிட நேரத்திலேயே இவளுக்காக அவன் நிரம்ப கவலைப்பட்டான்.” நீ எப்படிம்மா இந்த நரகத்துக்குள்ள வாழற.....” என்று வியந்திருக்கிறான்.

“ நீ இருக்கிற அழகுக்கும் திறமைக்கும்,இங்க கிடந்து அவதிபட வேண்டிய அவசியமில்லை.” என்று உருகியிருக்கிறான்

“உன்னை எப்படி நடத்துறதுன்னே இவங்களுக்கு தெரியலை.”

என்றெல்லாம் சொல்லியவன் கடைசியில் கேட்டே விட்டான் அவள் எதிர்பார்த்ததை.

“ நீ என்கூட வந்திடறயா..... எங்காவது போய் பிழைச்சுக்கலாம்”

இவளுக்கு ஜிவ்வென்று எங்கோ பறப்பது மாதிரி உணர்வு.

“ நான் ஒண்ணும் வசதி படச்சவனில்லை ஏதோ கிடைக்கிறதை வச்சு சாப்பிடலாம்....இப்படி நீ தனியா கிடந்து தவிக்க வேண்டியதில்லை. என்ன சொல்ற....” என்ற போது இயந்திரத்தனமாய் இவள் தலையாட்டிவைக்க.....

அவர்கள் ஓடிப்போக இன்றைய இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இவளுக்கும் இந்த துக்கங்களையெல்லாம் சகித்துக்கொண்டு,வெளி உலகே மறந்து போய்,மற்ற மனிதர்களோடு தானும் சிரிக்க முடியாமல், அதட்டலும் அதிகாரமுமே வார்த்தையாக.....

வேண்டாம்.... இந்த சிறைவாழ்க்கை வேண்டாம். இதையெல்லாம் உதறிவிட்டு எங்காவது ஓடி விடுதலே உத்தமம் என்கிற மனநிலை வந்திருந்தது.

“ சுவத்தில என்னடி சினிமாவா காட்டுறாங்க.வாய பிளந்து பாத்திட்டிருக்க.... ஸ்கூல்ல இருந்து குழந்தைக வர நேரமாச்சே.ஏதாச்சும் சாப்பிட செய்தியா முண்டமே....”

வீட்டுக்காரம்மா இப்படி சொல்லிவிட்டு சும்மா இருக்கமட்டாள்.
வழக்கம் போல தலையில் ‘ நறுக்’கென்று குட்டுவாள்.அல்லது பின் புஜத்தில் அழுத்தமாய் கிள்ளுவாள்.அதன் வலி மூளைக்குத் தாவி குபுக்கென்று கண்ணீர் திரளும்..

இன்று அந்த அழுகை வரவில்லை.

நான்தான் இன்று இரவு போய்விடப் போகிறேனே.அப்புறம் உங்களால் பேச முடியாதே.என் ராஜகுமாரனோடு சுதந்திரமாக உலவப் போகிறேனே என்ற மகிழ்ச்சி..

இரவு ‘தடக் தடக்’ என்று அடித்துக் கொள்ளும் மனசோடு அடுக்களையின் ஈரமில்லாத ஒரு ஓரத்தில் படுத்துக் கிடந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே ‘விசில்’ சத்தம் கேட்டது. அவன்தான்.....அந்த பால்காரன் தான்.

ஏற்கெனவே சுருட்டி வைத்திருந்த துணிமூட்டையை எடுத்துக் கொண்டு பின்புற இருளில் கலந்தாள்.சிறிது தூரம் நடந்ததும் அவன் நிற்கிற இடத்துக்கு வர முடிந்தது.

“யாரும் பார்க்கலியே” அவன் அவசரமாக கேட்க, தலையசைத்தாள்.பதினாறு வருட கொடுமை இப்போதே முடிந்து விட்ட சந்தோசம் இவளுக்கு....

சற்று தூரத்தில் ஆட்டோ ஒன்று காத்திருக்க உள்ளே அமர்ந்தார்கள்.

அது ஏதோ ஒரு தொலைதூரத்திற்கு புறப்பட.....

அவள் குலுங்கி குலுங்கி அழுதாள். அவளுக்கே காரணம் புரிய வில்லை....துக்கமா..... சந்தோசமா.....

“ என்னம்மா ஆச்சி.ஏன் அழுவுற.....” என்றவன் ,” இந்தா இந்த மாத்திரையை போட்டுக்க. உடம்புக்கு தெம்பா இருக்கும்.” என்று நீட்டினான்.

சாப்பிட்ட நாலாவது நிமிடத்தில் அந்தரத்தில் பறப்பது போல இருந்தது. அடுத்த இருபதாவது நிமிடத்தில் நினைவுகள் அற்று போயின.

அடுத்த நாள் காலையில் ஒதுக்கு புறமாயிருந்த பஸ் நிலையத்தில் கிடந்தவளை பார்த்து ‘இந்த பிச்சைக்காரி ஏன் இத்தனை அலன்கோலமாக கிடக்கிறாள் ‘ என்றுபடி ஒதுங்கி போனவர்கள் பலர். வேடிக்கை பார்த்தனர் மற்றும் சிலர்.

சிவா.ஜி
30-06-2009, 02:10 PM
ஒரு சிறையிலிருந்து வெளியேறி வேறு நரகத்தின் வாசலுக்குத் தள்ளப் பட்டுவிட்டாள் மைதிலி. இப்படி எத்தனை மைதிலிகள் இந்தப் பால்காரனைப் போன்ற கயவர்களால் அழிக்கப்படுகிறார்கள்?

பாவம் இந்த கூட்டுப்புழு. இறக்கை வராமலேயே வந்துவிட்டதாக நினைத்து கூட்டிலிருந்து தப்பிப்போய் கொள்ளியில் விழுந்துவிட்டது. நரகமானாலும் அது பாதுகாப்பாய் இருந்தது.

என்ன இன்னைக்கு நம்ம கதாசிரியர்களெல்லாம் மனசை பிழியற கதையாவே கொடுத்திருக்காங்க...?

நல்ல கதையோட்டத்துடனான அருமையான கதை மற்றும் படிப்பினையூட்டும் கருத்து. வாழ்த்துகள் ஜார்ஜ்.

(அப்படியே முதல் வரியில நகரம்ன்னு இருக்கிறதை நரகம்ன்னு மாத்திடுங்க)

த.ஜார்ஜ்
01-07-2009, 04:29 AM
கருத்துக்கு நன்றி சிவா.
[நகரத்தை மாற்றிவிட்டேன்.சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பா.]

கீதம்
01-07-2009, 05:15 AM
ஆரம்பத்திலிருந்தே அப்பெண்ணுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடனேயே படித்தேன். இறுதியில் நான் பயந்தது நிகழ்ந்துவிட்டது. இனி அவள் நிலை? நினைத்தாலே கவலை தருகிறது.
உள்ளம் தொட்ட கதை. வாழ்த்துகள்!

அறிஞர்
01-07-2009, 07:53 PM
மனதை கனக்க வைக்கிறது...
ஏமாற ஆள் கிடைத்தால், ஏமாற்றும் கயவர்கள் பெருகிக் கொண்டே இருப்பார்கள்...

samuthraselvam
02-07-2009, 06:09 AM
கூட்டுப் புழுவுக்கு அந்தக் கூடுதான் பாதுகாப்பானது...

அந்தக் கூடு எவ்வளவு அசிங்கமாக சொரசொரப்பாக்க இருந்தாலும், அதில் இருக்கும் பாதுகாப்பு எங்கேயும் கிடைக்காது...

கூட்டைவிட்டு வெளியே வந்துவிட்டால் சுதந்திரமாக பறக்கலாம் தான்.

ஆனால், வெளி வந்த பட்டாம்பூச்சியின் ஆயுள் மிகச் சொற்பம்..

இந்தக் கருத்துக்கு ஏற்ற தலைப்பை சொல்லி கதையும் கொடுத்த உங்களுக்கு 5 ஸ்டார் கொடுத்து கௌரவிக்கிறேன் ஜார்ஜ்...

வாழ்த்துக்கள்....

அமரன்
02-07-2009, 11:15 AM
விலைமகள் மகளை விலைமகளா(க்)க வினைவது.
வேலைக்காரியை மயக்கும் கைங்காரியாக் நினைப்பது..
அபலையை அபத்தமாக அணைப்பது.
தொலைநோக்கில்லாமல் பசப்புவாய்களுக்கு இரையாவது..

எத்தனை வகையான ஒவ்வாமைத் தரும் தூசிகள்..
அத்தனையையும் கூட்டிப் பெருக்க முனையும் கதை.

கதையின் சுட்டு விரல் பால்காரனை நோக்கி நீளும்போது மீதி விரல்கள் மறைவாக மீதமானோரை சுட்டுவது கனகச்சிதம்.

அம்பி போல எவருக்கும் பொறுப்பில்லை என்று புலம்பத்தான் முடிகிறது.

கற்பு என்பது பிற்போக்கு அல்ல. கவசம் என்றே தெரிஞ்சுக்கனும் என்ற பாடல் வரிகளும் நினைவுக்கு வருகிறது.

பாராட்டுகள் ஜார்ஜ்.

த.ஜார்ஜ்
02-07-2009, 02:40 PM
அன்புக்குரிய கீதம்,
உங்கள் கரிசனையை எப்போதும் வைத்திருங்கள். சில வேளைகளில் இப்படிதான் தொடக்கத்தில் நாம் நினைப்பதே முடிவில் நடந்து விடுகிறது.
உங்கள் ரசனையை பதித்ததற்கு நன்றி.

த.ஜார்ஜ்
02-07-2009, 02:48 PM
நட்புக்குரிய அறிஞர்,
உங்கள் பெயரைப் பார்த்ததும் ரொம்ப சீரியசான ஆள் போலவும்,அதிகம் பேசாமல் நிர்வாகம் பண்ணுகிற அதிகாரி போலவும் ஒரு உருவகம் இயல்பாகவே எழுகிறது.அதிலும் அறிஞர் என்று வைத்திருக்கிறீர்களா.இந்த அடிமுட்டாளுக்கு கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது.
நீங்கள் ஒரு வரி சொன்னாலும் மகிழ்சியாய்தான் இருக்கிறது [பேரை மாத்து மாமேய்]

த.ஜார்ஜ்
02-07-2009, 02:55 PM
பிரியமுள்ள சமுத்திரா
உங்கள் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தை போலவே எழுத்தில் உணர்கிறேன்.
நன்றி.
[எக்சுஸ் மீ. தாராளமா ஸ்டார் கொடுக்கிறீங்களே.அது யாரு வேணா யாருக்கும் கொடுக்கலாமா. வழக்கம் போல இந்த விவகாரம் புரியல.கொஞ்சம் வெளக்குங்க சேச்சி..]

த.ஜார்ஜ்
02-07-2009, 03:02 PM
தோழமையுள்ள அமரன்.
நன்றி.
எந்த ஒரு படைப்பாளியையும் ஆக்கப் பூர்வமாக உற்சாகப் படுத்துகிறீர்கள்.ரசனையுடன் விமர்சிக்கிறீர்கள்.
பாராட்டும் மன நிலை பெருந்தன்மை உடையோரிடம், நல்ல பக்குவம் உள்ளோரிடம் காணுகிற பண்பு.
அமரனும் அந்தவகை என்பதில் மகிழ்ச்சி

அப்புறம் ஒரு விசயம்

சோரம் போன நிஜ மைதிலி மீட்கப்பட்டு விட்டாள்.தரையை மட்டும் பார்த்துக் கொண்டு எப்போதாவது தெருவில் கடந்து போகிற போது பார்க்கிற பிற பார்வைகளில் இப்போதும் சினேகமில்லை என்பதுதான் நிதர்சனம்.

பா.ராஜேஷ்
03-07-2009, 03:48 PM
கதையை படிக்கையில் நான் "கருவறை தின்ற கரு" போட்டிக்கு எழுதியதுது நினைவுக்கு வருகிறது. அதற்கும் யாரோ (ஒரே) ஒரு புண்ணியவான் ஓட்டு போட்டிருந்தார். நீங்கள்தானா அது?

கதை வழக்கம் போல் அருமை ஜார்ஜ்!! பாராட்டுக்கள்!

lenram80
08-07-2009, 06:28 PM
கோழிக் குஞ்சுக்கு இரக்கப்பட்டது புறா என்றே நினைத்தேன். பருந்து என்று கடைசியில் புரிந்தது. மைதிலிகளும் வேண்டாம். பால் காரர்களும் வேண்டாம்.
நிறைய கனவுகளுடன் வேளியே வந்த ஒரு உயிர் இப்படி அநியாயம் போய்விட்டதை எண்ணி வருத்தபட வைத்த ஜார்ஜ் க்கு வாழ்த்துகள்!

பாரதி
11-07-2009, 01:26 PM
பட்டாம்பூச்சியாக வேண்டிய புழு பட்ட பாட்டை எண்ணி வருந்துகிறேன். உங்கள் வார்த்தைகளில் இருந்து இதுவும் உண்மைக்கதை என்பது புலனாகிறது.

சாதாரணமாக செல்லும் கதையின் முடிவை கடைசி சில வரிகளில் மனதில் தைக்கும் வண்ணம் சொல்லும் வலிமை உங்களுக்கு இருக்கிறது நண்பரே!

தொடர்ந்து மன்றத்தில் சிந்தனையுள்ள கதைகளைத் தந்து வரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

விகடன்
12-07-2009, 04:40 AM
அதீத கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வாழ்வோர் பால்க்காரன் போன்றோரின் ஆசை வார்த்தைகளை அப்பட்டமாக நம்பிவிடுவதுண்டு. சொல்பவன் சூழ்ச்சிக்காரனா? நம்பிக்கைக்குரியவனா?? என்று பார்க்கமாட்டார்கள். தமது அப்போதைய சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தை மட்டுமே கவனிப்பர். அந்தவகையில் பார்த்தால் அவள் எந்தளவிற்கு மனதளவால் நொந்து அடிமைவாழ்க்கை வாழ்த்திருக்கிறாள் என்பதை உணரமுடிகிறது.

பால் கொடுக்கப் போன இடத்தில் பொறுமையுடன் படிப்படியாக அவளின் மனதை தன்வசப்படுத்தி இவ்வளாவும் செய்திருக்கிறானே... அவனை திட்டித்தீர்ப்பதா இல்லை காரியத்தரிசி என்று பாராட்டுவதா???

கதையின் மூலம் சொல்லவருவது நன்குவிளங்குகிறது. நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நானுமிருக்கிறேன் உங்கள் கதைகளை படிக்கும் ஓர் வாசகனாக...

நேசம்
12-07-2009, 05:03 AM
வாழ்க்கயில் வேதனையே அனுபவித்து கொண்டு இருக்கும் ஒருத்திக்கு அவளுக்கு ஆறுதலாய் இருப்பது போல் காட்டுபவனிடனின் உண்மையான குணத்தை அறிய வாய்ப்பில்லை.இன்னும் எத்தனை மைதிலிகளோ...உணர்வு புர்வமான கத.பாரட்டுகள்

த.ஜார்ஜ்
13-07-2009, 10:33 AM
அன்புள்ள ராஜேஷ் , லெனின் , பாரதி, மற்றும் விராடன்

கதையை படித்ததற்கும் கருத்து பதித்ததற்கும் என் நன்றியும், தோழைமையும் . எடுத்துக் கொள்க.

த.ஜார்ஜ்
13-07-2009, 10:35 AM
நன்றி
நட்புடன் நேசத்திற்கு.